உணர்வை உரசி பார்க்காதே! 07

eipngMQ3778-85cbc8e2

🌹அத்தியாயம் 07

“கடைசியா கேக்குறேன். கிளம்புரியா இல்லயா?” அதட்டலாக கேட்டான் அவன்.

“ஐயோ! என்னைய நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” மீண்டும் அவனிடம் இறைஞ்சினாள். 

அவள் கையிலிருந்த கைபேசியை பிடுங்கி கைபேசியில் பூட்டை திறந்து அவளது தமக்கையின் இலக்கங்களை அவனுடைய கைபேசியில் குறித்துக்கொண்டான். 

“இப்போ நீ கிளம்பல, நானே சகிஷ்ணவிக்கு ஃபோன் போட்டு பேச வேண்டிவரும். அவ கர்ப்பமா இருக்கது எனக்கு ஒரு விஷயமே கிடையாது. அவ்ளோதான் சொல்லிட்டேன்.” என்று எச்சரித்தான்.  

“விகுஷ்கி! ப்ளீஸ், எத்தனையோ நாள் வெய்ட் பண்ணிட்டீங்க. அக்காக்கு ஃபர்ஸ்ட் ப்ரெக்னன்சி ஒரு பத்து மாசம் பொறுத்துக்கோங்க.” 

“என்னது, நான் பொறுத்துகணுமா? உன் அக்காக்கு குழந்த பொறந்தா என்ன, இறந்தா எனக்கென்ன! நான் இப்பவே ஃபோனா போடுறேன். இரு, நான் ஏதோ பூச்சாண்டி காட்டுறதா நினைச்சிட்டு இருக்கல்ல.” கைபேசியை அழுத்தி காதில் ஒற்றினான்.

அடுத்த நிமிடமே கைபேசியை அவன் கையிலிருந்து பிடுங்கினாள். “ஐயோ! ஏன் இந்த மாதிரி காட்டுமிராண்டி தனமா பேசுறீங்க விகுஷ்கி.”

“எனக்கொரு காரியம் நடக்கணும்னா என்ன வேணாலும் பண்ணுவேன்.” என்று அவன் மீசையை முறுக்கினான்.

“உங்கள கட்டுன பாவத்துக்கு வந்து தொலையிறேன் போங்க.” என்று சத்தமாக கூறி கையெடுத்து கும்பிட்டாள்.

“ஏன், அப்போ உங்க அக்கா பண்ண பாவத்துக்காக வந்து தொலைய மாட்டியோ?” என்றுகூறி சிரித்துவிட்டு நக்கலாய் கேட்டான்.

“ரொம்ப முக்கியம்!” என்று முணு முணுத்தாள்.

அலமாரியை திறந்து ஒரு புடவையை எடுத்து கட்டிலில் வீசினான். “சீக்கிரமா இதை கட்டிட்டு வெளிய வா.” என்று கூறிவிட்டு வெளியே நகர்ந்தான்.

கண்ணாடியை வெறுத்து பார்த்துக்கொண்டிருந்தவள், “இதெல்லாம் எனக்கு தேவைதான். போயும் போயும் இவன கல்யாணம் பண்ணி ச்சே!” மெதுவாக புடவை கட்ட ஆரம்பித்தாள். 

அவனோ அறையின் வெளியே இருந்து. “ரெடியாகிட்டியா?” 

“பத்து நிமிஷம்.” என்று கடுப்போடு செப்பினாள்.

சில நொடிகளில் அவள் வெளியேவர, மல்லிகை பூச்சரத்தை நீட்டி வைத்துக்கொள்ளுமாறு கூறினான். 

‘இது ஒண்ணுதான் குறை.’ என்று முணுமுணுத்துக்கொண்டு பூவை தலையில் வைத்தாள்.

லட்சுமியிடம் இரவு உணவை தயாரிக்க வேண்டாமென்று கூறிவிட்டு கிளம்பினர். மகிழுந்தின் பின்னே மீத்யுகா அமர்ந்து கொண்டாள். 

அவன் கூறியது போல், அவனுக்கு வழக்கறிஞர் உத்தியோகத்தை கற்றுக் கொடுத்த ஆசானின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.  

“இப்ப பார்க்க போறது என்னோடு குரு, குருமூர்த்தி சார்.” சிறு அறிமுகம் கொடுத்தான். 

“அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?” என்று அவள் மார்புக்கு குறுக்கே கையை கட்டி ஒற்றை புருவத்தை உயர்த்தினாள்.

“ஒண்ணும் பண்ண வேணாம். வாயமூடிக்கிட்டு வா. சார் எதும் கேட்டாலோ, நான் எதும் சொன்னாலோ, ஆமா சாமினு ஜால்றா மட்டும் போடு. ஓகே!” அவனுடைய புகழுரைக்கெல்லாம் அவள் புழுகினால் போதும் என்பது போல் கூறினான்.

வழக்கறிஞர் குருமூர்த்தி வாசலிலிருந்து இருவரையும் இன்முகத்தோடு வரவேற்றார். 

“வாங்க வாங்க! உள்ள வாங்க.”  மீத்யுகாவிற்கு வழக்கறிஞர் குருமூர்த்தியின் வரவேற்பு கேலிக்கையாய் தெரிந்தது. 

“நான் சொல்லிருக்கேன்ல இவர்தான் என்னோட சார். “முன்பே கூறி வைத்தது போல் அவன் கூறினான்.

அதற்கு அவள், “அப்படியா நீங்க இப்போதானே சொல்றீங்க!” என யதார்த்தமாக கூறினாள். 

அவன் கண்களை சிமிட்டி அப்படி எல்லாம் கூறாதே என்பதுபோல் சைகை காண்பித்தான்.

அவன் கண் சிமிட்டுவது எதற்கென்று தெரிந்தும், “ஏன் விகுஷ்கி, கண்ணுல தூசி விழுந்துட்டா?” என்று எதுவுமே தெரியாதது போல் வினவினாள்.

அவனுக்கோ, ‘ஏன் டீ இந்த மாதிரி பண்ற, வீட்டுக்கு வா கச்சேரி இருக்கு.’ 

“சரி சரி போதும் பா, என்னைய பத்தி சொல்லிருக்க மாட்டேனு எனக்கு தெரியும்!” 

“அப்படி இல்ல சார். நேரமே கிடைக்கல.” என்று அசடு வழிந்தான்.

“சரி பா வாசல்லே நிக்காம உள்ள வாங்க.” என்று உள்ளே அழைக்க, வழக்கறிஞர் குருமூர்த்தி அவர்களின் மனைவி இருவருக்கும் குளம்பியை கொடுத்தார். 

சற்று நேரம் செல்ல மீத்யுகா அடுக்களைக்குள் சென்று குருமூர்த்தி மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அவனுடைய குருவிடம் வழக்கு தொடர்பாக சில ஆலோசனைகளை பெற்றுக்கொண்டான். 

சமையல் வேலை முடிய, சைவ உணவாக மேசையில் பரப்பி வைக்க, ‘ஐயோ இங்கவும் வெஜ் தானா!’ 

வடை பாயசமென அசத்தலான விருந்து, விகுஷ்கி உணவருந்தி ஏப்பம் விட, ‘இவனுக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்.’ அவள் உணவை உண்ண முடியாமல் உண்டு,  முடியாத பட்சத்தில் பாதியிலேயே எழுந்தாள். 

குருமூர்த்தி அவர்களின் மனைவிக்கு மீத்யுகாவை மிகவும் பிடித்து விட்டது. வீடு திரும்பும் நேரம் வர மனமின்றி விடைப்பெற்றனர். 

மகிழுந்தில் ஏறியது மாத்திரம்தான் பஞ்சாங்கம் பாட ஆரம்பித்தான். “கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். என் மானத்த வாங்கிட்டல்ல!” 

“நான் உண்மையதானே சொன்னேன். அதுல என்ன தப்பு, வாய்மையே வெல்லும்! உங்களுக்கு தெரியாதா?” 

“எனக்கே சட்டம் சொல்லிதாரியா?” என்று பற்களை கடித்தான். பற்களை கடித்த சத்தம் வெளியே கேட்டது.

“பார்த்து பார்த்து பல்லு கொட்டிர போகுது.” என்று வெகுளி தனமாய் பதில் பேசினாள்.

“சாயந்தரம் வாங்குனது பத்தலையோ?” எகத்தாளமாய் கேட்டான்.

“அக்கா தப்பு பண்ணா, அதுக்கு என்னைய அடிச்சீங்க. என்னால அதையே ஒத்துக்க முடியல. அடுத்த வாட்டி அடிச்சீங்க! அடி வாங்க மாட்டேன். அப்படியே அடிவாங்குனா திருப்பி தராம இருக்கவும் மாட்டேன்.” வீர வசனம் பேசினாள் வீம்பாய். 

“ரொம்ப பேசாத! குடுத்த முத்தத்த திருப்பி தா, அப்பறம் மீதிய பார்த்துக்கலாம்.” 

“தாரேன் யா, தாரேன். மொத்தாமா திருப்பி தாரேன். ரொம்பதான் நொந்துகிற, பின்னாடி வருத்த படுவ.” என கூறிவிட்டு உதட்டை சுளித்தாள். 

வேக தடையிட்டு மகிழுந்தை நிறுத்தினான். “கார விட்டு இறங்கு டீ!” என்று கண்களை அகல விரித்து அதட்டலாக கூறினான்.

அவன் அகம்பாவ அம்பகத்தை அவள் மீது வீச, அவள் அக்னி பார்வையால் உடைத்தெறிந்தாள். “முடியாது!” என்று விரக்தியாய் விளம்பினாள்.

“மரியாதையா கார விட்டு இறங்கு  சொல்லிட்டேன்!” என கர்ஜித்தான் அவன்.

“இங்க பாருங்க. நீங்கதானே அழச்சிட்டு வந்தீங்க. நீங்களே வீட்டுக்கு கூட்டிட்டு போங்க மரியாதையா!” 

“நீயா இறங்கு இல்ல, தள்ளிவிடுவேன்.” 

“அப்படி மட்டும் பண்ணி பாருங்க. உங்களையும் சேர்த்து கட்டிப்புடிச்சிக்கிட்டே விழுவேன். மரியாதையா வண்டிய வீட்டுக்கு விடுங்க.” 

“உனக்கு எதுக்கு டீ மரியாதை!” என்று கூறிவிட்டு, அவன் மகிழுந்தை விட்டு வெளியே வந்து அவள் புறம் இருக்கும் கதவை திறந்து அவளை வெளியே இழுக்க முயற்சித்தான். 

“கைய விடுங்க, என்னைய வீட்ல விடுங்க. நடு ரோட்ல விட பார்க்குறீங்க. இது நியாயமா?” 

“ஆமா ஆமா, நான் நியாயமாதான் நடந்துகிறேன். கொஞ்சம் பொறு உனக்கு முதல் மரியாதை பண்ணனும்.” என கூறிவிட்டு, அவள் மார்பையும் முதுகோடு அணைத்து பிடித்து, அப்படியே அவளை தூக்கி வெளியே கீழே வீழ்த்தினான். 

அவள் கீழே விழுந்து, எழுந்து உடலில் ஒட்டிய மண்ணை தட்டிக்கொண்டிருக்க, “ஹார் யூ ஓகே பேபி!, உனக்கு வாய் கொழுப்பு கொஞ்சம் அதிகமாவே ஜாஸ்தி. நாலு கிலோ மீட்டர் நடந்து வா. கொழுப்பு குறையுதானு பார்ப்போம்.” 

அவள், “ஏய், ஏய்!” என்றிட,  அவனோ, “ஆத்துக்காரி பொடிநடையா நடந்து ஆத்துக்கு வாங்கோ!” என்று இனிமை கலந்து குரலில் கூறிவிட்டு ஐவிரல்களை அசைத்துக் காட்டி வேகமாக வண்டியைச் செலுத்தினான். 

“இதுக்கு அப்பறம் இவன நம்பி வெளிய வருவ!” என்று தன்னைதானே கேட்டு விட்டு, “நமகென்ன நடக்குறது புதுசா, நைட் வொர்கிங்கின்னு நினைச்சிட்டு நடக்க வேண்டியதுதான்.” புடவை என்பதனால் மெதுவாக நடையிட்டாள். வேறு உடை அணிந்திருந்தால் எப்போதும் போல் வேகநடைதான்.

அரைமணி நேரமாகி வீடு திரும்பாமல் இருக்க, விகுஷ்கிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. வீட்டில் வேலைபார்க்கும் லட்சுமியும் நான்கைந்து முறை மீத்யுதா எங்கே என்று கேட்டிருந்தார். இதோ என்கிறான், அதோ என்கிறான். அவள் வந்த பாடில்லை. 

இன்னுமொரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு வெளியே சென்று அழைத்து விட்டு வரலாமென்று முடிவு செய்திருந்தான். 

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். “ஏன் டீ இவ்ளோ லேட்டு?” என்க.

“கார்லருந்து பாதியிலேயே இறக்கி விட்டவங்கயெல்லாம் கேக்கக் கூடாது. நான் எங்க வேணாலும் போயிட்டு வருவேன்.” என்று வீம்புரைத்தாள். அதன் பின் படுக்கையறைக்கு சென்று அவனுக்கு முன் இடத்தையும் பிடித்துக் கொண்டாள்.

“என்ன பண்ணாலும் அதுக்கு பதில் நாட்டு வெடிய வாயிலேயே வச்சிருக்காளே! இன்னும் அஞ்சு மாசம்தானே, அப்பறம் என்ன பண்றானு பார்ப்போம்.” அவன் நினைத்தது போல் ஐந்து மாதத்தில் அவள் வெளியேறுவாளா? அப்படி வெளியேறினாலும் அவன் நினைத்தது போல் சூழ்நிலை அமையுமா? அவனுக்கு சாதகமா பாதகமா?

படுக்கைக்கு சென்றவள் படுத்தவுடனே நித்தாரசனத்திற்கு சென்றிருந்தாள். உடல் அத்தனை அலுப்பை கொடுத்திருந்தது. அதனால்தான் விரைவாக உறங்கிவிட்டாள். 

அவனோ, மேல் உள்ள அறைக்கு வர பிடிக்காமல்போக, கீழ் தங்கையின் அறையில் உறக்கம் கொண்டான். 

தங்கையின் அறையில் உறங்கியதால், சஷ்டியை நினைத்து துக்கத்தோடு தூங்கியதுதான் உண்மை.

விடிந்த பொழுது, நமசிவாயமும் உமேஷ்வரியும் பரவைமுனியம்மா பாட்டியும், விகுஷ்கியின் வீட்டிற்கு திடீர் விஜயம். வெறுங்கையோடு அல்ல. அவளுக்கு சேர வேண்டிய சீர் வரிசைகளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

இருவரும் உறக்கத்தில் இருக்க,  லட்சுமி கோலம் போடுவதை பார்த்து உமேஷ்வரிக்கு சற்று சலனம், மீத்யுகாவின் பொறுப்பற்ற நிலையை நினைத்து.

லட்சுமி, மீத்யுகாவிடம் குடும்பத்தினர் வருகையை கூறி  எழுப்பி விட, அரக்க பறக்க எழுந்து காக்கை குளியல் இட்டு, மறக்காமல் உச்சி வகுட்டில் குங்கும பொட்டு வைத்தாள். இல்லையென்றால் அன்னையின் கையால் அவள் தலைக்கு குட்டு ஒன்று பரிசாக கிடைக்கும்.

“அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் வாங்க வாங்க. எப்போ வந்தீங்க! ஒரு வார்த்தைகூட சொல்லல?” வராத மகிழ்வை அவளகத்திற்கு வரவழைத்தாள். இருவருக்கும் சரமாரியாக சண்டை வேறு. இதில் இவர்கள் வேற வந்துவிட்டார்களே! விகுஷ்கி இதை எப்படி எடுத்துகொள்வானோ, இனி என்ன நிகழுமோ?

“ஏன் டீ, நாங்க ஏன் வந்தோம்னு கேக்குறியா? அப்போ நாங்க வந்தது சந்தோஷம் இல்லயா?” என்று பரவை முனியம்மா உற்று நோக்கிப் பார்த்து அங்கலாய்ந்தார். 

“மதுரைல இருந்து என்னோட சண்ட போடுறத்துக்காகவே கிளம்பி வந்தியா கிழவி?” என்று செல்லம் கொஞ்சினாள் பாட்டியை.

“என்ன மா, ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்தானே!” என்றாள்  தாயின் புறம் திரும்பி மீத்யுகா.

“எதுக்கு, வீட்டு வேலை பார்க்குறவங்க போட்ட கோலத்த நீ போட்டதா சொல்லுறதுக்கா?” 

பற்கள் தெரிய நகைந்து விட்டு, “ஐயோ மா! நேத்து ஒரு டின்னருக்கு போயிட்டு வந்தோம்மா அதான் எழும்ப லேட்டு.” 

“சரிமா, மாப்பிள்ளை எங்க?” என்று வினவினார் நமசிவாயம்.

“அவரு தூங்குறாரு பா, இருங்க எழுப்பிட்டு வாரேன்.” 

“வேணாம்மா, மாப்பிள்ளை தூங்கட்டும்.” 

“சரி நீங்கெல்லாரும் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சி வக்கிறேன்.” 

அனைவரும் உறவினர் தங்கும் அறைக்கு செல்ல, மீத்யுகாவின் கால்கள் தைய தக்கவென்று குதித்துக்கொண்டிருந்தது. 

விகுஷ்கியை எழுப்பி அவர்கள் அறைக்கு அனுப்ப வேண்டும். வேறு எவரும் பார்த்தால், தனி தனியே உறங்குவதற்கும் குற்றம் கடிவார்கள்.

குளம்பியை கலந்து குடும்பப் பெண்ணாய் அவன் உறங்கும் அறைக்கு சென்று, அவன் அருகில் நின்று, ‘எப்படி கூப்பிடலாம், பேர சொல்லி கூப்பிட்டா அதுக்கு வேற இந்த மனுஷன் கத்துவானே!’

மேலும் கீழும் பார்த்துவிட்டு பெருமூச்சை இழுத்து விட்டு, ‘இப்படிதான் கூப்பிடணும் வேற வழியே இல்ல.’ 

“ஏண்ணா! எழுந்திரிங்கோணா, பொழுது விடிஞ்சிருச்சுணா.” என்று மடிசாரி மாமி போல் இனிமையான அவளது விளிப்புறை, அவனது செவிகளுக்குள் சென்றடைந்தது.

‘யாரிது, புதுசா ணா, ணா போட்டு கூப்பிடுறது?’ என்று கண்களை கசக்கிவிட்டு ஒற்றை கண்ணை திறந்து பார்த்தால், அவள்!

படக்கென்று எழுந்து அமர்ந்தான். “யார் டீ இந்த ரூமுக்குள்ள வரச் சொன்னா?” 

“ஐயோ சத்தம் போட்டு பேசாதீங்க.”  என்று அவன் வாயை  பொத்தினாள்.

அவள் கையை தட்டிவிட்டு, ” ச்சீ வாயிலயிருந்து கைய எடு, புடவய கட்டிட்டு வந்து ஏண்ணா நோண்ணானு பேசுனா, மயங்கிறுவேனு பார்க்குறியா? இந்த ஆள மயக்குற வேலை எல்லாம் எங்கிட்ட ஆகாது சொல்லிட்டேன்.”

“ஐயோ நான் ஒண்ணும் மயக்கல, நீங்க மாடில இருக்க ரூம்ல தூங்குங்க, போங்க.”

“நீ முதல்ல இந்த ரூம விட்டு வெளிய போ!”

“முடியாது! எங்க வீட்ல இருந்து அம்மா, அப்பா, பாட்டி எல்லாரும் வந்துருக்காங்க. நீங்க இப்படி தனியா தூங்குறத பார்த்தா அவங்களுக்கு சங்கடமா இருக்கும். ப்ளீஸ்!” என வருந்திக்கேட்டாள்.

“ஓ… இதுதான் சங்கதியா?” 

“அம்மா அப்பா முன்னாடி எதுவும் காட்டிக்க வேணாம். கல்யாணமாகி ரெண்டு மூனு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள நீங்க இப்படினு தெரிஞ்சா வருத்தபடுவாங்க. அவங்களுக்கு எதும் தெரிய வேணாம்.” மீண்டும் அவனிடம் இறைஞ்சி நின்றாள். 

“தெரிஞ்சிக்கட்டுமே! அப்போதானே உங்க அக்கா எப்படி பட்டவனு தெரியும். அப்போதான் என் தங்கச்சி என்ன பாடு படுறானு தெரியும். உன்னைய என்ன பாடு படுத்துறேனு தெரியும்!” 

“உங்களுக்கு என் நிலை புரியாது. ஒரு பொண்ண பெத்து வளர்த்து கல்யாணம் பண்ணி வச்சு. அவ நல்லா இல்லனா, பெத்தவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?” 

“என் தங்கச்சி கல்யாணம் ஆகாமலே நல்லா இல்லயே! அதுக்கு என்ன பதில் வச்சுருக்க சொல்லு?” 

“நீங்க சொல்லுறது எனக்கு புரியுது விகுஷ்கி, ஆனா ஆக்சிடன்ட் நடந்த உடனே நீங்க பேசி இருக்கணும். இப்போ வந்து கேட்டா நான் என்ன பண்ணுவேன்? அப்பா அம்மா பார்க்குறதுக்கு, நம்ம சந்தோஷமா இருக்கோம். அப்படினு தெரிஞ்சிக்கிட்டா மட்டும்போதும். ப்ளீஸ்!” 

“நான் மேல போய் தூங்குறேன். உனக்காக ஒண்ணுமில்ல, நானும் கொஞ்சம் நல்லவன் மாதிரி படம் காட்ட வேண்டி இருக்கு உங்க அம்மா, அப்பா முன்னாடி. சோ, அதுக்கு நீ ஒண்ணு பண்ணணும்!” அவன் வைக்கும் சோதனை எதுவோ? அதை செய்துவிட்டால், அவள் கோரிக்கை நிறைவேறும்.

“சொல்லுங்க, என்ன பண்ணணும்?” என்று அவள் கூறும் தொனியே தாழ்ந்துவிட்டது. அவள் கூற்று முடிய தலை கவிழ்ந்தாள்.

“என்ன சொன்னாலும் செய்வியா?” ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அவளுடைய குடுமி அவன் கை வசம் இருந்தது.

“டி.. டிரை பண்றேன்.” எதை கூறுவானோ! அதை நிச்சயமாக செய்தால்தான் தாய் தந்தையர் மனம் புண்படாமல் இருக்கும்.

“அப்போ நானும் ரூமுக்கு போக டிரைதான் பண்ணுவேன்.” என்று அவன் உதடுகளை பிதுக்கினான்.

“இல்ல இல்ல, என்னால முடியும்.” 

“ஆர் யூ ஸ்ரோங்க்!” என்றொரு புருவத்தை உயத்தினான்.

“யெஸ் ஐயம் ஸ்ரோங்க்.” என்று விழிகளை தாழ்த்தினாள்.

“வெல்! ஆப்ஷன் நம்பர் ஒன், நான் குடுத்த முத்தத்தை திருப்பி தரணும். இப்பவே!” என்று அவளது முகத்தை பார்த்தான். அவள் பதற்றத்தில் என்ன நேரிடுமோ என்று புடவையின் ஒரு முனையை பற்றி சுழற்றிக்கொண்டிருந்தாள்.

“ஆப்ஷன் நம்பர் டூ, என் காலுல விழுந்து மன்னிப்பு கேக்கணும். நான் என்ன சொல்லுறேனோ அதை அப்படியே சொல்லி என் கால விழுந்து மன்னிப்பு கேக்கணும். சாய்ஸ் இஸ் யூவர்.” 

எதற்கு ஒப்புக்கொள்வதென்று அறியாமல் ஒரு நிமிடம் கண்களை மூடினாள். 

முத்தம் கொடுப்பது எப்படி என்றே தெரியவில்லை. காலில் விழுந்தால் இன்றிலிருந்து அவன் ஆணாதிக்கத்திற்கு அடிய பணிய வேண்டும். மீத்யுகா என்ன முடிவை எடுத்திருப்பாள்?

***

உணர்வுகள் தொடரும்…