உதிரத்தின்… காதலதிகாரம்! 2

உதிரத்தின்… காதலதிகாரம்!

காதலதிகாரம் 2

பெரும்பாலும் கௌதமின் தனியறை பூட்டியே இருப்பதைப் பார்த்துவிட்டு பலமுறை அவனிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கப் பெறாத நிலையில், திறந்திருந்த அறைக்குள் நுழைந்து அனைத்தையும் நிதானமாகப் பார்வையிட்டாள் பிரகதி.

தன்னை சீர்செய்துகொண்டு வெளி வந்தவன் தன்னைக் கண்டதும் தயங்குவதைப் பார்த்து எதாவது பேச எண்ணியவள் அவளின் ஆடையைப் பற்றி வினவினாள்.

அவள் அந்த அறைக்குள் நுழைந்ததைக் கண்டு, தான் அறையைப் பூட்டாமல் உள்ளே வந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டவன், “காலையிலேயே சொல்லிட்டேனே!” என்றவாறு மடக்கி விட்டிருந்த கால் சராயை கீழே இறக்கிவிட சற்றே குனிந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவனது காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கௌதம் ஊன்றியிருந்த ஒரு காலை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள் பிரகதி.

பதறி விலக எண்ணியவனால் நகரவே இயலாத நிலை.  “ஏய்! என்ன பண்ணிட்டு இருக்க லூசே? காலை விடு முதல்ல!” கோபமாகக் மெல்லிய குரலில் கத்தினான் கௌதம்.

“என்னை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு.  அப்பதான் எந்திரிப்பேன்!” நெற்றியை தரையில் படும்படி வைத்துக்கொண்டு கூறினாள் பிரகதி.

தலையிலடித்தபடியே, “முடியாது” என்றவனை நோக்கி தலையை நிமிர்த்திப் பார்த்தவள், “அப்போ நானும் விட மாட்டேன்” என்றவாறு தலையை பழையபடி கவிழ்ந்துகொண்டாள்.

“உன் வயசுக்கு ஏத்த மாதிரி எதாவது பண்றியா பிரகதி!” கொந்தளிப்பாய் கேட்டவனிடம்,

“நானும் அதையேதான் கேக்குறேன்.  புரியாத வயசில அப்பாம்மா விளையாட்டு ஆடுனது.  இப்ப எல்லா விபரமும் தெரிஞ்சும் எங்கூட விளையாட வரமாட்டுற!” சடைத்துக் கொண்டவளது செயலை எண்ணி கண்களை இறுக மூடித் திறந்தான் கௌதம்.

‘புரிஞ்சு பேசுறாளா? இல்லை புரியாம பேசுறாளா?’ நொந்து போய் நின்றிருந்தான் பிரகதியின் பேச்சில்.

தலையை வாயில்புறம் திருப்பி நோக்கியவள், “கதவு வேற தொரந்திருக்கு. யாராவது ரூமுக்கு வெளிய இருக்கற பாத்ரூம் வந்தா இங்க நடக்கிறது அப்டியே தெரியும்.  எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றவள்,

“வயித்தில நாலு மாசம்.  நீ என்னை ஏத்துக்க மாட்டிங்கறேன்னு கேக்கறவங்ககிட்ட சொல்லிருவேன். நீதான் மானம் மரியாதைனு புலம்புவ.  எப்டி வசதினு பாத்துட்டு, நான் சொன்ன மாதிரிச் சொல்லு” பிளாக்மெயில் செய்தாள்.

“கல்யாணம் என்ன கல்கோனா முட்டாயா!  வாங்கி வாயில போட்டு ஒரு மணி நேரத்தில கரைஞ்சிரும்னு போக.  லூசு.  முதல்ல என் காலை விடு!” என்றபடி தனது காலை அவளின் கைகளில் இருந்து விலக்கும் முயற்சியில் தனது மற்றொரு காலால் முயன்றான்.

“அப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு ஓகே” எனக் கேட்டவள், அவனது இரண்டு கால்களையும் இறுகப் பற்றியபடி அவனது கால்களைக் கட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தாள் பிரகதி. அவளின் செயலில் மேலும் பதறினான் கௌதம்.

“உன்னோட நல்லதுக்கு சொன்னா புரிஞ்சிக்கோ பிரகதி” என்றான்.

கௌதமின் பதிலில் அவனை நோக்கி நிமிர்ந்தபடியே, “உனக்கு உண்மையில என்னதான் பிரச்சனை?  அதையாவது எங்கிட்டச் சொல்லு.  நாந்தீத்து வைக்கிறேன்” தெனாவட்டாகக் கூறினாள் பிரகதி.  ஆனால் இறுகப்பற்றிய அவனது கால்களை விடவே இல்லை.

“எனக்குப் பிரச்சனையே நீதான்.  எங்கண்ணு முன்ன நீ வரலைன்னா எம்பிரச்சனை எல்லாம் ஓவர்” வலுக்கட்டாயமாக வரவழைத்த வார்த்தைகளை கல்நெஞ்சோ என யோசிக்கும் வகையில் இறுகிய முகத்தோடு கூறினான் கௌதம்.

“எனக்கு என்ன குறைனு வேணாங்கற?” என்றவள், “வேணா நீ ட்ரையல் பாக்க கூப்டாலும் நான் ரெடி” என்றவள் படுக்கையைக் காட்டிக் கண்ணடித்துச் சிரிக்க,

 “லூசு… எதையாது பேசாம என் காலை விடு முதல்ல.  நேரமாகுது.  வெளிய எதாவது நினைப்பாங்க.  நீ விடலைனா உதறிவிட்டுட்டு போயிருவேன்.  அப்புறம் நீதான் வருத்தப்படுவ” என்றவனிடம்,

“சரி நீ எதுவும் சொல்ல மாட்ட.  நான் யாருகிட்ட போயிப் பேசணுமோ அங்கேயே போயிப் பேசிக்கறேன்.  ஆனா நான் காலை விடமாட்டேன்.  நீதான் என்னைத் தூக்கி விடணும்” அடமாய் பேசினாள் பிரகதி.

வெளியிலிருந்து யாரோ உள்நோக்கி வரும் ஓசை கேட்பது போலிருக்க, யோசிக்காமல் குனிந்து பிரகதியை தூக்க கௌதம் முனைய, அவனது முயற்சியில் எழுந்தவள் அவன் எதிர்பாரா வேளையில் அட்டைபோல அவனது மார்போடு சென்று ஒட்டிக் கொண்டாள் பிரகதி.

பெண்ணது செயலில் சத்தமாக அதட்டவும் முடியாமல், அவளிடமிருந்து பிரியவும் முடியாமல்… சற்று நேரம் திகைத்தவன், மெல்லிய குரலில், “படுத்தி எடுக்கறடீ.  உன்னையெல்லாம்…” பற்களை கடித்தபடியே வார்த்தைகளை விழுங்கியபடியே தன்னிடமிருந்து அவளை வலுக்கட்டாயமாக பிரித்து நிறுத்தியவன், ஓங்கி பிரகதியின் கன்னத்தில் ஒரு அறை அறைந்திருந்தான்.

அதுவரை அவனிடம் சீண்டலும், கிண்டலுமாக இருந்தவள் அவனது அடியில் அத்தனையும் மறைந்து கண்களில் கோர்த்த நீரோடு கன்னத்தைப் பிடித்தவாறு கௌதமையே பார்த்தாள்.

“அடிச்சிட்ட…” கண்களில் நீரோடு கூறினாள்.

“ரொம்ப முத்திருச்சு உனக்கு.  உன்னை ஏர்வாடி, இல்லைனா சீனியப்பா தர்ஹால கொண்டு சேக்கச் சொல்லி உங்கப்பாட்டச் சொல்லணும்” கையை நீட்டி அவளைக் கண்டித்ததோடு மறுகாலில் ஏற்றியிருந்த கால்சராயை இறக்கி விடாமலேயே வெளியில் சென்றுவிட்டான் கௌதம்.

என்றும் இத்தனை கோபம் கௌதம் அடைந்ததில்லை.  இன்று பிரகதியின் அதீத உரிமையான செயலில் அவளைத் தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் அப்படி அறைந்திருந்தான்.

அவனது உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்து அவனை இக்கட்டில் தள்ளி நிறுத்துவதையே அவள் வேலையாகச் செய்தால் அவனும் என்னதான் செய்வான்.

எவ்வளவு கூறியும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் அடம்பிடிப்பவளை எப்படி மாற்றுவது என அவனுக்கும் புரியவில்லை.

          கௌதம் அறையிலிருந்து வெளியில் சென்றும் பிரகதி அறையை விட்டு நகராமல் அப்படியே அமர்ந்திருந்தாள். பதினைந்து நிமிடங்களுக்குப்பின் வாயிலின் அருகே வந்து நின்றவன், “இன்னும் ஒன்னு வேணுமா!  கிளம்பு சீக்கிரம்” என விரட்ட,

          “ஆமா. நீ அடிச்ச இடத்துல வலி போறதுக்கு ஒன்னே ஒண்ணு தா” தனது உதடுகளைக் குவித்துக் கேட்டவளைக் கண்டவனுக்குள் நெஞ்செல்லாம் நரக வேதனை.

          ‘இப்பத்தான் அடிச்சேன்.  எதுவுமே நடக்காத மாதிரி இன்னும் கிஸ் வேணுனு கேக்கறவளை என்ன கடவுளே செய்வேன்’ மனதிற்குள் குமைச்சலோடு, அங்கிருந்து அகன்றுவிட்டான்.

          அவளிடம் இறங்கிச் சென்றால், அவள் நினைத்ததை சாதித்துக் கொள்வாள் என்பதும் கௌதமிற்கு திட்டவட்டமாகத் தெரிந்ததால் தாமதிக்காமல் அங்கிருந்து அகன்றதோடு, அவனது பணியில் கவனம் செலுத்த முயன்றான்.

          பதினைந்து நிமிடங்களுக்குப்பின் பணியாளர் மூலம் பிரகதிக்கு தேநீரை கொடுக்கச் செய்திட, உள்ளே நுழைந்தவள் கண்டது தன்னை சீர்செய்து கொண்டு கிளம்பி நின்ற பிரகதியைத்தான். 

எதுவுமே அங்கு நடவாததுபோல அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் வந்து நின்றிருந்த பிரகதியைக் கண்டவளிடம், “இந்தா இந்த சாவிய உங்க ஓனர்கிட்டப் போயிக் குடு” என்று திணித்துவிட்டு கௌதமிடம் பேசாமல் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு மருந்தகத்தை விட்டு வெளியில் சென்று விட்டாள் பிரகதி.

இதுபோல எத்தனை முறை கோபமாகச் சென்றாலும், அதிகபட்சம் இரண்டு நாள்கள்தான் தாங்குவாள்.  அதன்பின் எதுவுமே நடவாததுபோல அங்கு வந்துவிடுவாள் பிரகதி.

அத்தனை நேசம் கௌதமின்மீது அவளுக்கு.

என்றுமே பிரகதியை கடிந்ததோடு சரி.  ஆனால் இன்று அடித்தததை எண்ணி  உள்ளுக்குள் குமுறிக் களைத்திருந்தான் கௌதம்.

வெளியில் போய் நின்றவள், இன்னும் கிளம்பவில்லை என்பதும் அவளின் பேச்சு சத்தத்தில் கௌதமிற்கு புரிந்தது. தன்னைக் காணாததுவரை அங்கிருந்து செல்லமாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும். 

மீண்டும் உள்ளே வந்து அவளாக எதையேனும் செய்யும்முன், தானே வெளியில் செல்ல எண்ணி எழுந்தான்.

‘எதுக்கு இத்தனை பைத்தியமா எம்மேல இருக்கா.  இவளுக்கு நான் என்ன பதிலுக்குப் பண்ணப்போறேன்.  கடவுளே…’ எண்ணியபடியே நிதானமாக வெளியில் வந்தான்.

மற்றவர்களிடம் கூறிக்கொண்டு இவனது வருகைக்காக வெளியில் நின்றவாறே காத்திருந்தவள், வெளியில் வந்து நின்ற கௌதமைக் கண்டு மற்றவர்கள் பாராமல் பிரகதி கண் சிமிட்ட, அவளின் செயலில் தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றிய உணர்வை கட்டுப்படுத்தியவாறு, கண்டும் காணாததுபோல மற்றவர்களிடம் பேசியவாறு திரும்பிவிட்டான் கௌதம்.  வழமைபோல சிஸ்டத்தின் முன்பு சென்று அமர்ந்தவனுக்குள் போராட்டம்.

ஹப்பாடா என அவன் அமர்ந்த சிறிது நேரத்தில், வீட்டிற்கு சென்றதும் கௌதமின் எண்ணிற்கு அழைத்தவள், “என்ன சீனியர்.  ரொம்பத்தான் பண்ற?  நீ அடிச்சா உன்னை விட்டுட்டுப் போயிருவேன்னு நினைச்சியா?” ஒரு நொடி தாமதித்தாள்.

பிறகு, “நீ என்னதான் அடிக்கற மாதிரி அடிச்சாலும் நடிச்சாலும் அது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுப் போகமாட்டேன்.” தனது மனதைத் திறந்து கூறிவிட்டு,  

“பத்திரமா வீட்டுக்கு வந்தாச்சு.  அடுத்த வாரம் நாளு நல்லாருக்காம்.  அன்னைக்கு உன்னை எங்கப்பா வந்து நேருல பாக்கரதா சொல்லியிருக்காங்க.  அத நேரில வந்து சொல்லலாம்னு வந்தா ரொம்ப பிகு பண்ற.  இப்போ உன்னோட ஆட்டம்.  கல்யாணத்துக்கப்புறம் பாரு…” எனத் தாமதித்தவள்,

“முதல்ல ஒழுங்கா என்னைக் கல்யாணம் பண்ணத் தயாரா இரு.  எங்கப்பாவ தாஜா பண்ணி நம்ம மேரேஜ்கு பர்மிசன் வாங்கி வச்சிருக்கேன்.  எதாவது பேசி கெடுத்தே… அப்புறம் நானே அத உங்கிட்டப் பண்ணுற மாதிரி ஆகிரும். ஏடாகூடாம எங்கிட்ட மாட்டிக்காத.” கூறி சிரித்தவள்,

“பாத்துப் பேசு” கூலாகக் கூறிவிட்டு வைத்திருந்தாள் அலைபேசியை.

அதுவரை இலகுவான நிலையில் இருந்தவன், இறுதியில் பெண் கூறிய செய்தியில், ‘என்ன பேச்சு பேசுறா?  விட்டா அவளாவே கழுத்துல மஞ்சக் கயித்தை கட்டிட்டு வந்து, நாங்கட்டுனேன்னு நின்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லைபோல.  சரியான கேடி’ என நினைத்தவனது மனம் இயல்பைத் தொலைத்திருந்தது.

***

புதிதாய் தோன்றிய தெருவில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வீடுகள் புதியதாக முளைத்த வண்ணம் இருந்தது.

மூவர் அடங்கிய குடும்பத்தில் தந்தை விவசாய நிலங்களை தரிசாக போட மனமின்றி கிராமத்திலேயே தங்கிவிட, தாயும் மகனும் மட்டுமேயான சிறு குடும்பம். தற்போது வசிப்பது மதுரையில். 

கௌதம் தொழில் துவங்கி பணிக்குச் செல்ல ஆரம்பித்த ஆறு மாதங்களிலேயே வீடு மாற்றும் பிரச்சனை அவனது தாய் உமாவிற்கு துவங்கியிருந்தது.

வெளியில் எங்கு சாப்பிட்டாலும், கௌதமின் உடலுக்கு ஒவ்வாமை வந்துவிடும்.

உமா அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்.  அவருடன் பணிபுரிவோர் சிலர் சேர்ந்து தினசரி அலுவலகம் சென்று வர வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தமையால், அசௌகரியம் ஏதும் அவருக்கு இல்லை.  அதிலேயே காலையும் மாலையும் அலுவலகம் சென்று திரும்பிவிடுவார்.

கௌதம் பிஃபார்ம் படித்து முடித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக சொந்தத் தொழில் துவங்கி தானே அதை திறம்பட நடத்தத் துவங்கியிருந்தான்.

அதுதான் அவனுக்கு வசதி.  எந்த நேரத்தில், எந்த வடிவில் எங்கு உடல்நலக் குறைபாடு எப்போது தோன்றும் என்று யாராலும் கணிக்க இயலாது.

காலையில் நன்றாக வேலைக்குச் செல்பவன், சில நாள்களில் தாயிக்கு அழைத்து, “ம்மா… வரும்போது உங்கூட என்னையும் கூட்டிட்டுப் போயிரும்மா” என்றாலே உமா மகனின் உடல்நிலையைக் கணித்துவிடுவார்.

அத்தோடு மகனை அலுவலகம் செல்லும் வாகனத்திலேயே அழைத்துக் கொண்டு வீடு வந்து விடுவார்.

மகனின் உடல்நிலையில் அவ்வப்போது எதிர்பாராமல் நிகழக்கூடிய திடீர் தொய்வினால் ஆபரணங்கள், சொந்த கிராமத்தில் இருந்த நிலங்கள் அனைத்தையும் இழந்திருந்தது அக்குடும்பம்.

நல்ல வசதியான வீட்டில்தான் வாழ்க்கைப்பட்டிருந்தார் உமா.  திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் சென்ற மனைவியை ஞானசேகரனும் தடுக்கவில்லை.  ஞானசேகரன், ஒரு காலகட்டம் வரை மனைவியையும், மகனையும் நன்றாகவே வைத்திருந்தார்.

மகனின் உடல்நிலையில் உண்டாகும் பின்னடைவினால் முதலில் ஆபரணங்களை அடகு வைத்தும், சில நேரங்களில் விற்றும் மருத்துவம் பார்த்தனர்.

ஆபரணங்களை இழந்தபின், விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தவரின் நிலத்தையும் விற்றபின், அதற்குமேலும் விற்க ஒன்றுமில்லை எனும் நிலை வந்தபோது, மனைவிக்கு அரசு உத்தியோத்திற்கு செல்லவேண்டிய உத்திகளைக் கூறி படிக்க வைத்திருந்தார்.

இரண்டு முறை, க்ரூப் ட்டூ தேர்வில் சொற்ப மதிப்பெண் வித்தியாசத்தில் தவறவிட்டிருந்த பணியை, மூன்றாவது முறையில் கைப்பற்றியிருந்தார் உமா.

கையில் ஆதாரத்திற்கு ஒரு நிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் இல்லாத நிலையில் இருந்தபோது, உமாவிற்கு அசிஸ்டெண்ட் பணி கிடைத்தது சற்று ஆறுதலைத் தந்திருந்தது.

மகனது உடல்நலக் குறைபாட்டால் மனம் ஓய்ந்திருந்தவர்கள், அதன்பின் சற்றே நம்பிக்கையோடு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு புலம் பெயர முன்வந்திருந்தனர்.

பணி நிமித்தமாக, மதுரைக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உமா இருக்க, குடும்பத்தை மதுரைக்கு மாற்ற எண்ணினார்.  ஆனால் ஞானசேகரன், “உனக்கும் மதுரையிலதான் வேலை. நம்ம கௌதம்கு அவசரம் ஆத்திரத்துக்கு மருந்துக்கு உடனே பாக்க ஏதுவா அங்கேயே வீடு புடிச்சு தங்கியிருங்க.  எனக்கு இந்த நிலத்தை விட்டுட்டு அங்க வந்து சும்மா உக்காந்திருக்க முடியாது.  வாரத்தில ரெண்டு தடவை அங்க வந்து போயி இருந்திக்கிறேன்” திடமாக தனது முடிவில் நின்றிருந்தார்.

மனைவியின் வருமானம் ஓரளவு கணிசமாக இருந்தாலும், அதை வாங்கி செலவளிக்க ஒப்பாத மனம்.  மகனின் உயிரைக் காக்க, தன்னால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்கிற வருத்தம் அவரை அவ்வாறு பேசச் செய்திருந்தது.

உமா கணவரை வற்புறுத்தவில்லை. வளர்ந்த மருத்துவம், அவசர சிகிச்சைக்கு தன்னந்தனியாக கிராமத்திலிருந்து நேரங்காலம் பார்க்க இயலாமல், மகனை அழைத்து வர உண்டாகும் நெருக்கடிகளை, தாமதத்தால் உண்டாகும் பின்னடைவுகளை உணர்ந்து, மதுரைக்கு வர ஒப்புக்கொண்டு உடனே அங்கு குடி வந்திருந்தார்.

கிராமத்தில், கௌதம் உடல்நலத்தைக் கண்ணுற்ற பாரம்பரிய வைத்தியர்கள், அவர்கள் அறிந்த அனைத்துவித மருத்துவத்தையும் செய்து பார்த்து, எதற்கும் கட்டுப்படாத குறைபாட்டை விட்டு ஒதுங்கத் துவங்கியிருந்தனர்.

புது விதமான உடல் நலக் குறைபாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது.  அதை விளக்கினாலும், “இதென்னடி அதிசயமா இருக்கு?” எனும் ஆச்சர்யத்தோடு கூடிய வினாக்கள் மட்டுமே அனைவரிடமிருந்தும் வந்தது.

மூன்று தலைமுறை பார்த்தவர்களுக்கும், சில மருத்துவர்களுக்குமே ஆரம்பத்தில் புரியாத புதிராக இருந்தது கௌதமின் உடல்நலக் குறைபாடு.

கௌதம் பிறந்த மூன்று மாதங்களில் குப்புற படுக்க எத்தனித்த குழந்தையின் மார்பகப் பகுதி முழுமையும் இரத்தக்கட்டின் நிறத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருந்தது.

அதைக் கண்டு அதிர்ச்சியுற்றவர்கள், அங்கு இருந்த மருத்துவரை அணுகியிருந்தனர்.

கௌதமின் நிலையைப் பார்த்த மருத்துவர், மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்க்கும்படி எழுதிக் கொடுத்தார்.

அங்கிருந்தவர்களும், சிகிச்சை என்ற பெயரில் அவர்களே கூடி விவாதிப்பதும், பிறகு “குழந்தை படுக்கறதுக்கு நல்ல மெத்தை மாதிரி வாங்கி அதுல படுக்க வைங்க.  ரொம்ப நேரம் அதே நிலையில படுக்க விடாதீங்க! குறிப்பா தரையில வெறும் பாயில படுக்க வைக்காதீங்க!” என்று கூறி அனுப்பி வைத்திருந்தனர்.

அடுத்தடுத்து காலில் காயம், பல் விழுந்தமை என வந்தபோது, நிற்காமல் ஓடிய இரத்தத்தை கட்டுப்படுத்த இயலாமல் திணறியிருந்தனர் மருத்துவர்கள்.

விரயமான இரத்தத்தை ஈடு செய்ய வேண்டி, அப்பொழுதெல்லாம் மாற்று நபர்களிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் கௌதமிற்கு ஏற்றப்பட்டது.

சில நேரங்களில் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரிக்கப்பட்டு, அதனை ஏற்றினார்கள்.

பிளாஸ்மா ஏற்றினால் உடனே குணமாகக் கூடிய நிலையை கண்டு கொண்ட மருத்துவர்கள், அதன்பின் அதையே வழக்கமாக முதலுதவிக்குப்பின் செய்யத் துவங்கியிருந்தனர்.

சிறு அடி அல்லது இடித்தமையால் உண்டான இரத்தக்கட்டுகள் சரியாவதற்கு ஐஸ் கட்டி மட்டுமே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

மகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனே ரெஃப்ரிஜிரேட்டரை வாங்கி வைத்திருந்தனர் அவனது பெற்றோர்.

ஐஸ் கட்டி வைப்பதோடு, நல்ல ஓய்வும் கொடுத்தால் மட்டுமே பதினைந்து முதல் இருபது நாள்களில் குணமாகக் கூடிய நிலையில் வளர்ந்திருந்தான்  கௌதம்.

மூட்டுகளில் அடிபடாமலேயே இரத்தம் வெளியேறுதல், அதனால் மூட்டுகள் பலவீனப்பட்டும், அதிக எடையை தூக்கிக் கொள்ளவோ, அதிக தூரம் தனித்து நடக்கவோ இயலாத நிலையாக உடல்நிலை மாறியிருந்தது.

இரத்தம் உறையாமை காரணி எட்டு வகைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவன், தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களின் திருமண வாழ்க்கையைப் பார்த்தும், அவர்களின் தீரா துயரை, வேதனையை நேரில் கண்ணுற்றும் தனது திருமணத்தைத் தவிர்க்க எண்ணினான்.

அப்படி இருந்தவனது தீர்க்கமான எண்ணத்தை முறியடிக்கும் வேகத்தில் பிரகதி செயல்பட்டாள்.

அவளின் தந்தை தன்னை சந்திக்க வருவதாகக் கூறியது முதலே, அவரிடம் எப்படிப் பேசி திருமணத்தை தவிர்க்க வேண்டும்? என்ன பேசினால் அவர் தனது பேச்சை நம்பக் கூடும் என்கிற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் கௌதம்.

ஆனால், அதற்குமுன் அவனது திருமணம் பற்றிப் பேசிய அவனது தாய் கூறிய செய்தியில் கௌதமின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டையானது.

அடுத்த அத்தியாயத்தில்…