உனக்காக ஏதும் செய்வேன்

1662455813139-1c226f1e

அத்தியாயம் – 6

 

நேற்றிலிருந்தே ஏதோ யோசனையில் இருக்கும் சூர்யாவைக் கண்டவள் சரியாகி விடுவான் என விட, அவனோ அதே போல இருக்கவும் அவன் மனநிலையை மாற்ற எண்ணியவள் அவனிடம் வாய் ஓயாமல் பேசினாள்.

அதை கேட்டு ஒரு எதிர்வினையும் காட்டாமல் அவன் அமந்திருக்க அதில் காண்டானவள், “இஞ்சி தின்ன குரங்கு பார்த்துருக்கீங்களா சூர்யா ?” என்று சம்பந்தமில்லாமல் வினவினாள்.

என்ன இது கேள்வி என்பதுபோல புரியாமல் அவளை பார்த்தான்.

தன் கைபேசியின் ஃபிரன்ட் கேமராவை ஆன் செய்து அவன் முகத்தை நோக்கி திருப்பி, “பார்த்துக்கோங்க.” எனவும்,

அவளை முறைத்தவன், “ப்ச்… காமெடியா?” என கடுப்பாக கேட்டு வைக்க,

“இல்லை அது உண்மைதான்.” என சிரித்துக்கொண்டே கூறவும்,

“போடி”, என்றவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

‘விளையாட்டாக பேசி மனநிலையை மாத்தலாம்னு பார்த்தா வேலைக்கு ஆகல எப்பவும் போல நேராவே பேசுவோம்.’ என நினைத்தவள்,

“என்னாச்சுனு சொல்லுங்களேன் சூர்யா. என்னை ரொம்ப கடுப்பேத்தறீங்க. நேத்து வேலைல இருந்து வந்ததுல இருந்து இப்படிதான் இருக்கீங்க.” என கெஞ்சலும் எரிச்சலும் கலந்த குரலில் கேட்க,

“ஒன்னுமில்ல மகா.” எனவும், அவனை நன்றாக முறைத்துப் பார்த்தாள்.

என்ன என்று கூறாமல் விடமாட்டாள் என அவள் முகம் பார்த்து பெருமூச்சு விட்டவன் நேற்று வகுப்பில் நடந்ததை அவளிடம் கூற தொடங்கினான்.

நேற்று கல்லூரியில்,

அவன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கடைசி பென்ச்சில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் கைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்தான்.

முதலில் ‘சரி டக்குனு வெச்சிடுவான் நாமளும் இதெல்லாம் தாண்டிதான வந்துருக்கோம்.’ என நினைத்தவன் கண்டும் காணாமல் இருக்க, அவன் பாடத்தை கவனிக்காதது மட்டுமில்லாமல், வைக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருக்கவும் சூர்யாவிற்கு கோபம் வந்தது.

அவனை எழுப்பி போர்ட்டில் உள்ளதைக் காட்டி விளக்கம் கேட்க, அவனோ சூர்யா கூப்பிடவும் கைபேசியை வேகமாக மறைத்து வைத்துவிட்டு ‘பதில் தெரியாது, கவனிக்கவில்லை.’ என்று சாக்குப்போக்கு கூட சொல்லாமல் இருக்க இன்னும்தான் கோபம் வந்தது.

இருப்பினும் “இனி ஒழுங்கா கவனி.” என்றுவிட்டு மீண்டும் சூர்யா பாடம் எடுக்க, அவனோ அவன் விட்டதை மீண்டும் தொடர்ந்தான்.

அதை கவனித்த சூர்யாவிற்கு ஆத்திரம் இவ்வளவுதான் என வரையறையின்றி வர, வேகமாக அங்கு சென்றவன் அவன் கைபேசியை பிடுங்கி அதில் அவன் என்னத்தை பார்க்கிறான் என பார்க்க, யாருடனோ சாட் செய்திருப்பான் போல. இரண்டு வரிகளுக்கு மேலே படிக்க முடியவில்லை!

அதை பார்த்து முகம் சுழித்தவன், “கிளாஸ்ல நான் பாடம் எடுத்துட்டு இருக்கும்போது நீ என்ன உன் இஷ்டத்துக்கு போன் பாத்துட்டு இருக்க? அறிவில்லையா?” என பொறுப்பான ஆசிரியராக கேள்வி கேட்க,

அவனோ தன் கைபேசியை வாங்க முயற்சி செய்துவிட்டு அது கைக்கு வராமல் போகவும்,” சார் என் போன்ன கொடுங்க?” என அவன் கொடுத்தே ஆகவேண்டும் என்பது போல கேட்க, சூர்யா விற்கு சுர்ரென கோபம் அதிகமானது.

“என்னடா குரல் உசருது? நான் உன் கிளாஸ் டீச்சர் ஞாபகம் இருக்குல?” என மிரட்டலான குரலில் கேட்டான்.

“நீங்க யார வேணா இருங்க. என் போன்ன இப்போ கொடுக்க போறீங்களா இல்லையா?” எனவும் அவனுக்கு கோபம் அதிகரித்து கொண்டே சென்றது.

அதுவரை ‘ஏதோ சின்ன பையன். தெரியாம வகுப்பில் கைபேசி பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். கூப்பிட்டு ரெண்டு மிரட்டல் விடுத்தால் அடுத்தமுறை பாடத்தை கவனிப்பான்.’ என சூர்யா நினைத்து பேசியது எல்லாம் அவன் பேசும் தொணியில் மறைய ஆரம்பித்தது.

“கொடுக்க முடியாது. காலேஜ்ல போன் யூஸ் பண்ணக்கூடாது, எடுத்துட்டு வரக்கூடாதுனு சொல்லிருக்காங்கல. எச்.ஓ.டி ட்ட கொடுத்தடுறேன். நீ போய் வாங்கிக்க.” எனவும் அவன் முகத்தில் கோபமும், அதிர்ச்சியும். அதை யாரும் பார்த்தால் என்ன ஆவதென!

அனைத்துக்கும் பாஸ் வெர்ட் போட்டு வைத்துள்ளான் என்றாலும், அதை பிறரிடம் கொடுக்க அவனுக்கு பிடிக்கவில்லை.

“நான் யார் பையன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க சார்.” என அவன் அப்போதும் திமிராக ஒரு மாதிரி குரலில் சொல்ல,

அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் ‘ஏன் இவன் இப்படி பேசுகிறான்?’ என கறுவியவாரு அமர்ந்திருந்தனர்.

சூர்யா அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர் அல்லவா!

“நீ யார் பையனா வேணா இருடா. எனக்கென்ன? முதல்ல மரியாதையா பேச கத்துக்கோ.” என பல்லைக் கடித்துக் கொண்டு பேசியவன்,

இன்ட்டர்வல் பெல் அடிக்கவும்,’இதற்கு மேல் இவனிடம் பேசினால் அறைந்து விடுவோம்.’ என புரிந்ததால் வேகமாக ஸ்டாஃப் ரூம் சென்றுவிட்டான்.

அவன் சென்று துறை தலைவரிடம் கொடுத்துவிட்டு நடந்ததை கூற அவரோ, “விடு சூர்யா ஏன் இவ்ளோ கோபப்படற? அவன் அப்பா பெரிய ஆள். அப்பறோம் அந்த பணத்திமிரு அதனால தான் அப்படி பேசுறான். நமக்கெதுக்கு இந்த பிரச்னைலாம். அவருலாம் காலேஜ் மேனஜ்மென்ட்ல இருக்கவங்களுக்கு வேண்டப்பட்டவங்க.” என இவனுக்கு அவர் பாடம் எடுக்கவும், சூர்யாவிற்கு ‘இதுலாம் ஒரு பொழப்பு’ என்றானது.

தனக்கு கீழ் படிக்கும் மாணவனுக்கு நல்லது கேட்டது சொல்லித் தருவது ஒரு ஆசியரின் கடமை அல்லவா! என ஆதங்கப்பட்டவன், அவரிடம் சற்று காட்டமாக பேசிவிட்டு தன் இருக்கைக்கு சென்றுவிட்டான்.

அவரும், ‘இவன் ஒருத்தன்…சரியான ரூல்ஸ் ராமனுஜம்.’ என உள்ளே திட்டிக்கொண்டு அமைதியாகிவிட்டார்.

அதை வாங்கிக் கொண்டு ராஜ் (அந்த மாணவன்) செல்லும்போது சூர்யாவிற்கு அத்தனை கோபம் வந்தது. தன்னால் ஒன்னும் செய்ய இயலவில்லையேயென.

‘பேசாம நாமளே வெச்சிட்டு மிரட்டி விட்ருக்கலாம்.’ நினைத்தவன் அந்த பையனை பார்க்க, அவனோ இவனை முறைத்துக் கொண்டே போனான்.

‘எல்லாம் என் நேரம்.’ என்றுதான் தோன்றியது சூர்யாவிற்கு.

“இதுல எனக்கு ஈகோலாம் ஒன்னும் இல்லை மகா. அவன் சின்ன பையன் ஏதோ தெரியாம முறைச்சிட்டு போறான். ஆனால் இந்த எச்.ஓ.டி க்கு புத்தி எங்க புல்லு மேய போயிருச்சா?”

“அன்னைக்கு அந்த பொண்ண பத்தி ஒரு பேச்சுக்கு சொல்லியிருந்தா அதும் பெரிய இடத்து பொண்ணா இருந்திருந்தா புடிச்சா கட்டிக்க சூர்யானு சொல்லிருப்பார் போல.” என, 

அவன் கடைசியாக கூறியதில் அவள் முறைத்து பார்க்கவும், “அவர் அப்படி சொல்லிருந்தாலும், என்னால முடியாது. எனக்கு அழகா ஒரு பொண்டாட்டி இருக்கானு சொல்லிருப்பேன் மாகா. யார் என்ன சொன்னாலும் உன்ன விட்டு கொடுப்பனா?” என்றான் சாதுவாக.

அவன் முக பாவனையைக் கண்டு ‘ம்ம்… ரொம்பத்தான்.’ என நினைத்தவளுக்கு சிரிப்பும் வந்தது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும், “இந்த காலத்துல பெற்றோர்கள் ஒழுங்கா பிள்ளைகள வளர்க்கறதே இல்ல போல. இப்படிலாம் நான் படிக்கும்போது பேசியிருந்தா என் கன்னம் பழுத்துருக்கும்.

இப்போ பாரு சுத்தி இருக்கறவங்களே அவங்க கெட்டுப் போக காரணமா இருக்காங்க.

அவன் யார் பையன்னா வேணா இருக்கட்டுமே. எல்லாரும் காலேஜ், ஸ்கூல்ல சமம்தான?நான் என்னவோ அவனுக்கு கெட்டது பண்ண மாதிரி என்ன வேற முறச்சிட்டு போறான்.

அந்த சாட் அஹ் ரெண்டு வரிக்கு மேல படிக்க முடியல. ச்சே… அவன் வீட்ல இதுலாம் பார்க்க மாட்டாங்க? இதை நான் பார்த்துக் கூட கண்டிக்க முடியல பாரு, அதான் எனக்கு வருத்தமா இருக்கு.

கண்டிச்சாதான பயந்துட்டு அடுத்த முறை அந்த தப்ப பண்ண யோசிப்பாங்க. இப்போ இருக்க சிஸ்டம்ல டீச்சர்ஸ் கண்டிக்க பயப்பட வேண்டி இருக்கு.” என அவன் பொறுமியவாரு சொல்ல,

“சரி விடுங்க சூர்யா. பார்த்துக்கலாம்.” என்றாள் சமாதனமாக அந்த பிரச்னையை பேசிக்கொண்டே இருப்பதைக் கண்டு.

எதும் இது போல நடக்கும்போது, அவன் இந்த காலத்து பிள்ளைகளுக்காக புலம்பித் தள்ளிவிடுவான் என்பது அவள் அறிந்ததே.

அவளுக்கு புரிந்தது அவன் கோபம் நியாயம் என இருப்பினும் என்ன செய்ய என நினைத்தவள் அவனை அமைதியாக்க அவ்வாறு கூறினாள்.

“ம்ம்….” என முனகியவன் எழுந்து செல்ல, அவளும் சில யோசனைகளோடு அடுப்பில் வைத்திருந்ததை பார்க்க சென்றுவிட்டாள்.

»»»»

‘காலங்கதால இவள் எங்க போனா? எப்போ வெளிய போயிருப்பா? பத்து, பதினைந்து நிமிடமா ஆள காணோம். வீட்டுக்குள்ள சுத்திட்டே இருப்பா. கிளம்பும்போது இதுவரை அவளை பார்க்காம போனதில்லையே?’ என மனதில் புலம்பியவாரு அகத்தியன் ஹாலின் குறுக்காக நடை பயின்று கொண்டிருக்க, அதை கவனித்த அவன் தந்தை சிரித்துக் கொண்டார்.  உள்ளே ஒருவித மகிழ்ச்சி.

திருமணம் ஆன முதலில் இருந்து அவரும் கீர்த்தியிடம் சற்று கோபமாக நடந்திருக்கிறார்.

ஆனால் அந்த பெண் என்ன தவறு செய்தால் அவளிடம் பாராமுகம் காண்பிக்க என அகத்தியன் அவளிடம் நடந்து கொள்வது கண்டு அவருக்கே தோன்ற ஆரம்பித்தது.

பின்தான் தானுமே தன் மருமகளிடம் சரியாக பேசுவதில்லை என உணர்ந்தவர், அவளிடம் கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்தார்.

முதலில் அதை பார்த்தாவது அவளிடம் நன்றாக பேசுவானா என அவர் எதிர்பார்க்க, அவனோ இரண்டு மதமாக ஒரே போலதான் இருந்தான்.

தன் மருமகளிடம் பேச ஆரம்பித்த பின் அவளின் ஏக்க பார்வை அவனிடம் படிவதை கவனித்தவருக்கு வருத்தமாக இருந்தது.

பிடித்து திருமணம் செய்தவன் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே என வருந்தியவர், சரி பொறுத்து பார்ப்போம் அவனே தன் தவறை உணர்வான் என நம்ப, சில நாட்களாக அந்த நம்பிக்கை சரிதான் என நிரூபித்தான்.

அன்று அவன் அக்கறையாக மருந்து போட்டதையும், பொண்டாட்டிக்கு காபி தயாரித்ததையும் அவரும் பார்த்தார்தான்… என்ன காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் கீர்த்தியின் முகம் கண்டவருக்கு நிம்மதியாக இருந்தது. அவளிடம் பேச ஆரம்பித்தப் பின் அவருக்கு பிடித்த மருமகள் ஆகிவிட்டாள் அல்லவா.

எந்த தப்பும் செய்யாமல் இந்த பெண்ணிற்கு தண்டனை கிடைத்து விடக்கூடாதென அவர் நினைத்து பயந்ததற்கு வேலையில்லாமல் போக மகிழ்ச்சியடைந்தார்.

இப்போது கூட பக்கத்தில் உள்ள தையல் கடைக்கு செல்வதாக கூறி விட்டுதான் சென்றாள்.

இவன் குளித்துவிட்டு புறப்பட்டு வந்திருப்பதைக் கண்டவர், அதனால் அவனுக்கு தெரியவில்லை என புரிந்து தன்னிடம் விசாரிப்பானா என நினைத்தவர் கேட்டால் சொல்லலாம் என அமைதியாகவே இருந்தார்.

பத்து நிமிடம் பொறுத்தவன் அவரிடம் வந்து கேட்க அவர் விஷயத்தைக் கூறவும் ‘என்கிட்ட சொல்லாம போய்ட்டா.’ என மனதுக்குள் சிறு உரிமை கோபம் வந்தது.

“நான் அவள பார்த்துட்டு அப்படியே கிளம்புறேன் ப்பா. நீங்க சொல்றத பார்த்தா கிளம்பி அரை மணி நேரத்துக்கு மேல இருக்கும் போலயே.” என்றவன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு அந்த கடையை நோக்கி சென்று கொண்டே வழியில் எங்கும் இருக்கிறாளா என தேடினான்.

என்னதான் அவளிடம் கூறாமல் சென்றாலும், அவள் முகத்தை பார்க்காமல் எப்படி செல்வது என நினைத்தவன் சற்று காத்திருந்தான்.

அவன் கிளம்புமோது அவள் வீட்டில் தான் இருப்பாள். இரண்டு மாதங்களாக…

அப்படியிருக்க இன்று அவள் வீட்டில் இல்லாதது என்னவோ போல இருந்தது அவனுக்கு.

தந்தை கூறியதை கேட்டப்பின், அவள் சென்று சற்று நேரமாகியிருக்க ஏதும் பிரச்சனையோ என சற்று பயமும் வர பார்த்துவிட்டே காவல் நிலையம் செல்வோம் என முடிவெடுத்தவன் அவளைத் தேடியவாறு வந்தான்.

அப்போது அவன் கண்டதோ….

ஒரு நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டிருக்கும் தன் மனையாளைதான்.

அதை மடியில் வைத்துக்கொண்டும், நீவிக் கொண்டும், கொஞ்சியவாரு அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டதும் அப்போதைக்கு அவன் கோபம் மாயமாக மறைய, என்றுமில்லாமல் தன் மனைவியை புதிதாக பார்த்தான்.

உண்மையை சொன்னால் அவளை, அவள் அவனை பார்ப்பது போல அவனுக்கே தெரியாமல் காதலாக பார்த்தான்.

பொதுவாக அவள் அமைதி என்பதால் அவ்வளவாக பேசமாட்டாள்.

உண்மையை சொன்னால் அவன்முன்… அவனுக்கு தெரிந்தவரை.

அப்படியிருக்க இன்று அவள் அந்த நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டும், அதனிடம் ஏதோ பேசிக்கொண்டு அதன் உரிமையாளரிடமும் வாய் அடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை.

கீர்த்திக்கு மிகவும் பிடித்த செல்ல பிராணி நாய்தான். அதுவும் நாய்க்குட்டியைக் கண்டாள் கொஞ்சாமல் விடமாட்டாள்.

அந்த ஏரியாவில் உள்ள அவள் தோழி நாய்க்குட்டியோடு நடந்துவர,  நாய்க்குட்டியை கொஞ்சுவதில் என்றுமில்லாமல் இன்று நேரம்கூட பார்க்காது விட்டுவிட்டாள்.

பேசிக்கொண்டே எதேச்சையாக திரும்ப, அங்கு அகத்தியனை எதிர் பார்க்கவில்லை போலும்.

முதலில் சற்று அதிர்ச்சியாக பார்த்தவள், பின் அந்த நாய்க்குட்டியை மனமே இல்லாமல் விட்டுவிட்டு அந்த அவளிடம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க…

அந்த பெண்ணோ, “பொண்டாட்டிய பார்க்காம ஸ்டேஷன்னுக்கு போக மாட்டாங்களோ?” என கிண்டல் செய்ய, அது உண்மை என தெரியாததால் ‘ம்ம்க்கும்…’ என்றுதான் அவளுக்கு தோன்றியது.

இருப்பினும் சிரித்து சமாளித்தவள், விடைபெற்று அவனருகே வந்தாள்.

தன்னைக் கண்டதும் ஏன் அவள் சிரிப்பு காணாமல் போனது? என நினைத்தவனுக்கு மீண்டும் கொஞ்சம் கோபம் வந்தது.

“போனா சொல்லிட்டு போகமாட்டியா?” என கடுப்பாக கேட்கவும்,

மனதில் இத்தனை நாட்களாக இருந்ததாலோ என்னவோ…அவன் கேள்வியில் சட்டென கோபம் வர என்றும் இல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதை கண்டவனுக்கு ‘என்ன இவ என்னைக்கும் இல்லாம நம்மள முறைக்கறா?’ என்றுதான் தோன்றியது.

அவளை கூர்ந்து பார்த்தவன், புருவம் சுருக்கி என்ன என்பதுபோல கேட்க, வழக்கம்போல முக பாவனையை மாற்றியவள், “நீங்க குளிச்சிட்டு இருந்தீங்க அதான் மாமாட்ட சொல்லிட்டு வந்தேன்.” எனவும் சரி என தலையசைத்தவன், அவள் மறுத்தும் கேட்காமல் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

இறக்கிவிட்ட பின் வழக்கம் போல ஏதும் சொல்லாமல் பைக்கை கிளப்ப, அவளுக்கே தெரியாமல் அந்த பார்வை மீண்டும் வந்தது.

என்ன சொல்கிறது அந்த பார்வை என யோசித்தவன் மெதுவாக பைக்கை கிளப்பியவாறே ஃபிரன்ட் மிரர் வழியாக பார்க்க ,மீண்டும் அவளை பார்க்க இப்போதும் அப்படியே பார்த்தாள்.

‘இப்போ எதுக்கு கிளம்புபோது மொறச்சிட்டு…’ என நினைக்க அப்போது ஏதோ புரிவது போல இருந்தது.

‘நீ சொல்லிட்டா கிளம்பற.’ அதுதான் அதான் அர்த்தமோ?

அது புரிந்ததும் அவளை நோக்கி திரும்ப, அதற்குள் அவன் அப்பா கூப்பிடவும் உள்ளே சென்றுவிட்டாள்.

அன்று முழுக்க ஏனோ முறைத்து பார்த்த மனைவியின் அந்த பார்வை அவனை இம்சித்தது.மேலும் அவனுக்கு அவளின் அந்த கோபம் பிடித்திருந்தது.

‘அவளுக்கு கோபப்படலாம் தெரியுமா?’ என ஆச்சரியமாக நினைத்தான்.

எப்போதும் கடுமையாக முகத்தை வைத்து கொண்டிருக்கும் அவன் முகம், இன்று சற்று மென்மையாகவும் சிரித்தபடியும் இருக்க, காவல் நிலையத்தில் அனைவரும் அவனை அதிசயமாக பார்த்தனர்.

இந்த சிரிப்பு என்றும் அவன் முகத்தில் இருக்குமா?

 

தொடரும்…