அத்தியாயம் – 12
அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு
நான் பார்த்த ஒருதல நீதானே
உன்னாலே தறுதல நான்தானே
அட நெருப்பால விழுந்த
ரேசன் அருசி புழுவென ஆனேனே
என பாடிய அந்த பாடலின் ரீமிக்ஸ் இசைக்கேற்ப சிறு வயது முதல் இப்போது வசீகரமான இளைஞன் வரை உள்ள புகைப்படத்தைக் கொண்டு நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கும் அந்த வாட்சப் ஸ்டேட்டஸை இதோடு பலமுறை பார்த்துவிட்டாள்.
அவள் உதடுகள் ‘தறுதலனு ஒத்துக்கிட்டா சரி’ என கேலி பேசியது. ஆனால் அவளறிவாள் அவன் குணத்தை.
அவன் சுயவிவர படத்தை ஏற்கனவே திரைசுடுவு (ஸ்க்ரீன் ஷாட்) எடுத்திருந்ததால் அவனின் அந்த ஸ்டேட்டஸை மட்டும் தன் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டாள்.
இதுவெல்லாம் அவள் தனியாக இருக்கும்போது மட்டுமே. அதுவும் எப்போதாவது. நேரில் அவனைக் கண்டால் ‘நீயா!’ என்பது போல சாதாரணமாக கடந்து விடுவாள்.
என்னதான் அவனை…. ஆதியை…. அவள் அத்தை மகனை பிடித்திருந்த போதிலும் அதை வெளிகாட்டிக் கொண்டதில்லை.
அதற்கு முதற்காரணம் அவன் குடும்பம். இவன் மட்டும் தப்பித்தவறி பிறந்துவிட்டான் போலுமென நினைத்துக்கொள்வாள்.
அவன் தன் தாய், தந்தையிடம் ஏன் அனைவரிடமுமே காட்டும் மரியாதை அவளுக்கு அவன் மீது மதிப்பை கொடுத்தது.
அவனின் இயல்பான அலட்டல் இல்லாமல் பேசும் குணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் தன்னை கள்ளத்தனமாக பார்க்கும் அந்த பார்வை அவளை அத்தனை ஈர்க்கும்.
ஆனாலும் அவர்கள் குடும்பத்திற்கு தான் ஒத்துப்போவோமா என்ற கேள்வி அவளை தள்ளி நிறுத்தியது.
அவன் அப்பா, அம்மா, தங்கை என யாரிடமும் அவளுக்கு இயல்பாக பேசவராது. அதுவும் அந்த ஆர்த்தி.
என்னவோ இவள் தான் இந்த உலகத்திலே பெரியவள், அழகானவள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அவள் செய்யும் அலும்புகளை பார்க்க சகியாமல் அவள் திசைக்கே செல்லமாட்டாள்.
அவள் அத்தை. பார்க்கும்போதே யார் எவ்வளவு நகை போட்டிருக்கிறார். வசதி எப்படி என்பதை பொறுத்துதான் அவர் பார்வையே நல்லவிதமாக இருக்கும். பேச்சு பெரும்பாலும் இடக்காகத்தான் வரும்.
அவள் மாமா. அவர் பேசுவதெல்லாம் மனைவி கூறினால் சரி என்பதுவாகவே இருக்கும். அதைத்தாண்டி அவரும் பேசியதில்லை. அவர் மனைவி பேசவிட்டதுமில்லை.
அப்படியிருக்க அவன் மட்டும் இத்தனை நல்லவனாய் போனானேயென ஏக்கப் பெருமூச்சு விட்டவள் படிப்பு, வேலை என்று வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின் பார்த்துக்கொள்ளலாமென முடிவெடுத்திருந்தாள்.
சில மாதங்களுக்கு முன் தன் குடும்பத்தில் நடந்த பிரச்சனைக்குப் பின் இது நடப்பதில் சிக்கல் உள்ளதென புரிந்தது. இந்த காதல் எல்லாம் தேவைதானாயெனவும் தோன்றியது.
ஆனால் அவன் கூறிய சில விஷயத்தால்தான் என்ன பிரச்சனை நடந்ததென அறிந்தவள் தந்தையிடம் கூறி அதனை சரி செய்யும் பொருட்டே சில முயற்சிகளை செய்கிறாள்.
இதையெல்லாம் கூறினாலும் பிரச்சனை தீருமென அவளுக்கும் தோன்றவில்லை. ஆனாலும் நடந்தால் நன்றாக இருக்கும். அதற்கான முயற்சியை செய்வோமே என்பதே அவள் எண்ணம்.
சூழ்நிலை காரணமாக வார்த்தைகளை விடுவிட்டனரென்று புரிந்தது. அவன் ( அண்ணன் ) மீது வைத்த குற்றச்சாட்டை அப்போதும் அவள் நம்பவில்லை. இப்போது அதை ஆதி கூறி தன் தந்தை புரிந்து கொண்டதில் அவளுக்கு மனத்தாங்கல் தான். ஆனாலும் அவன் செய்தது!
இந்த சூழ்நிலை, பிரச்சனைகெல்லாம் அந்த விஷபூச்சிதான் காரணமென தெரிந்தது.
ஆனாலும் எதையாவது செய்து தன் அண்ணனை இந்த குடும்பத்தோடு சேர்த்து விடவேண்டுமென ஆசை. எப்படியென்றுதான் தெரியவில்லை.
தன்னிடம் பேசவேமாட்டேன் என்கிறான். சமாதானம் செய்தாலும் எதையாவது பேசி தன்னை அனுப்பிவிடுவானென தெரிந்தது.
அதனாலே அவன் முன் வீம்பாக பேசிக்கொண்டிருந்தாள். அவன் அன்று கூறிய வார்த்தையெல்லாம் அவள் மனதை வருத்திய போதிலும் அவை உண்மையல்லவென அவளுக்கு தெரியும். தன்னால் தன் தங்கைக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக் கூடாதென்று அந்த பேச்சு என புரிந்தது.
பொதுவாக ஆதியிடம் பேசியிறாதவளுக்கு இந்த விஷயமாக பேச அவன்தான் கிடைத்தான். இந்த பேச்சினால் அவள் மனதின் ஆசைகள் சற்று அதிகரித்துப் போயின.
மனதைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் அது சில முறை முடியாதல்லவா! ஆதலாலே அரிதாக இது போல ரகசிய சைட் அடிப்புகள், ரகசிய பேச்சுக்கள் நடந்தன.
சில நிமிடங்களில் தன் நினைவின் போக்கை சட்டென நிறுத்தினாள். வழக்கமாக நிகழ்வுது தான்.
‘ப்ரீத்தி இது உனக்கே ஓவரா தெரியல….?’
‘இருக்கற பிரச்சனையில இது அவசியமா….?’
என தன்னிடமே எப்போதும் போல கேள்வி எழுப்பியவள், தேவையில்லாமல் எதைப்பற்றியும் அதிகமாக யோசிக்ககூடாது.
தான் ஒரு புது பிரச்சனை ஏற்படுத்தாமல் முதலில் இருக்கும் பிரச்சனையை தீர்க்க வழி செய்வோமென தனக்குத்தானே எப்போதும் போல அறிவுறுத்திக் கொண்டவள் கல்லூரிக்கு நேரமாக குளிக்க சென்றாள்.
*******
பள்ளிக்கு வந்த சிறிது நேரத்திற்கு பின் மகாவிற்கு வயிறு வலிக்க ‘என்னடா ஆச்சு’ என மனதுக்குள் சலித்தவாரு தன்னை தேற்றிக் கொண்டு பள்ளியில் வலம் வந்தாள்.
என்னதான் இதுபோல வலியாக இருந்தாலும் அந்த மழலைகளின் முகம் பார்க்கும் போது சற்று தெம்பாகத்தான் இருந்தது.
அவளுடன் வேலை செய்யும் அவள் தோழி அவள் முகத்தில் எப்போதும் உள்ள சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு,
“ஏய் என்னாச்சு டி?” என கேட்டு விட்டாள்.
“ஒன்னும் இல்லடி. சும்மா லைட்டா வயித்த வலிக்குது” என சோர்வாக புன்னகை சிந்தினாள்.
“காலையில இருந்தே ஒரு மாதிரி இருக்க, எதுக்கு இன்னைக்கு வேலைக்கு வந்த? இரு அண்ணாவுக்கு போன் பண்றேன். நீ பேசாம ஹாஃப் டே லீவு போட்டு கிளம்பு” என கூற அவளுக்கும் அது சரியென்றே தோன்றியது.
முன்பு எதற்கு அவனை தொல்லை செய்யவேண்டும், இந்த பொழுதை பொறுத்தால் வீடு சென்று விடலாமென நினைத்தவள் அவனிடம் கூறவேண்டாமென விட்டுவிட்டாள்.
ஆனால் வயிற்று வலி அதிகமாகிக் கொண்டுபோக அவள் தோழியிடம் சரி என்பது போல தலையசைத்து தான் உட்கார்ந்திருந்த நாற்காலி முன் இருந்த மேசையில் தலையை சாய்த்துக் கொண்டாள்.
அவள் தோழியும் சூர்யாவிடம் பெரிதாக ஒன்றுமில்லை சோர்வாக இருக்கிறாள் வாங்க என்பதுபோல கூறிவிட்டு அவளுக்கு உடல்நிலை சுகம் இல்லையென தலைமையாசிரியரிடம் கூறி மதியம் விடுப்பு எடுக்க ஏற்பாடு செய்துவிட்டு அவளிடம்,
“கொஞ்சம் பொறுத்துக்கோ மகா அண்ணா வந்துடுவார்” என கூற மணி அடிக்கவும் மதிய உணவு இடைவேளை முடிந்ததென புரிய
“நீ கிளாஸ் போ ரேகா நான் பாத்துக்கறேன்” எனக்கூற தலையசைத்தவள் மனமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
*******
வேலையில் சற்று பணிமிகுதியாக இருந்ததால் அப்போது உணவை உண்ண உட்கார்ந்தவன் கைபேசி ஒலியெழுப்ப தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கேட்டவுடனே அவனும் அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு அவள் பணிபுரியும் பள்ளிக்கு வேகமாக வந்தான்.
சோர்ந்து போய் மேசை மேல் தலை சாய்த்து படுத்திருந்த மனைவியைக் கண்டு அவன் மனம் வேதனை கொண்டாலும் இதற்கெல்லாம் நேரமில்லையென எண்ணியவன் அவளை எழுப்ப மகாவிற்கு அவனை கண்டதும் பாதி சரியானது போல இருந்தது.
அவளை மெதுவாக அழைத்துக்கொண்டு வெளியே வர இருவரும் பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றனர்.
பேருந்து வர சற்று தாமதமாக மகா சோர்வாக அங்கிருந்த பயணிகள் நிழர்கூடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவனோ அவள் பக்கம் இருப்பதும் பேருந்து வருகிறதாவென பார்ப்பதுமாக நடந்து கொண்டிருந்தான்.
சூர்யாவிற்கு மனது அத்தனை கஷ்டமாக இருந்தது.
‘ச்சே…. எவ்ளோ நேரம்தான் ஆகுமோ இந்த பஸ் வந்து தொலைய’ என கடுப்பானான்.
இந்த இரு மாதங்களாக அவர்கள் ஒன்றும் அத்தனை வசதியாக வாழ்ந்து விடவில்லை. இருவருக்குமே சம்பளம் குறைவுதான்.
இருந்தாலும் நிலைமை புரிந்து சிக்கனமாக செலவு செய்து நிறைவாகவே நாட்களை நகர்த்தினர்.
இத்தனை நாட்களாக பேருந்தில் செல்லும்போது இயல்பாக இருந்தது. ஆனால் இன்று?
குறைந்தபட்சம் தன் நண்பனின் பைக்கை இரவல் வாங்கியாவது வந்திருக்கலாமென நொந்து கொண்டவன் இன்று அவசரத்திற்கு செல்ல சொந்தமாக பைக் கூட தன்னிடம் இல்லையென நினைத்து வருந்தினான்.
எப்படியாச்சும் ஒரு செகண்ட் ஹாண்ட் பைக்காவது வாங்கவேண்டுமென முடிவு செய்தவன் பேருந்து வருகிறதாவென பார்க்க அது மேலும் அவன் கோபத்தை கிளராமல் வந்துவிட்டது.
அதில் ஏறி மருத்துவமனை நோக்கி பயணம் செய்தனர். கூட்டம் சற்று குறைவாகவே இருக்க அருகருகே ஒரு இருக்கையில் அமர்ந்தனர்.
அன்றாடம் வேலைக்குப் போகும் நாட்களில் நிற்பதற்கே இடம் கிடைக்காது.
அவன் தோளில் அவள் சோர்வால் சாய்ந்து கொள்ள, அவனும் அவள் தலையை அன்பாக வருடினான்.
மருத்துவமனையில்
“ஃபுட் பாய்சன்” எனக்கூறி
“என்ன சாப்பிடீங்க காலையில?” என்றதும்,
“நைட் வச்ச சாதம் சாப்பிட்டேன்” என அவள் பதில் கூற அவன் முறைத்த முறைப்பில் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
அது போல பழைய சாதம் சாப்பிட்டால் ஏனோ அவளுக்கு அவ்வளவாக ஒத்துக்கொள்வதுதில்லை.
அதனால் அதுபோல சாப்பிட விடமாட்டான்.
ஆனால் அவள் ‘அது வீணாகிவிடும்’ என்பாள்.
‘சாப்பாடு வீணாகிறது என சேராததை உண்டு வயிற்றை வீணாக்காதே. அளவா வெச்சி பழகு’ என்பான்.
‘பழைய சாதம் உடம்பிற்கு நன்று’
என கூறி சமாளிப்பாள்.
எப்போதாவது இப்படி அவனறியாமல் சாப்பிடுவதுமுண்டு.
இன்று அவனிடம் பசிக்கவில்லை அது இதுவென கூறி சாப்பாட்டை தவிர்த்தவள் அவன் புறப்படும்போது அறியாமல் சாப்பிட்டாள்.
சாப்பிடாததற்கு அல்சர் மாதிரி வலிக்குதோ என்னவோ ஏதோவென்று அவன் நினைக்க அவள் பதிலில் எப்படி அவனுக்கு கோபம் வராமல் இருக்கும்.
ஊசி ஒன்று போட வேண்டுமென கூற அதைக்கேட்டு அவள் அதிர்ச்சியடைந்ததை பார்த்து சிரிப்பு எட்டிபார்த்தாலும் அவள் உடல்நிலையில் கவனமில்லாமல் இருப்பது அவனுக்கு கோபத்தைக் கொடுக்க அவன் முறைத்ததில் உதட்டை பிலுக்கிக்கொண்டு ஊசியை போட்டுக்கொண்டாள்.
“இன்று சூடான கஞ்சி சாப்பிடுங்க. சோர்வா இருந்தா உப்பு சர்க்கரை கரைசல் குடிங்க. மாத்திரை போட்டுக்கோங்க” என மருத்துவர் கூற ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு கிளம்பினர்.
******
கிளம்பியதிலிருந்து அவளிடம் அவன் பேசவேயில்லை. எவ்வளவு அப்பாவித்தானமாக முகத்தை வைத்துக்கொண்டாலும் அவன் பாட்டிற்கு அவளைக் கண்டுகொள்ளாமல் முன்னே நடந்தான்.
அவர்கள் வீட்டை அடையவே இன்னும் சற்று தூரம் தான் இருந்தது. பொறுத்து பார்த்தவள் இனிமேல் முடியாது என்பதுபோல,
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு
என பாட அதைக் கேட்டு எழுந்த சிரிப்பை அடக்கியவன் அவளை திரும்பி முறைக்க குறும்புடன் பார்த்துக் கொண்டிருந்தவள் முகம் சட்டென மாற சாலையின் ஓரமாக சென்று வாந்தி எடுத்தாள்.
அத்தனை நேரம் இருந்த கோபம்மெல்லாம் காணாமல்போக வேகமாக அவளிடம் நெருங்கியவன் அவள் தலையை ஆதரவாக பிடித்துக்கொள்ள காலையில் சாப்பிட்டது அனைத்தும் வெளிவந்துவிட்டது.
அவளிடம் தண்ணீர் போத்தலை திறந்து அவனே கொடுக்க வாய் கொப்பளித்தவளுக்கு சோர்வாக இருந்த போதும் இப்போது பரவலமாக இருந்தது.
பிரச்சனைக்கு காரணமானது வெளி வந்துவிட்டதாலோ என்னவோ?
முகத்திலும் தண்ணீர் அடுத்து கழுவியவள் அவனிடம் போத்தலை நீட்ட அப்போது தான் அவன் முகம் பார்த்தாள்.
சோகமே உருவாக அவன் நின்று கொண்டிருக்க அதை மாற்ற எண்ணியவள்,
“கட்டி பிடிச்சாவே பாப்பா வந்துடுமாங்க?”
என கேட்க முதலில் என்ன பேசுகிறாளென புரியாமல் விழித்தவன் பின் அவளைப்போல ஓங்கி அவள் தலையில் கொட்டினான்.
“ச்சோ சூர்யா வலிக்குது.” என தலையை தேய்த்து கொண்டே கூறவும்,
“போ மகா என்கிட்ட பேசாத” என கோபமாக கூறியவன் திரும்பிக்கொள்ள,
அவளுக்கு அது பள்ளியில் செல்லும் மழலையர்கள் மிட்டாய் வாங்கி தராததால் கோபித்துக் கொள்வது போல தோன்றியது.
அதையே கூற
“பேச்சை மாத்தாத”, என அவன் பல்லைக் கடிக்கவும், அவள் சரண்டரானாள்.
“சாரிங்க ஏதோ தெரியாம”
“உனக்கு உடம்பு சரி இல்லனா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” என வருத்தமாக கூறினான்.
“சரி சரி இனிமே எனக்கு சேராத எதையும். சாப்பிடமாட்டேன்” என சத்தியம் செய்யாத குறையாய் சொல்லிய பின்பே சற்று மலை இறங்கியவன் அவளின் முகத்தில் உள்ள சோர்வை போக்கும் பொருட்டு கேலியை கையில் எடுத்தான்.
“எனக்கு தெரிஞ்சி அந்த பழையசோற விட அந்த போண்டாதான் இதுக்கு காரணம்னு நெனைக்கிறேன். அதால இனிமே பலகாரம் செய்றேன்னு ரிஸ்க்லாம் எடுக்காத”, எனவும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனை முறைத்தவள் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு துரத்த அவனும் சிரித்துக்கொண்டே ஓடினான்.
ஆனால் சில எட்டுகளிலே களைப்பானவளுக்கு சற்று மயக்கம் வருவது போல இருக்க நின்றுவிட்டாள்.
அதை கவனித்தவன் அவளிடம் நெருங்கி அலேக்காக தன் மனைவியை தூக்கிக்கொண்டான்.
“ப்ச் சூர்யா இது ரோடு” என கூறினாலும் அவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டுக்கொண்டாள்.
“நாம என்ன தங்கமகன் தனுஷ் சமந்தா மாதிரி ரொமான்ஸ் சீன்னா பண்றோம்” என,
‘இல்லையா’ என்பது போல அவள் பார்க்கவும்,
“உனக்கு உண்மையிலேயே மயக்கம் வருது. நடக்க முடியலனு தெரியுது. அதாலதான் தூக்கினேன். இல்லாட்டா இவ்ளோ வெய்ட்டா இருக்க உன்ன தூக்க எனக்கு என்ன வேண்டுதலா” என சலித்துக் கொள்வது போல் பேசினாலும் அவளை ஆசையாகவே தூக்கினான்னென்பது இருவருக்குமே தெரியும்.
இருப்பினும் அவன் பேச்சில் சினம் கொண்டவள், “அவ்ளோ கஷ்டப்பட்டு என்ன தூக்க வேண்டாம் விடுங்க”
என முறுக்கிக்கொண்டாள்.
“கஷ்டமாலாம் இல்லை மகா.
எங்க வீட்ல அப்பப்போ சிலிண்டர், அரிசி மூட்டையலாம் தூக்கி பழக்கம் இருக்கு.”, என அவளை வம்பிழுத்துக்கொண்டே நடைபோட்டவன் அவளை வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு கதவை திறக்க அவனை முறைத்துக்கொண்டே அவள் உள்ளே செல்லவும், சிரித்தவாறே அவனும் பின்தொடர்ந்தான்.
மதிய நேரம் என்பதால் பெரிதாக அந்த நகரத்தில் ஆள்நடமாட்டம் இல்லை. இருந்திருந்தாலும் அவன் அதை பெரிதாக எண்ணியிருக்கமாட்டான். அவன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. இதில் அவன் உதவுவது பற்றி யார் என்ன நினைத்தால் அவனுக்கு என்ன!
ஆனால் அவர்களிடையே நடந்த பேச்சுக்கள் புரியாவிட்டாலும் அவள் வாந்தி எடுக்கும்போது தலையை ஆதரவாக பிடித்துக்கொண்டது, சோர்வாக இருந்தவளை எதையோ கூறி ஓட வைத்தது, மயக்கம் வருவது போல தடுமாறியவளை அக்கறையாக தூக்கிக் கொண்டதென அனைத்தையும் இரு கண்கள் பார்த்ததை இருவருமே அறியவில்லை.
ஓய்வாக அவள் படுத்துக்கொள்ள முகம் கழுவியவன் சில நிமிடத்தில் அரிசியை கஞ்சிக்காக ஊறவைத்தான்.
பின் கஞ்சி காய்ச்சியவன் அவளை எழுப்ப ‘வேண்டாம்’ என மறுத்தவளை கெஞ்சி கொஞ்சி குடிக்க வைத்து விட்டு , அரைமணி நேரத்திற்கு பின் மாத்திரை முழுங்க வைத்துவிட்டு அவளருகே சென்று அவளை மென்மையாக அணைத்தவாரு படுத்துக்கொண்டான்.
அவன் அக்கறையிலும், அணைப்பிலும் நெகிழ்ந்தவள் சுகமாக உறங்கிவிட்டாள்.
தொடரும்……