உன் காதல் என் தேடல்

தேடல் – 14

 

அபிநந்தனை கல்யாணத்தைச் சாக்காக வைத்து ஊருக்கு அனுப்ப ப்ளான் போட்ட முத்துவேல், மதிநிலாவின் பாட்டி ராஜத்தையும், அவள் மாமன் சேதுராமனையும் தன் தோட்டத்திற்கு அழைத்திருந்தார்.

 

“என்ன சேது உன் அக்கா பொண்ணுக்கு நல்ல பெரிய எடமா பாத்துப் பழகு. அப்ப தான் வசதியா வாழ முடியும்னு சொல்லிக் குடுத்து என் பையனோட பழக விட்டீருக்கீங்க போல நீயும் உன் அம்மாவும்”? என்று வார்த்தையில் விஷத்தைத் தடவி கத்தியாய் வீசியவர், “உன் பேத்திக்கு அல்ப ஆயுசுல போகணும்னு எழுத்தி இருக்கு போலயே” என்று மிரட்ட துடித்துப் போயினர் மதியின் பாட்டியும், மாமனும்.

 

“அய்யா, அவ சின்னப் பொண்ணு. வெவரம் தெரியாம இப்டி புத்தி கெட்டதனமா செஞ்சிட்டா. அவள விட்டுடுங்கய்யா. நாங்க இந்த ஊர விட்டே போய்டுறோம்” என்று மதியின் பாட்டி கெஞ்ச,

சேது “ஆமாங்கய்யா நாங்க நாளைக்கே இந்த ஊர விட்டுப் போய்டுறோம். அவ இனி உங்க பையன் இருக்க தெச பக்கம் கூட வரமாட்டாய்யா” என்று கைகூப்பி வணங்கிக் கேட்டனர்.

 

“நீங்க இந்த ஊரவிட்டு போய்டுவீங்க சரி. ஆனா, என் புள்ள அவளத் தேடி வருவானே? அப்ப என்ன செய்வீங்க? அதெல்லாம் சரியா வராது. அவ உயிரோட இருக்க வரை என் புள்ள அவளை தேடி வரத்தான் செய்வான். இதுக்கு ஒரே வழி அவ சாகனும்” என்று இரக்கம் இல்லாமல் சொல்ல.

 

“இல்லங்கய்யா, அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது. நா…நா வேணும்னா! அவள என் புள்ளைக்கே கட்டிவச்சிடுறேன். அதுக்கு அப்றம் உங்க பையன் அவள தேடி வரமாட்டாருங்கய்யா. தயவு பண்ணி என் பேத்திய விட்டுடுங்க” என்று ராஜம் பாட்டி கெஞ்ச.

 

கொஞ்ச நேரம் யோசித்த முத்துவேல் “சரி இன்னைக்கு என் புள்ள ஊருக்குப் போறான். அதுக்கு முன்னையே இதுக்கு ஒரு முடிவு கட்றேன்” என்றவர் தன் வேலைக்காரனை அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டு, அப்படியே மதிநிலாவை அழைத்து வரச் சொல்ல மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் முத்துவேல் முன் நடுங்கிக் கொண்டு நின்றாள் மதிநிலா.

 

தன் கையில் இருந்த மஞ்சள் கிழங்கு கட்டிய தாலிக் கயிறை ராஜத்திடம் தந்த முத்துவேல், “இப்பவே என் கண்ணு முன்னையே உன் பையனை அவ கழுத்துல தாலி கட்டச் சொல்லு” என்ற தான்… மதிக்கு உயிரே போய் விட்டது. “பாட்டி வேணா பாட்டி. எனக்குக் கல்யாணம் வேணாம் பாட்டி” என்று கதறி துடிக்க எங்கு பேத்தியின் உயிர் போய் விடுமோ என்று பயந்த ராஜம் “வாய மூடுடி. இதெல்லாம் உன்னால வந்த வினை தான். ஏன்டி உன் புத்தி இப்படிப் போச்சு. நீ அவுத்துவுட்ட கடா மாதிரி உர சுத்தும் போதே நா உன் கால உடச்சு வீட்டுல போட்டிருந்த இப்படி எல்லாம் நடந்திருக்காது. நா உன்னைக் கண்டுக்காம விட்டதுக்குப் பலன். இப்ப உன் உசுருக்கே ஆபத்து வந்திடுச்சே. இதுக்குமேல நீ ஒரு வார்த்த பேசாத” என்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர் சேது கையில் தாலியைக் கொடுத்து மதி கழுத்தில் கட்டச் சொல்ல சேது ஒரு நிமிடம் மதியை ஆழ்ந்து பார்த்து கண்மூடி ஆழ மூச்செடுத்தவன் தாலியை மதி கழுத்தில் கட்டி முடித்தான்.

 

“சரி நீங்க மூனு பேரும் இன்னைக்கு ராத்திரியே இந்த ஊரைவிட்டு போய்டனும். நா என் புள்ளை கிட்ட அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அவ இந்த ஊர விட்டே போய்டான்னு சொல்லிடுறேன். அதையும் மீறி, அவன் உன் பேத்திய தேடி வந்தாலும் சரி, நாளப்பின்ன இவ என் புள்ளைய தேடி வந்தாலும் சரி, புள்ளைன்னு கூடப் பாக்காம நானே அவனைக் கொன்னுடுவேன். அவன் பொணத்த தான் இவ பாக்க வேண்டி இருக்கும்” என்ற வார்த்தையைக் கேட்டு சேது தாலி கட்டியதில் கல்லாகி உயிரற்று நின்ற மதிக்கு உயிர் வர அவள் இதயமே வெடித்து விடும் போல் வலித்தது. “இல்ல இல்ல என் அபிய ஒன்னும் பண்ணாதீங்க! நா…நா போய்டுறேன். அபிய தேடி வரமாட்டேன்” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழ, முத்துவேல் குரூரமாகச் சிரிந்தவர் “மூனு பேரும் இங்கிருந்து போங்க” என்று விரட்டி விட்டார்.

 

அபிநந்தன் ஊருக்கு போவதை மதியிடம் சொல்ல வர. ‘மாமா கட்டிய தாலியோடு நான் அபி கண்ணு முன்னாடி நின்னா கண்டிப்பாக அபி சும்மா இருக்க மாட்டான். இந்தத் தாலியா அறுத்து ஏறிஞ்சிட்டு என்னை அவன் கூட வர சொல்லுவான். அப்படி எதும் நடந்தா அந்த முத்துவேல் கண்டிப்பா என் அபிய கொன்னுடுவாரு. இல்ல இல்ல என் அபிக்கு ஒன்னும் ஆகக் கூடாது’ என்று மனதில் தனக்குத் தானே சொல்லக் கொண்டவள், தாவணியை இழுத்துப் போர்த்தித் தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிறை மறைத்து விழியில் வலியோடும், இதழில் சிரிப்போடும் நந்தனை ஊருக்கு வழி அனுப்பி வைத்தாள்.

 

அபிநந்தன் ஊருக்குச் சென்ற அன்றே சேது தன் தாயையும், மதியையும் கூட்டிக் கொண்டு அன்றைய இரவே வேறு ஊருக்கு சென்றுவிட்டான்.

 

அது ராஜம் பாட்டியின் தோழியின் ஊர். அவர் உதவியோடு ஒரு வீடெடுத்து அங்கேயே தாங்கினர் மூவரும். சொந்த ஊரை விட்டு வந்த ஒரு வாரத்தில் சேதுவுக்கு அந்தப் புது ஊரில் ஒரு நல்லா வேலை கிடைத்து. குடும்பம் ஒரு வழியாக அந்த ஊரில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது. அங்கு யாருக்கும் இவர்களைப் பற்றித் தெரியாது என்பதால் மூவரும் ஒரளவு நிம்மதியாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் சேது, மதியைத் தன் அக்கா மகள் என்று மட்டும் சொல்லி வைத்தான்.

 

மதிக்கு அபி நினைவாகவே இருந்தாலும் எங்க தான் அவனைத் தேடிச் சென்றால் அவன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தவளுக்குச் சத்தம் வராமல் வாய் மூடி அழ மட்டுமே முடிந்தது.

 

நாட்கள் அதன் போக்கில் நகர ராஜம் பாட்டி மெதுவாக மதியிடம் சேதுவைப் பற்றிய பேச்சை எடுத்தார்.

 

“இன்னு எத்தன நாளுக்கு நீ இப்படியே இருக்கப் போற? சரியோ தப்போ உன் கழுத்துல சேது தாலி கட்டிட்டான். இனி நீதான் அவனுக்குப் பொண்டாட்டி, அவன் தான் உனக்குப் புருஷன். நடந்ததையே நெனச்சிட்டு இருக்காம ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற வழிய பாருங்க. அந்தப் பையன் நந்தனை தான் நெனச்சிட்டு இருப்பேன்னு சொல்லி அநியாயமா என் புள்ளை சேது வாழ்க்கையை நாசம் பண்ணிடாதடி” என்று பாட்டி கத்திக்கொண்டிருக்க… அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த சேது காதில் ராஜம் சொன்னது தெளிவாக விழுந்து விட எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு கோவம் வந்ததோ “என்னம்மா அறிவு கெட்டதனமா பேசுற நீ? வாய மூடிட்டு உன்னால இருக்க முடியாதா?” என்று கத்தி விட மதி அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 

மதி அழுவதைப் பார்த்த சேதுவுக்கு இன்னும் தன் அம்மா மேல் கோவம் அதிகமாக “யார் கிட்ட என்ன பேசுறதுன்னு உனக்கு வெவஸ்தயே இல்லயாம்மா? அவ கொழந்த அவகிட்ட போய்” என்று அவன் கொதிக்க.

 

“இன்னு என்ன டா கொழந்த? அதான் ஊரே சிரிக்கிற மாதிரி செஞ்சு ராவோட ராவா நம்ம ஊர விட்டு ஓடியாரா வச்சிட்டாளே. இன்னுமா அவ கொழந்த?” என்று பதிலுக்குக் கத்தியவர் “நடந்தது நடந்து போச்சு. நீ இப்ப அவளுக்குத் தாலி கட்டுன புருஷன். அதுதான் அவ வாழ்க்கையோட நெசம். அவ அதைப் புரிஞ்சிக்கனும். அததான் அவளுக்குச் சொல்லி புரிய வைக்கிறேன்.”

 

“நீ என்ன அவளுக்குச் சொல்லிப் புரியவைக்கிறது. முதல்ல நா சொல்றத நீ புரிஞ்சுக்கோ. மதிக்கு நா கட்டுனதுக்குப் பேரு தாலி இல்ல. அந்த எடத்துல அவள காப்பாத்த வேற வழி இல்லாததால தான் நா அந்தக் கயிறை அவ கழுத்துல கட்டுனேன். எப்படிக் காத்துக் கருப்பு அண்டாமல் இருக்க கருப்புக் கயிறு கட்டுறோமோ அப்படித் தான் நா மதிக்கு கட்டுன கயிறும். அதுக்கு எந்த அர்த்தமும் இல்ல எந்த உறவும் இல்ல. இன்னைக்கு மட்டும் இல்ல, இந்த உடம்பு செத்து மண்ணுக்குள்ள போற வரை அவ எனக்கு அக்கா மக தான். நா அவளுக்குத் தாய்மாமன் மட்டும் தான். அதுதான் எங்களுக்குள்ள இருக்க நெசம். இருக்கப் போற உறவு. இனி நீ அவகிட்ட இது மாதிரி பேசுனா நா மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றவன் மதியை தேடிப் போக பாட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்த மதி “என் அபியை மறந்து மாமாக்கு பொண்டாட்டியா என்னால வாழ‌வே முடியாது. மாமா வாழ்க்கை என்னால கெட்டுப் போகக் கூடாது” என்று முடிவெடுத்துக் கிணற்றில் குதித்து விட அவள் நல்ல நேரம் அக்கம் பக்கத்தினர் அவளைக் காப்பாற்றி விட்டனர்.

 

சேது பதறிய இதயத்தோடு மயங்கி கிடக்கும் மதியின் முகத்தையே பார்த்திருக்க ராஜம் பாட்டி “இவ ஆத்தாள மாதிரி இவள இப்படிச் சின்ன வயசுல வாரிக் கொடுக்கவா இம்புட்டு நாளும் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தேன்” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.

 

பாட்டியின் ஒப்பாரியைக் கேட்டு மெதுவாகக் கண் திறந்த மதி “மாமா” என்று மெல்லிய குரலில் அழைக்க‌ அவள் அருகில் சென்ற சேது மதியை வேதனையோடு பார்த்தவன், “ஏன்டாம்மா? ஏன் இப்படிச் செஞ்ச”? என்று அவள் உள்ளங்கையில் முகத்தை வைத்தபடி குலுங்கி அழ “என்ன மன்னிச்சிடு மாமா. என்னால உன் வாழ்க நாசமா போச்சு. சாரி மாமா, பாட்டி சொல்றது தப்பில்ல தான். ஆனா, என்னால அபிய மறக்க முடியாது மாமா. இந்த மனசு, உசுரு, ஒடம்பு அவன் ஒருத்தனுக்கு மட்டும் தான்னு நா நம்ம குலசாமி மேல சத்தியம் பண்ணி தந்துட்டேனே மாமா. நா என்ன செய்றது? நா சத்தியத்தை மீறின அபிக்கு எதாவது ஆகிடும் மாமா. என்னால உ…உனக்குப் பொண்டாட்டியா இருக்க முடியாது மாமா. என்ன மன்னிச்சிடு மாமா. நா இருக்குறது உங்களுக்குக் கஷ்டம் தான மாமா. நா செத்துப் போறேன்” என்றவள் வாயில் கை வைத்து மூடிய சேது “இனிமே நீ எனக்கு அக்கா மக இல்ல. நீதான் இனி எனக்கு முத்த புள்ள” என்றவன் அவன் கட்டிய தாலியை அவன் கையாலேயே அவள் கழுத்தில் இருந்து அறுத்து ஏறிந்து விட்டான்.

 

மதியை அந்த ஊரிலேயே மேலே படிக்க வைத்தார் சேது. சேது, மதியை பற்றித் தெரிந்த ராஜம் பாட்டியின் சிநேகிதி தன் மகள் தாமரையைச் சேதுவுக்கு மணமுடித்து வைத்தார். தாமரையும் மதியைத் தன் சொந்த மகள் போல் பார்த்துக் கொண்டாள். நாட்கள் நகர்ந்து சேது, தாமரை தம்பதியருக்கு அழகிய குட்டி தேவதை பிறந்தாள். குழந்தைக்கு முகில்நிலா என்று பெயர் வைக்க வேண்டும் என்று மதி ஆசப்பட அந்தக் குட்டி தேவதை அந்த வீட்டின் இரண்டாவது நிலாவாகிப் போனாள். பால் குடிக்கும் நேரம் தவிர, குழந்தை எல்லா நேரமும் மதியிடம் தான் இருப்பாள். முதல் முதலில் தன் சிப்பி வாய் திறந்து தன் மழலை மொழியில் முகில்நிலா அம்மா என்று அழைத்தது கூட மதிநிலாவை தான். மதியின் படிப்பு நல்லபடியாக முடிந்தது. அவளுக்குத் திருமணம் செய்யச் சேதுவும், தாமரையும் பல வழிகளில் போராட மதி அதற்குச் சம்மதிக்கவே இல்லை. தன் படிப்புக்குத் தகுந்த வேலையைத் தேடிக் கொண்டாள். வேலை, குழந்தை மட்டுமே தன் உலகம் என்று தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டாள்.

 

ஒருநாள் குழந்தையை மதியிடம் விட்டுவிட்டு ஒரு கல்யாணத்திற்குச் சென்ற சேதுவும், தாமரையும் அதற்குப் பின் பிணமாகத் தான் வீடு திரும்பினர். அன்றில் இருந்து முகில்நிலா மதியின் மகளாகவே மாறிப் போனாள்.

 

மதி வேலை பார்த்துக்கொண்டே மேலே படித்தாள். முகில்நிலாவையும் பள்ளியில் சேர்த்தாள். நிலாவிற்குச் சற்று விவரம் தெரியும் வயதில் அடிக்கடி பாட்டி தன் அம்மாவிடம் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி சண்டையிடுவதைப் பார்த்த நிலாவுக்கு அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை. அவள் பதினாறாவது வயதில் ராஜம் இறக்கும் தருவாயில் நிலா கையைப் பிடித்துக் கொண்டு,

 

“நிலா உன் அம்மாக்கு உன்ன விட்டா வேற யாரும் இல்லம்மா. நாளைக்கு நீயும் கல்யாணமாகி போய்ட்ட அவ அனாதை ஆகிடுவாம்மா. இதுவரைக்கும் நா இருந்தேன். இனிமே அதுவும் இல்ல. நீதான் எப்டியாது அவள ஒரு கல்யாணம் செஞ்சிக்க வைக்கணும். எனக்குத் தெரியும் அவ அந்த நந்தனை இன்னும் மறக்கல. ஆனா, அவ தலையெழுத்துல தான் அந்தப் பையன் பேர் இல்லாம போச்சே” என்று கலங்கியவர், “நீ தான் நிலா அவ மனச மாத்தி அவளுக்கு ஒரு வாழ்க” என்று சொல்லி முடிக்கும் முன் ராஜம் உயிர் பேத்தியின் பொறுப்பை இன்னொரு பேத்தியின் கையில் ஒப்படைத்த நிறைவுடன் இயற்கையோடு கலந்தது.

 

அபிநந்தன் மற்றும் அனைவரும் நிலாவையே பார்த்திருந்தனர்.

 

“முதல்ல பாட்டி சொன்னது எனக்குப் புரியல. அப்றம் தான் வீடு முழுக்கத் தேடி அம்மாவோட பழைய டைரிய தேடி படிச்சேன். அப்ப அந்த டைரிய படிக்கும் போது என்னோட அம்மாவோட இந்த நிலைமைக்குக் காரணம் நீங்க தான்னு எனக்கு உங்க மேல கோவம் கோவமா வந்துச்சு. ஆனா, அதுக்கு அப்புறம் நானே காதல்ல விழும்போது தான் உங்க ரெண்டு பேர் காதலோட ஆழம் தெரிஞ்சுது. என் காதல் என் கைய விட்டு தொலைஞ்சு போனப்போ என்று துருவ்வை பார்த்தவள். அன்னைக்குத் தான் உங்க காதலோட வலியும் எனக்குப் புரிஞ்சுது.”

 

“அப்றம் தான் எப்டியாது, உயிரக் குடுத்தாவது அம்மாக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நா முடிவு செஞ்சேன்.”

 

“அம்மா அவங்க டைரில எழுதி இருந்தாங்க. என்னோட அபி என்னை மறக்கமாட்டான். ஒருவேள அவங்க அப்பா கட்டாயத்தில வேற பொண்ணை அவன் கல்யாணம் செஞ்சாலும், அவன் சாகுற வரை அவன் மனசுல நான் இருப்பேன்னு எழுதி இருந்தாங்க. அப்ப தான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. ஒருவேள அம்மா எழுதுன மாதிரி நீங்களும் இன்னும் அவங்களையே நெனச்சிட்டு தனிய இருந்த… ஏன் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கக் கூடாதுன்னு. பட், அடுத்த செகண்டே நீங்க இப்பக் கல்யாணம் செஞ்சு புள்ளை குட்டியோட இருந்தா என்ன செய்றதுனு ஒரு பயம் வந்துச்சு. ஒருவேள அப்டி இருந்தா அம்மாவை உங்க முன்னால கூட்டிட்டு வந்து, பாரு அவரு ஒன்னும் உன்ன நெனச்சிட்டு இல்ல… கல்யாணம், குடும்பம் குழந்தைனு சந்தோஷமா தான் இருக்காரு. நீ மரியாதையா அவருக்குச் செஞ்சு தந்த சத்தியத்தை அவர் கையில் எச்சி தொட்டு அழிச்சு வாபஸ் வாங்கிட்டு வந்து, நா செலக்ட் பண்ற அப்பாவ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லலாம்னு முடிவு செஞ்சேன். அதுக்குப் பிறகு நானும், யாழியும் ரெண்டு வருஷம் துருவ்வோட, உங்களையும் சேர்த்து தேடி அலஞ்சு திரிஞ்சோம். உங்க கம்பெனியை கண்டு புடிச்சோம். அங்கயே வேலைக்கு சேர்ந்தோம்” என்றவள் கண்ணீரோடு நந்தனைப் பார்த்து, “அம்மா சொன்ன மாதிரி நீங்க அவங்கள மறக்கல தான். ஆனா,” என்று துருவ்வை பார்த்தவள் “நீங்க அம்மாவை நெனச்சிட்டு இருந்தது உங்க வைஃப் க்கு நீங்க செஞ்ச துரோகம் தான். பட், பேச்சு என்னோட அம்மான்னு வரும் போது நா கொஞ்சம் செல்பிஷ் தான். சோ! அதுக்காக நா உங்கள ஒன்னும் சொல்லல” என்றவள் “நீங்க இன்னும் அம்மாவ மறக்கல தானே? உங்க வைஃப்பும் உயிரோட இல்லன்னு காத்து வாக்குல கேள்வி பட்டேன். சோ… சோ” என்று தயங்கி தயங்கி “நீங்க ஏன் இப்ப என் அம்மாவ கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது”? என்று‌ கேட்டவள் கண்கள் மட்டும் வலியோடு துருவ்வையே பார்த்தபடி இருக்க அவள் கேள்விக்கு அங்கு யாரிடமும் பதில் இல்லை…