உதிரத்தின்… காதலதிகாரம்!
காதலதிகாரம் 8
பிரகதி தன்னிடம் பேசியதை தனக்குள் அசைபோட்ட கௌதமிற்கு ஒன்று நிச்சயமாகப் புரிந்தது.
இதுவரை அவளை வாய் வார்த்தையாக மட்டுமே வேண்டாமென்றிருக்கிறோம் என்பதுதான் அது.
காலையில் எழுந்தபோதே வேலூரில் இருந்து சஞ்சய்யிடமிருந்து அழைப்பு.
“கௌதம் எனக்கு ஒரு ஹெல்ப்டா” எனத் துவங்கியவன், “ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்றதா சொல்றாங்கடா. தனியா என்னால மேனேஜ் பண்ண முடியாது. யாராவது வந்தா நல்லா இருக்கும்” என இழுக்க,
“பாக்கறேன் சஞ்சய். யாராவது அவெய்லபிலா இருந்தா அவங்களை அங்க வர ஏற்பாடு பண்ணிவிடறேன். இல்லைனா நானே வரப் பாக்குறேன்” என்றவன், மருந்தகப் பணிகள் முடிந்தபின் அதற்கான முயற்சியில் இறங்கினான் கௌதம்.
முந்தைய இரவில் பிரகதி அனுப்பிய குறுஞ்செய்திகளை மீண்டும் வாசித்ததோடு, அவளின் வாய்ஸ் ரெக்கார்டைக் கேட்டவனுக்கு அவளைக் காண உள்ளம் ஏங்கியது.
ஆச்சர்யமாக உணர்ந்தான் கௌதம்.
‘எப்போவும் இல்லாம இன்னைக்கு ஏன் இப்டியெல்லாம் தோணுது’ என நினைத்தபடியே அன்றைய நாளின் பொழுதை நெட்டித் தள்ளினான்.
அன்று முழுமையும் அவளின் வருகையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தான்.
சிந்தையெங்கும் சிட்டுப் பெண்ணின் நினைவுகள்…
சிரமெங்கும் அவளின் சிந்தனைகள்…
எதையும் கருத்தில் கொள்ளாதவனின் மூளைக்குள்…
உளியில்லாமல் செதுக்கிய அவளின் பிம்பமே…
ஆளுமை செய்தது!
‘என்மேல இவ்ளோ பித்தா இருக்காளே. அவளுக்கு நான் ஏத்தவனா இருக்க மாட்டேன்னு எனக்குள்ள ஒரு முடிவுக்கு வந்ததோட அவகிட்ட சொல்லாம மறச்சது இவ்ளோ கஷ்டத்தைக் கொண்டு வரும்னு அப்போ எனக்குத் தெரியலையே’ என தனக்குள் நொந்து வெந்து சோர்ந்து போனான்.
மனம் முழுக்க பிரகதியைப் பற்றிய சிந்தனையிலேயே எதிலும் நாட்டமின்றி இருந்தான்.
தாய் சென்ற வீடு வெறுச்சோடி இருந்ததுபோல, அவனது மனமும் பிரகதியை எதிர்பார்த்துக் காத்திருந்து அவள் வராமல் போனதால் வெறுமையாகக் காட்சியளித்தது.
மாலைவரை யாரும் வேலூர் செல்ல இசையாத காரணத்தால், தானே மறுநாள் வேலூர் செல்லும் முடிவிற்கு வந்திருந்தான்.
வேலை நேரத்தில் கவனம் செலுத்தினாலும், ஏனோ பிரகதி பேசியதே மனதில் ஓடியது. அதே நினைப்புடன் இருந்தவனுக்கு அவனது தாய் அழைத்துப் பேசும்போது சுரத்தையின்றி கடமைக்குப் பேசினான் கௌதம்.
தாயின் நலனைப் பற்றி கேட்டறிந்து கொண்டவன், “உடம்பைக் கவனிச்சிக்கோங்கம்மா. என்னைப் பத்திக் கவலைப்பட வேணாம். நான் பாத்துக்கறேன்” என ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு வைத்திருந்தான்.
பிரகதியிடம் தான் கூறிய தன்னைப் பற்றிய உண்மைச் செய்தியையோ, பிரகதி இரவில் தன்னோடு பேசியதையோ கௌதம் தாயிடம் பகிர்ந்துகொள்ள எண்ணவில்லை.
உமாவிற்கு தான் மகனை தனியே விட்டு வந்ததால்தான் அப்படி இருக்கிறான் என்று கணவரிடம் சண்டைக்குச் சென்றார்.
“எல்லாம் உங்களாலதான். அவனோட குரலே சரியில்லை. எனக்கு என்ன ஆகிறப் போகுது. நாலு நாளைக்கு சிரமப்படுவேன். அப்புறம் நார்மலாகிருவேன். இதுக்காக என்னை வலுக்கட்டாயமா இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க. இப்ப என்னால நிம்மதியா எதுவும் செய்ய முடியலை.
பேசாம என்னை அவங்கூடவே கொண்டு போயி மதுரையிலே விட்ருங்க. என்னால அவங்கஷ்டப்படறதைப் பாத்துட்டு இப்டி வந்து சிவனேன்னு எனக்கென்னானு இந்த ஊருல இருக்க முடியாது” என்று அழுகையோடு மூக்கை சிந்திவாறு பிடிவாதமாக கண்ணைக் கசக்கி கணவரை தனது முடிவிற்கு இணங்குமாறு கேட்டார்.
“எல்லாம் அவனோட நல்லதுக்குத்தான் சொல்றேன் உமா. இப்டி தனியா இருக்கும்போதுதான் நிசர்சனம் அவனுக்குப் புரிய வரும். எப்பவுமே நீ அவங்கூட இருந்து அவனை யோசிக்கவே விடலைன்னா, நாம திடீர்னு போயிச் சேந்துட்டா ஒத்தை ஆளா அவன் ரொம்பக் கஷ்டப்படுவான்.
அதனால இனியாவது அவனை கொஞ்சம் தனியா இருக்க விடு. அப்பத்தான் அவனோட எதிர்காலத்தைப் பத்தின யோசனை வரும். ஒரு நல்ல முடிவுக்கு வருவான்.
புள்ளையப் பெத்துட்டா மட்டும் போதாது. அவனை இந்த சமூகத்துல நம்ம காலத்துக்குப்பின்ன சாதூர்யமா இல்லைனாலும் சங்கடமில்லாம வாழற மாதிரி வளத்து விடணும்.
இப்ப அதுக்கு நேரம் வந்திருச்சு. இன்னமும் தாமதிச்சா அவன் கஷ்டப்படுவான். பேசாம இங்கேயே இரு. நான் சொல்லும்போது நீ மதுரைக்குப் போனா போதும்” என மனைவியிடம் திடமாக உரைத்திருந்தார் சேகரன்.
பெற்றோர் இல்லாத வீட்டில் அதிக நேரம் செலவளிக்க விரும்பாதவன், அக்கறை மருந்தகத்திலேயே அன்றிரவு தங்கிக்கொண்டான்.
அவ்வப்போது மருந்தகத்திற்கு வந்து தன்னோடு செல்லச் சண்டையிடுவதும், வாக்குவாதம் செய்வதும், வம்படியாக காதல் செய்வதும், சமிஞ்ஞை வழியே தன்னை சீண்டுவதுமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிரகதி அவனோடு செலவளித்த நேரங்கள் நினைவிற்கு வந்து கௌதமை சலனப்படுத்தியதோடு, அவளில்லாத வாழ்வை நினைத்து மனதிற்குள் சஞ்சலத்தை உண்டு செய்தது.
எப்போதும் இந்தளவிற்கு பிரகதியை அவன் தேடியதில்லை. இன்று அதிகம் அவளின் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துச் சோர்ந்தான்.
‘அவளோட நல்லதுக்குன்னு நினைச்சு அவகிட்ட வீட்டுல பேசுற மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னாலும், என்னை அறியாமலேயே எனக்குள்ள அவளை எங்க இழந்துருவேனோன்னு நினைக்கிற மனசை வச்சிக்கிட்டு தவிக்கிறது கொடுமையா இருக்கே கடவுளே!
தெரிஞ்சோ தெரியாமயோ என்னையறியாமலேயே எனக்குள்ள வந்திட்டவளை அறவே வெறுத்து ஒதுக்க என்னால முடியாது. அவ என்னையே தஞ்சம்னு வந்துட்டா, கண்டிப்பா அவளை நல்லா வச்சிக்க நூறு சதவீதம் முயற்சி செய்வேன்.
ஆனா… அவளை அவங்க வீட்டுல யாருக்கும் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா, அவ நல்லா இருக்கட்டும்.’ என அவனுக்குள் இருக்கும் நல்ல மனது பிரகதியை வாழ்த்தினாலும்,
இன்னொரு மனமோ, ‘அவளில்லாம நான் வாழ்ந்திருவேனானு தெரியலையே… அதை நினைக்கவே கொடுமையா இருக்கு. அப்படி ஒரு சூழல் வந்தா… நான் என்ன ஆவேனோ…!’ என நினைத்ததுமே மனம் பதைபதைப்பாக உணர்ந்தான் கௌதம்.
இந்த சூழலில் இருந்து வெளிவர வேலூர் பயணம் உதவியாக இருக்கும் என எண்ணியவன் யாரையும் அதிகம் வற்புறுத்தாமல் மேலோட்டமாக சஞ்சய்யின் உதவிக்கு வேலூர் செல்வதற்காகக் கேட்டுப் பார்த்தான்.
அவன் நினைத்ததுபோலவே அனைவரும் தனக்கு அந்த வேலையிருக்கிறது, இப்போ முடியாது என்பதுபோலக் கூறியதும் தானே அங்கு சென்று வருவதற்கான வேலைகளைத் திட்டமிட்டான்.
மருந்தகத்தில் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு அடுத்த நாள் அதிகாலையில் வேலூர் நோக்கி கிளம்பியிருந்தான் கௌதம்.
***
பிரகதி தனது நிலையில் பிடிவாதமாக இருப்பதைக் கண்ட அவளின் பெற்றோர் அவள் முன்னே எதையும் பேசாமல் தங்களுக்குள் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
அதாவது உறவில் அவளைக் கேட்டு வந்த வரன்களில் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வரனுக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் அதற்கான பணிகளில் இறங்கியிருந்தனர்.
மறுநாள் வெளியில் கிளம்பியவளை தடுத்து நிறுத்தியதோடு, “இனி இப்டி நினைச்ச நேரத்துக்கு வெளிய போறது, வரதுன்னு இல்லாம ஒழுங்கா வீட்ல இரு. இன்னைக்கு கானாடுகாத்தான்ல இருந்து ஒரு வரன் வராங்க” என்றதுமே,
கொந்தளித்தவள், “யாரக் கேட்டு அந்த வரனை வீட்டுக்கு வரச் சொல்றீங்க. நான் அவ்ளோ சொல்லியும் வீம்புக்கு வேற மாப்பிள்ளை பாத்தா என்ன அர்த்தம்?
உங்களை மதிச்சு இவ்ளோ நாளா உங்க பர்மிசனுக்கு வயிட் பண்ணதுதான் நான் பண்ண தப்பா.
எதுனாலும் நான் சமாளிச்சிக்குவேன்னு சொல்லியும், எனக்கு கௌதமை பேசி முடிக்காம எவனையோ பொண்ணு பாக்க வரச் சொன்னா என்ன அர்த்தம்?
கௌதம் சொன்னதாலதான் இப்ப வேற முடிவுக்கு வந்திருக்கீங்க… இதுவே நீங்க பாக்குற மாப்பிள்ளைக்கு எந்தப் பிரச்சனையுமில்லாம இருந்து அல்பாயுசுல எதாவது காரணத்தால பொசுக்குணு போயிட்டா… என்ன செய்வீங்க?
எனக்குன்னு என்ன கிடைக்கணும்னு இருக்கோ அது நிச்சயமாக் கிடைக்கும். அதுவே என்னோட ஆசைப்படி கிடைச்சதா இருந்துட்டுப் போகுதே…” சற்று நிதானித்தவள்,
“உங்களை மாதிரி நேரத்துக்குத் தக்கன முடிவு எடுக்கறவங்களுக்கு, ஓடிப் போயி நாலு பேரு உங்களை கேள்வி கேக்கற மாதிரி வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்போலயே” என நறுக்குத் தெறித்தாற்போல பெற்றோரிடமே வாயாடி இருந்தாள் பிரகதி.
அத்தோடு விடாமல், “பெத்தவங்க என்னோட நல்லதுக்குச் சொல்றீங்கனு புரியாமலாம் இல்ல. ஆனா என்னோட மனசைப் புரிஞ்சிக்கோங்க.
மனசுல ஒருத்தனை வச்சிட்டு இன்னொருத்தவனோட எப்டி வாழ… என்னால முடியாதுன்னுதான் கௌதமையே கல்யாணம் பண்ணி வைங்கனு கேக்கறேன்.
அடடா அடடானு வேற மாப்பிள்ளை பாக்கறேன்னா… என்ன அர்த்தம்?” என முடித்தவள் ஓய்ந்து போன தோற்றத்தில் அருகே இருந்த சோபாவில் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
பிரகதியின் பேச்சைக் கேட்டு இத்தனை நாள், “எம்பொண்ணு எது பேசுனாலும் கரெக்டா பேசுவா. நீயுந்தான் இருக்கியே! தொடர்ச்சியா எம்பொண்ணு மாதிரி நாலு பாயிண்ட் தெளிவாப் பேசிரு பாப்போம்” என இதுவரை மனைவியை மட்டந்தட்டிய அருணாசலத்தால் மகளின் பேச்சைக்கேட்டு மனைவியின் முன்னே பதில் பேச முடியவில்லை.
தானே அவளை ஊக்குவித்துப் பேசச் செய்தது. இன்று தன்னையே உதாசீனம் செய்வதுபோல மகள் பேசுகிறாளே எனும் எண்ணத்தைவிட, வார்த்தைகள் முற்றி தான் எதாவது மகளைப் பேசி மகள் சட்டென்று தப்பான முடிவுக்கு வந்துவிடக்கூடாதே என்று அருணாசலம் அமைதி காத்தார்.
தப்பான முடிவென்பது மகள் உடனே கௌதமோடு வாழச் சென்று விடக்கூடாதே என்பதுதான்.
கௌதமின் பெற்றோரைப் பற்றிய கணிப்பு அத்தனை நல்லவிதமாக அருணாசலத்திற்கு இருக்கவில்லை.
‘முடியாத பையனுக்கு எப்டி எந்தத் தைரியத்துல வந்து நல்லவங்க மாதிரிப் பொண்ணு கேட்டாங்க…’ என்பதுபோல அதிருப்தி கௌதமின் பெற்றோர் மீது அருணாசலத்திற்கு இருந்தது.
ஆனால், கௌதம் அனைத்திற்கும் மேலாக தனது மகளிடம் தனியே அழைத்துச் சென்று உண்மையைக் கூறியதையும் அருணாசலம் அறிந்தேயிருந்தார். அப்படி இருந்தாலும் மகளின் வாழ்வை பணயம் வைக்க அவருக்கு என்ன பைத்தியமா?
மகளின் எதிர்கால வாழ்வின் நலன் கருதியே அவசரமாக வேறு முடிவு எடுக்கும் நிலைக்கு வந்திருந்தார்.
ரேவதியோ, ‘நல்லா பேசுறா உங்க மக. கேக்கக் கேக்க காதுல தேன் வந்து பாயுமே இத்தனை நாளா! இப்பவும் தேனும் பாலுமா பாயுதா? இல்லை… நாரகாசமா பாயுதா?
அப்பாவும் மகளும் சேந்து என்னை கொஞ்ச நஞ்சமா ஆட்டிப் படைச்சீங்க… இப்ப நல்லா அனுபவிங்க. எனக்கென்ன இங்க வேல. நாம் போறேன்’ என கணவனை கண்ணாலேயே கேள்வி கேட்டபடியே அங்கிருந்து அகன்றிருந்தார்.
ரேவதி அகன்றதும் அங்கிருந்த தந்தையிடம், “உங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பாத்தா, பாத்தவங்களே அந்த மாப்பிள்ளையக் கல்யாணம் பண்ணிக்கங்க. நான் கண்டிப்பா கௌதமைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” தனது முடிவைத் திடமாய் உரைத்தாள் பிரகதி.
அதுவரை நீ, நான் என போட்டி போட்டுக்கொண்டு பிரகதியை பெண் கேட்டவர்கள் அருணாசலம் வலியச் சென்று பேசி, அன்று வீட்டிற்கு பெண்ணைப் பார்க்க வருமாறு கூறியும் எந்த அணுக்கமும் இன்றி எதுவும் நடவாததுபோல அருணாசலம் வீட்டுப் பக்கமே யாரும் வராமல் இருந்தனர்.
நல்ல நேரம் அனைத்தையும் பார்த்து கூறிவிட்டு வந்தவருக்கு, அந்த நேரம் கடந்தும் யாரும் வராமல் போனதில் ஏக வருத்தமே. அப்படிப்பட்ட நிகழ்வை எதிர்பார்த்திராவர் மனைவியிடம் புலம்பித் தீர்த்திருந்தார்.
அருணாசலம் மனைவியிடம், “பொண்ணை எங்களுக்கு குடுங்கனு ஒத்தைக் கால்ல நின்னவனுங்க எல்லாருமே இப்போ எனக்கென்னானு இருக்கறதைப் பாத்தா ஒன்னுமே புரியலை ரேவதி” புலம்பியவர்,
“அதுக்காக அவனுக ஒத்துவரலைங்கறதுக்காக எம்பொண்ணுக்கு மாப்பிள்ளையே ஊருக்குள்ள இல்லாமலாப் போயிரும்” என மனைவியிடம் கேட்பதுபோல தனக்குத்தானே தைரியம் வரப் பேசிக்கொண்டார் அருணாசலம்.
அதற்குமேல் உறவுக்காரவர்களிடம் சென்று வலியப் போய் பேச தன்மானம் தடுத்தது அருணாசலத்திற்கு.
‘சொந்தக்காரங்களை நம்பிகிட்டு இருந்தா நமக்குத்தான் நஷ்டமாகும்போல. அதனால அன்னியச் சம்பந்தம்னாலும் பரவாயில்லை’ என மனைவியிடம் கூறிவிட்டு வெளியில் சென்றவர், சில ஜாதகங்களோடு வீட்டிற்குத் திரும்பினார்.
கையில் எடுத்து வந்திருந்த ஜாதகங்களை பொருத்தம் பார்த்ததில் ஒன்றுமே அமையவில்லை.
அத்தோடு தரகர்கள் எண்ணை வாங்கி நேரில் சென்று சந்தித்தவர், “இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எம்பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு ஜோசியக்காரவரு சொல்லிட்டாரு. அதனால, நல்ல மாப்பிள்ளையா, வசதி படிப்பு குடும்பம் எல்லாத்துலயும் நல்லா இருக்கற மாதிரிப் பாத்துக் கொண்டு வாங்க” என முன்பணத்தை நேரிலேயே சென்று கையில் திணித்துவிட்டு வந்திருந்தார்.
ஒரே நாளில் இத்தனை மாற்றங்களைக் கண்ட பிரகதிக்கு மனமெங்கும் வேதனை. அன்று வெளியில் கிளம்ப எண்ணியபோது தந்தை மகளிடம், “எங்கயும் போகக் கூடாது இனி” கட்டளையாகக் கூற,
“இத்தனை நாலா என்னை நம்பி மெடிக்கலை வச்சிட்டு இருந்த என் ஃபிரண்ட் திடீர்னு நான் போகலைன்னா எப்டி சமாளிப்பா. அதனால, அவங்க மெடிக்கலுக்கு ஆள் கிடைக்கற வரை நான் போகத்தான் செய்வேன். சந்தேகம்னா எங்கூட வாங்க” என தைரியமாக உரைத்தவள்,
“நாளையில இருந்து நான் போகத்தான் செய்வேன்” என முடித்துவிட்டாள் பிரகதி.
பிரகதிக்கு தன்னை வேவு பார்க்க தந்தை எண்ண மாட்டார் என்கிற தைரியத்தில் அவ்வாறு பேசியிருந்தாள்.
மறுநாள் அவள் அக்கறை மருந்தகத்திற்கு செல்ல எண்ணிக் கிளம்ப, இதுவரை அவளின் மீதிருந்த நம்பிக்கை அன்றில்லாததால் தானே அவளின் பின்னே வரும் எண்ணத்தோடு அருணாசலம் இருந்ததை பிரகதி அறிந்திருக்க நியாயமில்லை.
***
மகள் ஃபிரண்ட் மெடிக்கலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு இதுவரை வந்தது, கௌதமின் மெடிக்கலுக்குதான் என்பது தனது தந்தைக்குத் தெரிய வரும்போது உண்டாகும் சிக்கலை அறியாமல் பிரகதி அக்கறை மெடிக்கலை நோக்கி கிளம்பியிருந்தாள்.
பிரகதி இன்றே கௌதமோடுடனான திருமணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தீர்மானமான முடிவோடு அக்கறை மெடிக்கலை அடையும்போது உலகத்து மகிழ்ச்சியனைத்தையும் தனக்குள் அள்ளிக் கொண்டுவந்தாள்.
அவளின் மகிழ்ச்சி முற்றிலும் தொலையப் போவது அறியாமல் இன்முகத்தோடு உள்ளே நுழைந்தாள் பிரகதி.
ஆனால் வந்து சற்று நேரத்தில் அன்று கௌதம் வேலூர் சென்றிருப்பதை அறிந்ததும், வருத்தம் உண்டானபோதும் தாமதிக்காது கௌதமிற்கு அழைத்துவிட்டாள்.
அதுவரை அவளிடமிருந்து வாட்சப் குறுஞ்செய்தியோ, அழைப்போ வருமென பயண நேரத்திலும் எதிர்பார்த்திருந்தவன், காத்திருப்பு நீண்டாலும் நம்பிக்கையோடு காத்திருந்தான். ஆகையினால் இரண்டே ரிங்கில் பிரகதியின் அழைப்பை ஏற்றிருந்தான் கௌதம்.
***
“எங்க மேன் இருக்க?” எடுத்ததும் பிரகதி இப்படிக் கேட்டாள்.
“ஏன்?” பழைய வீம்பை பிடிவாதமாக தன்னோடு இழுத்துக்கொண்டு, தனக்குள் பொங்கி வழிந்த உல்லாசத்தை அவளிடம் சிரத்தையெடுத்து மறைத்தவாறு கேட்டான் கௌதம்.
“கல்யாணம் பண்ணிக்கத்தான்…!” இலகுவாக பதிலளித்தாள் பிரகதி.
“பல்லாங்குழி விளையாடக் கூப்டற மாதிரிக் கேக்கற!” கௌதமும் நக்கலாகவே பேசினான்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டு, மத்ததையெல்லாம் விளையாடுவோம்.” தீர்க்கமான குரலில் உரைத்தவள், “அப்புறம் ஒரே விளையாட்டுத்தான்… நேரத்துக்கு ஏத்த மாதிரி” அந்த வேளையிலும் குறும்பு கூத்தாட கௌதமிடம் சிணுங்கலான குரலில் பேசியவள், மருந்தகப் பணிப் பெண்கள் தன்னோடு அருகே இருப்பதை உணர்ந்து பேச்சை திசைமாற்றினாள்.
“கேட்ட கேள்விக்கு முதல்ல பதிலைச் சொல்லு மேன்” என்றாள்.
“நான் வேலூர் போயிட்டுருக்கேன். ரெண்டு நாளாகும் வர” சீரியசான குரலில் கௌதம் கூற,
“நானும் அங்க கிளம்பி வந்திரட்டா” கூலாகக் கேட்டாள்.
பதறிப்போனவன், “எதே!”
“சரி சரி. டென்சன் ஆகாத தம்மு. இங்க வந்து இறங்குனதும் சொல்லு” என்றவள்,
“இதுக்கு மேலயும் டிலே பண்ணா, ரிஸ்க் எடுக்கற மாதிரி ஆயிரும் தம்மு. சோ… ரெடியா இரு. வந்ததும் கல்யாணம்” என வைத்துவிட்டாள் பிரகதி.
தான் பதில் பேசுமுன் வைத்ததைப் பார்த்துவிட்டு தானே பிரகதிக்கு அழைத்தான் கௌதம்.
எடுத்தவள், “என்ன ஆச்சு” என்றாள்.
“வீட்ல பேசச் சொல்லட்டா…” எனக் கேட்டவனின் மாற்றம் உணர்ந்தவளுக்குள் அத்தனை இதம்.
“என்னாச்சு தம்மு. திடீர்னு எம்பக்கமா சாயுற” கேட்டுச் சிரித்தாள்.
“நீ ஆசைப்படுறியே…” ஒட்டாமல் பதிலளித்தான்.
“அப்ப உனக்கு இல்ல…” போட்டு வாங்க முயன்றாள்.
“இருக்கு… இல்ல.. இப்ப அது எதுக்கு? பேசச் சொல்லவா? இல்லை வேணாமா? முதல்ல அதச் சொல்லு” சீரியசாகிக் கேட்டான் கௌதம்.
“அதெல்லாம் இனி வேலைக்காகாது தம்மு. ஸ்ட்ரெயிட்டா மேரேஜ். அப்புறம் மத்ததைப் பத்தி ரிலாக்ஸ்டா பேசுவோம்” தீர்மானமாக உரைத்தாள் பிரகதி.
மறுக்காமல் சரியென்று வைத்தவனை மலைபோல நம்பி மறுபக்கம் அழைப்பைத் துண்டித்தவளின் மனமெங்கும் மத்தாப்பூ.
‘ஆசைய மனசுக்குள்ள வச்சிக்கிட்டே இத்தனை நாளா எங்கிட்ட மறைச்சிருக்கு பக்கி. கல்யாணம் ஆகட்டும் முதல்ல. அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரிய’ தனக்குள் எண்ணிக்கொண்டே அலைபேசியில் சேமித்திருந்த கௌதமின் படத்தைப் பார்த்தபடியே சென்று அலைபேசியை வைத்தவள் அதன்பின் வேலையில் கவனமானாள்.
பிரகதிக்கு நேரம் ஒதுக்கி, கௌதமின் உடல்நிலையால் வரக்கூடிய பின்னடைவுகளை மெதுவாக விளக்கியிருந்தால், நிச்சயமாக அவளுக்குள் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி கௌதமோடுடனான அவளின் திருமண எண்ணத்தை பெரும்பாலும் அவளின் பெற்றோர் தவிர்த்திருக்கலாம்.
அதற்கான அவகாசத்தை அவளின் வீட்டார் அவளுக்குத் தராமல் திருமணப் பேச்சை மிகவும் தீவிரமாக எடுத்து தங்களின் முடிவை வலுக்கட்டாயமாக திணிப்பதால், வரட்டுப் பிடிவாதம் உண்டாகி தனது நிலையில் தீவிர எண்ணத்தோடு கௌதமோடுடனான திருமணத்தை நோக்கிச் செயல்படத் துவங்கியிருந்தாள் பிரகதி.
தான் அக்கறை மெடிக்கலுக்கு வந்த செய்தி வீட்டினருக்கு வழமைபோல தெரிய வராது, ஆகையால் கௌதம் மதுரை வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தவளின் எண்ணம் நிறைவேறியதா?
***