உன் காதல் என் தேடல்

ei8VUJK48458-bf576c60

           “உன் காதல் என் தேடல்”

தேடல் – 1

அழகிய காலைப்பொழுது, விடிந்தும் விடியாத மார்கழி மாதம், மந்தகாசமான காற்றுத்தூவலில் கதிரவன் தனது தங்கம் போல ஜொலிக்கும் கதிர் கரம் கொண்டு பனித்துளிகளைத் துடைத்தெடுத்து, தன் தோழி பூமியின் குளிர் குறைக்க முயன்று கொண்டிருந்தான்.

இரவெல்லாம் மூடி இருந்த விழியென்னும் ஆழிக்குள் முக்குளித்த மீன் விழிகள் இரண்டு கதிரவன் ஒளிபட்டு மெல்ல கண்திறந்தது. அந்த அழகிய விழிகளைக் கைகளால் கசக்கிக் கொண்டே எழுந்தாள், அந்த விழிகளின் சொந்தக்காரி முகில்நிலா. ஒருமுறை தன் அறையை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்தி கண்மூடிப் படுத்துவிட்டாள்.

முகில்நிலா, பெயரைப் போலவே அழகிய வட்டநிலவு முகம், மாநிறத்திற்கு சற்று கூடிய நிறம், குழந்தைத்தனமும், குறும்பும் நிறைந்த மீன் விழிகள், சிரித்தால் அழகாய் குழிவிழும் கன்னம், கூர்மூக்கு, சீரான பல்வரிசையில் முல்லைப் பூ போல எட்டிப் பார்க்கும் அழகிய எத்துப்பல். இளந்தாமரை நிற அதரங்கள், அளவான உயரம், அதற்குத் தகுந்த எடையென்று அவளைப் பார்ப்பவர் எங்கோ இவளை பார்த்திருக்கிறேன் என்று ஒரு நிமிடம் யோசிக்கும் அளவு, அடுத்த வீட்டுப் பெண் போன்ற ஒரு சாந்தமான முகம். இயல்பில் கொஞ்சம் பயந்தசுபாவம் என்றாலும் தேவை வரும்போது தைரியமாகச் செயல்படும் புத்திசாலி. அனைவரையும் தன் அன்பால் கட்டிப்போடும் அன்பானவள். அவளிடம் அன்பு செய்வோர்க்கு அடிமையானவள். எடுத்த காரியத்தில் எத்தனை தடை வந்தாலும் அதை செய்து முடிக்கும் திறமைசாலி.  மொத்தத்தில் மலர் போல் மென்மையான மனதில் இரும்பைப்போல் உறுதி கொண்ட அற்புதக் கலவை அவள்.

மார்கழி குளிருக்கு இதமாக போர்வையை இறுக்கிப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த நிலாவின் முகத்தில் ஜில் என்று ஏதோ பட, பதறி எழுந்தவள் “அய்யோ யாழி! யாழி! வீட்டுக்குள்ள மழை பெய்யுது யாழி. மழை பெய்யுது யாழி!” என்று அடித்துப் பிடித்து எழுந்தவள் திருதிருவென முழித்துக் கொண்டே எதிரில் பார்க்க, அங்கே இடுப்பில் கைவைத்து நிலாவை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள் தோழி யாழினி.

“ஏய்! ஏன் டி? எதுக்கு டி காலையில இப்படி பத்ரகாளி மாதிரி நிக்குற”? என்றவள் அவள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலிலை பார்த்துவிட்டு, “ஏய்!! நீ தான் என் முகத்துல தண்ணி கொட்டுனியா? நா கூட சீலிங் இடிஞ்சு வீட்டுக்குள்ள தான் மழை பெய்யுது போல வீட்டு ஓனர் நம்ம தலையில டான்ஸ் ஆடப்போறருன்னு பயந்துட்டேன். எதுக்கு டி இருக்கிற தண்ணி பஞ்சத்தில இவ்ளோ தண்ணிய வேஸ்ட் பண்ற? உனக்கு கொஞ்சமாச்சும் சமூகப் பொறுப்பிருக்கா”? என்றவளை யாழி கொலை வெறியோடு பார்க்க, “சரி சரி, முறைக்காத, நாங்க எல்லாம் மெசேஜ் சொன்னா உங்களுக்குப் புடிக்காதே. சரி அதிருக்கட்டும் இப்ப நீ எதுக்கு டி என் மேல தண்ணி கொட்டுனா? காலங்காத்தால உனக்கு வேற வேலை இல்லயா?”

“ஏன் டி கேக்கமாட்ட? நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ. எல்லா என் நேரம். ஊரு, உறவ விட்டுட்டு உனக்காக இங்க வந்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும், இன்னுமும் வேணும்” என்று யாழினி தலையில் அடித்துக் கொள்ள…

“ஏய்! ஏய்! என்னடி? நீயென்னமோ என்னை காதலிச்சு, என் கூட ஊரை விட்டு ஓடி வந்த மாதிரி பேசுற. மெதுவா பேசு டி. வெளியகேக்குறவங்க தப்பா எதுவும் நெனைக்கப் போறாங்க.!” என்று யாழினியை நக்கல் செய்தவள்… ” சரி… நா தான் என் சொந்த விஷயமா இங்க வந்தேன். நீ ஏன் என் பின்னாடியே வால் புடிச்சிட்டு வந்த? உனக்கு தா வேற வேலை கெடச்சுது இல்ல, அங்க போக வேண்டியது தானா? நான் என்ன உன்னை வெத்தல பாக்கு வச்சா அழைச்சேன்”?

“பேசுவ டி, பேசுவ… இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ. என்னை மும்பையில கூப்டாங்க, பெங்களூர்ல கூப்டாங்க, ஏன் லண்டன்ல கூட வேலைக்கு வான்னு கூப்டாங்க, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து உன்னோட குப்பை கொட்றேன், எல்லாம் என் தலையெழுத்து. இதெல்லாம் கேக்க வேண்டி இருக்கு”.

“ஆமா, இவள ஜப்பான்ல  ஜாக்கிசான் கூப்டாகா, அமேரிக்கால பில்கேட்ஸ் கூப்டாகா, கூகுள்ல மார்க் கூப்டாகா அங்கெல்லாம் போகாமா அம்மணி இங்க வந்துட்டாங்க. போடீங்கு, சும்மா வாயக் கெலறாத” என்ற நிலாவின் முதுகில் நாலு குத்து குத்திய யாழினி, “உன்னை வச்சிட்டு ரொம்ப குஷ்டம் டி, எல்லா என் நேரக் கொடுமை, பேசி பிரயோஜனம் இல்ல, சிம்பிளி வேஸ்ட் ஆஃப் டைம். உன்னை அப்றம் கவனிச்சிக்கிறேன். முதல்ல கண்ணை நல்லா தொறந்து டைம் என்னன்னு பாரு டி. தூங்குமூஞ்சு” என்று யாழினி நிலா தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைக்க,

நிலா தலையைத் தடவியபடியே கடிகாரத்தை நிமிர்ந்து பார்க்க, அது மணி எட்டாகி இருப்பதைக் காட்டியது “அச்சோ! போச்சு, போச்சு. இன்னைக்கு ஆஃபிஸ்க்கு கரெக்ட் டைமுக்கு போன மாதிரி தான். ஏன்டி எரும என்னை இவ்ளோ நேரம் தூங்கவிட்ட? சீக்கிரம் எழுப்ப வேண்டியது தான”? என்று யாழினியை முறைக்க,

“அப்டியே மிதிச்சேன்னா பாரு, நா காலையில ஆறு மணியில இருந்து உன்னை எழுப்பிட்டிருக்கேன். நீ நல்லா இழுத்துப் போத்தி தூங்கிட்டு இப்ப என்னை சொல்றியா?”

“சரி சரி நகரு, உன்னோட வெட்டியா பேச எனக்கு நேரமில்ல” என்று யாழினியை கட்டிலில் தள்ளிவிட்ட நிலா பாத்ரூம் ஓட, “எரும எப்டி தள்ளி விட்டுட்டு போகுது பாரு. இவள வச்சிட்டு முடியலடா சாமி” என்று சலித்துக் கொண்டே காலை உணவை எடுத்து வைத்த யாழினி. மதிய சாப்பாட்டை இருவருக்கும் ஹாட் பாக்ஸ்சில் எடுத்து வைத்தாள்.

 

நிலா குளித்து முடித்து ரெடியாகி வெளியே வந்தவள் “யாழ் செல்லம் ரொம்ப பசிக்குது டி, டிபன் ரெடியா”? என்று கத்திக் கொண்டே வர…

“ஏய்! நா இங்கதான்டி இருக்கேன். ஏன் இப்டி நாலு வீட்டுக்கு கேக்குற மாதிரி கத்துற? டிபன் எல்லாம் ரெடி தான். இந்தா நல்லா கொட்டிக்க. இது மதியத்துக்கு” என்று ஹாட் பாக்ஸை நிலா கையில் கொடுக்க, நிலா நிமிர்ந்து தோழியை பார்த்தவள் “ஏன்டி உனக்கு இந்த கஷ்டமெல்லாம்? நா இங்க இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். இங்க இருக்கேன். நீயும் ஏன்டி இங்க இருந்து கஷ்டப்படணும்? அவ்வளவு பெரிய வீடு, நீ சொன்னதைச் செய்ய வேலைக்கு அத்தனை ஆளுங்கன்னு வசதியா வாழ்ந்தவடி நீ, இங்க வந்து என்கூட? வேணாம் யாழி, நீ  பேசாம உன் வீட்டுக்கு கெளம்பி போய்டு டி” என்று கண்கலங்கினாள்.

 

“நீ இங்க வந்த வேலைய அப்டியே விட்டுட்டு திரும்பி வா. வீட்டுக்கு போலான்னு சொன்னா நீ என் கூட வருவியா நிலா” என்ற யாழினியின் கேள்விக்குச் சட்டென தலையை வேகமாக இல்லையென்று ஆட்டினாள் நிலா.

 

“நோ யாழி, நா வரமாட்டேன். நா வந்த வேலையை முடிக்காம இங்கிருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்.”

 

“அப்ப உன்னை தனியா விட்டுட்டு நானும் போகமாட்டேன். எனக்கு இங்க ஒரு கஷ்டமும் இல்ல. நா நல்லா தான் இருக்கேன். நீ செய்யப் போற வேலையில என்னென்ன பிரச்சனை வருமோ தெரியல. நெனைக்கவே பயமா இருக்கு?  உன்னை இங்க தனியா விட்டுட்டு என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாது. அதோட நாளைக்கு சமைக்கிற முறை உன்னோடது. அதுல இருந்து எஸ்கேப் ஆகத்தான் நீ இந்த சென்டிமென்ட் சீன் போட்றேன்னு எனக்கு நல்லா தெரியுது. ஓவர் சென்டிமென்ட் உடம்புக்கு ஆகாது மிஸ்.முகில்நிலா. நீங்க என்ன சீன் போட்டாலும் நாளைக்கு நீங்க தான் சமைக்கணும். சோ, உன் சென்டிமென்டை மூட்டை கட்டி வச்சிட்டு சாப்ட்டு வேலைக்கு கெளம்பு” என்ற யாழினி எழுந்து கை கழுவ செல்ல, “நீ மாறவேமாட்ட டி” என்று சிரிப்போடு சொன்ன நிலா வேலைக்குக் கிளம்பினாள்.

 

(யாழினி, முகில்நிலாவின் உயிர் தோழி. யாழினியை நிலா பார்க்கும் கண்ணாடி என்றே சொல்லலாம். இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல் இருந்தது. நிலாவின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று நபர்களில் முதலாவது இடம் அவள் அம்மா, பாட்டிக்கு என்றால், இரண்டாம் இடம் யாழினிக்குத் தான். அந்த மூன்றாம் நபரை பற்றி பின் பார்ப்போம்.)

 

முகில்நிலாவும், யாழினியும் அவசர அவசரமாக கேப் பிடித்து, எப்படியோ ஒருவழியாக சரியான நேரத்திற்கு ஆஃபிஸ் வந்து சேர்ந்தனர்.

 

“A.N கன்ஸ்ட்ரக்ஷன்” அந்த ஊரில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் முக்கியமானது. அதன் உரிமையாளர் அபிநந்தன். சிங்கப்பூரில் இருந்துகொண்டே, இங்கு இந்த நிறுவனத்தைத் திறம்பட நடத்துகிறார். வருடத்தில் ஒருமுறை தான் இங்கு வருவார். அதைத் தவிர இங்கு அவரைப் பற்றி யாருக்கும் ஒரு விவரமும் தெரியாது. அவர் தம்பி ரகுநந்தனும், தங்கைகளின் கணவர்கள் சிவராமும், வசந்தகுமாரும் தான் இந்த கன்ஸ்ட்ரக்ஷனையும், மற்ற அனைத்து குடும்பத் தொழிலையும் கவனிப்பது‌.

 

இது அபிநந்தன் முதல் முதலில் அவர் சொந்த முயற்சியில் ஆரம்பித்த தொழில் என்பதால் அவருக்கு இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ரொம்ப சென்டிமென்ட். முதலில் சின்னதாக தொடங்கிய நிறுவனம். இப்போது வேர்விட்டு விருட்சமென வளர்ந்திருக்கிறது. இங்குதான் முகில்நிலாவும், யாழினியும் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்கின்றனர். முகில்நிலாவும், யாழினியும் ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்தவர்கள். இந்த ஆண்டு  பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்த முகிலுக்கு பல பெரிய கம்பெனிகள், பல வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆஃபர் வர, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு காரணத்துக்காக A.N கன்ஸ்ட்ரக்ஷனில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். முகிலின் மனதை அறிந்த யாழினி, இந்தச் சூழ்நிலையில் அவளைத் தனியே விட விரும்பாமல் அவளும் இங்கேயே முகிலுக்குத் துணையாக வேலைக்கு வந்துவிட்டாள்.

 

வேலையில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே முகில்நிலா ரகுநந்தன், சிவராம், வசந்தகுமார் மூன்று பேர் மனதிலும் நன்மதிப்பைப் பெற்றிருந்தாள். ஆனால் அவள் எதற்காக இங்கு வேலைக்கு வந்தாளோ அது மட்டும் அடுத்த கட்டத்திற்குப் போகாமல் அப்படியே இருந்தது. யாழினி  பலமுறை நிலாவிற்கு எடுத்துச் சொல்லியும், நிலா தனக்கான நேரம் வருமென்று காத்திருந்தாள்.

 

“நம்ம இங்க வந்து நாலு மாசம் ஆச்சு நிலா. இப்பவரை உன்னால ஒன்னும் பண்ண முடியல. இன்னும் எவ்ளோ நாள் இப்டியே இருக்கிறது. இப்பவரை ரகு, சிவா, வசந்த்சாருக்கு நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்னு தெரியாது. அவங்க மூனு பேர்க்கும்  நீ யாருன்னு தெரிஞ்சா நம்ம நெலம என்னாகும்னே தெரியல. கொஞ்சம் யோசி நிலா” என்ற யாழினியை நிலா முறைக்க.

 

”முறைக்காத டி. நீ தெரிஞ்சுக்கவும், செய்யவும் நெனைக்கிறது ஒன்னும் சின்ன விஷயம் இல்லை. இந்த சொசைட்டில அவங்க பெரிய ஆளுங்க. அதை புரிஞ்சிக்கோ முதல்ல. உன்னால் அவங்க ஸ்டேட்டஸ்க்கு எதாவது பிராப்ளம் வந்தா கண்டிப்பா அவங்க சும்மா இருக்க மாட்டாங்க”.

 

“எனக்கு புரியுது யாழி, நா செய்ய நெனைக்கிறது சின்ன விஷயம் இல்லை தான். ஏன் இது நடக்குமா, நடக்காதன்னு கூட எனக்கு தெரியாது… ஆனா,…” என்று யாழினியை ஒரு பரிதவிப்போடு பார்த்தவள், “எனக்குள்ள ஒரு சின்ன நம்பிக்கை டி. ஏன் ஒரு சின்ன நப்பாசைன்னு கூட சொல்லாம். நா செய்றது சரின்னு நா சொல்லல, ஆன தப்புன்னும் தோணல. நா மட்டும் நடந்ததை கண்டுபுடிச்சிட்டா அதுக்கப்புறம் எல்லா நல்லபடியா நடக்கும்னு எனக்குள்ள ஏதோ சொல்லுது. சரியோ, தப்போ எடுத்த காரியத்தை முடிக்காம பாதியில் போக எனக்கு புடிக்கல. ஒருவேளை உனக்கு நா செய்றது தப்புன்னு தோணுச்சினா சொல்லுடி. இன்னைக்கே இங்கிருந்து போய்டுவோம்” என்று கலங்கியவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் யாழினி.

 

“யார் சொன்னது நீ செய்றது தப்புன்னு? அதெல்லாம் ஒன்னும் இல்ல. என் நிலா எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும்” என்ற  தன்தோழியை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் முகில்நிலா.

 

நாட்கள் அதன் போக்கில் நகர, மேலும் ஒரு மாதம் ஓடி இருந்தது.

அன்று யாழினிக்கு லேசாக காய்ச்சல் இருந்ததால் அவள் வேலைக்குப் போகவில்லை. மதியம் சாப்பிட்டு சற்று நேரம் தூங்கி எழுந்தவள் வேலை முடிந்து நிலா வரும் நேரம் தாண்டியும் இன்னும் வராமல் இருக்க, அவளை எதிர்பார்த்து ஹாலில் உட்கார்ந்திருந்தாள்.

மிகவும் சோர்வாக வீடுவந்த நிலா, “குட் ஈவினிங் யாழி செல்லம். இப்ப காய்ச்சல் எப்டி இருக்கு? ஹாஸ்பிடல் வேணும்னா போவோமா”? என்று யாழினி நெற்றியில் கை வைத்துக் காய்ச்சல் குறைந்துவிட்டதா என்று பார்க்க, ”ஐ அம் ஒகே நிலா, காய்ச்சல் சுத்தாம கொறஞ்சிடுச்சு, நா நல்லா தான் இருக்கேன். நீதான் ரொம்ப வாடிப் போயிருக்க. லேட்டா வேற வந்திருக்க. ரொம்ப வேலையா டா?” என்று வாஞ்சையாக கேட்டாள்.

”ஆமா யாழி, செம்ம ஒர்க் இன்னைக்கு. நாளைக்கு நம்ம ஆஃபிஸ்க்கு பாரியின்ல இருந்து புது எம்.டி வராறாம். சோ நெறய வேலை டா.”

“புது எம்.டி யா? அது யாரு டி?” என்று யாழினி கேட்க,

“யாருக்குத் தெரியும்? அவங்க குடும்பம் தான் பெரிய குடும்பமாச்சே அதுல யாராவது இருக்கும்.”

 

“ம்ம்ம் சரி, வரது பொண்ணா, பையனா”? என்று கண்ணடித்துக் கொண்டே கேட்ட யாழினியை ஒருமாதிரி பார்த்தாள் நிலா. “ம்ம்ம் எல்லாம் பையன் தான்” என்று சலிப்பாகச் சொல்ல, “சரி… ஆள் எப்படி இருப்பாராம்? அழகாக ஸ்மார்ட்டா இருப்பாரா இல்ல அவ்ரேஜ் தானா?” என்ற யாழினியின் கேள்வியில் கடுப்பானா நிலா, “ஏய் என்ன டி பேசிட்டிருக்க? அவன் எப்டி இருந்தா எனக்கென்ன? நானே நான் எதிர்பார்க்கும் ஆள் எப்ப வருமோன்னு காத்துட்டுருக்கேன். என்கிட்ட வந்து கண்டதையும் பேசிட்டு போடி அங்குட்டு”.

 

”சரி சரி அதெல்லாம் நா எம்.டி யை நேர்ல பாத்துக்கிறேன். நீ இப்ப அவர் பேர் மட்டும் சொல்லு” என்றதுமே அதுவரை மலர்ந்திருந்த நிலா முகம் அப்படியே வதங்கிவிட்டது. “ஏய் நிலா என்னடி இது? என்னாச்சு உனக்கு? எம்.டி பேரை தானடி கேட்டேன்? அப்டி என்ன பேரு டி அது? நீ இவ்ளோ டிஸ்டர்ப் ஆகி முகம் ஒருமாதிரி ஆகிடுச்சு” என்றவளுக்கு தீடிரென ஏதோ தோன்ற, “புது எம்.டி பேரு துருவ் வா நிலா”? என்ற யாழினி கேள்வியில் நிலா கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள மெதுவாக “ஆமாம்” என்று தலையாட்டினாள்.

 

யாழினி மெதுவாக அவள் தாடையைப் பிடித்து தன்புறம் திருப்பியவள், “நீ இன்னும் அவனை மறக்கலயா நிலா”? என்றது தான் தாமதம் யாழினி மடியில் முகம் புதைத்தவள் “என்னால அவன மறக்க முடியல டி. அவன மறக்க நெனைக்கும் போது தான் அவன் ஞாபகம் அதிகமாகுது. நா என்னடி பண்றது. ஏன்டி அவன் என்னை விட்டுப் போனான்? நா அவனுக்கு உண்மையா தான இருந்தேன். ஏன் என்னை விட்டுப் போனான். எதுக்கு என்னை விட்டு போனான்”? என்று கதறியவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் தவித்தாள் யாழினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!