ஐந்து வருடங்களுக்கு பிறகு…..
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ ?
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் எண்ணமோ ?
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகத்தை உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன் துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ?
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி ?
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததும் ஏதோ நிம்மதி
காரின் ரேடியோ வழியே பாடகர்கள் ஹரிச்சரண் மற்றும் ஹரிணி காதல் கசிந்துருகப் பாடிக் கொண்டிருக்க இழையினி முகம் கொள்ளாப் புன்னகையுடன் அந்த பாடலோடு இணைந்து பாடிக் கொண்டிருந்தாள்.
அவளருகில் பொன் ஆதவன் எப்போதும் போல தன் வசீகரிக்கும் புன்னகையுடன் காரை ஓட்டிக் கொண்டிருக்க அவனது மடியில் தன் கால்களையும், இழையினியின் மடியில் தன் தலையையும் வைத்து தூங்கி கொண்டிருந்தான் அந்த காதல் ஜோடியின் செல்ல மகன் மூன்றரை வயது நிரம்பிய ஸ்வரன் (இந்த பெயருக்கும் அர்த்தம் தங்கம் தானுங்கோ).
இழையினி தன் மேடிட்ட வயிற்றில் ஒரு கையையும், மறு கையால் தன் மகனையும் பிடித்திருக்க ஆதவனின் பார்வை நொடிக்கொரு தடவை அவர்களின் மீது பதிந்து மீண்டும் வீதியில் பதிந்தது.
லூல்கந்துர என்னும் பெயர் பலகையை பார்த்ததுமே இழையினியின் முகத்தில் உற்சாகம் தொற்றிக் கொள்ள காரின் ஜன்னல்களை கீழே இறக்கி விட்டவள் வெகு நாட்களுக்கு பிறகு அந்த குளிர் காற்றை ஆழ்ந்து அனுபவித்து கொண்டாள்.
பொன் ஆதவன் மற்றும் இழையினியின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு மாதத்திலேயே அவர்களது திருமணமும், மதியழகன் தேன்மொழியின் திருமணமும் நடந்து முடிந்திருக்க அன்றிலிருந்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது அவர்கள் இருவரும் இலங்கைக்கு வந்து செல்வதை தங்கள் வழக்கமாக்கியிருந்தனர்.
தங்கள் காதல் கைகூடிய இடம் அது என்பதால் என்னவோ ஒவ்வொரு முறை இலங்கைக்கு வரும் போதும் அவர்களுக்கு அந்த பயணம் முதல் பயணம் போலவே இருக்கும்.
விஜியிடம் சொல்லி தங்களுக்கென காரை எடுத்துக் கொள்பவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து லுல்கந்துர வரை தங்கள் காதல் உரையாடலுடனேயே வந்து சேர்வர்.
இழையினி இரண்டாம் தடவை கருத்தரித்திருந்த வேளை அவர்களது குடும்ப வைத்தியர் அவளைப் பிரயாணம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்ததனால் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக இலங்கை பயணத்தை தவிர்த்திருந்த ஆதவன் இழையினியின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்போது இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தான்.
அவளது வற்புறுத்தலுக்கான காரணம் வேறு எதுவும் அல்ல ராஜா மற்றும் விஜயாவின் ஒரே மகன் அர்ஜூனின் இரண்டாம் வருடப் பிறந்த தினம் தான்.
ஆதவன் இலங்கையில் இருந்து சென்ற அடுத்த நாளே ராஜா விஜியின் தந்தை செல்வத்தை சந்தித்து தான் விஜயாவை விரும்புவதாகவும், அவளையே திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூற ஆரம்பத்தில் அவனது அதிரடியான பேச்சில் மிரண்டு போனவர் தன்னைப் போன்று குணாம்சம் நிறைந்த ஒரு பையன் தன் மகளுக்கு கணவனாக வரப் போகிறான் என்பதை அறிந்ததன் பின்னர் அவனை முழு மனதோடு தன் மருமகனாக ஏற்றுக் கொண்டார்.
விஜயா அவனது இந்த அதிரடி செயலில் மலைத்துப் போனாலும் அவனது துடுக்குத் தனமான பேச்சிலும், செயலிலும் ஈர்க்கப்பட்டு தான் போனாள்.
ஆதவன் மற்றும் இழையினியின் திருமணம் முடிந்ததன் பின்னர் அவர்களது திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட காதலே வேண்டாம் என்றிருந்த தன்னையும் காதல் வயப்பட செய்த ஆதவனை தேடிச் சென்று ராஜா தன் நன்றியை தெரிவித்துக் கொண்டது வேறு கதை.
மறுபுறம் விஜயா ஏற்கனவே தன் மனதிற்குள் முடிவெடுத்து கொண்டது போல இழையினியின் திருமண மேடையில் வைத்து அவளிடம் ஆரம்பத்தில் உண்மையை சொல்லாமல் விட்டதற்காக சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கவும் மறக்கவில்லை.
அப்போதிலிருந்தும் சரி, அதற்கு முன்பிருந்தும் சரி தங்கள் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் தங்களுக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருந்த தங்கள் நண்பர்களின் வாழ்வில் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் தாங்கள் இருக்க வேண்டும் என்பது இழையினியின் ஆசையாகிப் போனது.
ஆதவனுக்கும் மனது நிறைய அந்த ஆசைகள் இருந்தாலும் அவனுக்கு முதன்மையானவள் இழையினி அல்லவா?
அவளது உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் சிறிது தயங்கியவன் பின் அவளது பேச்சில் கரைந்து உருகி ஒரு வழியாக இப்போது இலங்கை வந்து சேர்ந்திருந்தான்.
தேன்மொழி மற்றும் மதியழகனிற்கு மூன்று வயதில் மலர்விழி என்று ஒரு மகள் இருக்க அசோகனுக்கு இப்போதெல்லாம் தன் பேரக்குழந்தைகளின் குழந்தைகளே எல்லாமுமாக இருந்தனர்.
அசோகன் முன்பு போல் வசதி, வாய்ப்பு என்று வெளிப்படையாக பேசாவிட்டாலும் அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் தனது பண வசதியைக் காட்ட மறப்பதில்லை சிறு வயதிலேயே மனதில் ஊறிப் போன் விடயத்தை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாதே!
எத்தனையோ மாற்றங்களை சுமந்து இந்த ஐந்து வருடங்கள் கடந்திருக்க அவற்றை பற்றி எல்லாம் சிந்தித்து கொண்டே பொன் ஆதவன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவர்களது கெஸ்ட் ஹவுஸின் முன்னால் கார் நின்றதுமே தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த ஸ்வரன் முத்து தாத்தாவைப் பார்த்ததும்
“முத்தா!” தன் மழலை மாறாத குரலோடு அவரை நோக்கி ஓடிச் செல்ல அவரும் ஓடி வந்து அவனை வாஞ்சையுடன் தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
எந்தவொரு உறவுகளும் இல்லாமல் தனிமையில் இருக்கும் அவருக்கு இழையினியின் குடும்பத்தின் வருகை தான் மிகப்பெரும் சந்தோஷமே!
ஏற்கனவே அவர்களுக்கென அறைகளை முத்து தாத்தா ஒழுங்கு படுத்தியிருக்க ஆதவனும், இழையினியும் அவர்கள் அறையை நோக்கி நகர்ந்து சென்றனர்.
இந்த வீட்டிற்கு வந்து விட்டால் ஸ்வரனும் முத்து தாத்தாவோடு தான் சுற்றி திரியத் தொடங்குவான்.
தங்கள் அறைக்கு வந்து சேர்ந்ததும் தங்கள் உடைமைகளை எல்லாம் வைத்து விட்டு இழையினி தன் மனம் கவர்ந்த ஜன்னல் புறமாக சென்று நின்று கொள்ள ஆதவன் சிறு புன்னகையுடன் அவள் பின்னால் நின்றவாறே அவளை அணைத்து கொண்டு அவள் மேடிட்ட வயிற்றில் தன் கையை வைத்து கொண்டான்.
வெளியே தோட்டத்தில் அவர்களது செல்ல மகன் வாய் விட்டு சிரித்தபடியே முத்து தாத்தாவோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க முகம் மலர அவர்களைப் பார்த்து கொண்டு நின்றவள்
“ஆதவன்! ஸ்வரனுக்கு இங்கே வந்தால் நம்ம நினைப்பே வர்றது இல்லை பாருங்க! வந்து இறங்கியதுமே நம்மளை மறந்துட்டான்!” என்று கூறவும்
அவளது காதருகே மெல்ல குனிந்த ஆதவன்
“அப்படியே அவ அம்மாவை மாதிரி தான் இருக்கான்! அவனோட அம்மாவும் இப்படி தான் இங்கே வந்து இறங்கியதும் என்னை மறந்து ஓடிப் போய் விடுவா இன்னைக்கு தான் ஓட முடியாமல் நிற்குறா! ஏன்னா வயசாகிடுச்சு இல்லையா?” சிரிக்காமல் முகத்தை வெகு சாதாரணமாக வைத்துக் கொண்டே கூற
சட்டென்று அவனின் புறம் திரும்பியவள் தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து பார்க்க அவளைப் பார்த்து கண்ணடித்தவன்
“கூல் டவுன் பேபிம்மா! நான் நிறைய தடவை சொல்லி இருக்கேன் நீ இப்படி டென்ஷன் ஆனா அப்புறம் முகமெல்லாம் சுருக்கம் வந்துடும் அப்புறம் நான் சொன்னது உண்மையாகி விடும்” என்று விட்டு அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல
அவளோ
“உங்களை!” என்றவாறே அவனைப் பின் தொடர்ந்து துரத்தி கொண்டு ஓடத் தொடங்கினாள்.
அந்த அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி ஓடியவன் இழையினி முகத்தில் களைப்பு உருவாகுவதைப் பார்த்ததுமே சட்டென்று தன் வேகத்தை குறைத்து கொள்ள அவனை ஒரே எட்டில் பிடித்துக் கொண்டவள்
“நீங்க மாட்டிக்கிட்டீங்க ஆதவன்!” சிறு பிள்ளையைப் போல் சந்தோஷமாக துள்ளலோடு கூறவும்
அவள் கண்களையே பார்த்து கொண்டு நின்றவன்
“நான் உன் கிட்ட மாட்டிகிட்டு ரொம்ப வருஷம் ஆச்சு இழை! இன்னும் வெளியே வரவே இல்லை வரவும் மாட்டேன்!” காதல் பெருக அவளைப் பார்த்து கூற அவனது கூற்றில் அவளது கன்னங்கள் இரண்டும் செந்தாமரையாய் சிவந்து போனது.
“போங்க ஆதவன்!” இழையினி வெட்கத்தோடு அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள
“அது எப்படி இழைம்மா ஒவ்வொரு தடவையும் முதல் தடவை வெட்கப்படுற மாதிரியே வெட்கப்படுற? அந்த வெட்கத்தைப் பார்த்து தான் நான் மொத்தமாக சரண்டர் ஆகிடுறேன்!” ஆதவன் அவள் கன்னத்தில் தன் விரலால் கோலமிட்ட படியே கூறவும்
“ப்பாபாபாபா! வாங்க போம்!” என்றவாறே மழலை கொஞ்சும் குரலோடு ஸ்வரன் அவர்கள் அருகில் ஓடி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
தங்கள் மகனைப் பார்த்ததும் சட்டென்று இழையினியை தன் அணைப்பில் இருந்து விலக்கி கொண்டவன் ஸ்வரனோடு விளையாடத் தொடங்க அவளோ தன் கணவன் மற்றும் மகனை மனம் நிறைந்த சந்தோஷத்துடன் பார்த்து கொண்டு நின்றாள்.
கொடுக்க கொடுக்க குறையாத காதலைக் காட்டும் தன் கணவன், அந்த காதல் சின்னமாக தங்களுக்கு கிடைத்த தங்கள் மகன் ஸ்வரன், முழுமையான சந்தோஷத்துடன் நிறைவான குடும்பம் இதற்கு மேல் தன் வாழ்வில் என்ன சந்தோஷங்கள் எஞ்சியிருக்கப் போகிறது என்று எண்ணி பார்த்தவள் அந்த தருணத்தை எல்லாம் நீங்காத நினைவுகளாக தன் மனதிற்குள் சேமித்து கொண்டாள்.
ஒரு வழியாக விளையாடிக் களைத்து போய் வந்து சேர்ந்த ஆதவன் மற்றும் ஸ்வரனை பலவித போராட்டங்களுக்கு மத்தியில் தயார் படுத்தி விஜியின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற இழையினி தங்களோடு முத்து தாத்தாவையும் அழைத்து செல்வதற்கு மறக்கவில்லை.
இழையினியைப் பார்த்ததுமே வாசல் வரை ஓடி வந்து விஜி அவளை அணைத்துக் கொள்ள அதைப் பார்த்த ஆதவன் தன் இரு கரங்களையும் ராஜாவை நோக்கி நீட்ட அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தவன் மூச்சு வாங்கியபடியே நிற்கவும்
“என்னோடு அவ்வளவு பாசமாடா ராஜா உனக்கு?” ஆதவன் வராத கண்ணீரைத் துடைத்து விட்டபடியே அவனை அணைக்க போக அவனோ சட்டென்று குனிந்து அங்கே நின்று கொண்டிருந்த ஸ்வரனைத் தூக்கி கொண்டு உள்ளே சென்று விட பெண்கள் இருவரும் அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டு நின்றனர்.
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!” தன் சட்டைக் காலரை உயர்த்தி விட்டபடியே கூறி விட்டு ஆதவன் உள்ளே சென்று விட ராஜா மற்றும் ஆதவனின் சேட்டைகளை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த அவர்கள் மனைவியரும் சிரித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் அர்ஜூனின் பிறந்த நாள் நிகழ்வுகள் ஆரம்பித்து விட எப்போதும் போல சந்தோஷமாகவே அந்த நாள் அவர்களுக்கு கழிந்து சென்றது.
வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் தங்கள் கதைகளை எல்லாம் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருக்க இழையினியின் முகத்தில் மாத்திரம் பல்வேறு சிந்தனை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தது.
அவளது முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை கண்டு கொண்ட அவளது கணவன் ஆரம்பத்தில் அதைப் பற்றி எதுவும் பேசாமல் விட்டு விட பல மணித்துளிகள் கடந்தும் அவள் முகத்தில் இருந்த குழப்பங்கள் மாத்திரம் விலகவில்லை.
விஜயாவின் வீட்டிலேயே இரவுணவை முடித்து விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பியிருந்த ஆதவன் மற்றும் இழையினிக்கு இடையே அன்று ஏனோ வழமைக்கு மாறாக ஒரு கனத்த அமைதி நிலவியது.
அவள் ஏதோ ஒரு பலத்த சிந்தனையோடு இருப்பதை வெகு நேரமாக கவனித்து வந்தவன் அவளிடம் அதைப் பற்றி கேட்க அவளோ எதுவும் இல்லை என்று விட்டு சென்றிருந்தாள்.
அவளது ஒவ்வொரு அசைவுகளையும் வைத்தே அவளது மனநிலையை கணித்துக் கொள்ளுபவன் இப்போது அவள் எதுவும் இல்லை என்று சொல்லி இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அவளது சிந்தனைக்கான காரணத்தை பல்வேறு விதமாக யோசித்து பார்த்தவன் தற்செயலாக நாட்காட்டியின் புறம் திரும்பி பார்க்க அப்போது தான் அவனுக்கு அவளது சிந்தனைக்கான காரணம் புரிந்தது.
‘ஓஹ்! மேடம் இதனால் தான் இப்படி இருக்காங்களா? வாயைத் திறந்து சொல்ல மாட்டாங்க போல! இருக்கட்டும் நாளைக்கு காலையில் கவனிச்சுக்கிறேன்’ அசந்து தூங்கும் தன் மனைவியை பார்த்தபடியே மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு தன் மகனது கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு நிம்மதியாக உறக்கத்தை தழுவிக் கொண்டான்.
அடுத்த நாள் காலை விடியல் பறவைகளின் கீச்சொலியோடு ஆரம்பிக்க ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வில் தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த இழையினி தன்னை சுற்றி இருந்த பச்சை பசேலென்ற மரங்களை பார்த்து படபடப்புடன் எழுந்து கொள்ளவே
“ஹேய்! ரிலாக்ஸ் இழை!” ஆதவன் அவளருகில் வந்து அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“ஆதவன்! நாம…நாம எங்கே இருக்கோம்? ஸ்வரன் எங்கே? நாம எப்படி இங்கே வந்தோம்? நைட் வீட்டில் தானே இருந்தோம்?” இழையினி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்க அவள் இதழ் மேல் தன் ஆட்காட்டி விரலை வைத்து வேண்டாம் என்பது போல தலையசைத்தவன் அவள் முன்னால் இருந்து விலக அந்த ‘கொண்டகல’ மலையின் உச்சியில் இருந்து வரும் சூரிய உதயம் அவர்கள் இருவரையும் வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த சந்தோஷத்தை சொல்வதைப் போல ஆரத் தழுவிக் கொண்டது.
“ஹேய்! ஆதவன்! நாம எப்படி இங்கே?” தன் கன்னங்கள் இரண்டிலும் கையை வைத்து கொண்டு சிறு பிள்ளையைப் போல் கூச்சலிட்ட இழையினியின் அருகில் வந்து நின்று கொண்ட ஆதவன்
“நான் தான் முன்னாடியே சொல்லி இருக்கேனே! உன் மனதில் நீ நினைக்கும் விடயத்தை நான் ரொம்ப சுலபமாக கண்டு பிடித்து விடுவேன்! ஏன்னா உன் முகம் கண்ணாடி மாதிரி மனதிற்குள் என்ன நினைத்தாலும் காட்டிக் கொடுத்து விடும் நேற்றிலிருந்து நீ சரியாகவே இல்லை உன் கிட்ட அதைப்பற்றி கேட்டும் நீ சொல்லல அதற்கு அப்புறம் தான் ஒவ்வொரு விடயமாக யோசித்து பார்த்தேன் இன்னைக்கு என்ன நாள்ன்னு நினைவு வந்தது!” அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடியே கூற
அவளோ
“என்ன நாள்?” கண்களில் குறும்பு மின்ன அவனைப் பார்த்து கேட்டாள்.
“இதே நாள் இதே நேரம் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னாடி நாம இரண்டு பேரும் இதே மாதிரி சூரிய உதயத்தை முதல் தடவையாக ஒன்றாக இருந்து பார்த்தோம் அது மட்டுமல்ல நம்ம காதலையும் சொன்னோம்”
“ஹலோ பாஸ்! நம்ம இல்ல உங்க! நான் தான் அன்னைக்கு எதுவும் சொல்லவே இல்லையே!”
“நீ சொல்லாவிட்டாலும் உன் கண்ணில் நான் என் காதலை பார்த்தேனே! அன்னைக்கு அதோ அந்த குகை கிட்ட வைத்து ஆளை விழுங்குற மாதிரி பார்த்தததை எல்லாம் நான் மறக்கல இழையினி மேடம்!” ஆதவன் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து கண் சிமிட்ட
“அச்சோ! அப்போ அன்னைக்கே நீங்க எல்லாம் தெரிந்து தான் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்தீங்களா? அது மட்டுமில்லாமல் அன்னைக்கு அவ்வளவு டயலாக் எல்லாம் பேசுனீங்க எல்லாம் ஆக்டிங்கா?” பதிலுக்கு அவனை முறைத்து பார்த்து கொண்டு கேட்டவள் கன்னத்தில் தன் இதழ் பதித்தவன்
“எஸ் எஸ் இழையினி மேடம்! உங்க வாயாலேயே எல்லாவற்றையும் பேச வைக்கணும்னு தான் ரொம்ப சமத்துப் பையனாக இருந்தேன் என்னை விட உன்னை விட நம்ம காதல் மேல் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு அது எப்படியும் நம்மை சேர்த்து வைக்கும்னு நம்பினேன் அப்படியே நடந்துடுச்சு!” எனவும் ஒவ்வொரு நாளும் அவன் காதலை எண்ணி எண்ணி சொக்கிப் போகுபவள் இப்போதும் அவனை சொக்கிப் போய் பார்த்து கொண்டு நின்றாள்.
சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள் பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக
“நான் எப்படி இங்கே வந்தேன்? ஸ்வரன் எங்கே?” பதட்டத்துடன் குழப்பமாக அவனைப் பார்த்து வினவ
அவளது தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தவன்
“கூல் டவுன் இழை! ஸ்வரனை முத்து தாத்தாகிட்ட கொஞ்ச நேரம் பார்த்துக்க சொல்லி விட்டு தான் நான் வந்தேன்” எனவும்
“அப்போ நான்?” மீண்டும் அவனைக் குழப்பத்துடன் நோக்கினாள்.
“நான் நடந்து வந்தேன் நீ என் கையில் தூங்கிட்டு வந்த!”
“என்ன? நிஜமா… நிஜமாகவா?” ஆதவன் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாமல் இழையினி அவனை அதிர்ச்சியாக திரும்பி பார்க்க
அவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன்
“ஆமா! என் பொண்டாட்டிய நான் தூக்காமல் வேற யாரு தூக்குவா? ஆனா என்ன நீ முன்னாடி மாதிரி சிலிம்மா இல்லை கொஞ்சம் உடம்பு வைத்துட்ட” என்று கூறவும்
“ஆதவன்!” செல்லமாக அவனது தோளில் அடித்தவள்
“கை ரொம்ப வலிக்குதா?” பரிவோடு அவன் கைகள் இரண்டையும் பிடித்து விட்டபடியே கேட்டாள்.
“நீ பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் முன்னாடி இதெல்லாம் ஒரு வலியே இல்லை இழை! என்னோட இழைக்காக நான் எந்த வலியையும் தாங்குவேன்! நான் உன்னை இந்த கையில் மட்டும் சுமக்கல! என் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தான் இருக்கேன்” என்று அவன் கூறிய அடுத்த கணம்
இழையினி
“ஆதவன்!” என்றவாறே உணர்ச்சி வசப்பட்டவளாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
சிறிது நேரம் அவர்களுக்கு இடையில் கனத்த அமைதி நிலவ
“ஆதவன் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு விடயம் சொல்லணும்னு ஆசையாக இருக்கு சொல்லவா?” அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக இழையினி தன் பேச்சை ஆரம்பித்தாள்.
“நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியுமே!”
“தெரியுமா எப்படி?”
“அது தான் சொன்னேனே நீ நினைப்பதை உன் முகம் காட்டி கொடுக்கும்னு!”
“அப்படியா? அப்போ நான் என்ன நினைத்தேன்னு சொல்லுங்க!”
“எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு ஐ லவ் யூ ஆதவன் அது தானே?”
“இல்லையே!” என்றவாறே இழையினி அவனை விட்டு விலகி நிற்கவும்
“அப்போ வேறு என்ன?” தன் கன்னத்தில் தட்டி யோசித்தபடியே ஆதவன் அவளைப் பார்க்க
சிறு புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள் அவன் உயரத்திற்கு எம்பி அவன் காதினருகே
“உன்னை நீங்கி நான் எங்கே செல்வது? உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே!” என்று மெல்லிய குரலில் பாட அவளை அப்படியே தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் காதலோடு அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.
சூரியனின் பொற்கதிர்கள் அந்த காதல் ஜோடியை ஆராதிக்க இனி அவர்கள் வாழ்வில் என்றென்றும் காதலே நிறைந்து இருக்கும்!
ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் எப்படி வயது கூடிக் கொண்டே செல்லுமோ அது போலவே அவர்கள் காதலும் நாளாக நாளாக பன்மடங்கு பெருகிக் கொண்டே செல்லும்.
அவர்கள் இருவரது பெயரில் மாத்திரம் தங்கம் என்னும் அர்த்தம் இல்லை அவர்களது குணத்திலும், காதலிலும் எங்கெங்கும் தங்கமே நிறைந்து இருக்கிறது.
ஆதவனை விட்டு இழையினியும், இழையினியை விட்டு ஆதவனும் ஒருவரை ஒருவர் நீங்கி செல்லவே முடியாது என்பது போல அவர்களது காதல் அந்த இடத்தில் அவர்களை சூழ்ந்து கொள்ள இனி என்றென்றும் அவர்கள் வாழ்வில் சந்தோஷமே நிறைந்திருக்கட்டும்!
*******முற்றும்*******