உனக்காக ஏதும் செய்வேன் – 18.1

1646358406084-d18e9343

அத்தியாயம் – 18.1

 

 

 

சூர்யாவிற்கு நேற்றே ஞாபகமிருந்தது நாளை என்ன நாள் என!

 

அன்றைய நாளிற்குப் பின் அவன் தங்கையை நேரில் பார்க்கவே இல்லை.

 

அகத்தியனையே இரண்டு மாதங்கள் கழித்து அன்று தான் பஸ் ஸ்டாப்பில் கண்டான்.

 

அவனுக்கு ஒருவித குற்றவுணர்வு இருந்து கொண்டே இருந்தது. ஆதலாலே அன்று அவனை பார்த்ததும் சூர்யா முகமே மாறிப்போனது.

 

இன்று ஒரே ஒரு முறை அவளை பார்க்க வேண்டுமென மனம் ஆசை கொண்டது. எப்படியும் அவள் கோவிலுக்கு செல்வாள் என அறிவான். வழக்கமாக எந்த கோவிலுக்கு செல்வாள் எனவும் அறிவான்.

 

‘எதும் பிரச்சனை வருமோ? எதற்கு வம்பு?’ என விலகி நினைத்தாலும், ‘ஒரே தடவை ஓரமா நின்னு பாத்துட்டு வந்துடலாமே!’ என பாசம் கொண்ட மனம் ஆசை கொண்டது.

 

ஆதலாலே அங்குச் சென்றுவிட்டு அப்படியே வேலைக்கு செல்ல மகாவும் சூர்யாவும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

 

அவளிடம் பொதுவாக கோவிலுக்கு போகலாம் எனக் கூறும்போது, அவனை ஒரு முறை கூர்ந்து பார்த்தாலே ஒழிய மறுத்து எதும் சொல்லவில்லை.

 

‘ஒருமுறை அவர்களை பார்ப்பதின் மூலமே எப்படி வாழ்கின்றனர் என அறிந்து கொள்ள முடியுமா?’ என தோன்றினாலும், அதில் ஓரளவேனும் எப்படியிருக்கின்றனர் என தெரிந்து கொள்ளலாம் அல்லவா!

 

அவன் குறைந்தபட்ச ஆசையே அகத்தியன் அங்கு வரவேண்டும் என்பதுதான்.

 

ஆரம்பத்தில் அகத்தியன் மீது இருந்த மதிப்பு அவனுக்குத் துளியும் குறையவில்லை.

 

தன்னை பிடிக்காவிட்டாலும் தன் தங்கையை டப்பிங் சீரியலில் வரும் ஆன்டி ஹீரோவை போல கொடுமை படுத்துவான் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை.

 

அவன் மனம் ஆழமாக நம்பியது அது போல எதும் இருக்காது என. 

 

ஆனால் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கலாம் என எண்ணினான். அப்படியிருந்தால் அதற்கு காரணமே தான்தானே என வருந்தினான்.

 

கிளம்பியவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கோவில் நோக்கி பயணித்தனர்.

 

 

******

 

 

“இந்த தாவணியைத் தான் போடேன். கோவிலுக்கு போறோம். சீலை தாவணிலாம் கட்டினாதான் என்ன?” என கேட்ட அன்னையை முறைத்து பார்த்த ப்ரீத்தி,

 

“ம்மா… அத கட்டிக்கிட்டா என் கான்சன்ட்ரேஷன் பூரா அது மேலயேதான் இருக்கும். எனக்கு சுடிதார் தான் வசதியா இருக்கும்” என சிணுங்கியவாரு கூறினாள்.

 

சீலை தாவணியெல்லாம் அவளுக்கு அத்தனை நேக்காக உடுத்தவும் வராது, மேனஜ் செய்யவும் வராது.

 

‘அந்த சீலை, தாவணி பாவாடையெல்லாம் பாக்க என்னவோ அழகாக தான் இருக்குது. இல்லனு சொல்லமுடியாது. ஆனால் நாம போட்டுக்கிட்டா அத மேனேஜ் பண்றதுக்குள்ள ஒரு வழியாகிடாறோமே!’ என நினைத்துக் கொள்வாள்.

 

அதுவெல்லாம் அதிசயமாக என்றேனும் அவளால் உடுத்தப்படும்!

 

‘இன்று அண்ணனும் அங்கு வருவானா?’ என யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

ஆம். அவர்களும் கீர்த்தி செல்ல போகும் கோவிலுக்கு தான் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

நடந்த பிரச்சனைக்குப் பின் அவளை வீட்டிற்கு சென்று கண்டு வந்தால், அகத்தியன் எதும் நினைத்துக்கொள்வானோ என சற்று தள்ளி இருந்தனர்.

 

கற்பகமும், ப்ரீத்தியும் பேசிக்கொண்டிருக்க… ப்ரீத்தியின் அப்பா வாசுதேவன் வந்தார்.

 

“அவளுக்கு பிடிச்சத போடட்டும் விடேன்” என கடிய, ஓடிச்சென்று தந்தையை பக்கம் தோளோடு அணைத்தவாரு நின்று கொண்டாள்.

 

‘அப்பா என் பக்கம்’ என்பதுபோல ஒரு பார்வை அன்னையை பார்க்க, தலையில் அடித்துக் கொண்டவர்,

 

“ஒரு வார்த்தை சொல்லக் கூடாதே, உடனே வந்துடுவீங்க” என கூறியவாறு நகர்ந்து விட்டார்.

 

தான் பெற்ற பிள்ளைகளுக்கு கணவர் சப்போர்ட்டாக பேசுவது அவருக்கு எப்போதும் பிரச்சனையில்லை!

 

தன்னை அன்பாக அணைத்துக் கொண்டிருக்கும் தன் மகள் தலையை பரிவாக வருடி கொடுத்தார்.

 

‘சின்ன பெண் தான்… ஆனாலும் அவள் அண்ணனை கடைசி வரை விட்டு கொடுக்காமல் பேசி என்ன நடந்தது என புரிய வைத்திருக்கிறாள். அவன் பண்ண தப்புக்கு என்ன இருந்தாலும் நாம அப்படி பேசியிருக்கக் கூடாது. இதுல பண்ணாத தப்புக்கும் சட்டுனு வார்த்தையை விட்டுட்டமே!அவனுக்கு எத்தனை கஷ்டமா இருந்துருக்கும் அந்த வார்த்தை!’

 

அவரை பொறுத்தவரை அவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் என்று தான். அண்ணன் மகனை தன் மகனாகவே கருத்தினார்.

 

எனவே… அவன் காதல் விவகாரமும், கேள்வி பட்ட விஷயமும் பெண் வாழ்க்கையில் எதும் பிரச்சனை ஏற்படுத்திவிடுமோ என்ற பயமே அவரை கோபத்தில் அப்படி பேச வைத்தது.

 

ஆனால் எடுத்துக்கூறி என்ன விஷயம் என கேட்டிருக்க வேண்டும் அல்லவா! உடனே உதறி விட்டோமே அவன் உறவை.

 

விஷயம் அறியும் முன் மகள் வாழ்வில் எதும் பிரச்சனை வந்துவிடுமோ என சூர்யா மீது கொண்டிருந்த அளவுகடந்த கோபம்… நடந்ததை அறிந்த பின் அவனுக்காகவும் யோசித்தது.

 

அவனும் வீட்டில் உள்ள அனைவர் மீதும் மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்துள்ளான் என அறிவார். அவன் மீது கொஞ்சம் கூடுதல் பாசம் உண்டு.

 

மனைவி பேச்சு அவனிடம் சற்று சரியாக இல்லாத போதும் தான் பாத்தாலே அவர் வாய் மூடிக்கொள்ளும்.

 

ஆனால் பார்க்காத போது அவர் பேச்சு எந்த அளவிற்கு இருந்தது என தெரியும்போது?

 

வேலை என காலை செல்லும் மனிதர், வீடு திரும்பிய பின் அதுவரை நடந்த நிகழ்வெல்லாம் பெரிதாக அறியவில்லை.

 

சூர்யா அனைவரிடமும் பாசம் கொண்டுள்ளான் என நினைத்தாலும் ப்ரீத்தியிடம் தான் அதிகம் பேசிக்கண்டுள்ளார்.

 

ஆனால் சட்டென அவன் வெளியே தங்கி வேலை செய்கிறேன் என்று வீட்டை விட்டு சென்றது, பின் கொஞ்சம் ஒட்டாமல் நடந்து கொண்டது, கீர்த்தி திருமணத்தில் ஒதுங்கியது இதுவெல்லாம் அவர் மனதை ஏற்கனவே குடைந்து கொண்டு இருந்தது.

 

ஆனால் அன்று அகத்தியன் காட்டிய புகைப்படம், அவன் காதல் விவகாரம், அவன் மீது சுமத்த பட்ட பழி, அவன் அமைதி என சூர்யா மீது உள்ள கோபத்தில் ஏதோ கூறிவிட்டார். மனமார அவர் அப்படி சொல்லவில்லை.

 

நடந்தவற்றை நினைத்த மாத்திரம் மனம் கலங்க அவர் முகம் எண்ணங்களை பிரதிபலித்தது போலும்!

 

‘எல்லாம் சரியாகிடும்…’ என்பது போல தந்தை கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். அவளை சிரித்தவாரு பார்த்தவர் மனைவி மகளுடன் கோவிலுக்கு கிளம்பினார்.