உன்னாலே – 07

eiAPZYF37537-a546d4fe

“என்னால் உன்னோடு என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரிசமமாக பங்கு போட்டுக் கொள்ள முடியுமான்னு தெரியலை ராகினி! எந்தவொரு விடயமும் அதன் எல்லையை கடக்கும் போது அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்! என்னோட வாழ்க்கை முறை வேறு, உன்னோட வாழ்க்கை முறை வேறு! என்னோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நீ நுழைய எந்த ஒரு முயற்சியும் பண்ணாதே! அப்படி பண்ணினாலும் என் மனதை உன்னால் மாற்ற முடியாது! இப்போ நம்ம இரண்டு பேருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கு அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை அதை நீ புரிஞ்சுக்கோ! நம்ம இப்போ எப்படி இருக்கோமோ அப்படியே இனியும் தொடர்ந்து இருக்கலாம் அதுதான் நமக்கு நல்லது!” கார்த்திக் ராகினியின் முன்னால் தன் மனதிற்குள் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த விடயங்களை ஒரே மூச்சில் கூறி முடித்திருக்க அவன் முன்னிலையில் நின்று கொண்டிருந்தவளோ அவன் வார்த்தைகளால் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள்ளேயே நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவர்கள் இருவரும் இரவுணவை முடித்து விட்டு தங்கள் அறைக்குள் வந்திருந்தனர்.

அன்றைய நாள் அவர்கள் இருவரது மனநிலையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி இருந்ததால் என்னவோ தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் இருவருக்கும் இடையே வழக்கமாக இருக்கும் நட்பான பேச்சுவார்த்தை அன்று இருக்கவில்லை.

எது எப்படி இருப்பினும் சிறிது நேரம் கழித்து தூங்கச் செல்வதற்கு ஏதுவாக ராகினி படுக்கையை தயார் படுத்திக் கொண்டிருக்க அவளையே வெகு நேரமாக கண்காணித்து கொண்டிருந்த கார்த்திக் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டு விட்டு அவள் முன்னால் வந்து நின்று
“ராகினி நான் ஒரு விஷயம் சொல்லணும் ஈவ்னிங் நீ ஆபிஸ் விட்டு வரும் போது சொல்லி இருந்தேனே!” என்று கூற

அவனது குரலில் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“சொல்லுங்க கார்த்தி” அவன் எதைப்பற்றி பேசப்போகிறான் என்று முன்பே சிறிது யூகித்து இருந்தவள் முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையுடன் அவனைப் பார்த்து கொண்டு நின்றாள்.

அப்படி புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தவள் முன்னிலையில் தான் அவன் இத்தனை உணர்வுபூர்வமான விடயத்தை வெகு எளிதாக சொல்லி விட்டு எதுவுமே நடவாதது போல நின்று கொண்டிருந்தான்.

“நீ நான் சொன்னதை புரிஞ்சுகிட்டன்னு நினைக்கிறேன் அப்புறம் நாளைக்கு ஆபிஸில் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு சீக்கிரமாக போகணும் காலையில் நேரத்திற்கே ரெடியாக இரு!” அவள் என்ன மாதிரியான மனநிலையுடன் இருக்கிறாள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தான் சொல்ல வந்த தகவல்களை மாத்திரம் சொல்லி விட்டு கார்த்திக் அங்கிருந்து சென்றுவிட மறுபுறம் ராகினி அவனையே கண் இமைக்காமல் வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.

இது நாள் வரை தான் அவனுக்கு தன் காதலை உணர்த்த செய்த செயல்களை எல்லாம் அவன் புரிந்து கொள்ளவில்லை என்று தான் அவள் நினைத்திருந்தாள் ஆனால் இன்று அவனது பேச்சு அவன் அவற்றை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்திருக்கிறான் என்ற நிதர்சனத்தை அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைத்திருந்தது.

‘ஏன் கார்த்திக்? ஏன்? காதல் என்ன அவ்வளவு தவறான விஷயமா? நம்ம மனசுக்கு ஒருத்தரை முதல் பார்வையில் பிடித்து போய் அவங்க நம்ம வாழ்க்கை முழுவதும் நம்ம கூட நம்ம வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்று நினைப்பது அவ்வளவு தவறான விஷயமா? காதல் கல்யாணம் என்கிற விஷயத்தை நீங்க ஏன் இவ்வளவு தூரம் உங்க வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்குறீங்க கார்த்திக்?’ இதுநாள் வரை கார்த்திக்கின் காதல் தனக்கு கிடைக்கும் என்கிற ஏதோ ஒரு தைரிய உணர்வில் இருந்த ராகினி இன்று அவனது பேச்சில் மொத்தமாக உடைந்து போய் முதன்முதலாக அவனை பறிகொடுத்து விடுவோமோ என்கிற தவிப்போடு மனம் படபடக்க தன்னை அறியாமலேயே கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்.

இதுநாள் வரை நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவள் முன்னால் வேகமாக நகர்ந்து செல்ல தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு குனிந்து கொண்டவள் மனமோ அவளை சோர்ந்து போகக்கூடாது சோர்ந்து போகக்கூடாது என்று தைரியமளித்துக் கொண்டிருந்தது.

இந்த பத்து வருடங்களில் கார்த்திக்குடன் சென்று அவள் நேரடியாக பேசியதில்லை அதனால் என்னவோ அவனது இந்த முதல் மறுப்பு அவளை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்திருந்தது.

ஆனால் இந்த காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தில் எத்தனை விதமான தடைகள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து அவற்றை தன் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றிக் கொள்ளுவது தானே ராகினியின் பழக்கம்.

இப்போதும் அப்படியே கார்த்திக் தன் காதலை உணர்ந்து கொள்ளாமல் இருக்க அவள் முன்னால் வைத்த தடையை தனக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்வது என்ற யோசனைக்கு தற்காலிகமாக தன் மனதை திசை திருப்பியவள் அதில் வெற்றியும் கண்டு கொண்டாள்.

எவ்வளவு நேரம் அவள் அவ்வாறு சிந்தனையோடு அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை காலை நேரம் கார்த்திக் அவளை வந்து தட்டி எழுப்பும் போது தான் அவளுக்கு சிறிது நிதானமே வந்திருந்தது.

“என்னாச்சு ராகினி உனக்கு?” கார்த்திக்கின் கேள்வியில் அவனை குழப்பமாக பார்த்தவள்

“என்ன என்னாச்சு எனக்கு ஒண்ணும் ஆகலையே!” இயல்பாக பதிலளிக்க

தன் கழுத்தில் இருந்த டையை சரி செய்த படியே அவள் முன்னால் வந்து நின்றவன்
“அப்போ நேத்து ராத்திரி ஏன் அந்த கதிரையில் உட்கார்ந்து இருந்த மாதிரியே தூங்கி இருந்த? காலையில் இவ்வளவு நேரம் ஆகியும் நான் வந்து எழுப்பும் வரை எழும்பால் தூங்கி இருக்க? உனக்கு என்ன ஆச்சு? நேற்று ஆபிஸில் இருந்தும் பாதியில் வந்துட்ட உடம்புக்கு எதுவும் முடியலையா?” அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே வினவ

அவரைப் பார்த்து சிறு புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்தவள்
“தூங்குறவங்களை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்குறவங்களை எழுப்ப முடியாதுன்னு இப்போ தான் எனக்கு புரியுது! நீங்க கீழே வெயிட் பண்ணுங்க பதினைந்து நிமிஷத்தில் நான் ரெடி ஆகிட்டு வந்துடுறேன்” என்றவாறே அவனைத் தாண்டி செல்லப் போனவள் பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக அவன் முன்னால் மறுபுறம் வந்து நின்று கொண்டாள்.

“என்னாச்சு ஏதாவது வேணுமா?”

“இல்லை நேற்று ராத்திரி நான் அந்த கதிரையில் உட்கார்ந்து இருந்த மாதிரியே தூங்கி இருந்தேன்னு சொன்னீங்களே அப்புறம் எப்படி நான் இங்கே பெட்டில்?”

“நான் தான் தூக்கி வந்து தூங்க வைத்தேன்”

“என்ன?” ராகினி அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் குடையென விரிய கார்த்திக்கை பார்த்து வினவ

அவளை வித்தியாசமாக பார்த்தவன்
“என்னாச்சு? அங்கே தூங்குனா உனக்கு கழுத்து வலிக்கும்ன்னு தான் இங்கே தூங்க வைத்தேன் அதில் என்ன தப்பு?” என்றவாறே இயல்பாக வினவ

அவனது கண்களையே பார்த்து கொண்டு நின்றவள்
“என்னால் உன்னோடு என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரிசமமாக பங்கு போட்டுக் கொள்ள முடியுமான்னு தெரியலை ராகினி! எந்தவொரு விடயமும் அதன் எல்லையை கடக்கும் போது அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்! என்னோட வாழ்க்கை முறை வேறு, உன்னோட வாழ்க்கை முறை வேறு! என்னோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நீ நுழைய எந்த ஒரு முயற்சியும் பண்ணாதே! அப்படி பண்ணினாலும் என் மனதை உன்னால் மாற்ற முடியாது! இப்போ நம்ம இரண்டு பேருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கு அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை அதை நீ புரிஞ்சுக்கோ! இது நீங்க நேற்று ராத்திரி என் கிட்ட சொன்ன விஷயம் தானே?” என்று கேட்க அவனது தலை ஆமோதிப்பாக அசைந்தது.

“அப்படின்னா உங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நான் வர்றது உங்களுக்கு விருப்பம் இல்லை அப்படி இருக்கும் போது என்னோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நீங்க வர முடியுமா? அதாவது இப்படி தொட்டு தூக்குறது, உரிமை எடுத்துக்குறது இது எல்லாம் சரியா? நான் உங்களை தப்பாக எதுவும் சொல்லல என்னோட சந்தேகத்தை கேட்கிறேன் அவ்வளவு தான்!”ராகினியின் நேரடி கேள்வியில் அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

அவனது அமைதி அவளை ஏதோ செய்ய தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்
“இங்க பாருங்க மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக் நீங்க என்ன தான் வேண்டாம் வேண்டாம்ன்னு விலகி போனாலும் அது உண்மையான விலகலே இல்லை! இன்னும் சொல்லப்போனால் நீங்க உங்களை சுற்றி போட்டு இருக்கும் ஒரு தடுப்பு வேலி அவ்வளவு தான்! நீங்க இதற்கு மேலும் ஏதாவது சாக்கு சொல்லி அப்படி இல்லை அது, இதுன்னு கற்பனை கதை வளர்க்க போனால் அதை நான் நம்ப மாட்டேன்! இந்த காதல் அப்புறம் கல்யாணம் இது இரண்டிலும் நம்பிக்கை இல்லைன்னு சொல்லுறவங்க தான் கொஞ்ச நாளில் அந்த உறவுக்காக ரொம்ப பாடுபடுவாங்க அதுவும் எனக்குத் தெரியும்! அதோடு இந்த பத்து வருடங்களில் நான் உங்களை பற்றி ரொம்ப போதுமான அளவு தெரிந்து வைத்து இருக்கேன்!” என்று கூற

“பத்து வரு…” அவளை இடைமறித்து ஏதோ கேட்கப் போனவனை முழுமையாக பேச விடாமல்

“அப்புறம் அவ்வளவு பெரிய பிசினஸ் மேன் அத்தனை பேரையும் கட்டி ஆளும் ஒரு ஆளு தன்னோட மனைவியைப் பார்த்து பயந்து போறாரு! பரவாயில்லை இதுவும் நல்லாதான் இருக்கு! இந்த சீக்ரெட் நமக்குள்ளேயே இருக்கட்டும் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! இல்லைன்னா அப்புறம் உங்க ஆபிஸில் எல்லோரும் உங்களைப் பார்த்து கிண்டல் பண்ணுவாங்க” அவனைப் பார்த்து கண்ணடித்தவாறே குளியலறைக்குள் நுழைந்து கொள்ள மறுபுறம் கார்த்திக் தனது மனதிற்குள் இருப்பதை எப்படி இப்படி அவள் சரியாக கண்டு கொண்டாள் என்கிற குழப்பம் கலந்த யோசனை உணர்வுடன் தான் கேட்க வந்த கேள்வி பாதியிலேயே மறைந்து போனதைப் பற்றி உணராமலேயே அன்றைய நாளுக்குரிய தன் அலுவலக உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தான்.

மறுபுறம் குளியலறைக் கதவின் மேல் சாய்ந்து நின்று தன் கண்களை இறுக மூடி கொண்டபடியே தன் நெற்றியை நீவி விட்டு கொண்டு நின்று கொண்டிருந்த ராகினிக்கு தன் காதலை அவனுக்கு உணர்த்த தன்னால் அடுத்து என்ன செய்ய முடியும் என்று எதுவுமே புரியவில்லை.

மனம் போன போக்கில் எப்படியோ ஆபிஸ் செல்வதற்கு தயாராகி வந்தவள் தன் மன சோர்வை அந்த வீட்டில் யாருக்கும் காண்பித்துக் கொள்ளாமல் இன்முகத்துடன் கார்த்திக்குடன் இணைந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்று அன்றைய நாளில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளை எல்லாம் பார்த்து கொண்டிருக்க மறுபுறம் கார்த்திக் ஒரு முக்கியமான மீட்டிங் தொடர்பான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்த நேரம் திடீரென பதட்டத்துடன் எழுந்து நின்ற கார்த்திக்
“சிட்! இப்போ போய் இப்படி ஆகிடுச்சே!” தன் தலையில் கையை வைத்துக் கொண்டு நிற்க

தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு அவனருகில் வந்து நின்ற ராகினி
“என்னாச்சு கார்த்திக்?” என்று கேட்க

அவளின் புறம் திரும்பி பார்த்தவன்
“இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு நான் உன் கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தேன் இல்லையா? அந்த மீட்டிங்காக இரண்டு நாளாக சரியாக தூக்கம் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு செய்த பிரஷன்டேஷன் ஓபனே ஆக மாட்டேங்குது காலையில் ஓபன் ஆச்சு இப்போ திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியலை வரவே மாட்டேங்குது! எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன் சரியே வரல
இன்னும் முப்பது நிமிஷத்தில் டீலர்ஸ் எல்லோரும் வந்துடுவாங்க இந்த டீலிங் மட்டும் சரியாக வந்ததுன்னா நம்ம கம்பெனி ரொம்ப பெரிய இலாபத்தை எடுக்கும் அந்த இலாபத்தை வைத்து தான் இந்த மாதம் இங்க வேலை பார்க்கும் எல்லோருக்கும் போனஸ் தர்றதாக சொல்லி இருந்தோம் இப்படி எல்லாம் இந்த மீட்டிங்கை நம்பித்தான் இருக்கு இந்த நேரம் பார்த்து இப்படி எல்லாம் சொதப்பிடுச்சு!” கவலையோடு கூறவும் அவனது லேப்டாப்பை எடுத்து பார்த்தவள் தன்னால் முயன்ற மட்டும் முயற்சி செய்து பார்த்து விட்டு அவனின் புறம் திரும்பி மறுப்பாக தலையசைத்தாள்.

“உடனடியாக அடுத்த பிரசன்டேஷன் செய்ய நினைத்தாலும் அவ்வளவு நேரம் இப்போ நம்ம கிட்ட இல்லை என்ன பண்ணுறதுன்னே தெரியலை!”

“கார்த்திக் இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷன் ஆனா எப்படி? முதல்ல நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க”

“ரிலாக்ஸா? உனக்கு இந்த வேலையை பற்றி ஏதாவது தெரியுமா? சும்மா வாய்க்கு வந்த எதையாவது பேசிட்டு இருக்காமல் நகரு நான் பார்த்துக்கிறேன் ரிலாக்ஸாம் ரிலாக்ஸ்” கார்த்திக் கோபத்துடன் ராகினியைப் பார்த்து கத்தி விட்டு சில பைல்களை எடுத்து கொண்டு வெளியேறி சென்று விட கோபமாக நடந்து செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அவனது லேப்டாப்பை எடுத்து கொண்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

மறுபுறம் கான்பரன்ஸ் ரூமில் மீட்டிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்து கொண்டு நின்ற கார்த்திக் தன் கையிலிருந்த கடிகாரத்தை பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருக்க அங்கே நின்று கொண்டிருந்த நபர்களில் ஒருவர்
“சார் டீலர்ஸ் எல்லோரும் வந்துட்டாங்க நீங்க வந்தீங்கன்னா எல்லோரையும் உள்ளே அழைச்சுட்டு வந்துடலாம்” என்று கூறவும் அவரைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றான்.

வழமையான விசாரிப்புகள் மற்றும் உபசரிப்பின் பின்னர் எல்லோரும் கான்பிரன்ஸ் அறையை நோக்கி செல்ல அங்கே ராகினி லேப்டாப்பை வைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்க அவசரமாக அவளருகில் வந்தவன்
“ராகினி இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இது விளையாடுற நேரம் இல்லை உன் விளையாட்டு தனத்தை எல்லாம் இங்கே காட்ட வேண்டாம்” பல்லைக் கடித்துக் கொண்டு அவளுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூறவும்

அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்
“வெயிட் அன்ட் வாச் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்!” அவனைப் போலவே மெல்லிய குரலில் கூறி விட்டு அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரின் புறமும் திரும்பி

“வணக்கம் என்னோட பேரு மிஸஸ். ராகினி கார்த்திக்! கார்த்திக் சாரோட பி.ஏ! அப்புறம் இன்னைக்கு உங்க எல்லோர் முன்னாடியும் எங்க கம்பெனி பற்றிய பிரசன்டேஷனை செய்ய போறதும் நான் தான்! எப்படியும் உங்க எல்லோரோட சேர்ஸையும் இன்னைக்கு எங்க கம்பெனியோடு ஜாயின் பண்ண வைத்து விடுவோம்ன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அதேமாதிரி எங்க கூட சேர்ந்து வேலை செய்தால் உங்களுக்கு நிறைய இலாபம் கிடைக்கும்ன்னு நம்பிக்கை இருந்தால் நீங்க இங்கே உட்காரலாம்” என்று கூற அவளது பேச்சில் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள மற்றவர்கள் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளா முடியாமல் கார்த்திக்கும் அவளை முறைத்து பார்த்தபடியே இன்னொரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் பிரசன்டேஷன் ஆரம்பித்து விட ஆரம்பத்தில் சலிப்போடும், கோபத்தோடும் ராகினியைப் பார்த்து கொண்டிருந்தவன் நேரம் செல்ல செல்ல அந்த குறுகிய நேரத்திற்குள் அவள் செய்து முடித்திருந்த வேலையை பார்த்து பிரம்மித்துப் போய் அமர்ந்திருந்தான்.

இத்தனை நாட்களாக அவளிடம் இந்தளவிற்கு திறமை இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை என்பதை அவனது பார்வை மாற்றத்திலேயே ராகினி உணர்ந்து கொண்டாலும் அந்த பிரம்மிப்பின் பிண்ணனியில் இருக்கும் காரணத்தை அவள் ஒருவளே அறிவாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு கார்த்திக் அவனது கேபினை விட்டு வெளியே சென்றதும் தனது அண்ணன் சிவாவிற்கு அழைப்பை மேற்கொண்டு அவனை படாதபாடு படுத்தி இந்த குறுகிய நேரத்திற்குள் இத்தனை நேர்த்தியாக அவள் இந்த வேலையை செய்திருந்தாலும் அந்த நேர்த்தியின் பிண்ணனியில் அவளது உழைப்பும் மறைமுகமாக மறைந்திருக்கத் தான் செய்தது.

முதன் முதலாக கார்த்திக் தன்னை பிரம்மித்துப் போய் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளை சுற்றி ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறப்பதைப் போல இருக்க அந்த சந்தோஷத்தை பூரணமாக உள்வாங்கிக் கொண்ட படியே பிரசன்டேஷனை முடித்து விட்டு ராகினி எல்லோரையும் கேள்வியாக நோக்க சுற்றி இருந்த அனைவரும் எழுந்து நின்று அவளுக்கு கைதட்டி வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.

முதலில் அவர்களை எல்லாம் பார்த்து சிறு சங்கோஜத்துடன் புன்னகைத்துக் கொண்டவள் ஏதோ நினைவு வந்தவளாக கார்த்திக்கின் புறம் திரும்பி அவனைப் பார்த்து நக்கலாக சிரிக்க அவனுக்கோ அவளைப் பார்க்கவே மிகுந்த சங்கடமாகிப் போனது.

சிறிது நேரத்திற்கு முன்பு அவளை வாய்க்கு வந்த படி பேசி விட்டோமே என்கிற குற்ற உணர்வுடன் அவளின் அருகில் வராமல் ஒதுங்கி நின்றவன் அந்த அறையில் இருந்த எல்லோரும் வெளியேறி சென்ற பின்னர் அவளின் முன்னால் தயங்கி தயங்கி வந்து நின்றான்.

“இதோ பாருங்க மிஸ்டர் ஹஸ்பண்ட் கார்த்திக் நான் காலேஜ் படிக்கும் நேரம் வேணும்னா ஒழுங்காக படிக்காமல் கிளாஸ் கட் பண்ணி பிரின்சிபால் கிட்ட திட்டு வாங்கி பதினெட்டு அரியர்ஸ் வைத்து இருக்கலாம்”

“ஏது பதினெட்டு அரியர்ஸா?”

“ஆமா இதில் என்ன இருக்கு? நானே இருபது அரியர்ஸ் ஆக்காமல் விட்டுட்டேன்னு ஃபீல் பண்ணுறேன் நீங்க வேற!”

“அது சரி”

“ஆமா நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்”

“உன்னோட காலேஜ் வாழ்க்கை வரலாறு பற்றி”

“யாஹ்! யாஹ்! நான் என்ன தான் படிக்குற விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் வேலை விஷயத்தில் பர்பக்டா இருப்பேன் அதற்காக நான் உங்க கிட்ட தாங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்க மாட்டேன் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! இது என்னோட கடமை அவ்வளவு தான்”

“நான் தாங்க்ஸ் எல்லாம் சொல்ல வரல உன் கிட்ட கொஞ்சம் கோபமாக பேசிட்டேன் அதைத் தான் சொல்ல வந்தேன் ஐ யம் சாரி”

“அட இதெல்லாம் தேவையே இல்லை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! தாங்க்ஸே வேணாம்னு சொல்லிட்டு உங்களை சாரி சொல்ல சொல்லுவேனா? அது மட்டுமில்லாமல் நான் உங்க மேல எல்லாம் கோபப்படவே மாட்டேன்”

“அப்படியா?” ராகினியின் முகத்தையே சிறிது நேரம் யோசனையோடு பார்த்து கொண்டு நின்ற கார்த்திக் இரண்டு அடிகள் முன்னால் எடுத்து வைத்து அவளுக்கு மிகவும் நெருக்கமாக வந்து நிற்க

அவனது செய்கையில் விழி விரிய அவனைப் பார்த்தவள்
“எ… என்ன ஆ… ஆச்சு?” வார்த்தைகள் தந்தியடிக்க தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் நான்ஸ்டாப்பா பேசிட்டு இருந்த இப்போ இப்படி பதட்டப்படுற என்னாச்சு பயமா?”

“பயமா? என… எனக்கு எதற்கு பயம்? நீங்க தான் சொல்லுறது ஒண்ணு செய்யுறது ஒண்ணு நேற்று ராத்திரி ஏதோ பெரிதாக வசனம் எல்லாம் பேசிட்டு இப்போ இப்படி செய்தால் என்ன அர்த்தம்?”

“நான் என்ன செய்தேன்?”

‘உங்களையும் என்னை மாதிரி வார்த்தைக்கு வார்த்தை பேச பழக்கியது ரொம்ப தப்பாக போச்சு! இவங்க தூரமாக நின்னாலே எனக்கு ஒரு மாதிரி ஆகும் இவ்வளவு பக்கத்தில் வேறு வந்து இம்சை பண்ணுறாங்களே!’ தவிப்போடு தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்ட ராகினி அவனிடம் இருந்து விலகி செல்லப் போக சட்டென்று அவளது இரு புறமும் இருந்த மேஜை மீது தன் கைகளை ஊன்றிக் கொண்டவன் கேள்வியாக புருவம் உயர்த்த

பதட்டத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்
‘திடீர்னு இவருக்கு என்ன ஆச்சு? வழக்கமாக நான் தானே இப்படி எல்லாம் பண்ணுவேன்? ஒருவேளை கனவாக இருக்குமோ?’ என தனக்குள் நினைத்துக் கொண்டபடியே சட்டென்று கார்த்திக்கின் கையில் கிள்ள

“ஐயோ அம்மா!” வலியில் கத்தியபடி தன் கைகளை தேய்த்து விட்டு கொண்டவன்

“எதற்கு இப்போ கிள்ளுன?” கோபமாக அவளைப் பார்த்து வினவினான்.

“இல்லை கனவாக இருக்குமோன்னு…”

“அதற்கு உன் கையில் கிள்ளிப் பார்க்கணும் என் கையில் இல்லை” என்றவன் பேச்சு வாக்கில் அங்கிருந்து நழுவப் போனவளை தன் ஒரு கையால் தன் முன்னால் நிற்கச் செய்து விட்டு மறுகையால் அவளது காதோரம் இருந்த முடிக்கற்றைகளை விலக்க அவளுக்கோ அவனது செய்கையில் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

இருந்தாலும் அவன் முன்னால் தன் பதட்டத்தை வெளிக்காண்பித்துக் கொள்ளாமல் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்த ராகினி அவனது முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நிற்க அவனோ அவள் சற்றும் எதிர்பாராத ஒரு விடயத்தை கண் இமைக்கும் நொடிக்குள் செய்து விட்டு அவளை கேலியாக பார்த்து கொண்டு நின்றான்…….