உன்னாலே – 05

eiAPZYF37537-4de8cb7e

உன்னாலே மெய்மறந்து நின்றேனே
மை விழியில் மையலுடன் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே
உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே
இது போதும் ஓ… எப்போதும் ஓ…
காரில் இருந்த ரேடியோ வழியே ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றாற்போல் கையை தாளம் இட்டபடியே பாடலை ரசித்துப் பாடிக் கொண்டிருந்த ராகினியைப் பார்ப்பதும் ரேடியோவைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்த கார்த்திக் சட்டென்று அந்த பாடலை நிறுத்த ‘ப்ச்’ சிறு சலிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தவள் அவனது உர்ரென்ற முகத்தை பார்த்து சிரித்தபடியே மீண்டும் அந்த பாடலை அவர்கள் இருவருக்கும் கேட்கும் வகையில் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்.

அவளது இனிமையான குரலைக் கேட்டு அவனுக்கு கோபம் வராவிட்டாலும் அந்த பாடல் வரிகளின் தாக்கம் அவனை ஏதோ செய்ய அந்த தாக்கம் அவன் கரங்களின் வழியே சென்று காரின் வேகத்தை அதிகரிக்க செய்தது.

சட்டென்று காரின் வேகம் அதிகரிக்க அருகில் இருந்த இருக்கையை இறுகப் பிடித்துக் கொண்டவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவனது கண்களோ வெளியே தெரிந்த சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவனது செயலுக்கான காரணம் அவளுக்கு முன்னரே தெரிந்திருந்தாலும் அந்த செயலின் பிண்ணனியில் அவளுக்கு கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

சிறிது நேரத்திற்கு முன்பு ஆபிஸில் நடந்த விடயங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டவள் தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்ட படி மறுபடியும் அந்த நிகழ்வை நினைத்து பார்க்கத் தொடங்கினாள்.

தன்னுடைய கேபின் அறையில் இருந்து கார்த்திக் பதட்டத்துடன் வெளியேறி சென்ற பின்னர் தன் விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்த ராகினி இரண்டு மூன்று மணி நேரங்கள் கழித்த பின்னரே தன் கண் திறந்து பார்த்தாள்.

அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் அந்த அறைக்குள் என்ன நடந்தது ஏது நடந்தது என்று எதுவும் அவளுக்கு தெரியாது.

தூக்க கலக்கத்தோடு கண்களை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தவள் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு மும்முரமாக வேலையில் மூழ்கியிருந்த தன் கணவனின் முகத்தில் தான் விழித்தாள்.

அவனை அங்கே பார்த்ததுமே அவளது தூக்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவனை காதலோடு பார்த்துக் கொண்டிருந்தவள் கார்த்திக்கின் பார்வை தன் மீது திரும்புவதைப் பார்த்ததும் இயல்பாக புன்னகைக்க அவனோ சிறு முறைப்புடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

‘இப்போ என்ன ஆச்சாம் இவருக்கு? முகத்தை அந்த பக்கம் திருப்பினால் நாங்க அப்படியே போய்விடுமா என்ன? இதை எல்லாம் பார்த்து அப்படியே சோககீதம் படிக்க நான் ஒண்ணும் யாரோ இல்லை!ராகினி! இந்த ராகினி கிட்ட இருந்து நீங்க அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியுமா என்ன?’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டபடியே கார்த்திக்கை பார்த்துக் கொண்டே அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றவள் தன்னை சிறிது புத்துணர்ச்சி ஆக்கிக் கொண்டு மீண்டும் அவனது கேபினை வந்து சேர்ந்து அவன் முன்னால் கை கட்டி நின்று கொண்டாள்.

அவள் வந்து வெகு நேரமாகியும் கார்த்திக் அவளைப் பார்க்காமல் இருக்க
“கார்த்திக்! கார்த்திக்!” அவன் முன்னால் தன் கையை அசைத்து அவனது பார்வையை தன் புறம் திருப்பச் செய்தவள்

“எனக்கு வேறு எதுவும் வேலை இருக்கா?’ என்று கேட்க

தன் பற்களை கடித்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன்
“அதோ அந்த ஷோபாவில் போய் மறுபடியும் தூங்கு! போ!” என்று கூற அவளது முகம் சட்டென்று வாடிப் போனது.

இருந்தாலும் தன் முகத்தை சரி செய்து கொண்டு அவனை பார்த்து தன் காது இரண்டையும் பிடித்துக் கொண்டவள்
“எனக்கு இவ்வளவு வேலை எல்லாம் பழக்கம் இல்லை பா! முதல் நாளே இவ்வளவு வேலை அதுதான் டயர்ட் ஆகிட்டேன் ரியலி சாரி இனி இப்படி ஆகாது! ப்ராமிஸ் பா! ப்ளீஸ் சாரி” தலையை ஒரு புறமாக சரித்து கெஞ்சலாக கேட்க

தன் கண்களை மூடி கொண்டு தலையை கோதி விட்டவன் அவள் முன்னால் எழுந்து வந்து நின்று
“இதோ பாரு ராகினி நான் எந்த விஷயத்தில் வேணும்னாலும் விளையாட்டாக இருப்பேன் ஆனா வேலை விஷயத்தில் நான் அப்படி இல்லை” என்று கூறவும்

அவளோ
‘ஆமா ஆமா நீங்க அப்படியே விளையாட்டாக இருந்து தான் நாங்க பார்த்தோமே!’ தன் மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்லாமல் அவனைப் பார்த்து அப்பாவியாக தன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.

“இது ஆபிஸ் இங்கே நான் உன் பாஸ் நீ என்னோட பி.ஏ அதை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ! இங்கே அது மட்டும் தான் இருக்கணும் இன்னைக்கு முதல் தடவை என்கிற ஒரே காரணத்திற்காக தான் இவ்வளவு பொறுமையாக பேசிட்டு இருக்கேன் இனிமேல் இப்படி பண்ணா அதுதான் நீ இந்த ஆபிஸ் வர்ற கடைசி நாளாக இருக்கும் புரிஞ்சுதா?” கார்த்திக் சிறிது அதட்டல் கலந்த தொனியில் கேட்க வாய் வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் தன் தலையை குனிந்து கொள்ள அவளை விசித்திரமாக பார்த்தவன் மீண்டும் தன் இருக்கைக்கு செல்வதற்காக திரும்ப அதற்குள் அவன் சொல்லிய விடயங்களை இல்லாமல் செய்வது போல ஒரு சம்பவம் அரங்கேறக் காத்திருந்தது.

ராகினியின் தனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்ற கேள்வியில் கோபத்துடன் அவள் முன்னால் வந்து நின்றவன் அவளது சேலை தன் காலணியின் கீழ் சிக்கியிருந்ததை கவனிக்கவில்லை.

எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு தன் இடத்திற்கு திரும்பி செல்ல அவன் திரும்புகையிலேயே அந்த சேலை இழுபட
“கார்த்திக் சேலை!” என்றவாறே ராகினி சேலையை ஒரு கையால் பிடித்து கொண்டு மறு கையால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல அதற்குள் அவளது கால்கள் சமநிலை தடுமாற ஒரு கணத்திற்குள் எல்லாமே அரங்கேறியிருந்தது.

ராகினியின் சத்தம் கேட்ட அடுத்த கணமே கார்த்திக் அவளை எட்டிப் பிடிக்க போக அதற்குள் சேலை சற்று விலகி அவளது வெற்றிடையில் அவனது கரத்தை அழுத்தமாக பதியச் செய்தது.

அவனது அந்த அழுத்தமான தொடுகையை எதிர்பாராத அவளும், அவளை அந்த இடத்தில் பிடிக்க கூடும் என்று எதிர்பாராத அவனும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நிற்க அவர்கள் இருவரது இதய ஓசையும் கடிகாரத்தின் ஓசையை விட அதிகமாக அந்த அறைக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

யார் யாரிடம் தன்னை மறந்து கொண்டிருந்தார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை ஆனால் ஒருவரிடம் ஒருவர் மெய் மறந்து கொண்டிருந்தார்கள் என்பது மாத்திரம் அவர்கள் பார்வை பரிமாற்றத்தில் நன்றாகவே புரிந்தது.

சிறிது நேரம் கழித்து சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ராகினி அவனது அணைப்பில் இருந்து தன்னை விலக்கி கொண்டு தன் சேலையை சரி செய்து கொண்டு நிற்க அதற்கு மேலும் கார்த்திக்கால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை.

“நேரமாச்சு வீட்டுக்கு போகலாம்” அவளை நிமிர்ந்தும் பாராமல் கூறி விட்டு கார்த்திக் விறுவிறுவென்று வெளியேறி சென்று விட சிறிது வெட்கம் கலந்த மோனநிலையுடன் அவனைப் பின் தொடர்ந்து சென்றவள் இப்போது வரை அதே நிலையுடன் தான் அவனருகில் அந்த காரில் அமர்ந்திருந்தாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்து இரவு தூங்கச் செல்லும் வரை அவளது முகத்தை நேர் கொண்டு பார்க்க முடியாதவன் போல தடுமாறிய கார்த்திக் நேரத்திற்கே உறங்கி விட அவனது தடுமாற்றத்தை கண்டும் காணாமலும் ரசித்துக் கொண்டிருந்த அவனது மனைவி அவன் தூங்கிய பின்பு அவனருகில் வந்து அமர்ந்து கொண்டு அவனது முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பத்து வருடங்களுக்கு முன்பு கார்த்திக்கை முதன்முதலாக சந்தித்த அந்த நாளை நோக்கி அவள் நினைவுகள் நகர எப்போதும் போல அவள் முகம் குங்குமமாய் சிவந்து போனது.

பத்து வருடங்களுக்கு முன்பு….

“அம்மா என் ரிப்பன் எங்கே? என் ரூமுக்கு வந்து க்ளீன் பண்ணுறேன்னு சொல்லி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி வைத்து இருக்கீங்களா? உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்லுறது?” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இரட்டை ஜடையில் ஒற்றை ஜடையை பாதியில் விட்டு விட்டு தன் வெண்ணிற காட்டன் சுடிதாரை சரி செய்தபடி தன் அன்னை முன்னால் கோபமாக வந்து நின்றாள் ராகினி.

“இப்போ என்ன ஆச்சுன்னு இந்த சத்தம் போடுற? வருஷா வருஷம் நீ க்ளீன் பண்ணுற வரை அப்படியே அந்த ரூமை விட்டால் மினி சூ தொடங்கிடலாம் அவ்வளவு பூச்சியும் அங்கே தான் இருக்கு பாவம் படிக்குற பொண்ணு போனாப்போகட்டும்ன்னு க்ளீன் பண்ணா என்னையே குற்றம் சொல்லுறியா நீ?” சமையலறைக்குள் தான் செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டு விட்டு கையிலிருந்த கரண்டியுடன் தனலட்சுமி அவள் முன்னால் வந்து நிற்க அந்த வீட்டில் இருந்த ஆண்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

“அப்பா இன்னைக்கும் காலை டிபன் கோவிந்தா கோவிந்தா தான் போல! இந்த சின்ன வாண்டு வம்பு வளர்க்க ஆரம்பிச்சுட்டா இனி அம்மா வேற தி ஃபேமஸ் லாயர் இன்னைக்கு வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கோங்க எனக்கு வேலைக்கு நேரமாகுது” என்றவாறே தன் ஸ்டெதஸ்கோப் மற்றும் கோர்ட்டை எடுத்துக் கொண்டு ராகினியின் மூத்த அண்ணன் தர்மன் வெளியேறி விட

அதைப் பார்த்துக் கொண்டு நின்ற தனலட்சுமி
“பார்த்தியா உன்னால உன் அண்ணன் சாப்பிடாமலே கிளம்பி போயிட்டான் உன் கூட தினமும் காலங்கார்த்தாலே இதே கஷ்டமாகப் போச்சு” என்றவாறே மீண்டும் சத்தம் போட

இம்முறை அவளது இரண்டாவது அண்ணன் பிரபு
“ஆளை விடுங்கடா சாமி” என்று விட்டு அந்த இடத்தில் இருந்து சிறிதும் தாமதிக்காமல் விட்டால் போதும் என்பது போல வேகமாக வெளியேறியிருந்தான்.

“பாரு பிரபுவும் சாப்பிடாமல் போயிட்டான்”

“நீங்க சும்மா நின்னு என் கூட சண்டை போட்டால் இப்படி தான் ஆகும் என் ரிப்பனை எனக்கு ஒழுங்காக எடுத்து தந்து இருந்தால் இப்படி எல்லாம் நடந்தே இருக்காது”

“ஆத்தா உன் ரிப்பன் உன் ரூம் டேபிளில் தான் இருக்கு போய் உன் கண்ணைத் திறந்து பாரு” என்று விட்டு தனலட்சுமி தனக்குள் கோபமாக ஏதேதோ பேசிக் கொண்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட

“இதை அப்போவே சொன்னால் என்னவாம்?” அவளும் தன் பாட்டில் புலம்பிக் கொண்டு ஸ்பெஷல் கிளாஸ் செல்வதற்காக தயாராகி கொண்டு நின்றாள்.

தன் புத்தகப் பையை எடுத்து கொண்டு வெளியே வந்த ராகினி ஹாலில் அமர்ந்திருந்த தன் பாசத்துக்குரிய அண்ணன் சிவாவைப் பார்த்ததும்
“குட் மார்னிங் அண்ணா!” என்றவாறே அவனருகில் வந்து அமர்ந்து கொள்ள

“குட் மார்னிங் செல்ல வாண்டு! கிளாஸ் போக ரெடியா?” என்றவாறே அவளது தலையை வருடிக் கொடுக்க ஆமாம் என்று உற்சாகமாக தலையசைத்தவள் தனலட்சுமி கொண்டு வந்து கொடுத்த உணவை வேக வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு எப்போதும் போல உற்சாகமாக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றாள்.

ராகினி துருதுருவென இருக்கும் சிறு பெண் மட்டுமின்றி அவர்கள் வீட்டின் செல்ல இளவரசியும் கூட.

என்னதான் தன் அன்னையோடு வார்த்தைக்கு வார்த்தை பேசி சண்டை போட்டாலும் அவர் மீது அவளுக்கு எப்போதும் அளவில்லா பாசம் உண்டு அது போல தான் தனலட்சுமிக்கும் வெளியே எந்தளவிற்கு அவள் முன்னால் தன்னை கோபமாக காட்டிக் கொள்ளுவாரோ அதை விட பன்மடங்கு அன்பும், பாசமும் தன் ஒற்றை பெண் பிள்ளை மீது அவருக்கு எப்போதும் உண்டு.

ராகினி பதின்ம வயதை நெருங்கும் போதே தனது வேலையில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்ட தனலட்சுமி தனது பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இந்த கால கட்டத்தில் வெகு சிரத்தையுடன் செய்து வந்து கொண்டிருந்தார்.

ராகினியின் மூத்த அண்ணன் தர்மன் சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு பிரபலமான வைத்தியசாலையில் குழந்தைகள் நலமருத்துவராகவேலையில் இணைந்திருக்க அவனுக்கு இரண்டு மாதங்கள் கழித்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் பிரபுவும் அப்போதுதான் ஒரு கம்பெனியில் சிவில் எஞ்சினியராக வேலை புரிய இணைந்திருந்தான்.

அவன் தன்னோடு கல்லூரியில் படித்த தன்னுடைய தோழி ருக்மணியை காதலிப்பதாக ஏற்கனவே தங்கள் வீட்டில் சொல்லி இருந்ததனால் தர்மனின் திருமணம் நடக்கும் அதே மண்டபத்தில் இவர்களின் திருமணத்தையும் நடத்த பெரியவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இறுதியாக சிவா இப்போது தான் காலேஜ் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்க அவனது செல்லத் தங்கை நம் நாயகி ராகினி ப்ளஸ் டூ படித்து கொண்டிருக்கிறாள்.

ராகினி படிப்பில் அதி புத்திசாலித்தனமானவளாக இல்லாவிட்டாலும் எப்படியும் தன் மானத்தை காற்றில் பறக்க வைத்து விடாத அளவிற்கு அடித்து பிடித்து படித்து புள்ளிகள் எடுத்து விடுவாள்.

இம்முறை அவளது ப்ளஸ் டூவில் பொதுத்தேர்வு வேறு இருப்பதால் அவளது முழு கவனமும் படிப்பில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவளது பரீட்சைகள் முடிவடைந்து ஒரு வாரத்தில் அவளது இரு அண்ணன்களினது திருமணத்திற்கும் நாள் குறிக்கப்பட்டிருந்தது.

எப்போதும் போல அன்றும் தன் நண்பிகளுடன் பேசியபடியே சைக்கிளில் சென்று கொண்டிருந்தவள் ஒரு வீதியின் நடுவில் ஆட்கள் பலர் குவிந்து நிற்பதை பார்த்து என்ன நடக்கிறது என்று பார்க்க கூட்டத்தை விலக்கி கொண்டு செல்ல அங்கே ஒரு நபர் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தான்.

“அச்சச்சோ ஆக்சிடென்ட்! யாராச்சும் ஆம்புலன்ஸை கூப்பிடுங்க” ராகினி பதட்டத்துடன் கூட்டத்தில் இருந்த நபர்களை பார்த்து கூற அவர்களோ ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றனரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

“நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க! வேடிக்கை பார்க்க தான் நீங்க எல்லாம் லாயக்கு!” என்றவாறே கோபமாக அவர்களைப் பார்த்து சத்தமிட்டவள் தன் பையில் இருந்த சில்லறை காசுகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றை நோக்கி ஓடிச் சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸுக்கு தகவல்கள் தெரிவித்திருந்தாள்.

அவள் தகவல் தெரிவித்து ஒரு சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்திருக்க அந்த நபரின் உடைமைகள் எல்லாவற்றையும் அந்த வண்டி ஊழியர்களிடம் ஒப்படைக்க போனவள் அதில் நிறைய பணம் மற்றும் இதர ஆவணங்கள் இருப்பதை பார்த்து விட்டு தானும் அவர்களுடன் செல்லலாம் என்று முடிவெடுத்து கொண்டு தன் நண்பிகளிடம் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு செல்லும் படி கூறி விட்டு அந்த விபத்தான நபரோடு ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டாள்.

அவனுக்கு சரியானதும் அவனிடம் அவனது பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு செல்லலாம் என்ற எண்ணத்தோடு தன் கையிலிருந்த அவனது பொருட்களை பார்த்துக் கொண்டு இருந்தவள் முகத்திலும் கையிலும் பலமான அடி விழுந்ததால் அரை மயக்கத்தில் வலியால் புலம்பிக் கொண்டு இருந்தவனைப் பார்த்து
‘கடவுளே! இவங்க யாரு என்னன்னு எனக்கு தெரியல! ஆனா இவங்க வீட்டு ஆட்களுக்கு இவங்க ரொம்ப பிடிச்சவங்களாக இருக்கலாம் இவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க ரொம்ப கவலைப்படுவாங்க! ப்ளீஸ் கடவுளே இவங்களை எப்படியாவது காப்பாற்றிடுங்க’ அவனை தனக்கு தெரியாவிட்டாலும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனதார கடவுளிடம் பிரார்த்தித்து கொண்டவள் அவனது குடும்பத்தினருக்கு தகவல் சொல்லலாம் என்ற நோக்கத்துடன் அவனது பர்ஸை பிரித்துப் பார்த்தாள்.

அதிலிருந்த அவனது காலேஜ் ஐடியை வெளியே எடுத்து பார்த்தவள் நேரில் தான் பார்த்து கொண்டிருக்கும் இரத்தம் தோய்ந்த முகத்துடன் இருக்கும் இவன் தானா அந்த ஐடியில் வசீகரிக்கும் புன்னகையுடன், கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவன் என ஆராய்ச்சியான பார்வையுடன் அதைப் பார்த்தவாறே அதன் பின் புறமாக இருந்த அவனது பெயரை திருப்பிப் பார்த்தாள்.

“கார்த்திக் மோகன்!” அவனது பெயரை ஏன் என்று அறியாமலேயே இரண்டு மூன்று தடவை தனக்குள் கூறிப் பார்த்துக் கொண்டவள்

“சேச்சே! ராகினி இதெல்லாம் தப்பு!” தான் செய்த செயலை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டு அவனது தொலைபேசியை எடுத்து அதிலிருந்து அவனது வீட்டினருக்கு தகவல் சொல்லி விட்டு தன் தந்தையிடமும் நடந்ததை சொல்லி விட்டு இருக்க அதற்குள் அந்த ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடலை வந்து சேர்ந்திருந்தது.

அவசர சிகிச்சை பிரிவை நோக்கி அவனை கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகளை எல்லாம் அங்கிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக செய்து கொண்டிருக்க என்னதான் தைரியமாக ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ராகினி புறப்பட்டு வந்திருந்தாலும் இப்படி தனியாக அந்த இடத்தில் நிற்பது அவளுக்கு சிறிது பதட்டத்தை அதிகரிக்கவே செய்தது.

கார்த்திக்கை அவசர சிகிச்சை பிரிவை நோக்கி கொண்டு செல்ல வேண்டி மருத்துவ ஊழியர்கள் அவனருகில் வந்த நேரம் அரை மயக்கத்தில் தன்னருகே நின்று கொண்டிருந்த நபர் யார் என்று தெரியாமலேயே அவன் ராகினியின் கையை இறுகப் பற்றிக் கொள்ள அவளோ அவனது தொடுகையில் விதிவிதிர்த்துப் போனாள்.

ஒரு அந்நிய ஆணின் தொடுகையில் பதட்டத்துடன் ராகினி தன் கையை விலக்கி கொள்ளப் போக
“ப்ளீ..ஸ் என்..னைக் காப்…பாற்று…ங்க! என்…னை விட்…போக…வே…ணா…ம்!” என்றவாறே அவன் முழு மயக்கத்திற்கு செல்ல அவளோ அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு அந்த இடத்தில் ஆணியடித்தாற் போல நின்று கொண்டிருந்தாள்.

அவனது தொடுகை ஒரு புறம் அவளை அதிர்ச்சியடைய செய்திருந்தாலும் அவனது வார்த்தைகள் அவளுக்குள் ஏனோ ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தது.

அவள் அதிர்ச்சியாகி நின்ற அந்த இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் கார்த்திக்கின் வீட்டினர் வந்திருக்க அவர்களிடம் அவனது உடைமைகளை ஒப்படைத்தவள் தன்னை தேடி வந்த தன் தந்தையிடம் நடந்த நிகழ்வுகளை எல்லாம் கூற அடுத்தவர் உயிரைக் காப்பாற்றிய தன் மகளை மனதார பாராட்டியவர் அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.

அதன் பிறகு அவள் அவனைப் பற்றி நினைத்து பார்க்கவே இல்லை என்றெல்லாம் கூறி விட முடியாது அவ்வப்போது ஒரு சில தருணங்களில் அவன் அவள் கைகளை பிடித்து கொண்டு கூறிய விடயங்கள் எல்லாம் அவளுக்கு கனவு போல் சட்டென்று தோன்றி விட்டு மறைந்து விடும்.

அப்போதெல்லாம் அவன் பிடித்த தன் கையை ஏதோ விசித்திரமான ஒரு பொருளைப் பார்ப்பது போல அவள் பார்த்து கொண்டு இருப்பாள்.

இப்போது பத்து வருடங்கள் கழித்தும் அவனது முதல் ஸ்பரிசத்தை உணர்ந்த தன் கரத்தை காதலோடு வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தவள்
“ஐ லவ் யூ மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்!” சிறு புன்னகையுடன் அவனது தலையை கோதி விட்டபடியே கூறிவிட்டு முகம் கொள்ளாப் புன்னகையுடன் உறங்குவதற்காக எழுந்து சென்றாள்…….