உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 16

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 16

ஆதவன் மற்றும் இழையினி நின்று கொண்டிருந்த அந்த மலையுச்சியில் மரங்களின் சலசலப்பும், பறவைகளின் ஒலியுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 

அத்தனை நேரமாக வானில் சூரியனை உலாவ விட்டு ரசித்து கொண்டிருந்த வெண்மேகங்கள் எல்லாம் சட்டென்று கறுத்துப் போக மழைக் காற்று அந்த இடத்தை சுற்றி வளைத்து கொண்டது.

 

நொடி நேரத்துக்குள் மாற்றமடைந்த அந்த வானிலை போலவே இழையினியின் மனமும் தன் இயல்பு நிலையைத் தொலைத்து தவித்துக் கொண்டிருந்தது.

 

தன் திருமணம் நின்று போன சம்பவத்தின் பிண்ணனியில் இத்தனை விடயங்கள் அடங்கியிருக்க கூடுமென்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

 

பணத்தை முதன்மைப் படுத்தி தன் வாழ்வை திசைமாற்றிய அசோகனை குற்றம் சொல்லுவதா? இல்லை உண்மையைத் தெரிந்தும் மூடி மறைத்த விஜயதேவி, கௌசிக்கை குறை சொல்லுவதா?

 

யாரைக் குறை சொன்னாலும் நடந்து முடிந்த விடயங்களை மாற்றவா முடியும்? 

 

இல்லை இந்த உலகத்தை விட்டே பிரியாவிடை பெற்றுச் சென்ற தன் அன்னையை திருப்பிக் கொண்டு வர முடியுமா? 

 

மனதிற்குள் பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டு அவளை இம்சை செய்ய தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவள் அங்கிருந்த கற்குன்றில் சோர்வாக அமர்ந்து கொண்டாள்.

 

ஆதவன் இழையினி இப்படி தான் நடந்து கொள்ளுவாள் என்று ஏற்கனவே சிறிது யூகித்து இருந்ததனால் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவள் முன்னால் சென்று முழங்காலிட்டு அமர்ந்து கொண்டான்.

 

“இழையினி!” ஆதவனின் குரல் கேட்டு மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கலங்க மீண்டும் தன் முகத்தை குனிந்து கொள்ள அவள் முகத்தை நிமிர்த்த எண்ணி தன் கையை அவளருகில் கொண்டு சென்றவன் பின் தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.

 

இழையினி தலை குனிந்து அமர்ந்திருக்க அவளது கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளிகள் ஆதவனின் காலின் மேல் பட்டுத் தெறிக்க 

“இழையினி! கொஞ்சம் நிமிர்ந்து என்னைப் பாருங்க” இம்முறை சற்று கண்டிப்போடு அழைத்து அவளை தன்னை நிமிர்ந்து பார்க்கச் செய்தான் ஆதவன்.

 

“இப்போ நீங்க உங்க கண்ணீரை கொண்டு என் காலை நனைப்பதால் எதுவும் மாறப் போவதில்லை இழையினி மேடம்! என் கால் ஈரமாகும் உங்க கண் இரண்டும் சிவந்து போகும் அவ்வளவுதான் நடந்த எதுவும் மாறாது ஒருவேளை உங்க கல்யாணத்துக்கு அப்புறம் இந்த விடயங்கள் எல்லாம் தெரிய வந்து அப்போ உங்க தாத்தா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி எல்லாவற்றையும் மாற்றியிருந்தால் அதனால் நீங்க தான் இன்னும் பாதிக்கப்பட்டு இருப்பீங்க நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுன்னு நினைத்துக் கொள்ளுங்க!”

 

“நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை தான் ஆதவன் அதை நான் மறுக்கல இந்த விடயத்தை எல்லாம் கௌசிக் என் கிட்டயாவது ஆரம்பத்தில் சொல்லியிருந்தால் நான் ஏதாவது செய்து இருப்பேன் இல்லையா? என் கல்யாணம் நின்று போனதை எண்ணி எண்ணி என் அம்மாவும் மனம் முழுவதும் கவலையோடு இந்த உலகத்தை விட்டு போய் இருக்க மாட்டாங்க தானே?” அழுகையினூடே தேம்பி தேம்பி கேட்டவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவளது கண்ணீரை துடைத்து விட வேண்டும் என்ற ஆவலில் அவன் கைகள் பரபரக்க வெகு சிரமப்பட்டு தன் கைகளை கட்டுப் படுத்தி வைத்தவன் சிறு புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

“இழையினி நான் ஒரு விடயம் சொல்லுறேன் கவனமாக கேட்டுக் கொள்ளுங்க! இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை இங்கே யாரும் நிரந்தரமாக இருக்கப்போறதும் இல்லை நீங்களோ, நானோ எல்லோரும் ஒரு நாள் கடவுள் கிட்ட போகத் தான் வேண்டும் ஆனால் அந்த கால எல்லை ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசமானது பெரியவங்க அடிக்கடி சொல்லுவாங்க கடவுள் நல்லவர்களை எல்லாம் தன் கூடவே வைத்துக் கொள்ளுவாராம் அது தான் உங்க அம்மாவையும் கொஞ்சம் சீக்கிரமாக தன் கிட்ட எடுத்து கொண்டார் போல! 

 

உங்க அம்மா உங்களை பற்றி தினமும் கவலைப் பட்டுட்டே இருந்தாங்கன்னு நீங்க சொன்னீங்க தானே? அப்போ அவங்களை சந்தோஷப்படுத்த நீங்க என்ன செய்யணும் இந்த அழுகை, கண்ணீர், எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறது இதை எல்லாம் விட்டுட்டு சந்தோஷமாக இருக்கணும் அது தான் அவங்களுக்கு சந்தோஷத்தை தரும்” ஆதவன் பேசப் பேச அவனையே விழியகலாமல் பார்த்து கொண்டு இருந்த இழையினி

 

“நீங்க என்னை விரும்பியதால் தான் அந்த கல்யாணத்தை நிறுத்த பார்த்தீங்களா ஆதவன்?” என்று கேட்க அத்தனை நேரமாக அவளை பார்த்து தன் கவலையையும் மறந்து புன்னகையுடன் அமர்ந்திருந்தவன் சட்டென்று முகம் இறுக எழுந்து நின்றான்.

 

“நீ என்னை பற்றி புரிந்து கொண்டது இவ்வளவு தானா இழையினி? நான் தான் எல்லாமே சொன்னேனே அதற்கு பிறகும் உன்னால் எப்படி இப்படி? சத்தியமா நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல இழையினி! 

 

ஆமா நான் உன்னை காதலித்தேன், காதலிக்கிறேன், காதலித்துட்டே இருப்பேன் தான்! அதற்காக மணமேடையில் வைத்து கல்யாணத்தை நிறுத்தி அந்த பொண்ணை கஷ்டப்படுத்தி அவ காதலை அடைந்து கொள்ள நினைக்கும் கேவலமான எண்ணம் எனக்கு இல்லை!

 

ஒரு வேளை ஆரம்பத்திலேயே கௌசிக் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு நீ தான்னு தெரிந்து இருந்தால் நான் உன்னை பார்த்து கூட இருக்க மாட்டேன் மணமேடையில் நீ கண் கலங்கி நிற்கும் போதே நான் மொத்தமாக நொறுங்கி போயிட்டேன் தெரியுமா? அப்போவே எனக்கு மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சுடுச்சு தப்பு பண்ணிட்டேனேன்னு உன்னை அந்த நிலைமையில் பார்த்த ஒவ்வொரு கணமும் தவித்துப் போனேன்

 

ஆனா நீ என்னை இவ்வளவு சீப்பா நினைச்சுட்ட! கௌசிக் உன்னை விரும்பியது எனக்கு தெரியும் அதனால் தான் அடுத்த நாளே உங்க இரண்டு பேரையும் சந்தித்து பேச வைக்கணும்னு நினைத்தேன் ஆனால் அதற்குள் அவன் வாய் திறந்து தன் விருப்பத்தை சொல்ல முடியாத கோழையாகிட்டான் 

 

எனக்கு உன்னை கட்டாயப்படுத்தி தான் காதல் வர வைக்கணும்னா அந்த கல்யாணம் நின்று போன ஒரு மாத காலத்துக்குள் நான் என்னென்னவோ செய்து இருக்கலாம் அப்படி செய்யுறது உண்மையான காதல் இல்லை உனக்காக நான் இருக்கேன்னு உனக்கு புரிய வைக்கணும்னு நினைத்தேன் உன்னை கலங்க வைக்கக் கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் உன்னை உனக்கே தெரியாமல் பாதுகாத்து வந்தேன் அது உனக்கு தெரியுமா? 

 

நீ வெளியே வந்து போகும் நேரமெல்லாம் யாரும் உன்னை தப்பாகவோ, மனது நோகும் படியோ பேசிடக் கூடாதுன்னு உனக்கு நிழலாக வந்தேன் அந்த நேரம் எல்லாம் இப்படி ஒருவன் இருக்கான்னே தெரியாமல் நீ இருப்ப அப்போ கூட எனக்கு கஷ்டமாக இருக்கல ஆனா நீ இப்போ கேட்ட கேள்வி என்னை, என் காதலை ரொம்ப அடி வாங்க வைத்து விட்டது இழையினி!” எப்போதும் சிரிப்போடும், புன்னகையுடனும் தன் முன்னால் வலம் வருபவன் இப்போது முகம் இறுக எந்தவொரு உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் முன்னால் நின்று கொண்டிருக்க அவன் தன்னை ஒருமையில் பேசியதைக் கூட கண்டு கொள்ளாமல் நின்றவளுக்கு தான் கூறிய வார்த்தைகளின் வீரியம் அப்போது தான் புரிந்தது.

 

“ஐ…ஐ யம் சாரி ஆதவன்! நான் ஏதோ ஒரு பதட்டத்தில், டென்ஷனில் ரியலி சாரி ஆதவன்!” இழையினி மன்னிப்பு கேட்கும் முகமாக முகம் முழுதும் கவலையில் வாடிப் போக அவன் முன்னால் வந்து நிற்க 

 

அவளது கலங்கிய முகத்தை பார்த்து சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்தவன்

“பரவாயில்லை இழையினி மேடம் நான் எல்லாம் உங்களை தப்பாகவே எடுக்க மாட்டான்! நீங்க கேட்டது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அதற்காக நான் கோபம் எல்லாம் படமாட்டேன் உங்க இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படி தான் கேட்டு இருப்பேன் சரி சொல்லுறது தான் சொல்லுறோம் அப்படியே என் மனதில் இருக்கிற விடயத்தையும் சொல்லிடுவோமேன்னு தான் அவ்வளவு நீளமாக பேசினேன் ஆனா அதற்காக நான் விளையாட்டாக பேசியதாக எடுக்க வேண்டாம் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் உண்மை” அவள் கண்களை பார்த்து கொண்டே கூறவும் சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள் பின்னர் சட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

 

“இழையினி மேடம்! இப்படி உச்சி மலையில் விட்டுட்டு போனால் என்ன அர்த்தம் நில்லுங்க நானும் வர்றேன்” ஆதவன் மூச்சு வாங்க சத்தமிட்டு கொண்டே இழையினியைப் பின் தொடர்ந்து செல்ல அவளோ அவன் பக்கம் திரும்பியும் பாராமல் நடந்து செல்லத் தொடங்கினாள்.

 

“இப்படி அடிக்கடி டென்ஷன் ஆனா சீக்கிரமாக முகமெல்லாம் சுருங்கிப் போயிடுமாம் இழையினி!” அவனது கூற்றில் சட்டென்று நின்றவள் அவனை திரும்பி பார்க்க

 

“யப்பா! இவ்வளவு நேரமாக காட்டுக் கத்தல் கத்தியும் திரும்பிப் பார்க்கதவங்க முகத்தை பற்றி பேசவும் சட்டுன்னு திரும்பிப் பார்க்குறாங்களே! இது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் என் சக்தியை வீணாக்கியிருக்க மாட்டேனே!” என்றவாறே சிரித்துக் கொண்டே அவள் முன்னால் வந்து நின்றான்.

 

“இதோ பாருங்க ஆதவன் நீங்க என் கிட்ட பேசணும்னு சொன்னீங்க அதற்கு உங்களுக்கு நேரமும் தந்தேன் நீங்க பேசுவதையும் கேட்டேன் இதற்கு மேல என்கிட்ட எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்” அவனை நிமிர்ந்து பார்த்து படபடப்புடன் கூறியவள் அவனைத் தாண்டி செல்ல போக 

 

மறுபடியும் அவள் முன்னால் வந்து நின்றவன்

“இழையினி நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலையே!” குழப்பமாக அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.

 

“ஆதவன் நீங்க சொன்ன மாதிரி நடந்த விடயங்களை மாற்ற முடியாது, யாருக்கு யாரோ அவங்க தான் சேர முடியும், கடவுள் நல்லவர்களை தன் கிட்ட எடுத்து கொள்வார் எல்லாம் சரி அது தான் உண்மை அதை எனக்கு புரிய வைத்து விட்டீங்க அதற்கு ரொம்ப நன்றி இப்போ நான் இங்கே இருந்து போகலாமா?” 

 

“எனக்கு சத்தியமாக ஒண்ணுமே புரியல இழையினி! இப்போ நீங்க கோபமாக போகும் அளவுக்கு இங்கே என்ன நடந்தது?”

 

“உங்களுக்கு சொன்னா புரியாது ஆதவன்! உங்க மனதிற்குள் இருக்கும் ஆசைகள் எல்லாம் ஒரு நாளும் நடக்காது இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் உங்க வீசா முடிந்து மறுபடியும் நீங்க உங்க சொந்த ஊருக்கு போக வேண்டி வரும் அதனால் என்னைப் பற்றிய எண்ணங்களை எல்லாம் இப்போவே கை விட்டுடுங்க அதெல்லாம் நடக்காது”

 

“ஏன்? நான் உங்களை விட வசதி குறைவானவன்னு நீங்களும் யோசிக்குறீங்களா?”

 

“சீச்சீ! என்ன உளறல் இது? பணத்தை பார்த்து மனிதனை எடை போடும் ஆள் இல்லை நான்” 

 

“அப்போ வேறு என்ன பிரச்சினை? இவ்வளவு நேரமாக என் கூட நல்லா பேசிட்டு தானே இருந்தீங்க என்னைப் பிடிக்காமாலா இவ்வளவு நேரம் உங்க கூட பேச என்னை அனுமதித்தீங்க இழையினி?” ஆதவனின் கேள்வியில் இழையினி பதிலேதும் கூற முடியாமல் தன் உதட்டை கடித்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

 

“உங்க மனதிற்குள் இப்போ நிறைய கேள்விகளும், குழப்பங்களும் இருக்கும் அது எனக்கு புரியுது இழையினி நான் உங்களை ஒரு நாளும் கட்டாயப்படுத்த மாட்டேன் இரண்டு வருடங்கள் காதலை சொல்லாமலே காத்திருந்த எனக்கு காதலை சொல்லிய பின்பு இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பது ஒண்ணும் பெரிய விடயம் இல்லை நான் இந்த விடயத்தை பற்றி எல்லாம் பேச ஆரம்பிப்பதற்கு முதலே என்னோட முடிவு மாறாதுன்னு சொன்னேன் இல்லையா? இப்போதும் அதையேதான் சொல்லுறேன் என் முடிவு ஒரு நாளும் மாறாது இழையினி நான் முதன் முதலாக பார்த்து காதல் கொண்ட பெண்ணும் நீ தான்! கடைசிப் பெண்ணும் நீ தான்! இதை நான் மிரட்டலாகவோ, கட்டளையாகவோ சொல்லல மனம் நிறைந்த காதலோடு தான் சொல்லுறேன்” ஆதவன் ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக அவள் கண்களை பார்த்து கொண்டே கூற அவன் பார்வையில் அவள் மனம் தடதடக்க ஆரம்பித்தது.

 

ஆனால் அவள் மனதிற்குள்

‘மீண்டும் தாத்தா ஏதாவது பிரச்சினையை உருவாக்கிவிட்டால்?’ என்ற கேள்வி எழ சட்டென்று தன் விழிகளை தாழ்த்திக் கொண்டவள்

 

“நான் இங்கே வந்து ரொம்ப நேரமாச்சு வீட்டுக்கு போகணும்” மெல்லிய குரலில் கூற ஆதவன் அவள் வழியிலிருந்து மெல்ல விலகி நின்றான்.

 

“உங்க மனதிற்குள் இருக்கும் குழப்பத்திற்கான சரியான காரணம் எனக்கு தெரியாது இழையினி! ஆனால் ஏதோ ஒரு குழப்பம் இருக்கு அது மட்டும் தெரியும் நீங்க உங்க முடிவை நன்றாக யோசித்து எப்போ தோணுதோ அப்போ சொல்லுங்க அதற்காக உங்களுக்கு நான் கால எல்லை எல்லாம் சொல்ல மாட்டேன் ஏன்னா இது ஒண்ணும் பரீட்சை இல்லை நேரக்கெடு வைத்து தீர்மானிக்க! வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் நிதானமாக தான் எடுக்கணும் இழையினி! உங்க பதிலுக்காக எப்போதும் போல சந்தோஷமாகவே நான் காத்திருப்பேன் இப்போ நீங்க வீட்டுக்கு கிளம்புங்க வானம் வேற இருட்டி இருக்கு மழை வருமோ தெரியலை!” ஆதவன் மழை வருமோ தெரியவில்லை என்று முழுதாக கூறி முடிப்பதற்குள் பலத்த சத்தத்துடன் இடி இடித்து மழை சோவென பெய்ய ஆரம்பித்தது.

 

“ஆதவன் வாங்க!” ஆதவனின் கை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு சென்ற இழையினி அந்த மலைப்பாதையில் இருந்த ஒரு குகை போன்ற கற்பாறையின் கீழ் ஒதுங்கி கொள்ள அவனோ அவள் பிடித்திருந்த தன் கையையே பார்த்து கொண்டு நின்றான்.

 

எப்போதும் விடாமல் பேசிக்கொண்டே இருப்பவன் திடீரென்று அமைதியாக நிற்க ‘என்னாச்சு திடீர்னு அமைதியாகிட்டாங்க?’ என்று நினைத்து கொண்டே அவனின் புறம் திரும்பி பார்த்தவள் அவனது பார்வை தங்கள் இருவரது கைகளின் மேலும் இருக்கிறது என்பதை கண்டு கொண்டதுமே அவசரமாக தன் கையை விலக்கிக் கொண்டாள்‌.

 

அவளது செயலில் ஆதவனது இதழ்கள் புன்னகையில் விரிய அதைக் கண்டு கொள்ளாதவள் போல அவள் தன் பார்வையை அங்குமிங்கும் சுழல விட்டபடியே நின்று கொண்டிருந்தாள்.

 

வெயில் காலத்திலேயே சற்று குளிராக இருக்கும் அந்த பிரதேசம் இப்போது சோவென்று பெய்யும் மழையில் பனிக்கட்டியைப் போல குளிராகி விட ஆதவனுக்கு உடலெல்லாம் நடுங்க தொடங்கியது.

 

இழையினி இரண்டு வருடங்களாக இந்த குளிர்கால நிலைமைகளுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டதால் அவளுக்கு அந்த குளிர் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

ஆனால் ஆதவன் இருக்கும் பிரதேசம் குளிரானது தான் என்றாலும் இந்தளவிற்கு குளிரை அவன் அனுபவித்ததில்லை.

 

அனுபவித்ததில்லை என்பதை விட அந்த நிலைமைகளுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை என்பது தான் உண்மை.

 

இப்போது இந்த குளிரைத் தாங்க முடியாமல் அவன் நடுநடுங்கி போய் நிற்க அவனைப் பார்க்கவே இழையினிக்கு கவலையாகிப் போனது.

 

மூன்று வருடங்களாகப் பெற்றவர்களைப் பிரிந்து இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவர்களுடன் மீண்டும் தன் நேரத்தை செலவிட ஆரம்பித்தவன் இப்போது மீண்டும் இரண்டு வருடங்கள் அவர்களை விட்டு பிரிந்து தனக்காக இங்கே இருந்து கஷ்டப்படுகிறானா? என்ற யோசனையுடன் அவனை மெல்ல திரும்பி பார்த்தாள்.

 

தன்னிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த காலை வேளையில் மலையேறி வந்தது மட்டுமின்றி, ஓடி களைத்து இப்போது குளிரிலும் நடுங்கி நிற்க அவனைப் பார்த்து அவள் மனதிற்குள் சிறு சலனம் எழுந்தது.

 

‘சேச்சே! இது தப்பு! வீணாக எந்த ஆசையும் வளர்த்துக் கொள்ளாதே இழை!’ தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டவள் கண்களோ அவளையும் மீறி அவனை அளவிட ஆரம்பித்தது.

 

அடர்ந்த புருவம், அதன் கீழ் இருக்கும் அந்த கண்கள் எதிரில் நிற்பவரை கட்டியே போட்டுவிடும் அவ்வளவு கூர்மையான பார்வை, எந்த நிலையிலும் புன்னகையைத் தொலைக்காத இதழ்கள், மாநிறத்தை ஒத்த நிறம், உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்திருப்பது போன்ற தேகம் என்று அவனை மேலிருந்து கீழாக பார்த்து கொண்டே அவள் நிற்க ஆதவனின் இதழ்களோ தன் புன்னகையைக் கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது.

 

அவன் தான் அவனைப் பார்த்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டதால் தான் புன்னகைக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட இழையினி சட்டென்று தன் விழிகளை வேறு புறம் திருப்பிக் கொள்ள அவனோ அவளது செய்கைகள் ஒவ்வொன்றையும் தன் மனதிற்குள் பொக்கிஷமாக பதிந்து கொண்டான்.

 

சிறிது நேரத்தில் மழை நின்று விட அவனைத் திரும்பிப் பார்த்தவள்

“மழை நின்னுடுச்சு சீக்கிரமாக வீட்டுக்கு போங்க திரும்பவும் மழை வந்தால் இங்கே பாதையில் அட்டை வர ஆரம்பித்து விடும் நான் வர்றேன்” என்று விட்டு வேகமாக அங்கிருந்து நடந்து செல்ல அவனும் தன் புன்னகை மாறாத முகத்துடனேயே அவளைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.

 

மலைப் பாதையில் குளிர் காற்று வீசும் அந்த நேரத்தில் தன் மனதிற்கினியவளைப் பின் தொடர்ந்து செல்லும் அந்த பயணம் கூட அவனுக்கு சுகமானதாகவே இருந்தது.

 

ஆதவன் தன் பின்னால் தான் வருகிறான் என்று தெரிந்தும் அவனின் புறம் மறந்தும் இழையினி தன் பார்வையை திருப்பவில்லை.

 

வேகமாக அங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இழையினி ஓட்டமும் நடையுமாக நடந்து செல்ல அப்போது அவள் பின்னால் திடீரென்று ஏதோ ஒன்று விழுந்தது போல் பெரிதாக சத்தம் கேட்க அதைத் தொடர்ந்து

 

“அம்மா!” என்ற ஆதவனின் அலறலும் கேட்டது.

 

அவனது அலறல் கேட்ட அடுத்த கணமே பதட்டத்துடன் திரும்பிப் பார்த்த இழையினி அங்கே தான் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்……

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!