உன்னாலே – 02

eiAPZYF37537-ac7f88a3

உன்னாலே – 02

 

கார்த்திக் அதிர்ச்சியோடு ராகினி தட்டி விட்டுச் சென்ற கன்னத்தை தொட்டு பார்த்து கொண்டே அந்த அறையில் அப்போது என்ன நடந்தது என்று தன் சிந்தனைகளை சற்று பின் நோக்கி நகர்த்த அவளது உரிமையான பேச்சு, தொடுகை எல்லாம் அவனுக்கு ஏனோ மிகவும் விசித்திரமாக தென்பட்டது.

‘எப்படி இவளால் இவ்வளவு உரிமையாக என்னோடு ஒரே நாளில் பேசிப் பழக முடிகிறது? எனக்கு அவளை நிமிர்ந்து பார்க்கவே ரொம்ப சங்கடமாக இருக்கு ஆனா இவ இவ்வளவு ஈஸியாக பேசுறா! எப்படி? ஓ காட்! கல்யாணம் ஆன முதல் நாளே எனக்கு கிறுக்கு பிடிச்சுடும் போல இருக்கே! இப்போ இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு பேசாமல் போய் தூங்குனால் தான் சரி!’ அயர்ந்து தூங்கும் ராகினியைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு தொந்தரவில்லாமல் அந்த விசாலமான கட்டிலின் மறு ஓரமாக சென்று படுத்துக் கொண்டவன் சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவிக் கொண்டான்.

பெரியவர்களின் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாயிற்று என்ற ஒரு மனநிலையுடன் தான் கார்த்திக் அந்த நாள் வரை தன் திருமணத்தை பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறான் ஆனால் இந்த திருமணத்தின் பிண்ணனியில் ராகினியின் காதல், அவளது விடாமுயற்சி, அவள் தன் காதல் மேல் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை என எல்லாவற்றையும் அவன் தெரிந்து கொண்டால் இதே போன்று இயல்பாக அவனால் இருக்க முடியுமா? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்!

காலை நேர சூரிய வெளிச்சம் பால்கனிப் புறமாக இருந்த கண்ணாடித் தடுப்பு கதவின் வழியே ராகினியின் முகத்தில் வந்து விழ தன் கண்களை கசக்கிக் கொண்டு மெல்ல விழி திறந்து கொண்டவள் தன் முகத்தின் அருகில் தூங்கி கொண்டிருந்த அவள் மனம் கவர்ந்த மனாளனின் முகத்தில் தான் கண் விழித்தாள்.

அவன் முகத்தை எத்தனை முறை பார்த்தாலும் அவளுக்கு சலிப்புத் தோன்றவே தோன்றாது.

இது நாள் வரை தொலைவிலும் ஒளிந்து, மறைந்தும் பார்த்த தன் காதலன் முகத்தை இப்போது கணவன் என்ற உரிமையோடு தன் அருகில் பார்த்தால் அவளுக்கு சலிப்புத் தோன்றுமா என்ன?

முறையாக சரி செய்யாத அடர்ந்த புருவங்கள் இரண்டின் கீழும் இருக்கும் அவனது விழிகள் அவளைக் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே இமைகளால் மூடப்பட்டிருக்குமோ என்று எண்ணியபடி அவனது முகத்தை பார்த்து கொண்டிருந்த ராகினி
‘காலக் கொடுமை ராகினி! வழக்கமாக இப்படி சீனில் எல்லாம் வீட்டுக்காரன் தான் மனைவி முகத்தை பார்த்து ரசிச்சு கவிதை கவிதையாக சொல்லுவானாம் ஆனா என் நிலைமை நான் தான் அவரோட முகத்தை பார்த்து ரசிக்கணும்! ஆனாலும் பரவாயில்லை என்னோட காதல் ரொம்ப வித்தியாசமானது தானே! இது வரைக்கும் சொல்லப்படாத காதல்! கூடிய சீக்கிரம் உணரப்படப் போகும் காதல்!’ என தனக்குள்ளேயே பேசிக் கொண்டபடி இருக்க சரியாக அந்த தருணம் பார்த்து அவனது இமைகள் இரண்டும் சுருங்க ஆரம்பித்தது.

‘அய்யய்யோ! நிஜமாகவே கார்த்தி கண்ணை முழிச்சு பார்க்கப் போறாரோ? ராகினி இது தான் வாய்ப்பு! நல்லா தூக்கத்தில் இருக்குற மாதிரி நடிக்கத் தொடங்கு அவரு அப்படியே உன்னை பார்த்து மெர்சல் ஆகப்போறாரு! கம் ஆன் ராகினி!’ அவனின் சிறு இமை அசைவை வைத்தே பல்வேறு விதமாக தனக்குள் பேசி சிரித்துக் கொண்டவள் வெகு இயல்பாக தன் முகத்தை வைத்துக் கொண்டு தூங்குவது போல பாவனை செய்ய மறுபுறம் இருந்து எந்தவொரு அசைவுமோ,சத்தமோ வரவில்லை.

‘என்ன இது ஒரு மாற்றத்தையும் காணோம்? ஒருவேளை மெய் மறந்து போயிட்டாரா? எதற்கும் செக் அப் பண்ணி பார்க்கலாம்’ என்றவாறே மெல்ல மெல்ல ராகினி தன் கண்களை திறக்க அங்கே அவளது ஆசை கணவன் அவளுக்கு முதுகு காட்டி தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனது அந்த நிலையைப் பார்த்ததுமே காற்றிழந்த பலூன் போல அவளது முகம் வாடிப் போய் விட
‘இப்படி மற்ற பக்கம் மாறி தூங்குறதற்காகவா அவ்வளவு ரியாக்ஷன் இந்த முகத்தில் வந்துச்சு? என்ன கொடுமை சரவணா! இல்லை இல்லை என்ன கொடுமை கார்த்திக்!’ கார்த்திக்கிற்கு அடிப்பது போல தன் கையை கொண்டு சென்றவள் பின்னர் ஏதோ ஒரு தயக்கத்துடன் தன் கையை பின்னிழுத்துக் கொண்டு சிறு சோர்வுடன் குளியலறையை நோக்கி நகர்ந்து சென்றாள்.

சிறிது நேரத்தில் குளித்து முடித்து விட்டு அவள் தயாராகி வர அதேநேரம் கார்த்திக்கும் அந்த அறையில் தயாராகி கொண்டு நின்றான்.

“ஹேய் நீங்க எப்போ எந்திரிச்சீங்க? குளிக்காமலேயே ரெடி ஆகிட்டீங்களா?” ராகினி அவனை ஒரு மார்க்கமாக ஏற இறங்க பார்த்தபடி வினவவும்

அவசரமாக அவள் முன்னால் வந்து நின்றவன்
“சீச்சீ நான் அப்படி எல்லாம் இல்லை! பக்கத்து ரூமில் இன்னொரு வாஷ்ரூம் இருக்கு அதை யூஸ் பண்ணிக்கிட்டேன் அந்த ரூமை கெஸ்ட் ரூமாக பாவிப்போம்” என்று கூற

சிறிது நேரம் தன் கன்னத்தில் தட்டியபடியே யோசித்தவள்
“அப்போ இப்போ அந்த ரூம் ஃப்ரீயா தானே இருக்கு?” என்று கேட்டாள்.

“ஆமா ஏன்?”

“இல்லை இப்போ மட்டும் தனியாகத் தான் வாஷ்ரூம் பாவிப்பேன்னு அந்த ரூமிற்கு போகத் தெரிஞ்ச ஆளுக்கு நைட் மட்டும் தனியாகத் தூங்க தெரியாதோன்னு…”

“இல்லை இல்லை நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை லேட் ஆச்சுன்னு தான் அங்கே போனேன் வேறு எதுவும் இல்லை”

“அப்படியா?” ராகினி நமுட்டு சிரிப்போடு அவனைப் பார்த்து கேட்கவும்

சட்டென்று தன் பார்வையை திருப்பிக் கொண்டவன்
“அம்மா அப்போவே தேடி வந்தாங்க கீழே போகலாமா நேரம் ஆகுது!” பேச்சை வேறு பக்கம் திருப்ப சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் அதே புன்னகை நிறைந்த முகத்துடன் அவனைத் தாண்டி நடந்து சென்றாள்.

மஞ்சள் நிறத்தில் மெரூன் நிற பட்டி பிடிக்கப்பட்டிருந்த ஷிஃபான் சேலையை தன் கால்களில் சிக்கி கொள்ளாதபடி ஒரு கையால் பிடித்து கொண்டு மறு கையால் தன் காதோரம் விழுந்து கிடந்த முடிக்கற்றைகளை விலக்கி விட்டபடியே தன் முன்னால் நடந்து செல்லும் ராகினியைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டவன்
‘யப்பா! இவ என்ன இவ்வளவு கேள்வி கேட்குறா? பார்க்கத் தான் சின்ன பொண்ணு மாதிரி இருக்கா ஆனா பேச்சு எல்லாம்! இவ கிட்ட கொஞ்சம் விவரமாகத் தான் பேசணும் போல!’ குழப்பம், பயம் மற்றும் வியப்பு என கலவையான உணர்வுகள் ஒன்று சேர தனக்குள் பேசிய படியே அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

“குட் மார்னிங் அண்ணி! என்ன அண்ணி இவ்வளவு நேரத்திற்கு அதுவும் காலையில் ஒன்பது மணிக்கே எழுந்துரிச்சுட்டீங்க போல!” துளசி ராகினியின் தோளில் விளையாட்டாக இடித்தபடியே கேட்கவும்

“அது நேற்று ஒரே டயர்டா இருந்துச்சு துளசி அது தான் அசந்து தூங்கிட்டேன் இல்லைன்னா வழக்கமாக நான் காலையில் நேரத்திற்கே எழும்பிடுவேன் உனக்கு தெரியும் தானே?” இயல்பாக புன்னகைத்த படியே ராகினி பதிலளிக்க

“ஓஹோ! ரொம்ப டயர்டோ?” இளையவள் வேண்டுமென்றே தன் கன்னத்தில் தட்டி யோசிப்பது போல பாவனை செய்து கொண்டு நின்றாள்.

“ஆமா டா துளசி ரொம்ப…. ஹேய் இரு இரு! நீ எதைப் பற்றி கேட்குற?”

“நீங்க எதைப் பற்றி சொன்னீங்களோ அதைப் பற்றி தான் நானும் கேட்கிறேன்”

“நான் கல்யாண சடங்குகள் எல்லாம் செய்தோம் இல்லையா அதைத் தான் சொன்னேன்”

“நானும் அதைப் பற்றி தான் கேட்டேன் நீங்க இப்போ திரும்ப திரும்ப கேட்கிறதை வைத்து பார்க்கும் போது தான் வேறு எதுவும் இருக்கிற மாதிரி இருக்கே! என்ன அண்ணியாரே? என்ன விஷயம்?” துளசி ராகினியைப் பார்த்து கண்ணடித்தவாறே சற்று தள்ளி தன் தந்தையுடன் பேசிக் கொண்டு நின்ற கார்த்திக்கை ஜாடையாக காட்டி வினவ

“உனக்கு வர வர வாய் ரொம்ப ஜாஸ்தி பேசாமல் சாப்பிட போகலாம் வா!” வெட்கத்தில் சிவந்த தன் முகத்தை அவளுக்கு காட்டிக் கொள்ளாமல் மறைத்தபடி அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்ற ராகினி டைனிங் ஹாலில் நின்று கொண்டிருந்த தன் அத்தைக்கு உதவி செய்வது போல நொடிக்கு ஒரு தடவை தன் கணவனையே காதலுடன் பார்த்து கொண்டு நின்றாள்.

கார்த்திக் சென்னையில் இருக்கும் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்களில் ஒருவன்.

பங்குச்சந்தை வியாபாரத்தில் எப்பொழுதும் அவனது கணக்கு நஷ்டமடைந்தது இல்லை.

‘போர்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்று ஒரு சிலரை குறிப்பிட்டுச் சொல்லுவார்கள் அப்படி சொல்லக்கூடிய ஒருவன் தான் கார்த்திக்.

கார்த்திக்கின் தந்தை மோகனும் பங்குச்சந்தை வியாபாரத்தில் முதன்மையானவராக இருந்தவர் தான் அவரைத் தொடர்ந்து இப்போது அவரது வாரிசான கார்த்திக் அந்த வேலையை செய்து வருகின்றான்.

கார்த்திக்கின் அன்னை சகுந்தலா பொறுப்பான இல்லத்தரசி அவனது முதலாவது பெண் தோழி.

கார்த்திக் கலகலப்பாக பேசிப் பழகும் அவனது இரண்டாவது பெண் தோழி அவனது தங்கை துளசி, பி.எஸ்.சி மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

கார்த்திக்கிற்கு அவனது வீட்டில் உள்ளவர்கள் தான் முதன்மையானவர்கள் அவர்கள் என்ன சொன்னாலும் எதிர்த்து பேச மாட்டான் தன் நல்லதைத் தானே அவர்கள் விரும்புவார்கள் என்று எண்ணி அவர்கள் சொன்னதை செய்து விடுவான்.

அவனது நட்பு வட்டமும் மிகவும் குறுகியது பெண் தோழிகள் என்று யாரையும் அவன் தன்னோடு நெருங்கி பழக விட்டதில்லை அதற்காக யாருடனும் பேசாமல் இருக்க கூடியவனும் அல்ல.

தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் தன் வீட்டினருடன் அவன் செய்யும் சேட்டைகள் அளவில்லாதது.

இன்னும் சொல்லப்போனால் அந்த துடுக்குத்தனம், வெளியில் இருக்கும் அமைதி தன்மை என எல்லாவற்றையும் பார்த்து தான் ராகினி அவனை நேசிக்கவே ஆரம்பித்தாள்.

“என்ன அண்ணி நின்னுட்டே கனவா?” துளசி ராகிணியின் காதில் மெல்லமாக வினவ

தன் பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்
“என்ன பண்ணுறது துளசி? உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க முன்னாடியும் சரி கல்யாணம் பண்ண பின்னாடியும் சரி இப்படி கனவு மட்டும் தான் காண முடியுது என்ன இருந்தாலும் உங்க அண்ணன் உன்னை மாதிரி விவரம் இல்லையே!” தன் முகத்தை வெகு இயல்பாக வைத்துக் கொண்டு பதிலளித்தாள்.

“அது எப்படி அண்ணி முகத்தை அப்பாவி மாதிரி வைத்துட்டு நொடிக்கு ஒரு தடவை எங்க அண்ணனை கலாய்க்குறீங்க? ஒரு நாள் இல்லை ஒரு நாள் பாருங்க அண்ணண் கிட்ட உங்களை போட்டுக் கொடுக்கிறேன்”

“ஆமா உங்க அண்ணனுக்கு புரிஞ்சுட்டாலும்! பத்து வருஷமாக நான் அவரை லவ் பண்ணதே அவருக்கு தெரியலையாம் இதில் நீ சொல்லுவதை தான் அப்படியே புரிஞ்சுக்க போறாரு!”

“ஏன் அண்ணி உங்களுக்கு மனசுக்கு கஷ்டமாக இல்லையா? அண்ணா கிட்ட நீங்க அவரை விரும்புவதை சொல்லவே இல்லைன்னு”

“அப்பப்போ கொஞ்சம் லைட்டா ஃபீல் ஆகும் தான் ஆனா உங்க அண்ணனைப் பற்றி தான் எனக்கு ரொம்ப நல்லாவே தெரியுமே பொண்ணுங்க அந்த தெரு ஓரத்தில் வந்தால் உங்க அண்ணன் இந்த பக்கமாக மாறிப் போயிடுவாரு அது அவரோட இயல்பு அந்த இயல்பை பார்த்து தான் நான் அவரை விரும்ப ஆரம்பித்தேன் எந்த இயல்பை பார்த்து விரும்ப ஆரம்பித்தேனோ அதே இயல்பை மாற்ற வைத்தால் அப்போ என்னோட காதலுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுமே!”

“அண்ணி! அண்ணி! எனக்கு நீங்க சொல்லுறதை எல்லாம் பார்க்கும் போது புல் அரிக்குது”

“ஹேய்! என்ன நக்கல் பண்ணுறியா?”

“அய்யோ இல்லை அண்ணி நிஜமாகத் தான் சொல்லுறேன் உங்க காதலைப் பார்க்கும் போது எனக்கும் இப்படி காதல் பண்ண ஆசை தான் ஆனா ஆள் தான் இல்லை” துளசி சோகமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு ராகினியின் தோளில் தன் கையை வைக்க

“டோன்ட் வொர்ரி மை டியர் துளசி! எனக்கே ஒரு ஆளு கிடைக்கும் போது உனக்கு கிடைக்காதா? அவங்க அவங்களுக்காக பிறந்தவங்க கண்டிப்பாக ஒரு நாள் அவங்க வாழ்க்கையில் வருவாங்க நீ அதை இதை யோசிக்காமல் முதலில் மாமாவையும், கார்த்தியையும் சாப்பிட கூட்டிட்டு வா” அவளது கையை விலக்கி விட்டபடியே அவளை ஹாலின் புறமாக நகர்த்தி விட்டவள் சிரித்துக் கொண்டே தன் மீத வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

சாப்பிடும் நேரம் முழுவதும் ராகினியும், துளசியும் ஒருவருக்கொருவர் இயல்பாக பேசி சிரித்துக் கொண்டே சாப்பிடுவதைப் பார்த்து கார்த்திக்கிற்கு ஏனோ தான் தனித்து விடப்பட்டதைப் போல இருந்தது.

இத்தனை நாட்களாக தனக்காக மட்டும் பேசிய தன் தங்கை அவளை நன்றாக பார்த்து கொள்ளும் படி மிரட்டிய போதே அவனுக்கு சிறிது சங்கடமாக இருந்தது தான்.

இப்போது அவள் தன் வீட்டிற்கு வந்த நொடி முதல் தன்னை யாரும் கவனிக்கவில்லையோ என்பது போல நினைத்து கொண்டவன் தட்டில் இருந்த சாப்பாட்டை அளைந்து கொண்டிருக்க அவனை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த ராகினி அவனது மாற்றங்களை எல்லாம் கவனிக்காமல் இல்லை.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு எழுந்து கொள்ளும் வரை அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தவள் பெரியவர்களும், துளசியும் அந்த இடத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு கார்த்திக்கின் முன்னால் வந்து நின்று கொண்டாள்.

கீழே குனிந்து தட்டையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த கார்த்திக் தன் முன்னால் நிழலாட துளசி தான் வந்திருக்கிறாள் என்ற எதிர்பார்ப்பாடு நிமிர்ந்து பார்க்க அங்கே ராகினி நின்று கொண்டிருந்தாள்.

நாம் எதிர்பார்த்த விடயத்திற்கு எதிர்மாறாக ஒரு விடயம் நடைபெறும் போது நாம் என்ன தான் முயன்றாலும் நம் முகம் நினைத்தது கிடைக்காத ஏமாற்றத்தை காட்டிக் கொடுத்து விடும் அப்படித்தான் இப்போதும் கார்த்திக்கின் முக மாற்றம் ராகினியை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிக் கொடுத்தது.

இப்படியான மாற்றங்களை எல்லாம் பார்த்து மனம் சோர்ந்து போனால் அவள் ராகினி அல்லவே.

எப்போதும் போல தன் அக்மார்க் புன்னகையுடன் அவனைப் பார்த்து தன் புருவத்தை உயர்த்தியவள்
“என்ன மிஸ்டர். ஹஸ்பண்ட் கார்த்திக் சாப்பாட்டை சாப்பிடாமல் வைத்துட்டு இருக்கீங்க? ஒரு வேளை ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவீங்களோ? சரி இருங்க ஊட்டி விடுறேன்” என்றவாறே அவனது கையிலிருந்த தட்டை வாங்கப் போக

அவசரமாக அந்த தட்டைப் பிடித்துக் கொண்டவன்
“இல்லை இல்லை நானே சாப்பிட்டுக் கொள்ளுவேன் எனக்கு யாரும் ஊட்டி விட மாட்டாங்க” என்று கூற

சிரித்துக் கொண்டே அவனது தலையை கலைத்து விட்டவள்
“கார்த்திக் இன்னும் நீங்க சின்ன குழந்தை தான் அப்படியே இருக்கீங்க!” என்று விட்டு அங்கிருந்து நடந்து செல்ல போக

“ஒரு நிமிஷம்!” கார்த்திக் அவசரமாக மூச்சு வாங்க அவள் முன்னால் வந்து நின்றான்.

“என்னாச்சு கார்த்திக்?”

“நான் நேற்றே இதைப் பற்றி பேசணும்னு இருந்தேன் ஆனா பேச முடியல அதனால இப்போ கேட்கிறேன்”

“என்ன பில்டப் எல்லாம் பலமாக இருக்கு?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”

“மிஸ்டர். ஹஸ்பண்ட் கார்த்திக் ஒரு சின்ன திருத்தம் இப்போ இது உங்க குடும்பம் இல்லை நம்ம குடும்பம்”

“சரி ஓகே ஓகே நம்ம குடும்பம் தான் எங்களை எல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? வழக்கமாக கல்யாணம் முடிந்து வேறு வீட்டுக்கு போகும் நேரம் பொண்ணுங்க எல்லாம் அழுவாங்க ஆனா அன்னைக்கு மண்டபத்தில் இருந்து இங்கே கிளம்பி வரும் போது நீங்க அழவே இல்லை ஏதோ காலகாலமாக பழக்கப்பட்ட இடத்திற்கு வர்ற மாதிரி தான் வந்தீங்க அதோடு துளசி வேற உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா பேசுற அன்னைக்கு மண்டபத்தில் கூட நிறைய விடயங்கள் சொன்னா” என்று விட்டு துளசி அன்று மண்டபத்தில் வைத்து அவளது அண்ணியை நன்றாக பார்த்துக் கொள்ளும் படி மிரட்டியதைக் கூற

அவனின் கூற்றில் ஆச்சரியமாக அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தவள்
‘பயபுள்ள அப்போ நம்மளை ரொம்ப நல்லா தான்யா நோட் பண்ணி இருக்கு! நாம தான் அவங்க நம்மளைப் பார்க்கவே இல்லைன்னு நினைத்து இருக்கோம் இந்த துளசி வேற சைக்கிள் கேப்பில் ஆளை மிரட்டி விட்டு இருக்கா அது தான் அன்னைக்கு ஆளோட முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிஞ்சது போல! என்னதான் இருந்தாலும் நீயும் கொஞ்சம் கெத்து காட்டு ராகிணி உடனே எல்லாவற்றையும் சொல்லி விடக்கூடாது அவங்களாகவே உன்னை காதலிக்கிறேன்னு சொல்லணும் அது வரைக்கும் கொஞ்சம் விளையாடலாமே! பத்து வருஷமாக காத்துட்டு இருந்த நமக்கு இன்னும் கொஞ்ச நாள் காத்துட்டு இருக்க கசக்குமா என்ன?’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டு நிற்க

“ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு?” அவளிடம் இருந்து நீண்ட நேரமாக பதில் வராது போகவே கார்த்திக் அவள் முகத்தின் முன்னால் தன் கையை அசைக்க

சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்
“அப்போ எல்லாவற்றையும் நல்லா கவனித்து தான் இருக்கீங்க வெரி குட் அது சரி கல்யாணம் பண்ணி போற பொண்ணுங்க எல்லாம் அழுவாங்கன்னு உங்களுக்கு யாரு சொன்னா?” கேள்வியாக அவனை நோக்கினாள்.

“படத்தில் எல்லாம் அப்படித்தானே காட்டுவாங்க”

“வாட்? கார்த்திக்! சீரியஸ்லி! உங்களைப் பார்த்தால் எனக்கு குட்டிக் குழந்தை கூட பேசுவது போல தான் இருக்கு! சோ க்யூட்!” அவனது கன்னத்தில் செல்லமாக தட்டியவள்

“யூ சீ மை டியர் மிஸ்டர். ஹஸ்பண்ட் கார்த்திக்! மூவிஸ்ல வர்ற மாதிரி தான் வாழ்க்கையில் எல்லாம் இருக்கணும்னு இல்லை அதை தாண்டி நிறைய விடயங்கள் இருக்கு! உங்களை சுற்றி நிறைய விடயங்கள் நடந்தது, இன்னும் நடந்துட்டே இருக்கு அதை எல்லாம் நீங்க நன்றாக கவனித்து பார்த்தாலே உங்க கேள்விகள் பலவற்றுக்கு பதில் கிடைக்கும் அதை விட்டுட்டு இப்படி சின்னப் பிள்ளைத்தனமாக எல்லாம் யாருகிட்டயும் போய் பேசிடாதீங்க சிரிச்சுடுவாங்க அவ்வளவு பெரிய பிசினஸ் மேன் இப்படி கேட்காருன்னு உங்களை கலாய்ச்சே கொன்னுடுவாங்க! எனி வே கடைசியாக நீங்க என்கிட்ட வாயைத் திறந்து பேசிட்டீங்க அது போதும்! அப்புறம் நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் என்னால் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது சாரி மிஸ்டர்.ஹஸ்பண்ட் கார்த்திக்!” என்று விட்டு திரும்பி செல்ல போக

அவளை அங்கிருந்து நகர விடாமல் மீண்டும் வழிமறித்தவாறு வந்து நின்று கொண்டவன்
“ஆனா ஏன்?” குழப்பத்தோடு அவளைப் பார்த்து வினவினான்.

“ஏன்னா நீங்க இன்னும் என்னை யாரோ மாதிரி தானே நினைத்து இருக்கீங்க நான் உங்க மனைவி அது உங்களுக்கு அடிக்கடி மறந்து போயிடுது அது மட்டுமில்லாமல் நான் ஒண்ணும் அவ்வளவு வயதான பொண்ணு இல்லை நீங்க, வாங்கன்னு பேச எனக்கும் ஒரு பெயர் இருக்கு அதை சொல்லியே பேசலாம்”

“பெயர்?” கார்த்திக் அமைதியாக அவள் முகத்தை பார்த்து கொண்டு நிற்க

அவன் முகத்தின் முன்னால் சொடக்கிட்டவள்
“என்ன மிஸ்டர்.ஹஸ்பண்ட் கார்த்திக் என் பெயரை சொல்லி பேசுங்கன்னு சொன்னதும் அமைதியாகிட்டீங்க என்னாச்சு?” என்று கேட்க தயக்கத்துடன் அவளைப் பார்த்தவன் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டான்.

“என்னங்க ஆச்சு?”

“அது அது வந்து…”

“எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க”

“உங்க..உன் பெயர் என்ன?”

“வாட்?” கார்த்திக்கின் கேள்வியில் ராகினி தன் கையிலிருந்த தட்டை தவறவிட்டு விட்டது மட்டுமின்றி அதிர்ச்சியாக அவனைப் பார்த்து கொண்டு நிற்க அவனோ பதட்டத்துடன் விலகி நின்று அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!