ஆதவனின் அலறல் சத்தம் கேட்டு பதட்டத்துடன் திரும்பிப் பார்த்த இழையினி அங்கே அவன் சேற்றில் கால் சறுக்கி விழுந்து கிடந்ததைப் பார்த்ததுமே வேகமாக அவனருகில் ஓடிச் சென்றாள்.
“அச்சோ! ஆதவன் என்னாச்சு?” அவனைத் தூக்கி விடுவதற்காக கையை நீட்டியபடியே அவள் கேட்கவும்
அவளை நிமிர்ந்து பார்த்தவன்
“ஏன் மேடம் இந்த பாதையில் அட்டை இருக்கும், அது இருக்கும், இது இருக்கும்னு சொன்ன நீங்க சகதி இருக்கும்னு சொல்லவே இல்லையே!” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே கேட்க அவளோ அவனை நோக்கி நீட்டிய தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டு இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.
“சரி! சரி! நான் தான் பார்த்து நடந்து வந்து இருக்கணும் என் தப்பு தான்! இழையினி மேடம்! ப்ளீஸ் கொஞ்சம் எழும்பி நிற்க உதவி பண்ணுங்களேன் சுத்தமாக என்னால எழும்ப முடியல” தன் இடுப்பை பிடித்து கொண்டு வலியால் முகம் சுருக்கியவனைப் பார்த்ததுமே கவலை கொண்டவள் அவனை நோக்கி தன் கையை நீட்டினாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்!” சிறு புன்னகையுடன் சேறு ஒட்டியிருந்த தன் கையை தட்டி விட்டபடியே அவளது கையைப் பிடித்து கொண்டு எழுந்து கொள்ளப் போனவன் கால்களோ தள்ளாட மீண்டும் அவன் சேற்றில் சறுக்கி அதே இடத்தில் விழ அவனின் கையை பற்றி இருந்த இழையினியும் நிலைதடுமாறி அவன் மேல் சரிந்து விழுந்தாள்.
தன் மேல் சரிந்து விழுந்தவள் சேற்றில் விழுந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தோடு ஆதவன் அவள் இடையின் இருபுறமும் தன் கையை வைத்து பிடித்து கொள்ள அவனது தொடுகையில் விதிர்விதிர்த்துப் போன இழையினி தன் விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அளவுக்கு விரிய அவன் முகத்தையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுபுறம் ஆதவன் தன் மேல் சரிந்து கிடந்தவள் முகத்தைப் கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருக்க அவன் மனமோ முதன் முதலாக அவள் தன் மேல் இதே போன்று மோதி நின்ற அந்த நாளை நோக்கி அவனை அழைத்துச் சென்றது.
அன்று அவளிடம் தன் காதலை சொல்லிய பிறகு வரும் ஒவ்வொரு தருணங்களையும் தன் மனப்பெட்டகத்தில் சேமிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவன் இன்று அந்த எண்ணத்தை எண்ணிப் பார்த்தவனாக இப்போது அந்த ஒவ்வொரு நிமிடத்தையும் தனக்குள் பதித்துக் கொண்டான்.
எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் அவ்வாறே பார்த்து கொண்டிருந்தனரோ அவர்களுக்கே தெரியவில்லை.
மரங்களில் தாவித் திரியும் குரங்குகளின் சத்தம் கேட்டு தன் சுயநினைவுக்கு வந்த இழையினி அவசரமாக ஆதவனின் அணைப்பில் இருந்து எழுந்து கொள்ள அவனோ கனவுலகில் இருப்பதைப் போலவே சேற்றின் மேல் படுத்துக் கிடந்தான்.
அவனது அணைப்பில் இத்தனை நேரமாக தன்னை மறந்து இருந்திருக்கிறோமே என்று தன்னைத்தானே கடிந்து கொண்ட இழையினி முகம் சிவக்க ஆதவனின் புறம் திரும்பி பார்க்க அவனோ மெத்தையில் சொகுசாக உறங்குவதைப் போல கைகள் இரண்டையும் சேர்த்து தலையின் கீழ் வைத்துக் கொண்டு கண் மூடி படுத்திருந்தான்.
‘அய்யோ! ஆதவன்!’ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனது அருகில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டவள்
“ஆதவன்! ஆதவன்! எழுந்திருங்க இது ஒண்ணும் உங்க பெட்ரூம் இல்லை செம்மண் பாதை” தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அவனது கையில் தட்டியபடியே கூற
அவளது குரல் கேட்டு மெல்ல கண் திறந்தவன் சுற்றியிருந்த மரங்களையும், தன் கையிலிருந்த சேற்றையும் பார்த்து விட்டு சமாளிப்பாக சிரித்துக் கொண்டே
“ஹிஹிஹி! சாரி!” என்றவாறே எழுந்து கொள்ளப் போக இம்முறை அவனது பக்கவாட்டுப் புறமாக வந்து நின்று கொண்ட இழையினி அவனது ஒரு கையை தன் தோளில் போட்டுக் கொண்டு அவன் எழுந்து நிற்க உதவி செய்தாள்.
‘ரொம்ப விவரம் தான்!’ மனதிற்குள் அவளைப் பார்த்து நினைத்துக் கொண்டவன்
வெளியே
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்!” என்று கூற
பதிலுக்கு அவனைப் பார்த்து சிறு புன்னகை சிந்தியவள்
“இப்போ உங்களுக்கு நடக்க முடியுமா?” என்று கேட்டாள்.
“இருங்க பார்க்கிறேன்” என்றவாறே ஆதவன் ஒரு அடி எடுத்து வைக்க அவனது காதினுள் அவன் இடுப்பிற்குள் ஏதோ பாத்திரங்கள் உருளுவது போல ஓசை கேட்டது.
“அய்யோ! என் இடுப்பு போச்சே! இப்போ நான் என்ன பண்ணுவேன்? அந்த ராஜா அவனைத் தூங்க விடாமல் நைட் பூராவும் அவனை வைத்து மொக்கை போட்டதற்கு சாபம் கொடுத்தான் அவன் வாக்குக்கு இவ்வளவு சக்தி இருக்கும்ன்னு எனக்கு தெரியாமே போச்சே! இப்போ நான் எப்படி வீட்டுக்கு போவேன்? இப்படி விஸ்கி விஸ்கி நடந்து போறதுக்கு இடையில் விடிஞ்சுடுமே! இலியானா மாதிரி வளைந்து, நெளிந்து டான்ஸ் எல்லாம் ஆடுவேனே! இப்போ இப்படி ஆகிடுச்சே! இனி நான் எப்படி டான்ஸ் பண்ணுவேன்? அய்யோ! கடவுளே! இது என்ன சோதனை?” ஆதவன் தன் பாட்டிற்கு ஏதேதோ புலம்பிக் கொண்டு நிற்க
சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டிய இழையினி
“ஆதவன் ரிலாக்ஸ்! இப்போ என்ன ஆச்சுன்னு பழைய காலத்து பாட்டி மாதிரி புலம்புறீங்க? என் வீடு இங்கே இருந்து பத்து நிமிடத் தூரத்தில் தான் இருக்கு அங்கே முத்து தாத்தா இருக்காரு அவர் கிட்ட சொல்லி மருந்து போட்டு விட சொல்லுறேன் அதற்கிடையில் உங்க பிரண்டை ஏதாவது வண்டியை எடுத்துட்டு வரச் சொல்லுங்க! இப்போ கிழவி மாதிரி புலம்பாமல் மெல்ல மெல்ல நடந்து வாங்க உங்க வெயிட்டை என்னால மொத்தமாக தாங்க முடியல!” அவனை நடக்குமாறு சைகை செய்ய அவனும் தன்னால் முடிந்த மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு தன் வலியைப் பொறுத்தபடி அவளுடன் இணைந்து நடந்து சென்றான்.
பத்து நிமிடங்களில் அவள் வீட்டுக்கு வந்து சேர வேண்டியவர்கள் இருபது நிமிட அலைச்சலுக்குப் பின் ஒரு வழியாக அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
எப்போதும் நேரத்திற்கே வீட்டிற்கு வந்து விடும் இழையினி இன்று வெகு நேரமாகியும் வரவில்லை என்ற அச்சத்துடன் முத்து தாத்தா பதட்டமாக வாசலுக்கும் வீட்டிற்குமாக நடந்து கொண்டிருக்க
“முத்து தாத்தா!” என்றவாறே இழையினி வாயில் கதவைத் திறக்க
அவளது குரல் கேட்டதுமே
“இழை பாப்பா!” என்றவாறே ஓடி வந்தவர் அவளது தோளைப் பற்றி கொண்டு ஒரு ஆடவன் நிற்பதை பார்த்து அதிர்ந்து போய் நின்றார்.
“இழை பாப்பா!” வார்த்தைகளே வெளியே வராமல் முத்து தாத்தா அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்க்கவும்
“தாத்தா இது எனக்கு தெரிந்தவர் தான் மலையேற வந்து இருந்தாரு மழை பெய்ததில் வழியில் சேறு இருந்ததைக் கவனிக்காமல் வழுக்கி விழுந்துட்டாரு இடுப்பு சுளுக்கிடுச்சு போல! கொஞ்சம் வந்து ஒரு கை பிடிங்க தாத்தா பாவம் ரொம்ப கஷ்டப்படுறாரு” இழையினி சிறிது விளக்கம் சொல்லியபடியே கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவரோ அவசரமாக ஓடி வந்து ஆதவனின் மறுபுறம் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
அவர்கள் இருவரது உதவியுடனும் மெல்ல மெல்ல வீட்டிற்குள் நடந்து சென்ற ஆதவன் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்ள இழையினி முத்து தாத்தாவின் புறம் திரும்பி
“இவருக்கு ஒத்தடம் கொடுக்க கொஞ்சம் வெந்நீர் வைங்க தாத்தா! நான் போய் டிரஸ் மாற்றிட்டு வர்றேன்” என்று விட்டு
அவன் முன்னால் வந்து நின்று
“கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க ஆதவன் எல்லாம் சரியாகிவிடும்” என அவன் கையிலும் தட்டிக் கொடுத்து விட்டு சென்று விட முத்து தாத்தா மாத்திரம் அவனை ஏற இறங்க பார்த்து கொண்டே சமையலறை நோக்கி நடந்து சென்றார்.
இதற்கு முன் இழையினி நண்பர்கள் என்றோ, தெரிந்தவர்கள் என்றோ விஜியைத் தவிர வேறு யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை அப்படியிருக்கையில் திடீரென ஒரு ஆண் மகனுடன் அவள் வரவும் அவர் குழம்பித் தான் போனார்.
அவன் யார்? என்ன? என்று கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றினாலும் தன் எல்லையை தாண்டி அதிகமாக பேசி விடக் கூடாதே என்ற தயக்கமும் அவருக்குள் எழுந்தது.
இங்கே அவர் பலத்த சிந்தனையோடு அவனுக்கு ஒத்தடம் வைப்பதற்காக வெந்நீர் வைத்துக் கொண்டிருக்க மறுபுறம் தன் உடையை மாற்றி கொண்டு வந்த இழையினி
“முத்து தாத்தா! அவர் சேற்றில் விழுந்ததில் டிரஸ் எல்லாம் அழுக்காகிடுச்சு நான் என் ரூமுக்கு பக்கத்தில் இருக்கும் மற்ற ரூம் பாத்ரூமில் ஹீட்டர் ஆன் பண்ணி வைத்து இருக்கேன் கொஞ்சம் அவருக்கு அந்த அழுக்கை சுத்தம் பண்ண உதவி பண்ணுங்க தாத்தா! நான் இந்த வெந்நீரை ஒத்தடம் வைக்க எடுத்துட்டு வர்றேன் சரியா? ப்ளீஸ்!” என்று கேட்க
அவரோ
“என்ன பாப்பா இது? இந்த வேலையை செய்யுங்கன்னு சொன்னா செய்யப் போறன் அதை வுட்டுட்டு ப்ளீச்னு எல்லாம் சொல்லுற நான் இப்பவே போய் அந்த தம்பியைப் பார்க்கேன்” என்றவாறே படபடப்புடன் அங்கிருந்து வெளியேறி சென்றார்.
ஆதவனை மெல்ல கைத்தாங்கலாக அழைத்து கொண்டு சென்றவர் அவன் உடலிலும், ஆடையிலும் ஒட்டியிருந்த சேற்றை எல்லாம் சுத்தப்படுத்தி விட்டு அந்த அறையிலேயே அவனை அமரச் செய்ய சரியாக அந்த நேரம் பார்த்து இழையினியும் அவனுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காக வெந்நீரை எடுத்துக் கொண்டு வந்தாள்.
சிறு நேரம் வலியால் துடித்துப் போனவன் இழையினி வலியைப் போக்க கொடுத்த மாத்திரையை போட்டு விட்டு அசதியில் கண்ணயர்ந்து விட அவளும் முத்து தாத்தாவிடம் அவனைத் தானே பார்த்து கொள்வதாக கூறி விட்டு அந்த அறையிலேயே அவனருகில் ஒரு நாற்காலியை எடுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்டாள்.
ஆதவனை அவள் பார்த்தது என்னவோ ஒன்றிரண்டு தடவைகள் தான் ஆனால் அந்த எண்ணம் சிறிதும் அவளுக்கு இல்லை.
பல நாட்கள் பழகியது போன்ற ஒரு உணர்வே அவனைக் காணும் போதெல்லாம் அவளுக்குள் தோன்றியது.
எப்போதோ ஒரு புத்தகத்தில் அவள் படித்தது அப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.
நம் வாழ்வில் சிலரை சந்திப்போம் அவர்களை முதல் பார்வையிலேயே காரணம் இன்றி நாம் வெறுக்க ஆரம்பித்து விடுவோம் ஏனென்றால் நாம் பிறக்கும் போதே அந்த விடயம் நம் வாழ்வில் நிர்ணயிக்கப்பட்டு விடும் அது போலவே சில நபர்களை காரணமே இன்றி பிடித்து போய் விடும்.
‘அப்போ ஒருவேளை ஆதவன் இந்த இரண்டாவது ரகத்தில் வருவாரோ?’ தன் மனதிற்குள் எழுந்த கேள்வியோடு இழையினி அவனது முகத்தை பார்த்து கொண்டிருக்க சிறிது அசைந்து படுக்கப் போன ஆதவனின் முகம் அந்த தூக்கத்திலும் வலியில் சிறிது சுருங்கியது.
‘அச்சோ! ரொம்ப வலிக்குது போல!’ வலியில் சுருங்கியிருந்த அவனது நெற்றியை நீவி விட தன் கையை கொண்டு போனவள் ஏதோ ஒரு தயக்கத்துடன் தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள்.
வெகு நேரமாகியும் இழையினி அந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதைப் பார்த்த முத்து தாத்தா மேஜை மீது சமைத்து வைத்த காலையுணவுகளை எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவளை வந்து அழைக்க மறுபதில் எதுவும் பேசாமல் எழுந்து வந்தவள் அவர் வைத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் ஆதவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு சலனம் அவள் மனதிற்குள் எழுந்தாலும் அந்த சலனத்தை வளரவிடாமல் ஏதோ ஒரு எண்ணம் அவளைத் தடுத்து நிறுத்தியது.
அது தன் தாத்தாவைப் பற்றிய எண்ணமா? இல்லை தன் மனதைப் பற்றிய குழப்பமா? என்னவென்று அவளால் சரியாக பிரித்தறிய முடியவில்லை.
அவள் திருமணம் நின்று போன நாளிலிருந்து சென்னையில் இருந்த ஒவ்வொரு நாளும் தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதைப் போன்ற ஒரு உணர்வு அவளுக்கு எப்போதும் தோன்றும் ஆனால் அவள் சுற்றிலும் திரும்பிப் பார்த்தால் அங்கே யாரும் இருக்கமாட்டார்கள்.
அவள் பொது இடங்களில் நடந்து செல்லும் போது அவளைப் பரிதாபமாக பார்க்கும் நபர்கள் அடுத்த முறை அவளைப் பார்க்கும் போது இயல்பாக கடந்து செல்வர் அந்த தருணத்தில் அதைப் பற்றி எல்லாம் பெரிதாக எதுவும் அவள் சிந்தித்ததில்லை ஆனால் இப்போது ஆதவன் எல்லாம் கூறிய பிறகு தனக்காக அவன் தான் இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து செய்தான் என்பதை எண்ணி வியந்து போனாள்.
‘யாரு ஆதவன் நீங்க? வாழ்க்கையில் ஒரு முறை சந்தித்த பெண்ணுக்காக அவளுக்கு உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது இருந்தும் அவளுக்காக இவ்வளவு நாட்களாக காத்திருந்து! எதற்காக இதெல்லாம்? இது தான் காதலா? அப்போ கௌசிக் மேல் நான் வைத்தது கடமைக்காக வந்த காதலா?’ தன் கண்களை மூடி தனக்குள்ளேயே அவள் அந்த கேள்விகளைக் கேட்டு பார்க்க அதற்கான பதில் தான் அவளிடம் இல்லை.
ஏதேதோ எண்ணங்கள், ஏதேதோ சலனங்கள் என்று அமைதியாக அவன் முகத்தை பார்த்தபடியே இழையினி அமர்ந்திருக்க
“குட் மார்னிங் முத்தா!” என்றவாறே அந்த வீட்டிற்குள் விஜயா உள்நுழைந்தாள்.
அவளது குரலைக் கேட்டதுமே இழையினி அவசர அவசரமாக அந்த அறைக்குள் இருந்து வெளியே வர அதற்குள் விஜயா அவள் முன்னால் வந்து நின்றாள்.
“ஹேய்! இழை இந்த ரூமில் நீ என்ன செய்யுற?” அவள் பின்னால் சற்று விலகி பார்த்தவள் அங்கே கட்டிலில் ஆதவன் தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு
“ஆதவன்! ஆதவன் இங்கே எப்படி?” தன்னை மறந்து சத்தமிட அவசரமாக அவளது வாயில் கையை வைத்து மூடிய இழையினி அவளது கையைப் பிடித்துக் கொண்டு சற்று தள்ளி அழைத்துச் சென்றாள்.
“உஸ்! சத்தம் போடாதே! அடிபட்டு ரொம்ப கஷ்டப்பட்டு தூங்குறாங்க எழுந்து கொள்ள போறாங்க” ரகசியம் பேசுவதை போல இழையினி விஜயாவைப் பார்த்து கூற
“ஆமா! சத்தம் கேட்டு எழும்பி அழுவுறதுக்கு அவரு சின்ன குழந்தை பிள்ளை தானே? அது சரி அவரு எப்படி இங்க?” பதிலுக்கு குழப்பத்துடன் அவளைப் பார்த்து வினவினாள்.
அன்று ஃபேக்டரியில் வைத்து ஆதவன் தன்னிடம் பேசி விட்டு சென்றதிலிருந்து இன்று தன் திருமணம் நின்று போன சம்பவத்தின் பிண்ணனியில் நடந்தது முதல் அவன் இலங்கைக்கு வந்தது வரைக்கும் கூறி முடித்தவள் வரும் வழியில் அவன் கால் தடுமாறி விழுந்ததையும் கூறினாள்.
“ஓஹ்! அப்போ அவர் தன்னோட காதலுக்காகத் தான் உன்னை தேடி வந்து இருக்காரா?” தனக்கு எதுவுமே தெரியாது என்ற பாணியில் விஜயா இழையினியைப் பார்த்து கேட்க அவளும் ஆமோதிப்பாக தன் தலையை அசைத்தாள்.
“அப்போ அவருக்கு எப்ப நீ உன் சம்மதத்தை சொல்லப்போற?”
“சம்மதமா? என்ன பேசுற விஜி நீ?”
“அப்போ உனக்கு விருப்பம் இல்லாம தான் அவரை வீடு வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கியா?”
“ஹேய்! அவருக்கு அடிபட்டு இருக்குன்னு தான் நான் இங்கே அழைச்சுட்டு வந்தேன் மற்றபடி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை”
“ஓஹ்! இதற்கு முதல் நீ மலையேறப் போகும் போது யாருக்கும் அடிபட்டதும் இல்லை, அவங்களைத் தாண்டி நீ வந்ததும் இல்லை அப்படி தானே? ஏன் அவங்களுக்கும் நீ இப்படி உதவி செஞ்சு இருக்கலாம் தானே இழை?”
“விஜி அவங்க எல்லாம் எனக்கு தெரியாதவங்க ஆனா ஆதவன் என்னை சந்தித்து பேச தான் அங்கே வந்தாரு அதனால் தான் அவருக்கு அடிபட்டது அதோடு அவரை அப்படியே விட்டுட்டு வர முடியுமா?” இழையினியின் கேள்விக்கு மறுபடியும் பதில் கேள்வி கேட்க போனவள் எப்படியும் அவள் அதற்கும் மறுப்பாக தான் பதிலளிப்பாள் என்பதை யூகித்து கொண்டே
“சரி ஏதோ சொல்லுற பரவாயில்லை அது சரி அவர் இனி இங்க தான் இருக்கப் போறாரா?” என்று கேட்டாள்.
“இல்லை! இல்லை! மலையில் இருந்து வரும் போதே அவர் பிரண்ட்க்கு போன் பண்ணி சொல்லிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க போல!” இழையினி விஜயாவைப் பார்த்து கூறிக் கொண்டிருக்கும் போதே
“ஆதவா! ஆதவா!” பதட்டத்துடன் தன் பார்வையை வீடு முழுவதும் சுழலவிட்டபடியே ராஜா வேகமாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
“ஹலோ! ஹலோ! பாஸ் யாரு நீங்க? திடீர்னு வீட்டுக்குள்ள வர்றீங்க?” விஜயா அவசரமாக அவன் முன்னால் வழி மறித்தவாறு வந்து நிற்க
அவளை ஏற இறங்க பார்த்தவன்
“ஆதவன் எங்கே? அவனுக்கு அடிபட்டு இருக்கு அவன் இங்க தான் இருக்கான்னு எனக்கு போன் பண்ணி சொன்னானே! நான் அவன் பிரண்ட் ராஜா” என்று கூற
“ஓஹ்! அண்ணா நீங்களா? வாங்க வாங்க நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன் ஆதவன் பெயின் கில்லர் போட்டதில் தூங்கிட்டு இருக்காரு அவர் எழுந்ததும் அழைச்சுட்டு போங்க” இழையினி புன்னகை முகமாக அவனை வரவேற்க அவனோ தன் முன்னால் நின்று கொண்டிருந்த விஜயாவை மேலிருந்து கீழாக பார்த்த படியே அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
“அவனுக்கு ரொம்ப அடிபட்டுட்டாங்க?” ராஜா கவலையோடு இழையினியைப் பார்த்து கேட்கவும்
“கொஞ்சம் பலமான அடி தான் ஆனா வெந்நீர் ஒத்தடம் கொடுத்திருக்கோம் சரியாகிவிடும்” என்று கூறியவள்
“இந்த ரூமில் தான் ஆதவன் இருக்காங்க நீங்க போய் பார்க்குறதுன்னா பாருங்க அண்ணா” ஆதவன் இருந்த அறையின் புறமாக அவள் கையை காட்ட ராஜா வேகமாக அந்த அறையை நோக்கி ஓட்டமும், நடையுமாக சென்றான்.
மருந்தின் தாக்கத்தில் அசந்து தூங்கி கொண்டிருந்த ஆதவனின் அருகில் சென்று அமர்ந்து கொண்ட ராஜா அவனது கையின் மேல் தன் கையை வைக்க அவனது தொடுகையில் ஆதவன் மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தான்.
அவன் கண்களைத் திறந்ததுமே
“ஆதவா! ஆர் யூ ஓகே?” பதட்டத்துடன் ராஜா அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க
அவனைப் பார்த்து சிறிது புன்னகைத்து கொண்டவன்
“யாஹ்! இப்போ கொஞ்சம் பரவாயில்லை டா! சரி எப்படி டா நாம நம்ம வீட்டுக்கு வந்தோம்?” என்று கேட்க
“நம்ம வீட்டுக்கா? இது இழையினியோட வீடு தான் நீ அவங்க வீட்டில் தான் இன்னும் இருக்க” என்று கூறவும்
“என்ன?” ஆதவன் அதிர்ச்சியாக சுற்றிலும் திரும்பிப் பார்த்தான்.
‘அப்போ இழையினி என் பக்கத்திலிருந்து என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது எல்லாம் கனவு இல்லையா? நிஜமா?’ தூக்கத்தில் அவன் கண்ணைத் திறந்த போது இழையினி அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்போது கனவு என்று எண்ணியிருந்தவன் இப்போது அது உண்மை என்று தெரிந்ததுமே இறக்கையின்றி பறப்பதைப் போல உணர்ந்தான்.
“டேய்! ஆதவா! என்னடா ஆச்சு? ஏன்டா எதுவும் பேசாமல் இருக்க?” ராஜா அவன் தோளைப் பற்றி உலுக்க
அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டவன்
“எல்லாம் நல்ல விஷயம் தான் சரி முதலில் வீட்டுக்கு போகலாம் வா” என்றவாறே எழுந்து கொள்ள அவன் எழுந்து நிற்க உதவி செய்தவன் அவனைக் கைத்தாங்கலாக அழைத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேறி வந்தான்.
ஆதவனும், ராஜாவும் அறையிலிருந்து வெளியேறி வருவதை பார்த்த இழையினி
“ஆதவன்! இப்போ வலி பரவாயில்லையா? இன்னும் வலி இருக்கா?” கரிசனையோடு கேட்டுக் கொண்டே அவன் முன்னால் வந்து நிற்க
அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்
“இப்போ பரவாயில்லை இழையினி! உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்று கூற
பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகை சிந்தியவள்
“நன்றி எல்லாம் வேண்டாம் ஆதவன்! என்னைப் பார்க்க வந்ததால் தானே உங்களுக்கு இப்படி எல்லாம் நடந்தது அதற்காக தான் இதையெல்லாம் பண்ணேன்” எனவும் அவனுக்கோ மனதிற்குள் எங்கோ ஒரு மூலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல இருந்தது.
‘அப்போ என் மேல் உனக்கு எந்த எண்ணமும் இல்லையா இழையினி?’ வாய் வரை வந்த கேள்வியை கேட்காமல் அமைதி காத்து கொண்டவன்
“அப்போ நாங்க வர்றோம் இழையினி மேடம்!” என்றவாறே ராஜாவின் தோளைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்ல
“ஆதவன் ஒரு நிமிஷம்!” அவன் செல்லும் வழியின் முன்னால் இழையினி சிறிது தயக்கத்துடன் வந்து நின்றாள்…..