உன்னாலே – 09

eiAPZYF37537-f42aaeb3

கார்த்திக்கின் இல்லத்தின் வெளிப்புறத் தோற்றம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்ததோ அதை விட பன்மடங்கு பிரம்மாண்டமாக அதன் உட்புறத் தோற்றம் அமைந்திருந்தது.

அவன் வசதி படைத்தவன் என்பது அவளுக்கு முன்னரே தெரியும் ஆனாலும் இந்தளவிற்கு பிரம்மாண்டத்தையும், செல்வச் செழிப்பையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

துளசி ராகினியின் கையைப் பிடித்து இழுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் இசைந்து கொடுத்தவள் கண்களோ தன் காதலைத் தேடியே வலம் வந்து கொண்டிருந்தது.

ராகினி தன் பார்வையால் தேடுதல் வேட்டை நடத்தி கொண்டிருந்த நேரம் துளசி அவளது அன்னை சகுந்தலாவை அழைத்து வந்திருக்க அவரைப் பார்த்ததும் சட்டென்று அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கொண்டவள்
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ஆன்டி” என்று கூற அவளது செய்கையில் மற்றைய இரு பெண்களும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டு நின்றனர்.

“அம்மா உங்களுக்கு இவங்களை முன்னாடியே தெரியுமா?” துளசியின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவர்

“நீ தானே ஒரு பொண்ணு உதவி பண்ணாங்க வாங்க காட்டுறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்த! இப்போ என்னடான்னா இப்படி கேட்குற? உண்மையை சொல்லு இந்த பொண்ணு அவ சுயநினைவோடு தான் இருக்காளா? இல்லை வேறு எதுவும்?” அவளுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் மெல்லிய குரலில் வினவ

“ஐயோ ஆன்டி! நான் நல்ல சுயநினைவோடு தான் இருக்கேன் ஆக்சுவலி பெரியவங்களைப் பார்த்ததும் நான் இப்படி தான் சட்டுன்னு அவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுவேன் அது என் பழக்கம்” ராகினி தன் ஆடையை சரி செய்து கொண்டே அவரைப் பார்த்து புன்னகையுடன் கூறினாள்.

“அச்சோ! சாரிம்மா நான் உன்னை தப்பாக எதுவும் சொல்லி இருந்தால் சாரி!”

“ஐயோ பரவாயில்லை ஆன்டி நமக்குள்ள இதெல்லாம் எதற்கு?”

“நமக்குள்ளன்னா? புரியலையே ம்மா நீ என்ன சொல்ல வர்ற?” சகுந்தலாவின் கேள்வியில் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றவள்

“அது வந்து ஆன்டி நான் என்ன சொல்ல வர்றேன்னா பெரியவங்க நீங்க சின்ன பசங்க கிட்ட சாரி எல்லாம் சொல்ல வேண்டியது இல்லைன்னு சொல்ல வந்தேன்” சமாளிப்பாக பதிலளித்திருக்க

சிரித்துக் கொண்டே அவளது தலையை வருடிக் கொடுத்தவர்
“ரொம்ப நன்றிம்மா யாரு என்னன்னு தெரியாமல் என் பொண்ணுக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்க இந்த உதவியை என்னைக்கும் நாங்க மறக்க மாட்டோம்” என்று கூறவும்

‘நமக்குள்ள தாங்க்ஸ் எல்லாம் எதற்கு?’ என்று கேட்க வந்தவள் சட்டென்று தன் வாயை மூடி கொண்டு பரவாயில்லை என்பது போல தலையசைத்து கொண்டு நின்றாள்.

“உன் பேரு என்னம்மா? நீ என்ன பண்ணுற?”

“என் பேரு ராகினி ஆன்டி! பி.காம் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கேன்”

‘அதற்கு மேலதிகமாக உங்க பையனை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக லவ் பண்ணி ஒருநாள் விடாமல் பாலோ பண்ணிட்டு இருக்கேன்’ மனதிற்குள் நினைத்துக் கொண்டதை வெளியே சொல்ல முடியாமல் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்த ராகினி தன் பார்வையை மீண்டும் அந்த வீட்டைச் சுற்றி சுழல விட

அவளது கையைப் பிடித்துக் கொண்ட துளசி
“வாங்கக்கா எங்க வீட்டை சுற்றிக் காட்டுறேன்” என்று அவளை அழைக்க

மறுப்பாக தலையசைத்தபடியே அவளது கையை மெல்ல விலக்கி விட்டவள்
“பரவாயில்லை து.துளசி இன்னொரு நாள் பார்க்கலாம் நான் இப்போ கிளம்புறேன் முக்கியமான ஒரு வேலை இருக்கு இன்னொரு நாள் வந்து சாவகாசமாக பேசலாம் சரியா?” என்றவாறே அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டு செல்ல

மறுபுறம் சகுந்தலா துளசியிடம்
“ரொம்ப நல்லா பொண்ணா இருக்கா இல்லை?” என்று கூறியது அவள் செவிகளுக்குள் தேனாக வந்து பாய்ந்தது.

“ஆனா துளசி இந்த பொண்ணை இதற்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!” சகுந்தலா சிறிது யோசனையுடன் துளசியிடம் கூறி விட்டு

“ராகினி ஒரு நிமிடம்” என்று அழைக்க அவரது அழைப்பில் சட்டென்று நின்றவள் திரும்பி அவரை கேள்வியாக நோக்கினாள்.

“சொல்லுங்க ஆன்டி என்ன விஷயம்?”

“நாம இதற்கு முன்னாடி எப்போதாவது பார்த்து இருக்கோமா ராகினி? எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடி உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு”

‘ஆஹா! இவங்க கார்த்திக்கை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண போது பார்த்ததை வைத்து கேட்குறாங்களோ? இப்போ நாம இந்த விஷயத்தை சொன்னா அப்புறம் நன்றிக்கடன் செய்யுறேன்னு சொல்லி கார்த்திக் நம்ம லவ்வை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே போய் விடுமோ? வேணாம் ராகினி இப்போ அதைப் பற்றி எதையும் சொல்ல வேணாம் அதற்குன்னு ஒரு நேரம் அப்புறம் சொல்லிக்கலாம்’

“ராகினி என்னம்மா ஆச்சு?” சகுந்தலாவின் கேள்வியில் சட்டென்று தன் சிந்தனைகளை விட்டு வெளியே வந்தவள்

“இல்லை ஆன்டி நீங்க சொன்னதை யோசித்து பார்த்தேன் எனக்கு அப்படி எதுவும் ஞாபகம் இல்லை! சரி ஆன்டி இன்னொரு நாள் மீட் பண்ணலாம் வர்றேன்” என்று விட்டு சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருந்தாள்.

‘ஹப்பாடா! எஸ்கேப்! பர்ஸ்ட் மீட்டிங்கிலேயே அத்தை நம்மளை புகழ ஆரம்பிச்சுட்டாங்களா? ராகினி தூள் கிளப்பு!’ சந்தோஷம் தாளாமல் துள்ளிக்குதித்தபடி ராகினி தன் ஸ்கூட்டரை நோக்கி செல்லுகையில் பலமான காற்று வீச அந்த இடத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்று அவளது காலடியில் வந்து வீழ்ந்தது.

“என்ன இது?” சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தபடியே அதை தன் கையில் எடுத்தவள் அது யாருடையதோ டீசர்ட் என்று கண்டு கொண்டவளாக அதை உள்ளே சென்று கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்பியவள் சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக அந்த டீசர்டை விரித்துப் பார்த்தாள்.

அது கார்த்திக் காலேஜ் செல்லும் போது அடிக்கடி அணிந்து செல்லும் நேவி நீல நிற டீ சர்ட் அவளுக்கு மிகவும் பிடித்தமான நிறமும் கூட.

“இது கார்த்திக்கோட டீ சர்ட்! ஹையோ! இன்னைக்கு எனக்கு எல்லாமே ரொம்ப ரொம்ப நல்ல விஷயங்களாகவே நடக்குதே! இதுவல்லவோ மிகச் சிறந்த நாள்! இந்த டீ சர்ட் தானாக என்னைத் தேடி வந்துடுச்சு அதனால இது எனக்கு தான் சொந்தம்” மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அந்த டீ சர்டை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் யாரும் கவனியாத நேரம் அதை தன் பாக்கில் போட்டுக் கொண்டு எதுவுமே நடவாதது போல அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தாள்.

தன் வீட்டுக்கு வந்து தன்னுடைய கப்போர்டில் அவனது டீ சர்டை எடுத்து மாட்டி வைத்தவள் சிறிது நேரம் அதையே காதலோடு பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவனிடமிருந்து தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன பொருட்களைக் கூட பொக்கிஷமாக தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு இன்று வரை அதனை அவனது ஞாபகச் சின்னங்களாக வைத்து வரும் ராகினியின் காதல் இன்று வரை அவளுக்கு விலை மதிப்பற்ற ஒரு பெரும் விடயம்.

என்னதான் கார்த்திக் அவளை விட்டு விலகி செல்ல நினைத்தாலும் அவனால் முழு மனதோடு அதை செய்ய முடியவில்லை என்பது அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் தெரியும் இருந்தாலும் கார்த்திக் அவன் மனதிற்குள் வைத்து குழப்பம் கொள்ளும் விடயங்கள் அதை யாராலும் சரி செய்ய முடியாது அவன் ஒருவனால் மாத்திரமே அதை எல்லாம் கடந்து வர முடியும்.

அவன் காதலையும், திருமணத்தையும் வெறுப்பதற்கான காரணத்தை முதன் முதலாக ராகினி அறிந்து கொண்ட நேரம் அவளுக்கு அவளை சுற்றி இருக்கும் விடயங்கள் எல்லாமே அவளை விட்டு பல மைல் தூரம் விலகி சென்றதைப் போல இருந்தது.

அவன் மேல் தான் வைத்திருக்கும் காதலை மாத்திரம் நினைத்து நினைத்து அந்த ஆறு வருடங்களில் அவள் கட்டிய கனவுக் கோட்டை ஒரே கணத்தில் சுக்குநூறாகிப் போனாள் அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்?

துளசியுடனான நட்பு கிடைத்த பின்னர் ராகினி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயமாக அவளை சந்திக்க அவளது வீட்டுக்கு சென்று விடுவாள் அதுவும் கார்த்திக் இல்லாத நேரங்களில் தான் பெரும்பாலும் அவள் அங்கே செல்வாள் ஏனென்றால் எந்தவொரு விடயத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் அவளுக்கு அவனை நேருக்கு நேர் சந்திப்பதில் தான் பெரும் தயக்கமாக இருந்தது.

அப்படி அவளது கணிப்பையும் மீறி சில நேரங்களில் கார்த்திக் வீட்டில் இருந்தாலும் அவள் இருக்கும் பக்கம் அவனது பார்வை மறந்தும் நகராது.

துளசியின் தோழி வந்திருக்கிறாள் என்ற செய்தி மாத்திரம் தான் அவன் செவிகளை சென்றடையும் அவள் யார்? எங்கிருந்து வருகிறாள்? எதையும் அவன் கேட்கவே மாட்டான் அது அவனது இயல்பு என்று எல்லோருக்கும் முன்பே தெரியுமாகையால் யாரும் அதை பெரிது படுத்தவும் இல்லை.

ராகினியின் கல்லூரி படிப்பு முடிந்து சில காலங்கள் நகர்ந்திருக்க அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவளது வீட்டில் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

ராகினி எவ்வளவோ காரணங்களை விதம் விதமாக சொல்லிப் பார்த்தும் அவளது வீட்டில் யாரும் அவளது பேச்சைக் கேட்காமல் திருமணத்திற்கான வரன்களைப் பார்க்கத் தொடங்க தன்னுடைய காதல் உரியவனுக்கே தெரியாதவிடத்து அதை சொல்லி தன் வீட்டினரை சமாளிக்க முடியாது என்று புரிந்து கொண்டவள் தன் காதலைக் கார்த்திக்கிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டாள்.

அன்று ராகினி கார்த்திகை முதன் முதலாக சந்தித்து ஆறு வருடங்கள் நிறைவுற்றிருந்த நாள்.

எப்போதும் போல அவனைப் பின் தொடர்ந்து செல்லும் தன் பணியைத் தொடர்ந்தவள் அவன் தனியாக இருக்கும் நேரம் அவனிடம் சென்று பேசி விட வேண்டும் என்று தனக்குத் தானே தைரியம் அளித்து கொண்டு அந்த சந்தர்ப்பத்திற்காக காத்து நின்றாள்.

அவள் எதிர்பார்த்ததைப் போலவே மாலை நேரம் அலுவலகம் முடிந்து கார்த்திக் தன் வீட்டுக்கு செல்லாமல் தனியாக வேறு ஒரு இடத்தை நோக்கி செல்ல ராகினியும் அவனைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினாள்.

சென்னையின் நகர்ப்புற பகுதியில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியை நோக்கி அவனின் கார் செல்ல இந்த ஒரு வார காலத்திற்குள் இரண்டு அல்லது மூன்று தடவை அவன் அந்த பகுதிக்குள் செல்வதை அறிந்து வைத்திருந்த ராகினியும் முழு மூச்சாக அவனை விடாமல் பின் தொடர்ந்தாள்.

அங்கே யார் இருக்கிறார்கள்? என்ன காரணத்திற்காக அவன் அங்கே செல்கிறான் என்பது அவளுக்கு தெரியாது அவனது வீட்டினரிடமும் வெளிப்படையாக இதைப் பற்றி அவளால் கேட்க முடியாது என்றிருக்க இன்று அதைப்பற்றி அறிந்து கொள்வதுடன் தன் காதலையும் அவனுக்கு தெரியப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள் அதற்காக எந்த முயற்சியையும் செய்ய வேண்டும் என்று தன்னை தயாராக்கி கொண்டிருந்தாள்.

வழக்கமாக அவன் அந்த இடத்தில் இருக்கும் ஒரு மன நல காப்பகத்திற்கு சென்று சிறிது நேரம் கழித்து தான் வெளியே வருவான்.

அவன் உள்ளே சென்று விட்டு வெளியே வரும் வரை ராகினி சற்று தள்ளி மறைந்து நின்று அவனையே பார்த்துக் கொண்டு நிற்பாள் ஆனால் இன்று அதற்கு மாற்றமாக கார்த்திக் அந்த மனநல காப்பகத்தின் உள்ளே சென்றதும் அவனை பின் தொடர்ந்தவள் அவன் செல்லும் இடத்திற்கே அவன் அறியாதவாறு மெல்ல மெல்ல அவனைப் பின் தொடர்ந்து நடந்து செல்லத் தொடங்கினாள்.

ஒரு அறையின் வாயிலில் கார்த்திக் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து சற்று பின் தள்ளி நின்று கொண்டவள் அவன் திரும்பி வரும் வரை அங்கேயே நிற்கலாம் என்ற முடிவோடு நின்று கொண்டிருக்க திடீரென கார்த்திக்கின் குரல் ஓங்கி ஒலித்தது.

அவனது குரல் கேட்டதும் ராகினி பதட்டத்துடன் எட்டிப் பார்க்க அங்கே கார்த்திக் அவனது வயதை ஒத்த ஒரு நபருடன் கோபமாக ஏதோ பேசிக் கொண்டு நின்றான்.

‘இவங்க கார்த்திக்கோட பிரண்ட் ஆதித்யா தானே? இவங்க எப்படி இங்க? இவங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே! ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? என்ன பேசிட்டு இருக்காங்கன்னு தெரியலையே!’ அவர்கள் பேசியது எதுவும் அவளுக்கு சரியாக கேட்காததால் சிறிது அவன் இருக்கும் புறமாக நகர்ந்து சென்றவள் அவன் பேசிக் கொண்டிருந்த விடயத்தைக் கேட்டு அந்த இடத்திலேயே ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

தன் பழைய நினைவுகளின் தாக்கத்தில் ராகினியின் கண்கள் தன்னையும் அறியாமல் இரண்டு சொட்டு கண்ணீர் விட அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டவள்
“இல்லை ராகிணி நீ அழக்கூடாது அழுவது உன்னோட பலவீனம்! அன்னைக்கு நீ அவசரப்பட்டு உனக்குள்ளேயே முடிவெடுத்தது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கே தெரியும் அப்படியிருந்தும் நீ மறுபடியும் அதேமாதிரி எதுவும் கார்த்திக்கை பற்றி தப்பாக யோசித்து விடக்கூடாது” மறுப்பாக தலையசைத்தபடியே பால்கனி தடுப்புச் சுவர் புறமாக சென்று நின்று கொண்டாள்.

மழை மேகம் வானத்தில் இருந்த முழுநிலவை மறைத்துக் கொள்ள குளிர் காற்று அவள் தேகத்தை தழுவிச் செல்ல தன் இரு கைகளையும் தேய்த்து விட்டு தன் கன்னத்தில் அழுத்தி பிடித்து கொண்டவள் ஏக்கத்தோடு தங்கள் அறையின் புறமாக திரும்பி பார்க்க அங்கே கார்த்திக் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அவள் அவனைக் காதலோடு பார்த்துக் கொண்டிருந்த சடசடவென மழை பொழியத் தொடங்க தன் கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு அந்த மழையில் ஆனந்தமாக நனைந்து கொண்டிருந்தவள்
“கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா
மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா
உன் துணை தேடி
நான் வந்தேன் துரத்தாதே டா
உன் கோவம் கூட நியாயம் என்று ரசிதேனே
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா
அட என்னை தவிர
எல்லா பெரும் மனை ஆணையும்
நான் உனக்கு மட்டும்
சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடு டா” என்று பாடியபடியே தான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்றபடி வட்டமிட்டு சுற்ற வர நீண்ட நேரமாக அந்த இடத்திலேயே சுற்றியதால் என்னவோ தலை சுற்றி தடுமாறி விழப்போனவளை ஒரு வலிமையான கரம் தாங்கிப் பிடித்துக் கொண்டது.

தன்னை யாரோ பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டாலும் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவள் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நின்று கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியாக தன் விழிகளை விரித்தாள்.

“கார்த்திக்! நீங்களா?” அவனைத் தொட்டுப் பார்க்க எண்ணி தன் கையை அவனது கன்னத்தின் அருகே கொண்டு செல்லப் போனவள்

மறுப்பாக தலையசைத்தபடியே சட்டென்று தன் கையை பின்னிழுத்துக் கொண்டு
“இல்லை நான் தொட்டுப் பார்க்க மாட்டேன் அப்புறம் நீங்க மறைந்து போயிடுவீங்க கனவில் சரி நீங்க எனக்கு பக்கத்தில் இருக்கீங்களே அதுவே எனக்கு போதும்” என்றவாறே தன் கைகள் இரண்டையும் விரித்துக் கொள்ள அவனோ அவளது முகத்தை சிந்தனை வயப்பட்டவனாக பார்த்து கொண்டு நின்றான்.

“ராகினி என்ன பேசுற நீ? இந்த நேரத்தில் மழையில் எதற்காக நனைஞ்சுட்டு இருக்க? ஜுரம் வந்துடப்போகுது உள்ளே வா!” கார்த்திக் அவளது கையைப் பிடித்து இழுத்து கொண்டு உள்ளே செல்ல போக

அவனது கரத்தை இழுக்க விடாமல் அழுத்தமாக பிடித்துக் கொண்டவள்
“அப்படி ஜுரம் வந்த பிறகு சரி நீங்க என் பக்கத்தில் இருப்பீங்கன்னா எனக்கு ஜுரம் வரட்டுமே கார்த்திக்” என்று கூற அவளது பேச்சில் அவனது கை சட்டென்று தன் பிடியை தளர்த்தி கொண்டது.

“ராகினி நீ…”

“ப்ளீஸ் என் கிட்ட எதுவும் கேட்க வேண்டாம் இந்த நிமிஷத்தை என்னை முழுமையாக சந்தோஷமாக அனுபவிக்க விடுங்க கார்த்திக் அது போதும்” என்று விட்டு ராகினி மீண்டும் மழையில் நனையத் தொடங்க அவனுக்கு தான் அங்கே நிற்பது ஏனோ வெகு சங்கடமாக இருந்தது.

அவளிடம் எதுவும் பேசவும் முடியாமல் கேட்கவும் முடியாமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றவன் சிறிது நேரத்தில் மழை சற்று குறையத் தொடங்கவே அவள் எவ்வளவோ மறுத்து சொல்லியும் அவளை விடாமல் உள்ளே அழைத்து வந்து அவளை உடைமாற்ற வரச் சொல்லி விட்டு அவளது வருகைக்காக காத்து நின்றான்.

ராகினி தன் தலையை துவட்டி கொண்டே குளியலறையில் இருந்து வெளியே வர அவளின் முன்னால் வந்து நின்ற கார்த்திக்
“ராகினி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வா” எனவும்

சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள்
“ரொம்ப லேட் ஆகிடுச்சே கார்த்திக் மணி இரண்டு ஆகப் போகுது நாளைக்கு ஆபிஸ் வேற போகணுமே” கேள்வியாக அவனை நோக்க

“பரவாயில்லை நாளைக்கு கொஞ்ச நேரம் லேட் ஆக ஆபிஸ் போகலாம்! இத்தனை நாட்களாக நேரம் கிடைக்கும் கிடைக்கும்ன்னு பேசாமல் இருந்தது ரொம்ப தப்புன்னு தோணுது அதனால் இப்போவே பேசணும் வா” என்று விட்டு கார்த்திக் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள அவனெதிரில் இருந்த மற்றொரு நாற்காலியில் ராகினி அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதோ பாரு ராகினி நான் நமக்கு கல்யாணம் ஆன முதல் நாளே உன் கிட்ட இந்த விடயத்தை பற்றி பேச பல தடவை முயற்சி பண்ணேன் ஆனா நீ உன் விளையாட்டு தனத்தால் என் பேச்சை திசை திருப்பிட்ட!”

“அப்.. அப்படி என்ன விஷயம் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்?”

“முதல்ல என்னை நார்மலா கார்த்திக்ன்னு கூப்பிடு”

“ஏன் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்? இத்தனை நாட்களாக இப்படி கூப்பிடும் போது உங்களுக்கு அது பெரிதாக தோணல ஆனா இப்போ பெரிய விஷயமாக தோணுதுன்னா உங்களுக்குள்ள ஏதோ மாற்றம் வந்து இருக்குமோ?” அவளது கேள்வியில் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளது புருவ உயர்த்தலில் தன் பார்வையை வேறு புறமாக திருப்பிக் கொண்டான்.

“சரி நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க எனக்கு தூக்கம் வருது”

“இதோ பாரு ராகினி நீ வீணாக உன் மனதில் கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேணாம்! நான் இப்படித்தான் இருப்பேன் என்னால் என்னை மாற்றிக் கொள்ள முடியாது”

“அப்படியா? அப்போ இத்தனை நாட்களாக அத்தை கூடவும், துளசி கூடவும் மட்டுமே மனம் திறந்து, சந்தோஷமாக சிரித்துப் பேசிய அந்த கார்த்திக் இப்போ எல்லோர் கூடவும் ரொம்ப நட்பாக, ஜாலியாக பேசுறாங்களே அது எப்படி? அது மாற்றம் இல்லையா? அப்போ இவ்வளவு நாள் அமைதியாக இருக்குற மாதிரி நடிச்சீங்களா?”

“சீச்சீ! என்ன உளறல் இது?”

“உளறல் இல்லை மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! இது தான் உண்மை! இவ்வளவு நாள் அமைதிப்புயலாக இருந்த உங்களை இந்த மூணே மாதத்தில் அதிரடியாக மாற்றியது யாரு? அதே மாதிரி இந்த விடயத்தில் உங்க மனதை மாற்ற எனக்கு முடியாதுன்னு நினைக்குறீங்களா?”

“என்ன சவால் விடுறியா?”

“நான் அப்படி சொல்லல என் தன்னம்பிக்கையோட சக்தியை சொல்லுறேன் உங்களுக்கு உங்க வாழ்க்கையை இன்னொரு பொண்ணு கூட பங்கிட்டுக் கொள்ள உண்மையாகவே சம்மதம் இல்லைன்னா நீங்க நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்க மாட்டிங்க உங்க மனதில் உங்க வயதிற்கே உரிய ஆசை, கனவு எல்லாம் இருக்கு இருந்தும் நீங்க அதற்கு ஒரு வளையத்தை போட்டுக்கிட்டு உங்களை நீங்களே ஏமாற்றிட்டு இருக்கீங்க அதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“…………”

“சரி நான் ஒரு விஷயம் சொல்லுறேன் கொஞ்ச நாள் கொஞ்சமே கொஞ்ச நாள் அந்த வளையத்தை தூக்கி போட்டுட்டு ஒரு சராசரி மனிதனாக உங்களை சுற்றி இருக்கும் விடயங்களை பாருங்க அப்போதும் உங்க மனது மாறலேன்னா…”

“மாறலேன்னா?”

“உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்”

“நிஜமாவா?”

“ஆமா இப்போ மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்”

‘அதற்கு மேலதிகமாக உங்களைப் போட்டு வாட்டி எடுப்பேன் அவ்வளவு சுலபமாக விட்டுடுவேனா என்ன?’ தலையை ஒரு பக்கம் சரித்து புன்னகையுடன் கூறியவளைப் பார்த்து சிறிது நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தவன்

“சரி நீ சொன்னதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனா எதற்கும் ஒரு எல்லை இருக்கணுமே அளவில்லாமல் எதையும் செய்ய முடியாது இல்லையா? அதனால… இன்னைக்கு என்ன திகதி? ஆஹ் பெப்ரவரி 20! அடுத்த வருஷம் பெப்ரவரி 20 வரை தான் இந்த விளையாட்டு எல்லாம் அதற்கு அப்புறம் இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நீ பேசிய மாதிரி எல்லாம் பேசக் கூடாது சாதாரணமாக தான் இருக்கணும் புரிஞ்சுதா?” என்று கேட்க

அவனைப் பார்த்து வேகமாக ஆமோதிப்பாக தலையசைத்தவள்
“நாட்களை எண்ணக் காத்துட்டு இருங்க மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்!” என அவனது கன்னத்தில் தட்டி விட்டு எழுந்து சென்று விட மறுபுறம் அவனும் நாட்களை எண்ணக் காத்திருக்க தயாரானான்…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!