உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 05

காலையில் இருந்து ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்த சூரியன் தன் பணி முடிந்து வானில் தவழ்ந்து மலை அடிவாரத்தில் தங்கப் போக அந்த வெற்றிடத்தை நிரப்ப வெண்ணிலவு மெல்ல மெல்ல தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.

 

எல்லோரும் வேலை முடிந்து தங்கள் வீடுகளுக்கும், விடுதிகளுக்கும் சென்று கொண்டிருக்கையில் இழையினியும் தனது அலுவலக அறையில் இருந்து வெளியேறுவதற்காக தயாராகி கொண்டு நின்றாள்.

 

பொன்ஆதவன் அவளை சந்தித்து விட்டு சென்றதன் பிறகு செல்வம் வந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தவாறே வேலைகளை பற்றி பேச அவளும் அவனது எண்ணங்களை எல்லாம் சற்று ஒதுக்கி வைத்து விட்டு தன் வேலைகளில் மூழ்கி போனாள்.

 

அன்றைய நாளில் முடியுமான அளவுக்கு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக அவள் தனது கைப்பையை எடுக்க அங்கே மேஜையில் காலையில் ஆதவன் கொடுத்து விட்டு சென்ற அவனது தொலைபேசி இலக்கம் எழுதப்பட்ட காகிதம் அவளையே ஏக்கத்துடன் பார்ப்பது போல கிடந்தது.

 

தயக்கத்துடன் அந்த காகிதத்தை தன் கையில் எடுத்தவள் மறுகையால் தன் நெற்றியை நீவி விட்டபடியே சிறிது நேரம் யோசித்து விட்டு பின் அந்த காகிதத்தை தன் கைப்பையில் போட்டு கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றாள்.

 

அதேநேரம் செல்வமும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இழையினியின் முன்னால் வந்து நின்றார்.

 

“வாம்மா இழையினி! நானே உன்னை வீட்ல கொண்டு போய் விடுறேன் நீ தனியா போக வேணாம் இன்டைக்கு பார்த்து விஜியும் வேலைக்கு வரல”

 

“இல்லை அங்கிள்! பரவாயில்லை பக்கத்தில் தானே வீடு இருக்கு நான் நடந்து போய் விடுவேன்”

 

“அதெல்லாம் ஒண்டும் தனியா போக வேணாம் இன்டைக்கு வழமையை விட லேட் ஆகிட்டு நானே கூட்டிட்டு போறது தான் நல்லது ஏன்னா போற வழியில் யாரு, என்ன நிலைமையில் இருப்பாங்கன்னு சொல்லத் தெரியா”

 

“சரி அங்கிள்! நீங்க விடமாட்டிங்க வாங்க போகலாம்” சிறு புன்னகையுடன் அவரது வண்டியில் இழையினி ஏறி அமர்ந்து கொள்ள இருபது நிமிடப் பயணத்திற்கு பின்னர் அவளை அவளது வீட்டில் கொண்டு வந்து சேர்த்தவர் அவள் வீட்டிற்குள் சென்றதை உறுதிப் படுத்திய பின்னரே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

தன்னுடைய முதலாளியினுடைய வாரிசாக, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு முதலாளியாக அவள் இருந்தாலும் இன்று வரை அவளைத் தன் பொறுப்பில் விட்டு வைத்திருக்கும் அவளது குடும்பத்தினரின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை அவர் மனதிற்குள் எப்போதும் உண்டு.

 

எப்போதும் போல இதழில் தவழ்ந்த புன்னகையுடன் வந்த இழையினிக்கு மாலை நேரத்து சிற்றுண்டிகளைப் பரிமாறிய முத்து தாத்தா இரவுணவு தயாரிக்கும் வேலைகளை கவனிப்பதற்காக சென்று விட அவளோ தன் வாசிப்பறைக்குள் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு வீட்டின் முன்னால் இருந்த கயிற்று ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

இழையினி இங்கே காலையில் நடந்த சம்பவத்தை பற்றி தற்காலிகமாக மறந்து அமர்ந்திருக்க மறுபுறம் பொன்ஆதவன் அவனது அறையில் இழையினியின் புகைப்படத்தை வைத்து பேசிக் கொண்டிருந்தான்.

 

மஞ்சள் நிற லெஹங்கா அணிந்து இதமான ஒப்பனையுடன் திருமண நிகழ்வு ஒன்றில் நிற்பது போல இருந்த அந்த புகைப்படத்தில் அவள் மாத்திரமே நின்று கொண்டிருந்தாள்.

 

“இழை! நான் பண்ணுறது தப்பா? சரியா? எனக்கு சொல்ல தெரியல ஆனா உனக்கு இந்த நிலைமை வர்றதுக்கு நானும் ஒரு வகையில் காரணம் தான் அதற்காக பிரயாசித்தம் பண்ண உன்னை தேடி நான் வரல உன்னை முதல் தடவை பார்த்த போதே நீ எனக்கானவனு முடிவு பண்ணேன் ஆனா இடையில் என்னன்னவோ ஆகிப் போச்சு பட் அது எல்லாம் கடந்து போனது அந்த பிரச்சினை வந்திருக்காவிட்டால் நீ எனக்கு கிடைத்து இருக்க மாட்ட! அந்த வகையில் எல்லாம் நன்மைக்கே! நீ எப்போ என்னை முழுமையாக நம்பி நடந்த எல்லா விடயங்களையும் ஏத்துக்கிட்டு என்னை விரும்புறியோ அது வரைக்கும் நான் காத்திருப்பேன் இதே காதலோடு!” இழையினியின் புகைப்படத்தை தன்னோடு சேர்த்து அணைத்தவாறே பொன் ஆதவன் தன் கனவுலகில் மூழ்கி போய் கொண்டு இருந்தான்.

 

மறுபுறம் தன் கையில் இருந்த புத்தகத்தில் இழையினி தன்னை மறந்து அமர்ந்திருக்க அவளை மீண்டும் இவ்வுலகிற்கு இழுத்து வந்தது அவளது தொலைபேசியின் சத்தம்.

 

‘யாரு அது?’ சிறு சலிப்போடும், யோசனையோடும் இழையினி தன் தொலைபேசியை எடுத்து பார்க்க அதில் அவளது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

 

கையில் இருந்த புத்தகத்தை தன் முன்னால் இருந்த மேஜை மீது போட்டவள் புன்னகையுடன் அந்த அழைப்பை எடுத்தாள்.

 

“ஹலோ! அப்பா எப்படிப்பா இருக்கீங்க?”

 

“நா… நான் நல்லா இருக்கேன்டாம்மா நீ எப்படிடா இருக்க?”

 

“ம்ம்ம்ம்ம்! ஐ யம் ஃபைன் பா! அப்புறம் வீட்டில் மதி, தேனு, செழியன், பாட்டி, மாமா, அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க” இழையினியிடமிருந்து அன்றும் அசோகனைப் பற்றிய விசாரிப்பு வரவில்லை என்பதை குறித்து கொண்ட இளமாறன் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டவாறே

 

“நாங்க நல்லா இருக்கோம்டா கண்ணம்மா! நீ சாப்டியா?” என்று கேட்டார்.

 

“ஈவ்னிங் ஸ்னேக்ஸ் சாப்பிட்டேன்பா டின்னர் முத்து தாத்தா செய்துட்டு இருக்காங்க”

 

“ஓஹ்! அப்புறம் வேலை எல்லாம் எப்படி போகுதுடா?” இளமாறனின் குரலில் ஏதோ ஒரு சோர்வு கலந்திருக்க

 

“அப்பா ஆர் யூ ஆல்ரைட்? அங்கே ஏதாவது பிரச்சினையா?” தன் தந்தையின் குரலில் தெரிந்த ஒரு மாற்றம் அவள் மனதை ஏனோ கலங்கச் செய்தது.

 

தன் சிறு குரல் மாற்றத்தை வைத்தே தன் மனநிலையை உணர்ந்து கொண்ட தன் மகளை எண்ணிப் பெருமிதம் கொண்டவர் 

“அப்பாவோட குரலில் தெரிந்த சிறு மாற்றத்தை ரொம்ப சுலபமா கண்டுபிடித்துட்ட பரவாயில்லை ஆனா அதற்கான காரணத்தை நீ இன்னும் கண்டுபிடிக்கலையா கண்ணம்மா?” என்று கேட்கவும் மறுமுனையில் இழையினி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

“இழையினி! லைனில் இருக்கியாம்மா?”

 

“………..”

 

“இழையினி!”

 

“சொ… சொல்லுங்க ப்பா!”

 

“இன்னும் தாத்தா மேல் இருக்கும் கோபம் போகலயா கண்ணம்மா?”

 

“எ..என்னால அதை மட்டும் ஈஸியாக எடுக்க முடியலப்பா! அம்மா ஒவ்வொரு நாளும் அந்த விஷயத்தை பற்றி பேசி பேசி கவலைப்பட்டது இன்னமும் என் மனதில் இருந்து மறையலப்பா! ப்ளீஸ்பா நீங்களும் என்னை கஷ்டப்படுத்தாதீங்க”

 

“நீ சொல்லுறது எனக்கு புரியுது கண்ணம்மா ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும் சொல்லு? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காமல் மதி தன்னை பற்றி எந்த முடிவும் எடுக்க மாட்டான் அது உனக்கும் தெரியும் தானேடா கண்ணம்மா!”

 

“தெரியும் பா ஆனா என்னால நீங்க சொல்றதை கேட்டு நடக்க முடியுமான்னு தெரியலை..”

 

“ஆனா இழை…”

 

“நீங்க வேற எதுவும் யோசித்து கவலைப்பட வேண்டாம்ப்பா! நான் மதிகிட்ட பேசுறேன்ப்பா! அதோடு நீங்க என்கிட்ட இருந்து இதற்கு மேல என்ன எதிர்பார்த்தாலும் அதை என்னால முழு மனதோடு இப்போதைக்கு செய்ய முடியாதுப்பா ஐ யம் ஸாரி” 

 

“ம்ம்ம்ம்ம்! எதுவாக இருந்தாலும் இன்னொரு தடவையும் யோசித்து பாரும்மா”

 

“ட்ரை பண்ணுறேன்ப்பா”

 

“சரிடாம்மா பார்த்து பத்திரமாக இருந்துக்கோ!”

 

“ஹ்ம்ம் சரிப்பா” காதில் இருந்த போனை எடுத்து தன் முன்னால் இருந்த மேஜை மீது போட்டவள் கண்களை மூடிக் கொண்டு அந்த கயிற்று ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 

அவளது மூடிய இமைகளின் கீழ் இருந்த கருவிழிகள் இரண்டும் ஓரிடத்தில் நில்லாமல் அலைந்து கொண்டிருக்க அவள் மனதும் அதே மாதிரி நிலையில்லாமல் தவித்து தான் கொண்டிருந்தது.

 

காலையில் பொன்ஆதவனுடானான சந்திப்பு, இப்போது தந்தையுடனான உரையாடல் என்று வெவ்வேறான சம்பவங்கள் அவளை சூழ்ந்து கொண்டு குழப்ப சற்று நேரத்திற்கு முன் இருந்த அந்த இயல்பான மனநிலை அவளை விட்டு தூரம் விலகி சென்று இருந்தது.

 

“பாப்பா சாப்பிட வாம்மா” முத்து தாத்தாவின் குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்து கண்களை திறந்து கொண்டவள் வயிறோ என்னையும் கொஞ்சம் கவனியேன் என்பது போல சத்தமிட 

‘மனமா? வயிறா?’ என்று யோசித்து விட்டு அப்போதைக்கு சாப்பாடு தான் முக்கியம் என்ற முடிவோடு அமைதியாக சாப்பாட்டு மேஜையை நோக்கி நடந்து சென்றாள்.

 

சுடச்சுட ஆவி பறக்க மேஜை மீது வைக்கப்பட்டிருந்த இடியாப்பம் மற்றும் மீன் பால்கறியைப் பார்த்ததுமே இழையினியின் மனதிற்குள் அத்தனை நேரமாக அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் இருந்தது.

 

இது தான் இழையினி!

 

சாப்பாடு என்கிற ஒரு விடயம் அவள் கண்கள் முன்னால் வந்து விட்டால் எத்தனை பெரிய பிரச்சனையும், குழப்பமும் அவள் மனதிற்குள் தங்கியிருக்காது. 

 

அந்த இடத்தில் சாப்பாடு என்கிற ஒரு விடயமே ஆக்கிரமித்து இருக்கும்.

 

சாப்பிட்டு முடித்து விட்டு ஓய்வாக அமரும் போது தான் மீண்டும் அந்த சிந்தனைகள் எல்லாம் அவளை வந்து சூழ்ந்து கொள்ளும்.

 

இப்போதும் அவ்வாறே கண் முன்னால் ஆவி பறக்க, மணக்க மணக்க இருந்த உணவைப் பார்த்தவுடனேயே ஆதவனாவது, தாத்தாவாவது என்ற நிலைக்கு சென்றிருந்தது அவளது மனது.

 

மனதும், வயிறும் நிரம்ப உணவை உண்டு முடித்தவள் முத்து தாத்தாவின் புறம் திரும்பி

“முத்து தாத்தா! நீங்க தினமும் இப்படி சமைத்துப் போட்டீங்கன்னு வைங்க நான் இங்கே இருந்து போறதுக்கு கண்டிப்பாக தனியாக ஒரு பிளைட் தான் புக் பண்ணணும் ஏன்னா அவ்வளவுக்கு உடம்பு வைத்துடுவேன்” சிரித்துக் கொண்டே கூறவும்

 

புன்னகையுடன் அவளது தலையை வருடிக் கொடுத்தவர்

“வயசுப் புள்ள நல்லாத்தான் சாப்பிடணும் சாப்பாடு விஷயத்தில எதையும் யோசிக்க கூடாது அதோடு உனக்கு எப்படி பாப்பா உடம்பு வைக்கும்? இரண்டு வருஷமாக நான் சமைக்குறதைத் தானே சாப்பிடுற ஆனா அப்படியே தான் இருக்க! இனியும் அப்படித்தான் இருப்ப” என்று கூற பதிலுக்கு அவளும் புன்னகையுடன் அவரது வேலைகளில் உதவி செய்ய தொடங்கினாள்.

 

சிறிது நேரத்தில் முத்து தாத்தா தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அந்த வீட்டின் பின்புறம் இருந்த அவருக்கென்று தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு அறை, மற்றும் ஹால் கொண்ட வீடு போன்ற அமைப்பில் இருந்த அந்த கட்டடத்தை நோக்கி சென்று விட இழையினும் தனது அறைக்குள் சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 

சாப்பிடும் வேளையில் காணாமல் போய் இருந்த பொன்ஆதவன் மற்றும் இளமாறனின் பேச்சுக்கள் இப்போது மீண்டும் அவள் முன்னால் வந்து நின்று தங்களைப் பற்றி சிந்தி என்று அவளைத் தூண்ட ஆரம்பித்தன.

 

தன் கைப்பைக்குள் இருந்த பொன்ஆதவன் கொடுத்து விட்டு சென்ற அவனது தொலைபேசி இலக்கத்தை எடுத்துப் பார்த்தவள் அவன் இறுதியாக கூறி விட்டு சென்ற

‘உங்க அண்ணன் மதியழகனையும் விசாரித்ததாக சொல்லுங்க’ என்ற வசனத்தை மீட்டிப் பார்த்து விட்டு

 

‘இப்போதைக்கு அப்பாகிட்ட சொன்ன விடயத்திற்காகவும், இந்த ஆதவனைப் பற்றிய விடயத்திற்காகவும் மதிகிட்ட பேசுவது தான் சரி’ என்ற முடிவோடு தன் தொலைபேசியை எடுத்து மதியழகனின் எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.

 

அதேநேரம் சென்னையில் செந்தமிழ் இல்லத்தில்…..

 

பல நாட்களாக இழுத்து கொண்டிருந்த ஒரு  கான்ட்ராக்ட் வேலை அன்று தான் வெற்றிகரமாக முடிந்திருக்க அந்த சந்தோஷமான மனநிலையுடன் தன் வீடு வந்து சேர்ந்திருந்த மதியழகன் தன் சந்தோஷமான மனநிலையை வீட்டில் இருந்த எல்லோரிடமும் பகிர்ந்து விட்டு அதே துள்ளலோடும், பூரிப்போடும் தன் அறையின் பின்னால் இருந்த பால்கனியில் நின்று கொண்டிருந்தான்.

 

வானில் நிலவும், நட்சத்திரங்களும் பவனி வந்து கொண்டிருக்க சிறு புன்னகையுடன் அந்த காட்சியை பார்த்து கொண்டு நின்றவன்

“அம்மா! என்னோட வேலையில் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியையும், தோல்வியையும் நான் உங்க கிட்ட தான் எப்போதும் பகிர்ந்து கொள்ளுவேன் நீங்க எங்களை விட்டு போனதற்கு அப்புறம் இந்த நட்சத்திரங்கள் தான் நீங்கன்னு நினைத்து பேசிட்டு இருக்கேன் இப்போதும் அப்படித்தான் என்னோட சந்தோஷத்தை உங்க கிட்ட பகிர்ந்து கொள்ள போறேன் உங்க பையன் மறுபடியும் பிசினஸில் ஒரு வெற்றியை சாதிச்சுட்டான்ம்மா! சாதிச்சுட்டான்! ஆனால் வாழ்க்கையில்?” புன்னகையுடன் ஆரம்பித்து சோகத்தோடு அந்த வானை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

 

குடும்பத்தின் மூத்த பிள்ளை என்கிற பொறுப்பு இருக்கும் தன்னால் இந்த குடும்பத்தின் சந்தோஷத்தை கட்டிக்காக்க முடியாதோ? என்ற கேள்வி இன்று வரை அவன் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

 

மதியழகன் ஆழ்ந்த சிந்தனையை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவனை மீண்டும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது அவனது தொலைபேசியின் ஒலி.

 

கையிலேயே தூங்கிக் கொண்டிருந்த தன் தொலைபேசியை எழுப்பியது யார் என்பது போன்ற யோசனையுடன் மதியழகன் தன் தொலைபேசியை பார்க்க அதில் தெரிந்தது இழையினியின் புன்னகை முகமும், அவளது பெயரும்.

 

“இழையா?” கண்களில் ஆச்சரியம் மின்ன அவன் அந்த அழைப்பை எடுக்க மறுமுனையில் வெகு சாதாரணமாக ஒலித்தது இழையினியின் குரல்.

 

“ஹலோ! மதிண்ணா!”

 

“இழைம்மா! எப்படிடா இருக்க? சாப்பிட்டியா?”

 

“நான் நல்லா இருக்கேன்ண்ணா இப்போ தான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா? நீ எப்படி இருக்க?”

 

“இப்போ தான் ஆபிஸில் இருந்து வந்து சாப்பிட்டேன் நான் நல்லா இருக்கேன் அப்புறம் இப்போ தான் இந்த அண்ணாவோட நினைவு வந்ததா?”

 

“இல்லண்ணா! அப்படி இல்லை” இழையினி சிறிது தயக்கத்துடன் கூற 

 

மறுமுனையில் புன்னகைத்து கொண்டவன்

“சொல்லுடாம்மா என்ன திடீர்னு அண்ணனுக்கு போன் பண்ணி இருக்க? வழக்கமாக நான் தானே பண்ணுவேன் இன்னைக்கு நீ பண்ணி இருக்க! ஏதாவது முக்கியமாக பேசணுமா?” என்று கேட்கவும்

 

தன் உதட்டை கடித்து கொண்டு தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தபடியே சிறிது நேரம் யோசித்தவள்

“ஆமாண்ணா கொஞ்சம் பேசணும் தான் நீ இப்போ ஃப்ரீ தானே?” என்று கேட்டாள்.

 

“என்னோட இழைம்மா ரொம்ப நாள் கழித்து என்னோடு பேசணும்னு கால் பண்ணி இருக்கா அவளோட பேசுவதை விட வேறு என்ன எனக்கு முக்கியம் சொல்லு?”

 

“……..”

 

“இழைம்மா! லைனில் இருக்கியா?”

 

“ஹான் இருக்கேன்ண்ணா”

 

“சொல்லும்மா என்ன பேசணும் தயங்காமல் பேசு” மதியழகனின் கூற்றில் கண்களை மூடி ஒருமுறை ஆழ்ந்த மூச்சை விட்டு கொண்டவள்

 

 பின்னர் தன் கண்களை திறந்து கொண்டு

“அண்ணா நீ எப்போ தேன்மொழியைக் கல்யாணம் பண்ணிக்க போற?” என்று கேட்டாள்.

 

இழையினி பொதுவாக ஏதாவது ஒரு விடயத்தை பற்றி தான் பேசப் போகிறாள் என்று எண்ணியிருந்த அவளது தமையன் தன் தங்கையின் இந்த நேரடிக் கேள்வியில் பேச வார்த்தைகள் மறந்து மனதினுள்ளும், வெளியிலும் இறுகிப் போய் நின்று கொண்டிருந்தான்….