அத்தியாயம் – 11
அன்று வேலையிலிருந்து வந்தபின் மகாவிற்கு ஏனோ சலிப்பாக இருந்தது. சமையலை முடித்தபின் நன்றாக சாப்பிட்டும் வேறெதும் பலகாரம் சாப்பிடத் தோன்றியது.
கடைக்குச் சென்று வாங்கிவருவதை விட தானே செய்து விடலாமென முடிவெடுத்தவள் தன்னவனிடம் சென்று கூற அதனை கேட்டதும் அதிர்ச்சியாக பார்த்தான்.
அவள் சமையல் ஒன்றும் அந்த அளவு மோசமாக இருக்காதென்று அவனுக்குத் தெரியும். ஆனால் திருமணமான புதிதில் அவள் ஒரு முறை வடை செய்கிறேன் என வலையொளியை ( Youtube ) பார்த்து விட்டு செய்தாளே அது தான் ஞாபகம் வந்து அவனை பயப்படுத்தியது.
அவள் அன்று ஆர்வமாக செய்வதை பார்த்தவன் சுவையான பலகாரத்திற்கு காத்திருக்க வடையை பார்த்ததும் அது வடைதானாயென சந்தேகம் வந்தது.
தான் சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்ன கூறுவோமென அவள் காத்திருப்பதைப் பார்த்து தன்னை திடப்படுத்தியவன் அதை எடுத்து சாப்பிட அது வடையே இல்லை என உறுதியானது.
ஆனால், அவளிடம் அப்படியே கூற தான் பயமாக இருக்க மிக பிரயத்தனப்பட்டு இரண்டு சாப்பிட்டவன் போதும் என்றுவிட அவளோ, “ஏன் கம்மியா சாப்டறீங்க. இன்னும் இருக்குங்க” எனவும் ‘அது சரி’ என நினைத்தவன்,
“நல்லா சாப்பிட்டதால வயித்துல இடமில்ல மகா. காலைல சாப்பாடு ரொம்ப நல்லாருந்துச்சுல” எனக் கூறி அவள் மனதை குளிர்விக்கவும் அதில் மகிழ்ந்தவள் அவனை விட்டுவிட்டாள்.
அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மனதில் வந்துபோக “உனக்கு ஏன் மகா சிரமம்? நான் வேணுன்னா கடைக்கு போய் வாங்கிட்டு வரேன்”, என,
“இல்லங்க எனக்கு நானே செய்யணும் னு ஆசையா இருக்கு”, என,
‘உனக்கு எதுக்கு டி இந்த விபரீத ஆசை’ என நினைத்தவன் ஏதேதோ கூற அனைத்தையும் மறுத்தவள் நான் செய்தே தீருவேன் என சென்றுவிட அவள் செல்வதை ஒன்னும் செய்ய முடியாமல் பார்த்தான்.
‘இவ செய்யறத இவளே சாப்பிட்டா தெரியும்!’
‘அன்னைக்கு அவ செஞ்சத கொஞ்சமா சாப்பிட்டுட்டு பேந்த பேந்த முழிச்சவள பார்த்து பாவப்பட்டு
‘போதும்னா விடு மகா னதும்,
‘ஆமாங்க எனக்கும் வயிறு நெரம்பிடுச்சுனு உடனே சொன்னவதான.’
‘அன்று நான்தான் ரெண்டு சாப்பிட்டேன். இன்னைக்கு நாம மட்டும் சாப்பிடக்கூடாது அப்படியே சாப்பிட்டாலும் அவள அதவிட அதிகமா சாப்பிட வெச்சுட்டா இனிமே இந்த மாதிரிலாம் பண்ண மாட்டா.’
‘இருக்கட்டும் நீ பண்ணு. இன்னைக்கு நீ அத சாப்பிட்டுட்டு இன்னொரு நாள் எப்படி பலகாரம் சுடறேன்னு சொல்றனு நானும் பார்க்கறேன்’ என மனதில் கறுவியவன் தன் கைபேசி யை நோண்ட ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக சமையலறையில் இருந்தவள் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வர அதிலென்ன இருக்கிறதென இப்போதும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“என்ன மகா இது?”, என கேட்க,
“போண்டாங்க”, என்றதும் அவனுக்கு பகீர் என்று ஆனது.
‘போண்டா என்னடி சின்னதா இருக்க வறட்டி மாதிரியிருக்கு’ என நினைத்தவன்,
“ஓ…. என்றுவிட்டு நீயும் சாப்பிடு”, என்க,
“ம்ம்”, என்றவள் ஆசையாக கையில் எடுத்தாள்.
பாவம் இத்தனை நாள் சமையலில் எதுவும் சுலபமாக சுவையாக செய்துடாலமென நினைத்தாள் போலும் ஆனால், கொஞ்சமாவது பழக்கம் இருக்க வேண்டுமே!
அதை சாப்பிட்டதும் அவள் முகம் அஷ்டகோணலாக மாற, அவனுக்கோ அந்த வடைக்கு இந்த வறட்டி தேவையில்லையென்றுதான் தோன்றியது. ஆயினும் ஒரு போண்டாவை அவள் கஷ்டப்பட்டு சாப்பிட்டுவிட்டாள்.
அவள் முகத்தில் வெளிப்பட்ட உணர்வை பார்த்து மனதுக்குள் அடக்கமாட்டாமல் சிரித்தவன் சிரிப்பு முகத்திலும் வெளிப்பட்டது. அதை பார்த்தவள் அவனை முறைத்தாள்.
“இப்போ எதுக்குடி என்ன முறைக்குற? நியாயப்படி நான்தான் உன்ன முறைக்கணும்”, என்க,
“ப்ச் என்றவள் பிடிக்கலனா வெச்சுடுங்க”, என்றாள்.
‘அப்பாடா’ என நினைத்தவன் வேகமாக வைத்துவிட அதை பார்த்ததும் அவள் முகம் சுருங்கியது.
அதைக் கண்டவன் தான் அமந்திருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்த நாற்காலியின் அருகில் போட்டுவிட்டு சாவகாசமாக அமர்ந்து விட்டான்.
“எதுக்கு இப்போ இந்த சின்ன விஷயத்துக்கு வருத்தப்படற?”, என வினவினான்.
“எனக்கு மட்டும் பலகாரம் செய்யவே வரமாட்டுது. அந்த பக்கத்துவீட்டு பொண்ணு எவ்ளோ டேஸ்ட்டா இந்தமாதிரி செய்றாங்க. எனக்கு மட்டும் அப்படி பண்ண வரமாட்டுது. போங்க நீங்களும் என்ன கிண்டல்லா பாக்கறீங்க. அத வேணான்னா வெச்சுடுங்கனு சொன்னதும் அதுக்கே காத்திருந்தது போல சட்டுனு வெச்சிடீங்க” என சிணுங்கிக் கொண்டு புகார் வாசிக்க அவளின் அந்த சிறுபிள்ளைத்தனம் அவனை அத்தனை ஈர்த்தது.
இதழ்களில் அழகான புன்னகையை சிந்தியவன் அவளை கைபிடித்து எழுப்பி வாகாக அவன் மடியில் அமர வைத்துக்கொள்ள அனைத்தையும் மறந்தவள் வெட்கப்பட்டாலும் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.
தன் கரங்களை கொண்டு அவள் இடையை அணைத்துக் கொண்டவன், “விடு மகா. கொஞ்ச நாள்ள அதுலாம் நீயே நல்லா செய்வ. இதுலாம் ஒரு விஷயம்னு பீல் பண்ணாத.” என மெல்லிய குரலில் கூற,
அதைக் கேட்டவள் ஏதும் கூறவில்லை என்பதைவிட, கூறும் நிலையில் அவளில்லை என்பதுதான் உண்மை.
அவனுக்கும் அதே நிலைதான் போலும். கைபேசியில் அவனுக்கு அழைப்புவர அந்த சத்தத்தில் மோன நிலையில் இருந்து கலைந்தனர்.
டக்கென எழுந்து கொண்டு அங்கிருந்த தட்டுகளை எடுத்தாள்.
ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன் “ரொமான்டிக் சீன்ல போன் ன போட்டு கெடுத்துவிட்டுட்டான். யாரந்த படுபாவிபயன் னு தெரில”, என முனகியவாரு அவளை குறும்பாக பார்த்துக்கொண்டு கைபேசியை நோக்கி போனான்.
அந்த முனகளைக் கேட்டு சிரித்த அவள் முகமோ அவன் பார்வையைக் கண்டு செம்மை பூசிக் கொள்ள அதை மறைக்க முயற்சித்து உள்ளே ஓடிவிட்டாள்.
அவள் ஓடியதை பார்த்து உல்லாசமாக சிரித்தவன் முகம் நொடியில் கடுப்பாக மாற கைபேசியை எடுத்து அவனை அழைத்த கல்லூரியில் உடன் வேலை செய்யும் நண்பனை வறுத்தெடுக்க ஆரம்பித்தான்.
******
அடுத்த நாள்
பைக்கில் அவன் பின் உட்கார்ந்திருந்தவள் வாய் முணுமுணுத்துக் கொண்டே வர அதை பைக் கண்ணாடி வழியே கவனித்த அகத்தியனோ சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவனுக்கு புரிந்தது அவள் கோபம். ஏற்படக் காரணமே அவன் தானே!சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
அன்று அவர்கள் பிரசாத்தின் திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவளிடம் வம்பிழுக்க வேண்டுமென முடிவெடுத்தவன் நேற்று வீடு வந்ததிலிருந்தே அதை செயல்படுத்த ஆரம்பித்தான்.
அவளை கண்டுக் கொள்ளாமல் அவன் பாட்டிற்கு கைபேசியை பார்த்துக்கொண்டும், தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டும், சிரித்தவாறு அவன் அப்பாவிடம் பேசிக்கொண்டும் இருக்க அவன் கண்கள் தன்னை வட்டமிடவில்லையே என குழம்பியவள் அது தீராமலே உறங்க சென்றுவிட்டாள்.
அன்று அவன் வீடு வந்த சிறிது நேரத்திலேயே நாளை தன் நண்பன் திருமணம் என்பதை நினைவுபடுத்த அவளுக்குமே நினைவு இருந்தது.
அதிகாலை முகுர்த்தம் என்பதால் சற்று முன்பே எழுந்தவர்கள் புறப்பட்டனர்.
பொதுவாக எளிமையான காட்டன் புடவையிலேயே அவன் கண்களுக்கு அழகியாக தெரிபவள் இன்று பட்டு சேலையிலும் வெளியில் செல்வதால் செய்த ஒப்பனையிலும் அவள் கழுத்திலும் காதிலும் மின்னிய ஆபரணங்களிலும் அவன் கண்களுக்கு அவனவள் பேரழகியாக தெரிய தன் கண்களை அவளை விட்டு திருப்ப அத்தனை பாடுபட்டுப் போனான்.
‘இன்னைக்கு னு பார்த்து இவ்ளோ அழகா இருக்காளே. அப்போ கல்யாணத்தப்போ எப்படி இருந்திருப்பா’ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
அன்று இருந்த மனநிலையில் அவளை ரசிக்கும் எண்ணம் அவனுக்குப் பெரிதாக இல்லை.
ஆனால் இன்று…..? ‘பேசாமல் இந்த வம்பிழுப்பதை தூக்கி தூரப்போட்டு விடலாமா’ என அவன் மனசாட்சி கேட்க,
அவன் போட்டுவைத்திருந்த சில திட்டத்தால் மனமே இல்லாமல் தன் எண்ணத்தை ஓரங்கட்டியவன் அவளை பார்க்காதது போல விரைப்பாக வலம் வந்தான்.
அவளோ தன்னை கவனிக்கவில்லையே என அவன் முன்பே வந்து நின்றுவிட, “நேரம் ஆச்சு கிளம்பலாம்”, என்று கூறியவன் தந்தையிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட அவளுக்கு கடுப்பு இவ்வளவு தான் வந்தது என்றே இல்லை.
இத்தனை அலங்காரம் செய்துவிட்டு அவன்முன் போய் நின்றால் அவன் பாட்டிற்கு ஒரு ரசனை பார்வை கூடப் பார்க்காது சென்றுவிட்டானேயென மனதுக்குள் அளவில்லாமல் பொறுமினாள்.
‘நேற்று மாமாவிடம் தன் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டி சிரித்தவர். இன்று ஒரு சிறு புன்னகை கூட தன்னை பார்த்து சிந்தவில்லையே.
ஒரு இரண்டு நாட்கள் தான் பண்ணியதில் கடுப்பாகிட்டாறா? அப்போ ரெண்டு மாசம் நான் எவ்ளோ கடுப்பாகனும்….?’
என்று எண்ணங்கள் எங்கெங்கோ போக “கீர்த்தி சீக்கிரம் வா”, என அவன் குரலில் நிகழ்வுக்கு வந்தவள் தன் மாமாவிடம் கூறிவிட்டு ‘கத்தறத மட்டும் விடமாட்டாரே’ என வேகமாக வெளியே வந்தவள் அவன் பைக்கில் ஏறிக் கொண்டாள்.
அப்போதிருந்தே அந்த முணுமுணுப்புகள் தொடர்ந்தது.
அவள் அவ்வளவு நெருக்கமாக அவனுடன் பைக்கில் உட்காரமாட்டாளென்றாலும் இன்று சற்று அதிக இடைவெளிவிட்டு உட்கார்ந்துவர அதை கவனித்தவன் வேண்டுமென்றே அடித்த சடர்ன் பிரேக் இல் அவன் மீது சாய மனதுக்குள் குத்தாட்டம் போட்டவன் “பிடுச்சி உட்கார மாட்டியா?”, என கஷ்டப்பட்டு வரவழைத்த கடுமையான குரலில் கேட்க, அதில் மேலும் கடுப்பானவளுக்கு ஏனோ பேசதான் வரவில்லை.
‘சிடுமூஞ்சிகிட்டலாம் ரொமான்ஸ எதிர்பார்க்குறது நம்ம தப்புதான்’ என மனதுக்குள் தன்னை நொந்துகொண்டு அவன் தோளில் கை போட்டு கொண்டவளுக்கு தெரியவில்லை இது அவன் வேண்டுமென்று பண்ணியதென.
மண்டபதின் முன் வண்டிகள் நிற்க வைத்த இடத்தில் பைக்கை நிறுத்தியவன் அவளுடன் உள்ளே சென்றான்.
*******
மணமகனான பிரசாத் இன்னும் சற்று நேரத்தில் தன் சரிபாதியாக மாறவிருக்கும் தன்னவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு ஐயர் கூறும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.
அதைக் கண்டதும் அகத்தியனுக்கு ‘அன்று தான் ஏன் இது போல மனநிலையில் இல்லாது போனோம்’ என வேதனையாக இருந்தது. முகத்தை நிமிர்த்தியவன் இவர்களை பார்த்து வரவேற்பாக சிரிக்க அவர்களும் புன்னகைத்தனர்.
மண்டபத்திற்குள் வரும் வரை தோன்றாத பல எண்ணங்கள் தற்போது கீர்த்தி க்கும் தோன்றியது. அதும் பக்கத்தில் உள்ள பெரியவர்கள் பேசியதை கேட்டதும் அங்கிருந்த ஒரு இளைஞன் திருமணத்தில் முன் நின்று என்னவென கவனிப்பது…. அந்நபரின் செயல் அவளுக்கு ஒருவித ஏக்கமான உணர்வைக் கொடுத்தது.
பக்கத்தில் இருந்த பெரியவர்கள் பேசியது யாதெனில், ‘அந்த மணப்பொண்ணு அண்ணனுக்கு தான் பையன் னோட தங்கச்சிய கொடுத்துருக்காங்க. அந்த பையன் எப்படி அக்கறையா முன்னநின்னு வேலை பாக்குது பாரு’ என பேசிக்கொடிருந்தனர். இதைக் கேட்ட பின்தான் அவள் பார்வை அந்த உணர்வை வெளிப்படுத்தியது.
பிரசாத்தும் அந்த ரவியும் சிரித்துக்கொண்டும், கிண்டல் செய்துகொண்டும் சிலநொடி இயல்பாக பேசிக்கொண்டபோதும் அந்த செய்கையினாலும் அவள் கண்களில் எழுந்த ஒருவித ஏக்கத்தை நன்றாகவே அகத்தியன் கண்டான்.
ஆனால் ‘அதுவெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை’ என்றும் நினைத்துக் கொண்டான். ஆயினும் அப்போது அவளின் வருத்தமான முகத்தைப் பார்க்க அவனுக்கு வலித்தது.
அதேபோல தான் அன்று கூறியதற்காக அமைதியாக இருந்தவளின் கண்களிலிருந்த ஏக்கம் அவனை வேதனைக்குள்ளாக்கியது. இத்தனை நாட்களாக அதைப் பற்றி பேசாதவள் கண்கள் அவள் உள்ளத்தை தெளிவாக கூறியது.
‘தானும் அன்று அவசரப்பட்டு விட்டோமோ. சற்று பொறுமையாக அந்த விஷயத்தைக் கையாண்டிருக்கலாமோ’ என சிறிதாக தோன்றியது.
இந்த இரு மதங்களாக தன் கணவனின் பாரமுகத்தால் பெரிதும் வாடியவளுக்கு வேறெந்த சிந்தனையும் எழவில்லை என்பது உண்மையே. ஆனால் அதற்காக மனதில் உள்ள எண்ணங்கள் மறையாதே.
மற்றவர் கொண்ட பாசம் பொய்த்து போனாலும் தான் வைத்த பாசம் அப்படியில்லையே என்று பலநாட்கள் கழித்து அன்று நடந்த நிகழ்வை நினைத்து வருந்தினாள்.
திருமணம் வெகுசிறப்பாக நடந்திட சில நிமிடங்கள் தங்களது உணர்வுகளை மறைத்தவர்கள் திருமண ஜோடிகளை மனமார வாழ்த்திவிட்டு நேற்று வீடு வரும்போதே வாங்கிய அவனுக்கான பரிசை கொடுத்துவிட்டு, “நேரம் இருக்கும்போது இருவரும் தங்கள் வீட்டிற்கு வரவேண்டும்” என அன்பு கட்டளை இட்டுவிட்டு சாப்பிட்ட பின் கிளம்பினர்.
வரும்போது இருந்த உணர்வுகள் மாறி சற்று வேதனையுடனே இருவரும் வீடு திரும்பினர்.
தொடரும்…..