உன் இம்சைகளை யாசிக்கிறேன் – 3

village

 

இம்சைகள் – 3

         ஈரோட்டில் இருந்து சுமார் 18 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் பூந்துறை தான் தாமரையின் பிறந்த ஊர். பச்சை கம்பளம் விரித்த வயல்களும், வெண்மேகம் மோதிச்செல்லும் தூரத்து மலைகளும், என்னேரமும் சிலுசிலுவென தழுவிச்செல்லும் தென்றலும்… எனப் பூந்துறை கொள்ளை அழகு…

        

 அந்த காலத்தில் இருந்து, தலைமுறை தலைமுறையாக, செல்வ செழிப்போடு ஊரை நிர்வகித்து வந்தவர்கள் பூந்துறையின் ஜமின்தாரர்கள். ஜமின் பரம்பரையின் வாரிசுகள் ஊரில் முக்கிய பங்கு வகிப்பது அந்த ஊரின் வழி வழியாக வந்த பழக்கம்.

 

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, பூந்துறை ஜமினின் வாரிசான பட்டீஸ்வரனுக்கும் ருக்குமணி அம்மாளுக்கும் திருமணம் நடக்க, அவர்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. ஜமினுக்கு வாரிசு வந்துவிட்டதை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர். குணசேகரன் என்று பெயர் இட்டனர். 

 

அடுத்ததாக மஹாலக்ஷ்மியாக ஒரு மகள் வேண்டும் என பட்டீஸ்வரனும் ருக்குமணியும் ஆசையாக இருக்க… வெகு நாட்கள் அவர்களின் ஆசை நிறைவேறவே இல்லை. நீண்ட ஏழு வருட காத்திருப்பிற்கு பிறகு ருக்குமணியின் வயிற்றில் வந்து உதித்தார் தாமரை. ஆதனாலேயே அனைவருக்கும் தாமரை அதீத பிரியம். 

        

குணசேகரனுக்கும் தங்கை என்றால் உயிர். இவர்கள் இருவரும் வீட்டில் செய்த குறும்புகள் போதாதென்று ஊரில் செய்த இம்சைகளினால் ஊரே திணறிக்கொண்டிருந்தது. பூந்துறையில் ஒன்றுக்கு இரண்டு கிருஷ்ணர்கள் பிறந்து ஊரையே இரண்டாக்கிக் கொண்டிருந்தனர். 

 

ஜமினின் வாரிசுகள் என்ற பேதமோ கர்வமோ இல்லாமல் பழகியதால், சொந்தங்கள் அனைத்தும் இரு குழந்தைகள் மீதும் பிரியம் வைத்திருந்தனர். அதனாலேயே இருவரும் செய்யும் குறும்புகள் எதுவும் பட்டீஸ்வரன் காதுகளை எட்டவே இல்லை. பட்டீஸ்வரனும் இது அனைத்தையும் கண்டும் காணாமலும் இருந்தார்.

 

      இரு பிள்ளைகளும் வளர்ந்து பருவ வயதை அடைய, குணசேகரன் இந்த இருவர் கூட்டணியில் இருந்து விலகி பொறுப்பாகிவிட, தாமரை மட்டும் வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் ஊரில் உள்ளவர்களை இம்சித்துக் கொண்டிருந்தார்.

 

         தாமரைக்கு திருமணம் செய்துவிட்டால் பொறுப்பான பிள்ளையாகி விடுவாள் என்று எண்ணிய பட்டீஸ்வரன் வரன் தேட ஆரம்பித்தார். 

 

அவர் தேட தொடங்கியதில் எல்லாம் தவறே இல்லை. ஆனால், விரைவாக தேட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தேர்வு செய்த மாப்பிள்ளை தான் தவறாகி போய் விட்டான். 

 

பக்கத்து ஊரான நசியனூரின் ஜமீன் வாரிசுகளான தமிழ்செல்வியை குணசேகரனுக்கும், ராஜபாண்டியை தாமரைக்கும் பெண் கொடுத்து பெண் எடுப்பது என சம்பந்தம் பேசி முடிக்கப்பட்டது.

 

இதுவரை தாமரை சொல்லிக்கொண்டே வர, நடுவில் புகுந்த பரி,

“மா… மா.. நில்லு நில்லு.. இந்த இடத்துல இருந்து நான் கன்டினியு பண்றேன் பாரு. அந்த ராஜபாண்டியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி நீ போராடுற… ஏன்னா நீ தான் அப்பாவ லவ் பண்றியே !! அழுகுற, கதறுற…

 

‘ஆனா இந்த பட்டு தாத்தா அசையவே மாட்டேங்குறார். ஏன்னா அவருக்கு ஜாதி பிரச்சனை. அப்புறம் ஒரு நாள் நீயும் அப்பாவும் மாலையும் கழுத்துமா போய் தாத்தா முன்னாடி நிக்குறீங்க. அப்படியே ஷாக் ஆன தாத்தா வாசல்லயே நிக்க வச்சுடுரார். ருக்கு பாட்டிய கூட பாக்க விடல. 

 

‘நீ அழுதுட்டே நிக்குற. வெளிய போறியா இல்ல வாட்ச்மேனைக் கூப்பிடவானு செம்ம கோவமா கத்துராரு. இதுல கோபமான அப்பா உன்னை கூட்டிட்டு சென்னை வந்துட்டாரு. அப்புறம் நீங்க அங்க போகவே இல்ல… நான் சொல்றது எல்லாம் கரக்ட்டா?? பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றேனா? “ என்று இல்லாத காலரை தூக்கி விட,

 

“எம்பொண்ணுக்கு எம்புட்டு அறிவு!!” என நெட்டி கழித்தாள் தாமரை.

 

சிவாவையும் ஆதியையும் கெத்தாக திரும்பி பார்த்தாள் பரி.

 

“ஆனா இதுல எதுமே நடக்கல. நீ நிறைய சினிமா பார்த்து கெட்டு போய்ட்ட” என்று பல்பு கொடுத்துவிட்டாள் தாமரை.

 

“ ஹா… ஹா… அஞ்சேகால் அடிக்கு ஒரு cashew nut பார்த்திருக்கீங்களா அண்ணா ? பார்த்ததில்லனா இப்போ பார்த்துகங்க…  “ என்று கை கொட்டி சிரித்தான் சிவா. 

 

‘இந்த நண்டு எல்லாம் சிரிக்கிற அளவுக்கு அவசரப்பட்டுடோமோ’

“ஈஈஈ” என்று சிரித்து வைத்தாள்.

 

“அவ கிடக்குறா மா.. நீங்க சொல்லுங்க” என்றான் ஆதி.

 

மேலும் தொடர்ந்தாள் தாமரை.

நசியனூர் ஜமினின் சம்பந்தம் முடிவு செய்யப்பட்டிருக்க, தமிழ்செல்வியை குணசேகரனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

தாமரை ஒரு சிறு குழந்தை என்று எண்ணி அவளுடைய கருத்தை யாரும் கேட்கவே இல்லை. திருமணம் முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

 

 ஆனால், சரிவர விசாரிக்காததால் ராஜபாண்டியின் குணம் சரி இல்லை என்பது திருமணம் வரை அங்கு எவருக்கும் தெரிய வில்லை. குடி, சீட்டாட்டம் இவை எல்லாம் தான் அவனின் பொழுதுபோக்கு. 

 

அவர்களின் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ முகூர்த்தத்துக்கு கொஞ்சம் முன்பு இந்த விஷயம் தெரியவந்தது.

 

திருமணத்திற்கு வந்திருந்த தூரத்து மாமா உறவான ஒருவர் ராஜபாண்டியைப் பற்றி சொல்லி பட்டீஸ்வரனை கடிந்து கொண்டார்.

 

 தன் தங்கைக்கு அவன் சரியானவன் அல்ல என்று முடிவு செய்த குணா, திருமணத்தை நிறுத்திவிடலாம் என்றார் பட்டீஸ்வரனிடம். தமிழை குணா விரும்புவது தெரிந்த தாமரை, அவர்கள் இருவருக்குமேனும் திருமணம் நடக்கவேண்டும் என்று போராடினாள்.

 

ஆனால் தங்கை இருக்க அண்ணனுக்கு திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் பட்டீஸ்வரன்.

 

 என்ன செய்வது என்ற குழப்பத்துடன் மணமேடையில் குடும்பமே நின்றிருந்த நேரம்… மேடையின் அருகில் நின்று கொண்டிருந்த… குணாவின் நண்பனான சந்திரனை நோக்கி நடந்தாள் தாமரை.

 

இவள் என்ன செய்கிறாள் என்று புரியவில்லை யாருக்கும். 

 

குழப்பத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றனர். 

 

 “என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?” 

 

தாமரை நேரடியாகவே சந்திரனை நோக்கிக் கேட்க, அங்கே பேரமைதி நிலவியது.

 

பட்டீஸ்வரனுக்கும் குணாவுக்கும் அதிர்ச்சி என்றால், சந்திரனுக்கு உலகமே ஒரு நொடி உரைந்தது போன்ற உணர்வு.

 

சந்திரன் குணாவைப் பார்க்க,

“இது என் அண்ணனுக்காக எடுத்த அவசர முடிவுனோ இல்ல தியாகம்னோ நினைக்காதீங்க. இதுல என்னோட சுயநலமும் கலந்து இருக்கு. உங்களை நான் விரும்புறேன். ஆனா அண்ணனோட நண்பன் கிட்ட போய் அதுவும் ஒரு பொண்ணா இருந்துட்டு எப்படி நான் சொல்லுறதுனு தான் கடைசிவரை தயங்கினேன். நான் சுதாரிக்கும் முன்னே, அப்பா வரன் பார்த்துட்டார். அதை மீறவும் என் மனசு இடம் தரல… இப்போ கடவுளா பார்த்து எனக்கு வாய்ப்பு குடுத்துருக்காரு. என் காதலை ஏத்துக்குவீங்களா?” என்று மணகோலத்தில் நின்று யாசித்தாள் தாமரை. 

 

அனைவர் முன்னிலையிலும் தன் காதலைச் சொல்ல தேவைப்பட்ட தைரியம் தாமரையிடம் நிறையவே இருந்தது.

 

 ‘சிறு பெண், இன்னும் குழந்தைத் தனம் மாறாமல் சுற்றுகிறாள் என்று நினைத்த பெண்ணா இவள்!!’ ஆச்சரியமாக இருந்தது குணாவுக்கு.

 

கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்களுக்குள் சலசலக்க தொடங்க, தேவை இல்லாத பேச்சுகள் கிளம்புவதை தடுக்க, எண்ணிய குணா,

“என் நண்பனே எனக்கு மச்சான் ஆனால்… அத விட வேற என்னடா எனக்கு சந்தோஷம்” என்று தன் சம்மதத்தை தெரிவித்தார்.

 

பாட்டீஸ்வரனின் நிலைபாடு என்ன என்று அவரைப் பார்க்க, அவருக்கு இதில் விருப்பம் இல்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

 

 சந்திரனும் ஒரு ஜமினின் வாரிசு தான் என்றாலும், செல்வ நிலையில் தாழ்ந்தவர் எனும் நிலையில் இருப்பவருக்கு தன் பெண்ணைக் கொடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை.

 

“வாழ்ந்து கெட்ட குடும்பத்துல என் பெண்ணை கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை குணசேகரா. அப்பன் ஆத்தாலும் கூட இல்ல உன் சினேகிதனுக்கு. வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம். உனக்கும் வேற பெரிய இடத்துல பெண் பார்க்குறேன்.” என்று பட்டீஸ்வரன் முடித்துவிட்டார்.

 

– இம்சைகள் தொடரும்…

 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!