உன்னாலே – 13

eiAPZYF37537-f17321de

உன்னாலே – 13

தனக்கென கொடுக்கப்பட்ட கடமையை முடித்து விட்ட திருப்தியோடு நிலவு ஓய்வெடுக்க சென்று விட, காலைக் கதிரவன் தன் பணியை செவ்வனே ஆரம்பிக்க காத்திருந்தது.

முதல் நாள் இரவு ராகினிக்கும் சரி கார்த்திக்கிற்கும் சரி பலவிதமான உணர்ச்சி போராட்டங்களை அள்ளி வழங்கிய இரவாக அமைந்திருக்க, அந்த சம்பவத்தின் தாக்கத்தை முற்றாக மறந்தது போல கார்த்திக் தன் அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கொண்டு நிற்க, மறுபுறம் ராகினி ஆதித்யா மற்றும் அஞ்சலியை எப்படி இணைத்து வைப்பது என்ற தீவிர சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தாள்.

‘ஆதித்யா அண்ணா கிட்ட சொன்ன மாதிரி அஞ்சலிக்கும், அவங்களுக்கும் என்ன பிரச்சினைன்னு கண்டுபிடித்து அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கணும், அப்போ தான் கார்த்திக் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியும், காதல் மீது இருக்கும் அந்த அபிப்பிராயமும் இல்லாமல் போகும். அதற்கு முதலில் அஞ்சலி எங்கே இருக்காங்கன்னு கண்டுபிடிக்கணும், ஆனா அவங்க எப்படி இருப்பாங்கன்னு கூட தெரியாது. அவங்க கல்யாணத்துக்கு போயிட்டு கூட கார்த்திக்கையே தான் பல நாள் பட்டினி கிடந்தவன் பிரியாணி பொட்டலத்தை பார்க்கிற மாதிரி வெறித்துப் பார்த்துட்டு இருந்தேன். அவங்க எல்லோரும் குரூப் போட்டோ எடுக்கும் போது அவங்களைப் பார்த்த மாதிரி இருக்கு தான், ஆனா சரியா ஞாபகம் வர மாட்டேங்குதே. அது சரி நமக்கு காலையில் நடந்ததே நைட்டு கேட்டா மறந்து போயிடும், இந்த லட்சணத்தில் எத்தனையோ வருடத்திற்கு முதல் நடந்தது எப்படி ஞாபகம் வரும்? கார்த்திக்கைப் பற்றி கேட்டால் மட்டும் அப்படியே அருவி மாதிரி எல்லாம் நினைவில் இருந்து வந்து கொட்டும். ஹ்ம்ம்ம்ம்ம், என்ன பண்ணலாம்?’ காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தது முதல் ராகினியின் மனதிற்குள் ஆதித்யா மற்றும் அஞ்சலியை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தாலும் அதற்கு நடுவிலும் அவள் அவள் மனம் அவளது காதல் கணவனைப் பற்றி நினைக்காமல் இல்லை.

அஞ்சலியை பற்றி யாரிடம் விசாரிப்பது என்ற எண்ணத்தோடு தன் பார்வையை சுழல விட்ட ராகினியின் விழிகளுக்குள் கார்த்திக்கின் விம்பம் தான் வந்து வீழ்ந்தது.

கண்ணாடியின் முன் நின்று கொண்டு தன் தலையை சீவி விட்டு கொண்டு நின்ற கார்த்திக்கின் விம்பத்தை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவள் அவனைப் பார்த்த அடுத்த கணமே மற்ற எல்லா சிந்தனைகளையும் பின் தள்ளி விட்டு அவனைக் காதலோடு பார்க்கும் தன் பணியைத் தொடர ஆரம்பித்தாள்.

அலுவலகம் செல்வதற்காக ஏற்றாற்போல் அவன் தயாராகி கொண்டு நிற்க கண்ணாடி வழியாக அவனைப் பார்த்து கொண்டே அவனருகில் எழுந்து சென்று நின்றவள் அவனை நோக்கி தன் கையை நீட்ட, “ஹேய், என்ன பண்ணுற?” சிறு பதட்டத்துடன் அவளது கையைப் பிடித்துக் கொண்டு விலகி நின்றபடியே அவன் கேட்க,

“ஆஹ், உங்க கழுத்தை நெறிக்க வந்தேன்” அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே தன் கையை அவனது கையில் இருந்து விலக்கி எடுத்தவள் அவனது பின் கழுத்துப் புறமாக மடிந்து கிடந்த சட்டைக் காலரை நிமிர்த்தி விட அவனோ அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இதை சொல்லி இருந்தால் நானே பண்ணி இருப்பேன்” என்று விட்டு கார்த்திக் மறுபுறம் திரும்பப் போக,

தன் கைகளை கட்டிக் கொண்டு அவனின் முன்னால் வந்து நின்றவள், “ஏன் நான் பண்ணால் என்ன?” கேள்வியாக அவனை நோக்கினாள்.

“அது…அது வந்து… உனக்கு தேவையில்லாத அலைச்சல் தானே? என் கிட்ட சொன்னால் நான் பண்ண மாட்டேனா?”

“அப்படியா அப்போ அது தான் காரணமா?”

“ஆ..ஆமா. நீ ஏன் இவ்வளவு சந்தேகமாக கேட்குற?”

“இல்லை, பல நாள் திருடன் இன்னைக்கு சிக்கிக்கிட்டாங்கன்னு நினைத்தேன், ஆனா மிஸ் ஆகிடுச்சு” ராகினி கேலியாக அவனைப் பார்த்து தன் புருவம் உயர்த்த,

“ராகினி, உனக்கு எப்போ பாரு விளையாட்டு தான். ஆபிஸ்க்கு டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பு” என்று விட்டு அவளை விட்டு விலகி சென்றவன்,

“எனக்கு இரண்டு வாரம் லீவு வேணும் எம்.டி சார்” என்ற அவளது குரலில் சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“லீவா ஏன், என்ன ஆச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா?” கார்த்திக்கின் பார்வை அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாக நோக்க,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “உடம்புக்கு எல்லாம் எதுவும்…” என ஆரம்பித்து விட்டு தான் சொல்ல வந்ததை முழுதாக சொல்லி முடிக்காமல்,

‘இப்போ இவங்க கிட்ட உண்மையை சொல்ல முடியாது. சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க, அதனால உடம்புக்கு முடியலையான்னு கேட்டாங்க தானே, அதையே சொல்லிடலாம்’ என தனக்குள்ளேயே நினைத்து கொண்டபடி,

“ஆமாங்க கொஞ்ச நாளாக உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. இப்படி அதிக வேலை எதுவும் பார்த்ததே இல்லையா அதுதான். நேற்று கூட பாருங்க காரிலேயே தூங்கிட்டேன், அதுதான் ஒரு இரண்டு வாரம் உடம்புக்கும், மைண்ட்க்கும் ரிலாக்ஸாக இருக்கட்டுமேன்னு வீட்டில் இருக்கலாம்ன்னு பார்த்தேன். அப்படி இல்லை நான் கட்டாயம் வரணும்னா சொல்லுங்க வர்றேன்” என்று விட்டு தன் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டபடியே அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரம் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றவன் அவளது தாடையை நிமிர்த்தி அவளது நெற்றியில் தன் கையை வைக்க, அவனது தொடுகையில் ராகினியின் உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

அவன் புறம் அவள் மனம் மறுபடியும் மறுபடியும் தாவி ஓட முயல வெகு சிரமப்பட்டு தன் மனதை அடக்கி வைத்தவள் அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டு, “லீவ் கிடைக்குமா பாஸ்?” தன் தலையை ஒரு புறமாக சரித்து கேட்க அவனோ கனவில் இருப்பவனைப் போல நின்று கொண்டு சரியென்று தலையசைத்திருந்தான்.

“ஹையோ, தாங்க் யூ சோ மச் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்” சிறு பிள்ளை போல துள்ளிக்குதித்து ஆட்டம் போட்ட ராகினி சந்தோஷம் தாளாமல் அவனை அணைக்க நெருங்கிச் சென்று விட்டு பின்பு சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவளாக தன் கையை பின்னிழுத்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே அந்த அறைக்குள் ஆட்டம் போட அவளது சத்தத்தில் திடுக்கிட்டு அவளைத் திரும்பி பார்த்தவன் உடனே அவசர அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தான்.

அவனது செய்கைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டபடியே தன் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிய ராகினி தன் முதல் வேலையை துளசியிடம் இருந்து ஆரம்பித்திருந்தாள்.

துளசிக்கு அஞ்சலியை பற்றிய எல்லாத் தகவல்களும் தெரிந்திருக்காவிட்டாலும் அவள் வளர்ந்த ஆசிரமம் மற்றும் அவளது கல்லுரி பற்றிய தகவல்கள் எல்லாம் தெரிந்து தான் இருந்தது.

அவள் வளர்ந்த ஆசிரமம் பற்றிய தகவல்களே ராகினிக்கு இப்போது ஒரு துரும்புச் சீட்டாக கிடைத்திருக்க, துளசியிடம் தான் அஞ்சலியைப் பற்றி விசாரித்ததன் உண்மை நிலையைப் பற்றி இப்போது கூற வேண்டாம் என்று நினைத்துக் கொண்டவள், அடுத்து என்ன செய்வது என்று தனக்குள் வேகமாக திட்டம் தீட்டத் தொடங்கினாள்.

சகுந்தலாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியேறி சென்றவள் நேராக சென்ற இடம் அஞ்சலி வளர்ந்த ஆசிரமம்.

பல வருடங்களாக இயங்கி வரும் ஆசிரமம் என்பதால் என்னவோ அந்த இடம் சிறிது பழைமை வாய்ந்த இடமாக தென்பட அந்த இடத்தை சுற்றிப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தவள், ‘ராகினி ஏதோ ஒரு தைரியத்தில் இவ்வளவு தூரம் வந்துட்ட. இப்போ யாருகிட்ட போய் அஞ்சலியை பற்றி கேட்ப? ரொம்ப ஆர்வக்கோளாறு ஆகிட்ட ராகினி நீ’ தன்னைத்தானே கடிந்து கொண்டபடி அந்த இடத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க நான்கைந்து பிள்ளைகள் அவளை நோக்கி ஓடி வந்து அவளைச் சுற்றி நின்று கொண்டனர்.

“யாரு நீங்க?”

“உங்களுக்கு என்ன வேணும்?”

“எங்களுக்கு புது டிரஸ் கொண்டு வந்து இருக்கீங்களா?”

“இல்லை உங்களுக்கு பர்த்டேன்னு ஸ்வீட் கொண்டு வந்து இருக்கீங்களா?”

“ஒருவேளை நீங்களும் இங்கே சேர்ந்துக்க வந்நீங்களா? பெரிய பசங்களை எல்லாம் இங்கே சேர்க்க மாட்டாங்க, கிளம்புங்க, கிளம்புங்க” ராகினியைச் சுற்றி நின்று கொண்டு அந்த பிள்ளைகள் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டு நிற்க,

அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்கள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டவள், “எங்க வீட்டில் என்னோட விளையாட ஆளுங்களே இல்லை, அதுதான் இங்கே வந்து உங்க கூட விளையாடலாம்ன்னு நினைத்தேன். ஆனா நீங்க பேசுவதை எல்லாம் வைத்து பார்த்தால் அப்போ இங்கேயும் என் கூட விளையாட ஆள் இல்லை போலவே” ஓரக் கண்ணால் அவர்களைப் பார்த்து கொண்டபடியே வேறேங்கோ பார்த்துக் கொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்ட கூற அந்த பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடி தங்களுக்குள் ஏதோ வெகு இரகசியமாக பேசிக் கொண்டு நின்றனர்.

தன் திருமணம் முடிந்து வந்ததற்கு பிறகு தன் அண்ணனின் குழந்தைகளைப் பார்த்து அவர்களோடு விளையாடி தன் நேரத்தை கழிக்க ராகினிக்கு கிடைக்காததால் என்னவோ, இப்போது இங்கே இந்த பிள்ளைகளை பார்த்ததும் அவளது குழந்தை தனம் அவளை வந்த வேலையை மறக்கச் செய்திருந்தது.

சிறிது நேரம் அந்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தவள் அந்த பக்கமாக சென்ற நபரொருவர், “அஞ்சலி கண்ணா நில்லும்மா” என்று கூறியபடியே அவளைக் கடந்து செல்ல,

“அய்யய்யோ! ராகினி ராகினி, நீ என்ன வேலையா வந்த? இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க? கார்த்திக் உன்னைத் திட்டுவதில் தப்பே இல்லை. எப்போ பாரு விளையாட்டு தனம். நினைத்து வந்த வேலை என்னவோ ஆனா செய்து கொண்டிருக்கும் வேலை வேறு என்னவோ. நீ அப்படியே இருக்க ராகினி” சிறு பிள்ளையை கடிந்து கொள்வது போல தன்னைத் தானே கடிந்து கொண்டவள் இடுப்பில் சொருகி இருந்த சேலையை எடுத்து விட்டு தன்னை சிறிது சரி செய்து கொண்டு அந்த ஆசிரமத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் நபரைக் காண விரைந்து சென்றாள்.

அந்த நபரைக் காண அனுமதி வாங்கி விட்டுக் காத்திருந்தவள் சிறிது நேரம் கழித்து அந்த அலுவலக அறைக்குள் நுழைய, அங்கே வயதான பெண்மணி ஒருவர் புன்னகை முகமாக அமர்ந்திருந்தார்.

“வாம்மா, உட்காரு. ரொம்ப நேரமாக விளையாடி களைச்சுட்ட போல. குடிக்க டீ, காஃபி ஏதாவது கொண்டு வரட்டுமா?” ராகினியைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர் வினவ,

சட்டென்று அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்தவள், “மேடம், அப்போ நீங்க என்னை நான் வந்த நேரமே பார்த்துட்டீங்களா?” என்று கேட்க அவரது தலை ஆமோதிப்பாக அசைந்தது.

“நீ வந்த உடனே உன் கிட்ட பேசலாம்னு வந்தேன். பசங்க உன் கூட விளையாட ஆசைப்பட்டாங்க, அது தான் உன்னைத் தொந்தரவு பண்ணல. சரி சொல்லும்மா என்ன விஷயமாக இங்கே வந்த?”

“இந்த ஆசிரமத்தில் நீங்க ரொம்ப வருஷமா இருக்கீங்களா மேடம்?”

“நீ யாரு, என்னன்னு எதுவுமே சொல்லலையேமா!”

“ஓஹ் சாரி சாரி மேடம், என்னோட பேரு ராகினி. எஸ் எஸ் குரூப் ஆஃப் கம்பெனி எம்.டி கார்த்திக் கேள்விப்பட்டு இருப்பீங்களோ தெரியலை, அவரோட மனைவி!”

“ஆமா கேள்விப்பட்டு இருக்கேன், சின்ன வயதில் ரொம்ப பெரிய இடத்தில் இருக்கும் பையன். அஞ்ச… க்கும்! நல்ல பையன் தான். சரி சொல்லும்மா, என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்த?” கார்த்திக்கின் பெயரைக் கேட்டதும் பேச்சு வாக்கில் அஞ்சலியைப் பற்றியும் பேசப் போனவர் சட்டென்று தன் பேச்சை திசை திருப்ப,

அதைக் கண்டு கொண்ட ராகினி தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டு, “நான் இங்கே வளர்ந்த ஒருத்தரைப் பற்றி தகவல் தெரிந்து கொள்ள வந்திருக்கேன். அவங்க இப்போ எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்னு ஒரு நம்பிக்கையில் வந்திருக்கேன்” என்று கூற அவரோ அவளை குழப்பமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

“யாரு பற்றி?”

“அஞ்சலி, மிஸஸ். அஞ்சலி ஆதித்யா” அஞ்சலியின் பெயரைக் கேட்டதுமே அவரது முகம் அப்பட்டமாக அதிர்ச்சியை வெளிக்காட்ட,

“உங்களுக்கு அவங்களை பற்றி தெரியும் தானே மேடம்? ப்ளீஸ் அவங்க எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க. அவங்களுக்கும், அவங்க ஹஸ்பண்ட்க்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்னன்னு எனக்கு தெரியல, ஆனா அந்த பிரச்சினையோட விளைவு அவங்க ஹஸ்பண்ட்டும் சந்தோஷமாக இல்லை, நிச்சயமாக அவங்களும் சந்தோஷமாக இருக்க மாட்டாங்க. அது எனக்கு நல்லாவே தெரியும். தயவுசெய்து அவங்க எங்கே இருக்காங்கன்னு சொல்லுங்க மேடம்” அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சலாக கேட்க,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர், “அஞ்சலின்னு யாரையும் எனக்குத் தெரியாது. நீங்க ஏதோ தப்பாக நினைத்து வந்து இருக்கீங்க. அதோடு இந்த ஆசிரமத்தில் இருந்த நபர்களைப் பற்றி அந்த உரிய நபரின் அனுமதி இல்லாமல் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அது மட்டுமில்லாமல் இதற்கு முதல் இங்கே அஞ்சலின்னு யாரும் இருக்கவே இல்லை. ஐ யம் சாரி நீங்க போகலாம்” என்று விட்டு தன் பார்வையை தாழ்த்திக் கொண்டார்.

“ஓஹ், அப்போ உங்களுக்கு அஞ்சலின்னு யாரையும் தெரியாது அப்படித்தானே?”

“ஆமா தெரியாது!”

“அப்போ ஏன் மேடம் அஞ்சலிங்குற பெயரைக் கேட்டதும் உங்க முகம் அவ்வளவு அதிர்ச்சி அடைந்தது?”

“அது…அது…”

“நீங்க ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு ஒரு ஆதரவு தர்ற இடம் தானே நடத்துறீங்க? அப்படி இருக்கும் போது அன்பும், பாசமும் இல்லாமல் தவிக்கும் எத்தனையோ பேரை நீங்க பார்த்து அவங்களுக்காக வருந்தி இருப்பீங்க. அப்படி வருந்தி அவங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்கணும்ன்னு எதிர்பார்க்கும் ஒருத்தர் இப்படி இரண்டு பேரைப் பிரித்து அதைப் பார்த்து சந்தோஷப்பட நினைக்க மாட்டாங்க”

“நான் ஒண்ணும் அவங்களைப் பிரித்து வைக்க நினைக்கல. இது அஞ்சலி செய்த தவறுக்கான தண்டனை. உண்மையான அன்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்க தெரியாத ஒரு முட்டாள் அவ”

“இப்போ இவ்வளவு தெளிவாக பேசுறீங்களே மேடம், அப்போ ஏன் நீங்க அவங்களைத் தடுக்கல?”

“அவளோட பிடிவாதம், எத்தனையோ தடவை சொன்னேன் அவ கேட்கல”

“அப்படி என்னதான் மேடம் ஆச்சு?”

“அது” ராகினியின் வார்த்தைகளின் தாக்கத்தில் தன்னை மறந்து பேசிக் கொண்டு சென்றவர் சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளைத் தயக்கத்துடன் பார்க்க,

சிறு புன்னகையுடன் அவரது கையை அழுத்திக் கொடுத்தவள், “அஞ்சலிக்கு அவ காதல் திரும்ப கிடைக்கணும்னு நினைத்தால் சொல்லுங்க மேடம்” எனவும் தன் கண்களை இறுக மூடி திறந்தவர் கண்கள் கலங்க அவளை ஏறிட்டு பார்த்தார்.

“அஞ்சலி இந்த ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணு தான். காலேஜ் போகும் வரை இங்கே தான் தங்கி இருந்தா. அதற்கு அப்புறம் ஹாஸ்டல் போயிட்டா, இங்க வர்றது இல்லை. நாங்களும் யாரையும் கட்டாயப்படுத்தி இங்கே இருக்க வைக்க மாட்டோம். அவங்களுக்குன்னு ஒரு நல்ல லைஃப் அமையும் போது நாங்க சந்தோஷமாக தான் வழி அனுப்பி வைப்போம். அப்படித்தான் அஞ்சலியை ஆதித்யா கல்யாணம் பண்ணும் போது அனுப்பி வைத்தோம். அவங்க கல்யாண வாழ்க்கையில் என்ன பிரச்சினைன்னு என் கிட்ட அவ சொல்லல.
ஒரு நாள் சாயங்காலம் திடீர்னு இங்கே வந்து நின்னா. எனக்கு எங்கேயாவது போகணும், இந்த ஊர் வேணாம் அனுப்பி வைங்கன்னு அழுதா. நான் என்ன பிரச்சினை? என்ன காரணம்னு கேட்டேன், நான் எதிர்பார்த்த காதல், பாசம் எல்லாம் இங்கே இல்லை, இதற்கு மேலே எதுவும் கேட்க வேண்டாம்ன்னு சொல்லிட்டா. அதற்கு அப்புறம் பலமுறை அவ கூட நான் பேச முயற்சி பண்ணேன். அவள் தன்னோட பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கல. கடைசியில் கையில் கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விட்டுட்டு இப்போ அவஸ்தைப் பட்டுட்டு இருக்கா. மனதில் ஆசை இருந்தும் தப்பு பண்ணிட்டோமேன்னு இன்னும் யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். பிடிவாதக்காரி!”

“அப்போ அவங்களும் ஆதித்யா அண்ணா மாதிரி மறுபடியும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு தான் இருக்காங்களா?”

“ஆமாம்மா, நான் பலதடவை சொல்லிப் பார்த்துட்டேன். செஞ்ச‌ தப்புக்கு மன்னிப்பு கேட்டு உன்னோட பக்க நியாயத்தை சொல்லு, ஆதித்யா கண்டிப்பாக புரிந்து கொள்ளுவாங்கன்னு சொன்னேன்”

“அதற்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“நான் செய்தது மன்னிக்க முடியாத தப்பு, மறுபடியும் நான் அவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பல, அவங்களாவது இனிமேல் சந்தோஷமாக இருக்கட்டும்ன்னு சொல்லுறா. மனது பூராவும் ஆசையை வைத்து கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிட்டு இருக்கா முட்டாள் பொண்ணு”

“இப்போ எங்கே இருக்காங்க?”

“தென்காசியில் ஒரு ஊரில் என் பிரண்ட் ஒருத்தர் இதே போல ஆசிரமம் வைத்து இருக்காங்க, அங்கே தான் இருக்கா.அவசரப்பட்டு கோபத்தில் எடுத்த முடிவால் இப்போ வரைக்கும் கஷ்டம் மட்டும் தான் அவ வாழ்க்கையில் இருக்கு. இப்படி கஷ்டம் தர்ற காதலை ஏன் அவ பண்ணணும்?”

“காதல் கஷ்டத்தை தர்றது இல்லை மேடம், அந்த கஷ்டம் நாமாகவே தேடிக் கொள்ளும் விடயம். காதலை உண்மையாக உணர்ந்து மனதார விரும்பிக் கொடுத்தால் அது எப்போதும் நமக்கு சந்தோஷத்தை மட்டும் தான் தரும். காதலில் கஷ்டமோ, நஷ்டமோ அதை தைரியமாக முகம்‌ கொடுக்கணும்‌, இப்படி ஓடி ஒளிந்து கொள்வதால் அது மாறப் போவதில்லை, அதோடு காதலில் கஷ்டம் வந்தாலும், வலி வந்தாலும் அந்த வலியிலும் ஒரு தனி சுகம் தான் கிடைக்கும்”

“அடடா, காதலைப் பற்றி இவ்வளவு விளக்கமாக சொல்லுறீங்க. உங்க பேச்சைப் பார்த்தால் உங்களோடதும் லவ் மேரேஜ் போல இருக்கே”

“அப்படி சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை லவ் மேரேஜ், அவரைப் பொறுத்தவரை அரேஞ்ச் மேரேஜ்”

“புரியலையே” அவரது கேள்வியில் சிரித்துக் கொண்டே தனது காதலைப் பற்றி ராகினி கூற,

அவளை வியப்பாக பார்த்து கொண்டிருந்தவர், “இப்படி எல்லாமா காதல் பண்ணுவாங்க? கேட்கவே ஆச்சரியமாக இருக்கு. உன்னோட நல்ல மனதுக்கு கூடிய சீக்கிரம் நல்லதே நடக்கும்மா. தன்னோட நல்லதைப் பற்றி மட்டும் யோசிக்காமல் அடுத்தவங்க சந்தோஷத்தையும் பெரிதாக நினைக்கும் உன் நல்ல மனதுக்கு நிச்சயமாக நல்லதே நடக்கும். உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்கிட்ட கேளும்மா” என்று கூற,

ராகினி சிறு புன்னகையுடன், “எனக்கு ஒரேயொரு உதவி பண்ணுங்க, அது போதும் மேடம். தென்காசியில் நான் போய் அஞ்சலி கூட தங்க ஏற்பாடு பண்ணுங்க போதும், மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன், ஆனா அவங்க கிட்ட நான் யாருன்னு இப்போதைக்கு சொல்ல வேணாம், அப்புறம் தென்காசியில் இருந்தும் காணாமல் போயிடுவாங்க” எனவும் அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர் அவள் அங்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகளை மன நிறைவுடன் செய்து கொடுத்தார்.

சிறிது நேரம் அவரோடு பேசி முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவள், “வந்த வேலை நல்ல படியாக முடிந்தது. அடுத்தது தென்காசிக்கு போகணும், அதற்கு கார்த்திக் கிட்ட பர்மிஷன் வாங்கணுமே, என்ன பண்ணலாம்? ஹா, இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. எல்லாவற்றுக்கும் வழி காட்டும் கடவுள் இதற்கும் ஒரு வழி காட்டாமல் போயிடுவாரா என்ன?” என்று தன் கேள்விக்கு தானே பதில் சொல்லி கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமான சிந்தனையோடு தன் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!