உதிரத்தின்… காதலதிகாரம்! 9

UKA-53bd7bc4

உதிரத்தின்… காதலதிகாரம்!

காதலதிகாரம் 9

பிரகதியின் தந்தை, மகள் இத்தனை நாள் வந்து சென்ற இடத்தை நேரில் வந்து அறிந்ததும் கொதித்துப் போனார்.

கண்டதும் உள்ளம் உலைக்களமாய் கனன்றிட உண்டான கோபத்தில் மகளை கன்னத்தைச் சேர்த்து அறைந்து தள்ளும் வெறி உண்டானது.

ஆத்திரத்தில் புத்தி மட்டாக செய்துவிட்டு, பிறகு வருத்தம் கொள்ளுமளவிற்கு ஏதேனும் நிகழ்வு மகளின் வாழ்வில் நடந்துவிடக்கூடாதே என்கிற விழிப்பு நிலையும் சேர்ந்துகொள்ள நிதானமாகவே மருந்தகத்தின் அருகே இருந்தவர்களின் வாயிலாக சில விசயங்களைக் கேட்டறிந்து உறுதி செய்துகொண்டார்.

“மெடிக்கல் வச்சா இப்போ நல்லா போகுதா.  ஒரே ஏரியாவுல இத்தனை மெடிக்கல் இருக்கே” எனத் துவங்கி, அவர்களுக்கும் தன்மேல் சந்தேகம் எழாதவாறு பல கதைகள் பேசி தனக்கு வேண்டியதை இலகுவாக  தெரிந்துகொண்டிருந்தார் அருணாசலம்.

அதனால் அக்கறை மருந்தகத்தைப் பற்றியும் அங்கு பணிக்கு வந்து செல்வோர் பற்றியும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.

அதன்மூலம் தனது மகள் மருந்தகம் துவங்கிய காலங்களில் எப்போதேனும் விஜயம் என்கிற நிலையில் இருந்ததையும், அதன்பின் வாரத்தின் பெரும்பாலான தினங்களில் வேலைக்கு வந்து செல்வதைப்பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அருணாசலத்திற்கு அமைந்து போனது.

‘அந்தப் பையலை, படிக்கும்போதுதான் பழக்கம்னு வீட்டுல சொன்னா.  ஆனா நடக்கிறதைப் பாத்தா அப்போ தொடங்கின பழக்கம் படிப்பு முடிஞ்சும் விடாமத் தொடந்திருக்குபோலயே!

வேலைக்கு போறேனு பொய்யச் சொல்லிட்டு இங்க வந்து கடலையப் போடறதுக்குன்னே வந்திருக்கும் போலயே இந்தச் சிறுசு!

கடவுளே!

அது தெரியாம புள்ளையக் கவனிக்காம அந்த கூறுகெட்டவ செக்குமாடு மாதிரி வீட்டுக்குள்ளயே வேலை வேலைனு சுத்திக்கிட்டு இருந்திருக்கா’ ரேவதியைத் திட்டித் தீர்த்து தனது ஆதங்கத்தைத் தணிக்க முயன்றாரே ஒழிய, தனது தவறை வகையாக மறந்து போயிருந்தார் அருணாசலம்.

மூத்த மகளின் திருமணத்திற்கு அருணாசலம் மதுரை வந்து ஒன்றரை வருடங்கள் கடந்திருந்தது.  அவர் வந்தபின் ரேவதி சில நேரங்களில் பிரகதியைச் சந்தேகித்துப் பேசிய சூழ்நிலைகளில், ‘எம்பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியும்.  அவ அப்டியெலாம் பொறுப்பில்லாமப் பண்ண மாட்டா’ என மார்பை நிமிர்த்திக்கொண்டு தம் கட்டிப் பேசி மகளை உச்சத்தில் நிறுத்தியிருந்தார்.

ஆனால் மிகச் சில நேரங்களில், ‘நம்ம சிறுசு வேலைக்குனு டெய்லியும் போக மாட்டிங்கிது.  வாரத்துல நாலு நாளுதான் போகுது.  சில வாரங்கள்ல மூனு நாளு போகுது.  சம்பளம்னு இதுவரை வாங்கிட்டு வந்து என் கண்ணுல இதுவரைக்கும் காட்டலை.  உனக்காது அதப்பத்தி எதாவது தெரியுமாடீ?’ என்று மனைவியிடம் கேட்ட சந்தர்ப்பங்களில்,

‘உங்கட்ட சொந்தமா மெடிக்கல் வைக்கணும்னு பணம் கேட்டதுக்கு நீங்க குடுக்கலைன்னு சொல்லிட்டீங்க… படிச்சது எல்லாம் மறந்து போனாலும் போயிரும்னு  அவ ஃபிரண்ட்டோட மெடிக்கல்கு அவளுக்கு நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் போயிட்டு வருவேன்னு உங்கட்டதான வந்து பேசுனா…

அதை யாரும் அப்போஸ் பண்றதோ, அடாவடியா எடுத்த எடுப்புல போகக்கூடாதுன்னு தடை சொல்லவோ கூடாதுன்னு உங்கட்டதான சட்டமாப் பேசுனா… 

அப்ப… நீங்களும் தொல்லை விட்டாப் போதும்னு கோவில் மாடு மாதிரி தலையை ஆட்டிச் சரினு சொல்லிட்டு, இப்ப வந்து என்னையக் கேட்டா…’ என்று கூறி கணவரின் வாயை அடைத்திருந்தார் ரேவதி.

நடந்ததை யோசித்து இனி ஒன்றுமாகப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிய, மகளுக்கு முன்பே வீட்டிற்குச் சென்று மனைவியிடம் உண்மையை உரைத்திருந்தார்.

ரேவதி அவரின் பங்குக்கு, “எல்லாம் நீங்க குடுத்த இடம்.  வேறென்ன…” குத்திக்காட்டி தனது பொறுப்பிலிருந்து நழுவ முயல, பதிலுக்கு அருணாசலமும் ஆவேசமாக மனைவியின் மீது குற்றச்சாட்டை அடுக்கி வீடே போர்க்களம்போல சற்று நேரத்தில் மாறியிருந்தது.

ஒருவருக்கொருவர் பழிபோட்டு நேரத்தை வீணாக்கினால் பிரகதியின் முடிவு அனைவருக்கும் வருத்தத்தையும், காலம் முழுமைக்கும் நீங்காத துன்பத்தையும் தந்துவிடும் என விழிப்போடு சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு நிதானமாக யோசித்த அருணாசலம், “இனி நடந்ததைப் பத்திப் பேசுறதுல எந்தப் பிரயோசனமும் இல்லை.  இனி என்ன செய்யலாம்னு முதல்ல யோசிப்போம்” உரைத்ததோடு,

“இதுக்கு மேலயும் நாம லேட் பண்ணா கண்டிப்பா தலைகுனிவை ஏற்படுத்திட்டு அவந்தான் பெருசுன்னு இந்தப் பைத்தியம் அவனைத் தேடிப் போயிரும். 

அதனால எந்தம்பியோட மாமியா வீட்டுல விசேசம்னு அன்னைக்கு வந்து பத்திரிக்கை குடுத்துட்டுப் போனதை சாக்காச் சொல்லி நாளைக்கு குடும்பத்தோட திருச்சிக்கு போயி அங்கேயே காதும் காதும் வச்சமாதிரி ஒரு மாப்பிள்ளையத் தேடி பிரகதிக்குக் கட்டி வச்சிருவோம். 

நான் அவங்கிட்ட பிரகதி பத்தின விசயத்தை தெளிவாச் சொல்லலை.  ஆனா குடும்ப மானத்தை காப்பாத்த எனக்கு உதவி செய்யுடானு கேட்டுருக்கேன். 

அவனும் சரினு சொல்லிட்டான். அதனால டிலே பண்ணாம, கொஞ்சம்கூட நம்ம மேல சந்தேகமே வராம இங்க இருந்து பிரகதியை கூட்டிக்கிட்டு திருச்சிக்குப் போயிரணும்” தனது திட்டத்தை மனைவியிடம் கூறினார்.

அவரின் திட்டத்திலிருந்த சில ஓட்டைகளை கணவரிடம் ரேவதி எடுத்துக் கூற, அவரும் அதனை சரிசெய்வதற்கு உரிய விசயங்களை முன்னேற்பாடாக தம்பியிடம் கூறி செய்யச் சொல்லியிருந்தார்.

தம்பிக்கு அழைத்துப் பேசிவிட்டு வைத்தவர் பிரகதி வீட்டிற்கு வருமுன் அனைத்தையும் சரிசெய்துவிட்டு, அவள் வரும்போது வழமைபோல இருவரும் நடந்துகொண்டனர்.

பிரகதி மாலையில் திரும்பியபோது வீடு வழமைபோல காட்சியளித்தமையால் பெற்றோர் மீது எந்தச் சந்தேகமும் வரவில்லை.

இரண்டு நாளுக்கு முன்பே குடும்பமாக திருச்சிக்கு செல்ல வேண்டும் என்பதைப் பற்றிப் பெற்றோர் பேசுவதைக் கேட்டவள், “நான் வரலை.  நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்று மறுக்க,

“உன்னைத் தனியா விட்டுட்டு எப்டிப் போக முடியும்.  குடும்பத்தோட வரோம்னு அன்னைக்கு பத்திரிக்கை குடுக்க வந்தவங்கட்ட சொல்லிருக்கோம்.  போகலைன்னா உனக்கு விசேசம் வச்சா அவங்க வீட்டுல இருந்து எப்டி வருவாங்க” ரேவதி மகளிடம் வினவ,

“அவங்க வரலைன்னா மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டேன்னா சொல்லிருவார்” குதர்க்கமாக தாயிடம் கேட்டாள் பிரகதி.

முந்தைய தினங்களில் வீட்டில் நடந்த விசயங்களைக் கொண்டு எதிலும் பிரகதிக்கு சந்தேகம் உதிக்கத் துவங்கியிருந்தது.

அதனால் இயன்றவரை பயணத்தை ஒத்திபோட விரும்பியே அவ்வாறு பேசினாள்.

“அப்டி இல்லைம்மா.  முக்கியமான சொந்தக்காரவங்க கல்யாணத்துக்கு இதுவரை குடும்பத்தோட போயித்தான நம்மல்ல பழக்கம்.  நம்ம பெருசு கல்யாணத்துல அவங்கதான ஒரு வாரத்துக்கு முன்னமே இங்க வந்து நமக்கு ஒத்தாசையா இருந்தாங்க.

அதுபோல நாமளும் போயி அவங்களுக்கு உதவியா இருக்கணும்ல.  சொந்த, பந்தங்கறது அதுக்குத்தானேம்மா.  அதத்தான் அம்மா சொல்லத் தெரியாம வந்து உங்கிட்டச் சொல்லிட்டு இருக்கா.

நீ வந்தேன்னா அந்தப் பொண்ணுக்கு துணைக்கு துணையா இருக்கறதோட, அந்தப் புள்ளைக்கு மேக்கப் போட மெஹந்தி வைக்கணு எல்லாம் பாத்து உங்க அக்காவுக்கு செஞ்ச மாதிரியே வந்து செய்வேன்னு அந்த அக்கா… அதுதான் அந்தப் பொண்ணோட அம்மா அன்னைக்கே உங்கிட்ட சொல்லிட்டுப் போச்சேம்மா.” என்று மகளுக்கு நினைவுபடுத்தினார் அருணாசலம்.

தந்தையின் அமைதிப் பேச்சில் ஏதோ மனதில் இடற யோசனையோடு இருந்தாள் பிரகதி.

மகளின் அமைதி வில்லங்கமாக முடியக்கூடும் என்று பயந்தவர் அவளின் அமைதியைக் கலைக்கும் வகையில், “ரெண்டு நாளுதானேம்மா.  எங்கயும் வெளிய போகாம மதுரைக்குள்ளேயே இருந்து மண்டைலாம் காயுதுன்னு அன்னைக்குகூட நீ சொல்லிகிட்டு இருந்தேனுதான் உங்கம்மா உன்னையும் கூடக் கூட்டிட்டுப் போவோம்னு எங்கிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தா…” என்பதுபோல நைச்சியமாக மகளிடம் பேசி, ஒருவழியாக பிரகதியை தனது எண்ணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார் அருணாசலம்.

அதற்குமேல் பிரகதியாலும் மறுக்க முடியவில்லை.

ஆனால் பிரகதியின் கண்காணிப்பு பணி அப்போதிருந்தே துவங்கியிருந்தது.

திருச்சி கிளம்பும்போதே விசயத்தை குறுஞ்செய்தியின் வழியே கௌதமிற்கு தெரிவித்திருந்தாள் பிரகதி.

கௌதம் அதனை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டிருந்தான்.

***

          சஞ்சய்யை அழைத்துக்கொண்டு மதுரைக்கு திரும்பிய கௌதம் தனது இயல்பு நிலைக்கு வந்து தானில்லாத நாள்களில் தேங்கிய மருந்தகப் பணிகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

          திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கவனத்தைச் செலுத்தியிருந்த பிரகதி திருச்சிக்கு கிளம்புமுன் திருமணத்திற்கு குடும்பமாகச் செல்லும் விசயத்தை கௌதமிடம் தெரிவித்திருந்தமையால், தான் மதுரைக்கு வந்தது முதலே தன்னிடம் பிரகதி பேசாததையோ, மருந்தகத்திற்கு அவள் வராததைப் பற்றியோ அவன்நெருடலாக யோசிக்கவில்லை.

          பிரகதிக்கும் திருச்சியில் உறவினர் திருமணம் முடியும்வரை பெரியளவில் சந்தேகம் எழவில்லை.

          திருமணம் முடிந்தபின்பு, “நீயும் அம்மாவும் இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு வாங்க.  நான் முதல்ல கிளம்புறேன்” என அருணாசலம் கிளம்பும்போது,

“ப்பா நானும் உங்ககூட வரேன்.  அம்மான்னா இருந்துட்டு மெதுவா வரட்டும்” உடன் கிளம்பி தன்னோடு வரக் கிளம்பியவளைத் தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடிப்போனார்.

தன்னோடு மகளை மதுரைக்கு அழைத்துச் செல்வது, தான் மறைமுகமாக ஏற்பாடு செய்துவரும் திருமணத்தை பாதிக்கக்கூடும் என நினைத்தவர், “உனக்கு நகையெல்லாம் எடுக்கணும்னு அம்மா சொன்னா.  அதான் உங்க ரெண்டு பேரையும் இங்க விட்டுட்டுப் போறேன்.  உனக்குப் புடிச்சதாப் பாத்து நீயே எடுத்துக்கோ.  அடிக்கடியா இங்க வர்ற.  ரெண்டு நாளு இருந்து சுத்திப் பாத்துட்டு வாங்க…” என சமாளிக்கப் பார்க்க,

“மதுரையில இல்லாத நகைக்கடையாப்பா?  அங்க இல்லாதது அப்டி என்ன இங்க இருக்கு? அப்டியே இருந்தாலும் அதுக்கு எதுக்கு ஒரு வாரம்ப்பா… ஒரு நாளு போதாதா?” என்றவள், “சுத்திப் பாக்கற மூடே இல்லப்பா” என்று கூறிவிட்டாள்.

          “என்னவோ உங்கம்மாதான் இங்க சகாயமா இருக்கும், செய்கூலி சேதாரமெல்லாம் குறைச்சு வாங்கலாம்னு சொல்லிட்டு இருந்தா.” பரிதாபமாக மனைவி ரேவதியை துணைக்கு அழைக்க,

அவரோடு அவளின் சித்தப்பாவின் மனைவியும் சேர்ந்துகொண்டு, “நிதானமா பாத்து நல்ல டிசைன்ல உனக்குப் புடிச்ச மாதிரி இங்கேயே வாங்கிக்கலாம் பிரகதி.  ஐடியா குடுக்கக்கூட இங்க நம்ம ஆளுங்க இருக்காங்க…” பிரகதியைச் சமாளிக்கும் வகையில் அனைவரும் பேச, அவள் அவர்களின் பேச்சில் அயர்ந்த வேளையில் மதுரைக்கு கிளம்பிச் சென்றிருந்தார் அருணாசாலம்.

ஆனால் பிரகதியின் மனதில் நெருடல் நெருப்பாக வளரத் துவங்கியிருந்தது.

இதுவரை வந்துசென்ற வேளைகளில் இல்லாத வகையில் அவ்வப்போது சித்தப்பா வீட்டினரும் பெற்றோர் கூடிப் பேசியது, பிரகதி அருகில் இருக்கும்போது ஒரு மாதிரியும், மற்ற வேளைகளில் அவள் எங்கு இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு மெல்லிய குரலில் பிறர் கேட்காத வண்ணம் பேசத் துவங்குவதையும் கண்டுகொண்டிருந்தாள் பிரகதி.

***

          அன்றிரவு கௌதமிற்கு குறுஞ்செய்தியின் வழியே தன் மனதில் உள்ளதை அனுப்பியவள், “என்னோட டவுட்டு இன்னும் பத்து பர்சென்டேஜ் கூடுனா, கண்டிப்பா உன்னைத் தேடி மதுரைக்கு வந்திருவேன்” என இறுதியாக அனுப்பினாள்.

          கௌதம் அப்போதும், “உங்க அப்பாகிட்ட நான் பேசிப் பாக்கவா?” எனக் கேட்டான்.

          மறுத்தவள் அதன்பின் வாய்ஸ் மெசேஸில், “உன்னைப் பத்தி நீ சொன்னதோட, நான் கூகுள்ல பாத்த சில விசயங்களையும் சேத்தே, உன்னோட ஹெல்த் பத்தி எங்கப்பாகிட்டச் சொன்ன பின்னதான் அவங்க பிடிவாதமா உன்னை வேணானு சொன்னாங்க.  அதுக்கப்புறமும் போயிப் பேசுறது எனக்கொன்னும் சரினு படலை” என அதுவரை மறைத்து வைத்திருந்த விசயத்தை கௌதமிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் பிரகதி.

          எதிர்முனையில் பிரகதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவன் பதில் பேசாமல் நீண்ட நேரம் அமைதியாக இருக்க, பிரகதிக்கு தான் பேசிய விசயம் அவனை அமைதியாக இருக்கச் செய்துவிட்டதை உணர்ந்தவள்,

“இதுக்காக நீ வர்ரி பண்ணாத தம்மு.  எனக்கு உன்னைத் தவிர வேற யாரோடையும் மனசொப்பி வாழ முடியும்னு தோணலை.  அதான்… எல்லாரையும் எதுக்கச் துணிஞ்சிட்டேன்.  எனக்கு அத்தம்மா பத்தி கவலையில்லை.  ஆனா உங்கப்பா…” அதற்குமேல் அவளாலும்  அவனிடம் பேச முடியவில்லை.

கௌதமும் அமைதியாக இருந்தான்.

“எதுனாலும் பாத்துக்கலாம் தம்மு. அவங்க உன்னை வேணானு சொல்லிட்டாங்கனு என்னைப் பழி வாங்கிறாத” என அனுப்பிய வாய்ஸ் மெசேஜைக் கேட்டவனுக்கு, அவளின் குரலில் இருந்த கரகரப்பு எதனால் என்பது புரிந்தது.

அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டவன், “அங்க இருந்து கிளம்பிற முடிவுக்கு வந்துட்டா, அதுக்கு முன்ன கால் பண்ணு.  முடியாத பட்சத்துல எப்டியாவது எனக்கு மெசேஜ் பண்ணிட்டுக் கிளம்பு.  நீ பாட்டுக்கு கிளம்பி வந்து எங்கயும் மாட்டிக்காத” என்றவன், அவளிடம் பல பத்திரங்கள் கூறிவிட்டு நிறைவாக,

“நல்லா நிதானமா யோசிச்சிக்கோ ராகா” என அலைபேசியை வைத்திருந்தான்.

          அதேநேரம் கௌமிற்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு.

          அழைப்பை ஏற்றவன் உடனே வெளியில் கிளம்ப, அடுத்து வந்த இரண்டு மணித் தியாலத்திற்குப்பின் அவனுக்கு அழைத்த பிரகதியின் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருந்தான் கௌதம்.

          பிரகதி என்ன செய்தாள்?

***