உனக்காக ஏதும் செய்வேன் – 15.1

1646358406084-d3536ae4

அத்தியாயம் – 15.1

 

 

 

செவ்வானமாக காட்சியளித்த அந்த அழகிய சாயங்கால நேரத்தில், கூட்டிற்கு திரும்பும் பறவைகள் போல, பலர் வேலையிலிருந்து இல்லம் நோக்கி பயணித்தனர்.

 

வீடு வந்த சூர்யா தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஹாலிற்கு வந்து மகாவை அழைத்தான்.

 

அவள் என்ன விஷயம் என்பது போல வந்து நிற்க, எதிரில் இருந்த நாற்காலியில் அமர சொன்னவன், ப்ரீத்தி அவன் வேலை செய்யும் கல்லூரியில் சேர்ந்தது, அவனிடம் பேசி பிரச்சனையை தீர்க்க நினைப்பது, இன்று காலை ஆதி பேசியது என அனைத்தையும் கூறினான்.

 

“அவ உங்கிட்ட பேசினா… மாக்ஸிமாம் அதுக்கு சான்ஸ் இல்லை. சப்போஸ் பேசினா, அவர் சொன்ன மாதிரி இதை விட்டுரும்மானு சொல்லணும்” என கூற தலையை ஆட்டினாள்.

 

அவன் பேசியதை கேட்டவளுக்கு அவளை ‘குறும்பானவள், சிறு பெண் என்று நினைத்தால் அண்ணன் மீது பாசம் கொண்டு இதையெல்லாம் செய்கிறாளா?’ என ஆச்சர்யமாக இருந்தது. வேறெதும் நினைக்கவில்லை. 

 

கீர்த்தியை பற்றியும் அவள் தப்பாக எதும் நினைத்ததில்லை. அமைதியான நல்ல பெண் என அவளிடம் பேசும்போது அறிந்திருந்தாள்.

 

ஆனால் அன்று மண்டபத்தில் நடந்த பிரச்சனையில் அவன் சித்தி, சித்தப்பா மீது ஏனோ அவளுக்கு அந்தளவு மதிப்பு தோன்றவில்லை.

 

அதுவும் சூர்யா கூறிய சில விஷயங்களைக் கேட்ட பின், அவன் சித்தியை ஒரு நாளாவது நறுக்கென நான்கு கேள்வி கேட்க வேண்டும் என மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள்.

 

எப்போதும் சிரித்துக்கொண்டு, தன்னிடம் வம்பிழுத்துக்கொண்டு, காதலாக தன்னை பார்த்துக்கொள்ளும் கணவனின் மனதில் உள்ள வலிகளை நன்றாகவே அறிந்திருந்தாள்.

 

அதனால்தானோ என்னவோ எந்த சூழ்நிலையிலும் யார் மறுப்பிலும் அவனை விட்டுக் கொடுக்க தோன்றவில்லை.

 

காதலனை விட்டு கொடுக்காமல் இருந்ததை சரி என நினைத்தவள், அவனுக்காக தன் குடும்பத்தை விட்டுக் கொடுத்ததை அத்தனை தவறாக நினைக்காமல் போனது ஏனோ?

 

“மகா…” என்ற அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள்,

 

“ம்ம்… சொல்லுங்க சூர்யா.” என, 

 

அவளை ஷாக்காக பார்த்தவன், “இப்போதானடி சொன்னேன். அப்போ முதல்ல இருந்தே மைண்ட் இங்க பேச்சுல இல்லை. மறுபடியும் சொல்லனுமா?” என்று சோர்வாக கூறியவன், மீண்டும் ஆரம்பிக்க,

 

உடனே, “இல்லையில்லை. நான் நீங்க சொன்னத கேட்டேன்.” என்றாள்.

 

‘அப்பாடா’ என நினைத்தவன், “நல்லது. நான் கூட மறுபடியும் சொல்லணுமோனு நெனச்சேன்” 

 

அவளுக்குமே அதே மனநிலை தான். பிரச்சனை சரியாக நினைத்தாலும் அதற்கு முயல தோன்றவில்லை.

 

அவன் கூறியதை கேட்டவளுக்கு ‘அவன் தங்கை தன் அண்ணனை குடும்பத்தோடு சேர்க்க நினைக்கிறாள். ஆனால் என்னை?தன் குடும்பத்தில் தன்னை உண்மையிலேயே மறந்து விட்டார்களா? அன்று சொன்னது போல இனிமே நான் யாரோவா?’ என நினைக்க சட்டென கண்கள் கலங்கின.

 

இந்த இரு மதங்களாக வீரப்பாக அவர்களை பற்றி பெரிதாக நினைக்காதவள் இன்று நினைத்தாள்.

 

அப்போதும் வீம்பிற்காகவே சூர்யா மறுக்கப்பட்டான் என அவளுக்கு தோன்றியது. அவனை மறுத்த காரணங்களை அப்படியல்ல என்று கூறி புரியவைக்க நினைத்த போது, அவள் அண்ணனும் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இதில் மண்டபத்தில் நடந்த பிரச்சனை வேறு!

 

அவள் முகம் சோகமாக மாறுவதையும், அவள் கண்கள் கலங்குவதையும் பார்த்த சூர்யாவிற்கு சில நொடிகளில் ஏன் என புரிந்தது.

 

‘இவ்ளோதான் உன் கோபமாடி?அன்னைக்கு பஸ் ஸ்டாப்ல அவனை பாத்துட்டு எனக்கு ஆறுதல் சொன்ன? ஆனா இப்போ நம்மள தேடி வரமாட்டாங்களானு பீல் பண்ற.’

 

‘இதுக்கு ஒருவகையில் நானும் தானே காரணம்’ என வருத்தம் கொண்டான்.

 

‘சில விஷயத்தை மட்டும் தப்பா நினைச்சுட்டு இருக்கா. அன்புன்றது வெளிப்படையா காட்டறது மட்டுமில்ல. அதையும் சீக்கிரம் புரிஞ்சிக்குவா’ என நினைத்தவன், அதற்குமேல் மகாவின் சோக முகத்தை காண இயலாமல் அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

 

 

 

******

 

 

“எதுக்கு இப்படி இருக்க மகா?”

 

“…”

 

“சொல்லுடி”

 

“…”

 

“ஏய் பொண்டாட்டி…”

 

“…”

 

‘ம்ஹும்…. ஒரு ரியாக்ஷனும் இல்லை’ என நினைத்தவன் இப்படி பேச ஆரம்பித்தான்.

 

“உன் அண்ணன் அப்பா யாரும் இதுபோல சமாதானம் பண்ணி வைக்க நினைக்கலனு வருத்தப்படுறியா மகா?” என நேரடியாக கேட்க,

 

அது தான் அவள் மனதில் உள்ளது என்ற போதிலும், ஒப்புக்கொள்ள மனமில்லாமல், ‘அப்படியெல்லாம் இல்லை’ என்பது போல முகத்தை திருப்பினாள்.

 

அதை கண்டுகொள்ளாதவன், குறும்பாகவும் காதலாகவும் அவளை பார்த்து, “இதுக்கு நான் ஒரு நல்ல ஐடியா சொல்றேன்.” என்றான்.

 

‘ஐடியாவா?’ என்பது போல புருவம் சுருக்கி பார்த்தவள் முகத்தில், அவன் கூறியதை கேட்ட பின் அதிர்ச்சியும், அளவுகடந்த நாணமும் ஒட்டிக்கொண்டது.

 

“அதான் பொதுவா படத்துல காட்டுவாங்களே வீட்டுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பொண்ணு கர்ப்பமா இருந்தா, குழந்தைய பார்த்தா மன்னிச்சுடுவாங்க. வீட்டுல ஏத்துக்குவாங்க.

 

அதால என்ன பண்றோம் சீக்கிரம் உன் அப்பாக்காக பேரனோ பேத்தியோ, உன் அண்ணாக்காக மருமகனோ மருமகளோ ரெடி பண்றோம் என்ன சொல்ற?” என குறுநகையோடு கேட்க,

 

தன் முகத்தில் படர்ந்த செம்மையை மறைக்க பாடுபட்டாலும் முடியாமல் அவன் கண்களுக்கு விருந்தாளிக்க, அவளின் முகச்சிவப்பை ரசித்து பார்த்தான்.

 

அவள் மனதில் இருந்த சோகம், வருத்தம் போன இடம் தெரியவில்லை.

 

உண்மையில் இருவர் மனதிலும் , அவர்களுக்கென ஒரு குழந்தை வரப்போகிறது என அறிந்த பின்னே தங்கள் வாழ்க்கையை துவங்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.

 

அவன் தன் மனநிலையை மாற்றவே இப்படி பேசுகிறான் என மகாவிற்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் வெட்கம் கொள்வதை தடுக்க இயலவில்லை.

 

அவளை ரசித்து கொண்டிருந்தவனின் உள்ளம் மேலும் அவளை சீண்டி பார்க்க சொல்ல, எழுந்து மெதுவாக அவளருகே வந்தான்.

 

அவன் வருவதை திகைப்பாக பார்த்தவள், ‘என்ன நம்ம கிட்ட வராரு?’ என திருத்திருவென முழித்தாள்.

 

அப்போது பார்த்து அந்த பக்கத்து வீட்டு பெண் கூப்பிட்ட சத்தம் கேட்க, அதுதான் சாக்கு என, “கூப்பிடறாங்க…” என்றவள் ஒரே ஓட்டமாக வெளியே சென்றுவிட்டாள்.

 

அவள் ஓடுவதைக் கண்டு அட்டகாசமான ஒரு சிரிப்பை உதிர்த்தவன், ‘ஆனாலும் சூர்யா நம்ம ரொமான்ஸ் சீன்ல யாராச்சும் டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காங்க’ என கடுப்பாக தன்னிடம் சொல்லிக்கொண்டு, ‘இது போதும்’ என நினைத்து தன் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.

 

 

******

 

 

அகத்தியன் அந்த அம்மாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்து விட்டு வீடு நோக்கி வந்தான். அவருக்கு காலில் அடிதான். லேசான எலும்பு முறிவு. அவர் கையில் வைத்திருந்த கணத்த பை அவர் காலை பலமான அடியிலிருந்து பாதுகாத்துவிட்டது.

 

வீட்டில் வாகனத்தை நிறுத்துவதற்காக வெளிய உள்ள ஒரு சின்ன ரூமில் பைக்கை நிறுத்தியவன் கண்கள் என்றுமில்லாமல் அங்கிருந்த ஸ்கூட்டியை நோக்கியது.

 

இன்று தருணை பார்த்ததும், அவன் ஆசையாக அந்த வண்டியை கேட்டான் என கூறியதும் அவனுக்கு வெகுநாட்களுக்கு பின் அவன் தங்கை நியாபகத்தை கொடுக்க, மெதுவாக அதன் அருகே வந்தவன், வண்டி மீது போர்த்தப்பட்டிருந்த தூசி படிந்திருந்த படுதாவை தூக்கி எரிந்துவிட்டு, அதனை மெதுவாக தொட்டு பார்த்தான்.

 

அவள் லைசென்ஸ் வாங்கும் வயதை அடைந்த பின், அவள் ஆசையாக கேட்ட, அவன் சம்பாத்தியத்தில் வாங்கி கொடுத்த ஸ்கூட்டி.

 

அதைக்கண்டு, “ஐ…. ஸ்கூட்டி” என அவள் துள்ளியதும், தன்னை வைத்து ஒரு ரவுண்டு அடிக்குமாறு கேட்டதற்கு மறுத்த போது அவள் முகம் எப்போதும் போல சுருங்கியதையும் நினைத்து பார்த்தான்.

 

அவள் ஏதாவது அவனிடம் கேட்டு மறுத்தான் என்றாள், முகத்தை சுருக்கி பார்ப்பவள் சோகமானாலும் அமைதியாக சென்றுவிடுவாள்.

 

ஆனால் ஒருமுறை மட்டும்… தான் மறுத்து கூறியதை பொருட்படுத்தாது தூக்கியெறிந்து சென்றுவிட்டாளே!

 

நடந்ததை நினைத்தவனுக்கு மகா மீது கோபத்தை விட வருத்தமே அதிகமாக இருந்தது. ஆனால் சூர்யா மீது மட்டும் அத்தனை கோபம், வெறுப்பு.

 

இருவர் மீதும் தவறு என்றே அவனுக்கு தோன்றவில்லை. அவனை பொறுத்தவரை அவன் தங்கையை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டான்.

 

அவன் மீது நல்ல எண்ணமும் இல்லையாதலால் நடந்தது அனைத்துக்கும் அவனே காரணம். அவன் தங்கை ஏதும் அறியாமல் அவனை காதலித்துவிட்டாள். அது ஒன்றே அவள் செய்த தவறு என நினைத்தான். நடந்ததை அறிந்தால்?

 

ஆனாலும் அவன் தங்கை மீது அளவுகடந்த வருத்தம் இருந்தது. அதனாலே சூர்யாவை திட்டவாவது நினைப்பவன், அவளை பற்றி யோசிக்கக்கூட செய்வதில்லை. ‘நன்றாக இருந்தால் சரி’ என்று மட்டும் நினைத்துக் கொள்வான்.

 

அன்று பஸ் ஸ்டாப்பில் பார்க்கும்போதும் அவளை பார்க்காமல், சூர்யாவை மட்டும் முறைத்து விட்டு சென்றுவிட்டான்.

 

விஷயமென்னவென்றால் அவன் தங்கையை இவ்வாறு நினைக்காமல் போக வைத்ததற்கு காரணமும் சூர்யா என்பான்!

 

‘முதற்கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவனுக்கு சூர்யா மீது இன்றுவரை நல்ல அபிப்பிராயம் மட்டும் தோன்றவில்லை. அதற்கு சந்தர்ப்பமும் அமையவில்லை. இனிமேல் அமையுமா?

 

சிலமுறை காரணமே இன்றி சிலரை வெறுப்போம். ஆனால் சில காரணங்களை பிடித்துக்கொண்டு அவன் அதை செய்தான்.

 

அந்த காரணங்கள் சரியா?

 

பார்வையாலே ஒருவரை எடை போட்டு எப்படிபட்டவர் என கண்டறியும் அந்த திறமையான போலீஸ்காரன், தங்கை பாசத்தால் எதையும் புரிந்து கொள்ள மாட்டேன் என அடம்பிடித்தான்.

 

நினைவுகளில் உலன்றவன் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, தயானந்தன் (அகத்தியன் அப்பா) நின்றிருந்தார்.

 

தந்தையை கண்டதும் எதையும் முகத்தில் காட்டாதவன், தலையசைத்து விட்டு வீட்டிற்குள் சென்றான்.

 

அவர் மனதில் சில எண்ணங்கள் இருந்தன. ஆனால் மகனிடம் இப்போது கூற அவருக்கு தோன்றவில்லை. 

 

அவரும் ஒருமுறை தன் மகளின் நினைவாய் அங்கிருக்கும் அந்த இருசக்கர வாகனத்தை பார்த்துவிட்டு பெருமூச்சோடு உள்ளே சென்று விட்டார்.