இழையினியை அங்கே எதிர்பாராத ஆதவனும், ஆதவனை அங்கே எதிர்பாராத இழையினியும் ஒருவரை ஒருவர் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே நிற்க முதலில் தங்களை சுதாரித்துக்கொண்ட ராஜாவும், விஜியும் தங்கள் நண்பர்களின் கையை பற்றி இழுத்து அவர்களை இந்த உலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தனர்.
இழையினி விஜியின் தொடுகையில் சட்டென்று சுற்றிலும் திரும்பிப் பார்த்துவிட்டு தன் சுற்றுப்புறம் உணர்ந்து அவசரமாக தன் இருக்கையில் அமர்ந்துகொள்ள மறுபுறம் ராஜா ஆதவனின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.
அதற்கிடையில் தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து செல்வம் தற்செயலாக திரும்பி பார்க்க அங்கே ஆதவனும் ராஜாவும் நின்று கொண்டிருந்தனர்.
“ஆதவன்! ஆதவன் தம்பி தானே நீங்க?” அவர்களை அங்கு எதிர்பாராத ஆச்சரியத்துடன் செல்வம் வினவவும்
அவரின் புறம் திரும்பி பார்த்த ஆதவன்
“ஆமா அங்கிள் ஆதவன் தான்! என்னை மறக்காமல் ஞாபகம் வைத்து இருக்கீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கு!” புன்னகையுடன் ஒருமுறை இழையினியின் புறமும் திரும்பிப் பார்த்தபடியே கூற
அவரோ
“எனக்கு ஞாபக சக்தி ரொம்ப கூட இருக்கு தம்பி! அவ்வளவு ஃபாஸ்டா எதையும் மறக்க மாட்டேன்!” பதிலுக்கு அவர்களைப் பார்த்து குறுநகையுடன் பெருமிதமாக கூறிக் கொண்டார்.
‘ஐயோ! புல்லரிக்குது! இவ்வளவு நேரம் இந்த ஆதவன் கிட்ட சிக்கி சின்னாபின்னமானது போதாதுன்னு இப்போ இவர் கிட்ட சிக்கிட்டோமே! கடவுளே! ஏன் என்னை இப்படி போட்டு படுத்துற?’ மனதுக்குள் இரத்தக் கண்ணீர் வடித்தபடியே ராஜா ஆதவனின் கை பற்றி இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல போக
“ஏன் தம்பி நீங்களும் பதுளைக்கா போறீங்க?” செல்வம் தன் அடுத்த கேள்வியை அவர்களைப் பார்த்து வினவினார்.
“ஆமா அங்கிள் நாளைக்கு ராஜாவோட பிரண்டுக்கு அங்கே கல்யாணம் அதற்காகத்தான் போகிறோம்”
“அப்படியா நாங்களும் ஒரு கல்யாணத்துக்கு தான் போறோம்! அப்ப நீங்களும் இங்கேயே இருக்கலாமே தம்பி! நாம பேசிட்டு போவோம்! தெரிஞ்ச ஆட்கள் ஆளுக்கொரு பக்கம் இருக்காம ஒண்ணா இருப்போமே!” செல்வத்தின் கூற்றில் இழையினி தன்னருகே இருந்த விஜியை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தாள்.
‘ஐயோ! இந்த அப்பா ஏன் அவசரப்பட்டு இந்த விஷயத்தை வெளில சொன்னாங்க? இப்ப இழையை நான் எப்படி சமாளிப்பேன்?’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே விஜி தன்னருகில் இருந்தவளைத் திரும்பிப் பார்க்கவும்
“என்ன விஜி இது? நீ என்கிட்ட கல்யாணத்துக்கு போவதாக சொல்லவே இல்லையே?” இழையினி சற்றுக் கண்டிப்பான குரலில் அவர்கள் இருவருக்கும் மாத்திரம் கேட்கும் வகையில் கேட்டாள்.
இழையினியின் கேள்வியில் அவளைப் பார்த்து நெளிந்துகொண்டே சிரித்தவள்
“அது இழைம்மா! நான் பொய் எல்லாம் சொல்லல நீ கல்யாணத்துக்கு போக வான்னு சொன்னா வர மாட்டேன்னு தெரியும் அதுதான் அப்படி சொல்லி கூப்பிட்டேன்! நாலு பேருக்குள்ள போய் கதைச்சு பேசினால்தானே உன்னோட மனசுக்குள் இருக்கும் குழப்பம் எல்லாம் குறையும் அதான் அப்படி செஞ்சேன் மத்தபடி இவங்களும் வருவாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாது மா நம்பு!” தன் தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூற
“உன்னை ஊருக்கு போய் கவனிக்கிறேன்!” என்றவள் சிறிது தயக்கத்துடன் ஆதவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
ஆதவனையும், ராஜாவையும் தங்களுடனே வந்து அமர்ந்து கொள்ளும் படி செல்வம் தம்பதியினர் வற்புறுத்த அவர்களும் இதற்கு மேல் அவர்களை மறுப்பது சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.
பெண்கள் மூவரும் ஒரு புறமும், ஆண்கள் மூவரும் ஒரு புறமும் அமர்ந்துகொள்ள இனிய காதில் சங்கீதமாக அந்தப் புகையிரதம் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.
அவர்கள் எல்லோரும் பயணம் செய்துகொண்டிருந்த நேரம் மதிய நேரம் ஆகையால் எல்லோரும் தங்கள் மதிய உணவை அந்தப் பிரயாணத்திலேயே எடுத்துக்கொள்ள இழையினி மாத்திரம் தட்டுத்தடுமாறி ஏதோ ஒரு தயக்கத்துடனேயே தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
காலையிலிருந்து யாரைப் பற்றி விதம் விதமாக நினைத்துக் கொண்டிருந்தோமோ அந்த நபரே தன் கண் முன்னால் வந்து அமர்ந்திருந்தால் வேறு என்னதான் அவளுக்குச் செய்யத் தோன்றும்?
இந்தப்புறம் பெண்ணவள் ஒருவித மன நிலையில் தவித்துக் கொண்டிருக்க மறுபுறம் அவள் எதிரில் அமர்ந்து கொண்டிருந்தவனோ அவளது அந்த தவிப்பையும், படபடப்பையும் அங்குலம் அங்குலமாக தன் மனதிற்குள் சேமித்து வைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு மாதமாக தன் மனம் கவர்ந்தவளைப் பார்க்க முடியாமல் மனதிற்குள் பிரளயமே உருவானது போல தவித்தவனாயிற்றே அவன்!
இந்த இரண்டு வருட காலமாக அவளைப் பார்க்காத போது கூட இந்த அளவிற்கு அவன் தவித்து போனதில்லை ஆனால் இந்த ஒரு மாதம் அவளைப் பார்க்காமல் இருந்தது அவனுக்கு ஒரு யுகமாகத்தான் தோன்றியது.
ஒரு வேளை தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தியதால் அவ்வாறான எண்ணங்கள் அவனுக்கு தோன்றியதோ என்னவோ?
இழையினி மெல்ல அவனை நிமிர்ந்து பார்ப்பதும் பின் தன் பார்வையை தாழ்த்திக் கொள்வதுமாக கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருக்க அவளது ஒவ்வொரு அசைவும் அவன் மீதான காதலில் சான்றாகவே அவனுக்குத் தோன்றியது.
ஆதவன் தன் இதழில் மாறாத புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க
“பாஸ்! ஓவரா ஜொல்லு விடாத பதுளையில் ஏற்கனவே நிறைய நீர்வீழ்ச்சி இருக்காம்!” ராஜா அவனது காதில் மெதுவாக கூறவும்
அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்
“நீ சொன்ன மாதிரி இந்த பயணம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது ராஜா!” ரசனையுடன் தன் முன்னால் அமர்ந்திருந்தவளைப் பார்த்துக்கொண்டு கூறினான்.
“ஆமா தம்பி! டிரெயினில் பதுளைக்கு போறது ரொம்ப அழகான பிரயாணம் தான்!” செல்வம் அவனது கருத்துக்கு ஆமோதிப்பாக கருத்து சொல்லுவது போல கூறவும் இளையவர்கள் நால்வரும் தங்கள் சிரிப்பை மறைத்தபடியே அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தனர்.
“ஆனாலும் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா ஆதவா! காலையிலிருந்தே இழையினியைப் பாக்கணும் பாக்கணும்ன்னு காலடிச்சு கத்துன இப்ப அந்த கடவுளே உனக்கு அந்த வாய்ப்பைத் தந்துட்டாரு! நீ நல்லவன் டா! நல்லவன் டா!”
“அது தான் காதலோட சக்தி ராஜா!”
“என்ன சக்தியோ? மந்திரமோ? நமக்கு தெரியாதுப்பா!” ஆதவனின் காதில் ரகசியமாக கூறிவிட்டு திரும்பிய ராஜாவின் பார்வை சரியாக தன் எதிரில் அமர்ந்திருந்த விஜயாவின் மேல் சென்று நின்றது.
சிறிது தன்னை ஒப்பனைப்படுத்தி இருப்பால் போல உதட்டில் ஒட்டியிருந்த உதட்டுச் சாயமும், கண்ணின் ஓரத்தில் பட்டிருந்த கண்மையும் அவள் ஒப்பனைத் திறமையை எடுத்துக் காட்டியது.
காற்றிலாடும் முடியை இழுத்து விட்டபடியே தன் அன்னையுடனும், இழையினியுடனும் பேசியபடியே அமர்ந்திருந்த விஜியை அப்போதுதான் ராஜா நன்றாக உன்னிப்பாக கவனித்தான்.
மாநிறத்திலும் சற்று குறைவான நிறமாக இருந்தாலும் ஏதோ ஒரு வித்தியாசமான சிறப்பம்சம் அவளைப் பார்க்கும்போது இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் நுவரெலியாவில் வைத்து நடந்த தங்கள் நால்வரது முதல் சந்திப்பையும் நினைத்து பார்த்து விட்டு
‘ஐயோ! சாமி! இவ பக்கம் திரும்பவே கூடாது! இந்த வாயாடி சகவாசமே வேணாம்!’ என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டே தன் பார்வையை திருப்பிக் கொள்ள
‘நீ சொன்னால் நான் கேட்பேனா?’ என்பது போல அவன் கண்கள் மீண்டும் அவள் புறமே திரும்பியது.
கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் இழையினியின் பார்வை கண்ணாமூச்சி ஆட்டத்தை ரசித்தபடி அமர்ந்திருந்த ஆதவன் சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து எழுந்து சென்று விட அவளோ அவனை சிறு தவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘ஆதவன் எங்க போறாங்க?’ தன் மனதிற்குள் எழுந்த கேள்வியுடன் அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தவள் பதினைந்து நிமிடங்கள் ஆகியும் அவன் வராமல் போகவே
“அங்கிள் நான் இப்ப வந்துடுறேன்!” செல்வத்தைப் பார்த்து கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
அவர்கள் அமர்ந்திருந்த பெட்டியின் ஒவ்வொரு இருக்கைகளையும் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே நடந்து சென்று இழையினி அங்கே எங்கேயும் ஆதவனை காணாது போகவே சிறிது படபடப்புடன் இன்னும் மும்முரமாக தன் பார்வையை சுற்றிலும் படரவிட்டாள்.
‘ஆதவன் எங்கே போயிட்டீங்க?’ சத்தமிட்டு கத்தி கேட்க வேண்டும் என்பது போலத் தோன்றினாலும் தன் சுற்றுப்புறம் உணர்ந்து சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் மீண்டும் தன் பார்வையை அடுத்து பெட்டியின் புறம் திருப்ப அங்கேயும் அவன் இருக்கவில்லை.
“திடீர் திடீரென கண் முன்னாடி வந்து நின்று விட்டு சட்டென்று காணாமல் போய் என்னை தவிக்க விடுவதே இந்த ஆதவனுக்கு வேலையாக போயிடுச்சு! இந்த ஆதவன் எங்க போய்ட்டாங்க தெரியலையே!” மனதிற்குள் நினைத்துக் கொள்வதாக எண்ணி வாய்விட்டு கூறிக்கொண்டே மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள எண்ணி திரும்பிய இழையினி சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அந்தப் புகையிரதத்தில் கதவு ஓரமாக நின்று கொண்டிருந்த பக்கமாக திரும்பி பார்க்க அங்கே ஆதவன் தன் கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஆ..ஆத..”
“வன்…ஆதவன்!” இழையினி தடுமாற்றத்தில் சொல்லாமல் விட்ட தன் பெயரின் மீதி எழுத்துக்களை உச்சரித்தவன் அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்த அவளோ வெட்கமும் கூச்சமும் போட்டி போட தன் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றாள்.
அதற்குள் ஆதவன் அவள் கையை பற்றி இழுத்து தன் முன்னால் நிறுத்திக்கொள்ள அவளோ தன் விழிகள் இரண்டும் குடை போல விரிய அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆதவன் நீங்க என்ன பண்ணுறீங்க?” இழையினி தவிப்போடு தன் பார்வையை சுற்றிலும் சுழல விட அவனோ அவள் கையின் மேல் இருந்த தன் கையை சட்டென்று விலக்கிக் கொண்டான்.
ஆதவன் தனது கையை விலக்கி எடுத்துக் கொண்ட பின்பும் இழையினி அவன் தன் கையை இன்னமும் பிடித்திருப்பது போலவே வைத்து நிற்க அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டவன்
“என்ன மேடம் இது?” தன் புருவம் உயர்த்தி அவளது கையை பார்க்கவும்
“அச்சோ!” கண்களை மூடிக்கொண்டு அவசரமாக தன் கையை கீழிறக்கி கொண்டவள் அவனது கேலியான புன்னகையில் தன் உதட்டை கடித்துக்கொண்டு நின்றாள்.
இருப்பினும் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவள் முகத்தை கோபமாக வைத்துக் கொள்வது போல வைத்துக்கொண்டு
“நான் தான் உங்ககிட்ட என்னை சந்திக்க வேண்டாம் என்று சொன்னேன் தானே? அதற்குப் பிறகும் ஏன் எங்க கூடவே வர்றீங்க ஆதவன்?” என்று கேட்க
வாய்விட்டு சிரித்துக் கொண்டே அவளின் இருபுறமும் தன் கையை ஊன்றிக் கொண்டவன்
“இது நான் முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு இழையினி மேடம்! ஒருவேளை முன்னாடியே இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் ஏதாவது ரெடி பண்ணிட்டு வந்து இருக்கலாம் இப்போ எனக்கு என்ன பேசுவது என்றே தெரியலை! என் நண்பன் ராஜா ரொம்ப கட்டாயப்படுத்தி அழைத்ததால் தான் நான் வந்தேன் அவன் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்ணிட்டான் அதற்கு கண்டிப்பாக அவனுக்கு பரிசு உண்டு!
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா இழையினி மேடம்? ஒரு மாதமாக உங்களை பார்க்காமல் நான் எவ்வளவு தூரம் நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து வெந்நீராகி, அந்து அவலாகிப் போய் இருக்கேன் தெரியுமா?
இது தற்செயலாக நடந்த சந்திப்பாக இருந்தாலும் இவ்வளவு நேரமும் நீங்க தான் நான் இருக்கவும் நிமிர்ந்தும் பார்க்க விரும்பாமல் சங்கடப்பட்டீங்க! அதுதான் உங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நான் எழுந்து வந்தேன்! நீங்க சொன்ன மாதிரி நான் உங்களை சந்திக்கவே இல்லை இழையினி மேடம்!
உங்களுக்கு இன்னொரு விஷயமும் தெரியுமா? ஒருத்தங்க அவங்களை இனி சந்திக்கவே வேண்டாம் என்று என் கிட்ட சொன்னாங்க நானும் அவங்களை ரொம்ப டீப்பா லவ் பண்ணியதால் அவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவங்களை சந்திக்கவே இல்லை! ஆனாலும் அவங்க என்னை தேடி வருவாங்க என்று எனக்கு தெரியும் இருந்தாலும் அது இவ்வளவு சீக்கிரமா நடக்கும் என்று தெரியாமல் போச்சே!” அவள் கண்களை பார்த்துக்கொண்டே அவன் கூற அவனது அந்த நெருக்கத்தில் இழையினியின் முகம் செந்தாமரையாய் மலர்ந்து சிவந்து போனது.
அவள் வாய் திறந்து தன் காதலை அவனுக்கு கூறாவிட்டாலும் அவளது அந்த விழியசைவுகளும், தயக்கமும், உடல் மொழியும் அவளது மனதிற்குள் இருக்கும் அவன் மீதான எண்ணங்களை எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு உணர்த்தியது.
“நீ இந்த ஒரு மாதமும் என்னை ரொம்ப தேடி இருப்ப போல!”
“சேச்சே! யாரு அப்படி சொன்னது?” உடனே அவனின் கேள்விக்கு ஒப்புக் கொண்டால் அவனோடு பேச்சு வளர்க்க முடியாதே என்ற எண்ணத்தோடு அவனது கேள்விக்கு மறுப்பாக பதிலளித்தாள் இழையினி.
“அப்படியா? பார்த்தால் அப்படி தெரியலையே!” அவள் கண்களை தன் கண்களோடு சந்திக்க விட்டபடியே ஆதவன் வினவ அவள் சட்டென்று தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
“இழை!”
“……”
“இழை!”
“ம்ம்ம்ம்ம்ம்!” சத்தமே இல்லாமல் வந்த அவளது குரலில் ஆதவனுக்கு தான் மனதிற்குள் ஏதேதோ ஆசைகள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
கைகளுக்குள் எட்டும் தொலைவில் நிற்கும் தன் இழையினியை தன் கை வளைவுக்குள் சிறையெடுக்க மனம் தூண்டினாலும் அவள் சம்மதமின்றி எதையும் செய்ய கூடாது என்ற எண்ணத்தோடு அவன் அமைதியாக அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.
இங்கே ஆதவனும், இழையினியும் தங்களுக்கென்று ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க மறுபுறம் வெகு நேரமாக தன் நண்பனைக் காணாமல் ராஜா தவிப்போடு அமர்ந்திருந்தான்.
‘எங்கே போயிட்டான் இவன்?’ சுற்றிலும் திரும்பி பார்ப்பதும், எட்டி எட்டி பார்ப்பதுமாக அமர்ந்திருந்த ராஜா ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்து அங்கிருந்து எழுந்து கொண்டு ஆதவனைத் தேடிச் செல்ல மற்றைய புறம் விஜியும் இழையினியைத் தேடிச் செல்லத் தொடங்கினாள்.
தன் பெற்றோரிடம் இழையினி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள் அவளை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று விட்டு வந்தவள் ஒவ்வொரு இருக்கைகளையும் பார்த்து கொண்டே நடந்து சென்று இறுதியில் அந்த பெட்டியின் வாயில் புறமாக சென்று நிற்க சரியாக ராஜாவும் அவள் நிற்கும் புறமாக வந்து சேர்ந்தான்.
“எக்ஸ்கியூஸ் மீ மேடம்!” ராஜாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தவள்
“நீங்க தானா?” என்று விட்டு சற்று நகர்ந்து நிற்கவும்
“தேங்கஸ்!” என்றவாறே அவளைத் தாண்டி சென்றவன் தன் பக்கவாட்டு புறமாக திரும்பி பார்த்து விட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்க
‘என்ன ஆச்சு இவருக்கு?’ யோசனையுடன் அவன் பார்வை சென்ற புறமாக திரும்பி பார்த்தவள் அங்கே ஆதவன் கைகளை ஊன்றியபடி நிற்க அவன் கைகளுக்கு இடையில் இழையினி நின்று கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரையும் அப்படியான நிலையில் பார்த்ததும் விஜி தன்னை மறந்து சத்தமிடப் போக அவசரமாக அவளருகில் வந்து அவளது வாயில் கையை வைத்து மூடிய ராஜா சுற்றிலும் திரும்பி பார்க்க அவர்களை யாரும் அங்கே கவனிக்கவில்லை.
செல்வம் தம்பதியினரும் அவர்கள் நின்று கொண்டிருந்த பக்கத்திற்கு எதிர்புறமாக பார்த்தவாறு அமர்ந்திருந்ததனால் அவர்களும் இவர்களைக் கவனிக்கவில்லை.
தன் வாயில் கையை வைத்திருந்த ராஜாவின் கையை கோபமாக தட்டி விட்ட விஜி
“எதுக்கு என் வாயை மூடுனீங்க?” மெல்லிய குரலில் அதே நேரம் சற்று கடுமையாக தன் முகத்தை வைத்து கொண்டு கேட்கவும்
அவளை மேலிருந்து கீழாக வித்தியாசமான பொருளைப் பார்ப்பது போல பார்த்தவன்
“உனக்கு உண்மையா உன்னோட பிரண்ட் மேல அக்கறை இருக்கா?” என்று கேட்க
“நீங்க என்ன லூசா? என் பிரண்ட் மேல எனக்கு அக்கறை இல்லாம இருக்குமா?” என்று கேட்டாள்.
“அப்ப இவ்வளவு வருஷம் கழிச்சு சந்திச்சு இருக்குற காதலர்களை இப்படி தான் சத்தம் போட்டு தொந்தரவு பண்ணுவீங்களா?” ராஜாவின் கேள்வியில்
“ஆமாலே!” தன் கன்னத்தை தட்டியபடியே யோசித்தவள்
“நான் ஏதோ ஒரு ஆர்வத்தில் சத்தம் போட போயிட்டேன் அதை சும்மா சொல்லி இருக்கலாம் தானே? அதுக்காக வாயை மூடணுமா? கொஞ்ச நேரம் எனக்கு மூச்சைடைச்சுடுச்சு!” கண்களை உருட்டி பாவனையோடு கூற
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றவன்
‘டேய் ராஜா! இதெல்லாம் தப்பு!’ அலைபாயும் தன் மனதுக்கு கடிவாளம் போட்டு விட்டு
“சரி வாங்க நாம போய் அங்கே இருப்போம் பிறகு உங்க அப்பா தேடி வந்துடப் போறாரு அவரு வந்தா எல்லாம் கெட்டுப் போயிடும்” என்று கூற விஜயாவோ தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.
“ஐயோ! அவசரப்பட்டு உளறிட்டோமோ?” தயக்கத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து சென்று விட அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே விஜயாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள்.
“விஜி! இழை எங்க மகள்?”
“அவ சும்மா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காப்பா இந்த மாதிரி அனுபவம் எல்லாம் அவளுக்கு இல்ல தானே! அது தான் பார்க்கட்டும்னு விட்டுட்டு வந்துட்டேன்” செல்வம் கவனிக்காத போது ராஜாவை பார்த்து கண்களால் ஜாடை காட்டியவாறே விஜயா கூற அவள் எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவனும் சிறு புன்னகையுடன் தன் பார்வையை ஜன்னல் புறமாக திருப்பிக் கொண்டான்.
சுற்றுப்புற சூழலில் ஏதேதோ சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க இங்கே இழையினியும், ஆதவனும் அதைப் பற்றி தெரியாமலேயே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று புகையிரதத்தின் ஹார்ன் ஒலி ஒலிக்க அந்த சத்தத்தில் திடுக்கிட்டு போன இழையினி முதலில் தன்னை சுதாரித்துக் கொண்டு சட்டென்று திரும்பி பார்க்க அப்போதுதான் அவள் தான் நின்று கொண்டிருந்த நிலையைக் கவனித்தாள்.
‘ஐயோ! இவ்வளவு நேரமும் இப்படியே தான் நின்று கொண்டு இருந்தேனா?’ ஆதவனின் அருகாமையில் எப்போதும் தான் தன்னை மறந்து நிற்பதை எண்ணி ஒரு புறம் அவள் மனது வெட்கம் கொண்டு அதை ரசித்தாலும், மறுபுற மனதோ அதை சரியில்லை என்று சொல்லி அவளை கண்டிக்கவே செய்தது.
அவளை அங்கிருந்து போக சொல்லி வற்புறுத்திய மனதுக்கு கட்டுப்பட்டு அங்கேயிருந்து விலகிச் செல்ல போனவள் தன் இருபுறமும் தடுப்பு போல இருந்த ஆதவனின் கைகளைப் பார்க்க அவனோ அவள் கண்களையே பார்த்து கொண்டு நின்றான்.
“ஆ..ஆதவ்… ஆதவன்! நான் போகணும்” தயக்கத்துடன் ஒலித்த இழையினியின் குரலில் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து கொண்டு நின்றவன் தன் கைகளை விலக்காமல் நிற்க
“ஆதவன் நான் போகணும் என்று சொன்னேன்” என சற்று சத்தமாக கூற அப்போதும் அவன் தன்னுடைய கையை விலக்கி கொள்ளவில்லை.
“உங்களை!” சிறு கண்டிப்போடு இழையினி அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளவும்
“ஐயோ! அம்மா!” அவளது தொடுகையை எதிர்பாராத ஆதவன் சற்று நிலைதடுமாறி வெளியில் விழப் போக
“ஐயோ ஆதவ்!” என்ற கூவலோடு அவனது கையை எட்டிப் பிடித்துக் கொண்டவள் அவனை தன் புறமாக இழுத்தது மட்டுமின்றி அவனை இனி பிரியவே மாட்டேன் என்பது போல தன்னோடு சேர்த்து இறுக அணைத்து கொண்டாள்…….