உன்னாலே – 17

eiAPZYF37537-f58a95c0

உன்னாலே – 17

ராகினி தென்காசியில் இருந்து திரும்பி வந்து அன்றோடு இரண்டு வாரங்கள் முழுமையாக நிறைவுற்றிருந்தது.

இந்த இரண்டு வாரங்களில் கார்த்திக் அவளோடு பேசிய வார்த்தைகள் ஒன்றோ, இரண்டு தான், அதுவும் ஏதாவது வேலை பற்றிய விடயங்களை பற்றி மட்டும் தான் அவளிடம் அவன் பேச்சுவார்த்தை வைத்திருந்தான்.

ராகினி பலமுறை அவனிடம் பேச முயன்றும் அவன் அவளுக்கு எந்தவிதமான வாய்ப்புகளையும் வழங்காமல் இருக்க அவளுக்குத் தான் அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

இதற்கு முன்னராவது அவன் பேசிக் கொண்டு விலகியிருந்தான், ஆனால் இப்போது அவன் பேசாமலே விலகியிருந்தால் அவளால் என்னதான் செய்ய முடியும்?

ஏதாவது பேச வாய்ப்பு கொடுத்தாலாவது பிரச்சினையைப் பற்றி பேசி சரிப்படுத்தி விடலாம், ஆனால் இங்கு வாய்ப்புக்கள் வழங்கவே வழி இல்லை எனும் போது என்ன தான் செய்வது?

அன்று வழக்கம் போல கார்த்திக் தன் அலுவலக வேலையில் மூழ்கியிருக்க, அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ராகினி அவனது முகத்தை பார்ப்பதும், தன் கையிலிருந்த பைலை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் அப்படியே கழிந்து செல்ல தான் பார்த்துக் கொண்டிருந்த பைலின் நடுவே ஒரு காகிதத்தை கார்த்திக் கவனிக்காத வண்ணம் எடுத்து வைத்தவள் அதில் எதையோ எழுதி விட்டு, “கார்த்திக் இந்த பைலில் எல்லாம் ஓகே. நீங்க எதற்கும் ஒரு தடவை பார்த்துக்கோங்க” என்றவாறே அவனது புறமாக நீட்ட, தன் கையிலிருந்த மற்றொரு பைலை பார்த்தபடியே அதை வாங்கியவன் அதைப் பிரித்துப் பார்த்து விட்டு ராகினியை கோபமாக திரும்பி பார்த்தான்.

“வேலை நேரத்தில் விளையாட வேண்டாம்னு உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ராகினி. இனிமேல் இப்படி ஏதாவது பண்ணால் அப்புறம் என்ன நடக்கும்னு சொல்ல தெரியாது”

“நீங்க தான் உங்க மற்ற நேரங்களில் எனக்குப் பேச சந்தர்ப்பமே தரலையே, அப்படி இருக்கும் போது நான் இப்படி ஏதாவது பண்ணால் சரி கோபமாக நாலு வார்த்தை பேசுறீங்களே. அது போதும்”

“இப்படி ஏதாவது சோகமாக பேசி என்னை மறுபடியும் உன் கூட பேச வைக்கலாம்னு முயற்சி பண்ணாதே. நீ என்னை ஒரு பிரண்டாக, அட்லீஸ்ட் ஒரு மனிதனாக கூட மதிக்கல தானே. அது தான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. வீட்டில் அம்மா கிட்ட, துளசி கிட்ட எல்லாம் எல்லா விபரங்களையும் சொல்லி இருக்க, அவங்க அளவுக்கு கூட நான் உனக்கு முக்கியமாக தெரியாமல் போயிட்டேனா ராகினி”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை கார்த்திக். உங்களுக்கு தெரியாமல் ரகசியமாக இதெல்லாம் பண்ணணும்னு நான் நினைக்கல. அப்படி நினைத்திருந்தால் ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக உங்களை அந்த இடத்திற்கு வரச் சொல்லி இருப்பேனா? நான் இதை எல்லாம் பண்ணதே உங்களுக்காகத் தான்.

நீங்க ஆதித்யா அண்ணா வீட்டுக்கு போயிட்டு வந்ததற்கு அப்புறம் எவ்வளவு மனம் வருந்திப் பேசுனீங்க. அவங்க வாழ்க்கை இப்படியாக நானும் ஒரு காரணம்னு எல்லாம் நீங்க சொல்லுறதைக் கேட்கும் போது எனக்கு எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? உங்க மனதில் இருக்கும் அந்த குற்றவுணர்ச்சியை இல்லாமல் செய்யணும்னு தான் இதை எல்லாம் சர்ப்ரைஸாக பண்ண நினைச்சேன். இதை எல்லாம் பார்த்து நீங்க அப்படியே சர்ப்ரைஸ் ஆகுவீங்கன்னு நினைத்தேன், ஆனா எனக்குத் தான் எல்லாமே சர்ப்ரைஸாக வந்து சேருது.

உங்களுக்காக, உங்க மேல் நான் வைத்திருக்கும் அளவு கடந்த காதலுக்காகத் தான் இதை எல்லாம் நான் பண்ணேன். எனக்கு உங்க சந்தோஷம் தான் முக்கியம். அதற்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயாராக இருக்கேன். உங்க முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு வந்தாலும் அது எனக்குப் பெரிய விடயம் தான். ஊரில் இருந்து திரும்பி வந்ததும் உங்க கிட்ட எவ்வளவு விடயங்களை பற்றி பேச நினைத்து வந்தேன் தெரியுமா? ஆனா, அது எல்லாம்… பரவாயில்லை அதை விடுங்க. நான் உங்க கிட்ட இந்த விடயத்தை பற்றி ஆரம்பத்தில் சொல்லாமல் விட்டது தப்பு தான். ஐ யம் சாரி கார்த்திக்” ராகினி படபடவென தன் மனதிற்குள் இருந்த விடயங்களை எல்லாம் அவன் முன்னால் கொட்டி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விட கார்த்திக்கோ அவளது பேச்சில் வாயடைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.

ராகினி அந்த அறையில் இருந்து வெளியேறி சென்று அந்த அலுவலகத்தின் பக்கப்புறமாக இருக்கும் தோட்டப் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டு தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சிறிது நேரம் கழித்து தன்னருகில் யாரோ வந்து அமர்ந்து கொண்டதைப் போல இருக்கவே மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் கார்த்திக்கை அங்கே பார்த்ததும் சட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஓஹோ, மேடம் இந்தளவிற்கு எல்லாம் கோபம் காட்டுவீங்களா?”

“நீங்க இரண்டு வாரம் என் கூட பேசாமல் என்னை கஷ்டப்பட வைத்தீங்க தானே? அதற்கு இந்தளவிற்கு சரி கோபம் காட்டலேன்னா எப்படி? ஆனாலும் என்ன பண்ணுறது, மானங் கெட்ட மனது ஐந்து நிமிடம் கூட கோபத்தை தாக்குப் பிடிக்காது” ராகினியின் பேச்சில் கார்த்திக் வாய் விட்டு சிரிக்க,

அவனை கோபமாக திரும்பி பார்த்தவள், “இப்போ என்ன நடந்ததுன்னு இவ்வளவு சிரிக்குறீங்க?” அதே கோபத்துடன் அவனைப் பார்த்து வினவினாள்.

“இல்லை, நீ கோபத்தில் உண்மையை எல்லாம் சட்டுன்னு ஒத்துக்கிறியே. அது தான்…”

“என்ன நக்கலா?”

“அப்படி இல்லை ம்மா ராகினி”

“இந்த இரண்டு வாரம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு தெரியுமா? ஒரே வீட்டில் ஒன்றாக இருந்து கொண்டு நீங்க என் கூட பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு போகும் போது எனக்கு… எனக்கு…” தான் கூற வார்த்தைகளை முழுமையாக கூறி முடிப்பதற்குள் ராகினியின் கண்கள் கண்ணீரை சிந்த,

“அச்சோ ராகினி, என்ன இது? முதலில் அழுவதை நிறுத்து ப்ளீஸ்” கார்த்திக் கெஞ்சலாக அவளைப் பார்த்து கூற அப்போதும் அவளது கண்கள் கண்ணீரை சிந்திக் கொண்டு தான் இருந்தது.

“ராகினி” சிறு கண்டிப்புடன் அவளது முகத்தை தன் புறமாக திருப்பியவன் அவளது கண்களைத் துடைத்து விட, அவளோ அவனது கையை தனது கன்னங்களோடு அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“ஐ யம் சாரி கார்த்திக். நான் உங்களை காயப்படுத்தி பார்க்கணும்னு எதுவும் பண்ணல. நான்…”

“நீ என்னைக் காயப்படுத்தி பார்க்க மாட்டேன்னு எனக்குத் தெரியும் ராகினி. நீ என் கிட்ட எதுவும் சொல்லலேன்னு வருத்தம் அவ்வளவு தான். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்தும் எனக்கு மட்டும் எதுவுமே தெரியாது என்கிற வருத்தம். அதுவும் என் ராகினி என் கிட்ட எதுவும் சொல்லலேன்னு வருத்தம். அதோடு காதல் வந்த…க்கும், ஆனாலும் நானும் கொஞ்சம் சின்னப்பிள்ளை தனமாக நடந்துகிட்டேன் இல்லையா? நீயும் என்னை மன்னிச்சுடு சரியா?”

“நிஜமாகவா? இது ஒண்ணும் கனவு இல்லை தானே?” ராகினியின் கேள்வியில் சட்டென்று அவளது கையில் கிள்ளி வைத்தவன்,

அவள் வலியால் கத்த, “பார்த்தியா வலிக்குது. அப்போ இது நிஜம் தானே?” என்று வினவ,

அவனது தோளில் செல்லமாக தட்டியவள், “அது சரி, இரண்டு வாரமாக வராத ஞானம் இன்னைக்கு சட்டுன்னு எப்படி வந்தது?” அவன் தன்னருகே வந்து அமர்ந்து கொண்ட நொடி முதல் கேட்க நினைத்திருந்த கேள்வியை இப்போது அவனிடம் கேட்டிருந்தாள்.

“அதெல்லாம் ஒரு வாரமாக நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன். நீ என் கிட்ட பேச ட்ரை பண்ணது, நான் ஆபிஸில் எங்கே போனாலும் அப்படியே என் பின்னாலேயே சுற்றி சுற்றி வந்தது, பைலை பார்க்க சொன்னால் ஓரக்கண்ணால் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது இப்படி எல்லாம் எனக்குத் தெரியும். அதற்கு மேலேயும் தெரியும்”

“அடப்பாவி, அப்போ எல்லாம் தெரிந்தும் வேணும்னே என்னை வெறுப்பேற்றுனீங்களா?”

“இந்த மாதிரி தப்பு இன்னொரு வாட்டி பண்ணக்கூடாது இல்லையா? அதற்காகத்தான்”

“ஆனாலும் இதெல்லாம் ரொம்ப தப்புங்க”

“இதற்கே இப்படி சொன்னா எப்படி? இன்னும் இரண்டு வாரம் இதை இப்படியே கொண்டு போகலாம்னு தான் ஆரம்பத்தில் நினைத்தேன், ஆனா நீ ஃபீல் பண்ணுறதைப் பார்த்ததும் மனது கேட்கல”

“ஏன் நான் ஃபீல் பண்ணக்கூடாதுன்னும் உங்க பொறுப்பு, கடமை இருக்கும் சட்டத்தில் இருக்கோ?” இத்தனை நாட்களாக தன் மனதிற்குள் கார்த்திக்கின் மேல் என்னென்ன கேள்விகள் கேட்க இருந்ததோ அது அனைத்தையும் மெல்ல மெல்ல ராகினி கேட்கத் தொடங்க அவனோ அந்த கேள்விகளை எல்லாம் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிப் போயிருந்தான்.

“ராகினி நீ ஒண்ணு பண்ணு. என் கிட்ட என்னென்ன கேள்விகள் கேட்க நினைக்கிறாயோ அதை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி வை. நான் ஆபிஸ் வேலை முடிந்து, நைட் அதை எல்லாம் பார்த்து விட்டு உனக்கு பதில் சொல்லுறேன். சரியா?” கார்த்திக்கின் கேள்வியில் தன் வாயை மூடி கொண்டு சிரித்தவள்,

“பரவாயில்லை. இந்த கேள்வி கணக்கு விவகாரத்தை இன்னும் இரண்டு, மூணு நாள் கழித்து வைத்துக் கொள்ளுறேன். இப்போ பிழைத்துப் போங்க” இன்னும் சில மணி நேரத்தில் தன் வாழ்க்கையே வேறு ஒரு பாதைக்கு மாறப் போவது தெரியாமல் சந்தோஷமாக கார்த்திக்கோடு இணைந்து பேசி சிரித்தபடி தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.

அன்றைய நாளுக்குரிய வேலைகள் எல்லாம் முடிந்ததும் கார்த்திக் தங்கள் வீட்டுக்கு செல்வதற்காக நேரத்திற்கே புறப்பட்டு விட, இதுவரை இருந்த எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது என்ற திருப்தியோடு ராகினியும் நிம்மதியாக அவனோடு இணைந்து புறப்பட்டு சென்றாள்.

எப்போதும் சற்று வேகமாக தன் காரை செலுத்தும் கார்த்திக் இன்று மிதமான வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு இருக்க சிறு புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ராகினி, “உங்களுக்கு காலேஜ் படிக்கும் நேரம் ஒரு ஆக்சிடென்ட் ஆனது தானே கார்த்திக்?” என்று கேட்க,

அவளை ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தவன், “உனக்கும் அந்த விஷயம் தெரியுமா? யாரு அம்மா சொன்னாங்களா? இல்லை துளசி சொன்னாளா?” என்று கேட்டான்.

“அது இருக்கட்டும் கார்த்திக். உங்களை யாரு அந்த ஆக்சிடென்ட் ஆன நேரம் காப்பாற்றுனாங்க? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“ஹ்ம்ம்ம்ம்ம், சரியாக ஞாபகம் இல்லையே. யாரோ ஒரு பொண்ணு தான் கூட நின்னா. அவ முகம், குரல் எதுவும் ஞாபகம் இல்லை. ஆனா அந்த பொண்ணை மறுபடியும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தாங்க்ஸ் சொல்லணும், ஏன்னா அன்னைக்கு அந்த பொண்ணு மட்டும் சரியான நேரத்திற்கு வரலேன்னா இன்னைக்கு நான் இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருந்து இருப்பேனான்னு கூட தெரியலை”

“அப்படியா? வரட்டும், வரட்டும் பார்க்கலாம். அது சரி நீங்க தான் யாரையும் காதலித்தது இல்லைன்னு சொன்னீங்க, ஆனா உங்களை யாராவது காதலித்து இருப்பாங்களே? அப்படி யாராவது இருக்காங்களா?”

“காதலா? என்னையா? நீ நல்லா காமெடி பண்ணுற ராகினி. பொண்ணுங்க கூட நல்லா நட்பாக பழகுற பசங்களையே நிறைய பொண்ணுங்களுக்கு பிடிக்காமல் போய் இருக்கு, இதில் பொண்ணுங்க கூட சரியாகவே நான் பேசியது இல்லை. அப்படி இருக்கும் போது காதல் எல்லாம் சாத்தியமே இல்லை”

“அது எப்படி நீங்க சொல்லலாம்? ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் கூட உங்களை யாராவது விரும்பி இருக்கலாம் இல்லையா?”

“ஹ்ம்ம்ம்ம்ம், இருக்கலாம். ஆனால் அது தான் எனக்குத் தெரியாதே”

“அப்படி யாரும்…”

“அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எப்போ பார்த்தாலும் நீ தானே இந்த கேள்வியை என் கிட்ட கேட்குற. இப்போ நான் உன் கிட்ட கேட்கிறேன் நீ பதில் சொல்லு. நீ யாரையாவது காதலித்து இருக்கியா?” கார்த்திக்கின் கேள்வியில் கண்களில் குறும்பு கூத்தாட அவனைத் திரும்பிப் பார்த்தவள் தன் தலையை ஆமோதிப்பாக அசைக்க அவனோ சட்டென்று பிரேக்கை அழுத்தி ஓடிக் கொண்டிருந்த வாகனத்தை துயில் கொள்ளச் செய்திருந்தான்.

“ராகினி! நீ நிஜமாகத் தான் சொல்லுறியா?” கார்த்திக் இன்னமும் ராகினி சொன்ன விடயத்தை நம்ப முடியாமல் அவளைப் பார்த்து வினவ,

“ஆமா கார்த்திக் என் வாழ்க்கையில் நான் ஒருத்தரை மட்டும் தான் காதலித்தேன், அவரு தான் எனக்கு எல்லாமே. அவரை நான் ஒன்று, இரண்டு நாட்களாக இல்லை, பத்து வருடங்களாக காதலிக்கிறேன்” என்று கூறியவள் அவனது முக பாவனைகளைப் பார்க்கும் ஆவலுடன் அவனது முகத்தை திரும்பிப் பார்த்தாள்.

எப்போதும் போல இன்றும் அவனது முகத்திலிருந்து எந்தவொரு உணர்வையும் கண்டு கொள்ள முடியாமல் குழம்பிப் போனவள், “கார்த்திக், அவங்க யாருன்னு கேட்க மாட்டீங்களா?” என்று கேட்க,

சிறு புன்னகையுடன் அவளைத் திரும்பி பார்த்தவன், “அது நான் தான்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும் ராகினி” என்றவாறே அவளை அடுத்த அதிர்ச்சியை நோக்கித் தள்ளியிருந்தான்.

“கார்த்திக்”

“நீ என்னை ரொம்ப நாளாக பின் தொடர்ந்து வந்தது எனக்குத் தெரியும், ஆனா பத்து வருடங்களாக தொடர்ந்து வந்த விடயம் இன்னைக்கு தான் தெரியும். உனக்கு ஞாபகம் இருக்கோ தெரியலை. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அடுத்த நாளே நான் உன் கிட்ட ஒரு விடயம் கேட்டேன். இதற்கு முதல் நாம் எப்போதாவது சந்தித்து இருக்கோமா? இல்லையா? என்று நான் உன் கிட்ட கேட்டேன். அப்போ நீ எந்த பதிலும் சொல்லல. எனக்கும் சரியா ஞாபகம் வரல.

நீ தென்காசிக்கு போய் அடுத்த நாள் நான் அப்பாவோட ஆபிஸ் ரூமில் ஒரு ஃபைல் தேடும் போது துளசி பர்த்டே பங்ஷன் ஒன்றில் நீ நிற்பது போல் ஒரு போட்டோ இருந்ததை அந்த இடத்தில் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் ஒரு டீலிங் விஷயமாக டெல்லி வரைக்கும் போயிருந்தேன், அதனால்தான் மேடம் தைரியமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தீங்க. அந்த போட்டோவை பார்த்ததற்கு அப்புறம் தான் நான் உன்னை எங்க வீட்டில் இரண்டு, மூணு தரம் துளசி கூட பார்த்த ஞாபகம் வந்தது. அப்போ தான் நீ என்னை பாலோ பண்ணி வந்து இருக்கேன்னு விஷயமும் தெரிய வந்தது.

அந்த போட்டோ எடுத்து கிட்டத்தட்ட நாலு வருஷம் இருக்கும். நான் என்னவோ அப்போதுதான் என்னை உனக்குத் தெரியும்னு நினைத்து இருந்தேன், ஆனா இப்போ நீ சொல்லும் போது தான் எனக்கே தெரியாத பல விடயங்கள் இருக்கும் போல இருக்கு. நீ தென்காசியில் இருந்து வந்ததும் இதைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக உன்கிட்ட பேச்சுக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்ன்னு இருந்தேன், ஆனா இடையில் என்னென்னவோ ஆகிடுச்சு. அது பரவாயில்லை இப்போ சொல்லு, என்னை, அதாவது இந்த சாமியாரை எப்போ இருந்து நீ காதலிக்க ஆரம்பித்த?” கார்த்திக்கின் கேள்வியில் இத்தனை வருடங்களாக தன் மனதிற்குள் அடைத்து வைத்திருந்த மொத்த ஆதங்கமும் கேவலாக மாற,

“கார்த்திக்” என்றவாறே அவனைத் தாவி அணைத்துக் கொண்டவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க அவனோ சிறு புன்னகையுடன் அவளது முதுகை ஆதரவாக தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான்.

அவள் அழுது முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தவன் அவளது அழுகை முற்றாக நின்றதும் காரில் இருந்து இறங்கி நின்று அவளையும் வெளியே இறங்கி வரச் செய்து விட்டு சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தின் நிழலின் கீழ் சென்று அமர்ந்து கொண்டான்.

“இப்போ சொல்லு ராகினி. இத்தனை நாட்களாக என்னென்ன விடயங்களை எல்லாம் சொல்லக் காத்திருந்தாயோ இப்போ சொல்லு. கல்யாணம் ஆன புதிதில் நீ இதைப் பற்றி சொல்லி இருந்தால் அந்த நேரத்தில் நான் அதை எல்லாம் கேட்டு இருப்பேனோ தெரியாது, ஆனா இப்போ நீ என்ன சொல்லப் போறேன்னு ஆவலாக காத்துட்டு இருக்கேன். ஏன்னா நீ என்னைக் காதலிப்பது போல நானும் உன்னை காதலிக்கிறேன் ராகினி.

இது எப்போ, எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. எனக்காக நீ ஒவ்வொரு விடயத்தையும் ஆர்வம் எடுத்து செய்யுறதைப் பார்த்து உன் பக்கம் நான் சாய்ந்தேனா, இல்லை என் சந்தோஷத்திற்காக எதுவுமே தெரியாத இடத்திற்கு எல்லாம் போய் வந்தியே அதைப் பார்த்து உன்னை விரும்ப ஆரம்பித்தேனான்னு எனக்குத் தெரியலை, ஆனால் ஒண்ணு மட்டும் உண்மை ராகினி. நான் உன்னை என் மனதார நேசிக்கிறேன் ராகினி.

இந்த விடயத்தை நான் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லக் கூடும்ன்னு நினைத்தும் பார்த்ததில்லை. ஒரு வேளை நீயாகவே எல்லா விடயங்களையும் சொல்லி அதற்கு அப்புறம் நான் இந்த விடயத்தை உன் கிட்ட சொன்னால் அது உன் காதலுக்கு வேறு வழி இல்லாமல் நான் தர்ற பதில் மாதிரி ஆகி விடும். அப்படி நடக்க நான் விரும்பல.அதனால் தான் நீ நடந்த விடயங்களை பற்றி எல்லாம் சொல்வதற்கு முதலே நான் என் மனதில் இருக்கும் விடயத்தை சொல்லி விட்டேன். ஐ லவ் யூ சோ மச் ராகினி.

நீ ஊரில் இருந்து வந்த பிறகு நான் சரியாக உன் கூட பேசாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம் தான். ஆதித்யா, அஞ்சலியை பற்றி சொல்லாதது ஒரு புறம் கோபமாக இருந்தாலும், முதன் முதலாக உன்னைக் காதலோடு நெருங்க எனக்கு ஒரு தயக்கம், ஆனால் இந்த தயக்கம் இனி இருக்காது. ஏன்னா நீ கவலையோடு நம்ம ஆபிஸ் ரூமை விட்டு வெளியே போனதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியல. அப்படி இருக்கும் போது உன்னை நான் இழப்பேனா சொல்லு? ” கார்த்திக் ராகினியின் கைகள் இரண்டையும் தன் கைகளுக்குள் சிறைப் பிடித்து கொண்டு அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டபடி தன் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றி அவளிடம் கூறக் கூற அவளோ நடப்பது எல்லாம் நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தாள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!