உன்னாலே – 08

eiAPZYF37537-045907e8

உன்னாலே – 08

கார்த்திக்கின் தொடுகையில் ராகினி தன்னை மறந்து நிற்க அவளது காதருகில் மெல்ல குனிந்தவன்
“நீ சும்மா இருந்து இருந்தால் நான் இப்படி எல்லாம் பண்ணி இருக்கவே மாட்டேன் எப்போ பதினெட்டு அரியர்ஸ் இருந்ததுன்னு சொன்னியோ அப்போவே எனக்கு லைட்டா சந்தேகம் வந்துச்சு இப்போ கன்பர்ம் ஆகிடுச்சு” என்றவாறே அவளது காதை மெல்ல மெல்ல வருடிக் கொடுத்தபடி நொடிப்பொழுதில் அதிலிருந்த ஹெட்போனை எடுக்க முதலில் அவனது தொடுகையில் மெய் மறந்து நின்றவள் இப்போது அவன் தான் செய்த செயலை கண்டு கொண்டான் என்ற அதிர்ச்சியில் படக்கென்று தன் இமைகள் இரண்டையும் திறந்து கொண்டு அவனைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

அவனது கேலியான பார்வையில் தன் உதட்டை கடித்து கொண்டு நின்றவள் அவன் கவனியாத வண்ணம் மேஜை மீதிருந்த போனை எடுக்க மெல்ல மெல்ல தன் கையை நகர்த்த ஒற்றை கணத்திற்குள் அவளது தொலைபேசியும் இப்போது அவனின் வசமாகியிருந்தது.

“அப்போ இவ்வளவு நேரமும் நீங்க உங்களைப் பற்றி பெருமையாக சொன்னது அப்புறம் என்னோட தாங்க்ஸ் அன்ட் சாரி எல்லாம் வேணாம்னு சொன்னது எல்லாவற்றுக்கும் இவங்க தான் ரீசனா?” தன் கையிலிருந்த ஹெட்போனை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தபடியே கார்த்திக் கேட்க அவனைப் பார்த்து ஒரு நொடி ஆமோதிப்பாகவும் மறுநொடி மறுப்பாகவும் தலையசைத்தவள் அவனைத் தாண்டி செல்லப் போக இப்போதும் அவன் அவளின் இரு புறமும் தன் கைகளை ஊன்றிக் கொண்டு அவளை நகர விடாமல் நிறுத்தி வைத்திருந்தான்.

“நான் கூட நீ பிரசன்டேஷன் பண்ண முறையைப் பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து போனேன் ஆனா கேடி பொண்ணு நீ என்னையே ஏமாற்றி இருக்க! ஹெட்போனில் யாரு உங்க அண்ணன் சிவா தான் ஐடியா சொல்லித் தந்துட்டு இருந்தானா?”

“ஆமா இப்போ அதற்கு என்ன? ஏதோ போனாப்போகுது என்னோட ஹஸ்பண்ட் அடுத்தவங்க முன்னாடி தலை குனிந்து நிற்கக் கூடாதேன்னு பாவம் பார்த்து எங்க அண்ணன் கிட்ட உதவி கேட்டேன் அதற்கு போய் இவ்வளவு தூரம் பில்டப் பண்ணுறீங்க உங்க கிட்ட ஏதாவது கேட்டால் நீங்க அந்த நேரம் சொல்லித் தரவா போறீங்க?”

“நீ கேட்டிருந்தால் நான் சொல்லித் தந்து தான் இருப்பேன்”

“அப்படியா? அது தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவ்வளவு பாசமாக பேசிட்டு இருந்தீங்க போல இல்லை?”

“அது அந்த நேரம்…”

“அந்த பேச்சு எல்லாம் வேண்டாம் எனக்கு நீங்க சொல்லித் தரலேன்னாலும் எங்க அண்ணன் சொல்லித் தருவாங்க அதுதான் என் அண்ணன் கிட்ட கேட்டேன் எங்க அண்ணன் ஒண்ணும் உங்களை மாதிரி சிடுசிடு ஆபிஸர் இல்லை”

“அடிங்! நான் சிடுசிடு ஆபிஸரா?” ராகினியை அடிப்பது போன்ற பாவனையோடு கார்த்திக் தன் கையை உயர்த்த அந்த ஒரு நொடிக்குள் அவனின் கைச்சிறைக்குள் இருந்து வெளியேறி வந்திருந்தவள் அவனைப் பார்த்து நாக்கை துருத்தி காட்டி விட்டு ஓடி விட

முகம் கொள்ளாப் புன்னகையுடன் தன் தலையை கோதி விட்டுக் கொண்டவன் தனது மடிக்கணினியை தன் பக்கம் திருப்பியபடி
“எவ்வளவு விளையாட்டு தனமாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பர்பக்டா இருக்கா! என்ன தான் சிவா ஒவ்வொரு விடயமாக சொல்லிக் கொடுத்து இருந்தாலும் இவ்வளவு சரியாக எந்த குறையும் இல்லாமல் செய்து முடித்து இருக்காளே! எல்லாம் தெரியும் ஆனாலும் என்ன விளையாட்டு தனம் தான் கொஞ்சம் ஜாஸ்தி! வாலுப் பொண்ணு!” என்றவாறே அந்த மடிக்கணினியின் திரையைப் பார்த்து பேசிக் கொண்டு நிற்க

“அது ஏன் திட்டுவதையும், பாராட்டுவதையும் ஒருத்தரை போக விட்டு சொல்லுறீங்க? நேரடியாக சொன்னால் நாங்களும் கேட்டுக் கொள்ளுவோம் இல்லையா?” ராகினியின் குரல் அவன் பின்னால் ஒலித்தது.

அவளது குரல் கேட்டதும் சட்டென்று தன் பின்னால் திரும்பி பார்த்தவன் குறும்பு புன்னகையுடன் அவனைப் பார்த்து கண்ணடித்து நின்றவளை முயன்று முறைத்துப் பார்க்க அதே புன்னகை முகமாக அவன் முன்னால் இரண்டெட்டு வைத்து வந்து நின்றவள்
“என் போனைத் தான் நான் எடுக்க வந்தேன்பா மற்றபடி இங்க நடந்த எதையும், நீங்க பேசிய எதையுமே நான் கேட்கல! சரியா?” அவன் கையிலிருந்த தன் போனை வாங்கி கொண்டபடியே மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து சென்று

“ஆனாலும் இப்படி ஒளிந்து நின்று பாராட்டு வாங்குவதும் ஒரு கிக்காகத் தான் இருக்கு மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்!” என்று விட்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட அவளது செய்கைகளில் கார்த்திக்கின் முகம் புன்னகையால் மலர்ந்து போனது.

அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கும் இந்த மூன்று மாத காலத்திற்குள் இப்படி பல்வேறு விதமான சேட்டைகளை ராகினி செய்து கொண்டே இருப்பாள் கார்த்திக்கும் அவற்றை எல்லாம் தனக்குள்ளேயே ரசித்து சிரித்துக் கொண்டு இருப்பான் ஆனால் அவற்றை எல்லாம் அவன் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவே மாட்டான்.

இப்போதும் அப்படியே அவளது குறும்புத்தனத்தையும், வேலை செய்யும் ஆர்வத்தையும் நினைத்து பார்த்தபடி நின்றவன் மனதிற்குள் சில சம்பவங்கள் அணிவகுக்க ஆரம்பித்தது.

நேற்று மாலை வந்த தொலைபேசி அழைப்பின் பின்னர் தன் மனதிற்குள் நடந்த உணர்ச்சி தளம்பல்களும் அதன் பின்னர் அன்றிரவு ராகினியின் மனவோட்டத்தைப் பற்றி அறியாமலேயே அவளிடம் ஒட்டுமொத்தமாக தன் மனதிற்குள் இருந்த உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்ததையும் நினைத்துப் பார்த்தபடியே கார்த்திக் அந்த கான்பிரன்ஸ் அறையில் இருந்து வெளியேறி செல்ல அவனது வருகைக்காக அந்த அறை வாயிலிலேயே காத்து நின்ற ராகினி அவனது முகமாற்றத்தைப் பார்த்து விட்டு
‘உங்க மனதில் இருக்கும் பயத்தையும், குழப்பத்தையும் என்னால் இல்லாமல் செய்ய முடியுமான்னு எனக்கு தெரியல கார்த்திக் ஆனா அந்த உணர்வுகளை நீங்களாக கடந்து வந்து தான் ஆகணும் இத்தனை வருடங்களாக அந்த உணர்வுகளை பார்த்து நீங்க ஓடி ஒளிந்து கொண்டது போதும் இனியும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் போட அவசியம் இல்லை இனியும் என்னோட காதல் ஒருதலைக் காதலாக இருக்காது இருக்கவும் விடமாட்டேன்! அதற்காக உங்களை கட்டாயப்படுத்தி இதையெல்லாம் செய்ய மாட்டேன் என்னோட ஒவ்வொரு அசைவிலும், நடவடிக்கைகளிலும் என் காதலை உங்களுக்கு புரிய வைப்பேன் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்!’ என தனக்குள்ளேயே உறுதி எடுத்துக் கொள்வது போல பேசிக் கொண்டபடி அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அதன் பிறகு அன்றைய அலுவலக வேலைகள் அவர்கள் இருவரையும் வழமை போல சூழ்ந்து கொள்ள தங்கள் வேலைகளில் மூழ்கிப் போனவர்களுக்கு அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது தான் ஒருவரை ஒருவர் பார்த்து சரியாக பேசிக் கொள்ளவே நேரம் கிடைத்தது.

வழக்கமாக அலுவலகம் முடிந்து காரில் போகும் போது ராகினி ஏதாவது கேள்வி கேட்க கார்த்திக் அவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருப்பான்.

இன்றும் அவ்வாறே ராகினி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் புன்னகை முகமாக பதிலளித்து கொண்டிருந்தவன் அவள் இறுதியாக கேட்ட கேள்வியில் சட்டென்று கார் பிரேக்கை அழுத்த அவன் அவ்வாறு காரை திடீரென நிறுத்துவான் என்று எதிர்பாராத ராகினி தன் முன்னால் இருந்த தடுப்பில் மோதியிருந்தாள்.

“கார்த்திக்!” தான் இடித்துக் கொண்ட வேகத்தில் ராகினி வலியால் அலற

“ஐயோ ராகினி என்ன ஆச்சு?” பதட்டத்துடன் அவளது நெற்றியை நீவி விட்டவன்

“காரில் ஏறிய உடனே சீட் பெல்ட் போட்டுக்கோன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? நீ உன் விளையாட்டு தனத்தை விடவே மாட்டே இல்லை?” சிறு கண்டிப்புடன் அவளுக்கு சீட் பெல்ட்டை போட்டு விட

அவனது அன்பான மிரட்டலில் எப்போதும் போல தனக்குள்ளேயே நெகிழ்ந்து போனவள்
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவே இல்லையே?” கேள்வியாக அவனை நோக்கினாள்.

“இப்போ உனக்கு என்ன வேணும்?”

“நான் கேட்ட கேள்விக்கு பதில்! அவ்வளவுதான்!”

“ப்ச்! இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்த இப்போ திடீர்னு உனக்கு என்ன ஆச்சு?”

“நான் கேட்டது சிம்பிளான ஒரே ஒரு கேள்வி அதற்கு பதில் சொல்லாமல் நீங்க தான் இதை வளர்த்துட்டே போறீங்க”

“சரி உனக்கு என்ன தெரியணும் இப்போ? நான் யாரையும் லவ் பண்ணி இருக்கேனே இல்லையான்னு தானே? நல்லா கேட்டுக்கோ என் வாழ்க்கையில் நான் இதுவரைக்கும் யாரையும் காதலித்ததும் இல்லை அதேமாதிரி இனி காதலிக்கப் போறதும் இல்லை போதுமா? தயவுசெய்து இனிமேல் இப்படிப்பட்ட கேள்வியை எல்லாம் என்கிட்ட கேட்காதே! கேட்கவும் நினைக்காதே!” கார்த்திக் பற்களை கடித்தபடி மெல்லிய குரலில் கூறி விட்ட காரை மீண்டும் இயக்க

அவனை சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த ராகினி
‘இந்த பதிலைத் தான் நான் எதிர்பார்த்தேன் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! இப்போ காதலே வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கும் ஆளு இன்னும் எண்ணி மூனே மாதத்தில் காதல் கவிதைகளாக எடுத்து சொல்லத்தான் போறாங்க அதையும் நான் பார்க்கத் தான் போறேன் இத்தனை வருஷமா வார்த்தையை அளந்து பேசிய ஆளை இந்த மூணு மாதத்தில் அப்படியே மாற்றிட்டோம் இந்த விஷயத்தில் மாற்ற முடியாத என்ன? உன் காதல் உனக்கு துணை இருக்கும் வரைக்கும் எதையும் செய்யலாம் ராகினி! பீ ஸ்ட்ரோங்க்’ என தனக்குள்ளேயே பேசிக் கொண்டு அமர்ந்திருக்க அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அவள் தன் வாழ்க்கையில் இது நாள் வரை கண்டிராத சோகங்களையும், மனக் கஷ்டங்களையும் இனி வரப்போகும் நாட்களில் அவள் கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும் என்கிற நிதர்சனம்.

அன்றிரவு கார்த்திக் ராகினியிடம் எந்தவொரு பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தூங்கச் சென்று விட மறுபுறம் ராகினி பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு வானில் தெரிந்த முழு நிலவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படியான ஒரு முழு நிலவு நாளில் தான் கார்த்திக்கை பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்து இருந்தவள் முடிவு ஒன்றுமே இல்லாமல் போய் இருந்தது.

அன்றைய நாளின் நினைவுகளில் அவள் முகம் பிரகாசிக்க அதை இன்னும் அதிகரிப்பது போல வானில் உலா வந்த நிலவு தன் ஒளியை பரப்ப அந்த வெளிச்சத்தில் அவளது முகம் இன்னும் பிரகாசமாய் பளபளக்க அவள் மனமோ அந்த பசுமையான நாட்களை நோக்கி பின்னோக்கி சென்றது.

************************
கார்த்திக்கைப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்த ராகினி அந்த முடிவில் எவ்வளவு தூரம் உறுதியாக இருந்தாளோ தெரியாது ஆனால் அவள் மனதிற்குள் அவனைப் பற்றிய சிந்தனைகள் முற்றாக மறைந்து போகவில்லை.

அன்று ராகினி வழக்கம் போல தன் அறைப் பால்கனியில் உள்ள தோட்டத்தில் இருந்த கயிற்று ஊஞ்சலில் அமர்ந்து தன் போனில் ஆங்கிரி பர்ட் கேம் விளையாடிக் கொண்டிருந்த நேரம் அவளது வீட்டில் இருந்து மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் ஒரு வெற்று திடலில் நான்கு, ஐந்து பேர் தொடர்ந்து வருவதும் போவதுமாக இருக்க அந்த சத்தத்தில் தன் போனை வைத்து விட்டு எழுந்து சென்று பார்த்தவள் கண்களோ தான் காண்பது நிஜம் தானா என்பதை போல நம்ப முடியாத நிலையில் இருந்தது.

அந்த நான்கு, ஐந்து நபர்களில் கார்த்திக்கும் ஒருவனாக நின்று பேசிக்கொண்டிருக்க இத்தனை நாட்களாக அவள் தன் மனதிற்குள் எடுத்த சபதங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக காற்றோடு காற்றாகிப் போய் இருந்தது.

அந்த வெற்றுத் திடல் இத்தனை நாட்களாக ஆள் நடமாட்டம் இன்றி காட்டைப் போலத்தான் இருந்தது இப்போது அந்த இடத்தில் ஏதோ ஒரு வேலை செய்வதற்காகத் தான் அவர்கள் எல்லோரும் அங்கே வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ராகினி இன்னும் சிறிது நாட்களுக்கு கார்த்திக்கை தன் வீட்டில் இருந்து கொண்டே பார்க்க முடியும் என்கிற சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க அவள் மனம் மறுபடியும் அவனை அனுமதி எதுவும் இல்லாமலேயே தனக்குள் இருத்திக் கொண்டது.

காலங்கள் இறக்கை கட்டி கொண்டு பறந்து செல்வதைப் போல கடந்து சென்றிருந்தாலும் ராகினியின் அவனை மறைந்து மறைந்து பார்வையால் தொடரும் நடவடிக்கை மாத்திரம் மாறவே இல்லை.

கார்த்திக்கைப் பற்றி யாரிடமும் வெளிப்படையாக கேட்க முடியாமல் தனக்குள்ளேயே அவனது நினைவுகளை எல்லாம் சேமித்து வைத்திருந்தவள் தன் மனதிற்குள் தினமும் அவனைப் பற்றிய நினைவுகளை எல்லாம் வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் போல பரவச் செய்திருந்தாள்.

ராகினி அவனைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்திருக்க கார்த்திக் தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தனது தந்தையின் தொழிலை தன் பொறுப்பில் எடுத்திருந்தான் அதேநேரம் ராகினி இத்தனை நாட்களாக கார்த்திக்கை பின் தொடர்ந்து சென்றதன் பலனாக தான் தெரிந்து கொண்ட விடயத்தை வைத்து அவன் படித்த பி.காம் துறையையே தனது மேல் படிப்பிற்காக தெரிவு செய்திருந்தாள்.

ராகினி காலேஜ் செல்ல ஆரம்பித்த பிறகு அவளால் முன்பு போன்று அவனை இலகுவாக பார்க்க முடியவில்லை அதற்கும் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தவளுக்கு கடவுள் அவனது தங்கை துளசி மூலமாக அவளது காலேஜ் படிப்பின் இறுதி வருடத்தில் ஒரு வழியைக் காண்பித்து இருந்தார்.

வழக்கம் போல காலேஜ் முடிந்து ராகினி தன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த நேரம் வீதியோரமாக பாடசாலை சீருடையில் ஒரு பெண் பிள்ளை அழுது கொண்டிருக்க அவளுக்கு அருகில் தனது வண்டியை நிறுத்தியவள்
“யாரும்மா நீ? இங்கே நின்னு ஏன் அழுதுட்டு இருக்க? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க

தேம்பி தேம்பி அழுதபடியே அவளைத் திரும்பி பார்த்தவள்
“சை…க்கிள் பஞ்ச….ர் ஆகி…டுச்சு வீ..வீட்டுக்கு போ…போணும்” திக்கித்திணறி கூறி முடிக்க

‘இது கார்த்திக்கோட தங்கச்சியாச்சே! ஆஹா உனக்கு நல்ல ஒரு வாய்ப்பு ராகினி! இதை வைத்தே அவங்க வீட்டில் இருக்கும் எல்லோரையும் அப்படியே நம்ம பக்கம் இழுத்து விட்டுடுவோம்’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டபடியே

“அச்சோ!” என்றவாறே தன் வண்டியை விட்டு இறங்கி நின்றவள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஞ்சரான சைக்கிளை ஒரு முறை சுற்றி வந்து விட்டு நின்றாள்.

“முதல்ல இப்படி அழுகக்கூடாதும்மா உன் கண்ணைத் துடை! ஆமா உன் பேரு என்ன?”

“து.. துளசி”

“ஓஹ் து.துளசியா?”

“இல்லை இல்லை துளசி மட்டும் தான்” அவளது பதிலில் வாய் விட்டு சிரித்துக் கொண்ட ராகினி அவளது தோளில் கை போட்டு கொண்டு அங்கிருந்த சீமெந்து பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

“சரி உன் வீட்டு ஆளுங்க யாரோட சரி நம்பர் கொடு நான் போன் பண்ணி அவங்களை வரச்சொல்லுறேன் சரியா?”

“எனக்கு வீட்டு நம்பர் மட்டும் தான் தெரியும்”

“சரி அதை சொல்லும்மா வீட்டில் அம்மா சரி இருப்பாங்க தானே அவங்க கிட்ட தகவல் சொல்லலாம்” என்று விட்டு ராகினி துளசி சொன்ன எண்களை தன் தொலைபேசியில் அழுத்தி அழைப்பை மேற்கொள்ள மறுமுனையில் எந்தவொரு பதிலும் வரவில்லை.

“யாரும் போன் எடுக்க மாட்டேங்குறாங்களே!”

“அச்சச்சோ! எனக்கு பயமாக இருக்கு நான் வீட்டுக்கு போகணும்” என்றவாறே துளசி மீண்டும் தன் கண்களை கசக்க

ராகினி
“துளசி!” என்றவாறே சிறு கண்டிப்புடன் அவளது கைகளை பிடித்து கீழே இறக்கி வைத்தாள்.

“இதோ பாரு துளசி முதல்ல இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆகுவதை நிறுத்து! நம்மை நாமே முதலில் நம்பணும் அப்போ தான் என்ன பிரச்சினை வந்தாலும் தைரியமாக முகங்கொடுக்க முடியும் சைக்கிள் பஞ்சர் ஆகுவது எல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன விஷயம் அதற்கு போய் இப்படி அழுதுட்டு இருக்கலாமா? அதுவும் இப்படி பொது இடங்களில் நம்ம பலவீனத்தை சட்டுன்னு வெளிக்காட்டி விடக் கூடாது புரிஞ்சுதா?”

“சரி அக்கா! எனக்கு நேரம் ஆகுது வீட்டுக்கு போகணும் அம்மா தேடுவாங்க”

“புரியுது நான் சொன்ன எதுவும் உனக்கு புரியல அப்படித்தானே” ராகினியின் கேள்வியில் துளசி அமைதியாக அமர்ந்திருக்க

அவளது தலையை வருடிக் கொடுத்தவள்
“எதையும் தைரியமாக முகம் கொடுக்க பழகிக்கோம்மா! அதற்கு அப்புறம் எப்போதும் இப்படி நீ தலை குனிந்து அமர்ந்திருக்க தேவையில்லை சரியா? இப்போ வா நானே உன் வீட்டில் உன்னைக் கொண்டு போய் விடுறேன் நீ பின்னாடி உட்கார்ந்திருந்து உன் சைக்கிளைப் பிடிச்சுக்கோ நான் பத்திரமாக கூட்டிட்டு போறேன் சரியா?” என்று விட்டு தன் வண்டியை இயக்க துளசி அவளது வார்த்தைகள் கொடுத்த சிறு நம்பிக்கையுடன் அவளோடு இணைந்து புறப்பட்டு சென்றாள்.

துளசி வழி சொல்லச் சொல்ல அதற்கேற்ப தனது வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவள் கார்த்திக்கின் வீடு இருக்கும் பகுதியை நோக்கி நெருங்க நெருங்க அவளது இதயத் துடிப்பு தாறுமாறாக அதிகரிப்பதை போல உணர்ந்து கொண்டாள்.

‘அச்சச்சோ ஒரு வேகத்தில் அவசரப்பட்டு வந்துட்டோமோ? துளசியை இங்கேயே இறக்கி விட்டு விட்டு நாம அப்படியே ஓடிப் போய் விடுவோம் வீணாக ரிஸ்க் எல்லாம் வேண்டாம் ராகினி!’ என தனக்குள்ளேயே நினைத்து கொண்டவள் துளசியை அவளது வீட்டின் முன் இறக்கி விட்டு விட்டு திரும்பி செல்ல போக

அவளது கையைப் பிடித்து கொண்ட துளசி
” உள்ளே வாங்கக்கா நீங்க எனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க அம்மா கிட்ட உங்களைப் பற்றி கண்டிப்பாக சொல்லணும் வாங்கக்கா!” என்று அழைக்க அவளோ மறுப்பாக தன் தலையை அசைத்தாள்.

“இல்லை துளசி எனக்கு நேரம் ஆகுது இன்னொரு நாள் வர்றேனே”

“இல்லை முடியாது நீங்க வந்து தான் ஆகணும்! ப்ளீஸ் க்கா! வாங்க!”

“இல்லைம்மா துளசி இன்னொரு…”

“இல்லைக்கா நீங்க வந்து தான் ஆகணும் வாங்க!” ராகினி எவ்வளவோ தூரம் மறுப்பு சொல்லியும் அவளது வார்த்தைகளைக் கருத்திற் கொள்ளாமல் துளசி அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு செல்ல இத்தனை நாட்களாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவள் மனம் முதன்முதலாக தன் மனதிற்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவனைக் காணப் போகிறோம் என்ற ஆவலுடன் காத்திருக்க அவளது மூளையோ அவனை சந்திப்பதா? வேண்டாமா? என்று விவாதம் நடத்திக் கொண்டிருந்தது.

ராகினியின் குடும்பத்தினர் ஓரளவு வசதி படைத்தவர்கள் தான் ஆனால் கார்த்திக்கின் குடும்பத்தினர் அளவுக்கு அவர்கள் வசதி கொண்டவர்கள் அல்ல.

கார்த்திக்கின் வீட்டு வாயிலில் இருந்தே அவர்களின் செல்வச் செழிப்பு கொட்டிக் கிடக்க அந்த இடத்தை சுற்றிப் பார்த்தபடியே நடந்து சென்றவள் வீட்டு வாயில் கதவை நெருங்கியதும் சிறிது நேரம் தயங்கி நின்றாள்.

“அக்கா வாங்கக்கா!” துளசி ராகினியின் கையைப் பிடித்து இழுக்க கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கண்களை திறந்து கொண்டவள் தன் காதலைக் காணப் போகும் ஆவலுடன் அந்த வீட்டுக்குள் தன் வலது காலை எடுத்து வைத்து உள் நுழைந்தாள்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!