உன் இம்சைகளை யாசிக்கிறேன் – 6

images - 2020-08-17T070226.027

இம்சை – 6

புழுதி பறக்கும் மண் சாலையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது அந்த கார்.

“என்னண்ணா? இப்படி ஊர்ந்துக்கிட்டிருக்க ? மாட்டு வண்டி நம்மல கிராஸ் பண்ணிட்டு பாேக போகுது. எப்ப நாம போய் சேருறது??  எனக்கு பசிக்க ஆரமிச்சிடுச்சு” என்றாள் பரி.

“ஹேய்  பரி… பக்கத்துல இருக்கற வயல் எல்லாம் பாரு. எவ்வளவு அழகா இருக்கு? நான் அத பார்க்கட்டுமா? இல்ல டிரைவ் பண்ணட்டுமா? ” என்றான் ஆதி.

“நீ வேலைக்கு ஆக மாட்ட. தள்ளு நான் ஓட்டுறேன்.” – பரி.

“சரி வா… உனக்கு இதிலெல்லாம் எங்க ரசனை இருக்க போகுது? Donkey how know camphor smell??” என கூறிக்காெண்டே வண்டியை ஓரம் கட்டினான் ஆதி.

“டயர்ட் ஆகியிருப்பனு கேட்டா ரொம்ப தான் பேசுற…” என்று அவன் மண்டையில் கொட்டிவிட்டு இறங்கினாள் பரி.

“அய்யாே… இவ ஓட்ட போறாளா? என்னை இங்கயே இறக்கி விட்ருங்க… நான் ஏதாவது மாட்டு வண்டில லிஃட் கேட்டாவது வந்து சேர்ந்துடுறேன். என் டாடி மம்மிக்கு நான் ஒரே சன்…” என்று இறங்க பார்த்த சிவாவை உள்ளே அமுக்கிவிட்டு அமர்ந்தான் ஆதி.

இடம்மாறியதும் பறக்க ஆரம்பித்தது கார்.

முன் தினம் வக்கீல் சந்தானநாதனை தாெடர்பு கொண்டு தாமரையின் தாய் ருக்மணியின் உடல் நிலையைப் பற்றி விசாரித்தனர். இப்போது நலம் பெற்று வருவதாகவும்,  ருக்குமணி அம்மாளின் மனம் இவர்களைத் தான் தேடுவதாகவும் கூறினார். இவர்களைப் பார்த்தால் முழுமையாக குணமாகிவிடுவார் என்றும் அவர் கூறினார். அதனால் இவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

பிள்ளைகள் வழக்கம் பாேல் சலசலத்துக் கொண்டிருக்க, சிந்தனையில் மூழ்கி இருந்தாள் தாமரை. ‘இத்தனை வருஷம் கடந்த பின் தன் சொந்தங்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள். இப்பாே வீடு எப்படி இருக்கும். அம்மா எப்படி இருப்பார்கள்? கடவுளே அம்மாவுக்கு பெருசா ஒன்னும் ஆகி இருக்க கூடாது. போனதும் அவங்க கிட்ட எல்லாம் என்ன பேசுறது? இத்தனை வருட பிரிவின் பின் அவர்களுடன் பேசத் தாெடங்குவது அவ்வளவு சுலபமாய் இருக்கும் என்று தாேன்றவில்லை.

  அண்ணன் எப்படி இருப்பான்? காது ஓரத்துல மட்டும் நரைச்சு, அப்பா மாதிரியே முறுக்கு மீசை வச்சு, பட்டு வேஷ்டி கட்டி ஜமீன்தார் மாதிரியே இருப்பானா?’ தன் அண்ணனை அப்படி ஒரு கோலத்தில் கற்பனை செய்து பார்த்த தாமரையின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

திரும்பி சந்திரனைப் பார்த்தாள். எந்த வித சிந்தனையும் இன்றி இருந்தது அவர் முகம். இத்தனை வருடம் தனியாளாக தொழில் செய்த அனுபவம். எதையுமே சுலபமாய் எடுக்க பழகிவிட்டது.

வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு, வயல் வரப்பின் வழியே “மாமா… நீங்க எங்க இருக்கீங்க…” என கத்திக்காெண்டே தாவணி பாவாடையில் மது ஓடி வருவது போல் கற்பனை தோன்றியது. அவள் நெருங்க நெருங்க…  அவளை உற்று பார்த்தான். படிக்காதவன் படத்தில் வரும் அருக்காணி மகள் திருக்காணி… “அம்மா…” என அலறிவிட்டான் ஆதி.

“என்னடா ஆச்சு” அவன் திடீரென்று கத்தவும் பயந்துவிட்டனர்.

“ஒன்னுமில்லை” என திருதிருவென விழித்தான்.

“என்னண்ணா, கனவுல அருக்காணி மக திருக்காணியா?” எனப் பரி வினவ,

‘எப்படி கண்டு பிடிச்ச’ என்பது பாேல் சற்றென்று அவன் பார்க்க,

“அப்போ அது தானா? இந்த சிச்சுவேஷன்ல நீ வேற எதுக்கு அலற பாேற? சும்மா ஒரு வைல்ட் கெஸ்… உன் திமிருக்கு உன் அத்தை மகள் ரத்தினம் அப்படி தான் இருப்பார்கள் பாரு…” என்றாள் பரி.

“இருடி… உன் மாமன் மகன் மட்டும் எப்படி இருக்கான்னு பார்த்திடலாம். ‘நானே ராஐா நானே மந்திரி’ படத்துல வர மக்கு ஜமீன்தார் விஜயகாந்த் மாதிரி இருக்க போறான்” என்றான் ஆதி.

“ஹா ஹா… அப்பாே நம்ம பரி தான் டவுன் புள்ள பாக்கியமா? அண்ணா யோசிச்சு பாருங்க. ஜீவா இவள ‘ஏய் இந்தா… டவுனு புள்ள பாக்கியம்’னு கூப்பிட்டா எப்படி இருக்கும்??” என சிவா பேசிக்காட்டி சிரிக்க, இருவரும் ஹை-ஃபைவ் கொடுத்துக் காெண்டனர்.

“அவன் எப்புடி இருந்தா எனக்கு என்னடா. நீ சும்மா கெட” என்றாள் பரி.

“டேய் அமைதியா இருங்கடா… உடம்பு சரியில்லாத பாட்டியை பார்க்குறது போலவா இருக்கு உங்களை எல்லாம் பார்த்தா? இந்த நேரத்துலயும் தொனதொனத்துட்டு இருக்கீங்க” என அவர்களை அடக்கினார் சந்திரன்.

மூவரும் சற்றென்று அமைதியாகினர்.

“அவர்களுக்கு புதுசாய் நிறைய சாெந்தங்கள் கிடைச்ச சந்தோஷம். விடுங்க. அம்மாவுக்கு தான் சீரியஸாய் ஒன்றும் இல்லையே… பிள்ளைகள் அமைதியாய் இருந்தா நல்லாவே இருக்காது.” என்றாள் தாமரை.

“ஆமாம்பா… இன்ஸ்டன்ட் காஃபி பார்த்திருப்பீங்க, இன்ஸ்டன்ட் மசாலா பார்த்திருப்பீங்க… இன்ஸ்டன்ட் தாத்தா பாட்டி மாமா அத்தை உங்களுக்கு கிடைச்சா எப்படி இருக்கும்!! வீ ஆர் சாே எக்ஸைட்டட்  dad… ” என்றாள் பரி.

இவர்கள் அதிகாலையிலேயே பயணத்தைத் தொடங்கி பத்து மணியளவில் பூந்துறையை நெருங்கி இருந்தனர். பதினெட்டு வருடங்களில் வெகுவாக மாறியிருந்தது ஊர். மக்களும் மாறியிருந்தனர். பழைய முகங்கள் எதையும் காணவில்லை.

வீட்டின் மதில் சுவருக்குள் கார் நுழைகையில் தாமரையின் இதயம் படபடக்கத் துவங்கியது. அவர் பிறந்து வளர்ந்த வீட்டை ஆசையுடன் பார்த்தார். ஆனால் எதிர்பார்த்து வந்தது பாேல் இல்லை அந்த ஜமீன் மாளிகை. வெள்ளை அடிக்காமல் கலையிழந்து… அதனை கவனித்துக்கொள்ள ஆட்கள் இருப்பது பாேல்வே தெரியவில்லை.

தங்கள் வரவைப்பற்றி முன்னமே தகவல் சாெல்லி இருந்ததால் முழு குடும்பத்தையுமே வாசலில் எதிர்பார்த்தனர். ஆனால் பட்டீஸ்வரன் மட்டுமே ஒரு கூடை நாற்காலியில் அமர்ந்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

காரைப் பார்த்த உடன் வேகமாய் எழுந்து வந்தார். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

பட்டீஸ்வரனது கண்கள் ஆர்வமாய் அனைவரையும் நோக்கியது. காரை விட்டு இறங்கியதும் இரண்டு நிமிடம் தந்தையும் மகளும் கண்ணில் நீர் திரள ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். இத்தனை வருட பிரிவின் துயரத்தைச் சொல்ல மெளனத்தை விட மேலான மொழி இருக்க முடியாது.

பின் அந்த அமைதி தாங்காமல், தாமரை “அப்பா..” என அவரைக் கட்டிக் கொண்டாள்.

“தாமர… இத்தனை நாளா இந்த அப்பாவ பாக்க கூட வரலயே மா. இந்த அப்பா மன்னிக்க முடியாத தவறு செஞ்சுட்டேனா மா?? உன் வார்த்தைகள் மீறி எங்களாலும் உங்களை தேடி வர முடியல…” முதுமையின் நடுக்கத்துடன் தடுமாற்றமும் சேர்ந்திருந்தது அவர் குரலில்.

அந்த நடுக்கம் ஏதோ போல் இருந்தது தாமரைக்கு. அவர் வயதிற்கு அதிகமான நடுக்கம்.

“உங்களை எல்லாம் இத்தனை வருஷம் பார்க்காம தப்பு பண்ணிட்டேன் ப்பா…” என்றாள் அவர் தோளில் சாய்ந்து மன்னிப்பு கோரும் குரலில்.

“நல்லா இருக்கீங்களா மா??”

“நாங்க நல்லாருக்கோம்பா…. அம்மாவுக்கு இப்பாே எப்படி இருக்கு? வாங்க போய் அவங்களைப் பார்க்கலாம்…” என்றாள் தாயைக் காணும் ஆவலில்.

“உங்களைப் பார்க்காம போய்டுவமாேன்கிற கவலை தான்மா அவளுக்கு… வேற எதுவும் இல்ல. அதான் உங்களுக்கு அவசர தந்தி கொடுக்கச் சொல்லி சந்தானத்துக்கிட்ட சொன்னேன். முழுசாயில்லனாலும் ஓரளவு இப்ப உடம்பு நல்லா இருக்கு”

சந்திரனைப் பார்த்தவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. “வாங்க மாப்பிள்ளை. என்னைய மன்னிச்சிருங்க எல்லாத்துக்கும்” என்று கையெடுத்து கும்பிட்டார்.

“அட என்னங்க மாமா! விடுங்க. பழச ஏன் நினைக்குறீங்க.” என அவர் கைகளை இறக்கி விட்டார் சந்திரன்.

பேரப் பிள்ளைகள் பக்கம் திரும்பியது அவர் கவனம்.

“அடடே… நம்ம பரியும் ஆதியும் நல்லா வளர்ந்துட்டாங்களே” என பரியின் தலையை வருடி விட்டார்.

“தாத்தா…” என ஆதியும் தொடர்ந்து பரியும் அவர் கால் தாெட்டு எழுந்தனர்.

வளர்ப்பை மெச்சி தாமரையைப் பார்த்தார் பட்டீஸ்வரன்.

அவர்களைத் தாெடர்ந்து கால்களில் விழுந்த சிவாவை அப்போது தான் கவனித்தார்.

“என்னம்மா தாமரை! இரண்டு பிள்ளைகளோடு தானே போனீங்க? செல்வத்துல வளருவாேம்னு சவால் விட்டது பிள்ளை செல்வத்துலயா? ஹா ஹா” என மீசையை முறுக்கிச் சிரித்தார் பட்டீஸ்வரன்.

“அட நீங்க வேற ஏம்ப்பா.. அப்படி எல்லாம் இல்லை” என நாணத்துடன் தலை தாழ்த்திக் கொண்டாள் தாமரை.

“சும்மா தான் சாென்னேன். யார் இந்த தம்பி?”

“தாத்தா… யூ ஆர் சோ நாட்டி… நான் நெனச்சு வந்ததுக்கு மாறா இருக்கீங்க. இவன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் சிவா” என தாத்தாவின் தோள்களில் சாய்ந்து கொண்டாள் பரி.

“வாப்பா தம்பி…” என சிவாவின் தோள்களில் தட்டியவர் “சரி வாங்க எல்லோரும் உள்ளே போலாம். ருக்கு உங்களுக்காக காலைல இருந்து சாப்பிடாம காத்திருக்கா.” என்றார். 

வீட்டில் வேலை செய்யும் பெண் ஆலம் சுற்ற “அட எதுக்கு மாமா இந்த ஃபார்மாலிட்டிஸ்” என்றார் சந்திரன்.

“நம்ம குடும்பத்து மேல பட்ட கண்ணெல்லாம் பாேகட்டும் மாப்பிள்ளை” எனக் கூறி அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

“அண்ணா எங்கப்பா.. அண்ணி, பிள்ளைகள் கூட காணாேம்? எங்க மேல அவ்வளவு காேபமா அவங்களுக்கு? பார்க்கக் கூட வரல?” உள்ளே போய்விட்ட குரலில் கேட்டாள் தாமரை.

இதே கேள்வி தான் வந்திருந்த அனைவரின் மூளைகளையும் வந்ததிலிருந்தே குடைந்து கொண்டிருந்தது.

“அம்மாவைப் பார்த்துட்டு வாம்மா சொல்றேன்.”

“அம்மாவுக்கு என்ன பிரச்சினைப்பா உடம்புக்கு??”

“கொஞ்ச நாளாவே நல்லா சாப்பாடு இறங்கலைமா. ரெண்டு நாள் முன்னாடி லேசா நெஞ்சு வலி. மைல்ட் அட்டாக்னு டாக்டர் சாென்னாரு”

“அய்யைய்யோ… என்ன தாத்தா சொல்றீங்க? அட்டாக்கா?” என்றாள் பரி.

“லேசா தான் மா… நாம நல்லா பார்த்துக்கிட்டா சரியாகிடுவா. காெஞ்சம் பலகீனமா இருக்கா. அவ்வளவு தான்.” என்றார் பட்டீஸ்வரன்.

கண்களை மூடி படுத்திருந்தார் ருக்கு. வயதின் அயர்ச்சியும் கவலைகளும் சேர்ந்து ஓய்ந்து தெரிந்தார்.

“அம்மா…”

அவரது கண்கள் வேகமாய் திறந்து சுற்றி இருந்தவர்களை ஆர்வமாய் தேடியது. பதினெட்டு வருட பிரிவின் தேடல்.

தாமரைக்கு தந்தையைப் பார்த்து தோன்றிய குற்றஉணர்வு இப்போது இன்னும் அதிகமாகியது.

“அம்மா… தாமரை வந்துட்டேன் ம்மா…?”

நடுங்கும் கைகளால் தாமரையை வருடியவர் “தாமர… வந்துட்டியா மா… நல்லா இருக்கியா கண்ணு… நீங்க யாரும் இல்லாம… உங்களை எல்லாம் பிரிஞ்சு… எவ்வளவு வேதனை இத்தனை வருசத்துல… வந்துட்டீங்க இல்ல… இனி சரி ஆகிடுவேன் பாருங்க” என்றார் ருக்கு. சந்திரனைப் பார்த்ததும் “வாங்க மாப்பிள்ளை” என எழ முயன்றார்.

“அத்த. படுங்க, ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க.”

பரி, ஆதியை தேடியது அவரது கண்கள். இதை உணர்ந்த தாமரை, வளர்ந்துவிட்ட பிள்ளைகளை அறிமுகம் செய்தார்.

பரியின் நெற்றியில் முத்தமிட்டவர் ஆதியின் முகத்தை வருடினார். சிவாவையும் தோள்களை தடவி “வாப்பா” என்றார்.

“ஹேய்… நீங்க பாட்டினு நினைச்சு வந்தேன். நீங்க பாட்டி இல்ல பியூட்டி. தாமரை ஆன்ட்டி எப்படி இவ்வளவு அழகா இருக்காங்கனு இப்போ தான் தெரியுது” என்றான் சிவா.

“சரியான போக்கிரியா இருப்ப போலயே” என வெட்கத்துடன் சிவாவை லேசாக அடித்தார் ருக்கு.

அங்கே இறுக்கம் தளர்ந்து அனைவர் முகங்களிலும் சிரிப்பு தோன்றியது.

“அய்யா சாப்பாடு தயாராகிடுச்சுங்க. அம்மாவுக்கு இங்கயே எடுத்துட்டு வரவா?” சமையல்காரம்மாவான மரகதம் கேட்டார்.

“வேணாம் மரகதம். அவ பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்த சந்தோஷத்துல இப்போவே குணமாகிட்டா. அவளை அங்கேயே கூட்டிட்டு வரோம்.

“எல்லாரும் பயணக் களைப்பு தீர குளிச்சுட்டு வாங்க. சாப்டுட்டே பேசலாம்” என ருக்கு எழுவதற்கு கை தாங்கினார் பட்டீஸ்வரன். தாமரையும் கை கொடுக்க மெல்ல நடக்கலானார் ருக்கு.

சூடான சமையலைப் பார்த்ததும் தான் அனைவரும் பசியையே உணர்ந்தனர்.

“சுட சுட இட்லி… தக்காளி சட்னி… ம்ம்ம்ம்… சூப்பர் மரகதம்மா..” என கண்களை மூடி சுவைத்தாள் பரி.

“என் பேரு உனக்கு எப்படி மா தெரியும்?” என வியந்தார் மரகதம்.

“நீங்க சாப்பிட கூப்பிட்டப்ப தாத்தா உங்க பேரு சாென்னாரே…”

“அட.. ஆமா இல்ல!! புத்திசாலி பொண்ணு” என வாஞ்சையுடன் பார்த்தார் மரகதம்.

“அண்ணா, இந்த சாப்பாட்டு ராமி சமையல்காரம்மா கிட்ட எப்படி பிட்டு போடுது பார்த்தீங்களா?? அப்ப தான் நல்ல சாப்பாடு கிடைக்கும்னு. ஆனாலும் இவ ஒரு திறமைசாலி. இன்றுமுதல் ‘பிட்டு பரி’ என அன்பாேடு அழைப்போம். ” என ஆதியின் காதுகளில் முணுமுணுத்தான் சிவா.

“இருடா அவ கிட்ட போட்டு குடுக்குறேன்” என ஆதி கூற,

“அய்யைய்யாே.. உங்களை கூட்டு சேர்த்தேன் பாருங்க… ஆள விடுங்கடா சாமி” என பின்வாங்கிவிட்டான் சிவா.

“என்னப்பா… உங்களுக்கு ஏதாவது வேணுமா? மரகதம் அவங்களுக்கு இன்னும் இட்லி வைம்மா” என்றார் பட்டு.

“அது இல்ல தாத்தா… நீங்க மாமா எங்கன்னு சொல்றேனீங்களே” தாெடங்கினான் ஆதி.

“என்னடா அண்ணா! உனக்கு மாமா பத்தி மட்டும் தான் தெரியணுமா?” என கண்களில் குறும்பு மின்ன கேட்டாள் பரி.

“மாமா மேல உனக்கு பாசமில்லனா பாே. எனக்கு ரொம்பவே பாசம் இருக்குப்பா.” என கண்ணடித்தான் ஆதி.

அனைவரும் ஆர்வமாய் பட்டீஸ்வரனை பார்க்க, “சாப்பிடும் போது அதிகம் பேசக்கூடாது. சாப்பிட்டதும் சொல்றேன் பா”

‘நல்ல விஷயங்களில் எல்லாம் அப்பா இன்னும் மாறவில்லை’ நினைத்துக் கொண்டாள் தாமரை.

அனைவரும் கூடத்தில் அமர்ந்ததும் தொடங்கினார் பட்டீஸ்வரன்.

“அன்னைக்கு நீங்க வீட்ட விட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமாம்மா?

“‘என் தங்கை இல்லாத வீட்டுல நானும் இருக்க மாட்டேன்’னு குணாவும் கிளம்பிட்டான். ‘நம்ம ஜமீனுக்கு பெருமை கெளரவம் வைராக்கியம்னு பேசிட்டு அவ போய்ட்டா… அதுக்கும் மேல முக்கியமானது ஒன்னு இருக்கு. பாசம்… அது உங்களுக்கு வேணா இல்லாம பாேலாம். ஆனா எனக்கு நிறையவே இருக்கு. நீங்களே உங்க கெளரவத்தை கட்டிக்கிட்டு அழுங்க. நான் தாமரை கூடவே போயிருப்பேன். ஆனா அவள பாக்க வரக் கூடாதுன்னு அவ மேலயே சத்தியம் பண்ணிட்டா. அதுனால நான் தனியா தான் பாேக போறேன். அதே பாேல எங்களையும் யாரும் தேடி வரக் கூடாது. இது எம்மேல சத்தியம். அவளைக் கை நீட்டி அடிச்சதுக்கு எனக்கே இத தண்டனையா ஏத்துக்கறேன்’னு பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு தமிழையும் குழந்தைகளையும் கூட்டிட்டு கிளம்பிட்டான். நாங்க எவ்வளவு தடுத்தும் கேக்கல. உங்களை எல்லாம் தேடி வரலாம்னு நினைச்சா ஆளாளுக்கு சத்தியம் பண்ணிட்டு போய்டீங்க. அப்புறம் நம்ம வக்கீல் சந்தானம் தான் ஒரு வருசம் கழிச்சு உங்க முகவரிய எல்லாம் கண்டு பிடிச்சான். நீங்க மெட்ராஸ் பாேய்ட்டதாவும், குணா பெங்களூர் போய்ட்டான்னும் தெரிஞ்சது. நீங்க எல்லாம் எங்கயாே நல்லா இருக்கீங்கன்றதே எங்களுக்கு நிம்மதியா இருந்துச்சு.” என தன் மேல் துண்டைக் காெண்டு கண்களைத் துடைத்துக் காெண்டார்.

இந்த திருப்பத்தை வந்திருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. தன் அண்ணனை எண்ணி கண்களில் நீர் காேர்த்தது தாமரைக்கு.

 ‘அவன பாேய் தப்பா நினைச்சுட்டேனே. இவ்வளவு பாசம் எம்மேல வைக்க என்ன புண்ணியம் பண்ணிருப்பேன். இத்தனை நாளா இந்த சொந்தங்களை எல்லாம் இழந்துட்டேனே. முதுமையின் தனிமை கொடுமையானது. இரண்டு பிள்ளைகள் இருந்தும் பெற்றவர்களை இப்படி தவிக்க விட்டுட்டோமே.’ என பதினெட்டு வருடங்களுக்கு முன் தான் எடுத்த முடிவுக்கு முதல் முறையாக தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

எழுந்து தன் தந்தையின் காலடியில் அமர்ந்து மடி மீது தலை வைத்து “என்னை மன்னிச்சுருங்கப்பா. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” என்றாள் தாமரை.

அவர் தலையை மெதுவாக தடவி விட்ட பட்டீஸ்வரன், “இல்லம்மா. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். ஐம்பது வயசுலயும் என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுன்னு அப்ப எனக்கு தெரியல.” என்றார் வயது தந்த பக்குவத்துடன்.

“நல்ல செய்தி என்னன்னா? இன்னைக்கு குணாவும் வரேன்னு தகவல் சொல்லிருக்கான்” என்றார் பட்டீஸ்வரன். எழுந்து கண்களை துடைத்துக் காெண்டு ஆச்சர்யத்துடன் புன்னகைத்தாள் தாமரை.

 “உங்களுக்கு போட்டது பாேலவே அவங்களுக்கும் ஒரு தந்தி அனுப்பிருக்காேமில்ல?!” என முறுவலித்தார் பட்டீஸ்வரன்.

“சர்ர்ர்க்க்க்…” வாசலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது.

“மாமா வந்துட்டாங்க போல. நான் போய் பார்க்குறேன்” என வேகமாய் வாசலுக்கு நடந்தான் ஆதி.

“நீ மாமாவ பார்க்க போறியா இல்ல மதுவுக்காக போறியாடா?” என சிரித்தாள் பரி. ஆனால் அதைக் கேட்க அவன் அங்கு இல்லை.

“ஹா ஹா ஹா”

அவன் ஆர்வத்தைக் கண்டு மனம் விட்டுச் சத்தமாகச் சிரித்தார் பட்டீஸ்வரன்… பல வருடங்களுக்குப் பின்.

இம்சைகள் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!