உன்னாலே – 06

eiAPZYF37537-09f7cc34

கார்த்திக் மற்றும் ராகினியின் திருமணம் முடிந்து அன்றோடு மூன்று மாதங்கள் நிறைவு பெற்றிருந்தது.

அவர்கள் இருவருக்கும் இடையே எல்லா கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அந்நியோன்யமான ஒரு உறவு நிலை போன்ற ஒரு நிலை இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் பார்த்து இயல்பாக பேசிக் கொள்ளும் அளவிற்கு ஒரு இதமான நிலை நிலவியது என்று கூறலாம்.

ராகினியுடனான திருமணத்தின் பின்னரான இந்த காலப்பகுதியில் கார்த்திக்கிடம் ஒரு சில நல்ல மாற்றங்களும் நிகழ்ந்திருந்தது.

அவன் முன்னர் போல் வார்த்தைகளை அளந்து பேசுவது போல் இல்லாமல் ராகினியுடன் இணைந்து அவளைப் போலவே வார்த்தைக்கு வார்த்தை பேசப் பழகியிருந்தான்.

அவனின் இந்த புதிய மாற்றம் ராகினிக்கு பிடித்தமானதாக இருந்தாலும் அவனுக்கு தன் காதல் புரியவில்லை என்ற கவலையான உணர்வு அவளை வருந்தச் செய்யாமல் இல்லை.

அவளது காதல் நிலை இலை மறை காயாக இருந்தாலும் மற்றைய விடயங்கள் எல்லாவற்றிலும் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு நிலை நிலவி வந்தது.

கார்த்திக்குடன் இணைந்து வேலை செய்ய பழகியிருந்த ராகினி இந்த மூன்று மாத காலத்திற்குள் அவனோடு இணைந்து அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்யும் அளவிற்கு தன்னை வெகுவாக முன்னேற்றியும் இருந்தாள்.

அன்று வழக்கம் போல இருவரும் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்த நேரம் அவர்கள் இடையே நிலவிய அந்த இதமான உறவு நிலையைக் கலைக்கச் செய்யவென வந்தது போலவே கார்த்திக்கின் தொலைபேசி சிணுங்கியது.

தன் வேலையின் நடுவே எந்தவொரு அழைப்பு வந்தாலும் பொதுவாக கார்த்திக் அதை எடுத்துப் பேச மாட்டான் எடுத்த வேலையை முதலில் முடிக்க வேண்டும் என்பது தான் அவனது முழு நோக்கமாக இருக்கும்.

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தன் தொலைபேசி சிணுங்கிய அடுத்த நொடியே தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு தன் தொலைபேசியை எடுத்து கொண்டவன் தன் முன்னால் அமர்ந்திருந்த ராகினியை ஒரு கணம் தயக்கத்துடன் பார்த்து விட்டு அந்த அறையின் வெளிப்புறமாக அவசர அவசரமாக நடந்து சென்று அந்த அழைப்பை எடுத்து பேச ஆரம்பித்தான்.

அவனுக்கு அழைப்பு வந்த நொடி முதல் அவனது முகபாவங்களையே பார்த்துக் கொண்டிருந்த ராகினி அவனது இந்த விசித்திரமான நடவடிக்கைகளில் சற்றே குழப்பம் கொண்டு ஏதாவது பிரச்சனையாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தோடு அவனை நோக்கி செல்ல சரியாக அவள் அவனை நெருங்கி வரும் நேரம் அவன் மற்றைய புறமாக அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான்.

போனில் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த கார்த்திக் ராகினி தன் பின்னால் வந்து நின்றதையோ அவளது மனதை நொருங்கச் செய்யும் வார்த்தைகளை தான் கூறப் போவதையோ அந்த தருணத்தில் அறிந்திருக்கவேயில்லை.

“இல்லை டா ஆதி! அப்படி எல்லாம் இல்லை! வேலை கொஞ்சம் அதிகமாகிடுச்சு அவ்வளவு தான்!”

“………”

“உனக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும் அப்படி இருந்தும் நீ இப்படி பேசலாமா?”

“…….”

“இல்லை ஆதி! நீ என்ன சொன்னாலும் சரி நான் இந்த திருமணத்தை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை அதேமாதிரி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன்” கார்த்திக் ஏதோ பிரச்சினையில் இருக்கின்றான் என்றெண்ணி அவனது தோளில் தன் கையை வைக்கப் போன ராகினி இறுதியாக அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியில் தன் கரத்தை சட்டென்று பின்னிழுத்துக் கொண்டாள்.

மறுமுனையில் யார் என்ன பேசிக் கொண்டு இருந்தார்களோ ராகினி அதை அறிந்திருக்கவில்லை ஆனால் கார்த்திக் கூறிய வார்த்தைகள் அவளை முற்றிலும் நிலை குலையச் செய்திருந்தது.

என்றாவது ஒரு நாள் அவன் தன்னை நேசிப்பான் அவனது காதல் தன்னை மெய் மறந்து போகச் செய்யும் என்று இத்தனை நாட்களாக மனதிற்குள் பலவித மனக்கோட்டைகளை கட்டியிருந்தவள் அவனது
‘நான் இந்த திருமணத்தை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை அதேமாதிரி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன்’ என்ற கூற்றில் மனமும் கண்களும் கலங்க தான் வந்த தடம் தெரியாமல் மீண்டும் தான் இருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல முழுமையாக பத்து வருடங்கள்!

ஒவ்வொரு நாளும் அவனை நினைத்து நினைத்து தன் மனதிற்குள் எத்தனை ஆசைகளை அவள் வளர்த்திருப்பாள் அவனுக்கு காதலில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட திருமணத்திற்கு பின்னராவது அவன் மனதில் தன் மீது காதல் வந்து விடும் என்று நம்பியிருந்தது வீணாண கற்பனையோ என்ற எண்ணம் முதன்முறையாக அவள் மனதிற்குள் தலை தூக்க
‘சேச்சே! என்ன ராகினி இது? கார்த்திக்கைப் பற்றி உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருந்தும் நீ இப்படி யோசிப்பது சரி இல்லை முதலில் உன்னை நீ நம்பணும் உன் காதல் அவ்வளவு பலவீனமானது இல்லை நிச்சயமாக கார்த்திக் மனது மாறும் நீ மனம் தளரக் கூடாது! உன்னுடைய காதல் தான் உன்னுடைய தைரியம், பலம் எல்லாமே! அதையே நீ சந்தேகப்படக்கூடாது! சியர் அப் மை கேர்ள்!’ கண்களை மூடி தன் மனதிற்குள் தனக்குத்தானே தைரியம் அளித்து கொண்டவள் தான் விட்டு விட்டு வந்த வேலைகளை மீண்டும் செய்ய முயற்சிக்க என்னதான் இருந்தாலும் சட்டென்று எல்லாவற்றையும் கடந்து சென்று விட அவள் மனம் ஒன்றும் இயந்திரம் அல்லவே!

எந்தவொரு வேலைகளிலும் தன் கவனத்தைச் செலுத்த முடியாது தவித்துப் போனவள் தன் முன்னால் இருந்த மேஜையில் தலை கவிழ்ந்து கண் மூடிக் கொள்ள அவள் மனமோ அவளை வலுக்கட்டாயமாக அவளது காதல் நினைவுகளை நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்லத் தொடங்கியது.

***************************

கார்த்திக்கை இறுதியாக அந்த விபத்தின் போது சந்தித்த பின்னர் வேறு எங்கேயும் சந்திக்கும் வாய்ப்பு ராகினிக்கு அமையவில்லை ஆனால் யாராவது புதிதாக ஒரு நபர் தன்னை கடந்து போனால் அது அவனாக இருக்கக்கூடுமோ என்று ஆராய்ந்து பாராமலும் அவளிருக்கவில்லை.

ஏனென்று தெரியாமலேயே அவள் மனதிற்குள் அவனது முகம் அடிக்கடி வந்து மறைந்து போகும்.

அன்று அவளது ப்ளஸ் டூ பொதுத்தேர்வின் இறுதி நாள்.

பரீட்சை எழுதி முடித்து விட்ட திருப்தியோடு மாணவர்கள் எல்லோரும் சந்தோஷம் பொங்க ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசிக் கொண்டு வரவிருக்கும் விடுமுறையை எப்படி கழிக்கலாம் என்று பலவிதமான திட்டங்களுடன் தங்கள் வீடுகளை நோக்கி சென்று கொண்டிருக்க ராகினியும் தன் தோழிகளுடன் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்ட படியே தன் சைக்கிளை தள்ளிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

எப்போதும் போல அன்றும் அந்த விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் போது கார்த்திக் வருகின்றானா என்ற எதிர்பார்ப்போடு ராகினி தன் பார்வையை சுழல விட அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது போலவே அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையின் அருகில் கார்த்திக் தன் நண்பர்களுடன் புன்னகை முகமாக கதை பேசிக் கொண்டு நின்றான்.

இரண்டு, மூன்று மாதங்களாக ஏனென்று தெரியாமலேயே அவனைக் காண நித்தமும் தன் மனதிற்குள் ஏங்கிக் கொண்டிருந்தவள் இன்று அவனது தரிசனம் கிடைக்கவே அளவில்லாத சந்தோஷத்துடன் வீதி என்றும் பாராமல் துள்ளிக்குதித்து ஆட்டம் போட அவளருகில் நின்று கொண்டிருந்த அவளது தோழிகள் இருவரும்
“ஏய் ராகினி! என்னடி ஆச்சு உனக்கு? நடு ரோட்டில் நின்னு ஆட்டம் போடுற? எல்லோரும் நம்மளையே பார்க்குறாங்க சும்மா நில்லு டி! நில்லு டி!” என்றவாறே அவளின் இரு புறமும் நின்று அவளைக் கட்டுப்படுத்த

சுற்றுப்புறம் உணர்ந்து தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்டவள்
“அவரைப் பார்த்துட்டேன்!” என்றவாறு கார்த்திக்கின் புறம் தன் கையை நீட்டி சுட்டிக் காட்டினாள்.

அவள் சுட்டிக் காட்டிய புறம் திரும்பி பார்த்த அவளது தோழிகள்
“யாரு அவங்க?” என்று கேட்க

முறைத்துக் கொண்டே அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தவள்
“அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆகி ஆம்புலன்ஸ் எல்லாம் வரவைத்தோமே! அவங்க தான் அது!” கனவில் இருப்பவளைப் போல ரசனையோடு கூற

அவளது தோளில் தட்டியவர்கள்
“ராகினி என்னடி ஆச்சு உனக்கு? சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளர்ற! ஆக்சிடென்ட் அப்போ பார்த்து ஹெல்ப் பண்ண அவ்வளவு தான் இன்னைக்கு அவங்களைப் பார்த்து எதற்கு இவ்வளவு சந்தோஷப்படணும்? நடு ரோட்டில் நின்னு ஆட்டம் போடணும்?” கேள்வியோக அவளை நோக்கினர்.

அவர்கள் இருவரது கேள்வியின் பின்னர் தான் அவளுக்கும் தான் செய்த செயலுக்கான காரணம் என்ன என்று யோசிக்கவே தோன்றியது.

‘நான்‌ ஏன் அவங்களை பார்த்து இவ்வளவு சந்தோஷப்படணும்? எனக்கும், அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவங்க யாரு, என்ன என்று எதுவுமே எனக்கு தெரியாது அப்படி இருக்கும் போது என்னையே மறந்து நான் ஏன் இப்படி நடந்துக்கணும்?’ பலவிதமான கேள்விகள் அவள் மனதிற்குள் அலைமோத அத்தனை நேரமும் இருந்த ஒருவிதமான சந்தோஷ உணர்வை யாரோ தட்டிப் பறித்து சென்றது போல வருத்தம் கொண்டவள் அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.

என்ன தான் அவளது கால்கள் இரண்டும் பாதையில் முன்னோக்கி நடை போட்டாலும் அவளது மனமோ அவளை விட்டு விலகி விலகி பின்னோக்கி கார்த்திக் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கியே அவளை இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

அந்த தெரு முனைக்கு செல்லும் வரை தன் மனதை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவள் அந்த தெருவை விட்டு மறையும் நேரம் தன் சைக்கிளில் ஏறுவதற்கு தயாராகி கொண்டபடியே அவனின் புறம் திரும்பி பார்க்க அவனோ அவள் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கி தன் பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

ஒரு வேளை தன்னை அடையாளம் கண்டு கொண்டு தன்னிடம் நன்றி சொல்லிப் பேசத் தான் வருகின்றான் போல என்ற எதிர்பார்ப்போடு சைக்கிளில் இருந்து இறங்கி நின்றவள் புன்னகையுடனும், ஆர்வத்துடனும் அவனைப் பார்த்து கொண்டு நிற்க அவனோ அங்கே ஒருத்தி நிற்கின்றாள் என்ற எண்ணமே இல்லாதவன் போல அவளைத் திரும்பிப் பாராமலேயே கடந்து சென்றிருந்தான்.

‘அடப்பாவி மனுஷா! உன் உயிரைக் காப்பாற்றி எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கேன் ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாமல் கண்டும் காணாமல் போறியேப்பா! உனக்கு அவ்வளவு திமிரா?’ கோபம் பொங்க அவன் செல்லும் வழியையே முறைத்து பார்த்து கொண்டு நின்றவள்

‘சேச்சே! அவங்களுக்கு உன்னை ஞாபகம் இருக்காது ராகினி அது தான் உன்னைப் பார்க்கல போல! நீ போய் பேசு போ! அவங்களுக்கு எல்லாம் சரியாகிடுச்சான்னு மட்டும் கேட்டுட்டு வீட்டுக்கு போகலாம்’ தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு தன் சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்து கார்த்திக்குடன் எப்படியாவது பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

கார்த்திக் மிதமான வேகத்தில் தான் தனது வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் ஆனால் அந்த வேகம் கூட ராகினிக்கு ஜெட்டின் வேகத்தில் செல்வதைப் போலத்தான் இருந்தது.

“என்ன இவங்க இவ்வளவு ஃபாஸ்டா போறாங்க? மூச்சு வாங்குதே!” இலேசாக பூசினாற் போல தேகம் கொண்டிருந்த ராகினிக்கு இதற்கு முன் இவ்வளவு வேகமாக வேலைகள் செய்து பழக்கம் இல்லாததால் என்னவோ அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

ஒருவழியாக அவனை நெருங்கி விட இன்னும் பத்து, பதினைந்து அடிகளே இருக்கும் என்ற நிலையில் அவன் சென்று கொண்டிருக்கும் வழியைப் பார்த்தவள் தனது வீடு இருக்கும் பகுதியினை நோக்கி அவன் செல்வதைப் பார்த்து விட்டு
‘இவங்க நம்ம ஏரியா ஆளா? இதற்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே!’ வெகுவான சிந்தனையுடன் அவனைப் பின் தொடர்ந்து சென்றவள் அவளது வீட்டில் இருந்து சரியாக ஆறு தெரு தள்ளி இருக்கும் ஒரு தெருவில் அவனது வண்டி நுழைவதைப் பார்த்து விட்டு

‘இந்த ஏரியா ஆளு தானா இவங்க? இந்த பக்கம் நம்ம பெரிதாக வந்ததே இல்லை அதனால்தான் சார் நம்ம கண்ணில் இது நாள் வரைக்கும் படல போல! இன்னைக்கு வீட்டை கண்டுபிடிச்சாச்சு இனி இந்த லீவை ஒரே ஜாலியா செலிபிரேட் பண்ணிடலாம்’ இயல்பான தன் குறும்புத்தனத்தில் ஏதேதோ நினைத்து கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தவள் அடுத்த நாள் அதிகாலை நேரமே அவன் வீட்டின் முன்னால் தன் வேலையை தொடர வெகு ஆவலுடன் காத்து நின்றாள்.

கார்த்திக்கின் வீட்டின் முன்னால் ஒரு பெரிய பூவரசம் மரம் இருக்கும் அது பழங்காலத்து மரம் ஆகையால் அதன் கிளைகள் எல்லாம் தரை முழுவதும் பரவி பார்ப்பதற்கு இராட்சத குடை போன்ற தோற்றத்துடன் இயற்கையின் கொடையாக தான் அந்த மரம் இருக்கும்.

அந்த மரத்தின் நிழலின் தன் சைக்கிளை நிறுத்தி வைத்தவள் ஒரு உட்புற கிளையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் தன் பணியை ஆரம்பித்தாள்.

அந்த மரத்தின் உட்புறம் இருந்து பார்ப்பவர்களுக்கு வெளிப்புறம் இருக்கும் எல்லாமும் வெகு சிறப்பாக தெரியும் ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது கூட தெரியாது.

அதனால் என்னவோ ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை நேரம் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் வரை அந்த மரத்தின் கீழ் வந்து அமர்ந்து கொள்ளுபவள் கார்த்திக் வீட்டில் இருந்து வெளியேறி செல்லும் போதும் அவன் வீட்டுக்கு திரும்பி வரும் போதும் அவனுக்கு தெரியாமலேயே அவனைப் பின் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்திருந்தாள்.

என்ன நோக்கத்திற்காக அவனைப் பின் தொடர்கிறாள்? அவனைப் பின் தொடர்ந்து செல்வதால் தனக்கு என்ன கிடைக்கும் என்று எல்லாம் அவள் யோசிக்கவில்லை அவனைப் பின் தொடர்ந்து சென்று அவனை மறைந்திருந்து பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவளை சந்தோஷப்படுத்துவது போல இருந்தது.

ஒரு வார காலமாக காலையிலும், மாலையிலும் ராகினி வீட்டில் இருக்காமல் வெளியே செல்வதைக் கவனித்து வந்த சகுந்தலா அண்ணன் இருவரது திருமண வேலைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என எதிலும் சரியாக கலந்து கொள்ளாமல் அங்குமிங்கும் விளையாட்டு பிள்ளையைப் போல அலைந்து திரியும் அவளை கண்டித்து வைக்க ஆரம்பத்தில் தான் ஏதோ தவறு செய்கிறோம் என்ற எண்ணத்தோடு அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டவள் அவனைப் பின் தொடர்ந்து செல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள்.

அண்ணன் இருவரது மனைவிகளும் தங்கள் வீட்டுக்கு வந்த பின் அவர்களுடன் தன் நேரத்தை செலவிடத் தொடங்கிய ராகினி அவர்களும் தங்கள் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்க மீண்டும் கார்த்திக்கின் நினைவுகளால் வருந்தத் தொடங்கியிருந்தாள்.

அவனை எதற்காக தன் மனது இத்தனை தூரம் ஏங்கித் தவிக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை ஆனால் அவனால் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாரிய மாற்றம் நிகழப்போகின்றது என்பது மாத்திரம் அவளுக்கு மிகவும் உறுதியாக தெரிந்தது.

கார்த்திக் பற்றிய எண்ணங்கள் வரும் போதெல்லாம் தன் அறையோடு ஒட்டிய பால்கனியில் இருக்கும் தோட்டத்திற்கு செல்பவள் அங்கே இருக்கும் மரங்கள், செடி, கொடிகளை பராமரிக்கும் வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்ள அவள் என்னதான் தன் மனதை மாற்றிக் கொண்டு விலகிச் செல்ல நினைத்தாலும் அதற்கும் சதி செய்வது போல அடுத்த நிகழ்வு அரங்கேற காத்திருந்தது.

***********************

ராகினி தலை குனிந்து கண் மூடி அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து சிறிது பதட்டத்துடன் அவளை நெருங்கி வந்த கார்த்திக்
“ராகினி என்னாச்சு? உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்க

அவனது குரலில் வெகு சிரமப்பட்டு தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“ஒண்ணும் இல்லை! இலேசான தலைவலி அவ்வளவு தான் நான் மட்டும் இப்போ வீட்டுக்கு போகவா?” தன் கலக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்க

அவளை விசித்திரமாக பார்த்தவன்
“சரி டிரைவர் ஒருத்தரை வரச்சொல்லுறேன் அவங்க கூட போ! ஆனால் நைட் கொஞ்சம் எனக்காக வெயிட் பண்ணு! உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சரியா?” என்று விட்டு அவளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகளை எல்லாம் பொறுப்பாக செய்து முடிக்க மறுபுறம் ராகினி ஏக்கத்தோடும், காதலோடும் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘என்னோட காதல் உங்களுக்கு ஒரு முறை கூட புரியலையா கார்த்தி? எவ்வளவு தூரம் நீங்க விலகி போனாலும் நான் உங்களை தேடி தேடி வர்றேனே அப்போ கூட நீங்க எதற்காக நான் இவ்வளவு விஷயங்கள் செய்யணும்னு யோசிக்க மாட்டிங்களா?’ தன் நிலையை எண்ணி கவலை பொங்க தன் மனதிற்குள் வருந்திய படியே அந்த அறையில் இருந்து வெளியேறியவள் தங்கள் வீட்டை வந்து சேரும் வரை அந்த நினைவில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை.

வீட்டுக்குள் காரை செலுத்தப் போன டிரைவரிடம் வேண்டாம் என்று கூறி இருந்தவள் கார்த்திக்கின் வீட்டின் முன்னால் இருக்கும் அந்த விசாலமான வாகை மரத்தின் முன்னால் வண்டியை நிறுத்த சொல்லி விட்டு அங்கேயே இறங்கி இருந்தாள்.

காலையில் இருந்து பழைய மலரும் நினைவுகளின் தாக்கம் அவள் மனதிற்குள் அதிகமாக இருந்ததால் என்னவோ அந்த மரத்தின் கீழ் சென்று அமர்ந்து கொண்டவள் கண்களை மூடி தன்னை சுற்றி இருக்கும் இயற்கை காற்றை சுவாசிக்க ஆரம்பிக்க சரியாக அந்த தருணம்
“ராகினி!” கார்த்திக்கின் குரல் அவள் காதோரம் மென்மையாக ஒலித்தது.

“கார்த்திக்! என்னைத் தேடி வந்துட்டீங்களா?” தன் மூடிய கண்களைத் திறவாமலேயே சந்தோஷம் பொங்க தன் வாயை மூடி கொண்டவள் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு

“எனக்கு தெரியும் கார்த்தி நீங்க என்னைப் பிரிந்து இருக்க மாட்டிங்க!” என்றவாறே தன் கண்களைத் திறந்து கொள்ள அங்கே அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

“கார்த்திக்! கார்த்திக்!” பதட்டத்துடன் தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்ட ராகினி மரத்தின் உட்பகுதியை விட்டு வெளியே வந்து தேடிப் பார்த்தும் அங்கே யாரையும் அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.

அப்போதுதான் அவளுக்கு தனக்கு மாத்திரம் கேட்ட கார்த்திக்கின் குரல் வெறும் கற்பனை என்கிற விடயமே புரிந்தது.

திருமணத்திற்கு முன்னரான தன் ஒருதலைக் காதலின் போதும் சரி இப்போது திருமணத்தின் பின்னரான இந்த காலப் பகுதியிலும் சரி தனது நினைவுகளில் மட்டுமே கார்த்திக்கை இத்தனை காதலோடு காண்கிறோமே இந்த கற்பனை நிலை நிஜ வாழ்க்கையில் நடக்காமலேயே போய்விடுமோ என்ற எண்ணத்தோடு ராகினி தன்னை மறந்து சிந்தித்தபடியே கால் போன போக்கில் தங்கள் வீட்டை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தாள்.

பல்வேறு சிந்தனைகளுக்கு நடுவிலும் ஒரு வழியாக சரியாக தங்கள் அறையை வந்து சேர்ந்திருந்த ராகினி அங்கே மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்து விட்டு விரக்தியாக புன்னகைத்த படியே அந்த இடத்தை மட்டுமல்லாது தன் மனதிற்குள் எழுந்த பலவீனத்தையும் அந்த நேரத்தில் தன்னால் முடிந்த அளவு முயன்று கடந்து சென்றிருந்தாள்.

எப்படியோ ஒவ்வொரு விடயங்களிலும் தன்னை அவள் தைரியமாக மீட்டிக் கொண்டு இருந்தாலும் அவள் காதலை இது நாள் வரை உணராத கார்த்திக் இனியும் அதை உணரப்போவதில்லை என்பதைப் போல அவளை முற்றிலும் நிலை குலையச் செய்யும் விடயத்தை அன்றிரவு அவளிடம் கூறியிருக்க அவன் சொன்ன விடயங்களைக் கேட்ட ராகினியோ கடந்த பத்து வருடங்களாக தன் காதல் மீது தான் கொண்ட நம்பிக்கை ஒரே நிமிடத்தில் அவன் சொன்ன வார்த்தைகளால் மொத்தமாக இல்லாமல் போய் விடுமோ என்ற தவிப்போடு கண்கள் கலங்க அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்…….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!