உன் காதல் என் தேடல்

தேடல் – 13

 

அபிநந்தன், மதிநிலாவின் உண்மை காதல் அந்த கிராமத்தின் ஆறு, குளம், கோயில், வயல்வெளி என்று அனைத்து இடங்களிலும் அழகாக வளர்ந்தது.

 

நந்தன் தன்னை மறந்தான். தன் அந்தஸ்தை மறந்தான். அனைத்தையும் மறந்து தன் மனம் முழுவதிலும் தன் மதியை மட்டும் நினைத்து வாழ்ந்தான். மதிக்கு உலகமே அவனாகிப் போனான். அவனைத் தாண்டி அவள் நிழல் கூட விழாத அளவு அவனுடன் ஒன்றிப் போனாள். இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்து கல்யாணம், குழந்தை, பேரன், பேத்தி கல்யாணம் என்று ஒரு நிறைவான வாழ்க்கை கனவிலேயே வாழ்ந்தனர்.

 

இளம் தென்றல் வீசும் அந்தி சாயும் வேளையில் தன்னவள் மடியில் கண்மூடி நந்தன் படுத்திருக்க, அவன் தலைமுடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள் அவன் மனதின் மதி.

 

“அபி..”

 

“ம்ம்ம்”

 

“ஓய் அபி” என்று அவள் அவனை உலுக்க,

 

“சொல்லுடி”

 

“நா உன் கிட்ட பேசணும். கொஞ்சம் எந்திரியேன்”.

 

“அதெல்லாம் முடியாது. எது சொல்றதா இருந்தாலும் இப்படியே தலையைக் கோதிக்கிட்டே சொல்லு” என்றவன் மீண்டும் அவள் கையை எடுத்து தன் தலைமீது வைத்துக் கொள்ள,

 

“அபி” என்று அவள் மறுபடியும் இழுக்க,

 

“ஏய் என்னடி? அப்போபுடிச்சு அபி அபின்னு ஏலம் போட்டுட்டு இருக்க? எதுவா இருந்தாலும் சொல்லித் தொலடி”

 

“பாட்டி எனக்கு மாப்புள்ள பாக்குது அபி” என்றது தான், பட்டென அவள் மடியில் இருந்து எழுந்தவன். “என்னடி சொல்ற? உனக்கு இப்ப என்ன வயசாச்சினு இப்ப அந்தக் கெழவி உனக்கு மாப்புள்ள பாக்குது” என்றவன் முகத்தில் அப்படி ஒரு தவிப்பு.

 

“ஓய்! எனக்கு பதினேழு வயசு நடக்குது மறந்துட்டியா?”

 

“அதெல்லாம் நீ சொல்லாவே வேணாம். உன்னப் பாத்தாலே தெரிஞ்சிடும்” என்று குறும்புக் குரலில் அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு மாதிரி பார்த்துச் சொல்ல.

 

“போ டா முட்டகண்ணா! உன் கொள்ளிக் கண்ணை அந்த பக்கம் திருப்பு” என்று அவன் தாடையைப் பிடித்து திருப்பியவள், “பதினேழு வயசுப் பொண்ணை இவரு லவ் பண்ணுவாரு அது தப்பில்ல. ஆனா, எங்க பாட்டி அதே பொண்ணுக்கு மாப்புள்ள பாத்த அது தப்பாம். என் பாட்டி கெழவியாம்” என்று அவள் முணுமுணுக்க.

 

“தப்பு தான்டி, என் நிலாவுக்கு வேற மாப்புள்ள பாக்குறது தப்பு தான். சரி இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நீ மேல படிக்கத் தானா ஆசப்பட்ட?”

 

“ஆமா அபி, எனக்கு மேல் படிக்கத் தான் ஆச. ஆனா, உனக்கே தெரியும். மாமாக்கு இப்பவே இருபத்தி ஒன்பது வயசு ஆகுது. என் அம்மா செத்த அப்றம் பாட்டியும், மாமாவும் தான் எனக்கு எல்லாம். மாமாக்கு நான்னா ரொம்ப உசுரு. செத்துப்போன அது அக்காவ என் முகத்துல பாக்குறேன்னு அடிக்கடி சொல்லும். அவ்ளோ பாசம் எம்மேல. எங்க அதுக்கு கல்யாணம் முடிஞ்சு வர பொண்ணு மூலமாக எனக்கு எதும் பிரச்சனை வருமோன்னு பயந்தே இவ்ளோ நாள் கல்யாணம் வேணாம்னு தள்ளிப் போட்டுட்டே வந்திடுச்சு. பாட்டி அது காலம் இருக்கும் போதே, அவருக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி பாக்க ஆசப்படுது. ஆனா, மாமா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம அது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு. அதான் பாட்டி எனக்கு கல்யாணம் செய்யப் பாக்குது” என்று அவள் குடும்பச் சூழ்நிலையைச் சொல்லி முடிக்க.

 

அபிக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“என்ன அபி பேசாம இருக்க? ஏதாவது சொல்லு”? என்று தவிப்போடு கேட்க,

 

“அததான்டி யோச்சிட்டு இருக்கேன். நா வேணும்னா உன் பாட்டி, மாமா கிட்ட நம்மள பத்தி பேசவா?”

 

“எதுக்கு பாட்டி வெளக்கமாத்த எடுத்து என்னை வெளுக்கவா? அதெல்லாம் சரி வாரது அபி.”

 

“அப்ப இதுக்கு என்ன தான் வழி”? என்று தலையைப் பிடித்த நந்தன் இழுத்து மூச்சு விட்டு, “சரி மதி இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. நா உடனே எங்க வீட்ல நம்மள பத்திச் சொல்லி முறைப்படி உன்ன வந்து பொண்ணு கேக்குறேன். ரெண்டு வீடும் சம்மதிச்சா இப்போதைக்கு நிச்சயத்த முடிச்சிட்டு நீ உன் படிப்ப கண்டின்யூ பண்ணு. உன் படிப்பு முடிஞ்சதும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவனை இயலாமையோடு பார்த்தாள் மதி.

 

“இதெல்லாம் நடக்குமா அபி? உங்கப்பா பத்தி இந்த ஊருக்கே தெரியும். அவர் என்ன உங்க வீட்டு மருமகளா ஏத்துப்பாரா”? என்றவள் கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது.

 

அவளை இழுத்துத் தன் மடிமீது போட்டுக் கொண்ட நந்தன் “அவர் சம்மதிச்சா, படிப்பு முடிஞ்சு நம்ம கல்யாணம். இல்லாட்டி நம்ம கல்யாணத்தை முடிச்சிட்டு நீ என் பொண்டாட்டிய படிக்கப் போ. இது ரெண்டுல எது நடந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். எனக்கு என்னோட மதி என் கூடவே இருந்தா போதும். உன் படிப்பு முடிஞ்சதும் முதல்ல அழகா உன்னை மாதிரியே ஒரு குட்டி பொண்ணு, அப்றம் ஒரு குட்டி பையனை பெத்துக்கிட்டு ஹேப்பியா செட்டில் ஆகிடலாம்” என்று கண் சிமிட்டிச் சொல்ல.

 

மதி வெட்கத்தில் முகம் சிவந்தவள், “அதெல்லாம் இல்ல, எனக்கு முதல்ல பையன் தான் வேணும். நா நம்ம பாப்பாக்கு பேர் கூட வச்சிட்டேனே” என்று வெட்கம் கலந்த சிரிப்போடு சொல்ல “ஏய் மதி நெஜமாவா சொல்ற?” என்றவனுக்கு தலையாட்டி ஆமாம் என்றவள் வெட்கத்தில் தலைகுனிய.

 

“நா கூட நம்ம பொண்ணுக்கு ஒரு பேர் செலக்ட் பண்ணிட்டேன்டி” என்று அவனும் ஆனந்தத்தில் குதித்தான்.

 

 

“என்ன பேர் அபி? சொல்லு அபி” என்று அவள் கண்கள் ஜொலிக்க ஆவலாகக் கேட்க “முடியாது, நீ முதல்ல சொல்லு. நம்ம பையனுக்கு என்ன பேர் வைக்கப் போற?” என்று ஆசையாகக் கேட்டவனை நேருக்கு நேர் பார்க்க முடியாது திரும்பி முதுகைக் காட்டி நின்றவள் “துருநந்தன்” என்று மெதுவாக சொல்ல.

 

அவளைப் பின்னிருந்து அணைத்து அவள் காதில் தன் மீசையை வைத்து உரசியவன் அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை ஒட்டி உறவாட வைத்து “பேர் சூப்பரா இருக்குடி” என்க அவன் அருகாமையில் அவன் மதி மதிமயங்கி நின்றவள் இடையில் அவன் கைகள் ஊர்வலம் போகப் பார்க்க.

 

“ஓய் திருடா, கைய வச்சிட்டு சும்மா இருடா” என்று சொன்னவள் குரலில் அவன் ஸ்பரிசம் தந்த மயக்கம் தான் அதிகம் இருந்தது.

 

“அபி நீ நம்ம பாப்பாக்கு என்ன பேர் வச்சிருக்க?” என்று கேட்வளை திரும்பித் தன் முகம் பார்க்க வைத்தான் நந்தன்.

 

“என்னோட வாழ்க்கையில ரெண்டு நிலவுடி. ஒன்னு என் உயிரின் பாதியான என் மதிநிலா. இன்னொன்னு என் உயிரில் இருந்து இந்த உலகத்துக்கு வரப்போற முகில்நிலா” என்றவனைக் காதலாகப் பார்த்தவள் கண்களில் காதலோடு கண்ணீரும் வழிந்தோட, அவள் இமைகளில் முத்தம் வைத்த நந்தன் “நீ அழக்கூடாது மதி. என்னோட மதி எப்பவும் அழவே கூடாது” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

 

அவர்கள் இருவருக்கும் இனிவரும் காலம் முழுதும் கண்ணீர் மட்டுமே அவர்களுக்குத் துணையாக இருக்கப் போகிறது என்று அறியாமல் ஒருவர் மற்றவர் கை அணைப்பில் மயங்கி இருக்க, அவர்களைச் சுற்றி இருந்த இயற்கையோடு, பார்க்கக் கூடாத ஒரு ஜோடி கண்களும் அவர்களை பார்த்து விட்டது.

 

தனக்கு முக்கியமான வேலை இருப்பதால், நெருங்கிய சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணத்திற்கு தன் சார்பாக தன்‌ மனைவியையும், அபிநந்தன் மற்றும் அவன் தம்பி, தங்கைகளை அந்தக் கல்யாணத்திற்குப் போகச் சொல்லி இருந்தார் முத்துவேல்.

 

மதியைப் பார்த்து ஒரு வாரம் ஊருக்கு சொல்லும் தகவலைச் சொன்ன நந்தன், “நான் திரும்பி வந்ததும் நம்ம காதல் விவகாரத்தை அப்பாகிட்ட சொல்லிடுவேன் மதி. அவர் சொல்ற வார்த்தையை பொறுத்து தான் நம்ம முடிவு. சோ! நீ எதுக்கும் ரெடி இரு” என்றவன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, “ஜாக்கிரதையா இரு மதி. மாங்கா திருடப் போகாத. சின்னப் பசங்க கூட சேர்ந்து தெருல ஓடிப் புடிச்சு வெளயான்டனு தெரிஞ்சுது தொலச்சிடுவேன். நல்லா சாப்புடு, உடம்ப பாத்துக்கோ, ஒழுங்க படி” என்று தன் அன்பை வார்த்தைகளில் பொழிந்தவனுக்கு மட்டும், அது தான் அவன் மதியின் மதிமுகத்தை தான் கடைசியாகப் பார்ப்பது என்று தெரிந்திருந்தால் அவளை விட்டுச் சென்றிருக்க மாட்டானோ? என்னமோ? போகும் தன் உயிரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதிக்கு இதுதான் அவனைக் கடைசியாகப் தான் பார்ப்பது என்று தெரிந்து, அவனை தன் விழி வழி தன் இதயத்தில் நிரப்பியவள் முகத்தில் அடித்துக் கொண்டு கதறி அழுதபடி அப்படியே கீழே அமர்ந்து விட்டாள்.

 

ஒரு வாரம் கழித்து ஊருக்குத் திரும்பி வந்த அபிநந்தன் மதியைப் பார்க்கப் போக, அங்கு அவனுக்குப் பேரிடி காத்திருந்தது.

 

மதிக்கும், அவள் தாய்மாமன் சேதுராமனுக்கும் கல்யாணம் முடிந்து அந்த ஊரை விட்டு சென்றுவிட்டனர் என்று தெரிந்த அடுத்த நொடி அவன் இதயம் சுக்குநூறாக உடைந்து சில்லு சில்லாக சிதறிவிட்டது.

 

நடந்த அனைத்திற்கும் பின்னால் தன் தந்தை தான் இருக்கிறார் என்று தெரிந்த நந்தன் கொலைவெறியுடன் தந்தையிடம் சென்றவன் “என்னோட மதி எங்க? அவள என்ன செஞ்சிங்க? அவள எங்க ஒளிச்சு வச்சிருக்கீங்க? இதுக்கு தான் கல்யாணத்த சாக்கா வச்சு என்னை ஊருக்கு அனுப்புனீங்களா”? என்று முத்துவேலில் சட்டையைப் பிடித்து உலுக்க.

 

“ஆமாடா நீ போயும் போயும் நம்மகிட்ட வேலை பாத்தவன் பொண்ண லவ் பண்ணுவ. நா அதுக்கு மண்டய ஆட்டணுமா? நீ பண்ண வேலையால் என் அந்தஸ்து, கௌரவம் எல்லாம் கெட்டுப் போச்சுடா‌?” என்றவரை முறைத்த நந்தன் “அப்பா… என் பொறுமையச் சோதிக்காதீங்க. மரியாதையா மதி எங்கனு சொல்லுங்க” என்றவன் கோபத்தின் எல்லையைக் கடந்து நின்றான்.

 

“கவலைப்படாதடா. அவ இன்னும் சாகல. நா அவள கொல்ல தான் நெனச்சேன். அதுக்குள்ள அவ அம்மாச்சி என் கால்ல விழுந்து கெஞ்சி பேத்திய விட்டுடா சொல்லி கேட்டுச்சு. நானும் ஒரு நாள் டைம் குடுத்தேன். அது அடுத்த நாளே அவளுக்கு அவ மாமன் சேதுவ கட்டி வச்சு, இந்த ஊர விட்டே கூட்டிட்டுப் போய்டுச்சு. அந்தக் கெழவிக்காக நா அவளுக்குப் போட்ட உயிர் பிச்சையை, நீ கெடுத்துடாத. நீ அவள தேடிப் போனேன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சுது, அவ எங்கிருந்தாலும் தேடிப் புடிச்சு அவள வெட்டிப் புதைச்சிடுவேன்” என்று மிரட்ட நந்தன், தந்தையை வெறித்துப் பார்த்தவன். அவர் சொன்னதைச் செய்வார் என்று நன்றாக தெரிந்ததால் எங்கிருந்தாலும் மதி உயிரோடு இருந்தால் மட்டும் போதும் என்ற முடிவோடு அமைதியாகி விட்டான்.

 

குடும்பம் மொத்தமும் அபிநந்தனைச் சூழ்ந்திருக்க முகில்நிலா கண்களை அழுத்தி மூடித்திறந்தவள் “அப்போ அம்மாக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் நீங்க அவங்கள தேடி வரலயா”? என்று கேட்க நந்தன் ஆம் என்று தலையாட்டினார்.

 

“ம்ஹூம்” என்று அசட்டையாகச் சிரித்த நிலா, “அதெப்படி சார் நீங்க ரெண்டு பேரும் யோச்சிக்கிறது கூட ஒரே மாதிரி இருக்கு. அவங்களும், உங்கள தேடி வந்தால் உங்க அப்பா உங்கள புள்ளைன்னு கூட பாக்காம கொன்னுடுவேன்னு சொன்னதுக்குப் பயந்து தான் உங்கள தேடி வராமலே இருந்துட்டாங்க. அவங்க எப்பவும் உங்களப் பத்தி மட்டும் தான் யோசிச்சு இருக்காங்க. நீங்களும் இன்னும் அவங்கள மறக்கல இல்ல”? என்று கேட்பவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நந்தன் அவளைப் பார்த்தார்.

 

“நீங்க சொல்ல வேணாம் சார். அன்னைக்கு என்னோட பேரைக் கேட்டதும் உங்க முகத்துல தெரிஞ்சுதே ஒரு தவிப்பு அந்த தவிப்பும், இப்ப நா அவங்க பொண்ணுன்னு சொன்னப்ப நீ என் மதியோட பொண்ணான்னு கேட்டீங்களே அதுலயே தெரிஞ்சிடுச்சு சார். உங்க மனசுல இன்னும் என் அம்மா வாழ்ந்துட்டு  இருக்காங்கன்னு” என்றவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

 

“இப்ப மதி? எங்… எங்க இருக்கா நிலா”? என்ற நந்தன் குரலில் அத்தனை எதிர்பார்ப்பு.

 

“ம்ம்ம் இருக்காங்க சார். உயிரோட தான் இருக்காங்க. நீங்க எங்க விட்டுட்டு போனீங்களோ அங்கயே தான் இருக்காங்க. இன்னும்…” என்று அந்த ‘இன்னும்மை’ அழுத்திச் சொல்ல அபிநந்தன் உட்பட அனைவருக்கும் பேரதிர்ச்சி.

 

“உங்கப்பா சொன்னதுல பாதி உண்மை. பாதி பொய். பாட்டி அப்பா, அம்மாவை ஊரைவிட்டு அழைச்சிட்டு போனது நிஜம்தான். ஆனா,”… என்றவள் இதழ்களைப் பல்லால் கடித்தபடி தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள யாழினி அவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

அபிநந்தன் பொறுமை இழந்தவர் நிலா தோளைப் பிடித்து உலுக்கி “சொல்லு நிலா, மதிக்கு என்ன ஆச்சு?

இப்ப அவ எங்க? எது உண்மை எது பொய்? நா விட்டுப்போன எடத்துல தான் இப்பவும் இருக்கானா? அதுக்கு என்ன அர்த்தம்? அவ என்னை உயிருக்கு உயிரா விரும்புனா. என்னோட அப்பா அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னத நா ஒரு பர்செண்ட் கூட நம்பல. எனக்கு நல்லா தெரியும். அவகிட்ட நா சத்தியம் வாங்கி இருந்தேன். அப்டி ஒரு சத்தியம் வாங்குனது தான் நா என் வாழ்க்கையில செஞ்ச பெரிய தப்பு. மதி சத்தியம் பண்ண உயிரே போனாலும் அத மீற மாட்டா. அதுவும் சேது போய் அவள கல்யாணம்… அதுக்கு வாய்ப்பே இல்ல. அப்டின்னா நீ… நீ யாரு?” என்று நந்தன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக.

 

நிலா உணர்ச்சியற்ற சிரிப்போடு அவரைப் பார்த்தவள் “நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் இந்த டைரியில இருக்கு சார்” என்றவள். இன்றோடு எல்லா உண்மையையும் நந்தனிடம் சொல்லிவிடலாம் என்ற முடிவோடு தன் கையோடு கொண்டு வந்த மதிநிலாவின் பழைய டைரிகளை மொத்தமாக நந்தனிடம் கொடுக்க அதில் ஒன்றை எடுத்துப் பார்க்க அது நந்தனும், மதியும் பிரிந்த வருடத்திற்கு உரிய டைரி. அதைப் பிரிந்து முதல் பக்கத்தை பார்த்த நந்தனின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. பதினெட்டு வயது நந்தனை பென்சிலில் அப்படியே அச்சு அசலாக வரைந்து வைத்திருந்தாள் அவரின் மதி.