உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 19

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 19

வளர்மதியின் கேள்வியில் அசோகன் அவரையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தார்.

 

“மதி! நீயும் என்னை புரிந்து கொள்ளவே இல்லையா?”

 

“இல்லைங்க சத்தியமாக என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடியல! அந்த பையனை விடுங்க அவங்களை நமக்கு மூணு மாதமாகத் தெரியும் ஆனா கலை நம்ம பொண்ணுங்க! அவ வார்த்தைக்கு கூட அன்னைக்கு மதிப்பில்லாமல் போயிடுச்சே! ஏன்ங்க? இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த வசதி, வாய்ப்பு எல்லாம் நமக்கு எப்போ வந்தது யோசிங்க? நமக்கு கல்யாணம் ஆன புதிதில் நாம எப்படி இருந்தோம் என்று உங்களுக்கு மறந்து போயிட்டாங்க?”

 

“இல்லை மதி நான் எதையும் மறக்கல! அந்த விடயங்களை எல்லாம் மறக்காமல் இருப்பதால் தான் நான் அன்னைக்கு அந்த முடிவையே எடுத்தேன்”

 

“நீங்க என்ன சொல்லுறீங்க? எனக்கு எதுவுமே புரியல” அசோகனின் பேச்சில் வளர்மதி அவரைக் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தார்.

 

“நாம ஆரம்பத்தில் ஒரு சின்ன துணிக்கடை வைத்து தான் நம்ம வாழ்க்கையைத் தொடங்கினோம் மதி! அதில் வரும் சின்ன சின்ன இலாபங்கள் தான் நம்ம வருமானம் அந்த வருமானத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தான் ஒவ்வொரு தொழிலாக  நாம் ஆரம்பத்தோம்! இன்னும் சொல்லப் போனால் நம்ம இளமைக் காலம் முழுவதும் தொழில், வேலை, பணம் சம்பாதிப்பது என அப்படியே போய் விட்டது  இது உண்மை தானே?” அசோகனின் கேள்வியில் வளர்மதியின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.

 

“அந்த இளமைக் காலத்து அனுபவங்கள் தான் நம்ம பிள்ளைகளும் நம்மை மாதிரி இளைமையைத் தொலைத்து தவித்து விடக் கூடாது என்று நம்ம வசதிக்கு ஏற்ற மருமகனையும், மருமகளையும் தேடி கொண்டு வர வைத்தது! அதேபோல நம்ம பேரப் பிள்ளைகளுக்கும் என்னை அப்படியே தேட வைத்தது இதில் எனக்கு எந்த தப்பும் தெரியல மதி! 

 

இளமை போனால் திரும்ப போய் அதைக் கொண்டு வர முடியாது! நாம இழந்த இளமையை நம்ம பிள்ளைகளும் இழக்க கூடாது என்ற ஒரு காரணத்திற்காக தான் நான் இவ்வளவு பண்ணேன் இன்னும் சொல்லப் போனால் அந்த எண்ணம் என்னை விட்டு மாறவே மாறாது மதி!” தன் கணவர் இத்தனை வருடங்களாக மனதிற்குள் இந்த விடயத்தை தான் வைத்திருந்தாரா என்றெண்ணி வளர்மதி அவரை வியந்து போய் பார்த்து கொண்டிருக்க 

 

அவரோ தன் மனையாளின் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு

“நான் அன்னைக்கு வசதி தான் முக்கியமென்று சொல்லும் போது எல்லோரும் என்னைத் தப்பாக பேசுறாங்க ஏன் இப்போதும் தப்பாக தான் நினைத்து இருப்பாங்க ஆனா என் மனதில் இருக்கும் விடயத்தை யாரும் புரிந்து கொள்ள மாட்டாங்க அதை வாழ்க்கையில் சந்தித்து இருந்தால் தான் புரியும் மதி! ஆனாலும் பரவாயில்லை மதி என்னை யாரும் தப்பாக நினைத்தால் நினைத்துக் கொண்டு போகட்டும் 

 

நான் செய்யும் ஒவ்வொரு விடயமும் நம்ம குழந்தைகளுக்காகத் தான்! ஆனா அன்னைக்கு நான் மண்டபத்தில் வைத்து நடந்து கொண்டது ரொம்ப பெரிய தப்பு தான் அது எனக்கு கலை சொல்லும் போது தான் புரிந்தது ஆனால் அதை நிவர்த்தி செய்யும் வழி தான் இன்னும் எனக்கு புரியல!” ஆற்றாமையுடன் கூற வளர்மதி சிந்தனையோடு தன் கணவரின் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்.

 

“என்ன மதி அமைதியாக இருக்க?”

 

“நீங்க இழையினியை போய் நேரில் ஒரு தடவை சந்திக்கலாமேங்க!”

 

“நானா? நான் எப்படி மதி? என்னைப் பார்க்க பிடிக்காமல், இந்த கிழவன் முகத்தை பார்க்கவே கூடாதுன்னு தானே இழை இந்த வீட்டிலிருந்து போயிட்டா?”

 

“ஆமா போயிட்டா தான்! ஆனா எங்கே போய் இருக்கா? உங்க கண் பார்வையை விட்டு தான் தூரமாகிப் போயிருக்கா! மொத்தமாக உறவை விட்டே தூரமாகிப் போகலயே! உங்க நிழலில் கீழ் தானே அவ இன்னமும் இருக்கா!” 

 

“அப்படின்னா அவ என்னை மொத்தமாக வெறுத்து போகலயா மதி?” அசோகனின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிய

 

 அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்த வளர்மதி

“ஆமா அவ அப்படி மொத்தமாக யாரும் வேண்டாம் என்று நினைத்து இருந்தால் நம்ம கிட்ட சொல்லிட்டு போயிருக்க மாட்டா! அவளுக்கு அந்த நேரம் ஒரு மனமாற்றம் தேவைப்பட்டது அது தான் இங்கே இருந்து போனா  நடந்த விடயங்களை எல்லாம் மறக்க அவளுக்கும் கொஞ்சம் நேரம் தேவை தானே? நீங்க இரண்டு பேரும் நேருக்கு நேராக ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசினாலே உங்க இரண்டு பேரோட இந்த மனக் கசப்புகள் எல்லாம் கொஞ்சம் மாறலாம்” என்று கூற அசோகனின் முகத்திலிருந்த குழப்பம் இன்னும் முழுமையாக விலகவில்லை.

 

“ஆனா இழை என்னைப் பார்ப்பாளா மதி?” அவர் மனதில் பதிந்திருந்த அந்த குற்றவுணர்வு அவரை மேலும் மேலும் சிந்திக்க செய்ததே தவிர சரி செய்யவில்லை.

 

“கொஞ்சம் முரண்டு பிடிப்பா தான் ஏன்னா அவ யாரோட பேத்தி பிடிவாதத்திற்கு பேர் போன அசோகனின் பேத்தி ஆச்சே!” தன் கணவரை இலகுவாக்கும் நோக்கில் வளர்மதி அவரைப் புன்னகையுடன் நோக்க 

 

பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர்

“அவ திட்டி, நாலு அடி அடித்தாலும் பரவாயில்லை நான் பண்ண தப்புக்கு என் இழை என்ன தண்டனை கொடுத்தாலும் நான் தாங்கிக் கொள்வேன்” ஆத்மார்த்தமாக அந்த வார்த்தைகளை மனதார உணர்ந்து கூறினார்.

 

தன் கணவரின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவரருகில் இருந்தே பார்த்து வந்த வளர்மதி இப்போது தன்னுடைய பேத்திக்காக அவர் தவித்துப் போவதைப் பார்த்து கலங்கிப் போனாலும் அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனதிற்குள் இருக்கும் கவலையை மறந்து, மறைத்து அவருக்கு துணையாக அமர்ந்திருந்தார்.

 

அசோகன் வளர்மதியுடன் இயல்பாக பேசிக் கொண்டிருந்த வேளை

“தாத்தா! பாட்டி!” மதியழகன் அவர்கள் அறை வாயிலில் தயக்கத்துடன் வந்து நின்றான்.

 

“அழகா! வா! வா! ஏன் வாசலிலேயே நிற்குற” வளர்மதி முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவனைப் பார்த்து தன் கரத்தை நீட்டி அழைக்க சிறிது தயக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் அவர்கள் இருவரின் முன்னாலும் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்டவன் அவரது கையை இறுக்கமாக பிடித்து கொண்டான்.

 

அந்த வெயில் காலத்திலும் பனிக்கட்டி போல சில்லிட்டுப் போயிருந்த தன் பேரனின் கரங்களை ஆச்சரியமாக குனிந்து பார்த்த வளர்மதி அவன் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவன் விழிகளோ அங்குமிங்கும் நிலையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

 

“அழகா! என்னப்பா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?” தன் பாட்டியின் கேள்விக்கு அவசரமாக மறுப்பாக தலையசைத்தவன்

 

“சேச்சே! அப்படி எல்லாம் எதுவும் இல்லை பாட்டி! உங்க இரண்டு பேர் கூடவும் ஒரு முக்கியமான விடயம் பேசணும் அது தான்…” சொல்ல வந்த விடயத்தை முழுவதும் சொல்லாமல் இழுக்க பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

 

“சொல்லு அழகா என்ன விடயம்?” அசோகன் கேள்வியாக அவனை நோக்க

 

தன் கண்கள் இரண்டையும் மூடி ஒரு சில நிமிடங்கள் தன்னை சமப்படுத்தி கொண்டவன் பின் தன் விழிகளை திறந்து கொண்டு

“நானும், தேனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் தாத்தா! இந்த விடயத்தை இழையினி இங்கே வந்த பிறகு சொல்லலாம் என்று தான் இருந்தேன் ஆனா அவ இந்த விடயத்தைப் பற்றி வீட்டில் பேசாமல் இருந்தால் வரமாட்டேன்னு சொல்லிட்டா! இந்த விடயத்தைப் பற்றி பேசிய பிறகாவது அவ வரணும்னு தான் இதை உங்க கிட்ட சொல்லுறேன்” தயங்கி தயங்கி கூறி முடிக்க வளர்மதி புன்னகையுடன் அவனை வாரி அணைத்துக் கொண்டார்.

 

“இந்த விடயத்தை நாங்க நீங்க இரண்டு பேரும் சின்ன வயதில் இருக்கும் போதே பேசி வைத்து விட்டோம் இருந்தாலும் வளர்ந்ததற்கு பிறகு உங்க இரண்டு பேர் சம்மதத்தையும் கேட்காமல் எதுவும் செய்ய கூடாது என்று தான் இவ்வளவு நாள் அதைப் பற்றி பேசாமல் இருந்தோம் தேன்மொழி காலேஜ் படிப்பு முடிந்தவுடன் இதைப் பற்றி உன்கிட்டயும், அவகிட்டயும் பேசணும்னு நானே நினைத்து இருந்தேன் நீ முந்திகிட்ட! பரவாயில்லை எது, எப்படியோ உங்க இரண்டு பேர் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் இல்லையாங்க?” தன் மனைவியின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்த அசோகன்

 

“ஆமா ஆமா! இனி முதல் விடயம் உங்க சம்மதம் தான் அதற்கு அடுத்த பட்சமாகத் தான் மற்ற எல்லா விடயங்களும்! இந்த இரண்டு வருடத்தில் என் பேத்தி இழையினி அதை எனக்கு பொட்டில் அடித்த மாதிரி புரிய வைத்து விட்டாள்!” மதியழகனின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே கூற அவனோ மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அவர்கள் இருவரையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

‘இது எல்லாம் அந்த கடவுளின் விளையாட்டு தான்! ஒவ்வொரு இழப்பிற்கு பின்னால் தான் ஒவ்வொரு மாற்றங்கள் வரும் போல!’ மனதிற்குள் நினைத்த விடயத்தை வெளியே சொல்லாமல் சிறு புன்னகையுடன் மதியழகன் அமர்ந்திருக்க வளர்மதியும், அசோகனும் அவனை ஹாலிற்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.

 

வீட்டில் இருந்த எல்லோரையும் அங்கே ஒன்று கூட்டிய வளர்மதி மதியழகனும், தேன்மொழியும் ஒருவரை ஒருவர் விரும்பும் விடயத்தை கூறி விட்டு

“இந்த கல்யாணம் நடப்பதில் நம்ம எல்லோரையும் விட இழையினிக்குத் தான் சந்தோஷம் அதிகம் அதனால் அவளை இங்கே வர வைக்க இந்த கல்யாணத்தை கொஞ்சம் சீக்கிரமாக நடத்தலாம்னு இருக்கோம்” எனவும்

 

“ஒரு நிமிஷம் பாட்டி!” என்றவாறே தேன்மொழி அவர் முன்னால் வந்து நின்றாள்.

 

“இழையினி கல்யாணம் நடக்காமல் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை பாட்டி!”

 

“தேனு! ஆனா…”

 

“ப்ளீஸ் பாட்டி! என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை வேணும்னா நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க இழையினி வருவா! அப்படி அவ வர மாட்டேன் என்று சொன்னால் அவள் இருக்கும் இடத்திற்கு நாம எல்லோரும் போவோம்! சொல்லப் போனால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவளைத் தனியாக கஷ்டப்படுற மாதிரி விட்டு விட்டோம் தானே! அதற்காக சரி அவளைத் தேடி போகணும்! அவ வந்த பிறகு அவ கல்யாணம் நடக்க தேதி குறித்த பிறகு சரி, இல்லை அவ கல்யாணம் பண்ணிக்க போற அதே நாளில் சரி நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம்” என்று விட்டு தேன்மொழி மதியழகனைத் திரும்பி பார்க்க அவனோ கண்கள் கலங்க அவளைப் பார்த்து இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்து கொண்டான்.

 

தேன்மொழி தான் சொன்ன விடயத்திலிருந்து பின் வாங்காமல், உறுதியைத் தளரவிடாமல் இருக்க பெரியவர்கள் எல்லோரும் ஒரு மனதாக அவளது கூற்றுக்கு கட்டுப்பட்டனர்.

 

இன்னும் ஒரு மாதத்தில் தேன்மொழியின் இறுதி பரீட்சைகள் எல்லாம் முடிவடைந்து விடும் என்றிருக்க அவளது பரீட்சை முடிவடைந்ததுமே அவர்கள் இருவரது நிச்சயதார்த்தத்தை நடத்தலாம் என்று எல்லோரும் முடிவெடுத்து கொண்டனர்.

 

அந்த சந்தோஷமான செய்தியை தன் தங்கையிடம் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மதியழகன் இழையினிக்கு அழைப்பை மேற்கொள்ள அவளோ 

‘இந்த நேரத்தில் அண்ணன் தன்னை அழைக்க மாட்டானே! ஒருவேளை ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ?’ மனதுக்குள் பரவிய சிறு அச்சவுணர்வுடன் அந்த அழைப்பை எடுத்து கொண்டு பேசத் தொடங்கினாள்.

 

“ஹலோ! மதிண்ணா!”

 

“இழை! எப்படிடா இருக்க?” தன் அண்ணனின் குரலில் தெரிந்த உற்சாக உணர்வில் தன்னை சிறிது ஆசுவாசப் படுத்தி கொண்டவள்

 

“நான் நல்லா தான் இருக்கேன் ஆமா என்ன உன் குரலில் ஏதோ ஒரு ஆனந்தம் தாண்டவமாடுற மாதிரி இருக்கு?” என்று கேட்கவும் 

 

மறுமுனையில் இருந்த அவளது தமையன் சற்று நேரத்திற்கு முன்பு வீட்டில் நடந்த விடயங்களை எல்லாம் கூற

“ஹேய்! மதிண்ணா! ரியலி? என்னால நம்பவே முடியல! பட் எனிவே கங்குராஜூலேஷன்ஸ் மை டியர் பிரதர்!” மனமார அவனுக்கு தன் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டாள்.

 

“என் தங்கச்சி கேட்டு நான் எப்போ அந்த விடயத்தை செய்யாமல் இருந்து இருக்கேன்? இதுவும் உனக்காக, உன் சந்தோஷத்திற்காகத் தான் இழைம்மா! அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் வைக்கப் போவதாக வீட்டில் எல்லோரும் பேசி இருக்காங்க அதனால் நீ இப்போவே புறப்பட்டு வரணும் டா இழை!” இம்முறை மதியழகனின் பேச்சைக் கேட்டு இழையினியின் முகம் சட்டென்று தன் புன்னகையைத் தொலைத்து கொண்டது.

 

வெகு நேமாக தன் தங்கையின் புறம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே

“இழை! இழை! லைனில் இருக்கியா?” தவிப்போடு ஒலித்தது மதியழகனின் குரல்.

 

“என்னை மன்னித்து கொள்ளு மதிண்ணா! என்னால் வர முடியாது ஆனால் என் வாழ்த்தும், என் நினைவும் எப்போதும் உன்னை சுற்றியே தான் இருக்கும்” என்று இழையினி கூற மறுபுறம் அவளது அண்ணனின் முகம் அனிச்சம் பூவாக வாடிப் போனது.

 

“இழை! ஏன்மா இப்படி பேசுற? அப்போ எங்க எல்லோரையும் மொத்தமாக நீ ஒதுக்கி வைத்து விட்டாயா? எனக்காக, அப்பாவுக்காக நீ வர கூடாதா?”

 

“…….”

 

“நீ கேட்டேன்னு தான் உன்னை அங்கே அனுப்பி வைத்தோம்! இடையில் உன்னை பார்க்க வர வேண்டாம்னு சொன்ன அதையும் செய்தோம்! இப்போ மொத்தமாக யாரும் வேண்டாம் என்று அங்கேயே இருக்கப் போறியா?”

 

“இல்லை மதிண்ணா! அப்படி இல்லை! உன் கல்யாணத்துக்கு கண்டிப்பாக நான் வருவேன் ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு வர முடியாதுண்ணா! அந்த வீட்டில் எல்லோரையும் என்னால் சந்திக்க முடியாமல் போனால் வீணாக மனக் கஷ்டம்” அந்த எல்லோரும் யார் என்று புரிந்து கொண்ட மதியழகன்

 

“நான் ஒரு விடயம் சொல்லுறேன் நன்றாக கேட்டுக்கோ இழை என் கல்யாணம் உன் கல்யாணம் நடந்த பிறகு தான் நடக்கும் அதே மாதிரி என் நிச்சயதார்த்தமும் நீ இல்லாமல் நடக்காது இந்த இரண்டு விடயத்திலும் எந்த மாற்றமும் இல்லை” என்று விட்டு அந்த அழைப்பை நிறுத்தி விட

 

“மதிண்ணா! ஹலோ! ஹலோ! மதிண்ணா!” இழையினியின் அழைப்பு அந்த அறைக்குள்ளேயே எதிரொலித்தது.

 

“சே!” சலிப்புடன் தன் கையில் இருந்த தொலைபேசியை தூக்கி மேஜை மீது போட்டவள் தன் நெற்றியை நீவி விட்டபடியே அமர்ந்திருக்க 

 

“இழை சாப்பிட போக வா!” என்றவாறே வந்த விஜி அவளது அந்த தோற்றத்தை பார்த்து விட்டு 

 

“இழை! என்னடா ஆச்சு? உடம்புக்கு எதுவும் ஏலாமல் இருக்கா?” என்று கேட்க

 

அவளை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள்

“மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு விஜி! தலையே வெடித்து விடும் போல இருக்கு! இந்த வீக் என்ட் எங்கேயாவது வெளியே போகலாமா? கொஞ்சம் தூரமா!” என்று கேட்டாள்.

 

இழையினியில் கேள்வியில் சிறிது நேரம் தன் கன்னத்தை தட்டி கொண்டு யோசித்து கொண்டு நின்றவள் சிறிது நேர யோசனைக்குப் பின் முகம் பிரகாசமாக அவள் முன்னால் வந்து நின்றாள்.

 

“அவ்வளவு தானே? ரைட்டு விடு! என் இழை பர்ஸ்ட் டைம் வெளியே போக கேட்டு இருக்க! உன்னை சூப்பர் இடத்திற்கு கூட்டிட்டு போறன் பாரு! இந்த சனிக்கிழமை காலையில் கண்டி டூ பதுளை டிரைனில் போறோம் உன் மனசில் என்ன பிரச்சினை இருந்தாலும் சரி அந்த பிரயாணத்தில் எல்லாப் பிரச்சினையும் சும்மா கறியில் போட்ட உப்பு மாதிரி காணாம போயிடும் பாரு! இப்ப நல்ல பிள்ளை மாதிரி சாப்பிட வா! வயிறு சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடுச்சு” விஜி இழையினியின் கையைப் பிடித்து அவளை அங்கிருந்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு சென்றது மட்டுமின்றி அதன் பின்னர் வந்த நேரம் முழுவதும் அவளை வேறு எந்த விடயத்தையும் சிந்திக்க விடாமலும் பார்த்து கொண்டாள்.

 

மறுபுறம் தன் அறைக்குள் அமர்ந்து கொண்டு தன் லேப்டாப்பில் எதையோ தட்டி தட்டி மனமே இன்றி வேலை பார்த்து கொண்டிருந்தான் ஆதவன்.

 

தன் காதலை அடைய எத்தனை தூரம் பாடுபட வேண்டியிருக்கிறது? இனிமேல் இழையினியை சந்திக்க மாட்டேன் என்று தைரியமாக சொல்லி விட்டு வந்த பிறகும் அவளுக்கு எப்படி தன் காதலை புரிய வைப்பது என்ற ஒரு கேள்வி மாத்திரம் அவனை சுற்றி வந்து கொண்டேயிருந்தது.

 

அவளருகில் இருந்தாலாவது ஏதாவது ஒரு சின்ன விடயத்தின் மூலம் அவளுக்கு தன் நினைவை ஏற்படுத்தி விடலாம்.

 

ஆனால் இப்போது அவளிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலே மூன்று, நான்கு மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டும் அதுவும் தனக்கு முன், பின் பழக்கமில்லாத இடத்தில்.

 

ஆதவன் தைரியமாக அதை சமாளித்து சென்று விடுவான் ஆனால் ராஜா அவனைத் தனியாக எங்கேயும் செல்ல விடுவதில்லை தன்னை நம்பி வந்தவர்களுக்கு எந்த கெடுதலும் வந்து விடக்கூடாது என்பதில் அவன் மிகவும் உறுதியாக இருந்தான்.

 

அதிலும் ஆதவன் தனியாக சென்று கீழே விழுந்ததில் இருந்து அவனை தன் நிழல் போலவே ராஜா பாதுகாக்க தொடங்கியிருந்தான்.

 

தன்னை சுற்றி இத்தனை அன்பானவர்கள் இருந்தாலும் ஆதவனின் மனம் என்னவோ இழையினியின் அன்புக்காகவே ஏங்கி தவித்தது.

 

பொன் ஆதவன் இழையினி பற்றிய தன் சிந்தனையில் மூழ்கிய வண்ணம் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அமர்ந்திருக்க

“இந்த வீக் என்ட் ட்ரிப் போக ரெடி ஆகு ஆதவா!” என்றவாறே ராஜா அவன் முன்னால் ஒரு கவரை வைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

 

“டிரிப்பா? எங்கே? ஏன் திடீர்னு?”

 

“கூல்! கூல்! மிஸ்டர் ஆதவன்! என் பிரண்ட் ஒருத்தன் பதுளையில் இருக்கான் அவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை அவன் ஊரில் கல்யாணம் கட்டாயம் வரணும்னு சொல்லி இன்விடேஷன் தந்துட்டு போயிருக்கான் நாம போறோம் அவ்வளவுதான்!”

 

“இல்லை ராஜா! நான்…எப்படி…அங்கே?”

 

“என்ன நீ? மணிரத்னம் படத்தில் வர்ற மாதிரி பிட்டு பிட்டா டயலாக் சொல்லுற? உன் கிட்ட வாறியானு சம்மதம் கேட்கல!  போறோம்னு தகவல் தான் சொல்லுறேன் இப்போ நீ இருக்குற மனநிலைக்கு கண்டிப்பாக இந்த பிரயாணம் அவசியம் தான் அதனால் வாயை மூடிட்டு தேவையான சாமான் எல்லாம் இப்போவே எடுத்து வைக்க ஸ்டார்ட் பண்ணு” என்று விட்டு ராஜா அவனது தோளில் அழுத்திக் கொடுத்து விட்டு சென்று விட ஆதவனோ தன் முன்னால் இருந்த கவரையே யோசனையாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!