உன்னாலே – 19 (Final)

eiAPZYF37537-ad2f1722

தான் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தபடியே ராகினி நின்று கொண்டிருந்த வேளை அந்த அறையின் கதவு திறக்கப்பட, அந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள் அங்கே பல நாட்களாக சவரம் செய்யப்படாத முகத்துடன், கண்கள் இரண்டையும் கருவளையம் சூழ, ஓய்ந்து போன தோற்றத்துடன் நின்று கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்ததும் மற்றைய எல்லா சிந்தனைகளும் பின்நோக்கி செல்ல அவனையே தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றாள்.

கார்த்திக்கும் அதே மனநிலையுடன் தான் நின்று கொண்டிருந்ததால் என்னவோ அவளைப் பார்த்த அடுத்த கணமே, “ராகினி” என்றவாறே கூச்சலுடன் அவளைத் தாவி அணைத்துக் கொள்ள அவனது அணைப்பில் தடுமாறிப் போனவள் அவசரமாக தன்னருகில் இருந்த சுவற்றில் தன் கையை வைத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

கார்த்திக்கின் அணைப்பின் இறுக்கமே அவன் தன்னை எந்தளவிற்கு நினைத்து ஏங்கிப் போய் இருந்தான் என்பதை அவளுக்கு உணர்த்த கண்கள் கலங்க அவனை அணைத்துக் கொண்டவள், “கார்த்திக்” உள்வாங்கிப் போன குரலில் அழைக்க,

அவளது குரல் கேட்டதுமே தன் அணைப்பை விடுவித்தவன், “ராகினி” என்றவாறே அவளது முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

அவளது முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்ததும் அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி அழைத்துச் சென்று அருகில் இருந்த கட்டிலில் அமரச் செய்தவன் அவள் முன்னால் அமர்ந்து கொண்டு அவளது கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“கார்த்திக் என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி இருக்கீங்க?” கார்த்திக்கின் சவரம் செய்யப்படாத முகத்தையும், கருவளையம் சூழ்ந்திருந்த கண்களையும் சுட்டிக் காட்டியபடியே ராகினி கேட்க,

அவளைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டவன், “உனக்கு ஆக்சிடென்ட் ஆனதிலிருந்து எனக்கு எதுவுமே ஓடல ராகினி. இந்த ஆறு மாதம் ஏதோ முந்நூறு யுகம் மாதிரி இருந்தது. நர்ஸ் வந்து நீ கண் முழிச்சுட்டன்னு சொன்னதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா? எங்கே எனக்கு நீ கொடுத்த சந்தோஷத்தை நீ முழுமையாக எனக்குத் தராமல் எடுத்துட்டுப் போய்டுவியோன்னு பயந்துட்டேன்” என்று கூற,

அவனது தலையை மெல்லக் கலைத்து விட்டவள், “மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக், நீங்களாக என்னைப் போகச் சொன்னாலும் நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்” என்று கூற அவளது கூற்றில் கார்த்திக்கும் மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

“அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனதற்கு அப்புறம் என்ன ஆச்சு கார்த்திக்?” ராகினியின் கேள்வியில் அன்றைய விபத்தைப் பற்றி எண்ணிப் பார்த்துக் கொண்டவன் தன் கண்களை மூடிக் கொள்ள, அவனது முகத்தில் தெரிந்த மாற்றங்களே அவனது வலியை அவளுக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

“கார்த்திக்”

“இல்லை ராகினி. எனக்கு எதுவும் இல்லை”

“அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனதற்கு அப்புறம் உன்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணோம். டாக்டர் நீ மயக்கத்தில் இருக்க எப்போ கண்ணு முழிப்பேன்னு சொல்லத் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அதற்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் நான் உன் கிட்ட வந்து உட்கார்ந்து நம்ம வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயங்களாக பேசிட்டே இருப்பேன். நம்ம கல்யாணம் நடந்த அன்னையிலிருந்து அந்த…அந்த ஆக்சிடென்ட் ஆனது வரை ஒவ்வொரு விடயங்களாக சொல்லிட்டே இருப்பேன். நீ என் கிட்ட சொன்ன விடயங்கள், துளசியும், ஆதியும் உன்னைப் பற்றி சொன்ன விடயங்கள் அதை எல்லாம் வைத்து நீ என்னை எந்தளவிற்கு நேசித்தேன்னு எல்லாவற்றையும் நான் உன்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். அந்த விடயங்களைப் பற்றி பேசும் போது சரி நீ எழுந்து என் கூட பேசமாட்டியான்னு ரொம்ப தவித்துப் போய் இருந்தேன் ராகினி. நீ இல்லாமல் எல்லாமே முடிந்து போனது போல இருந்தது” இறுதியாக சொன்ன வார்த்தைகளை சொல்லும் போது கார்த்திக்கின் குரல் தழுதழுக்க,

அவனது கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தவள், “எனக்கு நினைவு இருக்கு கார்த்திக். நான் கண் முழித்த போது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நடந்த எல்லா விடயங்களும் எனக்கு ரொம்ப நல்லா ஒரு விடயம் மாறாமல் நினைவு வந்தது, எதனால் எனக்கு இந்த விடயங்கள் மட்டும் நினைவில் வரணும்னு அப்போ நான் யோசித்துப் பார்த்தேன், ஆனா அதற்கான காரணம் இப்போ தான் புரியுது. நீங்க ஒவ்வொரு விடயங்களாக தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்ததால் தான் எனக்கு அந்த விடயங்கள் மட்டுமே திரும்ப திரும்ப நினைவு வந்து இருக்கு போல” என்று கூற கார்த்திக் அவளை வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனது பார்வையில் தன் பார்வையை வேறு புறமாக திருப்பிக் கொண்டவள், “அம்மா, அப்பா, அத்தை, மாமா, துளசி எல்லாம் எங்கே?” என்று கேட்க,

அவளது முகத்தை கடிகாரத்தின் புறமாக திருப்பியவன், “இப்போ நேரம் நள்ளிரவு 2 மணி. அவங்க எல்லாம் வீட்டில் இருப்பாங்க. காலையில் வந்துடுவாங்க” என்று கூற,

அவளோ, “அப்போ நீங்க இங்கே? இந்த நேரத்தில்?” கேள்வியாக அவனை நோக்கினாள்.

“இந்த ஆறு மாதமும் நீ இங்கே இருக்கும் போது நான் மட்டும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியுமா சொல்லு?”

“கார்த்திக்”

“எமோஷனல் எல்லாம் வேண்டாம் ராகினி. இந்த ஆறு மாதமே பல வகையான உணர்வுகளை எல்லாம் எனக்கு சொல்லித் தந்து விட்டது, இதற்கு மேலும் நம்ம வாழ்க்கையில் கஷ்டம் இருக்கக் கூடாது” என்றவாறே கார்த்திக் எழுந்து நின்று ராகினியைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள சரியாக அந்த நேரம் பார்த்து ராகினியைப் பரிசோதிக்க வைத்தியரும் அங்கே வந்து சேர்ந்தார்.

சிறிது நேரம் ராகினியைப் பரிசோதித்துப் பார்த்த வைத்தியர் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ராகினியை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று கூறி விட்டு சென்று விட அதற்கு பின்னர் வந்த நேரம் முழுவதும் கார்த்திக் மற்றும் ராகினிக்கு தங்கள் வாழ்க்கை நாட்களைப் பற்றி பேசும் பசுமையான நேரங்களாகவே கழிந்து சென்றது.

கார்த்திக்கின் தோள் சாய்ந்து தான் அவனைக் காதலித்த விதத்தை ஒன்று விடாமல் அவனிடம் சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்ததைப் போலவே இப்போது அவன் தோள் சாய்ந்து அவள் தன் கதை பேச அவளது மனம் கவர்ந்த மனாளனும் புன்னகை முகமாக அவளது பேச்சைக் கேட்டு கொண்டு அமர்ந்திருந்தான்.

எவ்வளவு நேரமாக அவர்கள் இருவரும் கதை பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவாறே உறங்கிப் போனார்களோ அவர்களுக்கே தெரியாது.

காலையில் துளசி வந்து அவர்கள் இருவரையும் தட்டி எழுப்பும் போது தான் தாங்கள் அமர்ந்திருந்த நிலையிலேயே உறங்கி இருந்ததைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அதன் பிறகு பெரியவர்களின் உபசரிப்பையும், தன் அண்ணன்மாரின் பாசத்தையும் பார்த்து ராகினி திக்குமுக்காடிப் போக கார்த்திக் தன் கை வளைவிலிருந்து அவளை விலக்கவே இல்லை.

தங்கள் திருமணம் நடந்த புதிதில் ராகினியைப் பார்த்தாலே விலகி விலகிச் சென்றவன் இப்போது அவளை விட்டு ஒரு நொடி கூட பிரிய மனமில்லாமல் இருப்பது போல் இருக்க அதைக் தவிர வேறு எதுவும் சந்தோஷம் தரக்கூடிய விடயம் ராகினியின் வாழ்வில் இருக்கக்கூடுமா? என்பது அவளுக்கே தெரியாது.

இரண்டு, மூன்று நாட்களின் பின்னர் ராகினி தன் சிகிச்சைகளை முடித்து விட்டு தங்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்ல தயாராகி கொண்டு இருக்க, எப்போதும் போல அன்றும் கார்த்திக் அவளது அருகிலேயே நின்று அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக் கொண்டு நின்றான்.

ராகினி கார்த்திக்குடன் தங்கள் வீட்டிற்குள் உள்நுழையும் வேளை தங்கள் திருமணத்திற்கு பின்னர் முதன்முதலாக அவனோடு அந்த வீட்டில் தன் வலது காலை வைத்து நுழையும் போது என்னமாதிரியான ஒரு பூரிப்பான மனநிலையுடன் உள்நுழைந்தாலோ இப்போதும் அதே மனநிலையுடன் இருப்பதைப் போலவே உணர்ந்தாள்.

கார்த்திக் ராகினியை தங்கள் அறையில் ஓய்வெடுக்கச் செய்து விட்டு மற்றைய வேலைகளைப் பார்க்கச் சென்று விட, பகலுணவை முடித்து விட்டு சிறிது நேரம் தங்கள் அறையையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள் தன்னை அறியாமலேயே உறக்கத்தை தழுவி இருந்தாள்.

ராகினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை திடீரென ஏதோ ஒரு சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து பார்க்க அந்த இடம் முழுவதுமே இருளால் நிறைந்து போய் இருந்தது.

“அச்சச்சோ! அதற்குள்ள இருட்டிடுச்சா? யாரும் வந்து எழுப்பவே இல்லையே. எவ்வளவு நேரமாக தூங்கிட்டே இருக்கேனோ தெரியல” ராகினி குழப்பத்துடன் தன் பார்வையை அந்த அறையைச் சுற்றி சுழல விட திடீரென அந்த அறை முழுவதும் மங்கலான வெளிச்சத்துடன் கூடிய அலங்கார விளக்குகள் ஒளிர ஆரம்பித்தது.

அந்த விளக்கின் வெளிச்சத்தில் ராகினி மெல்ல திரும்பி பார்க்க, அந்த அறையின் பால்கனியில் ஒரு வட்டவடிவிலான மேஜையும், அதன் நடுவே ஒரு மெழுகுவர்த்தியும் எரிந்து கொண்டிருந்தது.

அது மட்டுமில்லாமல் அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அந்த மேஜை வரை செல்லும் வழி முழுவதும் ரோஜா இதழ்கள் பரவப்பட்டிருக்க அதைப் பார்த்ததுமே தன் விழி விரித்த ராகினி தன் வியப்பு மாறாமல் எழுந்து நிற்க, சட்டென்று இரு கரங்கள் அவளது கண்களை மூடிக் கொண்டது.

அந்த கையின் ஸ்பரிசத்தை வைத்தே அது யார் என்பது அவளுக்கு தெரிந்து விட சிறு புன்னகையுடன் அந்த கையை பிடித்துக் கொண்டவள், “கார்த்திக் என்ன இது விளையாட்டு?” என்று கேட்க,

அவள் காதோரம் குனிந்து நின்றவன், “என்னுடைய அன்பான மனைவிக்கு இந்த அப்பாவிக் கணவனால் முடிந்த சின்ன சர்ப்ரைஸ்” என்று விட்டு அவளை அந்த ரோஜா இதழ்கள் பரவப்பட்டிருந்த வழி வழியாக அழைத்துக் கொண்டு சென்றான்.

சிறிது நேரம் அவளது கண்களில் இருந்து தன் கையை விலக்காமலேயே நின்று கொண்டிருந்தவன் ராகினி அவனது கையை விலக்கப் பார்க்க அப்போதும் தன் கையை எடுக்கவில்லை.

“அய்யோ கார்த்திக், என்ன விளையாட்டு இது? கையை எடுங்கபா” ராகினி சிறிது கெஞ்சலாக கார்த்திக்கிடம் கூற, சிரித்துக் கொண்டே அவளது கண்களில் இருந்து தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டு அவள் முன்னால் வந்து நின்றவன் ஒரு பார்சலை அவள் புறமாக நீட்டினான்.

“கார்த்திக், இது நீங்க தானா? இன்னைக்கு இவ்வளவு சர்ப்ரைஸ் பண்ணுறீங்க. ஒருவேளை இது கனவாக இருக்குமோ?” ராகினி வேண்டுமென்றே தன் சிரிப்பை மறைத்துக் கொண்டபடி யோசிப்பது போன்ற பாவனையோடு கார்த்திக்கைப் பார்த்து வினவ,

“உனக்கு சந்தேகமாக இருந்தால் தீர்த்து வைத்து விடுவோம்” என்றவாறே அவளை நெருங்கி வந்து நின்றவன் அவள் எதிர்பாராத நேரம் சட்டென்று அவளது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு விலக அவளோ அவன் முத்தமிட்ட தன் கன்னத்தை பிடித்து கொண்டு அதிர்ச்சியாகி நின்றாள்.

“என்னாச்சு ராகினி மேடம்? இப்போவாச்சும் நம்புறீங்களா?” கார்த்திக்கின் கேள்வியில் ராகினி கனவில் இருப்பவளைப் போல தலையசைக்க அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தபடியே தன் கையிலிருந்த பார்சலை அவளது கையில் வைத்தவன் அதைத் திறக்கும் படி ஜாடை காட்டினான்.

“என்ன இது கார்த்திக்?”

“பிரிச்சுப் பாரும்மா”

“என்னன்னு சொன்னா என்னவாம்?” அவனைப் பார்த்து கோபப்படுவது போல போலியாக நடித்தவள் ஆர்வமாக அவன் கொடுத்த கவரைப் பிரித்துப் பார்த்தாள்.

அந்த கவரின் உள்ளே பெரிதாக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இருக்க அதை எடுத்துப் பார்த்தவள் அதைப் பார்த்த அடுத்த கணமே கண்கள் கலங்க கார்த்திக்கைத் திரும்பி பார்க்க அவனோ அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தினான்.

“கார்த்திக்! இ..இது?”

“ரிலாக்ஸ் ராகினி, ரிலாக்ஸ்”

“இந்த போட்டோ எப்படி?” ராகினி கார்த்திக்கை கேள்வியாக நோக்க அவள் பின்னால் வந்து நின்று அந்த புகைப்படத்தை அவள் கையோடு சேர்த்து வைத்தபடியே தன் கையால் பிடித்துக் கொண்டவன்,

“இது நம்ம இரண்டு பேரும் ஆதித்யா வீட்டுக்கு முதல் தடவை போகும் போது நீ காரில் இருந்தபடியே தூங்கிட்ட. அப்போ ஏதோ ஒரு விளையாட்டுக்காக உன்னை கலாய்க்க நினைத்து தான் நீ தூங்குற மாதிரி போட்டோ எடுக்கப்பார்த்தேன், ஆனா நான் போட்டோ எடுக்கும் நேரம் பார்த்து சரியாக நீ என் தோளில் சாய்ந்துட்ட. இது ஒரு ஷாக் மூமெண்டில் எடுத்த போட்டோ தான். உனக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு எல்லா போட்டோவையும் பார்த்துட்டு இருந்த நேரம் இந்த போட்டோ தான் வந்து நின்னுச்சு. இது உனக்கு தெரியாது இல்லையா? அது தான் சர்ப்ரைஸ் கிஃப்டா இதையே கொடுக்கலாம்னு நினைத்தேன். உனக்குப் பிடித்து இருக்கா?” அவள் காதோரம் குனிந்து கேட்க அவன் மூச்சுக்காற்றின் சிலிர்ப்பில் ராகினி தன் கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கி தங்கள் முன்னால் இருந்த மேஜை மீது வைத்த கார்த்திக் அவளது தோள் பற்றி தன் புறமாக திரும்பி நிற்கச் செய்து அவள் முகத்தை நிமிர்த்த, அவளோ வெட்கம் தாளாமல் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

“ராகினி”

“…..”

“ராகினி”

“…….”

“என்ன ராகினி அப்படியே தூங்கிட்டியா?”

“கார்த்திக்” சிறிது கண்டிப்பான குரலில் அவனது தோளில் தட்டியவள்,

“என்னால இப்ப கூட இதெல்லாம் நம்பவே முடியல பா” எனவும்,

“அப்போ மறுபடியும்…” என்றவாறே கார்த்திக் அவளை நெருங்கப் போக சட்டென்று அவனைத் தள்ளி விட்டவள் அவனைப் பார்த்து தன் நாக்கை துருத்தி காட்ட அவளது செய்கையில் கார்த்திக் தன் தலையை கோதி விட்டபடியே அவளை நோக்கி நடந்து சென்றான்.

சிறிது நேரம் இருவருக்கும் இடையே அமைதியே நிலவ கார்த்திக்கை திரும்பி பார்த்த ராகினி, “நான் என் ஆக்சிடெண்டுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கான பதில் இப்போ வரைக்கும் எனக்கு கிடைக்கல. இன்னைக்காவது கிடைக்குமா?” வெகு நேரமாக தான் கேட்க நினைத்திருந்த கேள்வியை கேட்டு விட்டு ஆவலாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டு நிற்க,

புன்னகையுடன் அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து நிறுத்தியவன், “என்னடா கேள்வி பதில் இன்னும் ஆரம்பிக்கலேயேன்னு பார்த்தேன். இதோ ஆரம்பம் ஆகிடுச்சு” என்றவாறே அவளைப் பார்த்து சிரிக்க,

“கார்த்திக்” என்றவாறே அவனை முறைத்து பார்க்க முயன்றவள் முடியாமல் சிரித்துக் கொண்டு நின்றாள்.

“சரி சொல்லுங்கப்பா”

“சரி, சரி. சொல்லுறேன்”

“அன்னைக்கு நீ அஞ்சலி, ஆதித்யாவை சேர்த்து வைத்த பிறகு எனக்கு போன் பண்ணி ஆதித்யா வீட்டுக்கு வரச் சொன்ன. நானும் வந்தேன். அங்கே நீ எல்லா விடயங்களையும் சொன்ன பிறகு இது எல்லாம் என் கிட்ட சொல்லவே இல்லையேன்னு எனக்கு ரொம்ப கவலை ஆகிடுச்சு. அதற்கு அப்புறம் நீயும், அஞ்சலியும் வீட்டுக்கு உள்ளே போயிட்டீங்க. நானும், ஆதித்யாவும் வெளியே இருந்தோம். அப்போ தான் ஆதித்யா நடந்த எல்லா விடயங்களையும் சொன்னான். அந்த நேரத்தில் அவன் அவனோட வாழ்க்கையைப் பற்றி சில விடயங்கள், நீ சொன்ன சில விடயங்களைப் பற்றி எல்லாம் சொன்னான்”

“என்ன சொன்னாங்க?”

“அவங்க வாழ்க்கையில் பிரச்சினை வர்றதுக்கு முதன்மையான காரணமே எதிர்பார்ப்புகள் தான். எதிர்பார்ப்புகள் வாழ்க்கையில் இருக்கலாம், ஆனா வாழ்க்கையே எதிர்பார்ப்புகள் ஆகி விடக்கூடாது. அது மட்டுமில்லாமல் காதல் ஒன்றும் பண்டமாற்று வியாபாரம் இல்லைன்னு சொன்னான். அவன் அவனோட வாழ்க்கையை நினைத்து தான் இதெல்லாம் சொன்னான், ஆனா அந்த நேரம் இது எனக்கே சொன்னது போல இருந்தது.

நான் உன்னைப் பார்த்து விலகிப் போனதற்கு காரணமே உன்னோட எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது போனால் நீயும் என்னை விட்டு போய் விடுவியோன்னு ஒரு பயம் தான், அதே மாதிரி நான் அதிகமாக எதிர்பார்த்து அது நடக்காமல் போனால்? இதை எல்லாம் பார்த்து தான் நான் அவ்வளவு நாட்களாக தயங்கினேன். அதனால் தான் நான் என் மனதில் இருக்கும் குழப்பத்தை உன் கிட்ட சொல்லல. ஆனா கொஞ்ச நாள் போக போகத் தான் உன் காதலோட ஆழமும், நம்பிக்கையும் இந்த புத்திக்கு புரிந்தது. உன்னோட தைரியம், நீ எனக்காக என்னவெல்லாம் செய்தேன்னு நீ அன்னைக்கு சொன்ன போது எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல ராகினி. அப்போவே எனக்கு உன் மேல இருந்த கோபம் எல்லாம் சரியாகிடுச்சு, இருந்தாலும் ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்தது. அது எல்லாவற்றையும் மறந்து புதிதாக ஒரு வாழ்க்கையை நம்ம ஆரம்பிக்கலாம்னு நினைத்த நேரம் தான் அந்த ஆக்சிடென்ட்..”

“கார்த்திக்”

“இல்லை ராகினி. இதற்கு மேலேயும் மனதிற்குள் இருக்கும் விடயத்தை மறைத்து வைத்து இருப்பது சரியில்லை. நீ எனக்காக என்னவெல்லாம் செய்த, எப்படி எல்லாம் எனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விடயத்தையும் செய்தேன்னு நான் தெரிந்து கொண்ட போது சத்தியமாக சொல்லுறேன், மொத்தமாக விழுந்துட்டேன்.இப்போ சொல்லுறேன் ராகினி. நான் உன்னை காதலிக்கிறேன். என் மனதார நான் உன்னை காதலிக்கிறேன். பத்து வருடங்களுக்கு முதல் நடந்தது, மற்ற மற்ற விடயங்கள் எல்லாம் எனக்குத் தேவையில்லை. இப்போ சொல்லு ராகினி. நீ என்னைக் காதலிக்கிறாயா சொல்லு?”

“மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக், இப்போ மட்டுமில்ல இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நீங்க இதே கேள்வியை கேட்டாலும் என் பதில் ஒன்றே ஒன்று தான்.எஸ். எஸ். எஸ். ஐ லவ் யூ சோ மச் கார்த்திக்” என்றவாறே ராகினி அவனை தாவி அணைத்துக் கொள்ள கார்த்திக்கும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

உண்மையான காதல் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவரவர்களுக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தே ஆகும் என்ற ராகினியின் எண்ணம் இப்போது மெய்பட்டு இருந்தது.

இதற்கு முதல் கடந்து சென்ற பத்து வருடங்கள் போல இன்னும் பல நூறு வருடங்கள் சென்றாலும் கார்த்திக் மீதான ராகினியின் காதல் மாறப்போவதில்லை.

இன்று மட்டும் அல்ல இனி எப்போதும் கார்த்திக்கின் மேல் ராகினி கொண்ட காதல் அவளை மெய் மறக்க செய்து கொண்டே இருக்கும், அவர்கள் வாழ்விலும் சந்தோஷம் நிறைந்தே இருக்கும்.
**********முற்றும்**********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!