உன்னாலே – 14

eiAPZYF37537-203b08b4

இரவு நேர அமைதியை மேலும் அமைதியாக்குவது போல கார்த்திக் தனது லேப்டாப்பில் தன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டு மூழ்கியிருக்க, மறுபுறம் ராகினி தென்காசிக்கு செல்வதற்கு அவனிடம் இருந்து எப்படி அனுமதி வாங்குவது என்று யோசித்தபடியே அவன் அமர்ந்திருந்த பகுதியின் பின்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

அந்த அறைக்கு வந்த நொடி முதல் ராகினி தன்னிடம் ஏதோ பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாமல் இல்லை, இருந்தும் அவளை சீண்டிப் பார்ப்பதில் இப்போதெல்லாம் அவனுக்கு ஏனோ ஒரு அலாதிப் பிரியம்.

நேரம் வேறு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்க கடிகாரத்தை பார்ப்பதும் கார்த்திக்கைப் பார்ப்பதுமாக நடந்து கொண்டிருந்தவள் அவன் தன்னைத் திரும்பி பார்க்கவே மாட்டான் என்று நினைத்துக் கொண்டு சிறிது தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு அவன் முன்னால் சென்று நிற்க, “அடடே ராகினி, என்னம்மா வாக்கிங் பிராக்டிஸ் முடிந்ததா? இப்படி ஒரே இடத்தில் நடக்காமல் வீட்டை சுற்றி நடந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்குமே” என்றவாறே தனது லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவன் அவளை நிமிர்ந்து பார்க்க,

“அப்போ நான் இவ்வளவு நேரமும் உங்களுக்கு பின்னால் நடந்துட்டு இருந்ததைப் பார்த்துட்டே பார்க்காத மாதிரி இருந்தீங்களா?” ராகினி தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து பார்த்தபடி கேட்கவும் அவளைப் பார்த்து இயல்பாக தன் தோளை குலுக்கியவன் தான் அமர்ந்திருந்த ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு தன் கைகள் இரண்டையும் அதன் மேல் விரித்து அமர்ந்து கொண்டான்.

அவனது செய்கையில் தன் கோபம் அதிகரிக்க அவனை எரித்து விடுவது போல முறைத்து பார்த்த ராகினி காலின் மேல் கால் போட்டு இருந்த அவனது ஒற்றை காலை தள்ளி விட்டு விட்டு அவனது கையையும் கோபமாக தள்ளி விட்டு விட்டு அந்த ஷோபாவில் மற்றைய புறம் வந்து கோபமாக அமர்ந்து கொண்டாள்.

“நீ ஏதோ வாக்கிங் பிராக்டிஸ் செய்யுறேன்னு இல்லை நான் நினைச்சுட்டு இருந்தேன், அப்போ நீ பிராக்டிஸ் எதுவும் பண்ணலயா?”

“இந்த நடுராத்திரியில் தான் உங்க ஊரில் எல்லாரும் வாக்கிங் பிராக்டிஸ் பண்ணுவாங்களா மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்?”

“எங்க ஊரில் பண்ண மாட்டாங்க, ஒரு வேளை உங்க ஊரில் இருக்குமோன்னு நினைத்தேன். கீழ்ப்பாக்கம் ஏரியா தானே?”

“என்ன நக்கலா? உங்களை!”

“சரி சரி கோபம் வேண்டாம். என்ன பேசணும்னு சொல்லு? நான் சும்மா உன் கூட விளையாடுனேன் ராகினி. இன்னைக்கு முழு நாளும் மேடம் ரொம்ப பிசியாக இருந்தீங்களா அதுதான் கிடைத்த இந்த கொஞ்ச நேரத்தில் விளையாடிப் பார்த்தேன். அது தப்புன்னா சாரி” என்று கூறிக் கொண்டே கார்த்திக் ராகினியின் முகத்தை தன் புறம் திருப்ப முயல,

அவளோ, “உங்களுக்கு எல்லாம் தெரிந்தும் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்பது என்ன புதிதா? இல்லையே. பத்து வருஷமாக ஒரு பொண்ணு உங்களுக்கு பின்னாடி வந்தது கூட உங்களுக்கு தெரியலையோ, இல்லை தெரிந்தும் தெரியாமல் இருந்தீங்களோ?” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டபடி அவனது கையை தட்டிவிட்டு எழுந்து கொள்ளப் போக அதற்குள் கார்த்திக் அவளது கையை எட்டிப் பிடித்திருந்தான்.

ராகினி அங்கிருந்து செல்லலாம் என்ற நோக்கத்துடன் தான் எழுந்திருந்தாள். அதற்குள் கார்த்திக் அவளது கையைப் பிடித்திருக்க அந்த வேகத்தில் சிறிது தடுமாறியவள் கால் தடுக்கி கார்த்திக்கின் மேல் பின்புறமாக சாய்ந்து விழுந்திருந்தாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு வாய் ஓயாமல் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்த இருவரும் இப்போது தாங்கள் இருக்கும் நிலையை பார்த்து வார்த்தை வெளிவராமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, ராகினிக்கோ அவனது நெருக்கம் என்னனென்னவோ மாற்றங்களை செய்வது போல இருந்தது.

கார்த்திக்கின் மூச்சுக் காற்று தன் கழுத்தில் மோத சட்டென்று தன் கண்களை இறுக மூடிக் கொண்டவள் தன்னை அறியாமலேயே அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

ராகினியின் நிலை இவ்வாறு இருக்க மறுபுறம் கார்த்திக்கோ எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

கடிகாரத்தின் ஓசை கூட அந்த நிசப்தத்தில் ஏதோ ஒரு பெரிய சத்தம் போல கேட்க அந்த நொடி நேரத்திற்குள் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ராகினி கார்த்திக்கின் பிடியில் இருந்து எழுந்து கொண்டு தன்னைத் தானே சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த அந்த சம்பவத்தினால் இருவருக்கும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்க சங்கடமாக இருந்ததால் என்னவோ ராகினி தான் பேச வந்த விடயத்தை நாளை பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து செல்லப் போக அவசரமாக அவள் வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்ட கார்த்திக், “ஏதோ பேசணும்னு சொன்னியே ராகினி, சொல்லு என்ன விஷயம்?” என்று கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அது நான் உங்க கிட்ட எனக்கு இன்னைக்கு காலையில இல்லை நாளைக்கு” என்று தடுமாற தன் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய டம்ளரை அவளிடம் கொடுத்தவன் அவள் அதை குடித்து முடிக்கும் வரை தன் கையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“இப்போ ரிலாக்ஸாக இருக்கியா?”

“கொஞ்சம் பரவாயில்லை”

“சரி முதலில் இப்படி உட்காரு என்ன விஷயம்னு சொல்லு. அப்புறம் பேசலாம்னு தள்ளிப்போட்டு போட்டு தான் நிறைய தப்பு நான் பண்ணிட்டேன். இப்போ நீயும் அதே தப்பை பண்ண வேண்டாம். நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயமோ இல்லையோ ஏதுவாக இருந்தாலும் உடனே சொல்லிடு”

“நீங்க கார்த்திக் தானே?”

“அடிப்பாவி, என்ன இப்படி ஒரு கேள்வி கேட்குற?”

“இல்லை, நீங்க இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசி நான் பார்த்ததே இல்லையா அது தான். ஒரு சின்ன சந்தேகம்”

“ஏய் என்ன பழிக்குப்பழியா?”

“சேச்சே உண்மையாகத் தான் கேட்டேன். சரி, அது போகட்டும். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது போல நினைச்சுக்க வேண்டியது தான்”

“ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம். இங்கே யாரு பூ? யாரு நார்? கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“அப்கோர்ஸ் இதில் என்ன சந்தேகம், நான் தான் பூ, நீங்க தான் நார். என் கூட சேர்ந்து தான் நீங்க இப்படி எல்லாம் கரெக்டா பேசுறீங்க. அதற்காக எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம். நான் அதை எல்லாம் எதிர்பார்க்க மாட்டேன் மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்” என்றவாறே ராகினி தன் தலையை கோதி விட,

அவளைப் பார்த்து தன் தலையில் கையை வைத்துக் கொண்ட கார்த்திக், “சத்தியமா முடியல. நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லும்மா. இதற்கு மேல நீ பேசுறதைக் கேட்டால் எனக்கு மயக்கமே வந்துடும்” என்று கூறவும் அவனைப் பார்த்து தன் நாக்கை துருத்தி காட்டியவள் அடுத்து தான் பேசப் போகும் விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தன் சேலை முந்தானை நுனியை பிடித்துக் கொண்டு அவனைத் தயக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

“சொல்லும்மா ராகினி என்ன விஷயம்?”

“அது வந்து கார்த்திக், அது என்னன்னா, எனக்கு ஒரு வாரம் தென்காசிக்கு போகணும்”

“தென்காசிக்கா? ஏன்? அங்கே யாரு இருக்கா? உங்க சொந்தக்காரங்க எல்லோரும் சென்னையில் தானே இருக்காங்க” கார்த்திக் குழப்பமாக அவளைப் பார்த்து வினவ,

அவனைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகை செய்தவள், “அது அது சொந்தக்காரங்க எல்லோரும் சென்னையில் தான் இருக்காங்க. நான் சொந்தக்காரங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லலையே” என்று கூறவும்,

அவனோ, “அப்போ வேறு எதற்காக தென்காசி போற?” என்றவாறே அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றான்.

“அது வந்து தென்காசியில் என் பிரண்ட், ஆமா என் பிரண்ட் ஒருத்தி இருக்கா, அவளைப் பார்க்கப் போறேன். அவ குழந்தைக்கு காது குத்து பங்ஷனாம், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடியே என்னை வரச் சொன்னா. எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட் அவ. நம்ம கல்யாணத்துக்கு கூட வந்து இருந்தா. நீங்க பார்க்கலையா?”

“நம்ம கல்யாணத்துக்கா? சாரி ராகினி, அந்த நேரம் நான் யாரையும் சரியாக கவனிக்கவே இல்லை” கார்த்திக் அன்றைய நாளின் நினைவுகளில் தன் மனதிற்குள் வருந்தியபடியே அவளைப் பார்த்து கூற,

‘நல்ல வேளை கவனிக்கல கவனிச்சு இருந்தா நான் சிக்கி இருப்பேன்’ என்று தனக்குள்ளேயே நினைத்து கொண்டவள்,

“அது பரவாயில்லைங்க விடுங்க. நான் நாளைக்கு தென்காசிக்கு போகட்டுமா?” என்று கேட்டு விட்டு ஆவலாக தன் கணவனின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.

“தென்காசிக்கு போறது பிரச்சினை இல்லை, ஆனா ஒரு வாரம் எப்படி?” கார்த்திக் தயக்கத்துடன் வார்த்தைகளை இழுக்கவும்,

“நான் தான் உங்க கிட்ட இரண்டு வாரம் லீவு கேட்டேன் இல்லையா? அதில் ஒரு வாரத்தை கழித்துக் கொள்ளுங்க” ராகினி இதில் என்ன இருக்கிறது என்பது போன்ற பாவனையோடு கூற,

“உனக்கு ஓகேம்மா, நான் எப்படி ஒரு வாரம் லீவு எடுக்கிறது?” என்று கேட்கவும்,

ராகினியோ, “நீங்களா? உங்களை யாரு கூப்பிட்டா?” அதிர்ச்சியில் தன்னை மறந்து கேள்வி கேட்டு விட்டு கார்த்திக்கின் விசித்திரமான பார்வையில் சட்டென்று தன் வாயை மூடி கொண்டாள்.

“என்ன சொன்ன? என்ன சொன்ன?”

“இல்லை, நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் கேட்கல. நான் என்ன சொல்ல வந்தேன்னா அவ ஒரு வாரத்திற்கு முன்னாடி எல்லோரையும் தான் வர சொன்னா, நான் தான் உங்க வேலை பற்றி சொல்லி நீங்க பங்ஷன் அன்னைக்கு வருவீங்க நான் மட்டும் நாளைக்கு வர்றேன்னு சொன்னேன்”

“ஓஹ் அப்படியா?”

“ஆமாங்க, ஆமா அப்படியே தான்”

“ஆனாலும் ஒரு வாரம் உன்னைப் பிரிந்து..”

“என்ன?” அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு ராகினி மயக்கம் வராத குறையாக அவனைப் பார்த்து விழி விரிக்க,

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. அவசரமாக ஆபிஸ் வேலை ஏதாவது வந்தால் நீ இல்லைன்னா கஷ்டமாகுமேன்னு சொல்ல வந்தேன்” கார்த்திக் அவளைப் பார்த்து இயல்பாக கூறவும் அவளது முகமோ சட்டென்று வாடிப் போனது.

‘அது சரி உங்களுக்கு எப்போ இந்த ஃபீலிங் எல்லாம் புரியப் போகுது? உங்களுக்கு அந்த ஃபீலிங் எல்லாம் புரிந்து இருந்தால் நான் இப்படி அடுக்கடுக்காக பொய் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது. கடவுளே, என்னை மன்னிச்சிடுபா. இரண்டு பேரோட வாழ்க்கையை சேர்த்து வைக்கத் தான் இந்த பொய்யை சொல்லி இருக்கேன். எல்லாம் சரியாக நடந்தால் கார்த்திக் நான் சொன்ன பொய்யை புரிந்து கொள்ளுவாருன்னு நம்புறேன். கடைசிவரைக்கும் இந்த பச்ச புள்ளை கூட இருந்து காப்பாற்றிடுப்பா’ தான் செய்து கொண்டிருக்கும் செய்ய போகும் விடயத்தை பற்றி எல்லாம் தனக்குள்ளேயே ஒரு முறை சிந்தித்துப் பார்த்து கொண்ட ராகினி,

கார்த்திக்கின் புறம் திரும்பி, “அப்போ நான் நாளைக்கு கிளம்பவா கார்த்திக்?” என்று கேட்க அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் அவள் அடுத்த நாள் தென்காசி செல்வதற்கு தயாராகும் வேலைகளில் தன்னால் முடிந்த அளவு சிறு சிறு உதவிகளை அவளுக்கு செய்து கொடுக்கவும் தவறவில்லை.

தங்கள் கார் ஒன்றிலேயே அவளை அனுப்பி வைக்க கார்த்திக் ஏற்பாடுகள் செய்ய, சகுந்தலா மற்றும் துளசியிடம் ஏற்கனவே தான் தென்காசிக்கு செல்வதற்கான உண்மையான காரணத்தை சொல்லி இருந்த ராகினி தானாக சொல்லும் வரை இந்த விடயத்தை கார்த்திக்கிடமோ அல்லது ஆதித்யாவிடமோ சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆதித்யாவின் வாழ்க்கை சரியாகி விட வேண்டும் என்று ஒரு தாயாக சகுந்தலா நினைத்து அவளுக்கு துணையாக இருப்பதாக கூறியிருக்க, உண்மைக் காதல் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை என்பதை தன் கணவனுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்கிற நோக்கத்துடன் ராகினி தென்காசி நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாள்.

காலங்கள் மாறினாலும் இன்னும் சில கிராமங்களில் அந்த பழமையும், தொன்மையும் கட்டிப் பாதுகாக்கப்படுவதை பார்த்து வியந்தபடியே ராகினியின் பயணம் தொடர, ஒரு சில பசுமையான நேரச் செலவுக்கு பின்னர் அவள் வந்து சேர வேண்டிய இடத்தை வந்து சேர்ந்திருந்தது.

கிட்டத்தட்ட அரை நாள் முழுவதும் பயணத்திலேயே கழிந்திருந்தாலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு தடவையும் அவளது காதல் கணவனிடமிருந்து வந்த அழைப்புகள் ஒவ்வொன்றும் அவளது சோர்வை எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்திருந்தது.

இந்த பத்து வருட தன் காதல் பயணத்தில் அவனை விட்டு அவள் விலகி செல்வது இது முதல் தடவை அல்ல, இருப்பினும் கணவன் மனைவியாக ஆன பின்பு அவனது அருகாமையை விட்டு தொலை தூரம் தள்ளிச் செல்வது இதுவே அவளுக்கு முதல் தடவை.

மனம் முழுவதும் தன் காதலையும் சிந்தனை முழுவதும் ஆதித்யா மற்றும் அஞ்சலியின் காதலைப் பற்றிய எண்ணங்களையும் சுமந்து கொண்டு அஞ்சலி தங்கியிருக்கும் இடத்தை வந்து சேர்ந்த ராகினி அவளை நேருக்கு நேராக சந்திக்க போகும் அந்த தருணத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

ஏற்கனவே ராகினி அங்கே வருவாள் என்று நிர்வாகத்தினரிடம் அறிவிக்கப்பட்டிருந்ததனால் அவளை இன்முகத்துடன் வரவேற்றவர்கள் அவளுக்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும், ஆயத்தங்களையும் சிறப்பாக செய்து கொடுத்திருந்தனர்.

சென்னையில் பார்த்த ஆசிரமத்தை விட இந்த ஆசிரமம் வெகு சிறிதாக தான் இருந்தது, ஆனாலும் அந்த இயற்கை சூழலும், கிராமத்திற்கே உரிய பாரம்பரியமும் அந்த இடத்தை இன்னமும் பன்மடங்கு பிரம்மாண்டமாக காட்டியது.

தன் பயணக் களைப்பு தீரும் வரை குளித்து முடித்து விட்டு இரவுணவையும் முடித்து கொண்ட ராகினி அஞ்சலியை பற்றி யாரிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்க அங்கே வந்த பெண்மணி ஒருவர், “அஞ்சலி நாளைக்கு காலையில் தான் இங்கே வருவாங்கன்னு மேடம் சொல்ல சொன்னாங்க ராகினி ம்மா. அவங்க கல்யாணப் பொண்ணுக்கு அலங்காரம் பண்ணி விடுற வேலை எல்லாம் செய்வாங்க, அந்த வேலையாக பக்கத்தில் இருக்கும் ஊருக்கு போய் இருக்காங்க. நாளைக்கு காலையில் அவங்க வந்ததும் நீங்க போய் அவங்களைப் பார்க்கலாம். இப்போ நீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்கம்மா. பிரயாணம் செய்து வந்தது களைப்பாக இருக்கும்” என்று கூறி விட்டு சென்று விட,

“ஹையோ, இன்னைக்கு அஞ்சலியை பார்க்க முடியாதா? ஏழு நாளில் ஒரு நாள் போச்சு, இன்னும் ஆறு நாள் தான் இருக்கு, அதற்கிடையில் எப்படியாவது பேசி அஞ்சலியை சென்னைக்கு கூட்டிட்டு போகணுமே. காலையில் எழுந்ததும் முதல் வேலை அஞ்சலியை பார்ப்பது தான்” என தனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்ட ராகினி தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி செல்ல சரியாக அந்த நேரம் பார்த்து கார்த்திக்கிடமிருந்து அவளுக்கு அழைப்பும் வந்தது.

“ஹலோ மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக், என்ன இன்னைக்கு இத்தனை தரம் போன் பண்ணிட்டே இருக்கீங்க? இது கார்த்திக் தானா?” ராகினி வழக்கமாக கிண்டல் செய்வது போல கேட்க,

மறுமுனையில் கார்த்திக், “பின்ன என்ன பண்ணுறது? ஒருவேளை நீ காணாமல் போனால் உங்க மூணு அண்ணாமாருக்கும் யாரு பதில் சொல்லுவா? உன் வீட்டு ஆளுங்களுக்கு நான் தானே பதில் சொல்லணும். அது தான் இந்த அக்கறை” என்று கூறவும்

“அப்போ அதற்காக தான் இத்தனை தரம் போன் பண்ணீங்களா?” ராகினி உள்வாங்கிய குரலில் வினவினாள்.

“பின்ன வேற எதற்கு ராகினி? நீ சேஃப்டியா இருக்கியா இல்லையான்னு தெரிஞ்சுக்க தானே வேணும். நீ இப்போ என் பொறுப்பு, என் கடமையை நான் செய்ய தானே வேணும் இல்லையா? இப்போ ஆபிஸில் எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு, அதே மாதிரி வீட்டில் சில பொறுப்புகள் இருக்கு, அதை நான் சரியாக பண்ணணும் தானே? என் கடமையை நான் சரியாக செய்யுறேன் தானே?” கார்த்திக்கின் கேள்வியில் ராகினியின் மனம் சிறிது நேரத்திற்கு முன்பு வளர்த்து வைத்த ஆசைகளை எல்லாம் தவிடு பொடியாக்கியது போல ஆக்கி விட தன்னை முயன்று கட்டுப்படுத்தியவள் தன்னையும் தன் குரலையும் இயல்பாக வைத்துக் கொண்டு அவனது கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி விட்டு அன்றிரவு முழுவதும் அவனது நினைவுகளிலேயே உழன்று தவிக்கலானாள்..

இரண்டு அடி ஏறினால் ஒரு அடி சறுக்குவது போல தன் காதலை கார்த்திக்கிற்கு புரிய வைக்க தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவது போல அவளுக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது.

எத்தனையோ முயற்சிகள் செய்தும் தன் காதல் அவனுக்கு புரியவேயில்லலையா என்ற கேள்வி அவளை விடாமல் துரத்த, அவளுக்கு இறுதியாக கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு தான் அஞ்சலி மற்றும் ஆதித்யா.

அவர்கள் இருவரது காதல் வாழ்க்கையைப் பார்த்ததால் தானே கார்த்திக் இந்த மனநிலையுடன் இருக்கிறான். அவர்கள் இருவரது வாழ்விலும் காதல் தோற்கவில்லை இன்னும் வாழ்ந்து தான் கொண்டிருக்கிறது என்று தெரிந்தால், கார்த்திக் தன்னை சுற்றி போட்டு இருக்கும் இந்த கடமை, பொறுப்பு என்கிற தடுப்பு வேலியை தகர்த்து விடுவான் என்கிற நம்பிக்கையில் தன்னைத் தானே தேற்றிக் கொண்ட ராகினி அடுத்த நாள் விடியல் வேளையிலேயே அஞ்சலியைக் காண அவளது அறையின் முன்னால் சென்று நின்று கொண்டாள்.

அந்த அறைக் கதவைத் தட்டி விட்டு தடதடக்கும் இதயத்துடன் ராகினி சிறிது நேரம் காத்து நிற்க, மாநிறத்தில் அவளது உயரத்தை ஒத்த ஒரு பெண் கையில் ஒரு குழந்தையுடன் அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் முன்னால் வந்து நின்றாள்.

அந்த பெண்ணையும் அந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்த ராகினி, ‘இவங்க அஞ்சலியா? கையில் குழந்தை இருக்கு. ஆதித்யா அண்ணா குழந்தை இருப்பதாக சொல்லவே இல்லையே. ஒருவேளை இவங்க வேறு யாருமாக இருக்குமோ? தனக்கு குழந்தை இருந்தால் ஆதித்யா அண்ணா சொல்லி இருப்பாங்க தானே? நாம ரூம் மாறி வந்துட்டோமா இல்லை, இவங்க வேறு யாரும் அஞ்சலியா?’ என தனக்குள்ளேயே யோசித்து கொண்டு நிற்க,

அவள் முன்னால் நின்று கொண்டிருந்த பெண், “ஹலோ மேடம், யாரு நீங்க? என்ன வேணும்?” என்று சிறிது அதட்டலோடு கேட்கவும்,

அவளைத் தயக்கத்துடன் பார்த்தவள், “அஞ்சலி?” கேள்வியாக நோக்க,

“நான் தான் அஞ்சலி, நீங்க யாரு?” என்று பதிலுக்கு அடுத்த கேள்வியை கேட்டாள்.

“இந்த குழந்தை?” ராகினி மறுபடியும் அவளைப் பார்த்து கேட்கவும்,

அவளை ஒரு முறை ஏற இறங்க பார்த்த அஞ்சலி, “என் குழந்தை தான். உங்களுக்கு என்ன வேணும்” முன்பை விட இன்னும் சிறிது அதட்டலாக வினவ,

நேற்றிரவு ராகினியிடம் பேசிய பெண் அந்த வழியாக வரும் போது அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு, “ராகினி ம்மா, அவங்க தான் நீங்க கேட்ட அஞ்சலி, சென்னையில் இருந்து வந்தவங்க, அஞ்சலி ஆதித்யா” என்று விட்டு சென்று விட மறுபுறம் ராகினி அவளையும் அவளது கையில் இருந்த குழந்தையையும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றாள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!