உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 22

புகையிரதத்தின் தடக் தடக் என்னும் சத்தத்தை விட ஆதவனின் இதயத் துடிப்பின் சத்தமே அந்த இடத்தில் பெரிதாக கேட்பது போல இழையினிக்கு இருந்தது.

 

விளையாட்டாக எண்ணித் தான் அவள் அவனது நெஞ்சில் கை வைத்து அவனைத் தள்ளி விட்டாள் ஆனால் அவன் அதை எதிர்பார்க்கவில்லையே!

 

ஆதவன் தடுமாறிய அந்த ஒரு சில நொடிகளுக்குள் இழையினியின் உயிர் அவள் வசமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

தன் நெஞ்சோடு ஒன்றியிருந்த இழையினியின் தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க எண்ணி தன் கையை அவளை நோக்கி கொண்டு போன ஆதவன் தன் சட்டையில் ஈரம் படுவதை உணர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவளது கண்களோ கலங்கி சிவந்து போய் இருந்தது.

 

“ஹேய் இழை! என்ன இது? சின்னக் குழந்தை மாதிரி!” சிறு கண்டிப்போடு அவளது கண்களை ஆதவன் துடைத்து விடவும்

 

“ஐ யம் சாரி ஆதவன்! நான் வேண்டும் என்று அப்படி பண்ணல! நான் அப்படி நீங்க விழப் போய் விடுவீங்க என்றும் எதிர்பார்க்கல! ஐ யம் ரியலி சாரி!” என்றவளின் கண்கள் மீண்டும் கண்ணீரை சிந்த போக

 

“உஸ்ஸ்ஸ்! என்ன இது? சும்மா சும்மா அருவி மாதிரி கண்ணீர் விட்டுட்டு! என் முன்னாடி வைத்து இப்படி கண் கலங்கினால் இனிமேல் நான் உங்க முன்னாடி வரமாட்டேன் சரியா?” அவன் கேள்வியாக அவளை நோக்க அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் உடனே அவசர அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

 

“அது தான் தெரியாமல் நடந்தது என்று உனக்கும், எனக்கும் தெரியுமே! அப்புறம் எதற்கு இந்த கண்ணீர்? அப்படி நீ என்னை உண்மையாகவே தள்ளி விடணும் என்கிற எண்ணத்தில் இருந்திருந்தால் அன்னைக்கு மலையில் வைத்து நான் காதலை சொன்ன போதே தள்ளி விட்டு இருப்ப! இவ்வளவு நாள் காத்திருந்து எல்லாம் செய்ய மாட்ட!” 

 

“ஆதவன்!” கோபமாக பார்ப்பது போல இழையினி அவனை முறைத்து பார்க்க 

 

அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தவன்

“இப்போதும் நீ என்னை இந்த ஒரு மாதமாக நினைத்தே பார்க்கவில்லைன்னு தான் சொல்லுவியா?” கண்களில் குறும்பு மின்ன அவளைப் பார்த்து கேட்டான்.

 

“ஆமா நான் நினைக்கவே இல்லை!”

 

“அப்படியா? பார்த்தால் அப்படி தான் இருக்கு” ஆதவனின் கேலியான பேச்சில் குழப்பமாக அவனைப் பார்த்தவள் தன் கைகளை குனிந்து பார்க்க அதுவோ அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது.

 

“ஹைய்யோ! திரும்ப திரும்ப இப்படியே மாட்டிக்கொள்ளுரியே இழை!” இழையினி தன் தலையில் கையை வைத்து கொள்ளவும்

 

“மேடம்! ஒரு சின்ன தகவல்! நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைத்து மறுபடியும் சத்தம் போட்டு பேசுறீங்க” ஆதவன் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து கூற

 

“ஐயோ!” தன் நாக்கை கடித்து கொண்டு அங்கிருந்து செல்ல போனவள் திடீரென்று தங்களை சுற்றியிருந்த இடம் இருளாகிப் போய் விட அச்சத்துடன் அவனின் மார்பில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டாள்.

 

“ஆதவன்! ஏன் தீடீரென எல்லாம் இருட்டாகிடுச்சு? எனக்கு பயமாக இருக்கு!” தன்னோடு மேலும் ஒட்டிக் கொண்டவளின் தோளை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவன்

 

“இது ‘எல்ல’ மற்றும் ‘பதுளை’ ரெயில்வே ஸ்டேஷனுக்கு இடையில் வரும் ஒரு அழகான பாலத்தின் ஆரம்பம் இந்த குகை தாண்டியதும் ஒன்பது வளைவுகளைக் கொண்ட 91 மீட்டர் நீளமான ஒரு பாலம் வருமாம்! அது தான் இந்த பயணத்திலேயே ரொம்ப முக்கியமான சிறப்பம்சமாம்! அப்படி சொல்லித்தான் என்னை ராஜா இந்த பயணத்திற்கு அழைத்து வந்தான்!” என்று சொல்லி முடிக்கவும் அந்த பாலத்தின் மீது புகையிரதம் நுழையவும் சரியாக இருந்தது.

 

இந்த ஒன்பது வளைவுகளைக் கொண்ட பாலம் இலங்கையின் சிறந்த கட்டுமானத் துறையின் ஒரு எடுத்துக்காட்டாகவே கொள்ளப்படுகிறது.

 

இந்த பாலத்தினை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட திட்டங்களை போட்டவர் இலங்கையரான பி‌.கே. அப்புஹாமி என்பவர்.

 

அதோடு இந்த பாலம் வெறும் கற்களையும், மண்ணையும், சீமெந்தையும் கொண்டு சிறிதும் உலோக கலப்பின்றி அமைக்கப்பட்ட பாலம்.

 

80 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட அந்த ஒன்பது வளைவுகளைக் கொண்ட பாலத்தின் ஒரு புள்ளியிலிருந்து பார்த்தால் இறுதிப்புள்ளியில் இருக்கும் புகையிரதத்தின் பகுதி கூட அவ்வளவு தெளிவாக தெரியும்.

 

பல உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது அமர்ந்து கொண்டு தங்களை கடந்து செல்லும் புகையிரத்தைப் பார்த்து கொண்டு இருக்க அங்கே ஒவ்வொரு நாளும் வருவதுமுண்டு.

 

இலங்கைக்கே உரித்தான பெருமை சேர்க்கும் ஒரு கட்டுமானத்தின் மேல் பயணித்து கொண்டிருந்த ஆதவன் மற்றும் இழையினி அந்த பாலத்தின் மீதிருந்து பார்க்கும் போது தங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்த அந்த ஒவ்வொரு இயற்கை காட்சிகளையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.

 

தன் கை வளைவில் தன் மனம் கவர்ந்தவள், சுற்றிலும் இயற்கை காட்சிகளைக் கொண்ட சூழல், காதலை வார்த்தை கொண்டு சொல்லாமல் தன் செயலிலேயே காண்பித்தாயிற்று இதற்கு மேல் தனக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று தான் ஆதவனுக்குத் தோன்றியது.

 

இழையினியும் அவனது அணைப்பில் நிற்கின்றோமே என்ற எண்ணம் சிறிதுமின்றி சிறு குழந்தையாக அந்த சூழலை ரசித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

“இழை!” ஆதவனின் அழைப்பில் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்னவென்பது போல கேள்வியாக அவனை நோக்க

 

“நீ வாய் திறந்து சொல்லாவிட்டாலும் உன் மனதில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் ஒரு மனத்திருப்திக்காக நீயே உன் வாயால் அந்த வார்த்தைகளை சொல்லக் கூடாதா?” என அவன் கேட்கவே கன்னங்கள் இரண்டும் சிவந்து போக அவனை நிமிர்ந்து பார்த்தவள் உதடுகளோ தந்தியடிக்கத் தொடங்கியது.

 

“ஒரே ஒரு தடவை!” அவன் கண்களை சுருக்கி கெஞ்சலாக கேட்கவும் 

 

சிறு புன்னகையுடன் அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தவள்

“ஆத..” என ஆரம்பிக்கும் போது

 

“இழை அப்பா உன்னை கூப்பிடுறாங்க சீக்கிரமா வா!” விஜி பதட்டத்துடன் அவர்கள் நின்ற புறம் தன் கண்களை மூடிக் கொண்டு எட்டிப் பார்த்து கூறி விட்டு ஓடி விட

 

“ஐயோ! நான் வந்து நேரம் ஆகிடுச்சு! அங்கிள், ஆன்ட்டி தேடுவாங்க நான் வர்றேன்!” அவளும் அங்கிருந்து அவசரமாக நகர்ந்து சென்றாள்.

 

ஓட்டமும் நடையுமாக தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டவள்

“சாரி அங்கிள்! என்னை மறந்து நின்னுட்டேன்” செல்வத்தைப் பார்த்து சிறு புன்னகையுடன் கூற

 

அவரோ

“பரவாயில்லை மகள்! உங்களுக்கு சந்தோஷமா இருந்தா சரி தான்!” என்று கூறினார்.

 

“நீங்க சந்தோஷமா இருக்கீங்க தானே இழையினி மேடம்!” விஜி குறும்பாக கண்ணடித்த வண்ணம் இழையினியைப் பார்த்து வினவ அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.

 

சிறிது நேரத்தில் ஆதவனும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ள இழையினியின் கண்கள் அவனைப் பார்ப்பதும், வேறு புறம் பார்ப்பதுமாக நாட்டியமாடிக் கொண்டிருந்தது.

 

ஆதவன் தன் இத்தனை வருடக் காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்ட திருப்தியோடு அந்த தருணத்தை எல்லாம் நீங்காத நினைவுகளாக தன் மனதிற்குள் இருத்திக் கொண்டான்.

 

காலையில் ஆரம்பித்த அவர்களது பயணம் மாலை நான்கு மணியளவில் பதுளை புகையிரத நிலையத்தில் இனிதாக நிறைவு பெற அந்த நிறைவான உணர்வு ஆதவனின் மனதிற்குள்ளும் குடியேறிக் கொண்டது.

 

அந்த சந்தோஷம் நிலையானது என்று நம்பி ராஜாவை வம்பிழுத்த படியே ஆதவன் தங்கள் தங்கப் போகும் ஹோட்டலை நோக்கி புறப்பட்டு செல்ல மறுபுறம் இழையினியும், விஜியின் குடும்பத்தினருடன் தங்கள் தங்குமிடத்தை நோக்கி புறப்பட்டு சென்றாள்.

 

ஆதவன் மற்றும் ராஜா தங்கும் ஹோட்டலிலேயே தான் ராஜாவின் நண்பனது திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அவர்கள் இருவரும் அந்த ஹோட்டலிற்குள் நுழையும் போதே திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

 

ஆதவனின் மனம் முழுவதும் தன் காதல் கை கூடி விட்ட சந்தோஷமே நிறைந்திருக்க முகம் கொள்ளாப் புன்னகையுடன் ராஜாவை வம்பிழுத்துக் கொண்டிருந்தவன்

“ராஜா! இங்கே பக்கத்தில் ஏதாவது நல்ல இடம் இருந்தால் போய் விட்டு வரலாமா? எனக்கு இருக்கும் சந்தோஷத்திற்கு ஏதாவது பண்ணியே ஆகணும் போல இருக்கு” என்று கேட்கவும்

 

“இடமா?” சிறிது நேரம் தன் கன்னத்தில் தட்டி யோசித்தவன்

 

“இப்போ தானேடா ரூமுக்கு வந்து இருக்கோம் நாளைக்கு போவோமே?” என்று கூற

 

அவனோ

“முடியாது நீ எனக்கு பதுளையை சுற்றி காட்டுவதாக சொல்லித் தானே கூட்டிட்டு வந்த! ஒழுங்கு மரியாதையாக என்னைக் கூட்டிட்டு போ!” ராஜாவின் முன்னால் வந்து நின்று அவனை முறைத்து பார்த்து கொண்டு கூறினான்.

 

“உன்னோட ஒரே தொல்லைடா! உனக்கு தான் லவ் செட் ஆகிடுச்சே! அதற்கு பிறகும் ஏன்டா என்னை போட்டு படுத்துற? இழையினியைக் கூட்டிட்டு போறது தானே?”

 

“இது உன் ஏரியா டா! இங்கே நான் எங்கே போவேன்? அதோடு கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தனியாக எல்லாம் வெளியே போகக் கூடாது”

 

“ஆமா! இப்ப மட்டும் நல்ல தெளிவா பேசு டிரெயினில் வைச்சு ரொமான்ஸ் பண்ணிட்டு இப்ப ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணு மாதிரி கதைக்குறத பாரு!” ராஜா முணுமுணுத்து கொண்டே தன் உடைகளை எடுத்து கொண்டிருக்கவும்

 

“என்ன? என்ன சொன்ன?” ஆதவன் அவனருகில் வந்து நின்று கேட்க

 

“ஆஹ்! குளிச்சிட்டு ரெடியாகு போவோம்னு சொன்னேன்” அவன் காதில் சத்தமாக கூறி விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

“ரொம்ப நன்றி நண்பா!” தன் காதைத் தேய்த்து விட்டபடியே உல்லாசமாக சிரித்துக் கொண்டவன் வெளியே செல்வதற்கு தயாராகி கொண்டிருக்க மறுபுறம் ராஜா ஆதவனின் விளையாட்டுக்களை எண்ணிப் பார்த்து சிரித்துக் கொண்டு தயாராகினான்.

 

என்னதான் வெளியே ஆதவனோடு கோபப்படுவது போல அவன் பேசினாலும் அவன் மனதிற்குள் ஆதவன் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு.

 

இரண்டு வருடங்கள் அவனுடன் பழகிய இந்த நாட்கள் எல்லாம் மீண்டும் அவனுக்கு திரும்ப கிடைக்க முடியாத பொக்கிஷமாகத் தான் தோன்றியது.

 

இந்த விடயத்தை ஆதவனிடம் சொன்னாலோ அல்லது காண்பித்து கொண்டாலோ அதற்கும் அவன் தன்னை வம்பிழுப்பான் என்று தெரிந்திருந்தனால் ராஜா அதைப் பற்றி எதுவும் சொல்லிக் கொண்டதில்லை.

 

ஒரு வழியாக நண்பர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டே பதுளையில் இருக்கும் ‘ராவணக்குகை’ பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

 

பதுளையில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த இடம் இலங்கையின் இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.

 

இந்தியாவில் இருந்து ராவணன் சீதையை சிறைப்பிடித்து வந்து இந்த குகையில் தான் அடைத்து வைத்திருந்ததாக சில இதிகாசங்களில் சொல்லப்படுகிறது.

 

150 அடி நீளமும், 60 அடி உயரமும், 50 அடி அகலமும் கொண்ட இந்த சிறு குகை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4490 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

 

650 படிக்கட்டுகளைத் தாண்டி ஏறி இந்த மலையின் உச்சியில் அமைந்துள்ள அந்த குகையைப் பார்க்க ராஜாவும், ஆதவனும் வந்து சேர்ந்தனர்.

 

சிறியதொரு குகையாக அது இருந்தாலும் மாலை மங்கும் நேரத்தில் அந்த இடத்தில் நிற்பது ஆதவன் மனதினுள் மிகவும் அழகாக தான் இருந்தது.

 

“யப்பா! காதல் மன்னா! நீ சொன்ன மாதிரி வெளிலே கூட்டிட்டு வந்துட்டேன் இப்ப உனக்கு திருப்தியா?” ராஜாவின் கேள்வியில் அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ஆதவன்

 

“பரவாயில்லை டா! இந்த இடமும் சூப்பராக தான் இருக்கு! ஒரு விடயம் சொல்லவா? இந்த இடத்திற்கும் என்னுடைய இப்போதைய மனநிலைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா?” கேள்வியாக அவனை நோக்கினான்.

 

“எதாவது எடக்குமடக்கா சொல்லப் போறேன்னு விளங்குது! பரவாயில்லை சொல்லு!”

 

“இந்த உலகத்தில் வில்லனோ, ஹீரோவோ, நல்லவனோ, கெட்டவனோ யாராக இருந்தாலும் அவங்களுக்கு கண்டிப்பாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் காதல் வந்து தான் இருக்கும் இல்லையா? இராவணன் சீதையை கடத்திட்டு வந்ததும் காதலால் தான் அதே மாதிரி இராமன் சீதையை காப்பற்றியதும் காதலால் தான்! நானும்…”

 

“ஐயோ! ராசா வேணாம்! நீ அடுத்ததா என்ன சொல்லப்போறேன்னு தெரியும் அது மட்டும் வேணாம்! அதை தாங்குற சக்தி எனக்கு இல்ல! ஆளை விடுடா சாமி!” ராஜா தன் காதுகள் இரண்டையும் மூடிக்கொண்டு ஆதவனை விட்டு தூரமாக ஓடிச் செல்ல அவனோ சிரித்துக் கொண்டே அவனை விடாமல் துரத்திக்கொண்டு ஓடிச்சென்று அவனோடு சந்தோஷமாக தன் நேரத்தை செலவிட்டான்.

 

சிறிது நேரம் வெளியே ஊர் சுற்றி விட்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்த ஆதவன் நாள் முழுவதும் பிரயாணம் செய்த களைப்பில் அசந்து தூங்கி விட மறுபுறம் இழையினி தன்னறைக்குள் தலையணை ஒன்றை எடுத்து தன் மடியில் வைத்தவாறு காலையில் புகையிரதத்தில் நடந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

 

தன் மனதிற்குள் எப்படி ஆதவன் வந்தான் என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை அவனது இயல்பான, குறும்பு தனம் நிறைந்த பேச்சு, எப்போதும் புன்னகையுடன் தன் முன்னால் வந்து நிற்பது, தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணும் அவன் கண்ணியம் என அவனைப் பற்றி நாள் முழுவதும் யோசித்து கொண்டே இருக்கலாம் போல அவளுக்கு தோன்றியது.

 

இத்தனை நாட்களாக எதை எதையோ நினைத்து தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை பின் தள்ளிப் போட்டிருந்தவள் இப்போது அந்த குழப்பங்களை எல்லாம் மறந்திருந்தாள் என்பது தான் உண்மை.

 

இழையினி தன் கண்களை மூடும் போதெல்லாம் ஆதவனோடு நெருக்கத்தில் தான் செலவிட்ட ஒவ்வொரு நொடிகளுமே அவள் மனக்கண் முன்னால் இனிய காட்சிகளாக விரியும்.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சுகமான மனநிலையுடன் உறக்கத்தை தழுவிக் கொள்ள அடுத்த நாள் விடியல் அலுங்காமல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அதிர்ச்சியை அன்பளிப்பாக வழங்க காத்திருந்தது.

 

ஆதவன் தங்கியிருந்த அந்த ஹோட்டலிலேயே காலை நேரம் திருமணமும், ரிசப்ஷனும் ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதிகாலை நேரமே அந்த மண்டபத்தில் உற்றார், உறவினர்களும், நண்பர்களும் ஒன்று சேரத் தொடங்கி இருந்தனர்.

 

அந்த திருமண வைபவத்தைப் பார்க்கும் போது இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அந்த திருமண நிகழ்வுகளே ஆதவனின் மனதிற்குள் மாறி மாறி வந்து நிற்க

‘சேச்சே! எதற்கு இப்போ தேவையில்லாத விடயங்களைப் பற்றி எல்லாம் யோசிக்கிறேன்? நல்லதே யோசி! நல்லதே நடக்கும் ஆதவா!’ தனக்குத்தானே தைரியம் கூறிக் கொண்டவன் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் தன் கவனத்தை திருப்பி கொண்டான்.

 

மணமேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்து சடங்குகளை செய்து கொண்டிருக்க ஆதவனின் மனமோ அந்த இடத்தில் தன்னையும், இழையினியையும் வைத்து நினைத்து பார்க்க தன் மனவோட்டத்தை எண்ணி சிரித்துக் கொண்டவன் தன் பார்வையை அங்குமிங்கும் சுழல விட்டபடியே திரும்பி பார்க்க அங்கே இழையினி விஜியோடு பேசிக்கொண்டே அந்த மண்டபத்தின் வாயில் புறமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

கடும் நீல நிற சுடிதார் அணிந்து அதற்கேற்றாற் போல எளிமையான ஆபரணங்கள் மற்றும் ஒப்பனையோடு இழையினி நடந்து வந்து கொண்டிருக்க கார்மேகக் கூட்டம் போல் அவளது கேசம் அசைந்தாட அந்த கேசத்தின் அசைவில் ஆதவனின் மனமும் வாலில்லா காற்றாடியாக திக்கின்றி பறக்க ஆரம்பித்தது.

 

“இழை!” அதிர்ச்சியில் தன் விழிகள் இரண்டும் விரிய அவளைப் பார்த்து கொண்டிருந்த ஆதவன்

 

“அப்போ நேற்று அந்த அங்கிள் சொன்னது இந்த கல்யாணத்தை தானா? ஹைய்யோ! ராஜா நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்க?” மனதிற்குள் வெகுவாக தன் நண்பனைப் பாராட்டி கொண்டே அவன் நின்று கொண்டிருந்த புறமாக சென்று அவனை அணைத்துக் கொள்ளவும்

 

அவனது இந்த திடீர் அணைப்பை எதிர்பாராத ராஜா

“டேய்! டேய்! என்னடா பண்ணுற?” குழப்பமாக அவனைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியபடியே கேட்டான்.

 

அவன் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அவனது முகத்தை இழையினி சென்று கொண்டிருந்த புறமாக திருப்பிக் காட்டியவன்

“நீ தெரிந்தோ, தெரியாமலோ இல்லை இல்லை! கண்டிப்பாக நீ தெரிந்து இதெல்லாம் செய்திருக்க மாட்ட! அவ்வளவு தூரம் உன் மூளை வேலை செய்யாது!”

 

“டேய்!”

 

“எது எப்படியோ நீ உனக்கே தெரியாமல் எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்க அதற்கு கண்டிப்பாக உனக்கு பரிசு தரத்தான் வேண்டும்” என்றவாறே அவன் கன்னத்தில் முத்தமிட

 

அவனோ

“அய்யே! ச்சீ! ஏன்டா இப்படி என்னை படுத்துற?” அவசரமாக தன் கன்னத்தை துடைத்து விட்டு கொள்ள ஆதவன் மீண்டும் அவனைப் பார்த்து புன்னகையுடன் இறுக அணைத்து விட்டுச் சென்றான்.

 

‘இந்த இழையினி எப்படி தான் நாம போற இடத்துக்கு சரியாக வருதோ தெரியாது!’ தன் தலையில் கையை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்த ராஜா இழையினியின் அருகில் நின்று கொண்டிருந்த விஜயாவைப் பார்த்ததும் சட்டென்று மற்ற எண்ணங்களை எல்லாம் பின் தள்ளி விட்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நிற்கத் தொடங்கினான்.

 

இழையினியை அங்கே பார்த்ததுமே அவளிடம் சென்று பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நோக்கி நடந்து சென்ற ஆதவன் திடீரென்று அவளின் முன்னால் வந்து நின்ற செல்வத்தைப் பார்த்ததும் தன் நடையின் வேகத்தை குறைத்து கொள்ள அதற்கிடையில் அவர் தன் இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு வேறு புறமாக சென்றிருந்தார்.

 

“எங்கே போயிட்டாங்க?” யோசனையுடன் அந்த மண்டபத்தை சுற்றி வந்தவன் அங்கே எங்கேயும் இழையினியைக் காணாமல் போகவே வெளியே சென்று தேடிப் பார்க்கலாம் என்று எண்ணியபடி வெளியே நடந்து சென்றான்.

 

அங்கே விஜயா தன் போனை வைத்துக் கொண்டு எதையோ பார்த்து கொண்டிருப்பதைக் கண்டவன் வேகமாக அவளருகில் சென்று

“விஜி! இழையினி எங்கே?” என்று கேட்கவும் 

 

திடீரென்று தன் முன்னால் கேட்ட குரலில் தூக்கி வாரிப் போட அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“ஆதவன் அண்ணா! நீங்க எங்க இங்க?” வியப்போடு வினவினாள்.

 

“இது ராஜாவோட பிரண்டோட கல்யாணம் தான் மா! நேற்று டிரெயினில் வைத்து சொன்னேனே! ஆமா இழை உங்க கூட தானே வந்தா எங்கே போயிட்டா?” தவிப்போடு சுற்றிலும் பார்த்து கொண்டே கேட்டவனைப் பார்த்ததும் விஜயாவிற்கு புன்னகை அரும்ப 

 

“உங்க ஆளு இங்க இருந்து பார்த்தா துன்கிந்த நீர்வீழ்ச்சியோட ஒரு பக்கம் தெரியும்னு சொன்னேன் அதைப் பார்த்தே ஆகணும்னு பார்க்கப் போயிருக்கா! அதோ அந்த பக்கம்!” அவள் தன் கையை காட்ட அந்த திசையை நோக்கி ஒரு கணமும் தாமதிக்காமல் ஆதவன் நகர்ந்து சென்றான்.

 

கற்களும், மண்ணும் நிறைந்து போயிருந்த அந்த பாதையில் தன்னால் முடிந்த மட்டும் வேகமாக நடந்து சென்றவன் அங்கே ஒரு மர நிழலின் கீழ் கைகளை கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு நின்ற இழையினியைப் பார்த்ததுமே தன் குறும்புத்தனம் தலை தூக்க மெல்ல அடியெடுத்து அவள் முன்னால் சென்று நின்று கொண்டான்.

 

எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக அவன் நின்று கொண்டிருக்க சிறிது நேரத்திற்கு பின்னர் தன் கண்களை திறந்து கொண்ட இழையினி தன் முன்னால் நின்று கொண்டிருந்த ஆதவனைப் பார்த்ததுமே

“ஆதவன்!” அதிர்ச்சியாகி நிற்க அவனோ தன் கைகளை கட்டிக் கொண்டு எதுவுமே பேசாமல் அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.

 

“ஆதவன் இங்கே எப்படி?” சுற்றிலும் திரும்பிப் பார்த்து கொண்டே இழையினி மீண்டும் தன் முன்னால் திரும்பி பார்க்க அவன் நின்று கொண்டிருந்த இடம் வெறுமையாக காணப்பட்டது.

 

“சே! கனவா?” சிரித்துக் கொண்டே தன் தலையில் தட்டிக் கொண்டவள் திரும்பி நடந்து போக எண்ணி அந்த பாதையில் திரும்புகையில் அங்கே இருந்த மரமொன்றின் மீது ஆதவன் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான்.

 

“மறுபடியும் நீங்க?” குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்

 

“அய்யோ! ஆதவன்! ஏன் இப்படி பண்ணுறீங்க? எங்கே திரும்பினாலும், கண்ணை மூடினாலும் உங்க முகம் தானே எனக்கு தெரிகிறது! நீங்க உங்க பாட்டுக்கு காதலிக்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டீங்க நீங்க போன பிறகு அந்த ஒரு மாதமும் எங்கேயாவது நான் போகும் இடத்தில் நீங்க எனக்கு தெரியாமல் வந்து இருப்பீங்க என்று நினைத்து நினைத்து தேடி பார்த்து நான் தான் களைத்து போயிட்டேன்!

 

 கனவு மாதிரி வந்து நிற்குறீங்க திடீர்னு காணாமல் போயிடுறீங்க! உங்களை நேரில் பார்த்ததுமே நீங்க டிரெயினில் வைத்து என் கிட்ட கேட்ட அந்த வார்த்தைகளை உங்க கிட்ட கண்டிப்பாக சொல்லணும்! அதனால் நாளைக்கே நான் உங்களை தேடி புறப்படுவேன்! நீங்க மட்டும் தான் என்னைத் தேடி வருவீங்களா? நானும் வருவேன்!” அங்கே நிற்பதும் அவனின் நிழலுருவம் தான் என்ற எண்ணத்தோடு தன் மனதில் பட்டதை எல்லாம் பேசிவிட்டு அவனைத் தாண்டி செல்ல போக

 

 ஒரே எட்டில் அவள் கைகளை பிடித்து கொண்டவன் 

“இப்போதும் நான் நேரில் தான் இருக்கேன் இப்போ அந்த வார்த்தைகளை சொல்லக் கூடாதா?” கேள்வியாக தன் புருவம் உயர்த்த அவனை அங்கே எதிர்பாராதவளோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள்……..