உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 14

அத்தனை நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த விஜயதேவி இப்போது கோபமாக தங்கள் முன்னால் வந்து நிற்க ஆதவனும், கௌசிக்கும் அவரை சற்றே குழப்பமாக பார்த்து கொண்டு நின்றனர்.

 

“இரண்டு பேரும் என்ன செய்ய போறீங்க?” 

 

“இந்த குழப்பத்தை எல்லாம் பேசி…”

 

“பேசி என்ன பண்ணப் போறீங்க? நீங்க சொல்லுவதை எல்லாம் நம்புவாங்களா அவங்க?”

 

“நம்பலேன்னாலும் நாம் உண்மையை மறைப்பது சரி இல்லை தானே அத்தை?”

 

“எது சரி எது தப்புன்னு எங்களுக்கு தெரியும் நீங்க இரண்டு பேரும் வாயை மூடிட்டு நான் சொல்லுவதை மட்டும் செய்யுங்க போதும்” அவர்கள் இருவரையும் பார்த்து எச்சரிப்பது போல கூறியவர்

 

ஆதவனின் புறம் திரும்பி

“இங்கே பாரு ஆதவா எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் அன்னைக்கே இவங்க நம்மளை எல்லாம் இன்னும் அந்த ஜமீன்தார் வம்சமாக இருக்கும் பணக்காரங்கன்னு நினைத்து கொண்டு இருக்காங்கன்னு தெரியும் அப்போவே இதோ இவனும், இவனோட அப்பாவும் உன்னை மாதிரி நீதி, நியாயம், கத்தரிக்காய்ன்னு பேசிட்டு இந்த விடயத்தைப் பற்றி எல்லோர் கிட்டவும் சொல்லப்  போனாங்க அப்போவே இவங்களை எல்லாம் பேசி ஒரு வழியாக அடக்கி வைத்து இன்னைக்கு இவ்வளவு தூரம் கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து இருக்கேன் தயவுசெய்து அதில் நீ இப்போ மண்ணை அள்ளி போட்டுடாதே!” கோபமாக அவனை முறைத்து பார்த்து கொண்டே கூற

 

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்

“இல்லை அத்தை இது தப்பு! நாம அவங்க அளவுக்கு வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் நம்ம குடும்பத்துக்கு என்று ஒரு நல்ல பெயர் இருக்கு அதை கெடுத்து கொள்ள கூடாது இல்லையா? பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் ஆனா நம்பிக்கை அது ஒரு தடவை தான் வரும் அந்த ஒரு தடவை வர்ற நம்பிக்கையை நாம உடைச்சுட்டோம்ன்னா அதற்கு பிறகு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதை சேர்த்து கொள்ள முடியாது அத்தை நாளைக்கு வேறு யாரும் சொல்லி இந்த விஷயம் அவங்க காதுக்கு போனால் அது நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம் அதனால் தான் அத்தை இதை நான் சொல்லுறேன் நாம உண்மையை எல்லாம் இப்போவே மனம் விட்டு பேசினால் இந்த கல்யாணத்தில் எந்த குழப்பமும் வராது அத்தை ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!” தன்னால் முடிந்த மட்டும் கெஞ்சலாக அவரைப் பார்த்து கூறினான்.

 

“நீ சொல்லுறது சரி தான் ஆதவா! ஆனா எனக்கு என்னவோ இப்போவே இதைப் பற்றி பேசுவது சரின்னு தோணல முதலில் கல்யாணம் முடியட்டும் அதற்கு அப்புறம் நானே மேடையில் வைத்து எல்லோர்கிட்டவும் இதைப் பற்றி பேசுவேன் அது வரைக்கும் நீ வாயைத் திறக்க கூடாது” ஒரு விரல் நீட்டி அவனை எச்சரித்தவர்

 

“எப்படியும் கல்யாணம் நடந்தால் அவங்க இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ள தானே வேணும் இல்லைன்னா அவங்க வீட்டுப் பொண்ணு தான் வாழாவெட்டியாக நிற்கணும்” விட்டேற்றியாக கூற

 

“அத்தை!”

 

“அம்மா!”

 

“விஜயா என்ன இது?” அவரின் பேச்சில் ஆதவன், கௌசிக் மற்றும் தமிழ்ச்செல்வன் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தனர்.

 

“என்ன? இல்லை இப்போ என்ன ஆச்சுன்னு கேட்கிறேன்? ஆளாளுக்கு சும்மா என்னையே பார்த்துக் கொண்டு சத்தம் போடுறீங்க! நான் சொத்து, வசதி வாய்ப்புகளை எல்லாம் பார்த்து தான் இந்த சம்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டேன் அதற்காக அந்த பொண்ணை எனக்கு பிடிக்காதுன்னு இல்லை அவ நல்ல பொண்ணு என் பையனுக்கு ஏற்றவ தான் ஆனா அது மட்டும் போதாது கொஞ்சம் பணமும் வேணும் அதற்காக தான் நான் இவ்வளவு நாள் பாடுபட்டேன் என் இத்தனை நாள் காத்திருப்பு மேல் மண்ணை அள்ளி போட்டுடாமல் மேடைக்கு போங்க எல்லோரும்” கண்டிப்பான குரலில் கூறி விட்டு விஜயதேவி அந்த அறையில் இருந்து வெளியேறுவதற்காக திரும்ப அங்கே கண்கள் இரண்டும் கோவைப்பழமென சிவந்து போக எல்லையில்லா கோபத்துடன் அசோகன் நின்று கொண்டிருந்தார்.

 

அவரை அங்கே அந்த நேரத்தில் எதிர்பாராதவர்கள் அவரது  கோபமான தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி போய் நிற்க அவர்களை எல்லாம் மேலிருந்து கீழாக பார்த்தபடியே அவர்கள் முன்னால் வந்து நின்றவர் கௌசிக்கின் சட்டைக் காலரைப் பற்றி

“ஏன்டா உனக்கு என்ன தைரியம் இருந்தால் இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்து எங்களை எல்லாம் ஏமாற்றிருப்ப?” கோபத்துடன் அவனை உலுக்க

 

அந்த நேரம் பார்த்து சரியாக 

“அப்பா! நீங்க என்ன பண்ணுறீங்க?” கலைச்செல்வி பதட்டத்துடன் அவர் முன்னால் வந்து நின்று வினவினார்.

 

“கலை! வா வந்து இவங்க லட்சணத்தைப் பாரு நம்மகிட்ட எல்லோருமாக சேர்ந்து பொய் சொல்லி நம்ம இழையினியை கல்யாணம் பண்ணப் பார்த்து இருக்காங்க” கௌசிக்கின் சட்டைக் காலரைப் பற்றி இருந்த தன் கையை கோபமாக உதறியபடியே அசோகன் கூற 

 

பதட்டத்துடன் அவனின் புறம் திரும்பி பார்த்தவர்

“கௌசிக்! என்னப்பா இது எல்லாம்? அப்பா என்னென்னவோ சொல்லுறாங்க! நீ என்ன பொய் சொன்ன?” தன் மகளின் வாழ்வு வீணாகிப்‌ போய் விட கூடாதே என்ற அச்சத்துடன் அவனைப் பார்த்து கேட்கவும்

 

“ஆன்ட்டி இங்கே என்ன நடந்ததுன்னு நான் சொல்லுறேன்” என்றவாறு ஆதவன் அவர் முன்னால் வந்து நின்றான்.

 

வெளியே அசோகன் தன்னிடம் பேசியது முதல் இங்கே இதுவரை நேரமும் நடந்த எல்லா விடயங்களையும் அவரிடம் கூறியவன்

“நாங்க இந்த விடயத்தை இவ்வளவு நாளாக சொல்லாமல் விட்டது தப்பு தான் ஆன்ட்டி ஆனா எப்போ அது தப்புன்னு தெரிந்ததோ அப்போவே நாங்க அதை உங்க எல்லார்கிட்டவும் சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டோம் உங்களை எல்லாம் ஏமாற்றனும்னு எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை தயவுசெய்து நீங்களாவது நாங்க சொல்ல வர்றதை புரிந்து கொள்ளுங்க ப்ளீஸ்” கெஞ்சுதலாக அவரைப் பார்க்க

 

“நீ வாயை மூடு! உனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது எங்க இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் மூணாவது ஆள் நீ பேசத் தேவையில்லை” கோபத்தோடு அசோகன் ஆதவனைப் பார்த்து சத்தமிட்டு விட்டு 

 

விஜயதேவியின் புறம் திரும்பி

“உங்களை எல்லாம் ஆரம்பத்தில் பார்க்கும் போதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது நீங்க நிஜமாகவே பணக்காரங்க தானா என்று? ஆனால் அதை நான் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளல ஆனா இப்போதான் அந்த சந்தேகத்தை தீர விசாரித்து இருக்கலாமோ என்று தோணுது என் பேத்தியை உங்களை மாதிரி ஒண்ணும் இல்லாத, பொய் சொல்லி ஏமாற்றி வாழும் ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளும் நான் அனுப்பி வைக்க மாட்டேன்” கோபமாக எச்சரிப்பது போல கூற அவரோ என்ன பேசுவது என்று தெரியாமல் தன் கையை பிசைந்து கொண்டு நின்றார்.

 

“கலை! முதலில் போய் இந்த கல்யாணத்தை நிறுத்து”

 

“அப்பா! என்னப்பா பேசுறீங்க நீங்க? இது என்ன பொம்மை கல்யாணமா? உடனே நிறுத்த இதில் உங்க பேத்தி வாழ்க்கையும் அடங்கி இருக்குப்பா அது தான் அவங்க தான் செய்தது தப்புன்னு உணர்ந்து நம்ம கிட்ட சொல்ல வந்துட்டாங்க தானே? அதோடு சரியாக விசாரிக்காமல் விட்டது நம்ம தப்பு தானேப்பா!”

 

“இங்கே இப்போ சரி எது? தப்பு எது? என்று மாநாடு நடத்த நேரமில்லை இவங்க பணக்காரங்க இல்லை, நம்ம தகுதிக்கு கொஞ்சம் கூட இவங்க பொருத்தமானவர்கள் இல்லை அதனால் இந்த கல்யாணம் நடக்காது அவ்வளவு தான் உன்னால் சொல்ல முடியாதுன்னா நீ இங்கேயே இப்படியே நில்லு! நானே போய் எல்லோர்கிட்டவும் இதை சொல்லுறேன்” கண்கள் சிவக்க கோபத்தோடு அசோகன் அங்கிருந்து வெளியேறி சென்றார் 

 

“அப்பா! வேண்டாம் ப்ளீஸ் ஒரு நிமிடம் நான் சொல்ல வர்றதைக் கேளுங்க” கலைச்செல்வி கெஞ்சலாக கேட்டு கொண்டே அவரைப் பின் தொடர்ந்து செல்ல அவரோ அதை எதையும் தன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

 

“அப்பா! ப்ளீஸ்பா எதுவும் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டாம் அந்த பையன் நம்ம வசதிக்கேற்ற பையன் இல்லை அது மட்டும் தானே பிரச்சினை அதற்காக கல்யாணத்தை எல்லாம் நிறுத்த வேண்டாம்ப்பா! இழையினி இதை எல்லாம் தாங்க மாட்டா! அந்த பையன் ரொம்ப நல்ல பையன் நம்ம இழையினி ராணி மாதிரி வைத்து பார்த்துக் கொள்ளுவான்பா! அப்பா ப்ளீஸ் நில்லுங்க” அசோகனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டபடியே கலைச்செல்வி அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்து சென்று கொண்டிருக்க

 

மறுபுறம் அவரது மற்றைய கையைப் பிடித்துக்கொண்ட ஆதவன்

“தாத்தா! ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்ல வர்றதை கேளுங்க! நான் மூணாவது மனிதன் தான் இல்லைன்னு சொல்லல மூணாவது ஆளாக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தானே! ஒரு மனிதனாக மதித்து நான் சொல்லுவதை கொஞ்சம் கேளுங்க தாத்தா! உங்களை ஏமாற்றணும்னு யாரும் இங்கே நினைக்கல அப்படி நினைத்து இருந்தால் இப்போ கூட நாங்க இதைப் பற்றி பேசி இருக்க மாட்டோம் நாங்க எப்போதும் யாரையும் ஏமாற்ற நினைத்தது இல்லை கௌசிக் உங்க பேத்தியை உயிருக்கு உயிராக நேசிக்கிறான் அதனால் கூட இதை சொல்ல தயங்கி இருக்கலாம் எங்கே அவங்களை இழந்து விடுவோமோன்னு பயந்து அப்படி பண்ணிட்டான் போல! இது அவங்க இரண்டு பேரோட வாழ்க்கை தயவுசெய்து அதில் எதுவும் தப்பா நடக்க வைத்து விடாதீங்க தாத்தா ப்ளீஸ்!

 

 இந்த விடயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தது நான் தான் வேணும்னா நான் உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் தயவுசெய்து இந்த கல்யாணத்தை நிறுத்திடாதீங்க! உங்களுக்கு கௌசிக் உங்க தகுதிக்கு ஏற்றவன் இல்லைன்னு சொல்லுறது தான் பிரச்சினைன்னா நான் இதுவரைக்கும் சேர்த்து வைத்த எங்களோட சொத்து பத்து எல்லாவற்றையும் அவனுக்கு கொடுக்கிறேன் அப்போ அவன் கொஞ்சம் உங்க தகுதிக்கு சரி சமமாக வந்து விடுவான் தானே தாத்தா! ப்ளீஸ் அவங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாங்க தாத்தா!” தன்னால் முடிந்த மட்டும் அவர் காலில் விழுந்து கெஞ்சி கேட்க 

 

ஒரு கணம் அமைதியாக அவனை நின்று கூர்ந்து பார்த்தவர்

“இதுவரைக்கும் நீ சேர்த்து வைத்த பணமும், இவனோட பணமும் சேர்ந்து எவ்வளவு வரும்?” என்று கேட்டார்.

 

“அப்பா! நீங்க என்ன பேசுறீங்க?” கலைச்செல்வி சற்று கண்டிப்பான குரலில் தன் தந்தையை பார்த்து வினவ 

 

அவரைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தவர் மீண்டும் ஆதவனின் புறம் திரும்பி

“சொல்லு எவ்வளவு வரும்?” என்று கேட்டார்.

 

“அது… அது…” சிறிது தயக்கத்துடன் கௌசிக்கின் புறம் ஆதவன் திரும்பி பார்க்க அவனோ கவலையோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றான்

 

“ஒரு இருபத்தைந்தில் இருந்து முப்பது”

 

“கோடியா?”

 

“இ… இல்லை இலட்சம் தான் தாத்தா” ஆதவனின் கூற்றில் வெடிச் சிரிப்பு சிரித்தவர்

 

“நீ சொன்ன அந்த பணம் என் வீட்டில் வேலை செய்யும் ஒருத்தருக்கு நான் இலவசமாக கொடுக்கும் பணத்திற்கு சமமாக இருக்கும்” என்று விட்டு அவனை புழுவைப் பார்ப்பது போல பார்த்து விட்டு அவன் பிடித்திருந்த தன் கையை தன் தோளில் கிடந்த துண்டால் துடைத்து விட்டபடியே அங்கிருந்து நகர்ந்து சென்று விட அவனோ அவரது செய்கைகளைப் பார்த்து அவமானத்தில் முகம் சுருங்கிப் போக நின்றிருந்தான்.

 

அசோகன் தன் முடிவில் இருந்து சிறிதும் மாறாமல் கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன் என்ற முடிவோடு மேடையை நோக்கி நடந்து செல்ல அவர்கள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ஆதவன் அங்கே மணமேடையில் கண்கள் கலங்க பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து தன்னை மறந்து சிலையென உறைந்து போனான்.

 

‘இது? இந்த பொண்ணா கல்யாண பொண்ணு? அப்படி என்றால் இழையினியா இது? கௌசிக் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணையா நான் பார்த்து ஆசைப்பட்டேன்? நோ! நோ! இருக்காது இல்லை! அப்படி இருக்காது!’ மீண்டும் மீண்டும் தன் கண்களை மூடி திறந்த ஆதவன் மேடையில் நின்ற இழையினியைப் பார்த்து மொத்தமாக உடைந்து போனான்.

 

‘நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் இந்த கல்யாணம் இனிமேல் நடக்காதா?  இல்லை! இல்லை! எப்படியாவது இதை நான் சரி செய்யணும் சரி செய்தே ஆகணும் இப்போ எப்படி நான் பண்ண தப்பை சரி செய்வது? கௌசிக் கிட்ட பேசிப் பார்க்கலாமா? ஒருவேளை நான் இழையினி மேல் ஆசைப்பட்டு தான் இதை எல்லாம் பண்ணேன்னு யாரும் தப்பாக நினைத்து கொண்டால் நான் என்ன செய்வது? என்னால் எவ்வளவு பெரிய பிரச்சினை உருவாகிவிட்டது! கடவுளே!’ ஆதவன் தன்னால் தான் இவ்வளவு பிரச்சினைகளும் நடந்து விட்டதே என்ற கவலையான எண்ணத்தோடு கண்கள் இரண்டும் கலங்கிப் போய் நின்று கொண்டிருந்த இழையினியைப் பார்த்து கொண்டு நிற்க

 

“ஆதவா வா போகலாம்!” கௌசிக் அவன் கை பற்றி அங்கிருந்து அவனை இழுத்து கொண்டு சென்றான்.

 

ஆதவன் மண்டபத்திலிருந்து தங்கள் வீட்டிற்கு வந்த பின்பும் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக தன் அறைக்குள் பலத்த சிந்தனையோடு அமர்ந்திருக்க அவனையே சிறிது நேரமாக கண்காணித்து கொண்டிருந்த கௌசிக்

“ஆதவா! உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை தானே?” அவன் முன்னால் வந்து நின்று கேள்வியாக அவனை நோக்கினான்.

 

தன் தலையை பிடித்து கொண்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் பின்னர் சட்டென்று கௌசிக்கின் கையைப் பிடித்துக்கொண்டு

“ஐ யம் ஸாரி டா கௌசிக்! என்னால் தான் எல்லாப் பிரச்சினையும்! நான் மட்டும் அங்கே உன் கிட்ட அப்படி பேசாமல் இருந்திருந்தால் உன் கல்யாணம் நின்று போய் இருக்காதே!” கண்கள் கலங்க கூற 

 

சிறு புன்னகையுடன் அவனது தோளில் தட்டிக் கொடுத்தவன்

“நடந்த விடயத்தில் யாரும் யார் மேலயும் பழி போட முடியாது ஆதவா! நிச்சயதார்த்தம் அன்னைக்கே ஒரு வேளை நான் உண்மையை சொல்லியிருந்தால் இப்போ நடந்தது அன்னைக்கு நடந்து இந்தளவிற்கு பிரச்சினை பெரிதாகாமல் போயிருக்கலாம் இல்லை அவங்களை கொஞ்சம் சரிப்படுத்தி இருக்கலாம் என் மேலயும் தான் தப்பு அம்மா பேச்சைக் கேட்டு அநியாயமாக இழையினி வாழ்க்கையை அழித்து விட்டேன்னு குற்றவுணர்ச்சியாக இருக்கு” என்றவாறே தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டான்.

 

இங்கே ஆதவனின் அறைக்குள் ஆண்மகன்கள் இருவரும் தங்கள் தவறுகளை எண்ணி மனம் வருந்தி அமர்ந்திருக்க திடீரென மின்னல் போல் அந்த அறைக்குள் நுழைந்த விஜயதேவி

“இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி முகத்தை வைத்து இருக்க? இந்த பொண்ணு இல்லேன்னா ஆயிரம் பொண்ணு அடுத்த முஹூர்த்தத்தில் இதை விட நல்ல பொண்ணா உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் நம்மளை எல்லாம் அவ்வளவு கேவலப்படுத்தி அனுப்பி வைத்தாரு தானே அந்த பெரிய மனுஷன் அந்த ஆளு முகத்தில் கரியைப் பூசுற மாதிரி அந்த ஆளோட பேத்தி கல்யாணத்திற்கு முன்னாடியே உன் கல்யாணத்தை நடத்தி காட்டுறேன் முதல்ல வீட்டுக்கு கிளம்பு வா” கௌசிக்கின் கையைப் பற்றி அவன் சொல்ல வந்த விடயங்கள் எதையும் காதில் வாங்காமல் அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு செல்ல அவனது ஏக்கமான முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த ஆதவன் தன் முகத்தை துடைத்து கொண்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டான்.

 

அந்த இடத்தில் இருந்து வேகமாக புறப்பட்டு சென்ற ஆதவனின் வண்டி நேராக கௌசிக் மற்றும் இழையினியின் திருமணத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  மண்டபத்தின் வாயிலில் போய் நின்றது.

 

ஆதவன் தன் வண்டியில் இருந்து இறங்கிய நேரம் சரியாக இழையினி வீட்டினரின் கார் புறப்பட்டு செல்ல அந்த வண்டியை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு அவன் ஓடி வருவதற்குள் அந்த கார் புறப்பட்டு சென்றிருந்தது.

 

 “ச்சே!” சற்று சலிப்புடன் தன் காலை தரையில் உதைத்து கொண்டவன் அந்த காரை பின் தொடர்ந்து செல்லலாம் என்ற  திரும்பி தன் வண்டியை நோக்கி நடந்து செல்லப் போக சரியாக அந்த நேரம் அசோகனும், மதியழகனும் அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தனர்.

 

அசோகனைப் பார்த்த அடுத்த கணமே தன் கை முஷ்டி இறுக கோபமாக அவர் முன்னால் வந்து நின்றவன்

“உங்க ஆசை இப்போ நிறைவேறிடுச்சா?” தன் கைகளை கட்டிக் கொண்டு அவரைப் பார்த்து நக்கல் கலந்த தொனியில் வினவினான்.

 

“ஏய்! நீ இங்கே என்ன பண்ணுற? உன் குடும்பத்து ஆளுங்களைத் தான் இங்கே நிற்க கூடாதுன்னு சொன்னேன் இல்லையா? மரியாதையாக இங்கே இருந்து போ” அசோகன் கோபமாக அவனை முறைத்து பார்த்து கொண்டே கூற

 

அவர் முன்னால் இன்னும் நன்றாக வந்து நின்று கொண்டவன்

“மரியாதையா? அப்படி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு எப்படி தெரியும்? உங்க கண்ணுக்கு பணம் மட்டும் தானே தெரியும்!  சரி நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த பணம், வசதி, வாய்ப்பு இதை எல்லாம் வைத்து என்ன செய்யப் போறீங்க? நீங்க செத்தால் உங்க கூட வரவா போகுது? கடைசி வரைக்கும் உங்க கூட வரப்போவது நீங்க சேர்த்து வைத்த புண்ணியமும், மனுஷங்களும் தான்! 

 

செத்து மேலோகம் போயிட்டா நீங்க பணக்காரங்க உங்களுக்கு சுவர்க்கம் நீங்க பரம்பரை ஜமீன்தார் இல்லை உங்களுக்கு அதனால் நரகம் தான்னு யாரும் தரப்போறதும் இல்லை எல்லோருக்கும் ஒரே சட்டம் தான் தாத்தா! நீங்க பணக்காரங்கன்னு உங்க உடம்புக்கு உள்ள தங்கமும், வைரமும் நாங்க வசதி குறைந்த ஆளுங்க என்று எங்க உடம்பில் பச்சைத் தண்ணீரும் ஓடல எல்லோர் உடம்பிலும் ஒரே சிவப்பு நிற இரத்தம் தான் ஓடுது!

 

 நீங்க இன்னைக்கு வேணும்னா இந்த கல்யாணம் நடக்காமல் நிறுத்தி இருக்கலாம் ஆனா நான் என் தம்பி மாதிரி பழகுன என் கௌசிக் ஆசையை நிறைவேற்றாமல் விடமாட்டேன் நான் சொல்லுவதை நல்லா ஞாபகம் வைத்து கொள்ளுங்க உங்க பேத்தி இழையினி எங்க குடும்பத்திற்கு தான் மருமகளாக வருவா! இது கண்டிப்பாக நடக்கும் கௌசிக் ஆசைப்பட்ட வாழ்க்கைய நான் அவனுக்கு நிச்சயமாக அமைத்து கொடுப்பேன் அதை யாராலும் தடுக்க முடியாது” சவாலாக கூறி விட்டு அங்கிருந்து தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்று விட மதியழகனோ அவனது பேச்சைக் கேட்டு மெய் சிலிர்த்து போய் நின்றான்.

 

ஏனோ தெரியவில்லை ஆதவன் சொன்ன விடயங்கள் எதுவும் அவனுக்கு தவறாக தோன்றவில்லை போலும் அது ஆதவன் பேசிய அந்த நிமிடங்களிலேயே அவன் முகத்தில் நன்றாக பிரதிபலித்தது.

 

ஆதவன் அங்கிருந்து சென்ற பின் அசோகன் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்று விட தன் வண்டியின் பக்க கண்ணாடி வழியாக அவர்களைப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்த ஆதவன்

‘கௌசிக் ஆசைப்பட்ட வாழ்க்கை அவனுக்கு கிடைக்கும் நான் கிடைக்க வைப்பேன்’ தனக்குள்ளேயே தைரியம் அளிப்பது போல் கூறிக் கொண்டு தன் வீட்டை நோக்கி தன் வண்டியை செலுத்தினான்.

 

இழையினியைப் பார்த்த அந்த கணமே அவள் தான் தன் வாழ்க்கை துணை என்று அவன் நினைத்திருந்தாலும் எப்போது அவளை மணமேடையில் தன் கண்கள் இரண்டால் பார்த்தானோ அப்போதே அந்த எண்ணத்தை முற்றாக தன் மனதிற்குள் இருந்து நீக்க முயற்சித்திருந்தான்.

 

எப்படியோ தான் தெரிந்தோ, தெரியாமலோ செய்த காரியம் இத்தனை தூரம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்க அதை எல்லாம் தானே நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று திட்டமிடத் தொடங்கினான்.

 

அடுத்த நாள் காலை இழையினியையும், கௌசிக்கையும் எப்படியாவது சந்தித்து பேச வைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அந்த சிந்தனையோடே கண்ணயர்ந்தும் போனான்.

 

முதல் நாள் பல மன அழுத்தங்களுக்கு ஆளானதால் என்னவோ வழக்கமாக தான் துயில் கலைந்து எழுந்து அமரும் நேரத்தையும் தாண்டி ஆதவன் உறங்கிக் கொண்டிருக்க அவன் உறக்கத்தை கலைப்பது போல அவனது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

 

தூக்க கலக்கத்திலேயே போனை எடுத்து தன் காதில் வைத்தவன் மறுமுனையில் சொன்ன செய்தியைக் கேட்டு அடித்துப் பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.

 

“என்னடா சொல்லுற உண்மையாகவா?” மீண்டும் மீண்டும் அதே கேள்வியை தொலைபேசியில் மறுமுனையில் இருந்த நபரிடம் கேட்டவன்

 

“அங்கேயே இரு நானும் வர்றேன்” என்று விட்டு உடனடியாக தயாராகி கொண்டு வள்ளியம்மை அழைத்ததைக் கூட கவனிக்காமல் வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றான்.

 

அவர்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியில் இருக்கும் முருகன் கோயில் முன் தன் வண்டியை நிறுத்தியவன் வேகமாக இரண்டிரண்டு படிகளாக தாவிச் சென்று பிரஹாரத்தை வந்து சேர்ந்து தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டான்.

 

அவன் பார்வையின் தேடலைப் பொய்யாக்காமல் அவன் தேடி வந்த நபரான கௌசிக் மாலையும் கழுத்துமாக, அருகில் பட்டு சேலை அணிந்து புது மஞ்சள் தாலி மின்ன வெட்கப்பட்டு கொண்டே நடந்து வரும் பெண்ணோடு கூட்டத்தோடு கூட்டமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

 

அவனை அந்த கோலத்தில் பார்த்ததுமே அவன் முன்னால் கோபமாக வந்து நின்ற ஆதவன் அவன் சட்டைக் காலரைப் பற்றி

“கௌசிக் ஏன்டா இப்படி பண்ண?” கோபமாக அவனை உலுக்க 

 

கௌசிக்கோ அவன் கைகளை தன் சட்டையில் இருந்து பிரித்து எடுத்து விட்டு

“இப்படி தான் என் வாழ்க்கை அமையணும்னு இருக்கு ஆதவா! ப்ளீஸ்டா இதற்கு மேல் எதுவும் கேட்காதே! மூணு மாசத்துக்கு முன்னாடி வந்த பொண்ணா? இல்லை இருபது வருஷத்துக்கு மேல வளர்த்த அம்மாவா? என்று ஒரே ராத்திரியில் முடிவெடுத்து தான் இந்த கல்யாணம் நடந்து இருக்கு” குரலில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கூறி விட்டு சென்று விட அவன் குரலே இந்த திருமணத்தை பற்றி அவனுக்கு எல்லாவிதமான விளக்கங்களையும் கொடுத்தது.

 

கண்டிப்பாக தன் அத்தை தான் எதையாவது சொல்லி வற்புறுத்தி அவனை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார் என்று யூகித்து கொண்டவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தள்ளாடியபடியே அங்கிருந்த கற்தூணில் சாய்ந்து கொண்டு நின்றான்.

 

ஆதவன் மனதுக்குள் முற்றாக கலங்கி போய் நிற்க அப்போது பூஜை நடக்கும் இடத்தில்

“கௌசிக் என்கிற பெயருக்கு அர்ச்சனை பண்ணணும்” என்ற பெண் குரல் ஒலிக்க எங்கேயோ கேட்ட குரல் போல இருக்கிறதே இது என்ற எண்ணத்தோடு அவன் திரும்பி பார்க்க அங்கே இழையினி கண் மூடி கடவுளை தரிசித்து கொண்டு நின்றாள் அவளை விட்டு கௌசிக் வெகு தூரம் சென்றதைக் கூட அறியாமல்…..