உனக்காக ஏதும் செய்வேன்

1662455813139-e1a04910

அத்தியாயம் – 7

 

என்றும் போல அழகான விடியலில் அந்த நாள் தொடங்க…

எழுந்ததும் தலைக்கு குளித்தவள் வழக்கம் போல வீட்டிற்குள் கட்ட ஏதுவாக எளிமையாக காட்டன் புடவை அணிந்து, தன் ஈரக் கூந்தலுக்கு துண்டை சுற்றி கொண்டு, சாமி அறையில் பூஜை செய்து கும்பிட்டு பின் வகிட்டிலும், நெற்றியிலும் குங்குமம் வைத்துக்கொண்டு தன் அன்றாட வேலையை பார்க்கச் சென்றாள்.

அகத்தியன் என்றுமே சற்று சீக்கிரம் எழுந்து விடுவான். ஆனால் இன்று ஏனோ அவனுக்கு எழுந்து கொள்ள சோம்பலாக இருந்தது.

மெதுவாக எழுந்தவன் காலைக் கடனை முடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்தபின் கீழே வர, அவன் மனைவியோ அவனைக் கண்ட பின் காபியை கலக்கியவள் அவனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அவளை பார்த்த பின் அவனுக்கு அவன் கண்களை அவள் மீதிருந்து திருப்புவது சிரமமாக இருந்தது.

அவளை இந்த தோற்றத்தில் இதற்கு முன் பார்த்துள்ளான்தான். ஆனால் இன்று ஏனோ பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது.

அவள் வீட்டிற்குக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, அவன் கண்கள் அவளையே வட்டம் அடித்தது.

‘டேய்… உன் பொண்டாட்டிய இப்படி சைட்டடிச்சிட்டு இருக்கியே இது உனக்கே அடுக்குமா?’ என அவன் மனசாட்சி கேள்வி கேட்க,

‘என் பொண்டாட்டிய நான் சைட் அடிக்கறேன். உனக்கென்ன….ஓடி போ.’ என அதை விரட்டியவன், அவளை பார்த்துக்கொண்டே நியூஸ் பேப்பரை பார்த்தான்.

சிட்டுவேஷனுக்கு ஏற்றார் போல டிவியில், ‘மழை வர போகுதே’ என்ற பாடல் என்னை அறிந்தால் படத்தில் இருந்து பாடியது.

 

ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்

 

என்ற லைன் வர, அவன் முகத்தில் அழகிய வசீகரமான ஒரு புன்னகை வந்தது.

ஆனால் கீர்த்தி இதை கவனிக்கவில்லை. அவள் வேலையே கண்ணாக செய்து கொண்டிருக்க இவனோ ‘ஒரு லுக்காச்சும் விடறாளா பாரு.’ என சலித்துக் கொண்டவன் நியூஸ் பேப்பரில் மூழ்கினான்.

அவன் தந்தையும் வர, அவருக்கும் டீ கொடுத்தவள், மீண்டும் சமையல் அறைக்குள் புகுந்து கொள்ள, அவனும் அப்பாவுடன் பேசிக்கொண்டு அப்போதைக்கு சைட்டடிப்பதை விட்டான்.

பிறகு வழக்கம் போல கிளம்பியவன் ஏதும் கூறாமல் வெளியே செல்ல, அவளுக்கு இன்று ஏக்கத்திற்கு பதில் உண்மையில் சுறுசுறுவென கோபம்தான் வந்தது.

ஆனால் எதும் காட்டிகொள்ளாமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.

‘ஒரு வார்த்தை போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனா என்னை குறஞ்சு போய்டுவாறா?’ என மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டவள் கண்களில் கண்ணீர் வரவா என கேட்க, அதை வேண்டாம் என சொல்வது போல அமைதியாக சற்று இறுக்கமாக நின்றிருந்தாள்.

என்னதான் கணவன் அவளிடம் கொஞ்சம் இப்போது நன்றாக பேசினாலும், அவன் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று அவள் மனதுக்கு ரொம்ப ஆசையாக இருந்தது.

நேற்று வேண்டுமென்றே முறைத்து பார்க்கவில்லை. ஆனால் அவளின் அந்த ஏக்கம் கோபமாக அவனிடம் வெளிப்பட்டுவிட்டது.

ஆனாலும் அதை புரிந்து கொண்டிருப்பான் என லேசாகத் தோன்றியது.

இப்போது….

‘என்னதான் போலீஸ் ட்ரைனிங்ல சொல்லிக் கொடுத்தாங்களோ? இவருக்கு இது கூட புரில.’ என லாஜிக் இல்லாமல் நொடித்துக்கொண்டு அவனை மனதுக்குள் வறுத்தெடுத்தாள்.

“கீர்த்தி…” என அவன் சத்தமாக அழைக்க நிகழ்வுக்கு வந்தவள்,

‘எதுக்கு இப்படி கத்தறாரு?என்னத்தையாவது மறந்து வெச்சிட்டு போய்ட்டாறா?’ என யோசனையோடு வெளியே வந்தாள்.

பொதுவாக அவன் சொல்லாமல் சென்றாலும், அவள் வெளியேதான் நிற்பாள்.

இன்று சோகத்தில் மறந்து உள்ளே சென்றுவிட, இவனோ ‘வெளிய வராலா பாரு? நேத்து முறைச்சு பாத்துட்டு உள்ளேயே இருந்தா எப்படி போய்ட்டு வரேன்னு சொல்ல முடியும்.’ என கடுப்பாகியே சத்தமாக அழைத்தான்.

ஆனால் அவள் முகம் கண்ட பின் அவன் முகம் வழக்கம் போல இளகியது.

சொல்லிவிட்டு செல்வோம் என நினைத்தவன், இப்போது ‘எப்படி சொல்ல? சொல்லவா வேணாமா?’ என மீண்டும் லைட்டாக குழப்பினான்.

அவள் என்ன என்பது போல அவனை பார்க்கவும், “ஸ்டேஷன்க்கு கிளம்பறேன். பத்திரமா இரு.” என்றுவிட்டு டக்கென கிளம்பிவிட்டான்.

அவன் கூறியதை கேட்டு புரிந்து கொள்ளவே சில நொடிகள் ஆனது அவளுக்கு. அதற்குள் அவன் சென்றுவிட்டான்.

அவன் செல்வதை பார்த்தவள் மனதுக்குள் ஒரு இதமான உணர்வு. சொல்லில் அடங்காத மகிழ்ச்சி.

எத்தனை நாட்கள் எதிர்பார்த்திருப்பாள் இன்று நடந்துவிட்டது.

இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமா என நமக்கு தோன்றலாம். ஆனால் அது அவளுக்கு பெரிய விஷயம்தான்.

அகமும் புறமும் புன்னகையுடன் வீட்டிற்குள் வந்தவள் பொழுது… என்றுமில்லாமல் இன்று மிக இனிமையாக சென்றது.

என்றும் இந்த இனிமை தொடருமா?

»»»»

இன்று பேருந்திற்கு சற்று தாமதமாகிவிட்டாதல் வேகவேகமாக சூர்யாவும், மகாவும் நடந்து வந்தனர்.

அப்போது மகா எதிரில் ஒரு பஞ்சுமிட்டாய்க்காரர் வருவதை பார்த்தாள்.

“ஏங்க…” உடனே கணவனை அழைக்க,

“என்ன மகா?” என்றான்.

“அங்க பாருங்களேன்.” என்றதும் அந்த திசையில் வந்தவரை பார்த்தவன் அவள் எண்ணத்தை கணித்து,

“மகா லேட் ஆகுது ஒழுங்கா வா.” என கண்டிப்பாக சொன்னான்.

அவளோ, “முடியாது. எனக்கு பஞ்சுமிட்டாய் வேணும்.” என்றாள் சட்டமாக.

“குழந்தை பஞ்சுமிட்டாய்க்கு அடம் பிடிக்குது.” கடுப்பாக கூறியவன்,

“பஞ்சுமிட்டாய் சாப்படற வயசாடி உனக்கு?” என கேட்டதும் அவனை தீயாக முறைந்தவள்,

“எனக்கு ஒன்னும் அவ்ளோ வயசாகிடல. மேலும் கொஞ்சம் பெரிய பொண்ணுங்க அத சாப்பிட கூடாதுனு சட்டம் கிட்டம் இருக்கா என்ன?” என முறிக்கி கொண்டு சொல்ல, மனைவி பேசியதையும், அவளின் முக பாவனையையும் கண்டு சூர்யாவிற்கு சிரிப்புதான் வந்தது.

“கல்யாணத்துக்கு முன்ன இப்டிலாம் சொல்லிருக்கீங்களா?அப்போலாம் கியூட்னு சொல்வீங்க. இப்போ ரெண்டு மாசத்துல எனக்கு வயசாகிடுச்சு போல. அப்போ முன்ன சொன்னது பொய்… இல்லாட்டி இப்போ சொல்றது பொய்.” என அவள் சண்டைக்கு பெரிதாக அடி போட,

“அப்படி இல்லை மகா. இப்போ சாப்பிட்டா ரோட்ல போறவங்கலாம் பாப்பாங்க. ஒரு ஸ்கூல் டீச்சர் ரோட்ல நின்னு இதை சாப்டுகிட்டு நல்லாவா இருக்கு.” என புத்திசாலியாக ஒரு காரணம் கூறி மறுக்க பார்த்தான்.

அவன் என்ன கூறியும் அடம் பிடித்து வாங்கி சாப்பிட்டு கொண்டுதான் வந்தாள்.

‘தான் நெனச்சத நடத்தாம விட மாட்டாளே!’ என நினைத்தவன் நினைவுகள் எங்கெங்கோ சென்றது.

‘இவளுக்கு உண்மையிலேயே அவ பண்ண தப்பு புரியலையா?இல்ல… அத ஏத்துக்காம வீம்பு பண்றாளா?’ என குழம்பினான்.

திருமணமான புதிதில் அவர்களுக்குள் நிறைய மனகசப்புகளும் வலிகளும் இருந்தது.

ஆனால் அவர்களின் அழகிய ஆழமான காதலால், அவற்றையெல்லாம் வெகுநாட்கள் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.

யோசித்தால் பலமுறை வரும் கோபம் வருத்தம் எல்லாம், ‘எனக்காகதானே அவ்வாறு செய்தாள்.’ என்று விட்டுவிடுவான்.

அவன்மீது அவளுக்குள்ள காதலே அன்று அவ்வாறு அவளை செய்ய வைத்ததென புரியாமல் இல்லை.

ஆனால் மகா மனதில் என்ன உள்ளது என இன்றுவரை அவனால் கணிக்க இயலவில்லை.

அன்று அகத்தியனை பார்த்து அவளிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருந்ததைக் கண்டு அவன் முழுதாக குழம்பிதான் போனான்.

‘ஏன்டா ஒரு பஞ்சுமிட்டாய வாங்கி கொடுத்துட்டு என்னலாம் யோசிச்சிட்டு வர.’ என அவன் மனம் இடித்துரைக்க, அதனிடம் அசடு வழிந்தவன், அப்போதைக்கு நினைவிலிருந்து வெளிவந்து மனைவி அதனை சாப்பிட்டதன் விளைவால் ரோஸாக மாறியிருந்த அவள் இதழ்களை ரசித்துக் கொண்டே பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவள் உண்ணும் மும்மரத்தில் புரியாமல் என்ன என்பது போல பார்க்க, மனதுக்குள் ஏற்கனவே இருவரும் எடுத்திருந்த சில முடிவினால் ஏக்க பெருமூச்சுவிட்டவன் ஒன்றுமில்லை என தலையாட்டினான். 

சிறிது நேரத்தில் பேருந்து வரவும் வழக்கம் போல தன்னவளுடன் பணிக்கு கிளம்பிவிட்டான்.

 

தொடரும்…