உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 23 [Pre-Final]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அந்த விமானத்திலிருந்து பலபேர் வரிசையாக இறங்கிக் கொண்டிருந்தனர்.

 

அந்த கூட்டத்திற்கு நடுவே இழையினி நடந்து வந்து கொண்டிருக்க அவளருகில் அசோகனும், அவரைத் தொடர்ந்து மதியழகனும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

 

இழையினியின் முகத்தில் சிரிப்போ, கவலையோ, கோபமோ எந்த ஒரு உணர்வுமின்றி துடைத்து விட்டாற்போல இருக்க மறுபுறம் அவளருகில் நடந்து வந்து கொண்டிருந்த அசோகனின் முகத்தில் சந்தோஷம் ஊற்றாக பாய்வது போல இருந்தது.

 

இரண்டு வருடங்களாக பிரிந்திருந்த தன் பேத்தி மீண்டும் தன்னோடு இணக்கமாகி வந்து விட்டால் அவரது அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவா முடியும்?

 

விமான நிலையத்தில் தங்களது செக் இன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பார்க்கிங்கிற்கு சென்றவர்கள் அங்கே அவர்களை ஏற்ற கார் வந்ததும் அதிலேறிக் கொண்டு செந்தமிழ் இல்லத்தை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

 

விமானத்தில் ஏறியது முதல் செந்தமிழ் இல்லத்தை வந்து சேரும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த இழையினி வீட்டு வாயிலில் ஆவல் ததும்ப நின்று கொண்டிருந்த தன் தந்தையை பார்த்த‌ அடுத்த கணமே

“அப்பா!” என்ற கூவலுடன் ஓடி வந்து அவரைத் தாவி அணைத்துக் கொள்ள

 

“இழைம்மா!” கண்கள் கலங்க வாஞ்சையுடன் தன் மகளை அணைத்துக் கொண்ட இளமாறனைப் பார்த்து அங்கிருந்த‌ அனைவருக்கும் சிறிது கண்கள் கலங்கவே செய்தது.

 

“சரி! சரி! முதல்ல எல்லோரும் உள்ளே வாங்க! ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வர்ற பொண்ணை வாசலிலேயே வைத்து நிற்காமல் உள்ளே வாங்க!” வளர்மதி தன் கண்களை துடைத்து விட்டபடியே இழையினியின் கை பற்றி வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அங்கே ஹாலில் கலைச்செல்வியின் படம் பெரிதாக மாட்டப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது.

 

 கண்கள் கண்ணீரை பொழிய அந்த புகைப்படத்தின் முன்னால் சென்று நின்றவள் தன் கண்களை மூடிக் கொள்ள

‘என் முன்னாடி வைத்து இப்படி கண் கலங்கினால் இனிமேல் நான் உங்க முன்னாடி வரமாட்டேன் சரியா?’ ஆதவனின் குரல் அவள் செவிகளுக்குள் எதிரொலித்தது.

 

‘இல்லை நான் அழமாட்டேன் ஆதவன்!’ தன் மனதிற்குள்‌ உறுதியாக கூறிக் கொண்டவள் 

 

தன் கண்களை துடைத்து விட்டு கொண்டே திரும்பி பார்க்கவும்

“இழை!” பெருஞ்சத்தத்துடன் தேன்மொழி ஓடி வந்து அவளை அணைத்து கொள்ள அவளது திடீர் அணைப்பில் சிறிது தடுமாறிய இழையினி உடனே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தேன்மொழியின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தாள்.

 

“ஏன் இழை இவ்வளவு நாளாக நீ வரவே இல்லை?” ஏக்கத்தை கண்களில் தேக்கி கேட்டவளைப் பார்த்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிப்போடு நின்றவள் தன் குடும்பத்தினரை நிமிர்ந்து பார்க்க 

 

அவசரமாக அவர்களருகில் வந்து நின்ற மதியழகன்

“தேனு! அவ டிராவல் பண்ண டயர்டில் இருக்கா கொஞ்ச நேரம் அவ ஓய்வு எடுக்கட்டும் அதற்கு அப்புறமாக இதெல்லாம் பேசுவோம் சரியா?” தேன்மொழியைப் பார்த்து கூறி விட்டு

 

இழையினியின் புறம் திரும்பி

“நீ போய் ரெஸ்ட் எடு இழை!” என்று கூறவே அவளும் விட்டால் போதும் என்றவாறு தன்னறையை நோக்கி வேகமாக நகர்ந்து சென்றாள்.

 

வெகு நாட்களாக பிரிந்திருந்த தன்னறையைப் பார்த்ததுமே பழைய நினைவுகள் எல்லாம் அவள் முன்னால் ஆக்கிரமிக்க தன் இரு கைகளிலும் முகத்தை புதைத்துக் கொண்டவள் தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

 

“என்னை மன்னிச்சுடுங்க ஆதவன்! என்னை மன்னிச்சுடுங்க!” என்று கூறிக் கொண்டே அந்த அறைக்கதவில் சாய்ந்து அமர்ந்தவள் கண்களோ விடாமல் கண்ணீரை சுரந்து கொண்டே இருந்தது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு எப்படியான கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஆரம்பித்த அந்த நாள் முடிவடையும் போது அவள் எதிர்பாராத மாற்றங்களையே அவளுக்கு வழங்கி இருந்தது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையில்….

 

ஆதவனின் ஸ்பரிசத்தை தன் கைகளால் உணர்ந்த பின்னரே தன் முன்னால் நிற்பது அவனின் நிழலுருவம் அல்ல நிஜம் என்பதை இழையினி உணர்ந்து கொண்டாள்.

 

“ஆதவன்! உண்மையாகவே நீங்க தானா?” இன்னமும் தன் கண்களை நம்பமுடியாமல் அவள் கேட்கவே

 

“சத்தியமாக நான் தான் மா! இன்னும் நம்பிக்கை இல்லைன்னா வேண்டும் என்றால் கிள்ளிப் பாரு” ஆதவன் தன் கையை நீட்ட அவளோ சிறிதும் தாமதிக்காமல் அவனது கையில் கிள்ளிப் பார்த்தாள்.

 

“ஐயோ! அம்மா! ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையாகவே கிள்ளிட்ட! எத்தனை நாள் கோபமோ?” ஆதவன் தன் வலி தாங்கிக்கொள்ள முடியாமல் கையை உதறியபடி இழையினியைப் பார்க்க

 

அவனைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவள்

“அச்சோ! சாரி ஆதவன்! ஒரு சந்தேகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் போல!” மீண்டும் தன் சிரிப்பை தொடர 

 

அவனோ

“அப்படியா?” என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு வெகு அருகில் வந்து நின்றான்.

 

ஆதவனை தனக்கு வெகு அருகில் பார்த்ததும் இழையினியின் சிரிப்பு சட்டென்று நின்று போனது மட்டுமின்றி இதயமும் தன் துடிப்பை அதிகரித்து கொள்ள

“ஆத… ஆதவன்! நா… நான் போகணும்” அவளது வார்த்தைகளும் தந்தியடிக்க ஆரம்பித்தது.

 

“நான் போக வேண்டாம்னு ஒண்ணும் சொல்லலயே!”

 

“அப்போ இப்படி வழியில் வந்து நின்றால் என்ன அர்த்தம்?”

 

“எனக்கு தெரியாதே! உங்களுக்கு தெரியுமா?” ஆதவன் வேண்டுமென்ற அவளிடம் வம்பு வளர்க்க 

 

“போங்க ஆதவன்!” அவனைக் கடந்து ஓடிச் சென்றவள் சிறிது தூரம் தள்ளி சென்று தயக்கத்துடன் அவனைத் திரும்பிப் பார்க்க அவனும் புன்னகையுடன் அவளோடு இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

 

இழையினியைத் தேடி வரும் போது கற்களும், மண்ணும் நிறைந்து நடப்பதற்கு கஷ்டமாக இருந்த அந்த பாதை இப்போது மலர்களைத் தூவி விட்டது போல மென்மையாக இருப்பதைப் போலவே ஆதவனுக்கு தோன்றியது.

 

தன் மனதிற்குள் தோன்றிய எண்ணத்தை ஆதவன் இழையினியிடம் பகிர்ந்து கொள்ள அவளுக்கு தான் தன்  முகச்சிவப்பை மறைப்பது பெரும்பாடாகிப் போனது.

 

இழையினியின் மௌனங்களும், அந்த மௌனங்களை உள்ளிழுத்து கொள்ளும் ஆதவனின் காதல் பார்வைகளும் என அந்த ஒற்றையடிப்  பாதையில் நடந்து வந்தவர்கள் ஒரு வழியாக மண்டபத்தின் வாயில் அருகே வந்து நின்று கொண்டனர்.

 

அவள் ஏதாவது பேசுவாள் என அவனும், அவன் ஏதாவது பேசுவான் என அவளும் தயக்கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க ‘இது சரி வராது’ என்பது போல எண்ணியதால் என்னவோ விதி விஜியை அவர்கள் இருவருக்கும் இடையே அனுப்பி வைத்தது.

 

இழையினி பேச்சை ஆரம்பிக்க மாட்டாள் என்ற எண்ணத்தோடு ஆதவன் அவளை அழைப்பதற்காக தன் வாயைத் திறக்க சரியாக அவன் உதட்டசைவுக்கு குரல் கொடுப்பது போல்

“இழை!” என்றவாறே விஜி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்‌.

 

”வந்துட்டாங்கய்யா சிவபூஜையில் கரடி!” சற்று சத்தமாக முணுமுணுத்து கொண்டே ஆதவன் அவளைத் திரும்பிப் பார்க்க 

 

அவனைக் கண்டு கொள்ளாத விஜி இழையினியின் கையை பிடித்து

“கொஞ்சம் அவசரமா வா!” என்றவாறே மண்டபத்தினுள் அவளை  இழுத்துக் கொண்டு சென்றாள்.

 

“ஹேய்! விஜி! எங்கே கூட்டிட்டு போற?” விஜயாவின் நடவடிக்கைகளைப் பார்த்து சிறு குழப்பத்துடனேயே அவளைப் பின் தொடர்ந்து சென்ற இழையினி அங்கே மண்டபத்தின் ஒரு புறம் செல்வம் மற்றும் அவரது மனைவியுடன் பேசிக் கொண்டு நின்ற தன் அண்ணனைப் பார்த்து பெரும் அதிர்ச்சியாகி நிற்க அவளது அதிர்ச்சியை இன்னமும் பன்மடங்கு அதிகரிப்பது போல அசோகனும் அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தார்.

 

“அழகா! இ..இழை!” குரல் தழுதழுக்க மதியழகனின் தோளில் தட்டிய அசோகன் இழையினியை நோக்கி நடந்து வர அவளோ தன் கண்களை நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் தன் கண்களை மூடி திறந்து கொண்டாள்.

 

இத்தனை நாட்களாக மனதிற்குள் ஆதவனின் நினைவுகள் சூழ்ந்து கொண்டதால் என்னவோ அசோகனைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் அவள் மனதிற்குள் ஆழத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

 

இப்போது அவரை அங்கே பார்த்த அடுத்த கணமே தன் கடந்த கால நினைவுகள் எல்லாம் அலைமோத கண்களை மூடிக் கொண்டவள்

‘தாத்தாவைப் பற்றி மறந்து எப்படி நீ ஆதவனை நினைத்தாய் இழையினி? வசதி, வாய்ப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அவருக்கு முன்பு இந்த காதல் எல்லாம் நிலைத்து நிற்க முடியுமா? அதிலும் ஆதவனை அவர் மதிக்க கூட மாட்டாரே! ஐயோ! தேவையில்லாமல் ஆதவன் மனதினுள் ஆசையை வளர்க்க நான் காரணமாகி விட்டேனே! இப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்று தானே நான் ஆதவனை விட்டு விலகி விலகிச் சென்றேன்! இப்போது‌ நான் என்ன செய்வேன்?’ மனதிற்குள் தனக்குத்தானே பல்வேறு  கேள்விகளை எழுப்பிக் கொண்டாள்.

 

‘ஆதவன்! ஆதவன் எங்கே?’ அவசரமாக தன் பார்வையை வெளிப்புறமாக திருப்பியவள் அங்கே அவளை விடவும் அதிகமாக அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஆதவனைப் பார்த்ததும் மனம் தாளாமல் அவனை நோக்கி செல்லப் போனவள்

 

“இழையினி!” மதியழகனின் குரல் கேட்டதும் சட்டென்று தன் பார்வையை அவனை நோக்கி திருப்பினாள்.

 

அண்ணனைப் பார்த்ததுமே ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டவள் எதை நினைத்து கலங்குகிறோம் என்றே தெரியாமல் அவன் மேல் சாய்ந்து கண்ணீர் விட அவனும் பலமாதங்கள் பிரிவுக்கு பின் பார்த்த தன் தங்கையை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

 

“இழையினி! என் கூட பேசவே மாட்டியாம்மா?” அசோகனின் குரலைக் கேட்டதும் இன்னும் உடைந்து போனவள்

 

“தாத்தா!” என்றவாறே அவர் மேல் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடிக்க அவருக்கு தான் இன்னமும் குற்றவுணர்ச்சி கூடிப் போனது.

 

தான் செய்த தவறுகளுக்கு தன்னை அவள் திட்டியோ அல்லது கோபமாக பேசியோ இருந்தால் அதை சந்தோஷமாக அவர் ஏற்றுக் கொண்டிருப்பார்.

 

ஆனால் இப்படி தன்‌ குரலைக் கேட்டதுமே அவள் மனதளவில் முற்றாக உடைந்து போவாள் என்று அவர் நினைத்திருக்கவில்லை.

 

ஆரம்பத்தில் எவ்வளவோ கோபங்கள் அவளுக்கு அவர் மேல் இருந்தது ஏன் இன்னமும் இருக்கின்றது தான். 

 

ஆனால் சிறு வயதில் இருந்தே இரத்தத்தில் கலந்த அந்த பந்தம் அதை எல்லாம் பின்தள்ளச் செய்தால் அவளால் எவ்வளவு நேரம்தான் தன் கோபத்தைக் காட்ட முடியும்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வீட்டிலிருந்து வரும் போது அவர் இருந்த தோற்றத்திற்கும்‌ இப்போது இருக்கும் தோற்றத்திற்கும் இருந்து வித்தியாசம் அவளை இன்னும் வருந்தவே செய்தது.

 

அசோகன் சாதாரணமாக நடந்து வரும் போதே அவரது கம்பீரம் எல்லோரையும் கவர்ந்து விடும்.

 

அப்படி இருந்தவர் இப்போது அந்த கம்பீரத்தை எல்லாம் கை விட்டு விட்டு சாதாரண ஒரு மனிதனாக அவள் முன்னால் வந்து நின்றார்.

 

ஆதவன் தரப்பிலான கருத்துக்களை கேட்ட போதே மனதிற்குள் சிறிதளவு தன்னைத் தேற்றியிருந்தவள் இப்போது அசோகனை நேரில் பார்த்ததும் பழைய மனக்கசப்புகளை எல்லாம் சிறிது தள்ளித் தான் வைத்தாள்.

 

“தாத்தாவை மன்னிச்சுடுமா! பழைய காலத்து ஆள் இல்லையா? அது தான் புத்தி இன்னும் அந்த பழைய வசதி, வாய்ப்புன்னு அதிலேயே தங்கி நின்னுடுச்சு! நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருக்கணும்னு தான் நான் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து பண்ணுனேன் ஆனா யாருக்கும் அது புரியல! என் பொண்ணும் அதைப் புரிந்து கொள்ளாமல் அவ அப்பனைத் தப்பாக நினைத்து கொண்டே இந்த உலகத்தை விட்டு போயிட்டா! உன் ஆசைக்கு மதிப்பு கொடுக்காமல் நான் ஏதேதோ பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடு மா! இந்த பாவி பண்ண தப்புக்கு இரண்டு அடி அடித்து இருந்தாலும் பரவாயில்லை ஆனால் நீ என் குரலைக் கேட்டதுமே என் கிட்ட வந்துட்டியேம்மா! எனக்கு இதைப் பார்க்கும்போது இன்னும் இன்னும் குற்றவுணர்ச்சியாக இருக்கே!” அசோகன் கண்ணீர் விட்டு அழுதபடியே இழையினியைப் பார்த்து இரு கரம் கூப்பி மன்னிப்பு வேண்ட அவசரமாக அவரது கைகளைப் பிடித்து கொண்டு வேண்டாம் என்று தலையசைத்தவள் கண்ணீர் மல்க அவர் மனதளவில் முற்றாக மாறிவிட்டார் என்று நினைத்து அவர் மேல் சாய்ந்து கொண்டாள்.

 

என்னதான் மனதிற்குள் பல்வேறு கோபங்களும், பிரச்சினைகளும் இருந்தாலும் நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நம் முன்னால் கண்ணீர் விட்டு கதறியழும் போது அந்த கோபம் நிலைத்து நிற்குமா என்ன? 

 

பிரச்சினைகள் வந்த நேரம் பேசும் போது ‘கல் நெஞ்சுக்காரன்!’ என்று ஒருவரை ஒருவர் கூறினாலும் அந்த கல் நெஞ்சிலும் ஈரம் இருக்கும் என்பது தான் யதார்த்தம்.

 

இருபது வருடங்களுக்கு மேலாக தன்னுடன் விளையாடி, சந்தோஷமாக இருந்த‌ தன் தாத்தாவின் மேல் அந்த தருணம் அவளுக்கு எந்தவொரு கோபமும் இருக்கவில்லை அவர் ஆதவனைப் பார்த்து யார் என்று கேட்கும் வரை.

 

தாத்தாவும், பேத்தியும் சுற்றுப்புறம் மறந்து தங்கள் மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருக்க தன் மனக்கவலை நீங்கிய நிறைவுடன் மெல்ல தன் தலையை நிமிர்த்திய அசோகன் தங்களுக்கு சற்று முன்னால் நின்று கொண்டிருந்த ஆதவனைப் பார்த்ததும்

“இந்த தம்பி யாரு? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!” என்று கேட்கவும் அவரது கேள்வியில் உடல் விறைக்க அவரை விட்டு இழையினி சட்டென்று விலகி நின்றாள்.

 

அசோகன் யோசனையுடன் ஆதவன் முன்னால் வந்து நின்று

“நீ அந்த கௌசிக்கோட மாமா பையன் தானே?” கேள்வியாக அவனை நோக்க

 

அவனோ

“பரவாயில்லையே! இரண்டு வருடம் போனாலும் இன்னும் என் முகம் மறக்காமல் இருக்கு போல?” சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்து வினவினான்.

 

“நீ இங்கே என்ன பண்ணுற? உன் குடும்பத்தினால் எங்க குடும்பம் பட்ட கஷ்டம் போதாது என்று இங்கேயும் நீ வந்து விட்டாயா? பணம் இருக்கிறது என்று சொல்லி  இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற திட்டம் போட்டு இருக்கீங்க?” அசோகன் பழைய விடயங்களை எல்லாம் மறந்து மாறியிருப்பார் என்று நினைத்திருந்த இழையினிக்கும் சரி மதியழகனுக்கும் சரி அவரது இந்த கேள்வி சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

 

பிரச்சினை எதுவும் ஏற்படுவதற்குள் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்ட இழையினி

“மதிண்ணா! தாத்தா! நாம எப்போ ஊருக்கு போறோம்?” என்று கேட்க அந்த சந்தர்ப்பத்திற்கு சம்பந்தமில்லாத அவளது கேள்வியில் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

 

“என்னாச்சு இழை திடீர்னு ஊருக்கு போவதைப் பற்றி கேட்குற?”

 

“எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு அது தான்” தலை குனிந்து பதில் சொன்ன இழையினியை மதியழகன் விசித்திரமாகப் பார்க்க அசோகனோ ஆதவனை கோபமாகப் பார்த்து கொண்டு நின்றார்.

 

தன் தாத்தா அவனை இன்னும் ஏதாவது கோபமாக சொல்லி விடுவாரோ என்ற அச்சத்துடன் அவரருகில் வேகமாக நடந்து சென்றவள் 

“வாங்க தாத்தா வீட்டுக்கு போய் பேசலாம்” என்றது மட்டுமின்றி அவரது கையையும் பிடித்து இழுத்துக் கொண்டே சென்று விட மதியழகனும் அங்கே நடப்பவற்றை எல்லாம் விசித்திரமாக பார்த்து கொண்டே அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

 

ஆதவனைக் கடந்து செல்லும் போது அவனை நிமிர்ந்து பார்ப்பதற்கும் தைரியமின்றி குனிந்த தலை நிமிராமல் நடந்து போனவள் அதன் பிறகு யாரும் அலனைப் பற்றி பேசுவதற்கு இடமளிக்காது வேறு விடயங்களைப் பற்றிப் பேசி அவர்கள் கவனத்தை திசை திருப்பியது மட்டுமின்றி அதில் சிறிது வெற்றியும் கண்டு கொண்டாள்.

 

அன்றைய பேச்சை திசை திருப்பியது மட்டுமின்றி அடுத்த நாளே அவர்களுடன் சென்னைக்கு திரும்பி செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யும் படி சொன்னவள் வீட்டிலுள்ள அனைவரும் தூங்கிய பின் உடலளவிலும், மனதளவிலும் களைத்து போனதால் என்னவோ சிறிது ஓய்வு வேண்டி அங்கிருந்த தோட்டத்திலிருந்த மரமொன்றின் கீழ் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

அசோகனைப் பார்த்த நொடியில் இருந்து அவள் மனம் சரியாகவே இல்லை.

 

ஆதவனின் காதலை மட்டுமே இந்த ஒரு மாதத்திற்குள் மனதிற்குள் சுமந்து கொண்டிருந்தவள் இப்போது அவன் நினைவுகளை மாத்திரமே தன்னால் சுமக்க முடியும் என்று எண்ணியபடி அமர்ந்திருக்க

“நீ ரொம்ப நல்லா நடிக்குற இழை!” என்று தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்க்க அங்கே விஜி தன் கைகளை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

 

“விஜி நீ இன்னும் தூங்கலயா?”

 

“நான் தூங்குறது இருக்கட்டும் அது சரி நீ எதுக்கு இப்ப வீட்ட போய் ஆகணும்ன்னு பிடிவாதமா இருக்க?”

 

“எப்படி இருந்தாலும் ஒரு நாள் போகத் தானே வேண்டும் விஜி?”

 

“ஓம் போகத் தான் வேணும் நான் இல்லன்னு சொல்லல திடீர்னு நீ சொல்லவும் தான் கேட்கிறேன்”

 

“ஆதவனுக்காக!”

 

“என்ன?” இழையினியின் பதிலில் விஜயா குழப்பம் கலந்த அதிர்ச்சியோடு அவளைப் பார்த்து கொண்டு நின்றாள்.

 

“தாத்தா ஆதவனை எதுவும் பண்ணி விடக் கூடாது என்று தான் நான் அவசரமாக இங்கே இருந்து போகப் பார்க்கிறேன் விஜி! இந்த ஒரு மாதமும் என் மனதிற்குள் ஆதவன் மட்டும் தான் இருந்தாங்க! இப்போதும் இருக்காங்க! ஆனா எப்போ மறுபடியும் தாத்தாவை இங்கே பார்த்தேனோ அப்போ தான் நான் பண்ணுன தப்பு எனக்கு புரிந்தது இந்த மனசுக்கு ஆசை மட்டும் தான் படமுடியும் அதை அடைய முடியாது விஜி!” 

 

“நீ ஏன் அப்படி நினைக்குற? தாத்தா கிட்ட உன் மனசில் இருக்குறதை சொல்லலாம் தானே?”

 

“எப்படி விஜி? இன்னைக்கு மண்டபத்தில் வைத்து ஆதவனைப் பார்த்ததற்கே தாத்தா பழையபடி மாறிட்டாங்க! அப்போவே என் நம்பிக்கை போயிடுச்சு! இன்னும் ஒரு நாள் நான் இங்கே இருந்தாலும் ஆதவன் என்னைத் தேடி வந்து விடுவாரு அப்படி வந்தால் தாத்தாவுக்கும், அவருக்கும் கண்டிப்பாக பிரச்சினை வரும் என்னால் ஆதவன் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாது விஜி!”

 

“அப்போ உன்னோட காதல்?”

 

“அது என்னோடு மட்டும் போகட்டும்!”

 

“இழை!”

 

“ஆதவன் அவர் மேல் எனக்கு இருக்கும் காதலை என் வாயால் கேட்கணும்னு எவ்வளவு ஆசையோடு கேட்டார் தெரியுமா? நான் அதை அவர் கிட்ட சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு தடை வந்தது அப்போ எனக்கு புரியல அந்த தடைகளுக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் வரப்போகிறது என்பது!”

 

“நீ ஆதவனை விட்டு விலகி போனாலும் அவர் உன்னை விட்டு விலகிப் போவாரா? இத்தனை வருஷமா உனக்காக காத்துட்டு இருந்தவரு இப்ப நீ ஊரை விட்டு போனா உன்னை மறந்துடுவாரா? பிரச்சினையைக் கண்டு பயந்து ஓடுறது அதற்கு தீர்வாகாது இழை! உனக்காக நீ தான் பேசணும்! ப்ளீஸ் இந்த பிரச்சினைக்காக நீ பின் வாங்க கூடாது இழை! ஒரு தடவை தைரியமாக பேசேன் இழை!” 

 

“இங்கே பிரச்சினையே இல்லை விஜி! தீர்வு மட்டும் தான் இருக்கு! பணம்!”

 

“ஆனா…”

 

“வேண்டாம் விஜி! நீ என்ன சொன்னாலும் இதற்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியாது எங்க குடும்ப அந்தஸ்தினால் ஆதவனின் வாழ்க்கை அழியக் கூடாது!”

 

“அதற்கு நீ என்ன செய்ய போற?” விஜியின் கேள்வியில் அவளைப் பார்த்து சிறு புன்னகை சிந்தியவள் தன் தொலைபேசியை எடுத்து ஆதவனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.

 

“ஹலோ ஆதவன்!”

 

“சொல்லுங்க இழையினி!” அவனது அந்த மரியாதையான விளிப்பே அவளை விட்டு அவன் தூரம் சென்றதை உணர்த்தியது.

 

“சாரி இன்னைக்கு தாத்தா உங்க கிட்ட கொஞ்சம் கோபமாக பேசிட்டாங்க”

 

“அது ஒண்ணும் புதிது இல்லையே!” ஆதவனின் பதிலில் இழையினியின் புறம் மௌனம் மாத்திரமே நிறைந்திருந்தது.

 

“ஹலோ இழையினி!”

 

“ஆஹ்! சொல்லுங்க ஆதவன்”

 

“போன் பண்ணிட்டு பேசாமல் இருக்கீங்க?”

 

“அது வந்து… அது..”

 

“எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க இழையினி!” அவனது கூற்றில் தன் கண்களை மூடி ஆழ மூச்சிழுத்துக் கொண்டவள்

 

“இனிமேல் நான் உங்களை சந்திக்க முடியாது ஆதவன் அதனால் நீங்க இனி என்னைத் தேட வேண்டாம்” எனவும் மறுபுறம் இருந்தவனோ

 

“சரி அப்புறம்?” என்று கேட்டான்.

 

“ஆதவன் நான் ஒன்றும் விளையாடல!”

 

“நான் இப்போ நீங்க விளையாடுவதாக சொல்லவே இல்லையே!”

 

“நான் நாளைக்கு ஊருக்கு போறேன் மறுபடியும் திரும்பி வரமாட்டேன்”

 

“சரி!”

 

“உங்க மனதில் இருக்கும் ஆசையை எல்லாம் இன்னையோட மூட்டை கட்டி தூரப்போட்டுடுங்க!”

 

“சரி அடுத்து!”

 

“நீங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்கணும்!”

 

“ஓகே நெக்ஸ்ட்”

 

“என்னை மறந்துடுங்க!”

 

“……”

 

“ஆதவன்!”

 

“இருங்க இருங்க! ம்ம்ம்ம்ம்ம்! இப்போ சரி நீங்க சொன்ன எல்லாம் எழுதி வைத்துட்டேன்! அடுத்து வேறு ஏதாவது இருக்கா?”

 

“ஐயோ ஆதவன்! உங்களுக்கு சொன்னால் புரியாதா? உங்க தகுதி வேற எங்க தகுதி வேற! நீங்களும் நானும் கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ எங்க தாத்தா விடமாட்டாங்க! என் சந்தோஷம் நிலைக்காது ஆதவன்! நிலைக்காது!” அழுதுகொண்டே தன் தொலைபேசியைத் தூக்கி விட்டெறிந்தவள் அப்படியே மடங்கி சரிந்து அமர்ந்து கொண்ட அழ விஜயா அவசரமாக அவளைத் தன்னோடு சேர்த்து நிறுத்தி கொண்டாள்.

 

‘மனதில் இவ்வளவு ஆசையை வைச்சுட்டு இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுறா? கடவுளே! இவளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு’ மனதிற்குள் தன் தோழியை எண்ணிக் கண்ணீர் சிந்திய விஜி அவளை  வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு சென்றாள்.

 

அடுத்த நாள் காலை பதுளையில் இருந்து இழையினி, அசோகன் மற்றும் மதியழகனுடன் விஜயாவின் குடும்பத்தினரும் இணைந்து கொள்ள அன்றே லூல்கந்துர பிரதேசத்திற்கு சென்றவர்கள் இழையினியின் உடைமைகளை எல்லாம் எடுத்து கொண்டு கொழும்பு விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டனர்.

 

இரண்டு வருட காலமாக தனக்கு எல்லாமுமாக தன்னருகில் இருந்து தன் மகளைப் போல தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து தாத்தாவைப் பிரிந்து செல்லும் போது தான் அவளுக்கு தான் அவர்களுடன் எந்தளவுக்கு ஒன்றிப்போய் இருந்தோம் என்று புரிந்தது.

 

கண்களில் கண்ணீரும், மனதிற்குள் கவலையும் நிறைந்து போக விமான நிலையத்தை வந்து சேர்ந்தவள் கண்கள் மாத்திரம் ஒருவனின் தரிசனத்திற்காக ஏங்கி தவித்தது.

 

‘அது தான் நேற்று உன்னை மறக்கும் படி சொல்லி விட்டாயே! அதற்கு பிறகும் அவன் உன்னை தேடி வரவேண்டும் என்று நினைக்கிறாயா?’ இழையினியின் மனசாட்சி அவளைப் பார்த்து கேலியாக வினவ தன் நிலையை எண்ணி நொந்து போனவள் மனமேயின்றி மனம் விரும்பியவனின் நலனை எண்ணி தன் பயணத்தை ஆரம்பித்தாள்.

 

பழைய நினைவுகளில் நேரம் போவதே தெரியாமல் லயித்து இருந்தவள் கடிகாரத்தின் ஓசை கேட்ட பின்பே தன் சுயநினைவுக்கு வந்தாள்.

 

சுற்றிலும் வானம் மங்க ஆரம்பிக்க மெல்ல எழுந்து நின்றவள் தன் பயணக் களைப்பும், மனச் சோர்வும் போக ஒரு குளியல் போட்டு விட்டு தன்னை இயல்பாக காட்டிக் கொள்வது போல எல்லோருடனும் பேசத் தொடங்க மதியழகன் மாத்திரம் அவள் நடவடிக்கைகளை எல்லாம் ஒன்று விடாமல் கவனித்து கொண்டே இருந்தான்.

 

வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த தன் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இழையினியின் பகல் பொழுதுகள் கரைந்து செல்ல இரவுப் பொழுதுகளோ கண்ணீரிலும், ஆதவனின் நினைவுகளுடனுமே கடந்து சென்றது.

 

இலங்கையில் இருந்து வந்த நாளில் இருந்து ஆதவனிடமிருந்து எந்த அழைப்பும், எந்த செய்தியும் வராமல் போகவே இழையினி மனதிற்குள் இன்னமும் உடைந்து போனாள்.

 

அரளி விதையில் முளைச்ச

துளசி செடியா காதல்

துளசி செடியா காதல்

 

அரளி விதையில் முளைச்ச

துளசி செடியா காதல்

துளசி செடியா காதல்

உறவை மனது வளர்க்குதே

உயிரை அறுத்து எடுக்குதே

கண்ணில் காதல் விதைக்குதே

கடைசியில் உசுரை கொல்லுதே

 

அரளி விதையில் முளைச்ச

துளசி செடியா காதல்

துளசி செடியா காதல்

 

உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு

உதட்டில் மறைச்சால் மறையாதே

உறவின் நிழலில் நின்றுக் கொண்டு

வெயிலில் காதலை வீசாதே

மனதில் ஆசையை புதைத்து விட்டு

மறைஞ்சு மறைஞ்சு வாழாதே

என்னை மறக்க நினைத்து விட்டு

உன்னை நீயே இழக்காதே

யாரோட சதி நீ வச்ச பொறி

நெஞ்சுக்குள் வலி

வலி வலி வலி வலி

வலி வலி வலி வலியே

 

அரளி விதையில் முளைச்ச

துளசி செடியா காதல்

துளசி செடியா காதல்

உறவை மனது வளர்க்குதே

உயிரை அறுத்து எடுக்குதே

கண்ணில் காதல் விதைக்குதே

கடைசியில் உசுரை கொல்லுதே

கடைசியில் உசுரை கொல்லுதே

கடைசியில் உசுரை கொல்லுதே

 

ஹெட்போன் வழியே தன் காதிற்குள் வந்து சேர்ந்த பாடல் வரிகளில் இழையினியின் கண்கள் கண்ணீரைச் சிந்த அதைத் துடைத்து விட வேண்டுமே என்ற எண்ணமுமின்றி அவள் மனம் வெறுமையாகிப் போய் இருந்தது.

 

ஒவ்வொரு நாளும் அந்த பாடல் வரிகளில் தான் அவள் நாள் தொடங்கும் அதே நேரம் முடிவும் அடையும்.

 

இத்தனை சோகங்களை, ஆசைகளை, ஏக்கங்களை மனதிற்குள் வைத்திருந்தும் தனக்காக பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு அப்போது தோன்றவில்லை.

 

‘ஆதவன் என்னைத் தேடி வரமாட்டாரா?’ மனதிற்குள் ஒரு மூலையில் துளிர் விட்ட ஆசையில் தன் நாட்களை கடத்தியவள் அசோகனை எண்ணி அந்த ஆசைகளை எல்லாம் வெளியே சொல்லவும் முடியாமல் முற்றாக மறக்கவும் முடியாமல் வெகுவாக தவித்து போகத் தொடங்கினாள்.

 

இரண்டு வாரங்கள் வெகு சிரமப்பட்டு தன் நாட்களை நகர்த்தியவளால் அதற்கு மேலும் அதே மனநிலையில் தன் ஆசைகளை மறைத்து பொய்யான முகமூடி ஒன்றை அணிந்து கொண்டிருப்பது முடியாது என்று தோன்றியது.

 

‘பிரச்சினையை பார்த்து பின் வாங்க கூடாது! உனக்காக நீ தான் பேசணும்!’ அன்று இறுதியாக இலங்கையில் இருந்து திரும்பி வரும் போது விஜயா சொன்ன வார்த்தைகள் அவள் செவிகளுக்குள் எதிரொலிக்க அந்த வார்த்தைகளையே அவள் தனக்கு பக்கபலமாக எடுத்துக் கொண்டாள்.

 

ஒவ்வொரு நாளும் தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை தனக்குள்ளேயே வைத்து மருகிப் போவதை விட யார் எதிர்த்தாலும் பரவாயில்லை ஆதவனை விரும்பும் விடயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டவள் அதற்கேற்ற சந்தர்ப்பத்தை அன்றிலிருந்து எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

வீட்டில் தன் காதலை சொன்ன அடுத்த கணமே ஆதவனைத் தேடிச் சென்று அவனிடம் தஞ்சம் அடைந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஆசையை வளர்த்து கொண்டவள் யாரிடம் தன் காதலை பற்றி சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போனாள்.

 

மதியழகன் மற்றும் தேன்மொழியின் நிச்சயதார்த்த வேலைகளில் எல்லோரும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்ததனால் அவளுக்கு யாரையும் சந்தித்து சிறிது நேரம் செலவிட கூட முடியவில்லை.

 

தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை எல்லாம் இந்த நிச்சயதார்த்த நிகழ்வுகள் முடிந்த அடுத்த கணமே எல்லோரிடமும் சொல்லி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அதே நேரத்தில் ஆதவனையும் தேடிச் செல்ல வேண்டும் அவன் எங்கே இருந்தாலும் அவனைத் தேடி சென்று பார்த்து அவன் மனதை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டு தன் காதலை அவன் முன்னால் இந்த உலகமே கேட்கும் வகையில் கத்தி சொல்ல வேண்டும் என்றும் முடிவெடுத்து கொண்டாள்.

 

பலவிதமான கனவுகளுடனும், ஆடைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் இழையினியின் நாட்கள் நகர்ந்து செல்ல அதற்குள் தேன்மொழியின் இறுதி பரீட்சைகளும் முடிவுற்று இருந்தது.

 

அவளது பரீட்சை முடிவடைந்து ஒரு வாரத்தில் அவளுக்கும், மதியழகனுக்குமான நிச்சயதார்த்தத்திற்கான நாள் குறிக்கப்பட இழையினியின் கவனம் தற்காலிகமாக அதில் மையம் கொண்டது என்பதை விட தன் கவனத்தை மையப்படுத்தி கொண்டாள் என்று சொன்னால் மிகையாகாது.

 

ஒவ்வொரு நாளும் விதவிதமான வேலைகளுடன் அவர்களது நாட்கள் கடந்து செல்ல மதியழகன் மற்றும் தேன்மொழியின் நிச்சயதார்த்தத்திற்கான நாள் இனிதே விடிந்தது.

 

நிச்சயதார்த்த நிகழ்வாக இருந்தாலும் தன் இரு பேரப்பிள்ளைகளின் புதிய வாழ்க்கை பயணத்திற்கான தொடக்கம் அது என்பதனால் அந்த நிகழ்வை திருமணத்தை விடவும் கோலாகலமாக அசோகன் ஏற்பாடு செய்திருந்தார்.

 

அதிகாலை நேரம் முதலே வீட்டில் வேலைகள் ஆரம்பித்து விட தன்னறைக்குள் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருந்த இழையினி வேலைகளையாவது செய்யலாம் என்ற எண்ணத்தோடு படியிறங்கி நடந்து வந்தாள்.

 

இழையினி வருவதைப் பார்த்ததும் அவள் முன்னால் புன்னகையுடன் வந்து நின்ற அசோகன் அவளின் புறம் ஒரு ஆடைப் பெட்டியை நீட்ட

“என்ன இது?” என்று கேட்டவள் முன்பு போல் கலகலப்பாக அவரோடு பேசவிட்டாலும் அவர் பேச வந்தால் அவர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து பேச இந்த ஒரு மாதத்திற்குள்  தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தாள்.

 

“பிரித்துப் பாரும்மா!” அசோகனின் முகத்தை பார்த்து கொண்டே அந்த ஆடைப்பெட்டியை திறந்து பார்த்தவள் விழிகளோ வியப்பில் அளவின்றி விரிந்தது.

 

செம்மஞ்சள் நிறத்தில் தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த புத்தம் புதிய லெஹாங்கா ஒன்றும் அதற்கேற்றாற் போல ஆபரணங்களும் இருக்க அவற்றை எல்லாம் குழப்பமாக பார்த்தவள்

“எதற்கு தாத்தா இது?” கேள்வியாக அவரை நோக்கினாள்.

 

“உனக்கு தான் இழைம்மா! பிடித்து இருக்கா?”

 

“எனக்கா? எனக்கு எதற்கு இது? இன்னைக்கு தேனுக்கு தானே நிச்சயதார்த்தம்? அப்படி இருக்கும் போது நான் இந்த டிரெஸ்ஸை போட்டுட்டு வந்தால் எல்லோரும் என்னைத் தான் வித்தியாசமாக பார்ப்பாங்க” இழையினி இயல்பாக சிரித்துக் கொண்டே அந்த ஆடையை அசோகனின் புறம் நீட்ட

 

அவளது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தவர்

“இன்னைக்கு உனக்கும் தான் நிச்சயதார்த்தம்!” என்று கூற அவள் கையிலிருந்த ஆடைப்பெட்டி அவள் காலடியில் நழுவி விழுந்து அதற்குள் இருந்த பொருட்கள் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதற அவள் மனமும் அவ்வாறே தூள் தூளாக பிளந்தது போன்றிருந்தது…….