உனக்காக ஏதும் செய்வேன் – 15.2

1646358406084-d758c792

அத்தியாயம் – 15.2

 

 

 

மனதுக்குள் பல யோசனைகளோடு அறையை நோக்கி வந்தவன் செவிக்கு தன் மனைவி பேசும் குரல் கேட்க, அப்படியே நின்றான். அனைத்தும் அப்போதைக்கு பின் சென்றது.

 

‘மறுபடியும் போட்டோ கிட்ட பேசறாளா?’ என நினைத்தவன் கதவை மெதுவாக திறந்து எட்டி நோக்க, போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு நெயில் பாலிஷ் வைத்துக்கொண்டு இருந்தாள். அவன் பார்வை அவள் மீது மையலாக படிந்தது.

 

யாரென பார்க்காமல் அட்டென்ட் செய்துவிட்டு பேச ஆரம்பித்தாள், அவள் ‘ஹெலோ’ என பேச ஆரம்பிக்கும் போதே அவளவன் வந்ததை அறியாமல்.

 

“ஹெலோ…”

 

“…”

 

“ஹெலோ…” என்றவள் பதில் கிடைக்காமல் போக,

 

‘ப்ச்’ என சலித்தவாறு, “யாரு…?” என்றாள்,

 

இத்தனை நேரம் என்ன பேசுவது என தெரியாமல் மறுமுனையில் அமைதியாக இருந்தவள், யாரு என கேட்டதும் பொறிய ஆரம்பித்தாள்.

 

“ம்ம்… உன் தங்கச்சி. அதுக்குள்ள மறந்துட்ட? கல்யாணம் ஆகிடுச்சுல நானெல்லாம் ஞாபகம் இருப்பனா?” என அழுகுரலில் கத்தவும், சட்டென தன் கையிலிருந்ததை ஓரம் வைத்தவள் மொபைலை எடுத்து காதில் வைத்தாள்.

 

“ப்ரீத்தி… அப்படிலாம் இல்லடி.” என்றாள் கெஞ்சலாக,

 

திருமணம் முடிந்த பின் பெரிதாக அவள் தமக்கையிடம் பேசாத ப்ரீத்தி. அதற்கு காரணம் சில உண்டு. ஆனால் சிலநாட்களாக பேசாததற்கு காரணம் அன்று சூர்யா பற்றி கூறும்போது, கீர்த்தி மௌனம் காத்தது.

 

‘அதற்கு என்ன செய்ய?’ என்பது போல பதில் பேசவும், இவள் திட்ட பதிலுக்கு அவள் நடந்ததை சொல்லி காட்ட, ‘தன் எண்ணம் தமக்கையிடம் இல்லையா?’ என வருத்தம் கொண்டவளுக்கு அவள் நிலைமை புரிந்தாலும் தன் மாமன் மீது (அக்கா கணவன்) சிறிதாக கோபம் வந்தது. அவன் கோபம் தப்பில்லை என உணர்ந்தாலும் மண்டபத்தில் நடந்த விஷயத்தில் அவன் மீது கோபமும், வருத்தமும் இருக்கத்தான் செய்தது.

 

அவர் எதும் சினம் கொள்வாரோ என்று அஞ்சியே இப்படி பேசுகிறாள் என நினைத்தாள். ஆனால் அது மட்டுமல்ல, அதுவும் ஒரு காரணம் என்று அவளிடம் யார் கூற?

 

கீர்த்தி இப்போது எந்த பிரச்சனையிலும் தலையிடும் மனநிலையில் இல்லை. அதற்காக அவள் அண்ணன் மீது பாசமில்லை என்று கூற இயலாது. தன் கணவனிடம் அன்று ஆறுதலாக பேசியதற்க்கு, அவன் பேசிய பேச்சை கேட்டப் பின், அவனை பற்றி யோசித்து தான் எதும் பண்ணினால் கணவன் தன்னை வெறுத்து விடுவானோ என்று அஞ்சினாள். அவன் கோபமும் நியாயம் தானே என நினைத்து அமைதியானாள்.

 

அதுவும் அவன் பாராமுகத்திற்கு பின் அதை பற்றி யோசிக்கக் கூட அவளுக்கு தைரியம் இருக்கவில்லை. ஆனால் அன்று கல்யாண மண்டபத்தில் பெண்ணின் அண்ணன் முன் நின்று கவனித்துக் கொண்ட விதம் மனதின் ஏக்கத்தை வெளிக்கொண்டு வந்தது.

 

அதற்காக நடந்ததை அவள் மறக்கவும் இல்லை. அதில் சூர்யா மீது அளவுகடந்த வருத்தம் இருக்கத்தான் செய்தது. பாசம் வேண்டும், எல்லாம் சரியாக வேண்டும் என ஆசை கொண்டாலும் எதையும் முயற்சித்து பார்க்க தைரியம் வரவில்லை. ஆதலாலே அதை பற்றி பேசிவில்லை.

 

மூவருக்கு எல்லாம் சரியாக வேண்டுமென்றாலும் முயற்சித்து பார்க்க பயப்பட, ஒருவனோ அதை அனைத்தையும் மனதின் ஓரத்தில் தூக்கி போட்டுவிட்டு நடமாடினான். மூவரது பயத்திற்கும் காரணமானவன்!

 

இதனை புரிந்து கொள்ளாமல் ப்ரீத்தி அவள் அண்ணனையும் அக்காவையும் சமாதானம் செய்ய எண்ணினாள். அவர்கள் முன்பும் பெரிதாக பேசி கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவர்களிடையே இருந்த பாசத்தை அறிவாள்.

 

அனைத்தும் சரியாகி ஒன்றாக இருக்கவேண்டும் என நினைத்தாள். ஆனால் யார் அவளுக்கு கூற,

 

அவள் மாமனுக்கு அவன் நியாயம்!

அவள் அக்காவுக்கு அவள் நியாயம்!

அவள் அண்ணனிற்கு அவன் நியாயம்!

அவள் அண்ணிக்கு அவள் நியாயம்!

அவளுக்கு அவள் நியாயம்!

 

 

“உன் வீட்டுக்காரர் என்கிட்ட பேசக்கூடாதுனு சொல்லிருப்பாரு அதான் பேசமாட்டர” என அவள் குற்றம் சொல்ல, கையில் போனை எடுத்திருந்தாலும், அன்று சண்டையிட்ட பின் சிலநாள் கழித்து பேசும் செல்ல தங்கை என உணர்ச்சியின் பிடியில் இருந்ததால் ஸ்பீக்கர் ஆஃப் செய்யப்படாததன் பொருட்டு, அவன் செவிகளுக்கு அவள் கூறியது நன்றாகவே கேட்டது.

 

ஆனால் அதைக்கேட்டு அவனுக்கு கோபம் வருவதற்கு பதில், எலிக்குட்டி போல கத்தும் தன் மச்சினச்சியின் பேச்சில் சிரிப்பு தான் வந்தது. மேலும் அவள் யாருக்காக கோபப்படுகிறாள் என ஏற்கனவே அறிந்தவனாதலால் குட்டி பொறாமையும் வந்தது.

 

அன்றும் அவள் அண்ணனுக்கு சப்போர்ட்டாக பேசினாளே!

 

அவள் பேச்சில் நிகழ்வுக்கு வந்த கீர்த்திக்கு நன்றாகவே கோபம் வந்துவிட்டது.

 

“ப்ரீத்தி… அதென்ன உன் வீட்டுக்காரர்? மாமானு கூப்புடு. அப்படிலாம் முடியாது. நான் இப்படி தான் என் இஷ்டத்துக்கு பேசுவேன்னா போன்ன வைச்சுடு” என கண்டிப்புடன் கூற, அமைதியானாள்.

 

‘யார் மேலயோ இருக்க கோபத்தை யார்கிட்டயோ காட்றோம்’ என தன்னை திட்டிக்கொண்டு, ‘ஓவரா தான் பேசிட்டோம்’ என உணர்ந்து,

 

“சாரிக்கா. சாரி… தப்பு தான். இனிமே மாமா பத்தி எதும் சொல்லல” என பாவமாக கூற,

 

“ம்ம்” என்றவள் ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு பேச்சை தொடர்ந்தாள். 

 

இதைக்கேட்ட அகத்தியன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது. இதழ் ஓரம் ஒரு அழகான சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

 

‘தான் இதுபோல அவளை விட்டு கொடுக்காமல் இருந்தோமா?’ என்று மனம் கேட்ட கேள்விக்கு பதிலில்லை.

 

அவளுக்கு தான் கொடுக்க நினைத்த சர்ப்ரைஸை கொடுத்து அவளை கொஞ்சமாவது மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என நினைத்தான். அது சிறுபிள்ளை தனமாக தோன்றினாலும், அதை செயல்படுத்த போவதில் மாற்றமில்லை.

 

அவளிடம் மனம் விட்டு பேசி புரிந்து கொண்ட பின்னே தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தான்.

 

அவள் சிரிப்பொலியில் நிகழ்வுக்கு வந்தவன், ‘ஒரு போலீஸ்காரனா இருந்துகிட்டு எப்போப்பாரு பொண்டாட்டி பேசுறத இப்படி ஒட்டு கேட்டுட்டு இருக்கோமே!’ என மனசாட்சி கேலி செய்ய, ஏனோ உள்ளே செல்லாமல் வீட்டின் உட்புறமாக இருந்த படிகட்டில் ஏறி மாடிக்குச் சென்றான்.

 

 

******

 

அரைமணி நேரம் தங்கையுடன் கதையளந்தவள், ‘அதான இதை கூட மறந்துட்டோம். அவ சொல்லாட்டி ஞாபகமே வந்துருக்காது போல’ என நினைத்தவாறு நேரத்தை பார்க்க, அப்போதுதான் அவர் வந்துருக்கணுமே என்றவாறு வெளியே தேடினாள்.

 

ஹாலில் உட்கார்ந்துந்திருந்த அவள் மாமனாரிடம் கேட்க, “முன்னயே வந்துட்டானேம்மா. உள்ள வரலனா…” என்றவர், “மாடிக்கு போயிருப்பானோ என்னவோ?” என்றார். அது அவன் பழக்கம்.

 

அதை கேட்டதும் அவள், “சரிங்க மாமா நான் போய் பாக்கறேன். அவர் இன்னும் யூனிபோர்ம் கூட மாத்தலையே. சாப்பிட டைம் ஆச்சு.” அது இதுவென காரணங்களை அடுக்க,

 

‘உன் புருஷன போய் பாக்க, எதுக்கும்மா எங்கிட்ட இவ்ளோ காரணம் சொல்ற?’ என மனதுக்குள் சிரித்துக்கொண்டு, ‘எதும் ஞாபகத்தில் சண்டை போட்டுவிடுவானோ’ என நினைத்தாலும், தலையசைத்து போக சொல்ல, மாடிக்கு வேகமாக சென்றாள்.

 

அவளுக்கு ஏனோ அவன் மாடிக்கு போவதே பிடிக்கவில்லை. அதற்கு காரணம் இரண்டு முறையும் அவன் கைகளில் இருந்த அந்த சிகரெட் தான்.

 

முன்பு அவன் சிகரெட் பிடித்தால், ‘பிடிக்காதீங்க’ என்று சொன்னால் எதும் நினைத்து கொள்ளவானா? ‘நீ சொல்றத கேட்க முடியாது’ என்று திட்டி விடுவானோ என பயந்தவளுக்கு, தற்போது அவன் தன்னிடம் நடந்து கொள்ளும் முறை சொல்லி பார்க்கலாம் என தைரியம் கொடுத்தது. ஆனாலும் தயக்கம் இருந்தது. இருப்பினும் உடனே அவனிடம் வந்தாள்.

 

கையை சுவர் மீது வைத்துகொண்டு வானை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் அவள் கொலுசின் ஒலி கேட்டு, அவள் வருகையை உணர்ந்து திரும்பினான்.

 

ஆம். அவள் கொலுசு அணிந்திருப்பாள். முன்பு அவளையே பெரிதாக கவனிக்காதவன் எங்கு அவள் கொழுசை கவனிக்க?

 

ஆனால் இப்போது, அவள் கொழுசொலியை நன்றாக கவனிப்பான்.

ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது அவள் அங்கும் இங்கும் நடக்கும் போது கேட்கும் அந்த இனிமையான ஒலி அவனுக்கு அத்தனை பிடிக்கும். 

 

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது
சினுங்க மாட்டேனா

என பாட்டு தான் பாடவில்லை.

அவன் அவளை பார்க்க, அவளோ அவன் கைகளில் எதையோ தேடி இல்லாததைக் கண்டு நிம்மதியுற்றாள்.

 

அது என்ன என புரிந்து கொண்டவன் முகத்தில் யாரும் அறியா வண்ணம் ஒரு புன்சிரிப்பு வந்து போனது.

 

அன்று அவள் பார்த்த பார்வைக்கு பின், ஏனோ அவனுக்கு மறுபடி புகைபிடிக்க தோன்றவில்லை.

 

மேலும் அவன் ஒன்றும் அநியாயத்துக்கு ஊதித் தள்ளும் புகைவண்டி அல்ல.

 

எப்படியோ ஏற்பட்ட பழக்கம். ரொம்ப டென்ஷனாக இருந்தால் ஒரு சிகரெட். ஆனால் அதற்கும் அன்றோடு முடிவு கட்டியிருந்தான்.

 

அவளை பார்த்து என்ன என்பது போல புருவம் உயர்த்த, தன்னை மறந்து அதை ரசித்தவள், “இல்ல… உங்கள காணோம்… வந்ததும் இங்க… யூனிபோர்ம் மாத்தல… சாப்பாடு சாப்பிட கூப்பிட்டேன்.” என நாக்கை கடித்துக்கொண்டு உளர, அவள் முக பாவனையும் பேச்சையும் கண்டவன் உள்ளுக்குள் சிரித்துவிட்டு, வெளியே சாதாரணமாக, “வரேன்” எனவும், டக்கென ஓடினாள்.

 

அவன் கையில் சிகரெட் இல்லை என்பதே அவளுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. வேகமாக ஓடும் அவளை,

 

“கீர்த்தி…” என அழைக்க,

 

சடர்ன் பிரேக் போட்டவள், என்ன என்பது போல அவனை திரும்பி பார்க்க,

 

“மெதுவா போ.” என அக்கறை கலந்த கண்டிப்பான குரலில் கூறினான்.

 

அதை கேட்டவள் மனதுக்குள் ஒரு குத்தாட்டம் ஆடிவிட்டு, வெளியே பவ்வியமாக தலையை ஆட்டிவிட்டு மெதுவாக சென்றாள்.

 

 

******

 

 

சற்று நேரத்திற்கு பின் சாப்பிட உட்கார்ந்தவனுக்கும், தன் மாமனாருக்கும் பரிமாறினாள்.

 

அவனும் இருவாய் சாப்பிட்டுவிட்டு, “நல்லாருக்கு” என்ற பாராட்டுடன் மீதியை ருசித்து சாப்பிட ஆரம்பித்தான்.

 

ஒரு வார்த்தை தான்… ஆனால் அதை கேட்டு அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி… அந்த மகிழ்ச்சி அழகான புன்னகையாக வெளிப்பட்டது.

 

அவள் முகத்தை பார்த்து, “அவன் இப்படி சொல்லிட்டான்னு அவன மட்டும் விழுந்து விழுந்து கவனிக்காம எனக்கும் ஒரு சப்பாத்தி வைம்மா. அவன் சொல்றதுக்கு முன்னாடியே நான்தான் என் மருமக சாப்பாட முதல்ல பராட்டுனேன்” என பெரியவர் குறும்பாக பேசினார். அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என அறிந்தவர் மனம் இதமானது. 

 

அகத்தியனும் லேசாக புன்னகைத்தான். அவனுக்கு தந்தை இப்படி பேசி கேட்பது புதிது. அவர்கள் வீட்டில பெரும்பாலும் இதுபோல சிறு சிறு கிண்டல் பேச்சுக்கள் அதிகம் இராது. 

 

அவர் பேச்சில் லைட்டாக பதறிய கீர்த்தியோ, “என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்கு இல்லாத சப்பாத்தியா?” என்றவள் அன்பாக பரிமாற, அவரும் வயிறார உண்டார்.

 

இதுபோல இத்தனை நாட்களில் ஒருநாளும் சிரித்துக்கொண்டு சாப்பிட்டதில்லை. மூவருக்கும் மனது நிறைந்தது.

 

சற்று நேரத்திற்கு பின், அகத்தியனுக்கு முக்கியமான கால் வர கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவரும் உள்ளே சென்றுவிட, அவர்கள் சாப்பிட்ட தட்டை ஒதுக்கியவள், தனக்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

பேசிமுடித்தவன் தன் மனைவி தனியே உட்கார்ந்து சாப்பிடுவதை தான் கண்டான்.

 

‘அவளையும் சேர்ந்து சாப்பிட சொல்லிருக்கணும்ல. அது கூட தோணல. இத்தனை நாளா இப்படி தான் தனியா சாப்பிடறாளா?’ என தன்னை கேள்வி கேட்டுக்கொண்டவன் ‘இதுபோல இனி விடக்கூடாது’ என முடிவும் எடுத்துக்கொண்டு அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளைத்தான் பார்த்துக்கொண்டிருதான்.

 

அவளோ வழக்கம் போல அதனை கவனிக்காது தன் தங்கை ஞாபகப்படுத்தியதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

சாப்பிட்டவள் எழ, அவனும் அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

 

 

 

 

தொடரும்…..