உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 15

இழையினி கண்களை மூடி கடவுளை மனமுருகி வேண்டிக் கொண்டிருக்க அவளை அங்கே எதிர்பாராத ஆதவன் சட்டென்று கௌசிக் சென்று கொண்டிருந்த புறமாக திரும்பி பார்க்க அவர்கள் எல்லோரும் எப்போதோ கோவிலில் இருந்து வெளியேறி சென்றிருந்தனர்.

 

‘இழையினி அப்போ இன்னும் கௌசிக்கைப் பார்க்கல போல! ஒருவேளை பார்த்தால் அவள் இதை எல்லாம் தாங்குவாளா?’ அவளது நிலையை எண்ணி பரிதாபத்தோடு ஆதவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அங்கு வேறு யாரையும் கண்டு கொள்ளாமலேயே குனிந்த தலை நிமிராமல் வேகமாக கோவிலில் இருந்து வெளியேறி சென்றாள்.

 

மனம் எவ்வளவோ அவனைத் தடுத்தும் அதை எதையும் கேட்காமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றவன் அவள் வீட்டிற்குள் சென்ற பின்னரும் அவர்கள் வீட்டு வாயிலின் அருகிலேயே சற்று தள்ளி நின்று கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு நின்றான்.

 

‘எப்படியாவது கௌசிக்கையும், இழையினியையும் சேர்த்து வைத்து விடலாம் என்று பார்த்தால் அதற்குள் அத்தை இப்படி அவசரப்பட்டுட்டாங்களே! ஒரு பொண்ணு மனதில் ஆசையை வளர்த்துட்டு அவனும் அதை அவ்வளவு சுலபமாக கடந்து போயிட்டான் ஒரு நாள் இழையினியைப் பார்த்த எனக்கே அவ எனக்கு சொந்தமானவ இல்லைன்னு தெரிந்ததும் அதை தாங்கிக் கொள்ள முடியல மூணு மாதமாக பழகி கல்யாணம் வரைக்கும் வந்து விட்டு அவனால் எப்படி இப்படி பண்ண முடிந்தது ச்சே!’ சலிப்புடன் தன் காலை தரையில் உதைத்து கொண்டவன் அந்த சுட்டெரிக்கும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.

 

ஆதவன் மீண்டும் மீண்டும் அந்த விடயத்தை பற்றி சிந்தித்து கொண்டிருக்கையில் அவனது சிந்தனையைக் கலைப்பது போல அவனது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

 

வள்ளியம்மையிடமிருந்து தான் அழைப்பு வருகிறது என்பதை கண்டு கொண்டவன் கண்களை மூடி தன்னை சமன் படுத்தி கொண்டு அந்த அழைப்பை ஏற்று தன் காதில் வைத்தான்.

 

“ஆதவா! எங்கேப்பா இருக்க?”

 

“நான் வெளியே ஒரு வேலையாக வந்தேன் ம்மா ஒரு ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன்ம்மா”

 

“கொஞ்சம் சீக்கிரமாக வாப்பா!”

 

“அம்மா! ஏதாவது பிரச்சினையா? குரல் ஒரு மாதிரி இருக்கு”

 

“நீ முதலில் வீட்டுக்கு வா ஆதவா!”

 

“சரிம்மா இதோ வர்றேன்” தன் தாயின் குரலில் ஏதோ ஒரு மாற்றம் தெரியவே  அவசரமாக தன் போனை அணைத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டு கொண்டவன் மின்னல் வேகத்தில் தன் வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றான்.

 

அங்கே அவனது வீட்டு வாயிலில் வள்ளியம்மை பதட்டத்துடன் நின்று கொண்டிருக்க தன் வண்டியை அவர் முன்னால் நிறுத்தி விட்டு அவசரமாக அவர் முன்னால் சென்று நின்றவன்

“அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு? ஏதாவது பிரச்சினையா?” அவரை மேலிருந்து கீழாக ஆராய்ந்து பார்த்துக் கொண்டே கேட்க 

 

கண்கள் கலங்க அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டவர்

“ஆதவா! ஆதவா!” என்று மட்டுமே கூறிக் கொண்டு நின்றார்.

 

வள்ளியம்மையின் நடவடிக்கைகளை வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்டவன் அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறு வீட்டிற்குள் அழைத்து செல்ல அங்கே தமிழ்ச்செல்வன் முகம் இறுகிப் போய் அமர்ந்திருந்தார்.

 

எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் தன் தந்தையையும், தாயையும் பார்த்து வளர்ந்த ஆதவன் அவர்களது இந்த புதிய பரிமாணத்தை பார்த்து முற்றிலும் குழம்பிப் போனான்.

 

தமிழ்ச்செல்வன் அருகில் வள்ளியம்மையை அமரச் செய்தவன் தண்ணீர் நிரம்பிய குவளையை அவர் புறம் நீட்டி அவரை அதைப் பருகச் செய்து விட்டு அவர் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு

“அம்மா! அப்பா! நான் இல்லாத நேரம் இங்கே ஏதோ நடந்து இருக்கு உங்க இரண்டு பேர் முகமே சரியில்லை  என்ன நடந்தது? எதையும் மறைக்காமல் சொல்லுங்க” என்று கேட்க அவனை கண்கள் கலங்க நிமிர்ந்து பார்த்த தமிழ்ச்செல்வன் தங்களின் அந்த நிலைக்கான காரணத்தை கூறத் தொடங்கினார்.

 

ஆதவனிற்கு வள்ளியம்மை அழைப்பு மேற்கொள்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னர்…..

 

எப்போதும் போல சமையலறைக்குள் வள்ளியம்மை வேலை செய்து கொண்டிருக்க தமிழ்ச்செல்வன் ஹாலில் அமர்ந்து பத்திரிகை வாசித்து கொண்டிருந்தார்.

 

அப்போது

“எங்க உன் பையன் ஆதவன்?” கோபமாக சத்தமிட்ட படியே விஜயதேவி அவர்கள் வீட்டிற்குள் உள்நுழைய

 

“வா விஜயா! உள்ளே வா” தமிழ்ச்செல்வன் புன்னகையுடன் அவரை வரவேற்க

 

அவரோ

“நான் ஒண்ணும் இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு சொகுசாக இருந்துட்டு போக வரல உன் பையன் என்ன தைரியம் இருந்தால் கோவிலில் வைத்து அத்தனை பேர் முன்னாடி என் பையன் சட்டையை பிடித்து இருப்பான் அவன் என் பையன் சட்டையை பிடித்த அந்த நேரமே அவன் கையை இரண்டாக வெட்டி போட்டு இருப்பேன் சம்பந்தி வீட்டுக்காரங்க முன்னாடி பிரச்சினை வேண்டாம்னு அமைதியாக இருந்தேன் இன்னொரு தடவை உங்க பையன் என் பையன் வாழ்க்கையில் வந்தான்னா அப்புறம் நடக்குறதே வேற சொல்லிட்டேன்

 

 இதோ பாருங்க நான் ஒண்ணும் நீங்க என் அண்ணன்னு பாசத்தில் மறுபடியும் உங்களைத் தேடி வரல அந்த பணக்கார வீட்டு சம்பந்தம் கிடைக்கவும் எப்படியாவது நாங்களும் வசதியானவங்கன்னு காட்டத்தான் மறுபடியும் உங்களைத் தேடி வந்தேன் இந்த வீடு என் பையன் உழைத்து கட்டியது அதில் என் அண்ணன் குடி இருக்காருன்னு சொல்லி தான் இந்த வீட்டுக்கு அந்த பெரிய மனுஷன் குடும்பத்தை கூட்டிட்டு வந்தேன் எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும் போது உன் பையன் வந்து எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிட்டான் 

 

எனக்கு வர்ற கோபத்திற்கு அவனை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பேன் ஏதோ நீ என் கூடப் பிறந்தவனாச்சேன்னு சும்மா விடுறேன் உன் பையன் கிட்ட சொல்லி வை! இனி வீணாக எங்க வழியில் குறுக்க வர வேண்டாம்னு!” படபடவென்று கோபமாக பொரிந்து தள்ளி விட்டு சென்று விட தமிழ்ச்செல்வன் அவர் கூறியவற்றை எல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்தவாறே அப்படியே அமர்ந்து கொண்டார்.

 

தன் கணவரைப் பலமுறை வந்து உலுக்கியும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே வள்ளியம்மை உடனடியாக ஆதவனுக்கு அழைப்பை மேற்கொண்டிருந்தார்.

 

தன் தந்தை சொன்ன விடயங்களை எல்லாம் கேட்டு கை முஷ்டி இறுக அமர்ந்திருந்த ஆதவன் கோபமாக அங்கிருந்து எழுந்து கொள்ள போக அவசரமாக அவன் கை பிடித்து தடுத்த தமிழ்ச்செல்வன்

“கோபப்பட்டு ஆளுக்கு ஆள் சண்டை போடுவதால் எதுவும் மாறப் போவதில்லை ஆதவா! அதனால் இந்த கோபம் வேண்டாம்” என்றவாறே அவனைத் தன்னருகே அமரச் செய்து கொண்டார்.

 

“எனக்கு அவ பேசுனது கூட கவலை இல்லை ஆதவா! ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாக நாமும் அவங்களுக்கு துணை போய் இருக்கோமே அது தான் ரொம்ப கவலையாக இருக்கு அன்னைக்கு அவ அண்ணான்னு பாசமாக வந்து நின்ற நேரம் இப்படி ஒரு மன எண்ணத்தோடு தான் வந்தான்னு தெரியாமல் போயிடுச்சு இல்லைன்னா அப்போவே இதை எல்லாம் தடுத்து இருக்கலாம் இப்போ அநியாயமாக அந்த பொண்ணு மனதொடிந்து போய் இருக்கா!” மனம் நிறைந்த கவலையோடு தமிழ்ச்செல்வன் பேச 

 

அவர் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்ட ஆதவன்

“அப்பா! இதில் உங்க மேல எந்த தப்பும் இல்லை நீங்க இப்போ சொன்னீங்க தானே முன்னாடியே இது எல்லாம் தெரிந்து இருந்தால் தடுத்து இருக்கலாம்னு! நமக்கு உண்மை தெரிய வந்ததும் நாம இதை சரியாக செய்யலாம்னு தான் பார்த்தோம் ஆனா அதற்கிடையில் என்னென்னவோ ஆகிடுச்சு பரவாயில்லை விடுங்க பா! எல்லா விடயங்களிலும் ஒரு காரணம் இருக்கும் இது நீங்க எனக்கு சின்ன வயதில் சொல்லி தந்த விடயம் ஒருவேளை அந்த பொண்ணுக்கு இதை விட சிறப்பான ஒரு வாழ்க்கை அமையணும்னு இருக்கலாம் இல்லையா? நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல இருங்க அம்மா நீங்களும் தான்!” தன் தாய், தந்தை இருவரையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவர்கள் இருவர் கண்களிலும் தங்கள் மகனை எண்ணி பெருமிதம் வந்து குடிகொண்டது.

 

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டி கொண்டு பறக்க ஆதவன் மாத்திரம் தொலைவில் இருந்து இழையினியை பார்த்து கொள்ளும் தன் பணியைக் கை விடவில்லை.

 

அவள் பழையபடி மாறி இருக்கிறாளா? இல்லையா? என்பதை மாத்திரம் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளைப் பின் தொடர்ந்தவன் மனமோ அவள் மேல் ஆரம்பத்தில் கொண்ட ஈர்ப்பை தவிர்க்க நினைக்கவில்லை.

 

இழையினி பெரிதாக வீட்டில் இருந்து வெளியேறி வராவிட்டாலும் அவள் சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் அவளை நிழல் போல தொடர ஆரம்பித்தான் ஆதவன்.

 

எப்போதும் போல அன்றும் அவளை வழமை போல பின் தொடர்ந்து வந்தவன் அவள் கௌசிக்கைப் பார்த்து பேசி விட்டு கதறியழுவதைப் பார்த்து தாளாமல் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு

‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று கத்திக் கூற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நெருங்கி சென்று அவளது தோளில் கை வைக்கப் போக அதற்குள் அவள் அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்றிருந்தாள்.

 

இழையினி அந்த இடத்தில் இருந்து வெளியேறி செல்லும் போது அந்த இடத்திற்கு வந்த மற்றையவள் அவளைப் பின் தொடர்ந்து செல்ல அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சென்றவன் அந்த கணமே தன் மனதிற்குள்

‘இனி தனக்கு மனைவியாக இழையினி மாத்திரம் தான் வரக்கூடும்! வர முடியும்!’ என்று உறுதியாக முடிவெடுத்து கொண்டான்.

 

அதன் பிறகு எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க ஆதவனும் இன்னும் இரண்டு தினங்களில் அவசர வேலை காரணமாக மலேஷியாவிற்கு செல்ல வேண்டும் என்ற நிலை வந்து அமைந்தது.

 

இந்த வேலை முடிந்து வந்து இழையினியிடம் எப்படியாவது பேசி அவளுக்காக நான் இருக்கிறேன் என்று அவளுக்கு தைரியமூட்ட வேண்டும் என்ற முடிவெடுத்து கொண்டவன் மனமே இன்றி மலேஷியாவிற்கும் புறப்பட்டு சென்றான்.

 

ஒரு வாரம் கழித்து தான் சென்ற வேலையை முடித்து விட்டு நாடு திரும்பிய ஆதவன் இழையினியைப் பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் வீட்டை நோக்கி புறப்பட்டு செல்ல அங்கே அவர்கள் வீட்டின் முன்னால் கலைச்செல்வியின் கண்ணீர் அஞ்சலி பிரசுரம் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் முற்றிலும் நொறுங்கி போனான்.

 

‘இழை! இதெல்லாம் நீ எப்படி தாங்கியிருப்ப? ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து இவ்வளவு கஷ்டமா? நீ இதையெல்லாம் தாங்குவியா இழை?’  இழையினியின் நிலைமையை எண்ணி கலக்கத்தோடு ஆதவன் அங்கே அந்த வாயிலின் அருகில் தயங்கி நிற்க அப்போது அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கார் வெளியேறி வந்தது.

 

அந்த காரின் உள்ளே இழையினி அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு ஆதவன் அவளிடம் இன்றாவது பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு உடனே அந்த காரைப் பின் தொடர்ந்து செல்ல தொடங்கினான்.

 

அவர்கள் காரில் இருந்து சற்று தள்ளி தன் வண்டியை நிறுத்தியவன் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் பார்த்து கொண்டு இருக்க அங்கே பக்க கண்ணாடி வழியாக இழையினி கதறியழுகிறாள் என்பதை மாத்திரம் கண்டு கொண்டான்.

 

அவள் அழுவதை பார்த்து ஆதவனது கண்களும் குளமாக சட்டென்று தன் கண்களை மூடி அந்த கண்ணீரை துடைத்து கொண்டவன் 

‘இழையினி வாழ்வில் இனி ஒருபோதும் கண்ணீர் சிந்தக் கூடாது! கூடவே கூடாது! அவளுக்காக நான் இருக்கிறேன் எப்போதும் இருப்பேன்! நாளைக்கே என்ன நடந்தாலும் சரி இழையினி கிட்ட போய் பேச வேண்டும்’ என்று முடிவெடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல அவளது காரும் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

 

அன்றிரவே தன் அன்னையிடமும், தந்தையிடமும் இழையினியைப் பற்றி தன் மனதிற்குள் இருந்த விடயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டவன் அவர்களது பதிலுக்காக காத்திருக்க அவர்கள் இருவரும் அவன் விருப்பத்தையே தங்கள் பதிலாக தெரிவித்தனர்.

 

அடுத்த நாள் காலை அழகிய பூக்கள் நிறைந்த பூங்கொத்து ஒன்றை வாங்கி கொண்டு இழையினியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆதவன் அவளது வீட்டை நோக்கி புறப்பட்டு செல்ல அங்கே இழையினி வேறு யாரோ இரு பெரியவர்களுடன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்து ஒரு காரில் ஏறி புறப்பட்டு சென்றாள்.

 

‘இழை! இவங்க கூட எங்கே போறா? யாரு இவங்க?’ பலத்த சிந்தனையோடு ஆதவன் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல அவர்களது கார் நேராக ஏர்போர்ட்டில் சென்று நின்றது.

 

‘ஏர்போர்ட்டா? இங்கே இழையினி என்ன பண்ணுறா?’ சிந்தனையோடு தன் வண்டியை நிறுத்தி விட்டு அவளையே பின் தொடர்ந்து சென்றவன் இலங்கைக்கு செல்லும் விமான அழைப்பை பின் தொடர்ந்து அவள் செல்வதைப் பார்த்து விட்டு அந்த இடத்திலேயே தன் கையிலிருந்த பூங்கொத்து விழுந்ததைக் கூட கவனிக்காமல் அப்படியே உறைந்து போய் நின்றான்.

 

‘நான் உன்னை நெருங்கி வரும் ஒவ்வொரு நேரமும் நீ என்னை விட்டு விலகி விலகிப் போறியே இழை! ஏன்? ஏன்?’ மனமும், உடலும் சோர்ந்து போக தள்ளாடியபடி தன் வண்டியை நோக்கி நடந்து சென்றவன் தன் வண்டியின் மீது சாய்ந்து நின்று கொண்டு இழையினி செல்லும் விமானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றான்.

 

‘என்னோட காதல் இனிமேல் எனக்கு கிடைக்காதா?’ கவலையோடு வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றவன் சிறிது நேரத்தில் கை போன போக்கில் தன் வண்டியை செலுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டை வந்து சேர்ந்தான்.

 

ஆதவனின் அந்த நிலையை பார்த்து வள்ளியம்மை அவனை ஆறுதல் படுத்த தன் பெற்றோருக்காக தன்னை எப்போதும் போல இயல்பாக காட்டிக் கொண்டவன் மனதளவில் பின் தங்கியே இருந்தான்.

 

இருந்தாலும் தன் மனம் வருந்தும் ஒவ்வொரு நிமிடமும்

‘எல்லா விடயங்களிலும் ஒரு நன்மை உண்டு இந்த விடயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு நன்மை இருக்கும் அதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள் ஆதவா! தேவையில்லாத கவலை வேண்டாம்!’ என்று தன்னைத் தானே தேற்றியும் கொள்ளுவான்.

 

இழையினி சென்னையை விட்டு புறப்பட்டு சென்ற ஒரு மாதத்தில் ஆதவனும் வேலை நிமித்தம் மறுபடியும் மலேஷியா சென்று விட அங்கே அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை.

 

கண்களை மூடினாலும், திறந்தாலும், எந்தப் பக்கம் திரும்பினாலும் இழையினியின் திருமண கோலமே அவன் கண்களுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றியது.

 

நான்கு மாதங்களை பல்லைக் கடித்துக் கொண்டு வெகு சிரமப்பட்டு கடத்தியவன் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அவளைத் தேடி சென்று பார்த்து விட வேண்டும் என்ற முடிவோடு இலங்கைக்கு செல்லத் தயாராகினான்.

 

ஆனால் அங்கே அவனுக்கு யாரையும் தெரியாது யாரிடம் சென்று பேசி, எப்படி அவளை சந்திப்பது என்று புரியாமல் அவன் தவித்துக் கொண்டிருக்கையில் கடவுளாகப் பார்த்து அவனுக்கு வெற்றியின் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

வெற்றியின் சொந்த ஊர் இலங்கையில் நுவரெலியா பிரதேசம். 

 

இலங்கையில் தனது இன்சினியரிங் படிப்பை முடித்தவன் மலேசியாவில் ஆதவன் பணி புரியும் அதே கம்பெனியில் தான் ஒரு வருடத்திற்கு முன்பு இணைந்திருந்தான்.

 

ஆரம்பத்தில் வெற்றி வேலைக்கு சேர்ந்திருந்த நேரம் அவ்வப்போது சந்தித்து கொள்ளும் போது ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொள்பவர்கள் நாளடைவில் மெல்ல மெல்ல சிறிது நட்புறவோடு பேச ஆரம்பித்திருந்தனர்.

 

ஒரு நாள் சகஜமாக வெற்றியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற தன் எண்ணத்தை பற்றி ஆதவன் கூறவே தன் வீட்டில் சென்று அவனைத் தங்குமாறு வற்புறுத்திய வெற்றி அவன் தங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அவனுக்காக தயார் செய்து கொடுத்தான்.

 

அது மட்டுமின்றி அவன் அங்கே தங்கியிருக்கப் போகும் இரண்டு வருட காலப்பகுதியில் அங்கேயே இருந்து கொண்டு அவன் தனது வேலையை தொடரவும் எல்லாவிதமான ஆயத்தங்களையும் வெற்றி செய்து கொடுக்க இரண்டு மாதங்கள் கழித்து ஆதவன் இலங்கையை நோக்கி புறப்பட்டான்.

 

வள்ளியம்மை மற்றும் தமிழ்ச்செல்வன் கூட அவனது எல்லாவிதமான முடிவுகளுக்கும் அவனுக்கு பக்கபலமாக இருக்க அந்த ஒரு விடயமே அவனுக்கு எல்லையில்லா தைரியத்தை வாரி வழங்கியது.

 

இலங்கைக்கு வந்து சேர்ந்த கணம் முதல் இழையினி எங்கே இருக்கிறாள்? என்ன செய்கிறாள் என்று தேடுவதே அவனுக்கு வேலையாகிப் போனது.

 

தன் அலுவலக வேலைகளுக்கு நடுவிலும் தன் தாய், தந்தையின் ஆறுதலுக்கு நடுவிலும் இழையினியைத் தேடும் பணியை தொடர்ந்தவன் தேடலுக்கு பதிலாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அவளை அவன் கண்களில் அந்த கடவுள் காட்டியிருந்தார்.

 

தன் விட்டு போன நம்பிக்கை மீண்டும் தனக்கு கிடைத்து விட்ட சந்தோஷத்துடன் அவளைத் தேடி வந்து சேர்ந்தவன் தன் ஒட்டுமொத்த கதையையும் அவளிடம் ஒப்புவித்து இருக்க இழையினியோ அவன் கூறியவற்றை எல்லாம் கேட்டு அதிர்ச்சியாக அவனை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்……