உன்னாலே – 16

eiAPZYF37537-3fef4638

ராகினியிடம் அஞ்சலி மற்றும் ஆதித்யாவைப் பற்றி துளசி கூறியது வரை கேட்டுக்கொண்டு நின்ற அஞ்சலி, “நான் ஏற்படுத்திய பிரச்சினையால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. நான் அவசரத்தில் எடுத்த முடிவு எவ்வளவு கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கு” என்றவாறு கவலையுடன் கண் கலங்க,

அவளது தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்த ராகினி, “நடந்ததை நினைத்து கவலைப்பட்டு இனி எதுவும் மாறப்போவதில்லை அஞ்சலி, அதனால் அதை எல்லாம் விடுங்க” என்று கூற,

“அப்புறம் எப்படி கார்த்திக் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க?” அஞ்சலி வெகுநேரமாக கேட்க நினைத்த கேள்வியை இப்போது கேட்டிருந்தாள்.

“அது தான் எனக்கும் தெரியல. துளசி என் கூட வந்து பேசிட்டு போனதற்கு அப்புறம் ஒரு மூணு, நாலு நாள் கழித்து அத்தை எனக்கு போன் பண்ணாங்க. அடிக்கடி அவங்க வீட்டுக்கு போயிட்டு இருந்த நான் இப்போ திடீர்னு அங்கே போகாமல் இருக்கவும் வீடே ஒருமாதிரி ஆகிடுச்சுன்னு சொல்லி ரொம்ப கவலையாக பேசுனாங்க. அவங்க கவலையாக பேசியதாலோ, இல்லை கார்த்திக் வாழ்க்கையில் இன்னொரு பெண் இல்லை என்கிற விஷயம் தெரிந்தததனாலோ என்னவோ மறுபடியும் நான் அவங்க வீட்டுக்கு போக ஆரம்பித்தேன்,

இதற்கிடையில் எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க எப்படியோ கொஞ்ச நாள் போகட்டும், கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லி ஒன்றரை வருடத்தை கடத்திட்டேன், ஆனா அதற்கு மேல் என்னால் சமாளிக்க முடியல. வீட்டில் ரொம்ப கட்டாயப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. வேறு வழி தெரியாமல் நான் கார்த்திக்கை விரும்பும் விஷயத்தை சொல்லிட்டேன்,

அதற்கு அப்புறம் தான் வீட்டில் பிரச்சினையே ஆரம்பித்தது. நான் இன்னும் என் காதலை கார்த்திக் கிட்ட சொல்லவே இல்லை என்கிற விஷயம் தெரிந்ததும் வீட்டில் எல்லோரும் ஏதேதோ பேச ஆரம்பிச்சாங்க. இந்த விஷயம் சரி வராது, இதை மறந்துடுன்னு ரொம்ப கஷ்டப்படுத்த ஆரம்பிச்சாங்க. ஆனா நான் என் முடிவில் இருந்து மாறவே இல்லை. எப்போ கார்த்திக் முதன்முதலாக என் கையைப் பிடித்தாரோ அப்போவே என் மனதில் அவரை நான் ஆழமாக பதிந்து வைத்துட்டேன். அவர் அந்த நேரத்தில் சுயநினைவு இல்லாமல் ‘என்னை விட்டுப் போக வேணாம்’ என்று சொல்லி இருக்கலாம், ஆனா நான் சுயநினைவோடு தானே இருந்தேன்,

அதனால்தான் நான் என் மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தேன். இந்த பத்து வருடங்கள் இல்லை, இன்னும் பல நூறு வருடங்கள் போனாலும் கார்த்திக் ஒருத்தர் தான் எனக்கு கணவனாக வரவேண்டும்ன்னு முடிவு எடுத்தேன். என் காதலை அவருக்கு சொல்லலாம்ன்னு பல தடவை அவங்க வீட்டுக்கு போகும் நேரமெல்லாம் முயற்சி பண்ணேன், ஆனா முடியல.

இதற்கிடையில் அத்தை கார்த்திக் கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப பிடிவாதமாக இருந்து இருக்காங்க அது எனக்குத் தெரியாது. ஒரு நாள் திடீர்னு துளசி எங்க வீட்டுக்கு ஓடி வந்து கார்த்திக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாருன்னு சொன்னா. முதலில் எனக்கு அதை நம்பவே முடியல, அதற்கு அப்புறம் யாரும் அவங்களை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தாங்களான்னு கேட்க அப்படி யாரும் எதுவும் பண்ணல, அண்ணா அவராகவே வந்து நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாருன்னு சொன்னா. எனக்கு அதைக் கேட்டு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது, ஏன்னா நடக்கவே நடக்காது என்று நினைத்த விடயம் எதிர்பாராத விதமாக நடக்கும் போது அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னோட காதல் ஒரு தலைக் காதலாக இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் சரி அவங்க என் காதலை உணர்ந்து கொள்ளுவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கல.

இருந்தாலும் பரவாயில்லை காலம் பூரா இப்படி கார்த்திக் பக்கத்தில் இருப்பது கூட எனக்கு சந்தோஷம் தான். அவரு என்னை நேசிக்கலேன்னா என்ன எங்க இரண்டு பேருக்கும் சேர்த்து நானே மொத்த காதலையும் பண்ணுறேன்” ராகினி தன் முகத்தில் இருந்த புன்னகை மாறாமல் அஞ்சலி மற்றும் ஆதித்யாவைப் பார்த்து தன் காதல் கதையைக் கூறியிருக்க அஞ்சலி அவளை சட்டென்று ஆரத் தழுவிக் கொண்டாள்.

“இப்படி எல்லாம் ஒரு பொண்ணு காதல் செய்ய முடியுமான்னு எனக்குத் தெரியல ராகினி, ஆனா உன்னோட இந்த காதல் உனக்கு நிச்சயமாக பெரியதொரு எதிர்பாராத ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தை தர வேண்டும் என்று நான் அந்த கடவுளிடம் நிச்சயமாக வேண்டிக் கொள்ளுவேன்” என்று விட்டு அஞ்சலி அவளது நெற்றியில் முத்தமிட்டு விலக,

சிறு தலையசைவுடன் அவளைப் பார்த்து கண் சிமிட்டியவள், “எது நடந்தாலும், எப்படி நடந்தாலும் நான் எப்போதும் கார்த்திக்கை தப்பாக நினைக்கவே மாட்டேன். ஏற்கனவே ஒரு தடவை தப்பாக நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்” என்று விட்டு,

பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக, “அது சரி இத்தனை வருடங்களுக்கு அப்புறம் சந்திச்சு இருக்கீங்களே நீங்க இரண்டு பேரும் மனம் விட்டு பேசாமல் என் கிட்ட நின்னு அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்க. இரண்டு பேரும் முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க. நல்லா மனம் விட்டு பேசிட்டு அப்புறமாக இந்த பக்கம் வந்தால் போதும். போங்க, போங்க” என்றவாறே அஞ்சலி மற்றும் ஆதித்யாவை முதுகில் கை வைத்து தள்ளாத குறையாக அந்த இடத்தில் இருந்து அனுப்பி வைத்தவள் கண்கள் கலங்க அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நான் நினைத்த விடயம் நினைத்ததை விடவும் ரொம்ப சுலபமாக முடிந்து விட்டது. இனி கார்த்திக் மனதில் இருக்கும் அந்த காதல் பற்றிய தப்பான அபிப்ராயமும், ஆதித்யா அண்ணாவோட வாழ்க்கை தன்னால் தான் கேள்விக்குறியாகி நிற்கிறது என்ற குற்றவுணர்ச்சியும் இல்லாமல் போய் விடும் என்று நம்புறேன். மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக், இனி நீங்க என் கிட்ட இருந்து ஓடி ஒளிய முடியாது. இத்தனை நாட்களாக நீங்க உங்களைச் சுற்றி போட்டு இருந்த அந்த தடுப்பு வேலியை நிச்சயமாக நான் ஊருக்கு வந்த அடுத்த நொடி இல்லாமல் ஆக்கி விடுவேன்” ராகினி தன் நினைத்ததை சாதித்து விட்ட வெற்றிக் களிப்போடு அந்த இடத்தில் இருந்து சந்தோஷமாக நகர்ந்து சென்று விட அவள் நினைப்பது போல எல்லாம் நடந்து விடுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வழக்கம் போல ராகினி தன் இரவுணவை முடித்து விட்டு ஆதித்யா மற்றும் அஞ்சலியோடு சிறிது நேரம் பேசிவிட்டு தனது அறைக்கு திரும்பி வர சரியாக அந்த நேரம் அவளது மனதின் நாயகன் அவளுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தான்.

கார்த்திக்கின் பெயரைப் பார்த்ததும் ஆவலாக அந்த அழைப்பை எடுக்கப் போனவள் முதல் நாள் அவன் கூறிய, ‘கடமையை சரியாக செய்ய வேண்டும் தானே?’ என்ற கேள்வியை நினைத்து பார்த்தபடி எந்தவொரு ஆவலும், எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனது அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

“ராகினி”

“ம்ம், சொல்லுங்க கார்த்திக். எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?”

“இல்லை ராகினி, நீ சாப்டியா?” கார்த்திக்கின் குரலில் எப்போதும் போல இருக்கும் ஒரு கம்பீரமும், ஆளுமையும் இன்று இல்லாதது போல இருக்க,

சிறிது குழப்பம் கொண்ட ராகினி, “என்னாச்சு கார்த்திக்? உடம்புக்கு எதுவும் முடியலையா? குரல் ஒரு மாதிரி இருக்கு” என்று வினவ மறுமுனையில் அமைதியே பதிலாக கிடைத்தது.

“கார்த்திக்”

“……”

“கார்த்திக் என்ன ஆச்சு? ஆர் யூ ஓகே?”

“ராகினி நீ எப்போ வீட்டுக்கு வருவ?”

“ஏன் என்னாச்சு கார்த்திக்? ஆபிஸ் வேலை ஏதாவது இருக்கா?”

“ஆபிஸ் வேலை இருந்தால் மட்டும் தான் நீ வீட்டுக்கு வரணுமா? உன் ஹஸ்பண்ட் இங்கே நீ இல்லாமல் தனியாக தவித்துப் போய் இருக்கேன் அது உனக்கு தெரியலையா?”

“கார்த்திக் நீங்க… நீங்க இப்போ என்ன சொன்னீங்க?” தான் காதில் விழுந்த கார்த்திக் சொன்ன வார்த்தைகள் உண்மைதானா என்று நம்பமுடியாமல் தன் கையை கிள்ளிப் பார்த்து கொண்ட ராகினி,

“கார்த்திக் நீங்க என்ன சொன்னீங்க? மறுபடியும் சொல்லுங்க” கெஞ்சலாக கேட்க,

மறுமுனையில் “நீ இல்லாமல் வீடும், ஆபிஸும் எதையோ இழந்த மாதிரி இருக்கு ராகினி. நான் வேணும்னா… நாளைக்கு தென்காசிக்கு வந்து… உன்னை கூட்டிட்டு வரவா?” கார்த்திக் தயங்கி தயங்கி ஒரு வழியாக தான் கேட்க நினைத்ததை கேட்டிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராகினிக்கோ இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பதைப் போல இருந்தது.

‘இரண்டு நாள் நான் அவங்க பக்கத்தில் இல்லை என்று தெரிந்து இந்தளவிற்கு கார்த்திக் மாறி இருக்காங்கன்னா அப்போ இன்னும் கொஞ்ச நாள் போனால் நிச்சயமாக அவங்களுக்கு இந்த உறவில் இருக்கும் காதல் புரியும். இன்னும் ஐந்து நாட்கள் தான். அதற்கு அப்புறம் நான் நினைத்த மாதிரி கார்த்திக் என் காதலைப் புரிந்து கொள்ளுவாங்க’ ராகினி இங்கே தன் மனதிற்குள் ஏதேதோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு நிற்க,

மறுபுறம் கார்த்திக் நீண்ட நேரமாக அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்க, “ராகினி, ராகினி. நான் பேசுறது கேட்குதா?” மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டுக் கொண்டு நின்றான்.

தன் கையிலிருந்த தொலைபேசி அதிர்வதைப் பார்த்து தன் தலையில் தட்டிக் கொண்ட ராகினி, “ஹையோ, சாரி கார்த்திக். நீங்க என்ன கேட்டீங்க?” என்று கேட்க,

மறுமுனையில் அவளது கணவன், “இல்லை, ஒண்ணும் இல்லை. நீ பங்ஷன் முடிஞ்சு வீட்டுக்கு வா பேசலாம்” என்று விட்டு அந்த அழைப்பைத் துண்டித்திருந்தான்.

கார்த்திக் போனை வைத்ததும் திரையில் தெரிந்த கார்த்திக்கின் நிழல் படத்தை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ராகினி, “கார்த்திக், கார்த்திக். இத்தனை வருடங்களாக நான் என்ன நடக்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்தேனோ அந்த விஷயம் இன்னும் கொஞ்ச நாளில் நடக்கப் போகிறது. என்னோட காதலை நான் உங்க கிட்ட சொல்லப் போறேன். நிச்சயமாக இந்த முறை நீங்க எனக்கு மறுப்பு சொல்ல மாட்டீங்கன்னு நான் நம்புறேன். உங்களை நான் எப்படி எல்லாம் காதலித்தேன்னு எல்லாவற்றையும் மனம் திறந்து பேசி அப்போ உங்க முகத்தில் வர்ற ஆச்சரியத்தை நான் ரசித்து பார்க்கணும் கார்த்திக், நான் பார்க்கணும்” தன் சந்தோஷம் தாளாமல் ஏதேதோ பேசி, தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டு, மனம் முழுவதும் சந்தோஷம் நிறைய நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.

***************

அஞ்சலி மற்றும் ஆதித்யாவிடம் ஏற்கனவே சொன்னது போல இரண்டு, மூணு நாட்கள் அந்த இடத்தில் தங்கி இருந்த ராகினி அவர்கள் இருவரது மனக்கசப்பும் தீர்ந்து விட்டது என்று தெரிந்து கொண்ட பின் அவர்கள் இருவரையும் தன்னோடு சேர்த்து அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டாள்.

தென்காசியில் இருந்து புறப்படுவதற்கு முன் கார்த்திக்கிற்கு தான் ஊருக்கு வருவதாக குறுஞ்செய்தி அனுப்பி இருந்தவள் அவனுக்கு பலவித ஆனந்த அதிர்ச்சிகளை வழங்கப் போகிறோம் என்று நினைத்திருக்க, கடவுளோ அவளுக்கு வேறு சில ஆனந்த அதிர்ச்சிகளை வழங்கக் காத்திருந்தார்.

சென்னையை நெருங்கும் நேரம் ஏனோ ராகினிக்கு என்றும் இல்லாதவாறு பதட்டம் தொற்றிக் கொள்ள முயன்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் கார்த்திக்கிற்கு அழைப்பை மேற்கொண்டு அவனை அவசரமாக ஆதித்யாவின் வீட்டுக்கு வருமாறு மாத்திரம் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, அவள் அழைப்பை வைத்து சரியாக இருபது நிமிடத்தில் கார்த்திக் அரக்க பறக்க ஆதித்யாவின் வீட்டை வந்து சேர்ந்திருந்தான்.

அவனது களைந்த தோற்றமும், பதட்டத்தமான உடல் பாவனையுமே அவன் எந்தளவிற்கு வேகமாக அங்கே புறப்பட்டு வந்திருப்பான் என்பதை ராகினிக்கு தெளிவுபடுத்த அவனது அந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து குழப்பம் கொண்டவள், “கார்த்திக் என்ன இது? உங்களுக்கு என்ன ஆச்சு?” கேள்வியாக அவனை நோக்கினாள்.

“ராகினி, ராகினி, உனக்கு எதுவும் இல்லை தானே? எதற்காக என்னை அவசரமாக வரச் சொன்ன? உனக்கு ஏதாவது பிரச்சினையா?” ராகினியின் தோளின் இரு புறமும் தன் கைகளை வைத்து கொண்டு அவளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாக பார்த்தபடியே கார்த்திக் வினவ,

“அய்யோ, கார்த்திக். எனக்கு எதுவும் இல்லைபா. ஆதித்யா அண்ணா தா…”

“ஆதித்யாவுக்கு என்ன?” அவள் சொல்ல வந்த விடயத்தை முழுமையாக சொல்லி முடிப்பதற்குள் அவன் பதட்டத்துடன் ஆதித்யாவை நோக்கி நகர்ந்து சென்றிருந்தான்.

“ஆதித்யா உனக்கு ஒண்ணும் இல்லை தானே? யாராவது ஏதாவது சொல்லுங்க. ஏன் இப்படி எல்லோரும் அமைதியாக இருக்கீங்க?”

“டேய் கார்த்திக், முதல்ல நீ பொறுமையாக இருடா. நாங்க பேசுவதற்கு கொஞ்சம் நேரம் கொடுத்தால் தானே என்ன நடந்தது என்று சொல்ல முடியும்”

“ஐ யம்…ஐ யம் சாரி டா. திடீர்னு ராகினி போன் பண்ணவும் கொஞ்சம் பதட்டமாகிட்டேன். இப்போ சொல்லு என்ன விஷயம்?”

“சொல்லுறதை விட உனக்கு காண்பிக்கிறேன்” சிறு புன்னகையுடன் ஆதித்யா தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து விலகி நிற்க அவனுக்கு பின்னால் அஞ்சலி குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.

“அஞ்சலி!” கார்த்திக் அஞ்சலியை அந்த இடத்தில் பார்த்து அதிர்ச்சியாகி நிற்க,

அவனது தோளில் தன் கையை வைத்த ராகினி, “இதற்காகத் தான் நான் தென்காசிக்கு போனேன்” என்று விட்டு ஆதித்யாவை இறுதியாக சந்தித்த போது நடந்தது முதல் இப்போது அவர்கள் இருவரும் அவன் முன்னால் நிற்பது வரை கூறி முடித்திருந்தாள்.

“இவ்வளவு விடயம் நடந்து இருக்கா? நீ கூட இந்த விடயத்தை பற்றி என் கிட்ட சொல்லவே இல்லையே ஆதி. நான் உனக்கு அந்தளவுக்கு வேண்டாத ஆளாகப் போய் விட்டேனா?”

“அய்யோ கார்த்திக், அப்படி இல்லை டா. எனக்கே ராகினி இரண்டு நாளைக்கு முன்னாடி தான் இந்த விடயத்தை பற்றி சொன்னாங்க. அது வரைக்கும் எனக்கும் தெரியாது. அஞ்சலி இருக்கும் இடத்திற்கு வாங்கன்னு சொன்னதுமே எனக்கு எதுவும் தோணல, அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிளம்பி போயிட்டேன். அங்கே போனதற்கு அப்புறம் குழந்தையையும், அஞ்சலியையும் பார்த்ததும் எனக்கு சத்தியமாக எதுவுமே தோணலடா. பல நாள் கேள்வி, கோபம் என எல்லாவற்றையும் பேசித் தீர்ப்பதற்குள்ளேயே நாள் எல்லாம் ஓடிடுச்சு. இங்கே வந்ததும் என் சித்தி, சித்தப்பாக்கு கூட நான் இந்த விடயத்தை சொல்லல. உன் கிட்ட தான் சொல்லணும்னு ஆசைப்பட்டேன். இதற்கு முதல் சொல்லாமல் விட்டதற்கு சாரிடா, ரியலி சாரி டா”

“பரவாயில்லை டா ஆதி. அதெல்லாம் எதுவும் இல்லை” கார்த்திக் முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அந்த இடத்திலிருந்த பெண்கள் இருவரையும் சிறிது சங்கடத்துடன் பார்த்தவாறே ஆதித்யாவைப் பார்த்துக் கூற, அவனது சங்கடத்தை புரிந்து கொண்டது போல நண்பர்கள் இருவருக்கும் சிறிது தனிமையை அளித்து பெண்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து ஆதித்யா மற்றும் கார்த்திக்கின் சிரிப்பு சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியேறி வந்த ராகினி மற்றும் அஞ்சலி ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றனர்.

“எங்க கல்யாணம் ஆனதற்கு அப்புறம் கார்த்திக் இப்படி சிரித்துப் பேசிட்டு இருப்பதைப் பார்ப்பது இது தான் முதல் தடவை. இனிமேல் எப்போதும் அவங்க இப்படியே இருக்கணும்” ராகினி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அஞ்சலியைப் பார்த்துக் கூற,

அவளது கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தவள், “கூடிய சீக்கிரம் கார்த்திக் மனசும் மாறும் ராகினி. இதே மாதிரி எப்போதும் நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கணும். அடுத்த தடவை நான் உங்களை பார்க்கும் போது கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்” என்று தன் மனதார கூற அவளது கூற்றில் ராகினி சிறிது வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டாள்.

சிறிது நேரம் எல்லோரும் மனம் விட்டு பேசி சந்தோஷமாக தங்கள் நேரத்தைக் கழித்த பின்னர் ராகினி மற்றும் கார்த்திக், ஆதித்யா மற்றும் அஞ்சலியிடம் விடைபெற்று விட்டு தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டு செல்ல ஆரம்பித்தனர்.

கார்த்திக் காரில் ஏறி அமர்ந்தது முதல் ராகினியிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, அவளோ அவனது முகத்தைப் பார்ப்பதும், எதிரில் இருந்த தெருவைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்.

தங்கள் வீட்டை வந்து சேர்ந்த பின்பும் கார்த்திக் எதுவும் பேசாமல் அவளைக் கடந்து சென்று விட சகுந்தலா மற்றும் துளசியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்து சேர்ந்த ராகினி ஷோபாவில் தன் கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்த கார்த்திக்கின் அருகில் அமர்ந்து கொண்டு, “கார்த்திக்” என்று அழைக்க அவனிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

தான் அழைத்தது அவனுக்கு கேட்கவில்லையோ என்ற யோசனையுடன், “கார்த்திக்” இம்முறை சற்று சத்தமாக அழைத்தது மட்டுமில்லாமல் அவனது தோளில் தன் கையை ராகினி வைக்க, அவளது கையை தன் தோளிலிருந்து விலக்கி விட்டவன் தன் கண்களைத் திறவாமலேயே அமர்ந்திருந்தான்.

“கார்த்திக் என் மேலே கோபமாக இருக்கீங்களா?” ராகினியின் கேள்வியில் சட்டென்று அவளைத் திரும்பி பார்த்தவன்,

“பரவாயில்லையே, என்னைப் பற்றி யோசிக்க கூட உனக்கு நேரம் இருக்கா?” என்று கேட்க அவனது கேள்வியில் அவளது முகம் சட்டென்று வாடிப் போனது.

“நான் எப்படி…”

“நீ கூட என்னை ரொம்ப மோசமானவனாக நினைச்சு இருக்க இல்லை ராகினி. என் பிரண்ட் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே நான் ஆசைப்படுவேன், அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய விடயத்தை பற்றி நீ என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே ராகினி”

“நான் அப்படி எதுவும் நினைக்கல கார்த்திக். உங்களுக்கு அஞ்சலியைப் பிடிக்காது அப்படி இருக்கும் போது நான் அவங்களை போய் சந்திப்பதை விரும்புவீங்களோ, இல்லையோன்னு தான்…”

“எனக்கு அஞ்சலியைப் பிடிக்காது தான், அதற்காக அவளை ஒரேயடியாக ஆதித்யா வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கணும்னு நான் எதிர்பார்க்கல. ஆதித்யாவோட உடம்பு முழுமையாக சரியானதும் அவன் கிட்ட மறுபடியும் அஞ்சலியைக் கொண்டு வரணும்னு தான் நான் நினைச்சேன், அதற்காக தான் அஞ்சலி இருக்கும் இடம் தெரிந்தும் தெரியாதது போல இத்தனை நாட்களாக இருந்தேன். பக்கத்தில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளல, கொஞ்சம் தள்ளி இருந்தாலாவது புரிந்து கொள்ளுவாங்கன்னு தான் அஞ்சலியை போய் நான் பார்க்கவோ, பேசவோ இல்லை.

அடுத்த மாதம் ஆதித்யா அன்ட் அஞ்சலியோட மூன்றாவது வருட திருமண நாள். அன்னைக்கு அவனுக்கு முன்னால் அஞ்சலியை கொண்டு போய் நிறுத்தலாம்ன்னு தான் நான் நினைத்து இருந்தேன், அதற்காக நீ பண்ணது தப்புன்னு சொல்லல, என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே ராகினி. நீ என் கிட்ட சொல்லிட்டு இதெல்லாம் செய்திருந்தால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இதை எல்லாம் உன் கூட சேர்ந்து செய்திருப்பேனே. இவ்வளவு நாளாக என் கூட பழகியும் நீ என்னைப் புரிஞ்சுக்கவே இல்லையா ராகினி?. ஆனா நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கல” கார்த்திக் வலி நிறைந்த குரலில் ராகினியைப் பார்த்து கூறி விட்டு அங்கிருந்து சென்று விட ஏதேதோ மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்த ராகினி அது அத்தனையும் கண் முன்னால் இடிந்து விழுந்து விட்டதைப் போல கலக்கத்தோடு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போடு அமர்ந்திருந்தாள்……