உனக்காக ஏதும் செய்வேன் – 14

1646358406084-ab706956

அத்தியாயம் – 14

 

 

 

பொதுவாக வெளியே வேலை விஷயமாக சென்றால், அகத்தியனுக்கு ஒரு டீ குடித்தே ஆகவேண்டும். பொதுவாக காபி குடிப்பவன், ஏனோ வெளியே சென்றாள் டீ தான் குடிப்பான். 

 

அன்றும் அதுபோல ஒரு விசாரணைக்காக வந்தவன், தெரிந்த டீக்கடையின் முன் பைக்கை நிறுத்தினான்.

 

அங்கிருந்தவர்கள் அவன் காக்கி உடையை பார்த்து சற்று மிரண்டாலும், அவனை பற்றி தெரிந்தவர்கள் அவனை மரியாதையாக நோக்கினர்.

 

அவர்கள் பார்வையில் உள்ள மரியாதையை உணர்ந்தவன், கம்பீரமாக அதேசமயம் அமைதியாகவும் நடந்து வந்து, “ஒரு டீ ண்ணா ” என்றான்.

 

கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே அந்த டீக்கடைக்காரரை தெரியும். ஆதலால், ‘அண்ணா’ என்ற அழைத்து பழக்கம். 

 

“எப்படி இருக்கீங்க தம்பி?

இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு?

வீட்டுக்காரம்மா, அப்பா லாம் சௌக்கியமா?”

 

“நல்லாருக்கேன் ண்ணா. வீட்ல எல்லாரும் சுகம்தான்” என புன்சிரிப்புடன் அவர் பாஷையில் கூறிவிட்டு, பதில் விசாரிப்பு செய்தபின், அவர் கொடுத்த டீயை குடிக்க ஆம்பித்தான்.

 

அப்போது சில நிமிடங்களில் அந்த சாலை வழியே ஒரு கே.டி.எம் (KTM) பைக் வேகமாக வர, அந்தசமயம் வயதான பெண்மணி ஒருவர் மெதுவாக சாலையை கடந்து கொண்டிருந்தார்.

 

பைக் சத்தத்தை கேட்டு அவர் விரைந்து நடக்க முற்பட்டும், எதிரே வருபவரை கண்டு பைக்கில் உள்ளவன் வேகத்தை குறைக்க முயன்றும், முடியாமல் போக, பைக் அவரை இடித்துவிட்டது.

 

அதிர்ச்சியிலும் பயத்திலும் இடித்ததால் ஏற்பட்ட வலியிலும், அவர் கத்திக்கொண்டே மயக்கம் அடைந்தார்.

 

அதைக்கண்ட பைக்காரன் முதலில் பயத்தில் வண்டியின் வேகத்தை அதிகரிக்க, பின் மனது கேளாமல் வேகத்தை குறைந்து விட்டு திரும்பி பார்க்க, அனைவரும் அவனை கண்டபடி திட்டினர்.

 

‘ஏன்டா அறிவில்ல?’

 

‘எதுக்கு தான் இவ்ளோ வேகமா போறானுங்களோ!’

 

‘பாக்க பணக்கார பையன் மாதிரி தெரியுறான். எல்லாம் பணத்திமிரு’

 

‘சாவறதா இருந்தா தனியா போக வேண்டியது தான. ஏன் மத்தவங்க உசுர வாங்கறதுக்குனே வரீங்க.’

 

அப்படி இப்படி என்ற ஏச்சுக்களை கேட்டு மனது காயம்பட்டது. அந்த பெண்மணிக்கு ஏதும் ஆகி விடுமா என்றும் பயம் அதிகரிக்க, நம்மை அடித்து விடுவார்களோ என்ற பீதியில், பைக்கை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி மெதுவாக வந்தவன், சற்று தொலைவில் நின்று பார்த்தான்.

 

டீக்கடை எதிரில் சில நிமிடத்தில் நடந்த நிகழ்வை கண்ட அகத்தியன் வேகமாக அங்கு வந்தான். பலர் என்னாயிற்று என்று பேசிக்கொண்டும், அந்த பெண்மணியை எழுப்பிக்கொண்டும் அவனை திட்டி கொண்டும் இருந்தனரே ஒழிய, ஒருவரும் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்த பாடில்லை. 

 

ஆம்புலன்ஸ்க்கு அழைத்து விஷயத்தை கூறியவன், அந்த பெண்மணியை பார்க்க, சிலர் தண்ணீர் தெளித்ததில் மயக்கம் கலைந்தவர் சற்று பரவலாமாக இருந்தார்.  

 

அந்த பையன் பக்கம் திரும்ப, சிலர் அவன் சட்டை காலரை பிடித்து மிரட்டி கொண்டிருந்தனர். அவன் அழுதவாரு கெஞ்சிக்கொண்டிருந்தான்.

 

அவன் முகமே கூறியது அவன் வசதியானவனென்றும், சிறுவனென்றும். மிஞ்சி போனால் பதினேழு வயதிருக்கும் என பெருமூச்சு விட்டவன் அங்கு விரைந்து சென்று அவனை விட சொன்னான்.

 

“சார் இவனலாம் ரெண்டு மிதி மிதிச்சாதான் இனிமே இப்படி பண்ண மாட்டான்.” என அங்கிருந்தவர்கள் பொங்கினர்.

 

அவர்களிடம் இவன் அமைதியாக இருக்கும் படி கூறவும், “என்ன சார் பையன் பணக்காரனா இருக்கானு சப்போர்ட் பண்றீங்களா?போலீஸ்காரர் தான” என அவனையும் திட்டினர்.

 

அங்கிருந்த சிலர் அதை ஆமோதிப்பது போலவும், சிலர் ‘எதும் காரணம் இருக்கும் இவர் அப்படி இல்லை’ எனவும் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க,

 

ரௌத்திரமாக அவர்களை ஒரு பார்வை பார்த்தவன், “இங்க பாருங்க சார் இப்படி நின்னு பேசிட்டு இருக்கறதால ஒன்னும் ஆக போறதில்ல. அவங்க வீட்டுல இன்பார்ம் பண்ணிட்டு, முடிஞ்சா ஹாஸ்பிடலுக்கு அந்த அம்மா கூட யாரும் துணையா போங்க.

 

அப்புறம் இவன் பண்ண தப்புக்கு என்ன பண்ணனும்னு நீங்க சொல்லி நான் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்ல. என் வேலைய எப்படி பாக்கணும்னு எனக்கு தெரியும் ” என அமைதியாக ஆம்பித்தவன், இறுதி வசனத்தை அழுத்தமாக கூற, அவனிடம் வாக்குவாதம் செய்தவர்கள் வாய் மூடிக்கொண்டது.

 

அதற்கு காரணம் அவன் முகம். ‘இதுக்கு மேல பேசின அது உனக்கு நல்லதில்ல’ என்ற அவன் பாவனையே.

 

ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு செல்ல, அந்த பையனை அவன் பெற்றோருக்கு அழைத்து காவல் நிலையம் வரச் சொல்லி தகவல் கூறியவன், அவனை கூட்டிச் சென்றான்.

 

 

*******

 

 

தகவல் அறிந்தவர்கள் அடித்து பிடித்து ஓடி வந்தனர். உள்ளே அவர்கள் மகன் அங்கு உட்கார்ந்திருந்ததை பார்த்து அவன் அம்மா அழ அப்பாவோ, “சார் என் பையன் எதும் தப்பு பண்ணிருக்க மாட்டான் விட்ருங்க.” என கெஞ்சினார்.

 

என்னதான் அவனது அப்பா ஒரு பிஸ்னஸ் மேனாக இருந்தாலும் நேர்மையானவர். ஆதலாலே தன் செல்வாக்கை உபயோகம் செய்யாமல், அதேசமயம் பையன் மீது உள்ள அன்பால் இவ்வாறு கெஞ்சினார்.

 

மேலும் அவருக்குமே அகத்தியணை பற்றி தெரியும். ஆதலால் மரியாதையாக பேசினார்.

 

தன் பெற்றோர் தன்னால்தான் இப்படி காவல் நிலையம் வந்து கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர அவனுக்கு அவன் மீதே கோபமாக வந்தது.

 

அவன் ஒன்றும் அத்தனை மோசமான பையனல்ல. குணத்திலும், படிப்பிலும் சிறந்தவன் தான். சூர்யா வேலை செய்யும் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக உள்ளான்.

 

என்னதான் நல்ல பையன் எனினும் வயசு சில விஷயங்களை செய்ய சொல்கிறதல்லவா!

 

பெற்றோர் எவ்ளோ எடுத்து கூறியும் கேட்காதவன், தன் நண்பர்கள் போல தனக்கும் அந்த பைக் கண்டிப்பாக வேண்டும் என அடம்பிடித்து அந்த பைக்கை வாங்கினான்.

 

என்னதான் அந்த பைக்கை வாங்கிவிட்ட போதும், பெற்றோர் கூறியது போல முதலில் மெதுவாகவே டிரைவ் செய்தான்.

 

அதனையறிந்த அவன் நண்பர்கள் அவனை கிண்டல் செய்ய, அதன் காரணமாக சிலநாட்களாக வேகமாக ஓட்ட பழகினான்.

 

காலேஜ் கேட்டுக்குள் நுழையும்போதே அவன் வேகத்தை உணர்ந்த அவன் நண்பர்கள் அவனை புகழ, அதை கெத்து என்று நினைத்தவன் இதை வழக்கமாக்கினான்.

 

என்னதான் வேகமாக வந்தபோதும், கவனமாகவே வருவான். இன்று அந்த அம்மா சற்று மெதுவாக வர, இவன் வளைவில் இருந்து வரும்போது அவரை நெருங்கியிருந்தான்.

 

என்ன முயன்றும் பைக்கை நிறுத்தமுடியாமல் போக, அவரை ரொம்ப மோசமாக இல்லையென்றாலும், கொஞ்சம் நன்றாக இடித்துவிட்டான்.

 

அதுவே அவனுக்கு பயத்தை கிளப்பியிருக்க, அங்கு கூட்டம் கூடவும் தன்னை அடித்து விடுவார்களோ என்று பயந்தாலும், தயங்கியவாரு நின்று கொண்டிருந்தான்.

 

அவர்கள் சட்டையை பிடித்து திட்ட ஆரம்பிக்க அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அப்போது அகத்தியன் அங்கு வரவும் அவனுக்கு அத்தனை பயம் வந்தது.

 

ஏனெனில் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நேர்மையானவர் என கேள்விபட்டுள்ளான்.

 

அதனால்,

‘அவர் தன்னை அடித்து விடுவாரோ?’

‘தன்னை ஜெயிலில் அடைத்து விடுவாரோ?’

‘நியூஸ் பேப்பரில் நம் புகைப்படம் வந்துவிடுமோ?’

‘இதற்கு பின் எப்படி நான் வெளியில் செல்வேன்?’

‘எப்படி தன் பெற்றோர் முகத்தில் விழிப்பேன்?’

என அச்சம் கொண்டவன் அவன் பெற்றோருக்கு அழைத்து ஸ்டேஷன் வரும்படி கூறி, அவனை கூட்டி செல்லவும், உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டு அங்கு வந்தான்.

 

அங்கு உட்கார்ந்திருந்தவனுக்கு தவறு செய்துவிட்டு இருப்பது அவமானமாக இருக்க, அவன் பெற்றோர் வந்து கெஞ்சவும் ரொம்ப கஷ்டமாக இருந்தது.

 

அவன் நினைத்தது போல நடந்திருக்காவிட்டாலும், அந்த பெண்மணியை இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றிருந்தாளோ, அவர்கள் திட்டும்போது ‘தான் யார் தன் தந்தை யார்’ என சீன் போட்டு எதும் பேசியிருந்தாலோ, அகத்தியனின் வலிமை மிக்க கரங்களால் அவன் கன்னம் பழுத்திருக்கும் என்பது உண்மையே.

 

அந்த கூட்டத்தை நெருங்கும் போதே அந்த பையனின் முகம் பார்த்தே தெரியாமல் செய்துவிட்டான் என உணர்ந்தே அமைதியாக கூட்டத்தை கலைத்தான். ஆனாலும் அவன் செய்தது தவறு தானே. ஆதலால் இதுபோல அவன் மீண்டும் செய்ய கூடாது என்று அவனுக்கு நன்கு புரியவேண்டும் என்றே அவனை அழைத்துக்கொண்டு அவன் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தான்.

 

“தப்பு பண்ணாமதான் உங்க பையன கூட்டிட்டு வந்தனா சார்? எனக்கு என்ன வேற வேலை இல்லைனு நெனச்சீங்களா?” என நிதானமாக கேட்க,

 

அதில் பதறியவர், “அப்படி சொல்லல சார். அவன் சின்ன பையன். தெரியாம பண்ணிருப்பான். அவனுக்காக என்னை மன்னிச்சுருங்க” என,

 

“ஓ…. சின்ன பையன். சரி சின்ன பையனுக்கு எத்தனை வயசு சார்?”

 

“அது…. பதினேழு.” என தயங்கிவாரு கூறினார்.

 

“ம்ம்…. அப்பறோம் ஏன் சார் அவனுக்கு கியர் பைக் வாங்கி கொடுத்தீங்க? பதினெட்டு வயசுல தான் லைசென்ஸ் வாங்க முடியும். அதுக்கு கம்மி வயசிருக்கவங்க கியர் பைக்க ஓட்றதே சட்டப்படி தப்பு. இதுலாம் தெரியுமா தெரியாத?” என கேட்க, அவர் தலை குனிந்தார்.

 

இதுவெல்லாம் அவருக்கு தெரியாதா என்ன! ஆனால் அவன் ரொம்ப அடம்பிடிக்கவே வாங்கி கொடுத்தார்.

 

அவன் தந்தை தலை குனிந்து நிற்பதை பார்த்து கண்ணீர் சிந்தியவன், அதற்குமேல் பொறுக்காது,

“சார் அப்பா மேல தப்பில்ல. நான் தான் ரொம்ப அடம்பிடிச்சேன் அதான் வாங்கி கொடுத்தாங்க. என் மேலதான் தப்பு என்ன மன்னிச்சிடுங்க. நான் தான தப்பு பண்ணேன், எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பரவலாம் அவங்கள விட்ருங்க” என தலை குனிந்து கைக்கூப்பி வேண்ட, அவன் பெற்றோரும் அவனை வேதனையாக நோக்கினர். அகத்தியனுக்கு அதைக்கண்டு சற்று வருத்தமாக இருந்த போதும், அவன் உதடுகள் ஒரு மர்மமான புன்னகையை வெளிப்படுத்தின.

 

 

அவன் எதிர்பார்த்தது இதை தானே. அவன் தவறை ஒத்து கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறு செய்த போதும் அங்கிருந்து ஓடாமல், அடிபட்டவருக்கு என்ன ஆயிற்றோ என அவன் பார்வையும், அவனை திட்டும்போது அழுததும், அவன் பெற்றோரை அழைக்க சொன்ன போது கெஞ்சியதும், இப்போது அவன் தந்தை திட்டு வாங்குவதை பொறுக்காமல் தவறை ஒப்புக்கொண்டு தண்டனை தருமாறு கேட்டதும் என அவன் குணத்தை புரிந்து கொண்டவன், சட்டென எழுந்து சென்று அவன் தாடையை பிடித்து தலையை நிமிர்த்தியவன், அவன் கையை கிழ் இறக்கிவிட்டான்.

 

“உன் பேர் என்ன?”

 

“தருண்”

 

“ஓகே… தருண் ஏன் இப்போ முகத்தை இப்படி வச்சிருக்க?” என கேட்க, ‘வேற எப்படி சார் வைக்க’ என்பது போல அவன் பாவமாக பார்க்கவும் சிரித்தவன்,

 

அவன் தோளில் தட்டி, “சரி நானே சொல்றேன். தப்பு பண்ணிருக்க. அதால கில்ட்டா பீல் பண்ற ரைட்டா?”

 

‘ஆமா’ என்பது போல தலையசைத்தான்.

 

“தப்பு பண்றோம் னு தெரிஞ்சு பண்ணியா இல்லை தெரியாம பண்ணியா?” என வினவ,

 

தெரிந்து தானே செய்தான். இத்தனை வேகமாக செல்லக் கூடாது என அவனுக்கு தான் நன்றாக தெரியுமே பின் என்ன பதில் கூறமுடியும். அவன் பதில் கூறாமல் அமைதியாக இருக்க,

 

அகத்தியனே தொடர்ந்தான். “என்னால உன்ன புரிஞ்சிக்க முடியுது. நானும் உன் வயச தாண்டிதான் வந்துருக்கேன். இப்போ இப்படிலாம் தோணத்தான் செய்யும். நீ பைக் வாங்க நினைச்சதோ, டிரைவ் பண்ண நினைச்சதோ தப்பில்ல. ஆனா ஹெல்மெட் போடாம போறது. வேகமா போனா தான் கெத்துனு நெனச்சிட்டு இப்படி ரிஸ்க் எடுக்கறது. அதால நீ மட்டும் இல்லை உன்ன சுத்தி இருக்கவங்களும் பாதிக்கப்படுவாங்க. அந்த அம்மா மாதிரி ” என அவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.

 

“இதுவா கெத்து? அப்படி என்ன உயிர பணைய வச்சி கெத்து வேண்டி இருக்கு? உனக்கு இப்படி வேகமா போறது பிடிச்சிருக்கு. ரேஸ் பண்ணனும் இந்த மாதிரினா கூட அதுக்குனு ஒரு ஏஜ் இருக்கு. ப்ரொப்பர் ட்ரைனிங் இருக்கு. இனிமே இப்படி ரோட்டில வித்தை காமிக்க கூடாது. புரிஞ்சுதா?” என வினவ, வேகமாக தலையை ஆட்டினான்.

 

என்னதான் அவனை இங்குவரை அழைத்துவந்த போதும் , அங்கு அவனை அடிவாங்காமல் காத்தவன், நேர்மையானவன் என்று அவனுக்கு அகத்தியன் மீது மரியாதை இருந்தது.

 

“சரியா இருக்கறது தான் எப்பவும் கெத்து. அத மொதல்ல தெரிஞ்சிக்கோ. மத்தவங்க தப்பு பண்றாங்க அதால அந்த தப்ப நாமளும் சிறப்பா பண்ணிட்டா அது கெத்து ஆகாது.” என அறிவுரைகளை அள்ளி வீச, ஏனோ அவன் மனம் அதை ஏற்றது. தருண் கண்களுக்கு அகத்தியன் ஒரு ஹீரோ போல தான் தோன்றினான்.

 

அவன் பெற்றோரிடம் ‘அவன் தவறை உணரவைக்கவே அழைத்தேன் என்றும், சற்று கடுமையாக பேசினால்தான் அவன் தவறை உணருவான் என்றே அப்டி பேசினேன்’ என்று மன்னிப்பாக கூற,

 

“அது பரவலாம் சார். நான் எத்தனை வாட்டி சொல்லி கேக்காதவன். நீங்க சொல்லும்போது தலைய தலைய ஆட்டுறான். அவன் நல்லதுக்கு தான சொன்னீங்க. ரொம்ப நன்றி சார். இனிமே இப்படி நடக்காது.” என்று கூறியவர்கள், ‘மருத்துவனை சென்று, அந்த பெண்மணியை போய் பார்த்து மன்னிப்பு கேட்டு விட்டே செல்வோம்’ என அவனை அழைத்துக்கொண்டு சென்றனர்.

 

 

*******

 

 

“இப்போ என்ன சொல்ல வர?” என அவள் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க,

 

“நான் என்ன சொல்ல வந்தேன். இங்க பாரு உன் அண்ணாவ சமாதானம் பண்றது அவ்ளோ ஈசியில்லை. டக்குனு ரிசல்ட் எதிர்பாக்குற?பொறுமையா இரு. இப்போதான பேசிருக்கோம்” என அவன் பொறுமையாக கூற மனதுக்குள் எடுத்த முடிவுகளையெல்லாம் காற்றில் விட்டவள், உரிமையாக அவனிடம் கோபம் கொண்டாள்.

 

“எல்லாம் உன் தங்கச்சியால தான். எத்தனை பிரச்சனைய இழுத்து விட்டுட்டா. சரியான விஷபூச்சி.” என கத்த,

 

அதில் கடுப்பானவன், “இங்க பாரு ப்ரீத்தி அவ பண்ணது தப்புனு எனக்கும் தெரியும். அதால தான் உனக்கு ஹெல்ப் பண்றேன். சும்மா சும்மா அவள திட்டாத. உனக்கு உன் அண்ணன் எப்படி முக்கியமோ எனக்கு என் தங்கச்சி அப்படி முக்கியம் தான். அவ தப்பு பண்ணா தான். நான் இல்லனு சொல்லல. அத எப்படி சரி பண்ணனும் னு எனக்கு தெரியும்.” என கோபமாக பதில் பேசினான்.

 

ஏனோ ‘உன் அண்ணா தப்பு பண்ணலயா?’ என கேட்க வரவில்லை. அவள் ஹர்ட் ஆவாள் என்றும் அதை கூற அவனுக்குமே பிடிக்கவில்லை என்பதாலும் விடுவிட்டான். ஆனால் இதை கேட்டே அவள் கண்கள் கலங்கியதை ஆதி அறியாமல் போனான்.

 

இதுபோல அவன் அவளிடம் சத்தமிட்டதில்லை. எப்போதும் கனிவாகவே பேசுபவன் திட்டவும் மௌனமானவள் மனதில், ‘இப்போவே இப்படி பேசுறான். நம்மை மனசுல இருக்கறதலாம் சொன்னா அப்போ இன்னும் ஓவரா பண்ணுவான். ஓகே சொல்லிட்டா பசங்க எங்க போய்ட போறானு ஈஸியா நினைப்பாங்கனு கீதா (வகுப்பு தோழி) சொன்னாளே.

 

தப்பு அவன் தங்கச்சி மேல் இருந்தும், எப்படி சப்போர்ட் பண்ணி பேசறான். அவ ஒழுங்கா இருந்திருந்தால் நான் ஏன் திட்ட போறேன்!’ என அவன் தங்கையையும் சேர்த்து வறுத்தெடுக்க, அவள் அமைதியைக் கொண்டு கத்திட்டோம் கோச்சுகிட்டா என உணர்ந்தவன்,

 

“இங்க பாரு ப்ரீ. நீ நெனைக்குற அளவு என் தங்கச்சி கெட்டவ இல்லை.சின்ன பொண்ணு…”

 

கோபத்தில் அவன் அழைப்பை கவனிக்காதவள் அவன் பேச்சைக் கேட்டு, ‘ம்ம்க்கும்’ என மனதுக்குள் நொடித்துகொண்டாள்.

 

“சரி… அத விடு. சாரி. நான் ஏதோ கோபத்துல…” என அவன் ஆரம்பிக்க,

 

“உன் சாரிய கொண்டு போய் குப்பையில போடு. உன் ஹெல்ப் ஒன்னும் எனக்கு வேணாம். நானே பாத்துக்கறேன். எனக்கு இனிமே கால் பண்ணாத. இனிமே உன்ன நேர்ல பாத்தா கூட சாதாரணமா போவேன். என்கிட்ட பேசுற வேலை வெச்சுக்காத. ” என படபடவென பொரிந்தவள், அவன் கெஞ்ச கெஞ்ச கட் செய்தாள்.

 

‘வச்சுட்டா… போன் அஹ் வெச்சுட்டா. இந்த பொண்ணுங்களே இப்படி தான். திட்டனா அமைதியா இருக்க வேண்டியது. சமாதனம் பண்ண பேசினா காச் மூச் னு கத்த வேண்டியது. நேர்ல பாத்தா இனிமே சாதாரணமா போவாளாம்! இதுக்கு முன்ன மட்டும் ஓடிவந்து மாமா மாமா னு பேசிட்டா. இப்படி பண்ணுவேன் னு வேற சொல்றா. ஏற்கனவே அப்டி தான டி பண்ணுவ!’ என பெருமூச்சு விட்டவன், போனை தூக்கி மேசையில் போட்டுவிட்டு, இலகுவனா உடைக்கு மாறி படுத்து விட்டான்.

 

நைட் ஷிப்ட் முடிந்து வேறொரு வேலையிருக்க, ஆதலால் வரும்போது அப்படியே சூர்யா விடம் பேசினான். அங்கு அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்ற கடுப்பில் இருந்தவன், வீடு வந்ததும் ப்ரீத்தி க்கு அழைத்து நடந்ததை கூற, அவள் இப்படி சொல்லவும் கோபம் வந்துவிட்டது.

 

என்னதான் நியாயம் எது என்று புரிந்து அதன் பக்கம் நின்றாலும், அவன் தங்கை ஆர்த்தி தவறு செய்தாள் என்பது உண்மையாகவே இருந்தாலும், அவனுக்குமே அவள் மீது கோபம் இருந்தாலுமே, இப்படி ப்ரீத்தி அவளை திட்டும்போது சினம் வர திட்டிவிட்டான்.

 

ஆனாலும் திட்டி விட்டோமே என சமாதானமாக பேசினால், அவள் இப்படி கூறி கட் செய்ய, ‘போடி எனக்கு தூக்கம் வருது. உனக்காக நைட் ஷிப்ட் முடிச்சிட்டு போய் உங்க அண்ணா கிட்ட பேசிட்டு வந்தேன். அத புரிஞ்சிக்காம சண்டைக்கு வர. நௌ ஐ அம் ஸோ டயர்ட். நான் உன்னை அப்பறோம் சமாதானம் பண்றேன்’ என மனசுக்குள் நினைத்தவன், களைப்பில் படுத்ததும் உறங்கி விட்டான்.

 

தான் இப்படி சொன்னால் அவன் மறுபடியும் அழைத்து சமாதானம் செய்வான் என நினைத்தவளுக்கு ஏமாற்றம் கிடைக்க, ‘கால் பண்ணாதனு கட் பண்ணதும் உடனே போய்ட்டான். மறுபடி பண்ணல. கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணா நான் கோபம் குறஞ்சு சாதாரணமா பேசவோம்னு நெனக்குறான் போல. இருக்கட்டும் மறுபடி போன் பண்ணு உண்மையா எடுக்க மாட்டேன்.’ என கறுவியவள் பிரேக் முடிந்து பெல் அடிக்க, போன் ஐ சுவிட்ச் ஆப் செய்து வேகமாக பையினுள் வைத்தாள்.

 

பொதுவாக கல்லூரிக்கு போன் எடுத்து வரமாட்டாள். இன்று அவன் காலையில் சூர்யாவிடம் பேச போவதாக மெசேஜ் அனுப்பியிருந்ததால் விபரம் கேட்க எடுத்து வந்தாள்.

 

அவனிடம் பேசிவிட்டு வரும் தன் அண்ணனிடம் எதும் மாற்றம் வந்திருக்கிறதா என பார்க்க, அப்படி ஒன்றும் அவளுக்கு மாற்றம் ஏற்பட்டதாக தோன்றவில்லை. அதனாலே இண்டெர்வெலில் அழைத்து கேட்க, அவன் கூறிய விடயம் உவப்பானதாக இல்லாததால் கடுப்பானவள் திட்டிவிட்டாள்.

 

ஆசிரியர் வந்து வகுப்புகள் தொடங்க, நிகழ்வுக்கு வந்தவள் கவனமும் அங்கு சென்றது.

 

 

“சண்டை இல்லாத காதல் என்பது சக்கரை இல்லாத ஸ்வீட் மாதிரி. நல்லாருக்காது.”

 

பொன்மொழி பை மீ…

 

 

 

 

 

தொடரும்…..