உணர்வை உரசி பார்க்காதே! 10
உணர்வை உரசி பார்க்காதே! 10
🌹அத்தியாயம் 10
அவளை பார்த்தவுடனே, “வாங்க மேடம்! உங்க அப்பாக்கிட்ட என்ன சொன்னீங்க. நான் கூப்பிட்டேன் அவர் வரலேனு சொல்லிட்டாரு, நீங்க கூப்பிடுங்கனு சொன்னீங்களோ?”
“ஐயோ! நான் அப்படி சொல்லல, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.”
“நான் சரியாதான் புரிஞ்சிக்கிட்டேன். நீதான் என்னைய ஏமாத்துற. எத்தன நாளைக்கினு பார்க்குறேன்.”
மொழிகள் அற்ற பாவையாய் மௌனித்தாள். “சாப்பிட்டேன். தட்ட எடுத்துட்டு போ.” என்றிட அவன் உணவருந்திய தட்டை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
“என்ன, மாப்பிள்ளைதான் ஒத்துக்கிட்டாரே! நீதான் கேக்குறதுக்கு தயங்கி தயங்கி இருந்த.” என்றார் உமேஷ்வரி.
“அட போம்மா.” என்று சளைப்பில் கூறினாள். ‘என் பாடு எனக்கில்லையா தெரியும். உங்கிட்ட சொன்னா என்னானு எடுத்துப்பியோ தெரியலமா?’
சிறிது நேரம் மௌனம் தொடர, “சகி எப்படிம்மா இருக்கா?”
“நல்லா இருக்கா, டாக்டர் கிட்ட செக் அப் போனேனு சொன்னா, அவள மாதிரி லேட்டா உண்டாகாம, நீ சீக்கிரமா உண்டாகுற வழிய பாரு.”
“அதெல்லாம் நம்ம கைல இல்லமா. கடவுள் எப்போ மனசு வக்கிறாரோ அப்போதான் நடக்கும்.” என்று பொறுமையாய் கூறினாள்.
“ஏன் டீ, அப்போ உன் புருஷன் மனசு வச்சா உண்டாக மாட்டியோ?” என்று பாட்டியின் குரல் இடையிட்டது.
“நீ பேசாத கிழவி, நீ என் அப்பாவோட நிறுத்திட்ட அதனால நீ இதை பத்தி எல்லாம் பேசக்கூடாது.”
“உமா பார்த்தியா எப்படி பேசுறானு.”
“அதிக பிரசங்கிதனமா பேசாத, வயசுல பெரியவங்க மரியாதையா பேசு” என்று மீத்யுகாவை கண்டித்தார்.
உணவு வேளை முடிய விகுஷ்கி மீண்டும் உத்தியோகத்திற்கு கிளம்பினான்.
மீத்யுகாவும் வீட்டாரிடம் கூறிவிட்டு விளையாட்டு சங்கத்திற்கு கிளம்பினாள்.
விளையாட்டு சங்கத்தில், “ஹாய் புது பொண்ணு! என்ன ஸ்போர்ட்ஸ் க்ளப் பக்கம் காத்து அடிச்சிருக்கு.” என்று அவளுடைய தோழி திவ்யா குறுகுறுப்புடன் வினவினாள்.
“நான் உங்கூட பேசமாட்டேன் கா.”
“ஏய் ஏய் மீயூ, ஸாரி டா. மேரேஜுக்கு வரணும்னு எவ்வளவோ டிரை பண்ணேன். பட் முடியல, நீயும் இல்லயா. ரொம்ப கஷ்டமா போச்சு. நீ இல்லாம பசங்க என் பேச்ச கேக்கவே மாட்ராங்க.”
“அப்போ ஃபர்ஸ்ட் மேச் என்னாச்சு?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி தீவிரமாக கேட்டாள்.
“ஊ.. ஊத்திக்கிச்சு!” என்று திவி கட்டை விரலை கவிழ்த்தினாள்.
“என்ன சொல்ற திவி, ஃபர்ஸ்ட் மேச்சே அவுட்டா?” திவ்யா ஆம் என்று தலையை அசைக்க, “ப்ச்சே, செட்!” என்று காலை தரை அடித்துக்கொண்டாள்.
“என்ன இப்படி ஆகிருச்சு, எவ்ளோ படிச்சு படிச்சு சொன்னேன்.”
“நீ இல்லாம எதுவுமே நடக்க மாட்டீங்கிது. எவ்ளோ டிரைனிங்க் குடுத்தேன் தெரியுமா?”
“நெக்ஸ்ட் மேச்ல எல்லாரையும் புடிச்சுக்கிறேன்.” என்று வீரியமான குரலில் தீவிரமாக கூறி, மார்புக்கு குறுக்கே இரு கைகளையும் கட்டினாள்.
வலைப்பந்தாட்டாம் பயிற்சி அளிப்பதில் சற்று தீவிரமாகவே இருப்பாள். அதுவும் பெண் பிள்ளைகள் என்பதால் அவ்வப்போது கண்டிப்புடன் நடந்து கொள்வாள்.
விளையாட்டு மட்டுமின்றி சமூகத்தில் ஒரு பெண்ணாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் வழங்கும் சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
அணியும் ஆடையிலிருந்து உபயோகிக்கும் கைபேசி வரை பாவிக்கும் முறையை சொல்லிக் கொடுப்பாள்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் கணவனின் வருமானத்தை எதிர்ப்பார்த்து, தன் தாய் தந்தையருக்கு செலவுக்கு கொடுப்பதிலிருந்து, தன்னுடைய சுய தேவைகளை பூர்த்தி செய்வது வரை, கணவனை சார்ந்திருப்பதை விரும்புவதில்லை.
பெண் என்றால் பேதையல்ல. ஆணுக்கு சமமானவள். ஓர் ஆணைவிட உடலளவிலும் மனதளவிலும் வலு மிகுந்தவள் பெண். ஆதலால்தான் ஒரு குழந்தையை சுமக்கும் பாக்கியத்தை கடவுள் பெண்களுக்கு வழங்கியுள்ளார். என்று அடிக்கடி அவளுடைய மாணவிகளுக்கு அறிவுரை ஊட்டுவாள்.
விளையாட்டில் மட்டுமல்ல, பெண்கள் சாதிக்க வேண்டிய பல துறைகளை கூறி, கிராண்ட் மாஸ்டர் எஸ். விஜயலட்சுமி, ராணி லக்ஷ்மிபாய், சரோஜினி நாயுடு, போன்றவர்களின் விபரங்களை எடுத்துக்காட்டாக கூறுவாள்.
“மீயூ, அப்பறம் உன் பாட்னர் எங்க, வெடிங் ஃபோட்டாஸ் பார்ப்போம்.” என்று ஆர்வத்துடன் கேட்டாள் திவி.
“அவர் வொர்க் போயிட்டாரு திவி” என்று கூறிய பிறகு கைபேசியில் இருக்கும். திருமணப் புகைப்படங்களை ஒவ்வொன்றாக காண்பித்தாள்.
“மீயூ, உண்மையாவே உனக்கு புடிச்சுதான் மேரேஜ் பண்ணியா?” ஏனெனில் மீசையும் தாடியும் அளவுகடந்து வளர்த்திருக்கும் ஆண்களை கண்டாலே மீத்யுகாவிற்கு அலர்ஜி.
“ஆமா திவி, அவருக்கு மீசை தாடி அப்படி இருந்தா தான் அழகா இருக்காம். சோ அதை பெருசு பண்ணல.”
“ஓகே, ஒரு நாளைக்கு அண்ணாவ இந்த பக்கம் அழச்சிட்டு வா”
“யாரு, எந்த அண்ணா?” திவ்யா, விகுஷ்கியை அண்ணா என்று வினவுவது மீத்யுகாவிற்கு புரியவில்லை.
“உன் ஆத்துக்காரர் எனக்கு அண்ணாதானே!”
“ஓ… ஓகே ஓகே, ஆமா அண்ணாதான்.” என்று வெளியே கூறிவிட்டு, ‘எனக்கே இன்னும் புருஷன் ஆகல. இதுல உனக்கு எப்போ அண்ணா ஆனார்னு தெரியலயே!’
“ஹனிமூனுக்கு எங்க போனீங்க?” என்று குதூகலமாய் கேட்டாள் திவி.
“நீ வேற திவி, மதுரைல இருந்து சென்னை வந்ததே ஹனிமூன்தான். அவர் வொர்க் பிசியா இருக்காரு!”
“ஓ.. அப்போ மத்ததுக்கெல்லாம் டைம் இருந்துச்சா?”
“எதை கேக்குற?”
“என்ன பா தெரியாத மாதிரி பேசுற, கல்யாணத்துக்கு அப்பறம் ஒண்ணு நடக்குமே! அதான் பா, அதுக்காவது நேரம் இருந்துச்சானு கேட்டேன்.”
மீத்யுகாவிற்கு வெட்கமே வந்து விட்டது. “உதை வாங்கப் போற திவி.”
“உன் வெக்கத்துலயே தெரியுது. எல்லாம் ஓகே ஆகிருச்சுனு.” என்று பற்கள் தெரிய சிரித்தாள் திவ்யா.
‘ஆண்டவா! எனக்கு மட்டும் ஏன் இந்த சத்திய சோதனை. முத்தமே முரண்பாடா போச்சு, இதுல முழுசா குடுத்தா என் கதையே முடிஞ்சிரும் போல.’
“என்ன பகல்லேயே டூயட்டா?’ என்று திவி கேலி செய்தாள்.
“உனக்கும் கல்யாணம் ஆகும்தானே? அப்பறம் கவனிச்சுகிறேன்.” என்று மீத்யுகா சமாளித்துக்கொண்டாள்.
“ஸ்டூடன்ஸ் இனி நாளைக்குதான் வருவாங்க. இப்போ என்ன பண்ண போற?”
“டியுட்டில ஜாய்ன் பண்ண வந்தேன் திவி.”
“மேரேஜ் ஆகி ஓன் வீக்தான் ஆகுது, அவசரமா டியுட்டில ஜாய்ன் பண்ணியே ஆகணுமா, இன்னும் ஒரு ஒன் வீக் வீட்டிலயே இருக்கலாமே?” என்று திவி அவள் கருத்தை தெரிவித்தாள்.
“அவருக்கு நிறைய வொர்க் டீ, எனக்கு வீட்ல இருக்க போரடிக்குது. என்ன பண்றதுன்னு சொல்லு?”
“ஓ.. அப்போ உன் விருப்பம் மீயூ. நான் ஏன் சொல்றேனா, மேரேஜ் இப்போதான் ஆகியிருக்கு சில நேரம் பேபி எதும் ஃபார்ம் ஆகியிருந்து உனக்கு தெரியாம நீ ஓடுவ ஜம்ப் பண்ணுவ அதான் மீயூ வேற எதுமில்ல.”
“இப்போதைக்கு பேபி பத்தி எந்த ப்ளானுமில்ல, பார்க்கலாம்.” ஜிஎச்ஓ எங்க?”
“ஆஃபிஸ்லதான் இருக்காரு போய் பேசிட்டு வா.”
“ஓகே” என்று விளையாட்டு துறை உயர் அதிகாரியின் அறைக்குள் சென்று, திருமணத்திற்கு பின்னர் அதிக விடுமுறை நாட்கள் வேண்டாமென்று ஒரு கடிதத்தை சமர்ப்பித்து விட்டு வந்தாள்.
“என்ன மீயூ, சார் என்ன சொன்னாரு?”
“இன்னும் கொஞ்சநாள் லீவு எடுத்திருக்கலாம்னு சொன்னாரு திவி”
“அது சரி. நீ எடுக்குற முடிவ எங்க மாத்தப்போற.”
“ஹாஹா!” என்று சிரித்துவிட்டு, “ஓகே திவி நாளைக்கு டியுட்டில ஜாய்ன் பண்றேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றாள்.
வரும் வழியில் பலத்த சிந்தனை, வீட்டில் உள்ள பிரச்சனைகளை எப்படி சரி செய்வதென்று தெரியாமல், அசைவ உணவகத்திற்குள் புகுந்தாள்.
‘இதுக்கெல்லாம் ஓரே சொலுவுஷன் சிக்கன் சாப்பிடுறதுதான். வாசனையை இழுக்குதே!’
“பாய், ச்சில்லி சிக்கன் ஒரு ப்ளேட், சிக்கன் பிரியாணி ஒரு ப்ளேட்”
“என்னமா ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த பக்கம் வந்திருக்க?” என்று கடைக்காரர் வினவினார்.
“நான் ரொம்ப பிஸி, அதான் பாய் இந்த பக்கம் வரவே முடியல.” என்று கவலையை தெரிவித்தாள்.
சுடச் சுடச் ஆவி பறக்க பறக்க, ஒரு தட்டில் பிரியாணியும், ச்சில்லி சிக்கனும் வைத்தனர். “ஹாஹா… பத்து நாளா உன்னைய நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? மிஸ் யூ லொட், இதுக்கு அப்பறமும் உன்னைய மிஸ் பண்ண நான் தயாராயில்ல.” என்று சிக்கனை பார்த்து கூறிவிட்டு, உணவு வேட்டையில் வேட்கையோடு இறங்கினாள்.
ஒரு பிடி பிரியாணிக்கு, ஒரு துண்டு ச்சில்லி சிக்கன் என அருமையாய் சுவைத்து சுவைத்து உண்டாள்.
உண்ணும் வேளை அருமையான யோசனை ஒன்று கிடைத்தது. அன்று வைத்தியசாலை சென்று வேளை, வைத்தியரிடமோ செவிலியரிடமோ சஷ்டியை பற்றி விசாரித்திருக்கலாமென்று, உணவை உண்ட பின்னர் தாமதிக்காமல் வைத்தியசாலையை அனுகினாள்.
விகுஷ்கி வந்தவாரே மீத்யுகாவும் யாரும் அவளை பின் தொடர்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வைத்தியசாலைக்குள் சென்றாள்.
சஷ்டி இருக்கும் அறையை அடைந்தவுடன் செவிலியரிடம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
ஏகப்பட்ட ஔடதங்கள் சஷ்டியின் உடல் வழியே ஏறிக்கொண்டிருக்க, அதை பார்த்த மீத்யுகாவிற்கு விழி வழியே விசனம் கண்ணீராய் வழிந்தோடியது. அவ்வேளைதான் விகுஷ்கியின் கவலைகளையும், ஆதங்கத்தையும் புரிந்து கொண்டாள். தங்கை மீது உள்ள பாசம் கடலைவிட மிகையானது.
கண்களை துடைத்தபடி வெளியே வந்து செவிலியரிடம் சஷ்டியை பற்றிய தகவல்களை விசாரித்தாள்.
சஷ்டியை பற்றி முழுவதுமான தகவல்களை கூறுவதாக இல்லை செவிலியர். “சிஸ்டர் நான் சஷ்டியோட அண்ணன் வைஃப்”
“அப்போ நீ உன் புருஷன் கிட்டவே கேட்டுக்கோம்மா. விகுஷ்கி சார் யாருக்கும் எந்த தகவலும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்காரு, நீ டாக்டர் கிட்டவே கேட்டாலும் எந்த பிரயோஜனமும் இல்ல. நேரத்தை வீணாக்காம இங்க இருந்து கிளம்புமா” என்று செப்பினார் செவிலியர்.
“ஏன் சிஸ்டர் அப்படி சொல்லுறீங்க. சஷ்டிய ஏன் அட்மிட் பண்ணிருக்காங்கனு கூட தெரிஞ்சிக்க கூடாதா?” மீத்யுகா, இதில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்ந்தாள்.
“இல்லமா. உன்ன மாதிரி யாரும் பொண்டாட்டி, அக்கா, தங்கச்சினு சொல்லிக்கிட்டு வந்தாலும் சஷ்டியோட டீடைல்ஸ் யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு விகுஷ்கி சார் சொல்லி இருக்காரு.”
“அதுதான் சிஸ்டர், ஏன் அப்படி சொல்லி இருக்காரு உங்க விகுஷ்கி சார், ப்ளீஸ் அதையாவது சொல்லுங்க! அதையாவது தெரிஞ்சிக்கிளாமா?”
“விகுஷ்கி சாரோட தொழில் எதிரிங்க, சஷ்டி பாப்பாவ கொலை பண்ண முயற்சி பண்ணிருக்காங்க. அதான், யார்க்கிட்டவும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்காரு. இப்பயாவது கிளம்புறியா?” என்று செவிலி தாய், கையெடுத்து கும்பிடாத குறைதான்.
“ஓகே கூல் கூல்!” அவள் கைபேசியை காண்பித்து, “நான் அவரு வைஃப்தான் பாருங்க. எதுவும் ஆகாது. நீங்க பயப்படாதீங்க சிஸ்டர்.”
“சார் கிட்ட எதும் சொல்லிறாதமா, என் குடும்பமே என்னைய நம்பிதான் இருக்கு”
“இல்ல இல்ல சிஸ்டர். நான் எதுவும் சொல்லமாட்டேன். நான் கிளம்புறேன்.” என்று மீத்யுகா கூற, செவிலியர் பதிலின்றி திக்பிரமை பிடித்தாற் போல் இருந்தார். அவருடைய செய்கை கவனித்தவள் என்னவென்று வினவி, “ஏன் கா ஒரு மாதிரி இருக்கீங்க. பணம் எதாவது வேணுமா, கூச்சப்படாம கேளுங்க.” என்று அவரை பார்த்து கேட்டாள்.
அதற்கு செவிலியரோ, “சார், இந்த அம்மாதான் வந்து உங்க சம்சாரம்னு சொன்னாங்க.” என்று செவிலியர் கூற, மீத்யுகாவின் அடிவயிற்றில் புளியை கரைத்தது போல் உணர்வு. மெதுவாக அவள் பின்னே திரும்பி பார்த்தால், அவன்!
‘வாத்து வாயன் மூக்கு வேர்த்தா மாதிரி வந்துட்டானே! இவன யாரு வரச் சொன்னா, இப்போ நீ என்ன டீ பண்ணுவ?’ என்று எண்ணிவிட்டு முகத்தில் கையை வைத்து துடைத்துக்கொண்டாள்.
விகுஷ்கியை பார்த்த கணமே செவிலியர் நடந்தவற்றை எல்லாம் கூற ஆரம்பித்தார். “சஷ்டி பாப்பாவ கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. அதான் சார் எந்த தகவலும் வெளிய சொல்லக்கூடாதுன்னு சொன்னேன். வேறு எதுவுமே சொல்லல சார். என் குடும்பத்து மேல சத்தியமா சொல்றேன் சார். இதுதான் சார் நடந்துச்சு. என்னைய வேலைய விட்டு தூக்கிறாதீங்க சார். என் குடும்பமே என்னைய நம்பிதான் சார் இருக்கு.” என்ற செவிலியர் பரிதாபகரமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவது போல் விகுஷ்கியிடம் நடந்த அனைத்தையும் ஒப்பித்தார்.
பெருமூச்சை இழுத்து விட்டபடி, “ஓகே சிஸ்டர் நீங்க போங்க.” என்று விரக்தியான குரலில் கூறினான்.
செவிலியர் செல்ல, மீத்யுகாவும் மெதுவாக நழுவப்பார்த்தால், அதை கவனித்த அவனோ, “ஏய்!” என்று அவளை அழைக்க, மீத்யுகாவோ அப்பாவி போலும் தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போலும் முகத்தை வைத்துக்கொண்டு அவளது புருவங்களால் எதற்காக அழைக்கிறான் என்பதை வினவினாள்.
“எம் முன்னாடி வந்து நில்லு” என்று அவன் கூப்பிடும் தோரணையே அவளை அணைப்பதற்கு அல்ல அடிப்பதற்கு என்றது.
அவன் பேச்சிற்கினங்க அவன் முன் வந்து மீத்யுகா நின்றாள். “உன்ன யாரு இங்க வரச் சொன்னா, நீ ஏன் இங்க வந்த?”
அவளோ அசடு வழிவது போல் பல்லை காட்டிக்கொண்டு, ‘என் நேரத்துக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலயே! என்ன சொன்னாலும் அதை ஏதுக்க மாட்டானே! எதாவது சொல்லி சமாளிச்சிரு டீ மீயூ!’
எப்படி சமாளித்திருப்பாள்?
***
உணர்வுகள் தொடரும்…