அத்தியாயம் 1
சந்தோஷமாக முகமெங்கும் புன்னகையும், கையில் பூங்கொத்தும், மனமெங்கும் ஆர்வமும் ததும்ப, ஆட்டோவில் அந்த பிரபல மாலின் வாயிலில் இறங்கினாள் வர்ஷா.
சில்லென்று மென்மையாக வீசிய மாலை நேர காற்று, அவளை வரவேற்க, ஒருமுறை தன் மொபைல் கேமெராவில் தன்னை பார்த்துக்கொண்டவள், அதில் தெரிந்த தன் பிம்பத்திடம்,
‘டீப் பிரீத் ரிலாக்ஸ்! இதென்ன முதல் தரம் அவனை பார்க்க போகுற மாதிரி? கூல்’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சற்று வேகமாகவே, மாலினுள்ளே அமைந்திருந்த அந்த ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தாள்.
சிலநொடிகள் ரெஸ்டாரன்டின் வாசலில் நின்றவள், ‘படவா எவ்வளவு நாள் காக்க வச்சிருக்கான். சரி விடு இனிமே இங்க தானே இருக்கப்போறான், டெய்லி ஆபிஸ்ல பாத்துக்கலாம்’ மெல்லிய தலையசைப்புடன் உணவகத்திற்குள் நுழைந்தாள்.
இதே மாலை நேரம், அதே இருக்கை, சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் தன்னிடம் காதலை வெளிப்படுத்தினான் அவன், ஆதேஷ்.
“ஹாய் எப்படி இருக்கீங்க?”, பூங்கொத்தை அவன் முன்னே நீட்டியவள், “வாவ் ரெண்டே வருஷத்துல ஆளே மாறிட்டிங்க” எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
அவன் பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. அவளின் உற்சாகம் வடிந்து போக துணுக்குற்றாள்.
***
மழைமேகம் சூழ்ந்திருக்க, ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருந்த வர்ஷா,
‘வந்துகிட்டே இருக்கேன் பாட்டிகிட்ட சொல்லிடு’ தங்கை மதுவிற்கு மெஸேஜ் அனுப்பிவைத்தவள், கண்களில் சிந்திவிடுவேனென்று மிரட்டிக் கொண்டிருந்தது கண்ணீர்.
ஷேர் ஆட்டோ ஸ்பீக்கரில் எஃப்.எம்,
♫ ஒரு வார்த்தை கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்…
‘காத்திருந்து என்ன ஆச்சு, மொக்க வாங்கினது தான் மிச்சம் ‘பிரேக்கப் பண்ணிக்கலாம்’ எவ்ளோ ஈஸியா சொல்லிட்டான்’ சாலையை வெறித்திருந்தவள், இன்னும் ஆதேஷ் சொன்ன காரணத்தை மட்டும் ஏற்க முடியாமல் பொருமிக்கொண்டிருந்தாள்.
எப்பொழுது ஷேர் ஆட்டோவைவிட்டு இறங்கினாள், சாலையை எப்பொழுது கடந்தாள், அவள் வீடிருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் எப்பொழுது நுழைந்தாள் எதுவுமே அவள் கருத்தில் இல்லை.
‘எனக்கு வேண்டிய மாதிரி உன்னால இருக்க முடியாது வர்ஷா, இதுக்குமேல இதைப்பத்தி பேச எதுவுமில்லை’ அவள் பதிலுக்குகாக காத்திராமல் சென்றுவிட்டானே இதற்காகவா அவன் வருகையை எதிர்பார்த்திருந்தாள்?
இயந்திரம்போல லிஃப்ட்டிற்குள் ஏறியவள், தன் வீட்டுவாயிலை அடைந்து காலிங் பெல்லை அழுத்த,
“கதவு திறந்துதான டீ இருக்கு!”
தங்கை மதுவின் கத்தலில் சுயநினைவுக்கு வந்தவள், தன்னை மீறி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை அவசரமாக துடைத்துக்கொண்டு, முகத்தில் போலி புன்னகையை ஒட்டவைத்துக்கொண்டாள்.
“கவனிக்கல சாரி” என்று செருப்பை கிழட்ட,
“கையில தான் குடை இருக்கே எதுக்கு இப்படி நெனைஞ்சுக்கிட்டு வர? இப்போதான் அந்த ப்ருஸ் இங்க சுசு போச்சுன்னு, தரையை துடைச்சு ஃபேன் போட்டுவிட்டேன், அதுக்குள்ள இப்படி ஈரம் ஆக்கிட்டே”
அக்காவின் கையில் துவாலையை கொடுத்த மது,
“தலையை துடை மொதல்ல. மரியாதையா டிரஸ் மாத்திகிட்டு வந்து இதெல்லாத்தையும் துடைக்கிற, சாப்பிட எடுத்து வைக்கிறேன். பாட்டி ப்ரூசை விட்டுட்டு வர போயிருக்காங்க” என்றபடி சமயலறைக்குள் நுழைந்தாள் மது.
சாதாரண நாளென்றால், இப்படி ப்ருஸ் வீட்டிற்குள் வந்தததென்று தெரிந்த மறுகணமே,
“எப்போ பாத்தாலும் நாயோட என்ன விளையாட்டு? பார்க்ல வச்சு விளையாடு இல்ல அவங்க வீட்டுக்குப்போ, வீட்டுக்குள்ள எதுக்கு கூட்டிகிட்டு வர?” என்று தங்கையையும் பாட்டியையும் திட்டி தீர்த்திருப்பாள்.
மௌனமாக வேலைகளை முடித்தவள், “தலைவலிக்குது, நான் தூங்க போறேன், பசிச்சா சாப்டுக்கிறேன், பாட்டிகிட்ட எழுப்ப வேண்டாம்னு சொல்லிடு” என்றவள் தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
வாய்விட்டு அழுதால் வெளியே கேட்டுவிடுமோ என்ற பயத்தில், குளியறையில் ஷவரை திறந்துவிட்டு நின்று கொண்டவள் அதுவரை தேங்கியிருந்த அழுகையை கொட்டி தீர்த்தாள்.
அழுது அழுது ஓய்ந்தவள் எப்பொழுது உறங்கினாளென்று அவள் உணரவில்லை.
***
“பசிக்குது பீட்ஸா ஆர்டர் பண்ணுடா, ஒரு குட்டி தூக்கம் போடறேன்” என்ற விஷ்ணுவர்தன்,
“கால் ஏதும் வந்தா நீயே மேனேஜ் பண்ணிக்கோ “ என்றபடி , கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருந்த தன் அண்ணன் ரிஷிநந்தனின் முன் மொபைலை வைத்தான்.
“ம்ம் பீட்ஸா வந்ததும் எழுப்பறேன்” என்றபடி ஐஸ்க்ரீமை சுவைத்துக்கொண்டிருந்த ரிஷி,
“ஆமா இப்போவே மணி பதினொன்னு இனிமே யார் கால் பண்ணுவா?” கண்களை டிவியிலிருந்து விலக்காமல் கேட்க,
“எனக்கென்ன கேர்ள் ஃபிரெண்டா இருக்கா? எல்லாம் அந்த இத்துப்போன மேனேஜர்தான், வீட்டுலேந்து வேலைபண்றேன்னு கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கியிருக்கேன், அதான் நடுல செக் பண்ண கூப்பிடுவான்.” கட்டிலில் படுத்தபடி கத்திச்சொன்ன விஷ்ணு, காதுவரை போர்த்திக்கொண்டான்.
“ம்ம்” என்று குரல் கொடுத்த ரிஷி மொபைலில் உணவை ஆர்டர் செய்து மீண்டும் கிரிக்கெட்டில் லயித்தான்.
சிறிதுநேரத்தில் பீட்ஸா வர அதை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு அவன் திரும்ப அதே நொடி விஷ்ணுவின் மொபைல் ஒலித்தது.
அதை எடுத்தவன், “எஸ்” என்று சொல்ல,
எதிர்முனையில் ஒரு பெண் அழுது சோர்ந்த குரலில், “ஹெல்ப் மீ ” என்று வேண்ட, ஒருமுறை காதிலிருந்த மொபைலை எடுத்து திரையில் தெரிந்த நம்பரை பார்த்தவன்,
‘ஒருவேள இவனோட கேர்ள்பிரென்ட் யாராவது இருக்குமோ? ச்சே பயலுக்கு அவ்ளோ தைரியம் இல்லையே’ யோசித்தபடி மெல்ல,
“நீங்க யாரு? என்ன ஹெல்ப் வேணும்?” என்று கேட்டதுதான் தாமதம், அந்த
பெண்ணோ பெரிய கேவலுடன்,
“எனக்கு சாகனும் போல இருக்கு, உயிர் விட்றதுக்கு முன்னாடி யார்கிட்டயாவது பேசணும்போல இருக்கு…”
“நீங்க யார் பேசறீங்க?” சாய்ந்து அமர்ந்திருந்தவன், பதறி நேராக அமர்ந்தான்.
“சூசைட் செஞ்சுக்க தோணினா கால் பண்ண கொடுத்திருந்த விளம்பரத்துல, விவரம் கேட்கமாட்டோம்னு இருந்ததே?” சற்று தெளிந்த குரலில் கேட்க,
‘ஒரு வேலை ப்ராங்க் (Prank call) காலா? ச்சேச்சே பார்த்தா அபப்டி தோணலையே’
“ஹலோ இருக்கீங்களா?”
அவள் அழைத்திருப்பது தவறான எண் என்று சொன்னால், ஒருவேளை தற்கொலை செய்துகொள்வாளோ என்ற பதட்டம்வர, ஏதாவது பேசி அப்பெண்ணை காப்பற்றவேண்டும் என்று மட்டும் தீர்மானித்து கொண்டவன்,
“எஸ், சொல்லுங்க நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?” முடிந்தமட்டும் குரலை ஹெல்ப்லைன் பணியாளரை போல மாற்றிக்கொண்டான்.
“சாகறத்துக்கு முன்னாடி யார்கிட்டயாவது மனசுல இருக்கறத கொட்ட நெனச்சேன்”
“உங்க பெயரை சொல்ல முடியுமா?”
“அதெல்லாம் எதுக்கு” அவள் குரலில் பதட்டம்
“நீங்க பெயரை சொன்னாத்தானே பேசும்போது எங்களுக்கு வசதியா இருக்கும்?”
“வர்ஷா”
“சொல்லுங்க வர்ஷா, நான் உங்களுக்கு எப்படி உதவலாம்”
“அவனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா?”
‘எவனை?’
“…”
“அவன் என்னை வெ…வெ…ன்னன்னு சொல்லிட்டான்” திக்கி திக்கி அவள் தேம்ப
ஒரு நொடி சிரித்துவிட்டவன், “வெண்ணைன்னு சொன்னதுக்கா அழறீங்க?”
“என்ன?” அவள் ஒருநொடி அழுகையை நிறுத்த, சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டவன்.
“சாரி சொல்லுங்க”
“வெண்ணை இல்ல வேணாம்ன்னு சொ..சொல்லிட்டான்” மறுபடி அழத்துவங்கியவள், தானே சமாதானம் ஆகும் வரை பொறுமையாக காத்திருந்தான்.
அவளே தொடர்ந்தாள், “ரெண்டு வருஷமா அவனுக்காக காத்துகிட்டு இருந்தேன்” அவள் அழ துவங்க
‘போச்சு யாரோ லவ் ஃபெயிலியர், யாருடா நீ லூசுப்பயலே! எதுக்குடா இவளை விட்டு போன? நான் கெடந்து முழிக்கிறேன்’ அவளை தேற்றுவதா வேண்டாமா என்று புரியாமல் தவித்தவன், அவள் அழுகையுடன் எதோ சொல்ல, அர்த்தம் செய்துகொள்ள முடிவில்லை அவனால்.
“நீங்க அழுதுகிட்டே இருந்தா எனக்கு நீங்க பேசுறதே புரியல மிஸ் வர்ஷா. ப்ளீஸ் பொறுமையா சொல்லுங்க”
“நான் என்ன செய்ய முடியும்? அவன் சொல்றமாதிரி என்னால இருக்க முடியலையே”
‘என்னடா சொன்னே அப்படி? ஒருவேளை மேக்கப் போடாம செல்ஃபி அனுப்ப சொல்லியிருப்பானோ?’
“இருக்கீங்களா சார்?”
“எஸ்! ப்ளீஸ் நீங்க கன்டினியூ பண்ணுங்க”
“அப்படியெல்லாம் இருந்தாதான் காதலா? நான் என்னதான் செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்க”
‘எப்படி இருக்கணும்? முன்னபின்ன காதலிச்சதானே இதெல்லாம் தெரியும்?’ முகம் தெரியா பெண்ணிடம் அதுவும் சாவின் விளிம்பில் நிற்பவளிடம் கேட்பதா வேண்டாமா என்று அவன் தயங்க, தானே காரணத்தை அவள் சொல்ல, கோவம் தலைக்கேற,
“ப்ளாடி பேஸ்கெட் அப்படி ஒருதனுக்காக அழுதுகிட்டு இருக்கீங்க? உங்களுக்கே யோசிச்சுப்பாத்தா லூசுத்தனமா இல்ல? ”
“ப்ளீஸ் அவரை தப்பா பேசாதீங்க, ஒருவேளை வெளிநாட்டுக்கு போனதால இப்படித்தான் இருக்கணும்னு நினைச்சுட்டாரோ என்னவோ, நான் தான் அப்படிலாம் மாற முடியாம…”
காதலிக்கும் பெண்ணிடம் கீழ்த்தாரமான எதிர்பார்ப்பினை வைத்திருந்தவனை விடுத்து , தன் மேல் பழிபோட்டுக்கொள்ளும் இந்த பெண்ணை என்ன சொல்வது, புரியாதவனுக்கு அந்த முகம்தெரியா ஆணின்மேல் பொங்கி வந்த கோவத்தை கட்டுப்படுத்த முயன்றவன், முடிந்தவரை நிதானமாகவே பேசினான்.
“ம்ம், சொல்லுங்க மிஸ்.வர்ஷா”
“சாகனும்னு முடிவு எடுத்ததுமே எல்லாம் ரெடி பண்ணிட்டேன். அப்போதான் யார்கிட்டயும் சொல்லிக்காம கிளம்ப வேண்டாமுன்னு ஹெல்ப்லைன்க்கு கால் பண்ணேன்”
‘என்னமோ ஊருக்கு கிளம்புற மாதிரில்ல சொல்றா’
“என்ன ஏற்பாடு செஞ்சுருக்கீங்க மிஸ்.வர்ஷா?”
“டேப்ளெட்ஸ், கத்தி, கயிறு,…..” அடுக்கிக்கொண்டே போனவள் “அப்புறம் மொட்டைமாடி” என்று ஒருவழியாக முடித்தவள், யோசனையுடன், “எதை யூஸ் பண்றதுன்னுதான் புரியலை” என்று சொல்ல,
‘என்ன மளிகை கடை லிஸ்ட் மாதிரி சொல்லறா?’
அழுது புலம்பி ஓய்ந்தால் மனம் லேசாகி மனதை மாற்றிக்கொள்வாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ சாக தான் செய்துவைத்திருக்கும் வழிகளை சொல்ல, பதட்டம் மீண்டும் அவனை தொற்றிக்கொண்டது,
அவள் மொபைல் நம்பரை 100க்கு அழைத்து கொடுத்துவிடுவோமா என்று நினைத்தவன், ஏனோ அதற்க்கு முன் தானே பேசி அவள் மனதைமாற்ற முயற்சிக்க எண்ணினான்.
“என்ன டேப்ளெட்ஸ் வச்சிருக்கீங்க?”
மாத்திரையின் பெயரை அவள் சொல்ல, அவசரமாக தன் கைபேசியில் அதை கூகிள் செய்தவன், ‘ப்ளாடி பேஸ்கெட் ஸ்லீப்பிங் பில்’ ஆழ்ந்த மூச்சொன்றை வெளியேற்றியவன்,
“கேக்கறேன்னு தப்பா நினைக்க கூடாது”
தீர்மானமாக, “சூசைட் பண்ணிக்காதேன்னு மட்டும் சொல்லாதீங்க நான் கேட்கமாட்டேன்” என்றவள் அழுகை முற்றிலும் நின்றிந்தது அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கையை தந்திருந்தது,
“நோ ஜஸ்ட் நீங்க என்ன வெயிட்ன்னு சொல்ல முடியுமா?”
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?”
“சொல்லுங்களேன்”
“அறுபத்தாறு” அவள் தயங்கி தயங்கி சொல்ல,
“உங்க உயரம்?”
“இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?”
“ப்ளீஸ்…”
“155 சென்டிமீட்டர்”
“எவ்ளோ டேப்ளெட்ஸ் வச்சிருக்கீங்க?”
அவள் சொல்ல,
“அச்சோ சாரி மிஸ் வர்ஷா”
“என்ன சார்?”
“நீங்க சொல்ற டேப்ளெட்ஸ், உங்க பாடி வெயிட் எல்லாம் கேல்குலேட் பண்ணா, வெரி சாரி, உயிர் போகாது கண்டிப்பா பேதி புடுங்கும் மத்தபடி நோ யூஸ். ஆமா யார்து டேப்லெட்?”
சிலநொடிகள் மௌனம் காத்தவள், “பாட்டியோட மாத்திரை…சரி விடுங்க கத்தி வச்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்”
‘மேனேஜ் பண்ணிக்கிறியா?’’
“என்ன மாதிரியான கத்தி மேம்?” அவன் ஆர்வமான குரலில் கேட்க,
“காய் நறுக்குற கத்திதான்”
அவனோ கோவமாக, “ச்சே பாவம் பொண்ணு, இவ்ளோ பெரிய வருத்தத்துல இருக்கீங்கன்னு, என் தொழில் தர்மத்தை மீறி, ரிஸ்க் எடுத்து உதவ பார்த்தேன், நீங்க இவ்வளவு பெரிய சுயநலவாதின்னு தெரியாம போச்சு! நீங்க ஃபோனை வைங்க!”
“நான் என்ன பண்ணேன் சார்?” அவள் குரலில் பதற்றம்.
“பின்ன என்ன மிஸ் வர்ஷா? மொதல்ல பாட்டியோட மாத்திரையை திருடி..ச்சேச்சே அவங்க தூங்க இனிமே அந்த மாத்திரையை சாப்பிட முடியுமா, உங்க ஞாபகமாவே வராதா? இனி எப்படி தூங்குவாங்க?
சரி அதை விடுங்க. வீட்ல சமையலுக்கு வச்சுருக்க கத்தியை வச்சு இப்படி செஞ்சுக்கிட்டா ஆயுசுக்கும் உங்க அம்மா எப்படி கத்தியை பிடிச்சு காய் நறுக்க முடியும்?
கத்தியை பார்த்தாலே அவங்களுக்கு உங்க நினைவுதான் வரும்? அவங்க சமைக்காம, சாப்பிடாம குடும்பமே பட்டினி கெடந்து உங்க பாஷைல சொன்னா கிளம்பணுமா? ஹொவ் செல்ஃபீஷ் யு ஆர்” கோவமாக குற்றம் சாட்டினான்.
“அம்மா ஊர்ல இருக்காங்க பாட்டிதான் சமைக்கிறாங்க…”
“ஓஹ் மை காட்! நான் நெனைச்சத விட உங்களுக்கு கல்நெஞ்சம்!” அவன் கத்தியதில் பதறியவள்,
“சார் ப்ளீஸ்…” அவள் சொல்ல வந்ததை கேட்காதவன்,
“பாட்டி? பாட்டி?…வயசானவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க அந்த கத்தியை பார்க்கும்போதெல்லாம் உங்கள நினைச்சு சமைக்காம…பசிபொறுக்க முடியுமா? நீங்க ஃபோனை வைங்க” அவன் கத்த,
“சரி சரி வேற கத்தியை எடுத்துக்கறேன். பழைய கத்தி ஒன்னு இருக்கு” அவனை சமாதானம் செய்தாள்.
‘சரியான லூசு’
“நீங்க என்ன படிச்சுருக்கீங்க மிஸ் வர்ஷா?”
“எதுக்கு?”
“சொல்லுங்க” அவன் குரலில் அதிகாரம் தலைகாட்டியது
“கம்ப்யூட்டர் எஞ்சினீரிங்”
“வேஸ்ட், நாலுவருஷ படிப்பு வேஸ்ட்”
“ஏன்?” அவள் குரலில் கோவம்
“பின்ன? பழைய மொக்க கத்திய வச்சு கட் பண்ணிக்கிட்டா உசுரு போகாது, இன்ஃபெக்க்ஷன் ஆகி கையே போயிடும். இந்த அடிப்படை அறிவு கூடவா இருக்காது? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்?” ஏளனமாக அவன் சொல்ல,
“சரி இப்போ என்ன பண்ண சொல்றீங்க?” கடுகடுத்தாள்
“நெக்ஸ்ட் ஆப்ஷன் சொல்லுங்க”
“கயிறு கொடிக்கயிறு, இதுக்கென்ன துணிகாயப்போடும் போதெல்லாம் என் ஞாபகம் வரும்னு சொல்ல போறீங்க அதான?” பழித்தாள்
அவனோ சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, “இல்லை, நீங்க அந்த கயிறை எங்க மாட்ட போறீங்க?”
சிலநொடி யோசித்தவள், “ஃபேன்” என்று மட்டும் சொல்ல,
சிரித்தேவிட்டவன், “மேம் நீங்க சொன்ன வெயிட்டுக்கு ஃபேன் உங்க வெயிட் தாங்காம, உங்க தலையில விழுந்து மண்டை உடைஞ்சு கட்டு போட்டுக்கிட்டு சுத்தலாமே தவிர நீங்க நினைக்கிற பலன் கிடைக்காது! உசுருக்கு முன்னாடி ஊளை சதையை நீங்க தியாகம் பண்ணனும்” அவன் ஏளனமாக சொல்ல,
கோவம் தலைக்கேறியது அவள் விடும் மூச்சுக்காற்றின் சத்தத்தில் உணர்ந்துகொண்டான்,
“நெக்ஸ்ட்”
“வுடுங்க எதுசொன்னாலும் ஏதான சொல்லுவீங்க, நான் பேசாம மொட்டை மாடிக்கு போறேன்” அலுத்துக்கொண்டாள்.
“எத்தனாவது மாடில மொட்டைமாடி இருக்கு?”
“அஞ்சாவது…இதுல ஒன்னும் நீங்க சொல்ல முடியாது சார்” ஏளனமாகவே பதில் தந்தாள்
“ரொம்ப பெருமை வேண்டாம் மிஸ். இங்கயும் நீங்க தப்பு பண்றீங்க” அவன் குரலிலும் ஏளனம்.
“என்ன? என்ன…என்ன?” அவள் பதற்றம் , ரிஷிக்கு நம்பிக்கையை தந்தது.
“பின்ன? இந்த உயரதிலிருந்து குதிச்சா கை கால் போகலாம் இல்ல, நீங்க லக்கியா இருந்தா அதெல்லாம் பத்திரமா இருக்கும் என்ன…ஆயுசுக்கும் படுக்கையில கிடக்கணும் இல்ல கோமால இருக்கணும், உசுரு போக வாய்ப்புதான் கம்மி.”
“போங்க சார்! சரி விடுங்க நான் நாளைக்கி தண்ணில குதிச்சு கிளம்பறேன்”
‘அடங்கமாட்டா போல இருக்கே!’
“நீங்க எங்க இருக்கீங்க?” வேகமாகவே அவன் கேட்க, சிலநொடி அமைதியானவள்,
“அட்ரஸ் தரமாட்டேன், நீங்க பெர்சனல் டீட்டெயில்ஸ் கேக்கமாட்டேன்னு விளம்பரம் செஞ்சுருக்கீங்க” நினைவூட்டினாள்.
“எந்த ஊருன்னாவது சொல்லுங்க, காரணமாத்தான் கேக்குறேன்”
“சென்னை தான்”
‘அறிவு கொழுந்து! வாடி வா’
“சென்னைல எங்க தண்ணி இருக்கு போயி குதிக்க?”
“அந்த பை பாஸ் ஏரி…”
“ஸ்டாப்! ஏரி? நம்பவே முடியலை. ஊரே தண்ணி குடிக்க அந்த ஏரியத்தான் நம்பிக்கெடக்கு, அதுல குதிச்சு செத்து, தண்ணியை கெடுத்து, சென்னையே தாகத்துல தவிக்க வைக்க நினைக்கறீங்க?” அவன் கோவம் அவளை வருத்தியது போலும்,
“பீச்…கூவம்…?”
“கூவத்துல? அங்க தண்ணியை விட குப்பைதான் ஜாஸ்தி, வியாதி வேணா வரலாம், எம பட்டின டிக்கெட் கிடைக்காது. அப்புறம் என்ன சொன்னீங்க? பீச்?” உரக்க சிரித்தவன், “அங்க குதிச்சா தண்ணீல மூழ்கி சாகரத்துக்கு முன்னாடி மீனும், சுறாவும் கடிச்சு, உடம்பெல்லாம் ரத்தம் கொட்டி, சதையெல்லாம் பிஞ்சு…” அவன் குரலில் தெரிந்த அருவருப்பில் பதறியவள்
“ஐயோ சார் சொல்லாதீங்க பயமா இருக்கு” என்று கெஞ்ச
“அடுத்து?”
“ஒன்னும் தோணல எதை சொன்னாலும் ஏதாவது சொல்றீங்க…” அலுத்து கொண்டவள், “சரி சார் நான் ஏதாவது ட்ரை பண்ணிக்கிறேன், உங்க கூட பேசினது நல்லதா போச்சு. பை” அவள் அழைப்பை துண்டிக்க எத்தனிக்க,
ஒருநொடி ரிஷியின் மூளை தாறுமாறாக யோசிக்க, “வெயிட் வெயிட” என்று கத்திவிட்டான், அவன் குரலில் விஷ்ணு தூக்கம் கலைந்து ஓடிவர,
“மிஸ் வர்ஷா. ஒரு செக்கெண்ட் நான் உங்க கூட பேசின எல்லாமே கம்பெனில ரெகார்ட் செஞ்சுருப்பாங்க”
“அதுக்கு?”
“என் வேலையை ஒழுங்கா செய்யலைன்னு என் மேனேஜர் என்னை…” ரிஷியின் குரல் உடைய, அவன் முன்னே குழப்பத்துடன் நின்றிருந்த விஷ்னு, என்னவென்று செய்கையால் வினவ, கையை காட்டி கண் சிமிட்டி ‘ஒன்றுமில்லை’ என்று சொன்னவன் மொபைலில், போலியான அழும் குரலில்,
“ஐயோ குடும்பமே என் ஒருத்தனோட சம்பளத்தை நம்பித்தானே இருக்கு! பகல்ல ஒரு வேலை, ராத்திரி ஒரு வேலைன்னு நிம்மதியா சாப்பிடக்கூட நேரமில்லாம, இதுல இப்போதான் எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு…”
“அழாதீங்க சார், இதுக்கு நான் என்ன தான் செய்யட்டும்?”
‘இதானே எனக்கு வேணும்’
“விடுங்க! உங்க பாட்டியை, குடும்பத்தை, ஏன் சென்னையை பத்தியே யோசிக்காத நீங்க…என்னை பத்தியா யோசிப்பீங்க?” அவன் குரலில் தெரிந்த ஏளனமும் குற்றம்சாட்டலும் அவளை அசைத்து போல,
“இல்ல சொல்லுங்க ப்ளீஸ், என் கஷ்டத்தை கேட்டு, தப்பா சொதப்பாம சாக ஹெல்ப் பண்றீங்க. என்ன செய்யணும் சொல்லுங்க ப்ளீஸ்”
“என் கிட்ட பேசிட்டு நீங்க உடனே செத்துட்டா, என் ரெகார்டுல தப்பா மார்க் செஞ்சு என்னை…ஐயோ” அவள் போலியாய் அலற, விஷ்ணு வாயை பொத்தி சிரிக்க,
அவளோ , “இல்ல இல்ல…இருங்க..ஆனா எனக்கு வாழவே பிடிக்கலையே..என்ன செய்வேன்” அவள் தயங்க
“நீங்க சுயநலவாதின்னு எனக்குதான் தெரியுமே! என் வேலை, என் கல்யாணம், என்னை நம்பி இருக்க என் குடும்பம், எதையுமே நீங்க யோசிக்கவேண்டாம், உங்க குடும்பத்தை பத்தியே யோசிக்காத நீங்க என்னை பத்தி எப்படி? அதான் உங்களை வளத்துவிட்ட சென்னையவே நீங்க நெனச்சு பாக்கல,
கடைசில நீங்க சாகறேன்னு, என்னை தற்கொலைக்கு தூண்டறீங்க! தேவையில்லாம எனக்கு கால் பண்ணி, என் வாழ்க்கையையும் இப்படி குட்டி சுவராக்கிடீங்களே!” கோவமும் வருத்தமும் குற்றம் சாட்டலுமென அவன் சொல்ல, அவளுள் எதோ மாற்றம்,
“சரி சரி நான் இன்னிக்கி கிளம்பல, நாளைக்கு வேணா..”
“கம்பெனி காரங்க என்ன லூசா? நீங்க கால் பண்ணப்போவே உங்க நம்பரை நோட் பண்ணியிருப்பாங்க இனிமே ஒரு மாசத்துக்கு உங்களை அவங்க ஃபாலோ பண்ணுவாங்க, நீங்க தெரியாத்தனமா அடிபட்டுக்கிட்டா கூட என் தலையை உருட்டுவாங்க.
போச்சு போச்சு என்னையே கல்யாணம் செஞ்சுக்க எனக்காக ரெண்டு வருஷமா காத்துகிட்டு இருக்க பொண்ணுக்கு நான் பதில் சொல்லுவேன்?
உங்களுக்கு உங்க காதல் தோல்விதான் முக்கியம், நானும் என் மாலதியும் செத்தா உங்களுக்கென்ன? என் சம்பாத்தியம் இல்லாம என் குடும்பம் பசியில…ஐயோ கடவுளே இந்த கால் எனக்கு வராமலே இருந்திருக்கலாமே” அவன் அலற, விஷ்ணு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணில்நீர் வர வாயை பொத்திக்கொண்டான்.
“ப்ளீஸ் சார்! ப்ளீஸ்! உங்கள அப்படி கஷ்ட படுத்தமாட்டேன். நான் யாரையுமே கஷ்ட படுத்த நினைக்க மாட்டேன் சார்” அவள் மெளனமாக,
“அப்போ?” அவன் போலியாக தேம்ப,
“ஒரு மாசம் கழிச்சு ட்ரை பண்றேன், அதுவரை கிளம்ப மாட்டேன்”
‘பெரிய பிஸ்னஸ் ட்ரிப் ஒத்தி வைக்கிறாளாமா, என்னை மீறி எப்படி தற்கொலை செஞ்சுக்கறேன்னு பாக்குறேன்’
“இதுவும் ரெகார்ட் ஆகுமே ஐயோ” அவன் அலற,
“ஓஹ் காட்! நான் சூசைட் பண்ணிக்க மாட்டேன்! யார் இந்த ரெக்கார்டிங்கை கேக்குறீங்களோ, இந்த கவுன்சிலர் மேல தப்பில்லை, ப்ளீஸ் அவரை எதுவும் தண்டிக்காதீங்க” அவள் கேட்டுக்கொள்ள, ரிஷிக்கே சிரிப்பு பீறிட வாயை பொத்திக்கொண்டான்.
“இந்த உதவியை என்னிக்கும் நான் மறக்கவே மாட்டேன்”
“உதவ வந்த உங்களையே கஷ்டப்படுத்திட்டேன். சாரி”
“பரவால்ல”
“தேங்க்ஸ் சார்…நான் வச்சுடவா?”
“ஒரு சின்ன ஹெல்ப்…”
“சொல்லுங்க”
“இந்த கால் கட் பண்ணதும் உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் வரும் அதுல ரேட்டிங் நம்பர் போட்டு, உங்க கருத்துக்களையும் அனுப்பி வச்சா சம்பளம் ஏத்தி தருவாங்க. ப்ளீஸ்”
“கண்டிப்பா ரிப்ளை பண்ணறேன். குட் நைட், தேங்க்ஸ்”
“தேங்க்ஸ் எங்க ஹெல்ப்லைனை அழைத்தமைக்கு நன்றி” என்றவன், அழைப்பை துண்டித்து, உரக்க சிரிக்க, திருதிருவென முழித்துக்கொண்டு அவன் முன்னே நின்ற விஷ்ணுவிடம் நடந்ததை சொன்னான்.
“அவ மனச மாத்துறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு” நீரை பருகியவன்,
“அந்த மாறி கர்மம் பிடிச்சவனுக்கு இப்படி ஒரு பொண்ணு கொஞ்சம் அப்பாவி போல தெரியுது ஆனா விவரமாவும் தெரியுது, என்னமோ நல்லபடியா மனசு மாறி வாழ்ந்தா சரி”
“விடு இவ்ளோ பேசியிருக்கே, கண்டிப்பா ஒழுங்கா இருப்பா, மறக்காம அந்த ரேட்டிங் கேட்டு மெசேஜை அனுப்பிவை” என்று சிரித்த விஷ்ணு, பிட்ஸா பெட்டியை திறந்து,
“என்னடா ஆறிப்போச்சு? எழுப்பியிருக்கலாம்ல?” சோகமாக உதட்டை சுழிக்க,
“ஒருத்தி சாகறேன்னு போன் பண்ணறா, பீட்ஸாவா முக்கியம்? மைக்ரோவேவ் சுட வை. மெசேஜ் அனுப்பிட்டு வரேன்” என்றவன் வர்ஷாவுக்கு மெசேஜ் செய்துவிட்டு கையோடு அவள் நம்பரை தன் மொபைலில் குறித்துக்கொண்டான்.