உன்னாலே – 15

eiAPZYF37537-2a73bb2d

 

கம்பீரமான காவலனைப் போல வீற்றிருந்த ஆலமரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த மேடை போன்ற அமைப்பில் அமர்ந்திருந்த ராகினியின் பார்வை மூடப்பட்டிருந்த அஞ்சலியின் அறைக்கதவையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு முன்பு அஞ்சலியையும், அவளது கையில் இருந்த குழந்தையையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்ற ராகினி, “நீங்க ஆதித்யா அண்ணாவோட மனைவி தானே? இது உங்களுக்கும், ஆதித்யா அண்ணாவுக்கும் பிறந்த குழந்தையா?” என்று கேட்க அவளோ இவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

அஞ்சலியின் அமைதியில் ஏதோ புரியத் தொடங்க தன் தலையில் தட்டிக் கொண்ட ராகினி, “ஐ யம் சாரி. நான் என்னைப் பற்றி சொல்லவே இல்லை இல்லையா? என்னுடைய பெயர் ராகினி, ஆதித்யா அண்ணாவோட, அதாவது உங்க கணவரோட பிரண்ட், கார்த்திக்கோட மனைவி” என்று கூற,

அவளை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தவள், “உங்க.. உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?” குழப்பத்தோடு வினவினாள்.

“உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது தான், ஆனால் நீங்களும், ஆதித்யா அண்ணாவும் ரொம்ப அதிகமாக காதலித்து இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. அளவில்லாமல் ஒருத்தரை ஒருத்தர் நேசிப்பவர்களால் தான் இந்த மாதிரி பிரிந்து இருந்தும், அவங்களை நினைச்சுட்டே வாழ முடியும்” என்று விட்டு ராகினி அஞ்சலியை நிமிர்ந்து பார்க்க, அவளோ தன் கண்ணீரை மறைக்க தன் முகத்தை வேறு புறமாக திரும்பி நின்று கொண்டாள்.

“அஞ்சலி நீங்க தப்பாக நினைக்கலேன்னா நான் உங்க கூட கொஞ்சம் பேசலாமா?”

“முன்ன பின்ன தெரியாத ஆளுங்க கிட்ட என்னால் பேச முடியாது” சிறிது குரல் உயர்த்தி கோபமாக அவளைப் பார்த்துக் கூறிய அஞ்சலி தன் அறைக் கதவை பட்டென்று சாத்தி விட்டு உள்ளே சென்று விட ராகினிக்கோ அவளது செயலில் முகம் வாடிப் போனது.

யாராவது அந்த இடத்தில் இருக்கின்றார்களா என்று நோட்டம் விட்டவள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “நல்ல வேளை யாரும் பார்க்கல” என்றவாறே அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளியிருந்த ஆலமரத்தடியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அஞ்சலி இப்படி கோபமாக நடந்து கொள்ளக் கூடும் என்று ராகினி சிறிதும் நினைத்து பார்த்திருக்கவில்லை.

இப்படி தன்னுடன் பேசுவதற்கே அவள் முன் வரவில்லை என்றால் எப்படி தான் நினைத்து வந்த காரியத்தை முடிப்பது என்ற யோசனையுடன் ராகினி அமர்ந்திருக்க, ஒரு சில நிமிடங்கள் கழித்து அஞ்சலி தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

அஞ்சலி வெளியே வந்ததைப் பார்த்ததுமே ராகினி சிறு புன்னகையுடன் அவளைப் பார்க்க, அவளோ இவளைக் கண்டும் காணாதது போல கடந்து சென்றிருந்தாள்.

அவளது செயலில் ராகினியின் முகம் மீண்டும் வாடிப் போக உடனே தன்னைச் சரி செய்து கொண்டவள், “அஞ்சலி, ஒரு நிமிடம் நில்லுங்க” என்றவாறே அவளின் முன்னால் வந்து நின்று கொண்டாள்.

ஒரு சில நிமிடங்கள் மௌனத்திலேயே நகர, தன் கைகளைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்று கொண்டிருந்த ராகினி, “அஞ்சலி, நான் உங்களுக்கு முன்ன பின்ன தெரியாத ஆளாக இருக்கலாம் பரவாயில்லை. நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க ஏன் இங்கே வந்து இப்படி தனியாக கஷ்டப்படணும்? உங்க கணவர் ஆதித்யா இன்னமும் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து காத்து இருக்காரு. அங்கே வந்து அவர் கூட சேர்ந்து வாழலாம் இல்லையா? இப்படி ஒருத்தரை ஒருத்தர் வருத்தி பிரிந்து இருப்பதால் என்ன மாறி விடப் போகுது?” கேள்வியாக அஞ்சலியை நோக்க,

அவளைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்து கொண்டவள், “முதல்ல அப்படி கோபமாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கிறேன். உங்களுக்கு அதெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதுங்க. ஆதித்யாவுக்கு இன்னும், இன்னும் கஷ்டத்தை நான் கொடுக்க விரும்பல. என்னால் அவங்க பட்ட கஷ்டம் எல்லாம் போதும். இதற்கு மேலும் அவர் கஷ்டப்பட வேண்டாம்” குரலில் சுரத்தே இல்லாமல் கூறி விட்டு தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவளது பேச்சை தற்காலிகமாக திசை திருப்ப எண்ணிய ராகினி, “உங்க குழந்தைக்கு எத்தனை வயது?” அஞ்சலியின் கையில் இருந்த குழந்தையின் தலையை வருடிக் கொடுத்த படியே வினவ,

குழந்தையைப் பற்றி பேசியதால் என்னவோ சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த கடினத்தன்மை மறைய சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தவள், “இரண்டரை வயது” என்று கூறினாள்.

“ஓஹ், பாப்பா பேரு என்ன?”

“சூர்யா” அஞ்சலியின் பதிலில் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவள்,

‘அட, பேரில் கூட ஆதித்யா அண்ணாவை நினைத்து வைத்து இருக்காங்க போல’ என தன் மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே,

“நான் கேட்கப் போகும் விடயம் உங்களுக்கு ஒருவேளை பிடிக்கலாம், சிலவேளை பிடிக்காமலும் போகலாம், எப்படியிருந்தாலும் உங்களுக்கு அந்த கேள்விக்கு பதில் சொல்லத் தோணினால் மட்டும் பதில் சொல்லுங்க” சிறிது பீடிகையுடன் நிறுத்தியவள்,

“முதலில் நான் ஆதித்யா அண்ணாவைப் பார்த்தது பற்றி சொல்லிடுறேன்” என்று விட்டு,

ஒரு சில தினங்களுக்கு முன்பு ஆதித்யாவை சந்தித்ததைப் பற்றியும், அவனுக்கு தான் அளித்த வாக்குறுதியைப் பற்றியும் கூற, அவளை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்த அஞ்சலி, “அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்களா?” என்று கேட்க ராகினியின் பார்வை அவளை கனிவோடு நோக்கியது.

“இப்படி ஒருத்தரை ஒருத்தர் நினைத்து ஆளுக்கொரு பக்கம் கஷ்டப்பட்டு இருக்கீங்களே, உண்மையிலேயே உங்க இரண்டு பேருக்கும் நடுவில் என்னதான் பிரச்சினை?”

“ப்ளீஸ், அந்த விடயத்தைப் பற்றி பேச வேண்டாம். நீங்க உங்க நேரத்தை வீணாக்காமல் இங்கே இருந்து கிளம்புங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் மறுபடியும் அவருக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பல”

“உங்க வாய் மட்டும் தான் இங்கே இருந்து என்னைப் போகச் சொல்லுது, ஆனா மறுபடியும் அவரைப் பார்க்க மாட்டோமா எனும் உங்க மனதிற்குள் இருக்கும் ஆசை உங்க முகத்திலேயே அப்பட்டமாக தெரியுதே” ராகினியின் கூற்றில் அவளைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற அஞ்சலி,

ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாமல், “நான் ஆதித்யாவுக்கு வேண்டாம் ராகினி. நான் அவருக்கு ஏற்றவள் இல்லை” என்றவாறே அங்கிருந்த கற்பாறை ஒன்றில் சோர்வாக அமர்ந்து கொள்ள,

அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்ட ராகினி, “மனசு விட்டுப் பேசினால் தீராத பிரச்சினை எதுவும் இல்லை அஞ்சலி. என்னை உங்க தங்கச்சியாக நினைத்துக் கொள்ளுங்க. இதற்கு முதல் என்ன வேணும்னாலும் நடந்து இருக்கலாம், ஆனா உங்க குழந்தைக்காகவாவது நீங்க இதை எல்லாம் தைரியமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். அம்மா, அப்பாவோட பாசம், அரவணைப்பு இல்லாமல் இந்த உலகத்தில் வாழுவது எவ்வளவு கஷ்டமானது என்று நான் சொல்லி உங்களுக்கு புரியணும்னு இல்லை. இதற்கு மேலும் என்னோடு பேச உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க. பரவாயில்லை” என்று விட்டு அவளது முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நீங்க யாரு, என்ன எதுவும் எனக்குத் தெரியாது. அப்படியிருந்தும் எனக்காக நீங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களை நான் இரண்டு வருடங்களுக்கு முன்னாடியே சந்திச்சு இருக்க கூடாதான்னு இப்போ தோணுது”

“அட பரவாயில்லை அஞ்சலி, அது தான் இப்போ வந்துட்டேன் இல்லை. இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்” ராகினியினி பேச்சில் இயல்பாக புன்னகைத்து கொண்ட அஞ்சலி தன் கடந்த காலத்தைப் பற்றி அவளிடம் கூறத் தொடங்கினாள்.

“எனக்கு சின்ன வயதில் இருந்தே அம்மா, அப்பாவோட பாசம், அரவணைப்பு எதுவும் கிடைத்தது இல்லை. வளர வளர அந்த பாசத்திற்காக ரொம்ப ஏங்கி இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகத்தோட நிதர்சனத்தை நான் உணரத் தொடங்கும் போது தான் என் வாழ்க்கையில் நான் ஆதித்யாவை சந்தித்தேன். ஆதித்யா, ரொம்ப கலகலப்பானவரு, எல்லோரையும் ரொம்ப நல்லா கவனிச்சுக் கொள்ளுவாரு. எனக்கு காலேஜ் சேர்ந்த புதிதில் யாரையும் அவ்வளவாக தெரியாது, அதனால நான் யார் கூடவும் பெரிதாக பழகியதும் இல்லை. நான் பல நாள் தனியாகத் தான் காலேஜில் இருந்து இருக்கேன், அப்போதெல்லாம் ஆதித்யா வந்து என் கிட்ட ஏதாவது பேச்சுக் கொடுத்துட்டே இருப்பாரு. கார்த்திக் அவ்வளவாக இதில் எல்லாம் தலையிடமாட்டாரு, தானுண்டு, தன் வேலையுண்டு என்று அவரு போய்விடுவாரு.

ஆரம்பத்தில் ஆதித்யா என் கூட பேசும் போதெல்லாம் எனக்கு பெரிதாக எதுவும் தோணல. நாளாக நாளாக அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது என்கிற ஒரு மனநிலை உருவாகியது. அதற்கு அப்புறமாகத் தான் எனக்கு அவர் என்னோட வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர் என்பதே புரிந்தது. நான் அத்தனை வருடங்களாக ஏங்கிய பாசம், அரவணைப்பு எல்லாம் அந்த கொஞ்ச நாளில் எனக்கு ஆதித்யா கிட்ட இருந்து கிடைத்தது போல இருந்தது, அதனால் காலம் பூராவும் அந்த பாசத்தை எனக்கு மட்டுமே உரிமையாக வைத்துக் கொள்ளணும் என்று நினைத்து என் மனதில் உள்ளதை கார்த்திக் மூலமாக ஆதித்யா கிட்ட சொல்ல சொன்னேன். இரண்டு, மூணு மாதம் அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல. என்னை அவங்களுக்கு பிடிக்கலை போல என்று நினைத்து காலேஜிற்கே இரண்டு, மூணு வாரம் நான் போகல.

ஒரு நாள் என் ஹாஸ்டல் வார்டன் என்னைத் தேடி யாரோ வந்து இருக்காங்கன்னு சொல்லவும் நான் போய் பார்க்க, அங்கே ஆதித்யா நின்னுட்டு இருந்தாங்க. அவரைப் பார்த்த அந்த நிமிஷம் எனக்கு வேறு எதுவும் தோணல, அவர் என்னைத் தேடி வந்துட்டாருன்னு மட்டும் தான் தோணுச்சு. சுற்றி யாரு இருக்காங்க, என்ன நடக்குதுன்னு எதையும் நான் பார்க்கல, அவரை இனிப் பிரியவே கூடாது என்பது போல இறுக்கமாக அணைச்சுட்டு நின்னேன்” அன்றைய நாளின் நினைவுகளில் அஞ்சலியின் முகம் வெட்கத்தால் சிவக்க ராகினி அவளைப் பார்த்து புன்னகையுடன் அவளது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தாள்.

“அதற்கு அப்புறம் எல்லாம் ரொம்ப வேகமாக நடந்தது போலத்தான் இருக்கு. நிச்சயதார்த்தம், கல்யாணம் என எல்லாம் நான் எதிர்பார்த்ததை விடவும் ரொம்ப ரொம்ப சிறப்பாக நடந்து முடிந்தது. கல்யாணம் முடிந்து முதல் மூணு மாதம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆதித்யா எப்போதும் போல என்னை ரொம்ப பாசமாக தான் கவனிச்சுட்டு வந்தாரு, ஆனாலும் எனக்கு என் மனதிற்குள் ஒரு சின்ன பயம். சின்ன வயதில் அம்மா, அப்பாவோட பாசம் இல்லாமல் ஏங்கி இருந்ததால் என்னவோ ஆதித்யாவையும் இழந்து விடுவேனோ என்கிற பயம்.

நான் அவருக்கு பிடித்த விடயங்களை எல்லாம் செய்து வைப்பேன். அவர் அதைப் பார்த்து என்னை ரொம்ப பாராட்டணும், ரொம்ப காதலாக பேசணும்னு நினைப்பேன், ஆனா அவங்க சின்னதாக சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க. நான் நிறைய நிறைய காதலை அவருக்கு கொடுப்பேன், ஆனா ஆதித்யா அதே அளவுக்கு காதலை எனக்கு கொடுக்கல. நான் கொடுப்பது போல அளவில்லாத காதலை அவரும் எனக்கு கொடுக்கணும்னு எதிர்பார்த்து, எதிர்பார்த்து நான் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். ஒவ்வொரு நாளும் என்னோட எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிவடைவதைப் பார்த்து எனக்கு ஒருவிதமான வெறுப்பு உருவாகிடுச்சு. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அங்கே இருக்க முடியல. நான் எதிர்பார்த்த காதல் எனக்கு கிடைக்கவே இல்லை, இனியும் கிடைக்காது என்று நினைத்து அங்கே இருந்து கிளம்பி வந்துட்டேன்.

அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவு சரியா, தப்பா அதெல்லாம் நான் யோசிக்கவேயில்லை. என்னால மற்ற எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படப் போறாங்க என்பதைக் கூட நான் யோசிக்கல. ஆதித்யாவை விட்டு வந்த பிறகு தான் எங்க குழந்தை என் வயிற்றில் வளரும் விஷயமே எனக்குப் புரிந்தது. அப்போவே இந்த விடயத்தை அவரிடம் சொல்லணும்னு ஆசைப்பட்டேன், ஆனா நான் பண்ண தப்பு அவ்வளவு சீக்கிரமாக மாறக் கூடியது இல்லையே. அதனால இந்த விடயத்தைக் கூட அவரிடம் சொல்லாமல் இங்கே வந்துட்டேன். அவரோட ஞாபகம் வரும் போதெல்லாம் எனக்கு என் குழந்தை தான் துணை. இவ்வளவு பெரிய காரியத்தைப் பண்ணிட்டு மறுபடியும் அவங்க முன்னால் போய் நிற்க எனக்குத் தைரியம் இல்லை. நான் ரொம்ப சுயநலவாதி இல்லையா ராகினி?” கண்கள் இரண்டும் கலங்கி சிவந்து போக அமர்ந்திருந்த அஞ்சலியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ராகினி,

“நீங்க சுயநலவாதி இல்லை அஞ்சலி. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகள் இருக்கும், அந்த எதிர்பார்ப்புகள் தான் அவனை நல்ல வழிக்கு கொண்டு செல்ல வேண்டுமா? இல்லை கெட்ட வழிக்கு கொண்டு செல்ல வேண்டுமா? என்பதை முடிவு செய்யும். வாழ்க்கையில் அப்பப்போ எதிர்பார்ப்புகள் உருவாகலாம், ஆனா எதிர்பார்ப்புகளே வாழ்க்கையாகி விடக் கூடாது. நீங்க இதுவரைக்கும் சொன்ன விடயங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது உங்க இரண்டு பேருக்கும் இடையே நீங்க இத்தனை வருடங்களாக பிரிந்து இருக்கும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சின்ன பிரச்சினையை இவ்வளவு நாளாக தீர்த்து வைக்காமல் ரொம்ப பெரிய பிரச்சினையாக மாற்றி வைத்து இருக்கீங்க. நீங்க இரண்டு பேரும் சரியாக பேசி இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யாததால் இன்னும் ஒரு ஆளும் பாதிக்கப்பட்டு இருக்காங்க” என்று கூற,

“இன்னொரு ஆளா யாரு?” அவளது பேச்சில் அஞ்சலி குழப்பமாக அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

“அது…அது அப்புறமாக நான் சொல்லுறேன். நான் உங்களைத் தேடி வந்ததில் எனக்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருக்கு. அதைப் பற்றி கொஞ்ச நேரம் கழித்து நான் சொல்லுறேன். முதலில் நான் கேட்கப் போற கேள்விக்கு பதில் சொல்லுங்க. மறுபடியும் உங்க கணவர் ஆதித்யா உங்களைத் தேடி வந்தால் நீங்க அவங்க கூட சேர ஆசைப்படுவீங்களா?”

“அவங்க என்னை மன்னிப்பாங்களா? நான் அவங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுத்து இருக்கேன். அவங்க படக்கூடாத கஷ்டங்களை எல்லாம் என்னால் தானே அனுபவித்து இருக்காங்க” அஞ்சலி கவலையோடு கூற,

“அப்போ ஆதித்யா அண்ணா இன்னமும் கஷ்டப்படணும், அப்படித்தானே?” ராகினி கேள்வியாக அவளை நோக்க அவளோ அவசரமாக மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்படி இல்லை ராகினி, நான்..”

“நீங்க இன்னும் அவரை விரும்புறீங்க தானே?”

“ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன். இந்த இரண்டு வருட பிரிவு எனக்கு நான் பண்ண தப்பை புரிய வைத்தது மட்டுமில்லாமல், ஆதித்யா மேல் நான் வைத்த காதலையும் எனக்குப் புரிய வைத்து விட்டது. அதனால் தான் மறுபடியும் இன்னொரு பிரிவு வந்து விடக்கூடாது என்று நான் விலகி நிற்கிறேன்”

“இது தான் காதல் அஞ்சலி. நம்ம நேசிச்சவங்க நம்மால் சிறு கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாதுன்னு நினைக்குறீங்க பாருங்க, அதுதான் உண்மை காதல். உண்மையான காதல் ஒரு நாளும் தோற்றுப் போகாது, நம்மைத் தோற்றுப் போகவும் விடாது. சரி, இவ்வளவு நாள் நீங்க பட்ட கஷ்டம் எல்லாம் போதும். கொஞ்சம் உங்க பின்னாடி திரும்பி பாருங்க” ராகினியின் கூற்றில் அஞ்சலி யோசனையுடன் தன் பின்னால் திரும்பி பார்க்க, அங்கே ஆதித்யா கண்கள் கலங்க தவிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“ஆதித்யா!” அஞ்சலி ஆதித்யாவை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ச்சியான தோற்றமே உணர்த்த, ராகினி அவளது கையிலிருந்த குழந்தையை தன் புறமாக வாங்கிக் கொண்டு, “என்ன ஆதித்யா அண்ணா, நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிட்டேனா?” என்று கேட்க அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் அவர்கள் இருவரையும் நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தான்.

சிறிது நேரத்திற்கு முன்பு தன்னுடைய காதலை சொன்ன பின்பு ஆதித்யா தன்னைத் தேடி வந்ததை வெட்கத்தோடு கூறிய அஞ்சலியை ஒரு முறை நினைத்து பார்த்துக் கொண்ட ராகினி, “நீங்க முதன்முதலாக உங்க காதலை சொன்ன பிறகும் ஆதித்யா அண்ணா உங்களைத் தேடி வந்தாங்க. இப்போ மறுபடியும் அவங்க உங்களைத் தேடி வந்து இருக்காங்க. இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அஞ்சலி. நாம உண்மையாக ஒருத்தரை நேசிச்சோம்னா எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து நம்ம காதல் கண்டிப்பாக நம்மளை சேர்த்து வைக்கும். வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்டத்தையும் தாங்கும் சக்தியை காதல் நமக்கு கொடுக்கும்.

நான் ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி நீங்க இரண்டு பேரும் மனசு விட்டுப் பேசி இருந்தாலே இந்த பிரச்சினை வந்து இருக்காது. நான் உங்களை விட வயதில் சின்னவளாக வேணும்னா இருக்கலாம், ஆனா ஒண்ணு மட்டும் எப்போதும் மறக்காதீங்க. நாம கொடுக்கும் அதே அளவு காதல் நமக்கு திரும்பி வரணும்னு நினைக்க காதல் பண்டமாற்று வியாபாரம் இல்லை. அவங்க மனதில் எந்தளவிற்கு காதல் இருந்தாலும் அது அவங்களுக்கு உரிமையானவங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், இதோ இப்போ உங்க இரண்டு பேருக்கும் கிடைத்த மாதிரி” என்று கூற,

கண்கள் கலங்க அவளைப் பார்த்து தன் இரு கரம் கூப்பிய அஞ்சலி, “நாங்க இதுவரைக்கும் உங்களைப் பார்த்ததோ, பேசியதோ கூட இல்லை. அப்படியிருந்தும் எங்களுக்காக நீங்க இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கீங்களே ராகினி, இதற்கு எல்லாம் நாங்க என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?” தவிப்பாக அவளைப் பார்த்து வினவ,

அவர்கள் இருவரையும் அருகருகே நிற்கச் செய்தவள் அவர்களது குழந்தையை அவர்களிடம் கொடுத்த விட்டு, “காலம் பூராவும் நீங்க இப்படியே ஒற்றுமையாக இருங்க, அது போதும்” எனவும் அஞ்சலி அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.

“இத்தனை வருடங்களாக ஏதோ பூதாகரமாக இருந்த பிரச்சினையை ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் செய்துட்டியே ராகினி. அது சரி ஆதித்யாவை எப்படி இங்கே வரச் சொன்ன?”

“நேற்று நைட்டே நான் ஆதித்யா அண்ணா கிட்ட நீங்க இருக்கும் இடத்தைப் பற்றி சொல்லி வரச்சொல்லிட்டேன். அவரு இங்கே வந்த விடயம் ஊரில் யாருக்கும் தெரியாது. முதலில் நீங்க இரண்டு பேரும் மனசு விட்டுப் பேசி எல்லாப் பிரச்சினைகளுக்கும் இந்த தென்காசியிலேயே முடிவு கட்டுங்க. அதற்கு அப்புறம் ஊருக்கு போய் மற்ற ஆளுங்களை சமாளிப்பது பற்றி யோசிக்கலாம். இரண்டு, மூணு நாள் இங்கேயே இருந்து நீங்க பேச நினைத்த விடயங்களை எல்லாம் பேசி முடிங்க. அதற்கு அப்புறம் நாம இங்கே இருந்து கிளம்பலாம்” என்று விட்டு ராகினி அங்கிருந்து செல்லப் போக,

அவள் முன்னால் வந்து நின்ற ஆதித்யா, “எங்களுக்காக நீ இவ்வளவு தூரம் யோசித்து செய்யும் போது நான் உனக்கு எதுவுமே செய்யலைன்னா எப்படி ராகினி? நான் வேணும்னா கார்த்திக் கிட்ட பேசவா?” என்று கேட்க,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “அவங்க அவங்க காதலை அவங்களாகத் தான் அண்ணா உணரணும். இங்கே நீங்க இரண்டு பேரும் அதைப் புரிந்து கொண்டீங்க, ஆனா கார்த்திக் அப்படி இல்லை. பத்து வருடங்கள் அவருக்காக காத்திருந்தேன், அதே மாதிரி இன்னும் பத்து வருடங்கள் இருக்க சொன்னாலும் இருப்பேன். நிச்சயமாக ஒரு நாள் கார்த்திக் என்னை நேசிக்க ஆரம்பிப்பாங்க, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால நீங்க எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம்” என்று கூற, அவர்கள் இருவரையும் குழப்பமாக பார்த்த அஞ்சலி என்னவென்று கேட்க, ராகினி தன் காதலைப் பற்றி புன்னகை முகத்துடன் அவளிடம் கூறத் தொடங்கினாள்……

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!