உணர்வை உரசி பார்க்காதே! 08

eipngMQ3778-d8c24462

🌹அத்தியாயம் 08

அவள் கூறும் பதிலுக்காய் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் முடிவை கூறுவதாக இல்லை. “இப்படியே பிணாத்திக்கிட்டு இரு, வந்தவங்க ஃப்ரெஷ் ஆகிட்டு கீழ வந்துருவாங்க.” 

“கிஸ் பண்ண தெரியாது! சோ…” என்று அவள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் தந்தியடித்தது.

“சோ.. கால்ல விழப்போறியா?” அவள் காலில் விழுவதை நினைக்கையில் விகுஷ்கிக்கு பேரானந்தம்.

“ஆமா” என்ற மீத்யுகாவின் குரலில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. ஜவுளி கடைகளில் நிறுத்தி வைத்த பொம்மையை போல் அசையாமல் நின்றாள். 

“அதெல்லாம் ஏத்துக்க முடியாது! நீ, உன் வாயல சொல்லணும். உங்க கால்ல விழுறேன். எங்க சொல்லு பார்ப்போம்.” அவளை தாழ்மை உணர்ச்சிக்குள்  தள்ளினான். 

எல்லா வார்த்தைகளையும் பொறுத்து, “நான், உங்க கால்ல விழுறேன்.” என்று தாழ்ந்து மெல்லிய குரல் மீத்யுகாவின் வாயில் இருந்து வந்தது. 

“குட் குட், அப்படி வா என் வழிக்கு! நெக்ஸ்ட், என் கால்ல விழுந்து, நீங்க பண்றதுதான் சரி, இனி உங்கள தப்பா பேசவும் மாட்டேன். தப்பா நினைக்கவும் மாட்டேன். நீங்க எனக்கு தெய்வம் மாதிரி, என் அக்கா பண்ண தப்புக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறேன். நீங்க என்ன சொன்னாலும் இனி கேட்டு நடப்பேன். என்னைய மன்னிச்சு ஏத்துக்கோங்க. இதெல்லாம் அப்படியே ஒரு வார்த்த மாறாம சொல்லணும்.  ஓகே!” என்று அவள் காலில் விழுப்போகும் மகிழ்ச்சியில் புத்துணர்ச்சியானா குரலில் கூறினான்.

அவனை எதிர்த்து எந்த வார்த்தையும் அவள் வாயிலிருந்து வரவில்லை. அவ்வேளை அவள் மொழி மௌனமானது.

அவன் கூறியது போல், தரையில் மண்டியிட்டு அவன் கால்களில் விழுந்தாள். அவன் கூறியது அனைத்தையும் ஒரு எழுத்து மாறாமல் அவள் ஒப்பித்து மன்னிப்பு வேண்டினாள். 

“நீங்க பண்றதுதான் சரி, இனி உங்கள தப்பா பேசவும் மாட்டேன். தப்பா நினைக்கவும் மாட்டேன். நீங்க எனக்கு தெய்வம் மாதிரி, என் அக்கா பண்ண தப்புக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்டு நடப்பேன். என்னைய மன்னிச்சு ஏத்துக்கோங்க.” ஒவ்வொரு வார்த்தைகளையும் கூறும் போது அடிமனதில் இருந்து வெளியாகும் அவளுடைய உண்மையான குணத்தை கட்டுப்படுத்தினாள். 

மன்னிப்பு கோரி எழுந்து நிற்க, “தப்பு தப்பு மறுபடியும் மன்னிப்பு கேளு!” எவ்விடத்தில் குற்றம் குறையை கண்டறிந்தானோ தெரியவில்லை.

“ஏன், நீங்க சொன்ன மாதிரிதானே பண்ணேன்.” என்று அவள் குரல் குறுகியது.

“இல்ல, கால்ல விழுந்து உன் கையால என் ரெண்டு பாதத்தையும் தொட்டு உன் கண்ல ஒத்தணும். நீ இதை மட்டும் மிஸ் பண்ணிட்ட, மறுபடியும் விழுந்து தொட்டு கும்மிடு.” என்று அவளை சித்திரவதை செய்வதை போல் விளம்பினான்.

‘மன்னிப்பு கேக்க சொல்றானா இல்ல, ஆசிர்வாதம் வாங்க சொல்றானா? ஒண்ணுமே புரியலயே! முதல்ல இருந்து எல்லாம் வசனமும் சொல்லணுமா, அவன் கிட்டவே கேட்டுருவோம்.’

“முதல்ல இருந்து எல்லாம் சொல்லணுமா?” என்று தயக்கத்துடன் வினவினாள். 

ஒரு சில வினாடிகள் சோர்ந்திருந்தவள் முகத்தை பார்த்துவிட்டு, “உன்ன பார்க்கவே பாவமா இருக்கு, கால்ல விழுந்து மட்டும் எழும்பு, ஓகே.” 

மீண்டும் அவன் கால்களில் விழுந்து, பாதத்தை தொட்டு அவள் கண்களில் ஒற்றி விட்டு எழுந்து கொண்டாள். 

“இப்போ ஒகேவா?” என்று பயத்தோடு அவள் கேட்டாள். 

“டபுள் ஒகே, இப்போ போயி மேல இருக்க ரூம்ல தூங்குறேன்.” என்று கூறிவிட்டு, அவர்கள் கீழே வருவதற்கு முன் மேல் உள்ள அறைக்குச் சென்றான். 

எப்படியெல்லாம் தாழ்த்தி கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கேவலப்படுத்தினான். எல்லாவற்றையும் பொருத்திருந்தாள். அவளுக்கும் சந்தர்ப்பம் வருமென்று காத்திருந்தாள். 

அதன் பிறகு லட்சுமியிடம் காலை உணவை தயார் செய்ய கூறிவிட்டு, வருகை தந்தவர்களுக்கு குளம்பியை கொண்டு சென்றாள். 

உமேஷ்வரியும் மாப்பிள்ளை அறையை சற்று எட்டிப் பார்க்க, அவன் மேல் சட்டை இன்றி இடுப்பு வரை போர்வையை போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தான்.  இருவரும் இல்லறத்தில் இணைந்துவிட்டனர் என்று நிம்மதி அடைந்தார். 

மீத்யுகா அவ்வப்போது அவள் வீட்டினரை கண்காணிக்க மறக்கவில்லை. ‘இப்படி எல்லாம் பார்ப்பீங்கனு தெரியும். அதான், முன்கூட்டியே அந்த லூச மேல் ரூம்ல தூங்க வச்சேன்.”

உறவினர் அறைக்குள் சென்றாள். “சாப்பாடு செஞ்சிட்டேன் மா. வாங்க சாப்பிடலாம்.” 

“மாப்பிள்ளை எழும்பி குளிச்சுட்டாரா?” என்று உமேஷ்வரி கேட்க, “அது வந்து மா!” என்று தடுமாறினாள். 

சரியான நேரத்தில் விகுஷ்கியின் குரல் இடையிட்டது. “வாங்க அத்தை, மாமா, பாட்டி! எப்படி இருக்கீங்க.” இப்படியே அனைவரினதும் நலவிசாரிப்பு முடிவடைந்தது. 

உணவு மேசையில், உணவை மீத்யுகா அனைவருக்கும் பரிமாறினாள். வழக்கத்திற்கு மாறாக, “மீயூ, நீயும் உக்காரு சாப்பிடலாம்.” என்று விகுஷ்கி அவளை அழைத்தான். 

அவன் உணவு உண்ண அழைத்தது, மீத்யுகாவிற்கு அதிசயமாக இருந்தது. “இல்ல நீங்க சாப்பிடுங்க. நான் அப்பறமா சாப்பிடுறேன்.” என்று யதார்த்தமாய் கூறினாள். 

‘யப்பா ரொம்பதான்! நல்லவன் மாதிரி நடிக்கிறான்.’ என்று மனதிற்குள் எண்ணினாள்.

“இப்படியே சொல்லிக்கிட்டு எப்போ சாப்பிடுவ, இப்பவே மணி ஒன்பது ஆகிருச்சு. ” 

“இன்னும் பத்து நிமிஷத்துல சாப்பிடுறேன்.” 

“இல்ல இல்ல. இப்பவே சாப்பிடு” என்று கூறிவிட்டு, அவளை கையை பற்றி இழுக்க, அவள் அதை கூச்சத்தோடு மறுக்க, அவள் கையை பிடித்து  பலமாய் இழுத்து அவன் மடியில் அமர வைத்தான். 

அவன் செய்கையில் அவள் விழிகள் இரண்டும் அகல விரிந்தது. மேனியில் உள்ள மயிர்கள் எல்லாம் புல்லரித்து நட்டமாய் நின்றது. 

என்ன செய்வதென்று தெரியாமல்  எழ முயற்சி செய்தாள். அவள் வயிற்றை ஒரு கையால் அணைத்துக்கொண்டான். 

இருவரும் அன்யோன்யமாக இருப்பதை பார்த்து உமேஷ்வரி, நமசிவாயம், பரவை முனியம்மா பாட்டி அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். 

ஒரு துண்டு இட்லியை எடுத்து சாம்பாரில் நனைத்து அவள் வாய் அருகில் எடுத்து சென்றான்.

“கைய எடுங்க, எல்லாரும் பார்க்குறாங்க.” என்று தலை குனிந்தவாறு  மீத்யுகா சிணுங்கினாள். 

“இது நல்ல கதையா இருக்கே! என் பொண்டாட்டிக்கு நான் சாப்பாடு ஊட்ட கூடாதா? நீங்களே நியாயம் சொல்லுங்க பாட்டி.” 

‘இப்போதான் உன் கண்ணுக்கு நான் பொண்டாட்டியா தெரியுறேனா? இவங்கெல்லாம் போகட்டும் கண்ணுல விளக்கெண்ணைய ஊத்துறேன்.” 

“நீ ஊட்டிவிடு பா, உன் பொண்டாட்டி உன் உரிமை.” என்று பாட்டியும் அவனுக்கு வாக்களித்தார். 

அவன் ஊட்டுவதை விருப்பமின்றி வாங்கிக்கொண்டாள். ஏனையவர் இங்கிதம் அறிந்து இருவருக்கும் இடமளிக்க சீக்கிரம் உணவருந்தி அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். 

மூவரும் நகர்ந்து அறைக்குள் சென்றது மாத்திரம்தான், “எழும்பு டீ!” மெதுவான குரலில், கடுப்புடன் கூறினான். அத்தோடு அவளும் முறைத்து பார்த்துவிட்டு எழுந்தாள்.

அவன் முகத்திற்கு நேராக அருகில் சென்று, “நானா உங்க மடில வந்து உக்காந்தேன்? ஏதோ நானே வந்து உங்க மடில உக்காந்த மாதிரி பேசுறீங்க.”

“உன் முகத்த பார்க்க பயமா இருக்கு கொஞ்சம் தள்ளியே இரு.” என்று அவளை பார்த்து கூறினான். 

“கவர்மெண்ட் நிலத்துல மரம் வளர்க்க சொன்னா நீ முகத்துல வளர்த்து வச்சிருக்க, உனக்கு என் மூஞ்சிய பார்த்தா பயமா இருக்கா?” 

“நவுரு டீ!” என்று கூறிவிட்டு உணவருந்திய பிறகு கையை கழுவி விட்டு அனைவரிடமும் கூறிய பின்  உத்தியோகதிற்கு கிளம்பினான். 

மீத்யுகாவின் தாய் உமேஷ்வரி, “மீத்யுகா, ஊர்ல கண்ணகி அம்மன் திருவிழா ஆரம்பிக்குது. உன்னையும் மாப்பிள்ளையும் அழச்சிட்டு போகலாம்னு இருக்கோம். ஊருக்கு கிளம்பும்போது எங்ககூடவே வரீங்களா?” 

“எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன் மா.” 

“மாப்பிள்ளை எதும் வேலைனு சொன்னாருனா, நீ கிளம்பி வா, மாப்பிள்ளைய அப்பறமா வர சொல்லு.” 

“அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன் மா.”

முதல் இருந்த மீத்யுகாவிற்கும், திருமணத்திற்கு பிறகு இருக்கும் மீத்யுகாவிற்கும் நிறைய வித்தியாசங்களை உமேஷ்வரி உணர்ந்திருந்தார். 

பல மாதங்களுக்கு பிறகு உமேஷ்வரியும், பாட்டியும் சென்னை வந்திருப்பதால், ஜவுளி கடைகளுக்கும், நகை கடைகளுக்கும்  நமசிவாயம் அழைத்துச் சென்றிருந்தார். பாட்டியின் துணைக்கு லட்சுமியையும் அழைத்து சென்றிருந்தனர்.

மதிய வேளை உணவுக்காக விகுஷ்கி வீட்டிற்கு வந்திருந்தான். வருகை தந்தவன், “ஏய்! உங்க வீட்டு ஆளுங்க எப்போ கிளம்புறாங்க?” என்று வினவினான். 

“இன்னைக்குதான் வந்தாங்க. அதுக்குள்ள ஏன் இப்படி கேக்குறீங்க.” 

“படம் காட்ட கஷ்டமா இருக்கு.” என்று கூறிவிட்டு, அவளுடைய முகத்தை சுட்டிக்காட்டி, “இந்த மூஞ்சோட ரொமான்ஸ் பண்ண சகிக்கல.” என்று அவளை வெறுப்பூட்டும் வகையில் கூறினான். 

“ஓ… முத்தம் கொடுக்கும் போது சகிக்கலையோ!” என்று அவள் கூற, அவன் வாய் விட்டு சிரித்தான்.

“விகுஷ்கி, எங்க ஊர்ல கண்ணகி அம்மன் திருவிழா, அம்மா நம்ம ரெண்டு பேரையும் வர சொல்லுறாங்க. என்ன பண்றது?” தட்டு தடுமாறிக் கேட்டாள். 

“யாரு அந்த மதுரைய எரிச்ச கண்ணகியா?” என்று குதர்க்கமாய் வினா தொடுத்தான். 

“ஆமா, அந்த கதை எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கண்ணகி வழக்குரை செய்வாங்க நல்லா இருக்கும் வாங்க போயிட்டு வருவோம். தங்கச்சிக்கும் சீக்கிரம் குணம் ஆகிரணும்னு வேண்டிக்கிளாம்.” 

“ஓ… அக்கா செஞ்ச பாவத்துக்கு, தங்கச்சி பரிகாரம் பண்ணுறிங்களோ? இங்க பாரு, கடவுள் பக்தியெல்லாம் அதிகமாவே இருக்கு ஆனா, கண்ணகிய நான் கும்பிட மாட்டேன். உனக்கு விருப்பம்னா நீ கிளம்பு.” 

“அம்மா, ரெண்டு பேரயும் வர சொல்லுறாங்க விகுஷ்கி. ஒரு வாட்டி போயிட்டு வந்துருவோம்.”

“நான் சொல்லுறத சொல்லிட்டேன். நீ போயிட்டு வா, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.” 

திருமணத்திற்கு பிறகு முதல் முறை அவளது சொந்த ஊருக்கு தனியே செல்ல விருப்பமின்றி அவனிடம் இறைஞ்சி நிற்க, அவன் மறுத்துக்கொண்டே இருந்தான். 

“கண்ணகி அம்மன் எவ்ளோ சக்தி வாய்ந்த தெய்வம் தெரியுமா, பின்னாடி ஃபீல் பண்ணுவீங்க.” 

“எனக்கு கண்ணகி அம்மன புடிக்காது.” என்று கூறி உதட்டை சுளித்தான். 

“அப்படியெல்லாம் பேசாதீங்க. மதுரையே எரிச்ச கண்ணகி அம்மனுக்கு, உங்க பொல்லாத மனச எரிக்க பத்து நிமிஷமும் போதாது.” 

பட்டாங்கில் யானுமோர் பத்தினியே தாமாகி ஓட்டேன் அரசோடு ஓழிப்பேன் இம்மதுரையை.

“கண்ணகி மதுரைய எரிச்சது அவங்க பண்ண தப்புனு நினைகிறவன் நான். தப்பு செஞ்சது பாண்டிய மன்னன், தண்டனை மதுரையில வாழுற எல்லா மக்களுக்குமா, அவங்க எல்லாம் என்ன தப்பு செஞ்சாங்க, மதுரையில வாழுற மக்கள் ஏன் சாகணும்?” 

அவன் வியாக்கியனத்தை கேட்டு, அவள் விழிகளை அகல விரித்து,  ‘இவன்கிட்ட தேவையில்லாம வாயை குடுத்து மாட்டிக்கிட்டேனே!’ தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

“என்ன பேச்சே இல்ல. மன்னன் செஞ்ச தப்புக்கு மக்கள் என்ன பாவம் பண்ணாங்க. இந்த மாதிரி தண்டனை குடுத்தா அதுக்கு பேர் சாமியா?” 

அவன் கூறுவதை சற்று ஆழமாக சிந்தித்தாள். அவள் புத்திக்கு எட்டியது ஒரு விடயம் அதை அவனிடம் கேட்டும் விட்டாள். “இவ்ளோ வியாக்கியானம் பேசுறீங்களே! கண்ணகி பண்ற தப்பதானே நீங்களும் பண்றீங்க.” என்றாள், அதற்கு அவளையே உற்று நோக்கியவாறு, “நான் யாரடீ கொல பண்ணேன்.” என்று கேட்டான்.

“நீங்க கொலை பண்ணாதான் கண்ணகியா, என் அக்கா பண்ண தப்புக்கு என்னை தண்டிக்கிறீங்களே! அப்பவே நீங்க கண்ணகிதான்.” என்ற அவள் கூற்றிற்கு அவனுடைய வார்த்தைகள் தோற்றுபோனது.

*** 

உணர்வுகள் தொடரும்…