உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 18

தூரத்தில் பாயும் நீர்வீழ்ச்சியின் ஓசை காதுகளை நிறைக்க தான் தங்கியிருக்கும் வீட்டில் தன்னறையின் பால்கனியில் கைகளை கட்டிக் கொண்டு பலத்த சிந்தனையோடு நின்று கொண்டிருந்தான் பொன் ஆதவன்.

 

இன்று காலையில் தான் லூல்கந்துரவில் இருந்து நுவரெலியாவிற்கு ராஜாவோடு திரும்பி வந்தது போன்று அவனுக்கு இருந்தாலும் அதற்குள் ஒரு மாதம் ஓடிச்சென்றிருந்தது.

 

ஒரு மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட அந்த இரண்டு நாட்கள் பயணம் அவனுக்கு ஏதேதோ அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்க அதையெல்லாம் ஒவ்வொன்றாக அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

ஒரு மாதத்திற்கு முன்பு இழையினியின் வீட்டில்….

 

அன்று இழையினியின் வீட்டில் இருந்து அவர்கள் இருவரும் வெளியேறி வரும் போது தயக்கத்துடன் தங்கள் முன்னால் வந்து நின்றவளை ஆண்கள் இருவருமே யோசனையாகப் பார்த்து கொண்டு நின்றனர்.

 

“என்ன இழையினி சொல்லுங்க! ஏதாவது பேசணுமா?” ஆதவனின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள்

 

“இனி… இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் ஆதவன்! ப்ளீஸ் நான் சொல்லுவதைக் கேளுங்க வீணாக எதையும் மனதிற்குள் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்” என்று கூற 

 

அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்

“அவ்வளவுதானே! சரி இனி நான் உங்களை சந்திக்க மாட்டேன் போதுமா?” என்று விட்டு

 

ராஜாவின் புறம் திரும்பி

“வா ராஜா போகலாம்” என்றவாறே அதிர்ந்து போய் நின்றவனை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றான்.

 

“ஹேய் இழை! என்னடி இப்படி சொல்லிட்ட?” விஜயா அதிர்ச்சியாக அவளின் தோளில் கை வைத்து வினவ அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

அவளின் அமைதியே அவள் மனதை ஆதவனுக்கு புரிய வைக்க 

‘நீ சொன்ன மாதிரி இனி நானாக உன்னை தேடி வரமாட்டேன் இழையினி! ஆனா நீ கண்டிப்பாக என்னைத் தேடி வருவ ஏன்னா உன்னை நீங்கி நான் எங்கேயும் செல்லமுடியாது அதுபோல என்னை நீங்கி நீயும் எங்கேயும் செல்ல முடியாது’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவனது காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

 

அவர்கள் இருவரும் தங்கியிருந்த விடுதியின் முன்னால் காரை நிறுத்தி விட்டு ராஜா கைத்தாங்கலாக அவனை அழைத்துச் சென்று அவனது அறைக்குள்  ஒரு சாய்வு நாற்காலியில் அவனை அமரச் செய்து விட்டு அவன் முன்னால் இன்னொரு நாற்காலியை எடுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்டான்.

 

“என்னடா இப்படி பார்க்குற? ஒரு பிரண்ட் அடிபட்டு வந்து இருக்கான் அவனுக்கு உடம்பு வலி போகணும்ன்னு சூப் வாங்கிட்டு வருவோமே இல்லை அட்லீஸ்ட் பழங்களாவது வாங்கிட்டு வருவோமேன்னு உனக்கு தோணலயா?” ஆதவனின் கேள்வியில்

 

“அடிங்!” என்றவாறே கையை உயர்த்தி கொண்டு அவனை அடிக்க எழுந்து கொண்டவன் பின்னர் தன் கையை கீழே இறக்கி கொண்டு மீண்டும் அவன் முன்னால் சோர்வாக அமர்ந்து கொண்டான்.

 

“ஏன்டா நான் தான் ஆரம்பித்திலேயே சொன்னேன் தானே? அந்த பிள்ளை இதெல்லாம் கேட்டு மனசு மாறாதுன்னு இப்ப பாரு நல்லா போய் இடுப்பை உடைச்சுட்டு வந்திருக்க அம்மா போன் பண்ணி கேட்டா நான் என்ன சொல்லுவன்? பெரிய காதல் மன்னன் மாதிரி வாய் கிழிய பேசிட்டு போன நானும் நீ பேசுனது எல்லாம் வச்சு அந்த பிள்ளையை உன் காதலில் விழ வைப்பேன்னு பார்த்தா இங்க நீ சேற்றில் விழுந்து எழும்பி வந்திருக்க! என்ன கொடுமை இது?” 

 

“ராஜா! காதல் வாழ்க்கையில் இப்படி ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும் அதை எல்லாம் பார்த்தால் காதலில் ஜெயிக்க முடியாது தேங்காய் வேணும்னா தென்னை மரம் ஏறித் தான் ஆகணும் கண்ணா”

 

“அதற்கு உனக்கு அந்த மரத்தில் தேங்காய் இருக்கணும் கண்ணா!”

 

‘ஆனா இங்கே இருக்குறது எல்லாமே வெறும் குறும்பட்டியா இல்லையா இருக்கு!’ ராஜா தனக்குள்ளேயே முணுமுணுத்து கொள்ள

 

அவன் வாயசைவையேப் பார்த்து கொண்டிருந்த ஆதவன்

“நீ என்ன நினைக்குறேன்னு எனக்கு தெரியும்! அதெல்லாம் ஒன்னும் ஆகாமல் நாங்க அதை எல்லாம் சிறப்பாக பண்ணிடுவோம்! நீ ரொம்ப யோசிக்காதே! சரி நான் ஒரு விடயம் சொல்லுறேன் நீ ப்ராக்டிகலா அந்த விடயத்தை யோசித்து பாரு இப்போ நீ தான் இழையினி” எனவும்

 

“டேய் நான் ராஜா டா! அதையும் மறந்துட்டியா? கீழே விழுந்ததில் உன் தலையிலும் எங்கேயாவது அடி பட்டுடுட்டா?” அவனின் தலையில் கையை வைத்து அங்குமிங்கும் ஆராய்ச்சியாக பார்த்து கொண்டே ராஜா எழுந்து நிற்க

 

அவனது கையைத் தட்டி விட்டவன்

“டேய்! நான் சொல்ல வர்றதை முதலில் முழுமையாக கேளுடா! இப்போ நீ தான் இழையினின்னு வைத்துக் கொள்ளுவோம் சரியா? நான் தான் ஆதவன்! நான் ஒரு நாள் திடீர்னு உன் முன்னால் வந்து நின்று நான் இரண்டு வருஷமாக உங்களை லவ் பண்ணுறேன் உங்களை தேடி திரிந்து இப்போ தான் கண்டுபிடித்து இருக்கேன் நீங்க என்னை லவ் பண்ணுவீங்களான்னு கேட்டால் நீ என்ன சொல்லுவ?” கேள்வியாக அவனை நோக்கினான்.

 

“ஆஹ்! நீங்க என்ன அங்கொட ஹொஸ்பிடலில் இருந்து தப்பிச்சு வந்தீங்களான்னு கேட்பேன்”

 

“அங்கொட ஹாஸ்பிடலா?”

 

“ஆமா பைத்தியம் முற்றிப் போனவங்களை ட்ரீட்மெண்ட் பண்ற ஹொஸ்பிடல்”

 

“டேய்! இதெல்லாம் டூ மச் இல்லை! இல்லை! த்ரீ மச் ஃபோர் மச்”

 

“நீ தானேடா ப்ராக்டிகலா கேட்ட! அது தான் நானும் ப்ராக்டிகலா சொன்னேன்”

 

“சமாளிக்குற பரவாயில்லை இருக்கட்டும்! எல்லாம் தெரிந்த பையன் நீயே இப்படி யோசிக்கும் போது அவ இன்னும் இந்த உலக விவரம் தெரியாத சின்னப் பொண்ணு அவளும் உடனே என் காதலை ஏற்றுக் கொள்வதில் தயங்குவதில் தப்பேயில்லையே!”

 

“ஆனா ஆதவா இழையினி தான் இனி அவளைப் பார்க்க வர வேணாம்னு சொல்லிட்டாங்களே! நீயும் சரின்னு சொல்லிட்ட அப்புறம் எப்படி இந்த லவ், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது எல்லாம் வரும்?”

 

“நான் சென்னையில் வைத்து இழையினியைப் பார்த்த போதே ஒரு முடிவு எடுத்தேன் என் காதலை அவளுக்கு மெல்ல மெல்ல புரிய வைத்து அவள் என் காதலை உணர்ந்து கொள்ளும் அந்த ஒவ்வொரு தருணத்தையும் என் மனதிற்குள் சேமித்து வைக்க வேண்டும் ஆனால் இந்த இரண்டரை வருடக்காலப் பகுதியில் அதை என்னால் செய்ய முடியல இப்போ என் காதல் இழையினிக்குத் தெரியும் சோ இனி வரப்போகும் ஒவ்வொரு நாளும் என் காதலை அவளுக்கு புரிய வைப்பேன்” ஆதவன் உறுதியான குரலில் கண்களை மூடிக் கொண்டு கூறவும்

 

“எக்ஸ்கியுஸ் மீ ஸார்! ஒரு சின்ன திருத்தம் நீங்க தான் அவங்களை இனிமே சந்திக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்களே மறந்துட்டீங்களா ஸார்?” என்றவாறே ராஜா அவனது கையில் தட்ட 

 

பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனது தலையை கலைத்து விட்டவன்

“சந்திக்க மாட்டேன்னு தானே சொன்னேன் பார்க்க மாட்டேன்னு சொல்லலயே” எனவும்

 

“அப்படின்னா?” ராஜா கேள்வியாக அவனை நோக்கினான்.

 

“அப்படி என்றால் இதற்கு முன்னாடி சென்னையில் அவளுக்கு எப்படி நிழலாக இருந்தேனோ அதே மாதிரி இங்கேயும் நிழலாக அவளைப் பாதுகாப்பேன்!” ஆதவனின் கூற்றில் ராஜா அவனை கண்ணிமைக்கவும் மறந்து பார்த்து கொண்டிருந்தான்.

 

“எனக்கு என் காதலில் நம்பிக்கை இருக்கு ராஜா! இன்னைக்கு ஒரு நாள் என்னைப் பார்த்து பேசியதற்கே இழையினி மொத்தமாக தன்னை மறக்க ஆரம்பித்து விட்டாள் எங்கே மீண்டும் மீண்டும் என்னை சந்திக்க வேண்டி வந்தால் அவள் மனதை  மொத்தமாக என்னிடம் இழந்து விடுவோமேன்னு பயத்தில் தான் அவள் என்னை சந்திப்பதை தவிர்க்கிறாள் அது எனக்கு தெரியும் அதனால் தான் நான் அவளுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்க நினைத்து அவளை சந்திக்க மாட்டேன்னு சொன்னேன்! நீ வேணும்னா பாரு நிச்சயமாக அவளே என்னைத் தேடி வருவா! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு!” ஆதவன் பேசப் பேச அவனையே வியப்பாக பார்த்து கொண்டிருந்த ராஜா அவன் தன் காதல் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி மெய் சிலிர்த்துப் போனான்.

 

“என் மனசார நான் ஒன்னு சொல்லுறேன் ஆதவா! உன்னோட இந்த நம்பிக்கைக்காகவே இழையினியும், நீயும் கண்டிப்பாக சேருவீங்க!” ராஜா ஆதவனின் தோளில் தட்டிக் கொடுத்தபடியே கூறவும் பதிலுக்கு அவனும் புன்னகையுடன் அவனது கையில் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்தான்.

 

அதன் பிறகு பொதுவான விடயங்களை பேசியபடியே அன்றைய நாளை செலவிட்டவர்கள் அடுத்த நாள் ஆதவனின் வலி குறைவதற்காக மருந்துகளையும் எடுத்துக் கொண்டு அடுத்த நாள் காலை தங்கள் ஊருக்கு திரும்பி வந்திருந்தனர். 

 

அதற்கிடையில் ஆதவன் மறுபடியும் இழையினியை சந்திக்கவோ, பேசவோ முயற்சி செய்யவில்லை.

 

அன்று ஊருக்கு திரும்பி வந்ததிலிருந்து இன்று வரை அவன் மனம் முழுவதும் அவளைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

மலேசியா அலுவலகத்திலிருந்து பல ஈமெயில்களும், குறுஞ்செய்திகளுமாக அவனது லேப்டாப்பில் வந்து கொண்டிருக்க அந்த ஒலி எதுவும் அவன் சிந்தனையைச் சென்றடையவில்லை.

 

இங்கே ஆதவன் தன் சிந்தை முழுவதையும் இழையினியின் நினைவுகளால் நிரப்பியிருக்க மறுபுறம் அவனது மனம் முழுவதும் நிறைந்திருந்தவளோ தன் அலுவலக அறையில் தன் முன்னால் இருந்த பைலை ஏனோதானோ என்பது போல பார்த்து கொண்டிருந்தாள்.

 

ஆதவன் அவள் வீட்டிலிருந்து சென்றதன் பின்னர் மனதிற்குள் எதையோ பறி கொடுத்ததைப் போல தவிக்க ஆரம்பித்தவள் இப்போதும் அதே மனநிலையில் தான் உழன்று கொண்டிருந்தாள்.

 

அவன் காதலை அவளால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதற்கான காரணம் அவளது கடந்த கால அனுபவங்கள் தான்.

 

மீண்டும் தன் மனதிற்குள் ஆசையை வளர்த்து விட்டு அதையும் இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற ஒரு எண்ணம் அவளது ஒரு புற மனதைத் தடுக்க மறுபுற மனதோ அவனது அருகாமையில் தன்னை மறந்து நின்ற தருணங்களை எல்லாம் நினைத்து அவளை செவ்வானமாய் சிவந்து போகச் செய்தது.

 

தன் மனவோட்டத்தை எண்ணி தன்னைத்தானே கடிந்து கொண்டவள்

‘மனம் ஒரு குரங்கு என்று சொல்வது சரிதான்! ஒரு முடிவில் நிலையாக இருக்கவே மாட்டேங்குது அப்படியும் யோசிக்கிறது இப்படியும் யோசிக்கிறது இந்த மனதை என்ன தான் செய்வது?’ தனக்குள்ளேயே யோசித்து கொண்டிருக்கையில் 

 

“இழை! இழை!” விஜயா பதட்டத்துடன் அவள் முன்னால் வந்து நின்றாள்.

 

“என்ன விஜி?” எந்தவித பதட்டமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இழையினி அவளை நிமிர்ந்து பார்க்க 

 

தன் கையிலிருந்த பைலை அவள் முன்னால் வைத்தவள்

“கொஞ்சம் இதை பாருங்க மேடம் நீங்க என்ன செஞ்சு வச்சுருக்கீங்கன்னு விளங்கும்” எனவும்

 

“அப்படி என்ன இருக்கு?” யோசனையுடன் அவளது கையில் இருந்த பைலை வாங்கியவள் அதைப் பார்த்து விட்டு தன் நாக்கை கடித்து கொண்டு மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“அந்த டீ எக்ஸ்போர்ட் கம்பெனி ஆளுக்கு பத்து இலட்சம் வாங்கிட்டு தேயிலை கொடுத்ததுக்கு பத்தாயிரம் கொடுத்தன்னு போட்டு வச்சிருக்க! இதை மட்டும் நான் பார்க்காம அப்படியே கொண்டு போய் கொடுத்து இருந்தேன்னு வை அந்த கம்பெனிக்காரன் கல்லை எடுத்து என்னை அடிச்சு இருப்பான்” விஜயாவின் கூற்றில் சட்டென்று சிரித்தவள் அவளது கோபமான பார்வையைப் பார்த்த பின்பு மெல்ல அந்த பைலை சரி செய்யத் தொடங்கினாள்.

 

“நீ இங்க வந்த இரண்டு வருஷத்துல ஒரு தடவை கூட கணக்கில் பிழை விட்டது இல்ல அவ்வளவு சரியா எல்லாம் செய்வ! ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய பிழையை விட்டுருக்க! இது நீ தெரிஞ்சு விட்ட பிழை மாதிரி இல்ல ஏதோ ஒரு குழப்பத்தில் தான் இந்த பிழை நடந்திருக்கு! நானும் இரண்டு நாளா உன்னை கவனிச்சுட்டு தான் வர்றேன் அந்த ஆதவன் வந்துட்டு போனதிலிருந்து நீ ஏதோ ஒரு யோசனையோடு தான் இருக்க! மனசில் ஏதாவது குழப்பம் இருந்தா யார்கிட்டேயும் பேசு இல்லை அந்த குழப்பத்திற்கு காரணமான ஆளோட பேசு இப்படி இருக்காதே! உன்னை இப்படி பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு” இழையினியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்துக் கொண்டே விஜயா கூறவும்

 

சிறு புன்னகையுடன் அவளது கையை எடுத்து விட்டவள்

“நீ நினைப்பது போல எனக்கு எந்த குழப்பமும் இல்லை இது ஜஸ்ட் சின்ன பிழை! யானைக்கும் அடி சறுக்கும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி! நீ ஓவரா யோசிக்காமல் மற்ற வேலைகளை பாரு” என்று விட்டு மீண்டும் தான் முதலில் பார்த்து கொண்டிருந்த பைலில் தன் கவனத்தை பதிக்க அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்த விஜயா தன் தோளை குலுக்கி கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றாள்.

 

அவள் தன்னறைக் கதவைத் தாண்டியதுமே கையிலிருந்த பேனாவை கீழே போட்ட இழையினி தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.

 

‘ஐ யம் ஸாரி விஜி! உன் கிட்ட இதை மறைக்கணும் என்று நான் நினைக்கல! எனக்கே இன்னும் என் மனதில் என்ன இருக்குன்னு சரியாக தெரியல! நான் மொத்தமாக குழப்பத்தில் இருக்கிறேன்! ஆதவனை பார்க்க கூடாதுன்னு சொன்னேன் ஆனால் ஒரு பக்கம் பார்க்கணும் போல இருக்கு! 

 

ஆதவனை நான் பார்த்தது என்னவோ ஒன்றிரண்டு தடவைகள் தான் ஆனால் எத்தனையோ வருடங்களாக பார்த்து பேசி, பழகியது போல இருக்கு! அவரோட காதலை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியல மறுக்கவும் முடியல! ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும் தாத்தாவை நினைத்து பார்த்தால் கல்யாணம், காதல் இது இரண்டு மேலும் எந்த ஈடுபாடும் இல்லாமல் போகிறது 

 

போன தடவை நடந்த பிரச்சினையின் போது எனக்கு ஆறுதலாக அம்மா இருந்தாங்க ஆனால் இந்த தடவை ஏதாவது தவறுதலாக நடந்தால் நான் யார்கிட்ட போய் ஆறுதல் தேடுவேன்? இதையெல்லாம் நினைத்து பார்க்கும் போது என்னால் ஒரு முடிவை எடுக்கவே முடியல! ஐ யம் கன்பியூஸ்ட்!’ தலையை பிடித்திருந்த தன் இரு கைகளையும் மேஜையில் வைத்து அதன் மேல் சாய்ந்து படுத்துக் கொண்டவள் விழிகள் இரண்டிலும் காதலும், குழப்பமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

 

இங்கே இழையினியும், பொன் ஆதவனும் ஒருவரை ஒருவர் எண்ணிக் கொண்டு குழப்பத்துடனிருக்க மறுபுறம் சென்னையில் அசோகன் வளர்மதியின் கையை பிடித்துக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தார்.

 

இழையினி வீட்டை விட்டு சென்றதிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர் தனக்குள்ளேயே கவலை கொண்டு தன்னை மறந்து தன் நிலையை மறந்து ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போலவே தான் இருந்து கொண்டிருந்தார்.

 

ஒவ்வொரு நாள் விடியலின் போதும் அவரது கண்கள் வீட்டு வாயிலையே ஆவலாக நோக்கும்.

 

இழையினி மீண்டும் வர மாட்டாளா? தன்னிடம் பேச மாட்டாளா? என்ற ஆசை நிதமும் அவர் மனதிற்குள் அவரைத் துளைத்துக் கொண்டே இருக்கும்.

 

இரண்டு வருடங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து இப்போது மனமே வெறுத்து போய் விட்டது அசோகனிற்கு.

 

தன் ஒவ்வொரு நாள் ஆவலும் ஏமாற்றத்தில் முடியும் போது தான் தான் செய்த காரியத்தின் வீரியம் அவரை சாட்டையாகத் தாக்கும்.

 

கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல எல்லாம் நடந்து முடிந்த பின்னர் வேதனைப்படுவதால் எதுவும் மாறப் போவதில்லை.

 

ஆனால் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இழையினியின் சந்தோஷத்தை அவளுக்கு கொடுத்து விட வேண்டும் அதுவும் தான் உயிரோடு இருக்கும் இந்த காலத்திற்குள் அதை செய்து விட வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் தான் அவரை இத்தனை நாட்களாக நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது.

 

வெகு நேரமாகியும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் தன் கணவரின் தோளில் தன் கரத்தை பதித்த வளர்மதி அவரது முகத்தை தன் புறமாக திருப்ப கண்கள் கலங்க அவரது தோளில் சாய்ந்து கொண்டவர்

“தப்பு பண்ணிட்டேன் மதி! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்! என் பொண்ணு வாழ்க்கையையும், என் பேத்தி வாழ்க்கையையும் நானே அழித்துட்டேன்! நான் இந்த உலகத்தை விட்டு போறதுக்கு இடையில் எப்படியாவது இழையினியை பார்த்து மன்னிப்பு கேட்கணும் மதி! அவ ஆசைப்பட்ட எல்லாத்தையும் அவளுக்கு செய்து கொடுக்கணும்னு ஆசையாக இருக்கு” தன் நடுங்கும் கரங்களை அவரது கரத்தில் வைத்து அழுத்தியபடியே கூற 

 

வளர்மதியோ

“இந்த விடயத்தை எல்லாம் ஏன்ங்க நீங்க இரண்டு வருடங்களுக்கு முன்னாடி மண்டபத்தில் வைத்து செல்வியும், அந்த பையனோட சொந்தக்கார பையனும் சொல்லும் போது உங்களுக்கு புரியாமல் போச்சு? ஒரு உயிரைக் காவு கொடுத்து, ஒரு உயிரை தனியாக அனுப்பி வைத்ததற்கு அப்புறமாகத் தான் இது எல்லாம் உங்களுக்கு புரியுமா?” அவரது கலங்கிய தோற்றத்தை பார்த்து மனதிற்குள் அழுது கொண்டே தன் மனதிற்குள் இருக்கும் ஆதங்கத்தை அன்றே கேட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரைப் பார்த்து வினவினார்……