உதிரத்தின்… காதலதிகாரம்! 6
உதிரத்தின்… காதலதிகாரம்! 6
உதிரத்தின்… காதலதிகாரம்!
காதலதிகாரம் 6
முதலில் கவனிக்காமல் வழமைபோல தாயிடம் அனைத்தையும் எதிர்பார்த்து அழைத்தபோது அங்கு இருக்கிறது எடுத்துக்கொள், இப்படிச் செய்து கொள் என்பதுபோல கட்டளைகள் தேய்ந்த குரலில் தாயிடமிருந்து வந்தது.
அதுவே தொடர்ந்ததும் உடல்நிலையில் உண்டான திடீர் தொய்வினால் தாய் இப்படி நடந்து கொள்கிறாரோ என்று தோன்ற, “என்னம்மா செய்யுது. உடம்புக்கு ரொம்ப முடியலையா?” என கௌதம் நேரடியாகத் தாயிடம் சென்று நலம் விசாரிக்க, அவர் பதில் கூறுமுன்னே அவனது தந்தை முந்திக்கொண்டார்.
“ரெண்டு வருசமோ இல்லை மூனு வருசமோ பச்சப் புள்ளைகளை கவனமாப் பாத்துக்கற மாதிரி இருக்கும். அவளுக்குத்தான் அப்படி நல்ல கொடுப்பினை இல்லாததால இருவத்தாறு வருசத்துக்குமேல பிள்ளைக்குனே யோசிச்சு யோசிச்சு அவளை கவனிக்காம வாழ்ந்துட்டா.
இப்ப புள்ளையப் பாக்கவும் முடியாம, தன்னையே பாக்கவும் இயலாம ஓஞ்சு போயி படுத்துருக்கா.” தந்தையின் பதிலில் கௌதமின் மனதில் சுருக்கென காயப்பட்ட உணர்வு.
தாய் படுக்கையில் இருந்து எழாமல் இருப்பதைப் பார்த்ததும், “எதாவது உனக்கு செஞ்சு எடுத்துட்டு வரவாமா?” என்ற மகனை பரிதாபமாகப் பார்த்தபடியே,
“அப்பாவே எனக்கு வேணுங்கறதை செஞ்சு குடுத்துட்டாரு கௌதம். நீ குளிச்சிட்டு மெடிக்கலுக்கு கிளம்பு.” என்ற தாயிடம் அதற்குமேல் பேசமுடியாமல் அகன்றுவிட்டான் கௌதம்.
மருந்தகத்திற்குச் செல்ல கிளம்பி வந்தவனிடம், “அம்மாவுக்கு கொஞ்ச நாளாவே உடம்புக்கு பிரச்சனையினு சொல்லிட்டு இருக்கா. இன்னைக்கு டாக்டர்கிட்ட போயி காமிச்சிட்டு அவங்க என்ன சொல்றாங்கனு பாக்கணும்…” மகனின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைக் கண்டாலும், காணாததுபோல பேசிய தந்தையின் பேச்சைக் கேட்டவனுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.
எப்போதும் வேலையாக அங்குமிங்குமாகத் திரியும் தாயை இன்று அவன் எழுந்தது முதலே காணவில்லை.
‘பக்காவா பிளான் பண்ணி நம்மை அவங்க எக்ஸ்பெக்டேசனுக்கு ஏத்தமாதிரி முடிவு எடுக்க வைக்கப் பாக்கறாங்க’ என்பதுபோல தனக்குள் யோசித்துக் கொண்டவனுக்கு, தந்தையின் பேச்சில்
‘இந்த அம்மா ஒரு நாளாவது அவங்களுக்கு முடியாததை எங்கிட்டச் சொன்னாங்களா? புள்ளை புள்ளைனு உருகுனாலும், சில விசயங்களை சொல்ற ஆளுகிட்டத்தான் சொல்லுவாங்கபோல!’ என மனதிற்குள் சலித்தவாறே,
‘என்னதான் உடம்புக்குனு சொல்ல மாட்டிங்கறாங்க. இவரும் முடியலை முடியலைங்கறார்’ என நினைத்தபடியே தாயைக் காண மீண்டும் அவரிருந்த அறைக்குள் நுழைந்தான்.
என்ன பிரச்சனை எனக் கேட்டு நின்ற மகனிடம் உமா சொல்லத் தயங்க, சேகரன் மகனிடம் கிராமத்து பாணியில் விளக்க, புரிந்துகொண்டவன் அதனைப் பற்றி பேச லஜ்ஜையாக உணரவே, “சரிப்பா. டோக்கன் போடறேன்பா. போயிட்டு வாங்க” என்றதோடு அங்கிருந்து அகல நினைக்க,
“உன்னோட விசயத்தை அப்படியே கிடப்பில போட்றாம சீக்கிரமா யோசிச்சு நல்ல முடிவா எடு…
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் கணக்கா எதையாவது போயி அந்தப்புள்ளையோட அப்பாகிட்டயோ, அந்தப் புள்ளைகிட்டயோ சொல்லி வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதையா… எல்லாத்தையும் கெடுத்திராத…
சூதனமா யோசிச்சு முடிவெடு!” என்றதோடு அங்கு நிற்காமல் அகன்றிருந்தார் சேகரன்.
கௌதமிற்கு பெற்றவர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாறுதல் போலத் தோன்றியது.
கௌதமிற்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் அவனது தாய் எதற்கும் ஓய்ந்து படுக்கையில் படுத்துப் பார்த்ததில்லை. முந்தைய இரவு வரை வேலை வேலை என்று திரிந்தவர், திடீரென்று படுத்திருந்ததே கௌதமிற்கு அபாய உணர்வை மனதில் தோற்றுவித்தது.
இதுவரை தன்னை சிரத்தையோடு கவனித்துக் கொண்ட தாய், அறைக்குள்ளேயே அடைந்து இருக்க, தன்னை எதற்கும் எதிர்பாராமல் கணவரை மட்டுமே எதிர்பார்த்து இருந்ததைக் கண்டதும் என்றுமில்லாமல் வெறுமையாக உணர்ந்தான் கௌதம் .
‘எனக்காக எவ்ளோ செஞ்சவங்க, எங்கிட்ட எதையும் கேக்க மாட்டிங்கறாங்க. எல்லாத்துக்கும் அவரையேதான் கூப்பிடறாங்க’ எனும் இயலாமை உணர்வு அவன்மீதே வெறுப்பைத் தோற்றுவித்தது கௌதமிற்கு.
உமாவிற்கு சில மாதங்களாகவே மாதாந்திர பிரச்சனை நீடித்ததில் அதிக ரத்தப்போக்கின் காரணமாக உடல் சோர்வோடு, மகனை நினைத்த கவலையும் சேர்ந்து படுக்க வைத்திருந்தது.
சில விசயங்களை சிலரோடு மட்டுமே பகிர்ந்துகொள்ள இயலும் என்பது சந்தர்ப்பங்கள்தான் மனிதனுக்கு புரிய வைக்கும். அது புரியாதபோது மனக்கசப்புகள் மற்றும் தன்னைக் கண்டுகொள்ளவில்லை எனும் ஆதங்கம் தோன்றுவது இயல்பே. அந்நிலையில்தான் தற்போது கௌதம் இருந்தான்.
மனைவியிடம், “திடீர்னு இப்படி அவனைக் கவனிக்காம அம்போனு விட்டா அவனால சமாளிக்க முடியாம திணறிப் போயிருவான். அதனால அவனை தனியா இருந்து சமாளிக்கப் பழக்குனு சொன்னேன். இப்பப்பாரு… இக்கட்டுல கொண்டு வந்து அவனை நிறுத்தியிருக்க!” கடிந்துவிட்டு,
“முடியாததோட எந்திரிச்சு எதுவும் செய்யாத. ஹாஸ்பிடல் போயிட்டு வந்திரலாம். இன்னைக்கு ஒரு நாள் அவனே சமாளிக்கட்டும்” என்று கட்டளைபோல அதிகாலையிலேயே மனைவியிடம் கூறியிருந்தார் சேகரன்.
சில விளக்கங்கள் பெறப்படாத நிலையில் கௌதம் வேறு மாதிரியான யூகங்களுக்கு இடம் கொடுக்க நேர்ந்தது
சட்டென்று அனைவருமே அன்னியமானாற் போன்ற உணர்வு தோன்ற அங்கிருக்க மூச்சு முட்டுவதாகத் தோன்றியது. தாமதிக்காது விரைவாக குளித்து கிளம்பி ஒரு முடிவோடு மருந்தகத்திற்கு வந்திருந்தான்.
அப்படி வெறுமையாக வந்தவனுக்கு எதிரில் நின்று வரவேற்ற பிரகதியைக் கண்டதும் உயிர் வாட்டும் பாலைவனத்து வெயிலில் நீரின்றி நெடுந்தூரம் நடந்தவனுக்கு சோலைக்குள் இளைப்பாற இடமும், நல் சுனை நீரும் கிடைத்த நிம்மதியான உணர்வு.
அந்த உணர்வில்தான் கிண்டலாக பிரகதியிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்திருந்தான் கௌதம்.
பிரகதிக்கு கௌதமின் இந்த பரிபாசை புதிது. ஆனாலும் அவனது முந்தைய தினத்தின் குறுஞ்செய்தியில் குதூகலம் குடிகொள்ள மகிழ்ச்சியோடு மயக்கமும், கிறக்கமுமாக வந்திருந்தவளுக்கு, அவனது நடவடிக்கை பெரிய வித்தியாசத்தை தோற்றுவிக்கவில்லை.
***
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் லித்திரனுக்கு வாயில் உண்டான இரத்தக் கசிவிற்கு ஃபேக்டர் எட்டு ஊசி போடப்பட்டு முதலுதவி செய்யப்பட்டிருந்தது.
அந்நிலையில் சிறுவனது விளையாட்டுத்தன மும்முரத்தில் பிள்ளைகளோடு விளையாடும்போது தெரியாமல் மீண்டும் அந்த காயத்தில் இரத்தக் கசிவு உண்டாவதாக அலைபேசியில் கௌதமை அழைத்து அவனது பெற்றோர் உதவி கேட்டதும், உதிரப்போக்கை நிறுத்த வேண்டி முதலுதவிக்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அதற்கான மாத்திரையை ட்ரான்சமிக் ஆசிட்டை(Tranexamic Acid) அவர்களின் வீட்டு முகவரிக்கு கொரியர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான் கௌதம்.
மருந்தகம் வைத்திருப்பதால், தன்னைப்போல குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்த இலாபத்தில் மருந்து, மாத்திரைகளை வழங்கி உதவி வருவதை வாடிக்கையாக்கியிருந்தான் கௌதம்.
சிலரிடம் குறைந்தபட்ச பணமும் பெறாமலேயே உதவி செய்யும் மனப்பக்குவம் பெற்றிருந்தான் கௌதம்.
அதனைக் கேள்விப்பட்டுத்தான் லித்திரனின் பெற்றோர் அவனிடம் உதவி கோரியிருந்தனர்.
அடுத்தடுத்து நாள்களிலும் ஃபேக்டர் எட்டு மருந்தை அளிக்குமாறும் பரிந்துரை செய்தவன், “இப்போதைக்கு அந்த ப்ளீட்டை நிறுத்தற ஜெல் கையில ஸ்டாக் இல்லைக்கா. அதனால லித்திரனுக்கு நான் அனுப்பி வைக்கிற மாத்திரையில நாலுல ஒரு பங்கு பொடி செஞ்சு ரத்தம் வரும்போது அந்தக் காயத்துல வைங்க” என்றதோடு, மாத்திரையை அவர்களின் வீட்டு முகவரிக்கே கொரியர் செய்வதாகவும் கூறிவிட்டு வைத்தவன் பிரகதியிடம்,
“நான் கொரியர் அனுப்பிட்டு கார்ப்பரேசன் பார்க்குக்கு வந்திறேன். நீ ட்டீட்டி போடலைன்னா போட்டுட்டு அங்க வந்திரு” என்றுவிட்டு கிளம்பியிருந்தான்.
இந்த அவனது அக்கறைதான் அக்கறை மெடிக்கலுக்குச் சொந்தக்காரனைக் சொந்தம் கொண்டாடத் தூண்டியது பிரகதியை என்பதை இன்னும் புரியாமல்தான் நடந்துகொள்கிறான் கௌதம்.
***
முதன்முதலாக தன்னை வெளியில் சந்திக்க வரச் சொன்னதும் உண்டான குதூகலத்தோடு கௌதம் கூறிய பூங்காவிற்கு சென்று காத்திருக்கத் துவங்கினாள் பிரகதி.
‘பிரபோஸ் பண்ணக் கூப்பிட்டுருக்கானோ… இல்லை… மேரேஜ் எங்க, எப்படி வைக்கலாம்னு பிளான் பண்ணக் கூப்பிட்டுப்பானோ… ப்ரீ ஃபோட்டோ சூட் எங்க வச்சிக்கலாம்னு கேக்கக் கூப்பிட்டுருப்பானோ…’ யோசித்தபடியே பார்வையை சுழற்றியவளுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக எதையோ படித்துக் கொண்டிருந்த இருபால் மக்கள் மட்டுமே தென்பட்டனர்.
காதலர்களையோ, இருபாலின ஈர்ப்பால் பல பெயர்களை அடைமொழியாக்கிக் கொண்டு சுற்றித் திரியும் மக்களையோ அங்க காண இயலாது பருவப் பஞ்சமாக இருந்த இடமது.
‘வறண்டு போன இடமெல்லாம் இந்த தம்முக்கு அத்துபடிபோல… எப்டி எடமா பாத்து வரச் சொல்லியிருக்கு’ ஆதங்கம் தோன்ற வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரகதி.
‘இப்பவாவது என்னைத் தள்ளிகிட்டு வரணும்னு சீனியருக்குத் தோணிருக்கே. அதுக்கே குலதெய்வத்துக்கு கிடா வெட்டணும்னு வேண்டிக்கணும்’ நினைத்தவளுக்கு அவளையறியாமலேயே இளநகை இதழில் தோன்றியது.
நினைவுகள் நிஜங்களைக் காட்டிலும் இனிமையானது, சுகமானது, இதமானது.
கௌதமின் நினைவுகள் பிரகதியை ஆட்கொண்டிட, கனவுப் பிரயாணத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாள்.
பத்து நிமிடங்களுக்கும் மேலான சில நொடிக் காத்திருப்பிற்குப்பின் அங்கு வந்தவனைக் கண்டவளுக்கு எதையோ சாதித்த மகிழ்ச்சியில் உள்ளமெங்கும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க எழுந்து வரவேற்றாள்.
‘ஹப்பாடா… நல்ல வேளை தம்மு சீக்கிரமே வந்துருச்சு’ உள்ளம் குதூகலிக்க,
‘வரச் சொல்லிட்டு வராமப் போயிருமோன்னு மனசெல்லாம் ஒரு பக்கம் பதக் பதக்குன்னு இருந்துச்சு. சொல்லு தவறாத சுந்தரன்’ சிரித்துக் கொண்டே,
“வெல்கம் மை ஸ்வீட் ஹார்ட்” என்றபடியே கையில் வைத்திருந்த சிறு பொக்கேவை கௌதமிடம் கொடுத்தவள்,
“லவ் பேர்ட்ஸ்ஸோட மீட் இப்டியே தொடரணும். அடுத்த லெவல் போகணும்” கௌதமிடம் மனம் திறந்து கூறி சிரித்தாள்.
“உன்னோட ஆசையெல்லாம் நிறைவேறட்டும்!” அவளுக்கு ஆமோதிப்பாக முதன் முறையாக வாழ்த்துக் கூறிவிட்டு, இருவருமாக சற்று தூரம் நடந்து சென்று கடப்பா கல்லால் செய்யப்பட்ட பெஞ்சின் முன் நின்றார்கள்.
கௌதம் பிரகதியை அதில் அமரும்படி கைகாட்ட, பிரகதி அமர்ந்ததும் அடுத்த முனையில் சென்று அமர்ந்தான் கௌதம்.
கௌதமின் செயலில் உண்டான பெருமூச்சை தனக்குள் மறைத்துக் கொண்டவள், ‘நாங்கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன். இது மாறவே மாறாதா?’ எனும் எண்ணத்தோடு,
“சொல்லுங்க சீனியர். ஏதோ பேசணும்னு சொன்னீங்களே…” என கௌதமைப் பார்த்துக் கூறினாள்.
“திடீர்னு மரியாதையெல்லாம் வருது!” எனச் சிரித்தவன்,
அதிகம் சுற்றி வளைக்காமல், “இப்ப நான் சொல்ற விசயத்தை கேட்டு உனக்கு அப்செக்சன்னா மறைக்காம சொல்லிரு. என்ன நினைப்பாங்ளோனு வருத்தமெல்லாம் படவேணாம்” என்றவன்,
“அந்த விசயத்தைக் கண்டிப்பா உங்க அப்பாகிட்டயும் சொல்லி, அவரு அதுக்குப் பின்னயும் உன்னை எனக்கு மேரேஜ் பண்ணித்தரேன்னு சொன்னா, எனக்கும் ஓகே.” என்றவன்,
சற்றுத் தயங்கி, “ஆனா… நீ சொல்லாம எதாவது தில்லாலங்கடி வேலை பண்ணி ஏமாத்தற மாதிரி எனக்குத் தோணுச்சுனா, நானே உங்கப்பாகிட்ட பேசிக்கறேன்.” என்றிட
“பீடிகை எல்லாம் போடாம… முதல்ல விசயம் என்னானு சொல்லு” பட்டென ஒருமைக்கு தாவி சிரித்தபடியே கூறினாள்.
“நான் ஒரு ஹீமோஃபிலிக்…” தனது விரல் நகங்களைப் பார்த்தபடியே கூறியவன்,
நிமிர்ந்து பிரகதியைப் பார்த்து, “எனக்கு எய்த் ஃபேக்டர் பிராப்ளம். இந்த ஒரு விசயத்துனாலதான உன்னோட அப்ரோச் புரிஞ்சாலும் இதுநாள்வரை உன்னை அவாய்ட் பண்ணேன்.” என்றபடியே பிரகதியின் முகத்தை கூர்ந்து கவனித்தவாறே கூறினான்.
‘ஏதோ ரீலுனு புரியுது. ஆனா இது ஏன்னு புரியலை’ என்பதாக பிரகதியின் மனம்.
“எப்ப இருந்து…” கேள்வியோடு பார்த்தவளிடம்,
“பை பர்த்”
“இவ்ளோ நாள் ஏன் சொல்லவே இல்லை” கூர்மை கருவிழியில் மட்டுமல்லாது வார்த்தையிலும்.
“இப்பதான மேரேஜ்னு டிசைட் பண்ணி பேச்சு ஆரம்பிச்சோம். சோ…”
“அப்படி ஆரம்பிக்கலைன்னா… இப்பவும் சொல்லிருக்க மாட்டியா?” கேள்வியோடு வருத்தமும் இருந்தது அந்த வார்த்தைகளில்.
தலையை ஆமோதிப்பாக அசைத்தவனை, உச்சந் தலையில் நங்கெனக் கொட்டும் வெறி வந்தது பிரகதிக்கு. ஆனாலும் இடம் கருதி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தவள், முகவாயை தொட்டவாறு சற்று நேரம் மேலும் கீழுமாகப் பார்த்தபடியே யோசித்தாள்.
ஏதோ நினைப்பில் வந்திட, “இந்த அதர்வாகூட ஒரு படத்துல நடிச்சிருப்பானே…” என கௌதமைப் பார்த்துக் கேட்டாள்.
தலையை லேசாக ஆமோதிப்பாக ஆட்டியவனை நோக்கி, “அதுக்கு இவ்ளோ சீன் தேவையில்லையே… இத நீ எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்” என சாதாரணமாகக் கூறினாள் பிரகதி.
அப்போ நீ யாரோ மாதிரி. உங்கிட்ட இதைச் சொல்லி இன்னும் நாலு பேருக்கு என்னைப் பத்தின விசயம் போக வேணாமேனு என்பதை மனதிற்குள் நினைத்துக் கொண்டானே அன்றி வெளியில் கூறவில்லை.
ஆனால் அவளின் பேச்சினைக் கேட்டவனுக்கு, ‘அவுட்லுக்கை வச்சிட்டு இதுவா ஒரு முடிவுக்கு வருது’ என்பதுபோல பிரகதியைப் பார்த்தவன், அவளுக்கு தனது குறைபாட்டின் தீவிரம் புரியாமல் இவ்வாறு பேசுகிறாள் என்பதும் புரிய, அவளுக்கு விளங்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்.
“அவன் நடிச்சிருப்பான். ஆனா அந்த மனுசங்களோட வாழ்ந்தவங்களுக்குத்தான் அவங்களோட நிலைமை தெரியும். அதுல அஞ்சு பர்செண்டேஜ்கூட அந்த டெஃபிசியன்சி பத்தி மூவில சரியா சொல்லியிருக்க மாட்டாங்க.
நீ வேணா எங்க அசோஸியேசன் மீட்டிங்ல வந்து கலந்துக்க. அப்போ உனக்கே ஒரு ஐடியா கிடைக்கும். அதுக்குப் பின்னயும் உங்க வீட்லயும் ஓகே சொல்லி” என நிறுத்திவிட்டு பிரகதியின் முகத்தைப் பார்த்தவன்,
“உனக்கும் என்னை ஓகேன்னா…” என்பதை கூறும்போது, தனது குறை அவளுக்கு முற்றிலுமாகத் தெரிய நேர்ந்தால் தன்னை நிராகரித்துவிடுவாளோ என்கிற பயமும் அதற்குள் மறைந்திருக்க, அதனை அவனது குரலே காட்டிக் கொடுத்தது. ஆனால் அதை உணரும் நிலையில் பிரகதி இல்லை.
கௌதமையே நம்பாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, “மேற்கொண்டு ஆகறதைப் பாக்கலாம்!” என முடித்திருந்தான்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “எங்கிட்ட எப்படியெல்லாம் சொன்னா, நானே உன்னை அவாய்ட் பண்ணுவேன்னு போட்டுப் பாக்குறியா?” என்று கேட்டவளின் கேள்வி புரியவே, ஸ்டோன் பெஞ்சில் இருவருக்கிடையே இருந்த இடைவெளியை விட மனதில் அவளோடு மிக நெருக்கத்தில் அமர்ந்திருந்தவனுக்கு நேரமெடுத்தது.
“இத்தனை நாளா கண்டுக்காம என்னை சுத்தல்ல விட்ட… இப்ப என்னடான்னா… எதையாவது சொல்லி எங்கிட்ட இருந்து உன்னை பிரிச்சிட்டு ஓடப் பாக்குற… ஆக்சுவலா உனக்கு என்னை துளிகூடப் பிடிக்கலையா?” என்று கேட்ட பிரகதியை சமாளிக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கி அமர்ந்திருந்தான் கௌதம்.
“பைத்தியம் மாதிரிப் பேசாத ராகா… உன்னைக் கஷ்டப்படுத்திறக் கூடாதேன்னுதான் இத்தனை நாள் தள்ளியே நின்னேன்!” துடித்துப் போன குரலில் கூறினான் கௌதம்.
“ஆமா… இப்பமட்டும் என்னவாம். எங்கூட கொஞ்சிக் குலாவிக்கிட்டா உக்காந்திருக்க… தள்ளித்தானே உக்காந்துருக்க..!” கண்களால் இருவருக்கிடையே இருந்த இடைவெளியினை அளந்து தன்னவனிடம் நியாயத்தையும் கோபமாகக் கேட்டவள்,
“உனக்கு என்ன பிரச்சனையினாலும் அது உன்னோட பிரச்சனை. அதுக்காக சால்ஜாப்பு சொல்லிக்கிட்டு இன்னொருவாட்டி வந்தா… உன்னை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” உரிமைக் குரலில் மிரட்டியவள்,
“இந்த ஜென்மத்துல… உன்னை எவளுக்கும் நான் விட்டுத் தரதா இல்லை. வாழ்வோ சாவோ! எதுனாலும் உன்னோட வாழ்க்கை என்னோடதான்…!” என்றுரைத்தவள்,
“கார்ப்பரேசன் பார்க்குனதுமே நான் சுதாரிச்சிருக்கணும். நானும் பேக்ரவுண்ட் பீஜியெம்மோட பயங்கர டூயட்டை எதிர்பாத்து வந்தது என்னோட மடத்தனம்னு ஒத்துக்குறேன். அதுக்காக… இப்டியே இருந்தா… உன்னை வச்சிக்கிட்டு நான் கல்யாணம் பண்ணி… ஓஹ் மை கடவுளே…” என்று இறைவனை அழைத்து நியாயம் கேட்டதோடு,
“இவனை எங்கிட்டயே ஒப்படைச்சிரு… இவன் என்னை இத்தனை நாளா… இல்லையில்லை… வருசமா… வச்சிப் பண்ணதையெல்லாம், கல்யாணத்துக்கப்புறமா நான் இவனை வச்சிப் பண்ணணும்!” கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஆவேசமாக கடவுளை வணங்கினாள் பிரகதி.
அவளுக்கு தன்னை கௌதம் தனியுரிமையோடு செல்லப் பெயர் வைத்து ராகா என்று அழைத்ததையோ, அவனது தன் மீதான பொறுப்பையோ உணர்ந்து கொள்ளும் நிலையில் அப்போது பிரகதியில்லை.
அவன் தன்னைத் தவிர்க்கவே இத்தனை கட்டுக்கதைகளைக் கூறுகிறான் என்று எண்ணி வெகுண்டுபோய் அமர்ந்திருந்தாள்.
அவளின் பேச்சுகளை ரசித்தபடியே அமர்ந்திருந்தாலும், பெரிய அளவில் தனக்குள் உண்டான மன உணர்வை வெளியில் காட்டாமல் அமர்ந்திருந்தான் கௌதம்.
சற்றுநேரம் பிரகதியைச் சமாளிக்கும் வழியை யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக, “நான் சொல்றதை சொல்லிட்டேன். இதுக்குமேல நான் ஒன்னும் சொல்ல முடியாது. ஆனா, இந்த விசயத்தைப் பத்தி உங்கப்பாகிட்ட கண்டிப்பா கன்வே பண்ணணும். உம்மேல எனக்கு நம்பிக்கையில்லை. அதுனால அவரை எப்ப எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு. அதுக்குப்பின்னாலயும் உன்னை எனக்குத் தரேன்னு சொன்னா மேரேஜ் பண்ணிக்கலாம்” தீர்மானமாக உரைத்தான்.
“பாத்தா நல்லாதான் இருக்கே. ஆனா ரொம்பப் பேசி பயமுறுத்தப் பாக்குற. உம்மேல எனக்கு நம்பிக்கையில்லை. நான் அத்தம்மாகிட்ட பேசிட்டு, உன்னை வந்து கவனிச்சிக்கறேன்” என்றாள்.
தாயைப் பற்றி அவள் பேசியதும் நினைவு வந்தவனாக பிரகதியிடம் ஒரு நிமிசம் என பொறுப்பாக அனுமதி வாங்கிவிட்டு தந்தைக்கு அழைத்துப் பேசினான்.
“சரிப்பா… டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் சொல்லுங்க” வைத்துவிட்டான்.
கௌதமின் பேச்சினை கவனித்துக் கொண்டிருந்தவள், “அத்தம்மாவுக்கு உடம்புக்கு என்ன?”
“ஓவர் டயர்ட்னஸ், எழுந்துக்கவே இன்னைக்குலாம் முடியலை. அதுக்குத்தான் காமிக்க டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருக்கார் எங்கப்பா. வந்ததும் சொல்லுவார்” பாதியை மறைத்து மீதியைக் கூறிவிட்டு,
“உங்கப்பா நம்பர் சொல்லு” என்றிட
“அதுலாம் நானே பேசிக்கறேன். உன்னோட வேலை முடிஞ்சிருச்சுல்ல. அப்டியே கிளம்பிப் போயி மெடிக்கலைக் கட்டிட்டு வாழு” கோபமாகவே உரைத்தாள் பிரகதி.
“இப்பவே என்னை இந்தப் பாடு படுத்தறே. சப்போஸ் கல்யாணம் பண்ணிட்டா இன்னும் என்னை என்னலாம் பண்ணுவியோ…” என்றவாறே எழுந்தவன்,
“நீ வீட்டுக்குத்தான போற. வா ரெண்டு பேருமா சேந்து போயி உங்கப்பாகிட்ட பேசலாம்” என கௌதம் பிரகதியை அழைக்க,
“அவருக்கு வேலை வெட்டி எதுவுமில்லாம வீட்டுலயேவா உக்காந்திருப்பார். வந்ததும் அப்டியே பாத்துர… போப்பா… நானே எங்கப்பாகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லிக்கறேன்” என வழியைக் காட்டி கௌதமிடம் கூறினாள் பிரகதி.
தற்போது வீட்டிலிருக்கும் நிலையில் கௌதம் வந்து பேசினாள் நிச்சயமாக இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்கமாட்டார்கள் என்பது பிரகதிக்குப் புரிய, இயன்றவரையில் தனது தந்தையை கௌதம் சந்திப்பதைத் தவிர்க்க எண்ணினாள்.
“எனக்கு உம்மேல நம்பிக்கையில்லை. அதனால…” எனத் துவங்கிய கௌதமிடம்,
“அதனால…” என மனதொப்பாத அவனது பேச்சைக் கேட்டு நிறுத்தியவள்,
“நீ ஒன்னும் பயப்படாத. நான் இதைக் கண்டிப்பா எங்கப்பாகிட்டச் சொல்லியே உன்னை கல்யாணம் பண்ணிக்க பர்மிசன் வாங்குறேன். போதுமா… இப்போ இடத்தைக் காலி பண்ணு” அதே தொணியில் அவனை அங்கிருந்து கிளப்பும் தொனியில் பேசியவளிடம்,
“புரிஞ்சிக்க மாட்டிங்கற… பின்னாடி வருத்தப்பட்டா என்னால எதுவும் செய்ய முடியாது ராகா. நல்லா யோசிச்சு, நிதானமா ஒரு முடிவெடு” என்றவன்,
“இது வாழ்க்கை. காதல் அப்டிங்கறது வேற… அது மட்டும் நாம வாழப் போதாது” எனத் துவங்க,
“நீ பிரசங்கம் பண்றதைக் கேக்கற நிலையில நான் இப்போ இல்லை. இருக்கற காண்டுல காட்டுக் கத்தலா நான் கத்தறதுக்குள்ள நல்ல புள்ளையாக் கிளம்பிரு. இல்லைனா பிராண்டி வச்சிருவேன்” அவனைத் துரத்துவதில் குறியாக இருந்தாள் பிரகதி.
“படிச்சவ மாதிரிப் பேசு ராகா. படிக்காத தற்குறிக்கு புரியற விசயம் உனக்குப் புரிய மாட்டிங்குது.” அவளை நோக்கி அருகே வந்தபடியே கூறினான் கௌதம்.
“கிளம்புனவன் அப்டியே போயிருப்பா. நான் ஏற்கனவே கொலைக் காண்டுல இருக்கேன்.” என்றவள்,
‘ஆசையில பக்கத்துல வந்து ஆளான பொண்ணுங்கறதை நிரூபிக்க ஸ்ட்ராங்கா ஒரு அச்சாரம் தரப்போறவன் கணக்கா வரதைப் பாரேன்’ என்பதையும் இகழ்ச்சியாக முணுமுணுத்தபடியே கௌதமைப் பார்த்தாள்.
காதில் அவளின் முணுமுணுப்பு கேட்டாலும் அவள் தன்னை என்ன நினைத்து அப்படிப் பேசுகிறாள் என்பதும் புரிய, “இப்பவே எம்மேல உனக்கு நிறைய வருத்தம். அதுக்குத்தான் யோசிச்சு முடிவெடுங்கறேன்” என அவளைப் புரிய வைக்கும் முயற்சியாகக் கூற,
“நீ தாலி மட்டும் எங்கழுத்துல கட்டு. அப்புறம் பாரு. உங்கிட்ட இப்டிக் கெஞ்சிக்கிட்டு, கொஞ்சிக்கிட்டெல்லாம் இருக்க மாட்டேன்” தெனாவட்டாக அவனை மேலும் கீழுமாகப் பார்த்துக் கூறியவளிடம்,
“அதுக்கு நான் நல்லாயிருக்கணும்ல…” கௌதம் பதிலுக்கு வினவ,
“என்ன… என்னைப் பயமுறுத்திப் பாக்குறியா? இப்டியெல்லாம் சொன்னா, உன்னை விட்டுட்டுப் போயிருவேன்னு நினைக்கிறியா? நான் பாத்துக்குவேன். உன்னோட வேலை எங்கழுத்துல தாலி கட்டுறது. அதை மாட்டும் நீ ஒழுங்கா பண்ணிட்டா, நான் பாத்துப்பேன் மத்ததெல்லாம்” என்றாள்.
பிரகதியிடம் பேசுவது வீண் என்பது புரிய, தனது பெற்றோரும் இது விசயமாக தனக்கு உதவிக்கு வரமாட்டார்கள் என்பதும் தெளிவாக விளங்க, யோசனையோடு கிளம்பிவிட்டான் கௌதம்.
பிரகதியைப் பொறுத்தவரை, அவனது வெளித்தோற்றமும், பண்பும் பழக்க வழக்கமும், தன் மீதான அவனது அக்கறையும் மட்டுமே அவன்பால் ஈர்த்தது. அதற்காகவே அவனையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள வேண்டுமென உறுதியாக இருக்கிறாள்.
நீண்ட நேரத்திற்குப்பின் பார்க்கிலிருந்து வீட்டிற்குச் சென்றவளுக்கு மண்டகப்படி காத்துக் கொண்டிருந்தது.
***