உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 10

அசோகனின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க இழையினியோ திக்பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்தாள்.

 

“என்னங்க ஆச்சு?”

 

“அப்பா என்ன இதெல்லாம்?”

 

“மாமா என்ன ஆச்சு உங்களுக்கு?”

 

“அப்பா நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளுங்கபா!” வளர்மதி, கதிரரசன், இளமாறன், கலைச்செல்வி என்று எல்லோரும் பதட்டத்தோடும், தவிப்போடும் அசோகனை சூழ்ந்து கொள்ள அவர் முகமோ கோபத்தில் இறுகிப் போய் இருந்தது.

 

“தாத்தா! ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்து கொள்ளலாம் இப்படி அவசரப்பட்டு கோபத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” கௌசிக் கெஞ்சலாக அசோகனைப் பார்த்து இரு கரமெடுத்து கும்பிட்டு கேட்க

 

 கோபமாக அவனை முறைத்து பார்த்தவர்

“இந்த கல்யாணம் இனிமேல் நடக்காது நீங்க எல்லோரும் இங்கே இருந்து போகலாம் எவ்வளவு பெரிய விஷயத்தை மூடி மறைத்து எங்களை எல்லாம் ஏமாற்றி இருக்கீங்க உங்களை எல்லாம் நம்பி என் பேத்தியை தர முடியாது மரியாதையாக இங்கே இருந்து போங்க இல்லைன்னா போலீஸைக் கூப்பிட்டு உங்களை விரட்டி அடிக்க வேண்டி வரும்” என்று கூற 

 

“அப்பா! ஏன்பா இப்படி பண்ணுறீங்க? தயவுசெய்து நான் சொல்ல வர்றதை கேளுங்கப்பா” கலைச்செல்வி கெஞ்சலாக அவரைப் பார்த்து கொண்டு நின்றார்.

 

“என்னங்க சும்மா உண்மையை மறைத்தோம் மறைத்தோம்ன்னு சொல்லுறீங்க! நாங்க எதையும் மறைக்கல” விஜயதேவியும் தன் பங்கிற்கு குரலை உயர்த்த

 

“ஓஹ்! அப்போ இவ்வளவு நேரமாக எதைப் பற்றி நீங்க எல்லோரும் ரகசியமாக பேசிட்டு இருந்தீங்க?” அசோகனின் கேள்வியில் அவர் சிறிது தடுமாறத் தொடங்கினார்.

 

“உங்களுக்கு எல்லாம் பத்து நிமிஷம் தான் நேரம் அதற்குள்ள உங்க பொருட்களை எல்லாம் எடுத்துட்டு இங்கே இருந்து போயிடுங்க இல்லைன்னா நடக்குறதே வேற!”

 

“அப்பா! ப்ளீஸ் இது நம்ம இழையினி வாழ்க்கை!”

 

“கலை! இதைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது நீ சும்மா இரு!” கலைச்செல்வியைப் பார்த்து சத்தம் போட்டவர்

 

இழையினியின் புறம் திரும்பி

“இழையினி மேடையில் இருந்து எழுந்திரு! எழுந்திரு!” கர்ஜனையாக சத்தம் போட அவளோ அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட நடுக்கத்துடன் எழுந்து  நின்றாள்.

 

சந்தோஷத்துடனும், கோலாகலமாகவும் ஆரம்பித்த திருமண நிகழ்வுகள் இப்போது எந்த சந்தோஷமுமின்றி பாதியிலேயே நின்று போயிருக்க அங்கிருந்த அனைவரும் கவலையோடு அசோகனையே பார்த்து கொண்டு நின்றனர்.

 

“மாமா என்ன ஆச்சு? இப்போதாவது சொல்லுங்க ப்ளீஸ்” இளமாறன் அசோகனின் முன்னால் வந்து நின்று கேட்க 

 

தன் நெஞ்சை நீவி விட்டபடியே இழையினியை ஒரு தடவை திரும்பி பார்த்துக் கொண்டவர்

“அவங்க நம்மளை ஏமாற்றி நம்ம இழையினியை கல்யாணம் பண்ணப் பார்த்தாங்க மாப்பிள்ளை” என்று கூறவும் சுற்றி நின்ற அனைவருக்குமோ பதட்டத்தில் நெஞ்சமெல்லாம்  படபடக்க ஆரம்பித்தது.

 

கௌசிக் தன்னை ஏமாற்ற கூடும் என்று இழையினி கனவில் கூட நினைத்திருக்கவில்லை அந்தளவிற்கு அவனை விரும்பியிருந்தாள், நேசித்திருந்தாள் அப்படியிருக்கையில் தனது தாத்தாவின் கூற்று அவளையும் நடுங்கிப் போகவே செய்தது.

 

“தாத்தா! என்ன சொல்லுறீங்க? கௌசிக் அப்படி பண்ணக் கூடியவர் இல்லை தாத்தா” இழையினி அசோகன் எதையோ தவறாகப் புரிந்து கொண்டு தான் இப்படி பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டு அவரை சமாதானப்படுத்தும் விதமாக கூற

 

 எச்சரிக்கும் வகையில் திரும்பி பார்த்தவர்

“உனக்கு என்ன தெரியும் அவனைப் பற்றி? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செய்து இருக்காங்க அதை அப்படியே விடச் சொல்லுறியா?” அதட்டலாக அவளைப் பார்த்து வினவினார்.

 

“ஏமாற்றிட்டாங்க ஏமாற்றிட்டாங்கன்னு சொல்லுறீங்களேப்பா! அப்படி என்ன ஏமாற்றுனாங்கப்பா? அவங்க இப்போ பணக்காரங்க இல்லைன்னு சொல்லலை அவ்வளவு தானே? அந்த ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டதற்கு இப்படி கல்யாணத்தையே நிறுத்தனுமா?” கலைச்செல்வி தன் மனக்குமுறல் தாளாமல் அசோகனைப் பார்த்து சத்தமிட அவர் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாக அசோகனைத் திரும்பி பார்த்தனர்.

 

“என்னங்க இது எல்லாம்? இந்த சின்ன காரணத்திற்காகவா கல்யாணமே வேண்டாம்னு அவங்களை எல்லாம் இங்கே இருந்து அனுப்புனீங்க? இது சரியில்லைங்க ரொம்ப பெரிய தப்பு!” வளர்மதி படபடப்புடன் தன் கணவனைப் பார்த்து கூறவும் 

 

தன் கையிலிருந்த தடியைக் கோபமாக தூக்கி போட்டவர்

“என்ன ஆளாளுக்கு ரொம்ப ஓவரா பேசுறீங்க? பரம்பரை பணக்காரங்க நம்ம வசதிக்கு தகுதியானவங்கன்னு தான் அவங்களோடு சம்பந்தம் வைக்கவே நான் ஒத்துக்கிட்டேன் ஆனா இப்போ அது உண்மை இல்லைன்னு தெரிந்ததற்கு அப்புறம் என் பேத்தியை நான் அனுப்பி வைக்கணுமா? பிறந்ததிலிருந்து ராணி மாதிரியும் ராஜா மாதிரியும் வளர்த்த பசங்க என் பேரப் பிள்ளைங்க! அவங்களை இப்படி கஷ்டப்படுற நம்ம வசதிக்கு கொஞ்சம் கூட பொருந்தாத இடத்தில் போய் வாழ நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை எல்லோரும் ரொம்ப அதிகமா பேசிட்டீங்க இதுவரைக்கும் பேசிய வரைக்கும் போதும் எல்லோரும் கிளம்புங்க சீக்கிரம் இங்கே இருந்து போகலாம்” கட்டளையாக, கண்டிப்பாக அதே நேரம் மிரட்டும் தொனியில் கூறி விட்டு சென்று விட அங்கிருந்த யாருக்குமே அதை மறுத்துப் பேச முடியவில்லை.

 

கண்களின் முன்னால் தன் கனவுகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஒரே நொடியில் அவற்றை எல்லாம் பறித்து கொண்ட விதியை குற்றம் சொல்லுவதா? அல்லது கோபத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்த தன் தாத்தாவை குறை சொல்லுவதா? என்று புரியாமல் சாவி கொடுத்த பொம்மை போல அங்கிருந்து தன் குடும்பத்தினருடன் புறப்பட்டுச் சென்றாள் இழையினி.

 

வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து கொண்டு நடந்த சம்பவங்களை எண்ணி வருந்தி கொண்டிருக்க இழையினி மாத்திரம் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.

 

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல எல்லோரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தாலும் முன்னர் இருந்தது போன்ற சந்தோஷமும், கலகலப்பும் அந்த செந்தமிழ் இல்லத்தில் இருந்து தொலை தூரம் தாண்டி சென்றிருந்தது.

 

தேன்மொழி மற்றும் மதியழகன் எவ்வளவோ முயன்றும் இழையினியை பழைய படி சிரித்த முகத்துடன் பார்க்க அவர்களால் முடியவில்லை.

 

வெளியே எங்கேயும் சென்றாலும் அடுத்தவர்களின் பரிதாபமான பார்வையும், சிலரின் ஏளனமான பேச்சுக்களும் அவளது ரணமான மனதை மேலும் மேலும் காயப்படுத்தியதே தவிர ஆறச் செய்யவில்லை.

 

ஒவ்வொரு நாளும் இழையினி தன் மனதிற்குள் படும் வேதனைகளை பார்த்து பார்த்து கலைச்செல்வி மிகவும் நொந்து போனார் அது அவளுக்கு புரிந்தாலும் அவரை ஆறுதல் படுத்தும் தைரியம் கூட அவளுக்கு இருக்கவில்லை.

 

இதற்கிடையில் இழையினி திருமணம் நின்று போய் மண்டபத்தில் இருந்து வந்த அடுத்த நொடி முதல் கௌசிக்கை பலமுறை தொடர்பு கொள்ள முனைந்தாள்.

 

ஆனால் அதற்கு பதில் கௌசிக்கின் தொலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த செய்தி தான்.

 

இத்தனை நாட்களாக பழகியதை அத்தனை எளிதில் அவன் மறந்திருக்க மாட்டான் தன்னை எப்படியாவது அவன் தொடர்பு கொள்ளுவான் என்ற எண்ணத்தோடு ஒரு மாதமாக காத்திருந்தவளுக்கு கண் முன்னால் கிடைத்த செய்தி உலகத்தையே இரண்டாகப் பிளந்தது போன்று இருந்தது.

 

அன்று வழக்கம் போல தேன்மொழி இழையினியின் மனதை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு ஷாப்பிங் செய்ய அழைத்துக் கொண்டு வந்திருக்க எப்போதும் போல ஈடுபாடே இல்லாமல் அங்கிருந்த ஆடைகளை எல்லாம் பார்த்து கொண்டு வந்தவள் தன் முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த கௌசிக்கின் விம்பத்தைப் பார்த்து விட்டு

“கௌசிக்!” கண்கள் கலங்க சட்டென்று தன் பின்னால் திரும்பி பார்த்தாள்.

 

அவனருகில் யாரோ ஒரு பெண் நின்று கொண்டு தன் கையில் இருந்த உடைகளைக் காட்டி கொண்டிருக்க அவனும் சிறு புன்னகையுடன் அந்த பெண்ணை பார்த்து கொண்டு நின்றான்.

 

மெல்ல மெல்ல அடியெடுத்து தடுமாற்றம் கொண்ட தன் கால்களை சமன் படுத்திக் கொண்டு அவன் முன்னால் வந்து நின்றவள்

“கௌசிக்!” தயக்கத்துடன் அவனை அழைக்க அவள் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் 

 

அவளைப் பார்த்ததுமே 

“இழை!” என்றவாறே அதிர்ச்சியாகி நின்றான்.

 

“என்னங்க யாரு இது?” கௌசிக்கின் அருகில் நின்று கொண்டிருந்த பெண் அவன் கையை சுரண்ட 

 

உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவன்

“மீனா இது இழையினி நான் சொன்னேன் இல்லையா?”

 

“இழை இது மீனா என்னோட மனைவி” இழையினியைப் பார்த்து கூற அவனது கூற்றில் அவளுக்கு தலையை சுற்றி கொண்டு வந்தது.

 

சற்று நிலைதடுமாறி விழப் போனவள் உடனே தன்னை சரி‌ செய்து கொண்டு

“கன்குராஜூலேஷன்ஸ்!” சிறு புன்னகையுடன் அவர்கள் இருவரதும் கையையும் பற்றி வாழ்த்து தெரிவித்து விட்டு திரும்பி நடந்து செல்ல 

 

“இழை ஒரு நிமிஷம்!” கௌசிக் அவள் முன்னால் வந்து நின்றான்.

 

இழையினி சிறிதும் தயக்கமின்றி அவனை நிமிர்ந்து பார்க்க அவள் பார்வையில் தன் தலையை குனிந்து கொண்டவன்

“ஐ யம் ஸாரி இழை! நாங்க பணக்காரங்க இல்லைன்னு உங்க கிட்ட சொல்லாமல் விட்டது தப்பு தான் ஆனா உங்களை ஏமாற்றணும்னு இல்லை உன்னை இழந்துடக்கூடாதுன்னு தான்! நீ பணத்தை பார்த்தோ, வசதியைப் பார்த்தோ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னு எனக்கு தெரியும் ஆனா அன்னைக்கு மண்டபத்தில் உங்க தாத்தா எங்களை வேணும்னே திட்டம் போட்டு ஏமாற்றுறவங்க போல பேசிட்டாரு அதில் அம்மா ரொம்ப கோபமாகி அடுத்த முஹூர்த்ததிலேயே எனக்கு கல்யாணம் பண்ணணும்னு சொல்லி பிடிவாதமாக இருந்து இதெல்லாம் நடந்துடுச்சு ஆரம்பத்தில் எனக்கும் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருந்தது தான் ஆனா இது தான் நிதர்சனம்னு நான் அதை ஏற்றுக் கொண்டேன் அதே மாதிரி நீயும்!” என்று கூறவும்

 

அவளோ

“உங்க அறிவுரைக்கு நன்றி கௌசிக்! ரொம்ப நன்றி! நீங்க உங்க ஷாப்பிங்கை கன்டினியூ பண்ணுங்க நான் வர்றேன் ஓஹ்! ஸாரி போயிடுறேன்” இதழ் விரிந்த புன்னகையுடன் அவனைப் பார்த்து கூறி விட்டு அவனைத் தாண்டி சென்றாள்‌.

 

இழையினி‌ சென்ற வழியையே சிறு கவலையுடன் பார்த்துக்கொண்டு நின்றவன் பெருமூச்சு ஒன்றை விட்டபடியே தன் மனைவியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்ல மறுபுறம் அத்தனை நேரம் தனக்குள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளிகளை தன் கையில் முகம் புதைத்து இழையினி சிந்த ஆரம்பித்தாள்.

 

அத்தனை நாட்களாக மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறையும் வரை அழுது முடித்தவள் தேன்மொழியைக் காத்திராமலேயே கால்கள் போன போக்கில் நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 

இழையினியின் மனநிலையைப் புரிந்து கொண்ட தேன்மொழியும் அவளைத் தொந்தரவு செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு அவளைக் கண்காணித்த படியே தொடர்ந்து வந்து அவள் வீட்டுக்குள் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொள்ள போக அந்த நேரம் பார்த்து சரியாக கலைச்செல்வி அவள் அறையின் முன்னால் வந்து நின்றார்.

 

“அத்தை! என்ன அத்தை நீங்க இங்கே?”

 

“இரண்டு பேரும் எங்கே போயிட்டு வர்றீங்க?”

 

“இழை மூட் அவுட்டா இருந்தா அது தான் ஷாப்பிங் போனோம் அத்தை!”

 

“அங்கே என்ன நடந்தது?”

 

“அத்தை!”

 

“அங்கே என்ன நடந்தது? இழை வீட்டிலிருந்து போகும் போது கொஞ்சம் சிரித்த முகமாக தான் போனா ஆனா இப்போ அவ முகமே சரி இல்லை அதனால் தான் கேட்கிறேன் சொல்லு என்ன நடந்தது?”

 

“இல்லை அத்தை அப்படி எதுவும்”

 

“ப்ளீஸ் தேனு! என் பொண்ணு கல்யாணம் நின்று போன நாளிலிருந்து அவளாகவே இல்லை அவளை சரி செய்ய என்ன பண்ணுறதுனும் தெரியல இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழித்து அவ முகத்தில் சிரிப்பை பார்த்தேன் அதையும் இப்போ காணோம் தயவுசெய்து என்ன நடந்தது சொல்லு தேனு?” கலைச்செல்வியின் கலக்கம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட பின்பும் தேன்மொழியால் நடந்த விடயங்களை மறைக்க முடியாததால் வெளியே நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் அவரிடம் ஒப்புவித்திருந்தாள்.

 

“என் பொண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஆகணும் கடவுளே!” கலைச்செல்வி தன் தலையில் கையை வைத்து கொண்டு நிற்கையில்

 

“எல்லாம் என்னோட விதிம்மா!” இழையினியின் குரல் வலியோடு அவர் பின்னால் ஒலித்தது.

 

“இ…இழை! நீ எதற்காக இங்கே வந்தம்மா?” 

 

“மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்ததும்மா அது தான் உங்களைப் பார்க்க வந்தேன் உங்க மடியில் தலை வைத்து தூங்கணும் போல இருக்கும்மா எனக்கு என் ரூமில் இருக்கவே மூச்சு முட்டுதும்மா” தன் அன்னையை கட்டியணைத்து கொண்டு இழையினி கண்ணீர் சிந்த

 

அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர்

“இழைம்மா! உனக்கு எதுவும் இல்லைடா இதோ பாரு அம்மா இருக்கேன் இல்லை உனக்கு எந்த கஷ்டமும் வர நான் விடமாட்டேன் டா” என்றவாறே அவளது தலையை வருடிக் கொடுக்க தேன்மொழியும் கண்கள் கலங்க அவர்கள் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

 

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் கலைச்செல்வி தன் மகளை எண்ணி நித்தம் நித்தம் மனதால் உடைந்து போகத் தொடங்கினார்.

 

அன்று திருமண மண்டபத்தில் வைத்து தன் தந்தை அந்த சிறு பிரச்சினையை பெரிது படுத்தி இருக்காவிட்டால் இன்று தன் மகளுக்கு இந்த நிலை வந்திருக்காதே என்று தினமும் வளர்மதியிடமும், எழிலரசியிடமும் அவர் கூறுவதைக் கேட்கும் போதெல்லாம் இழையினி மனதிற்குள்

‘ஏன் தாத்தா இப்படி பண்ணீங்க?’ என்ற ஒரு கேள்வி அரித்துக் கொண்டே இருக்கும்.

 

இழையினி கௌசிக்கை சந்தித்து விட்டு வந்து இரண்டு வாரங்கள் கடந்து இருந்த நிலையில் வழக்கம் போல இழையினி அவளது அறைக்குள் அமர்ந்து சுவற்றை வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருக்க 

“இழைம்மா!” என்றவாறே கலைச்செல்வி அவளருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

 

“இழைம்மா!”

 

“சொல்லுங்க ம்மா!”

 

“ஏன்டா எப்போவும் இப்படியே இருக்க? அம்மாவுக்காக கொஞ்சம் இந்த கூட்டிலிருந்து நீ வெளியே வரக் கூடாதா? நடந்த விடயங்களையே யோசித்து கொண்டிருந்தால் அதில் எந்த பலனும் இல்லை இனி வரப்போகும் நாட்களுக்காக உன்னை நீ தயார் படுத்திக்கணும்டாம்மா! அம்மா எப்போதும் உன் கூடவே இருக்க முடியாமலும் போகலாம் இல்லையா?”

 

“அம்மா! ஏன்மா இப்படி எல்லாம் பேசுறீங்க? அதெல்லாம் நீங்க என்னை விட்டு எங்கேயும் போகமாட்டீங்க நீங்க எப்போதும் என் கூடத் தான் இருப்பீங்க இப்போ என்ன நான் பழைய படி பேசி, சிரித்த மாதிரி இருக்கணும் அவ்வளவுதானே? சரி வாங்க கீழே போய் புச்சியை கலாய்க்கலாம் எல்லாம் சரியாகிவிடும்” தன் அன்னையின் முக வாட்டத்தை தாளாமல் படபடவென பேசியவள் அத்தோடு நிற்காமல் அவர் கைகளை பிடித்து கொண்டு படியிறங்கி ஹாலில் இருந்த தேன்மொழியின் அருகில் அமர்ந்து கொண்டு எப்போதும் போல அவளோடு விளையாடத் தொடங்க அதைப் பார்த்து கலைச்செல்வி மனம் நிறைந்து போக நின்று கொண்டிருந்தார்.

 

அவர்கள் சந்தோஷத்திற்கு ஆயுட்காலம் குறைவோ? என்னவோ? இழையினி ஹாலில் வந்து அமர்ந்த ஐந்தாவது நிமிடம்

“நம்ம வசதிக்கு ஏற்ற பையனை நம்ம இழையினிக்கு மாப்பிள்ளையாக பார்த்தாச்சு!” முகம் கொள்ளாப் புன்னகையுடன் அசோகன் அவர்கள் முன்னால் வந்து நின்றார்.

 

இழையினி அதிர்ச்சியாக தன் அன்னையை பார்த்து கெஞ்சலாக மறுப்பாக தலை அசைக்க அவளைப் பார்த்து ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்த கலைச்செல்வி

“இப்போ எதுக்கு இதெல்லாம்? கொஞ்ச நாள் போகட்டுமே!” பொதுவாக கூறுவது போல கூறினார்.

 

“எதற்கு கொஞ்ச நாள்? இல்லை எதற்குன்னு கேட்கிறேன்? நம்ம வசதிக்கும், தகுதிக்கும் ஏற்ற மாதிரி பையன் கிடைக்கும் போது அதை தட்டிக் கழிக்கலாமா? போன முறை மாதிரி இல்லை இந்த முறை ரொம்ப நல்லா விசாரித்து விட்டேன் பையனோட குடும்பம் உண்மையிலேயே பணக்காரங்க தான் நம்ம இழையினியை ராணி மாதிரி பார்த்துக்குவாங்க! நாளைக்கே பொண்ணு பார்க்க வர்றாங்க எல்லாம் சரியாக வந்தால் இன்னும் ஒரே வாரத்தில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்”

 

“அப்பா! ப்ளீஸ்! இப்போ இந்த கல்யாண பேச்சு வேண்டாமே! இப்போ தான் அவ கொஞ்சம் கொஞ்சமாக பழைய படி மாறி வர்றா இந்த நேரத்தில் இப்போ இது வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்! ஒரு மாதம் டைம் கொடுங்க அவ சரியாகிடுவா அதற்கு அப்புறம் இதைப் பற்றி பேசலாமே ப்ளீஸ் பா!”

 

“உனக்கு எதுவும் தெரியாது கலை நீ பேசாமல் இரு! இப்படிப்பட்ட வசதியான குடும்பம் கிடைக்க அவனிவன் போட்டி போடுறான் அப்படியிருக்கையில் நம்ம வாசல் தேடி வந்த சம்பந்தத்தை தட்டிக் கழிக்கலாமா? ராஜ வம்சம் யாருக்கு அமையும்? நம்மளை மாதிரியே உழைத்து பணம் சம்பாதித்து இந்த நிலைக்கு வந்திருக்கும் பணக்காரங்க!”

 

“அப்போ பணம் மட்டும் இருந்தால் போதுமாப்பா?”

 

“ஆமா கலை பணம் இருந்தால் நம்ம பசங்க சந்தோஷமாக இருப்பாங்க தானே? இழையினி ஒரு விடயம் ஆசைப்பட்டு நினைத்தாலே போதும் அதைக் கண் முன்னால் கொண்டு வந்து கொடுக்கும் வசதி இருக்கு அவங்க கிட்ட இதற்கு மேல் என்ன வேணும்?”

 

“அப்பா போதும்!” அசோகன் பேசப் பேச தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்த கலைச்செல்வி ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாமல் அந்த வீடே அதிரும் படி சத்தம் போட்டிருந்தார்……