உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

Epilogue

 

தேடல் – 21

 

இரவு நேரம் கதவு வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, என்னமோ? ஏதோ என்று பதறி அடித்து எழுந்து வந்த நந்தன் வாசலில் கலங்கிய கண்களும், தெளிந்த முகமாகவும் இருந்த மதியைப் பார்த்து, “ஏய் மதி நீ? இந்த நேரத்துல இங்க? என்ன ஆச்சு, ஏன் கண்ணு கலங்கி இருக்கு”? என்று மூச்சு விடாமல் பேச.

 

“ஏன் அபி எனக்குப் புடிச்ச மாதிரி ரூம்மை பாத்து பாத்துக் கட்டி வச்சிட்டு, இப்படி என்னையே உள்ள விடாம வெளியவே நிக்க வச்சு தான் பேசுவீயா நீ? ஏன் உள்ள கூப்ட்டு இந்தக் கேள்வி எல்லாம் கேட்டா சாருக்குக் கிரீடம் இறங்கிடுமோ”? என்று இடுப்பில் கை வைத்து முறைத்த மதியை கண் விரிய வியந்து பார்த்துக் கொண்டிருந்த நந்தனுக்குப் பதினாறு வயதில் அன்று மாந்தோப்பில் முதல் முதலில், மரத்தின் மேல் இருந்து தன் முன் குதித்த அந்த மதிநிலாவை இத்தனை வருஷம் கழித்துத் திரும்பப் பார்த்தது போல் இருந்தது.

 

வாசலை விட்டு நகராமல் நின்ற நந்தன் தோளைப் பிடித்துத் தள்ளிவிட்டு அறைக்குள் வந்த மதி அந்த ரூம்மையே ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்திருக்கும் நந்தனுக்கு இப்போது மதியின் மன மாற்றத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன? அவள் முடிவை வாய் மொழியும் முன்னமே தான் அவள் கண்கள் தம்பட்டம் அடித்துத் தண்டோரா போட்டுக் கத்தி விட்டதே. அதன் பின் நந்தனுக்கு அவள் வார்த்தை தேவையா என்ன? இருந்தும் அவளிடம் பழைய அபியாக மாறி வம்பு செய்ய நினைத்தவர், “என்ன மேடம்? அதான் ரூம்க்குள்ள அதிரடியா நுழைஞ்சுட்டீங்களே அப்றம் என்ன? வந்த விஷயத்தைச் சொல்றது”? என்று அவளைச் சீண்ட, காலம் கடந்தாலும், காதலின் ஊடலில் வரும் வெட்கம் கொள்ளை அழகு தான். மதியும் இப்போது கொள்ளை அழகோடு ஜன்னல் கம்பியை இறுக்கிப் பிடித்து நடுங்கும் கால்களைத் தரையில் அழுத்திப் பதித்தபடி நின்றிருந்தார்.

 

ஜன்னல் வழியாக வந்த நிலவொளியில் மேகம் எழுதிய அழகு ஓவியம் போல் நின்ற தன்னவளின் அழகில் இதயம் இதமாய், இறகாய் பறக்க மதியின் தாடையைப் பிடித்துத் தன் முகம் பார்க்கும் படி நிறுத்தியவர் அவள் விழிகளையே ஆர்வமாகப் பார்த்தார்.

 

“ப்ளீஸ் அபி, உனக்கு நா இப்ப இங்க எதுக்கு வந்திருக்கேன்னு புரியுது தானா? நீயே அதைப் பத்தி பேசேன். எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று கண்களால் கெஞ்ச, நந்தன் இல்லை என்று தலையாட்டிவர் ‘எனக்கு உன் வாயால அத கேக்கணும்னு ஆசையா இருக்குடி. ப்ளீஸ் மதி சொல்லு’ என்று அவரும் விழி மொழியிலேயே மதிக்குப் பதில் தந்தார்.

 

“நா இப்ப, இந்த ரூம்க்குள்ள வந்த மாதிரி, உன் வாழ்க்கைகுள்ளையும் வரலாமா அபி? நா… நா… நீயும், நானும்… நானும்… நீயும்” என்றவருக்கு வெட்கத்தில் வார்த்தை வராமல் வாய் தந்தியடிக்க, மென்மையாக அவள் இதழை கை கொண்டு மூடிய நந்தன், “நாளைக்கே கல்யாணம் செஞ்சுக்கலாமா மதி? என்னால இனியும் வெய்ட் பண்ண முடியாது” என்று கண்ணில் காதல் வழிய கேட்க… 

 

இமைகள் சொறுக தவிப்பாய் சிரித்த மதி, தன்னவனைத் தாவி அணைத்தவர், “ஐ லவ் யூ அபி… லவ் யூ ஃபார் எவர்” என்று அவரை இறுக்கி கட்டிக் கொண்டு தன் கண்ணீர், சாரி ஆனந்தக் கண்ணீரில் அவர் சட்டையை நனைக்க, இத்தனை வருட தவிப்பை, கடந்தகாலக் காயத்தை ஆற்ற அந்த மூன்று வார்த்தைகள் நிறைவாக இருந்தது போலும் நந்தனும் நெஞ்சோடு சேர்த்து தன் காதல் நாயகியை அணைத்துக் கொண்டார்.

 

எத்தனை வருட தேடல், எத்தனை நாள் காத்திருப்பு, அத்தனையும் பேச அந்த ஒரு இரவு போதாது என்பது போல் விடிய விடிய பேசினர் இருவரும். நந்தன் கட்டிலில் அமர்ந்திருக்க மதி தரையில் அமர்ந்து, நந்தன் காலை கட்டிக் கொண்டு அவர் மடியில் தலை வைத்து படுத்தபடி ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, நந்தன் அவர் குழலை கோதிய படி “உம்ம்” கொட்டிக் கொண்டு இருந்தார்.

 

“எனக்கும் உன்னை புடிக்கும் அபி. ஆனா, எனக்குள்ள நெறய தயக்கம். இந்த சொசைட்டிய நெனச்சு பயம். நிலா என்னை எதுவும் தப்பா நெனைச்சிடுவாளோன்னு பயம். உன்னோட தம்பி, தங்கச்சீங்க என்ன நெனைப்பாங்க? அதனால நிலாவோட கல்யாண வாழ்க்கையில் எதுவும் பிரச்சனை வருமோன்னு ரொம்ப பயம். இப்டி நெறயா பயம், என் மனசை போட்டு படாப்படுத்தி எடுத்துடுச்சு அபி. ஆனா, கடைசியா நீ என் மேல வச்சிருந்த உண்மையான அன்பு தான் ஜெயிச்சுச்சு. அதான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்கிட்ட வந்துட்டேன்” என்று நந்தன் காலை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

 

“இப்ப உனக்கு அந்த பயம் எல்லாம் போய்டுச்சா மதி”? என்ற நந்தனை நிமிர்ந்து பார்த்த மதி, “பயம் போகல அபி. ஆனா, நம்பிக்கை வந்துடுச்சு. நம்மள சுத்தி இருக்க எல்லாரும் யாரு? நம்ம குடும்பம் தான!? நம்ம ரெண்டு பேரும் நல்லா இருந்த சந்தோஷப்படுவாங்க தானே அபி. அப்ப அவங்க நம்மள புரிஞ்சுக்குவாங்கன்ற நம்பிக்கை வந்துடுச்சு. எம் பொண்ணு நிலா இன்னைக்கு அந்த நம்பிக்கையை எனக்கு குடுத்துட்டா. நா இப்ப தெளிவா இருக்கேன். நா எந்த தப்பும் செய்யலயே! அப்றம் நான் ஏன் பயப்படணும். என் அபி எனக்கு வேணும். இதுல என்ன தப்பிருக்கு? நா யார் வாழ்க்கையையும் தட்டிப் பறிக்கலயே? எனக்காக காத்திருக்க என் அபியோட என் மீதி வாழ்க்கைப் பயணத்தை சேர்ந்து கடக்க ஆசப்படுறேன் அவ்ளோ தான். இதுல நம்ம குடும்பம் தவிர்த்து வேறு யாரு என்ன நெனைச்சாலும் எனக்கு அதப்பத்தி இனி கவலை இல்லை அபி” என்று அழுதபடி உறுதியாகப் பேசிய மதியின் நெற்றியில் முத்தமிட்டு “ஐ லவ் யூ மதி” என்ற நந்தன், “இனி நம்ம வாழ்க்கையில கண்ணீரே இருக்கக் கூடாது புரியுதா”? என்றவர் தன்னவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் இதழ்களால் ஒற்றி எடுத்தார்.

 

மதி கையைப் பிசைந்து கொண்டு மாமியார் வீட்டுக்கு முதல் முதலில் வந்த மருமகன் போல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு அமர்ந்திருக்க, “இப்டியே இருந்தா எப்டி மதி? நம்ம முடிவை எல்லார்கிட்டயும் சொல்ல வேணாமா? இப்ப எல்லாரும் டிபன் சாப்பிட டைனிங் டேபிளில்ல ஆஜர் ஆகி இருப்பாங்க. இதுதான் ரைட் டைம், நாம நம்ம முடிவை சொல்லிடுவோம்” என்றவர் “வா கீழ போலாம்” என்று மதி கையைப் பிடித்துக் கீழே அழைத்துச் செல்ல, இருவரும் கை கோர்த்து ஜோடியாக வருவதைப் பார்த்து அனைவருக்கும் உள்ளம் குளிர்ந்து போக… தன் அன்னையின் தெளிந்த முகத்தை வைத்தே நிலாவுக்கு அவரின் முடிவு தெரிந்து விட அவளுக்குள்ள இமயத்தையே புரட்டி போட்டு சாதனை படைத்தது போல் ஒரு உணர்வு.

 

மதியும், அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அப்படியே நிற்க, “என்ண்ணா? ஏன் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு அப்படியே நிக்குறீங்க. என்ன? உன் முகம் பார்த்தால் போதும் பசியும், தாகமும் எடுக்காதுன்னு ஒரு பாட்டு வருமே அதே மாதிரி ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பார்த்து பசி ஆறிக்கிறீங்களா? அப்ப டிபன் வேணாம”? என்று ரம்யா வம்பிழுக்க மதிக்கு வெட்கம் பொத்துக் கொண்டு வர சட்டெனத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.

 

“நாங்க ரெண்டு பேரும் ஒரு முடிவெடுத்து இருக்கோம். அத உங்க எல்லார் கிட்டயும் சொல்லணும்” என்று நந்தன் ஆரம்பித்து வைக்க, நிலா வேண்டுமென்றே “நீங்க முடிவெடுக்குறது இருக்கட்டும்ப்பா. இப்ப நா ஒரு முடிவெடுத்து இருக்கேன்‌. முதல்ல அதக் கேளுங்க. இன்னைக்கே நா அம்மாவை ஊருக்கு அனுப்பப் போறேன்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட மதி உட்பட அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

 

“ஏன் ஏன் எதுக்கு இப்ப அண்ணி ஊருக்கு போணும்? நிலா என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசுறயா”? என்று அகல்யா அழுத்திக் கேட்க.

 

“அதான? ஏன்டி அத்த இங்கிருந்து போகணும். உனக்குக் கிறுக்கு எதும் புடிச்சிருக்கா? எதுக்குப் பைத்தியம் மாதிரி உலறிட்டு இருக்க” என்று துருவ் பல்லைக் கடித்தான்.

 

“உனக்கு ஒன்னு தெரியாது துருவ். பாவம் அம்மா எனக்காகத் தான் இங்க இருக்க சம்மதிச்சாங்க. ஆனா, பாவம் அவங்களுக்கு இங்க இருக்கப் புடிக்கல போல. நேத்து நைட் பாக்குறேன், மாடியில தனியா நின்னு ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு என்னால எதுக்குக் கஷ்டம். பாவம் அம்மா. சோ! அவங்க ஊருக்கே போகட்டும்” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொள்ள மதிக்கு மயக்கமே வந்துவிட்டது. 

 

‘அய்யோ என்ன இது? நாங்க ஒன்னு நெனச்சா இங்க ஒன்னு நடக்குது’? என்று மனதில் புலம்பியவர், “அப்படி எல்லாம் ஒன்னு இல்ல நிலா. நேத்துத் தூக்கம் வரல. அதான் மாடியில நின்னுட்டு இருந்தேன். மத்தபடி ஒன்னு இல்லடா” என்று அவசர அவசரமாக சொல்ல…

 

“இல்லம்மா நீ எனக்காகப் பொய் சொல்ற. உனக்கு இங்க இருக்கப் புடிக்கல. நீ ஊருக்கே போ” என்று மீண்டும் அதையே சொல்ல தவித்துப் போனார் மதி.

 

“அவ எங்கயும் போக மாட்டா நிலா. இதுதான் அவ வீடு. இனிமே அவ இங்க தான் இருப்பா” என்று நந்தன் முடிவாகச் சொல்ல, ரம்யாவும், அகல்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்வியாகப் பார்த்தனர்.

 

“அத சொல்ல நீங்க யாரு? உங்களுக்கு என்ன உரிம இருக்கு” என்று நிலா திமிராக நந்தனைக் கேட்க.

 

“நிலா வார்த்தைய பாத்து பேசு” என்று மதி மகளை அதட்ட, “ஏய் முகில்? யார் கிட்ட என்ன பேசுற? என்ன திமிர்டி உனக்கு” என்று துருவ் முறைக்க, யாருக்கும் எதுவும் புரியவில்லை. 

 

‘இன்னைக்கு இந்த நிலாக்கு என்ன வந்துச்சு’? என்று அனைவரும் திகைக்க, நந்தன் மதியின் கையை இறுக்கிப் பிடித்தவர், “நா மதியை கல்யாணம் செஞ்சுக்கப் போற புருஷன். உனக்கு அப்பா. அந்த உரிமையில சொல்றேன். அவ இந்த வீட்டுல தான், என் கூடத் தான் எனக்குப் பொண்டாட்டிய இருப்ப” என்று அவரும் திமிராகச் சொல்ல, 

 

“அத நீங்க சொன்னா போதுமா? எங்க அம்மாவும் இதுக்கு சம்மதிக்கணும் இல்ல” என்றவள், “என்னம்மா அவர் சொல்றது உண்மையா? உனக்கு இதுல சம்மதமா?” என்று நிலா மதியின் முகம் பார்க்க, அவர் நிமிர்ந்து நந்தன் முகம் பார்த்தபடியே “ஆமாம்” என்று தலையாட்ட, குடும்பம் மொத்தமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனது.

 

நந்தன் மதியை தோளோடு அணைத்தபடி நிலா அருகில் வந்தவர், “நா சொன்னதைச் செஞ்சிட்டேன். அன்னைக்கு உன் தலையில அடிச்சு சத்தியம் பண்ணேன், உங்க அம்மா வாயால இந்தக் கல்யாணத்துக்கு அவள ஒகே. சொல்ல வைக்குறேனு. இப்ப என்ன சொல்ற நிலா”? என்று கேட்க மதிக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“அபி! நீங்க என்ன சொல்றீங்க? நிலாக்கு நீங்க சத்தியம் பண்ணிங்களா? எதுக்கு? ஏன்”? என்று புரியாமல் கேட்க, நந்தன் நிலா இங்கு ஏன் வந்தாள், எதற்காக அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள் எனத் தொடங்கி தன் அம்மாவுக்காகத் தன் உயிர் காதலையே இழக்க தயாராக இருந்தது, மதியோடு நந்தன் கல்யாணம் நடக்க அவள் இதுவரை செய்த அனைத்து முயற்சிகளையும் சொல்ல மதி வெயில் பட்ட பனியாய் உருகிவிட்டார். 

 

நிலாவைக் கட்டிக் கொண்டு எவ்வளவு நேரம் அழுதார் என்று அவருக்கே தெரியவில்லை. “இவ்ளோ நாள் நா தான் உனக்கு அம்மாவா இருந்து வாழ்க்கையைச் சொல்லி கொடுத்தேன்னு நெனச்சுட்டு இருந்தேன்டி. ஆனா, நீ தான்டி எனக்கு அம்மாவா இருந்திருக்க. நீ எனக்கு வாழ்க்கைய சொல்லி தரல நிலா. நான் இழந்த என்னோட வாழ்க்கையையே தேடி திருப்பித் தந்திருக்க. இதுக்கு நா? இதெல்லாம் நீ எனக்காக” என்றவர் மீண்டும் அழத் தொடங்க.

 

“ஹலோ ஹலோ போதும் போதும் .உங்க அம்மா, பொண்ணு சென்டிமென்ட். நானும் கொஞ்சம் அப்பா, மக சென்டிமென்ட்டை காட்டணும். நிலா நீ சொல்லு. நா சொன்னத செஞ்சுட்டேன். நீ எனக்குப் பண்ண ப்ராமிஸ் என்ன ஆச்சு”? என்று புருவம் உயர்த்த “நா உங்க பொண்ணுப்பா வாக்குக் குடுத்தா குடுத்தது தான்” என்றவள் சிவந்த கன்னம் எதையோ சொல்ல, “நிலா நீ இப்ப என்ன சொன்ன”? என்று நந்தன் ஆர்வமாகக் கேட்டார்.

 

“ம்ம்ம் உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு சொல்றேன். இன்னும் எட்டு மாசத்துல நீங்க தாத்தா ஆகப் போறீங்கன்னு சொல்றேன்” என்றவள் வெட்கம் தாங்காது அங்கிருந்து ஓட, துருவ் தான் தந்தையான செய்தி கேட்டு வானில் பறந்தவன் இவ்வளவு நேரம் அதைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்த தன் மனைவிக்குத் தன் ஸ்டைலில் ரொமாண்டிக் தண்டனை கொடுக்க அவளைத் தூரத்திக் கொண்டு ஓடினான்.

 

இவ்வளவு நாள் வறண்டு இருந்த தன் அண்ணனின் வாழ்க்கையில் வசந்தம் வந்த செய்தியோடு, தங்கள் குடும்பத்துக்கு வாரிசும் வரப்போகிறது என்று மகிழ்ந்த நந்தன் குடும்பம் முகில்நிலாவை தங்கள் குடும்பத்திற்கு தந்த கடவுளுக்கு நன்றி செலுத்தினர்.

 

அபிநந்தன், மதிநிலா திருமணம் எளிமையாக, அழகாக நடந்து முடிய அதற்கு அடுத்த முகூர்த்ததில் யாழினி, கார்த்திக் திருமணமும் விமர்சையாக நல்லபடி நடந்து முடிந்தது.

 

இந்த வருட தீபாவளி மூன்று ஜோடிகளுக்கும் தலை தீபாவளியாக இருக்க, அந்த வீடே கலை கட்டியது. அபி தன் நிலாவுக்கும், மகளுக்கு இணையாக யாழினிக்கும் தலை தீபாவளி சீர் வரிசைகளை வீடு முழுக்கப் பரப்பி வைக்க சின்னவர்கள் ‘நாங்க உங்களுக்கு கொறஞ்சவங்க இல்ல’ என்பது போல் அபிநந்தன், மதிநிலா ஜோடிகளைத் தங்கள் பரிசுகளால் குளிப்பாட்டினர்.

 

அன்று நிலாவிற்கு வளைகாப்பு. ஒரு மாதமாக மதியுடன் சிங்கப்பூர் சென்றிருந்த நந்தன் இன்று வருவதாகச் சொல்லி இருக்க நிலா கண்கள் வாசலையே பார்த்திருந்தது. மகளின் காத்திருப்பை நீட்டிக்காது வந்து சேர்ந்தனர் மதியும், அபியும்.

 

“நா உங்க மேல கோபமாக இருக்கேன். ஒரு மாசம் என்ன வி‌ட்டு போய்ட்டீங்க இல்ல. நா உங்க பேச்சு கா” என்று சிறுபிள்ளை போல் சிணுங்கி, வயிற்றில் பிள்ளையோடு அழகின் மொத்த உருவமாக நிறைந்து நின்ற மகளைப் பார்த்து மனம் நிறைந்து போனது அவள் தாய், தந்தைக்கு. 

 

“என் நிலா குட்டிக்கு அப்பா மேல என்ன கோவம்? எம் பொண்ணு கொஞ்ச நாள் முன்னாடி அவளுக்கு என்ன கிஃப்ட் வேணும்னு கேட்டதுக்கு, அவ ஒன்னு வேணும்னு கேட்டா. புள்ளதாச்சி பொண்ணு கேட்டத இல்லன்னு சொல்ல முடியுமா? அதான் அப்பாவும், அம்மாவும் அதுக்கு ஏற்பாடு செய்யப் போயிருந்தோம்” என்று சொல்ல, அன்றலர்ந்த மலர் போல் சிரித்த நிலா “நெஜமவாப்பா உண்மைய தான சொல்றீங்க”? என்று ஆவலாகக் கேட்க “நெஜம் தான் டா. நீ ஒன்னு கேட்ட. நாங்க ரெண்டு தந்திருக்கோம் பின்னாடி திரும்பிப் பாரு” என்க, நிலா வேகமாகத் திரும்பி பார்க்க, அங்கு ரெண்டு பேர் ரோஜாப்பூ போல் இரண்டு குழந்தைகளைக் கையில் வைத்திருந்தனர். நிலா தன் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு குழந்தைகள் அருகில் சென்றவள், விழி நீர் திரையிட குழந்தைகளைப் பார்த்து, அதன் பிஞ்சு விரல்களைப் பிடித்து முத்தமிட்டாள்.

 

“என்ன நிலா இப்ப உனக்கு சந்தோஷம் தான? நீ தம்பியோ, தங்கச்சியோ வேணும்னு கேட்ட. நாங்க ரெண்டையும் தந்துட்டோம். என்ன ஹாப்பித் தான? நாங்க ஒரு வாரம் முன்னையே சென்னை வந்துட்டோம்மா. அங்க ஒரு ஆஸ்ரமத்துல இந்த குழந்தைகளைத் தத்தெடுத்தோம். உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுக்கத் தான் இன்னைக்கு வந்தோம். இத நீ எதிர்பார்க்கல இல்ல”?

 

“இல்லப்பா நீங்க இப்டி தான் செய்வீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, நா ஒரு தம்பி இல்ல தங்கச்சி தான் எதிர்பார்த்தேன். இப்ப ரெண்டு பேரும் கெடச்சிட்டாங்க. நிலா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி. யாஊஊஊ” என்று குதிக்க, “ஏய் பாத்துடி! வயித்துல எம் புள்ளை இருக்கு. அதுக்கு வலிக்கப் போகும்” என்ற துருவ் நிலா தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தான்.

 

“சரி சரி, முதல்ல உன் தம்பிக்கும், தங்கச்சிக்கும் நீயே ஒரு நல்ல பேரா வை. அந்த உரிமை உனக்குத் தான்” என்ற மதியைப் பார்த்த நிலா, பெண் குழந்தைக்குத் “தாமரை” என்று பெயர் வைத்து மதியைப் பார்த்து “என்னம்மா நீயும் பாப்பாக்கு இந்தப் பேர் தான வைக்கணும்னு நெனச்ச”? என்று கேட்க, மதி மகிழ்வோடு “ஆமாடி, உன்னை எனக்கு மகளா தந்த என் தாமரை அக்கா பேர், இந்த வீட்டுல எப்பவும் கேக்கணும்னு நா ஆசப்பட்டேன். நீ அத செஞ்சுட்ட. சரி உன் தம்பிக்கும் அப்படியே ஒரு நல்ல பேரா வைச்சிடு” என்றதும் ஆண் குழந்தை காதருகில் குனிந்தவள் “யாழ்நந்தன்” என்று பெயர் வைக்க யாழினிக்கு அழுகையே வந்துவிட்டது.

 

“நீ எனக்கு ப்ரண்ட் மட்டும் இல்லடி. நீயும் எனக்கு அம்மா தான். ஒரு அம்மா தன் பொண்ணை எப்டி பொத்திப் பொத்தி பாத்துப்பாங்களோ அப்படித் தான், என்ன நீ உன் கண்ணுக்குள்ளயே வச்சு பாத்துக்கிட்ட. அம்மா, பாட்டிக்கு அடுத்து என்னை முழுசா புரிஞ்சு, மனசார நேசிச்ச ஜீவன் நீ தான்டி. நீ எனக்கு இன்னொரு அம்மா யாழி” என்றவள் யாழினியை அணைத்துக் கொள்ள, இவர்கள் இருவரின் நட்பைப் பார்த்து அனைவரும் அகம் மகிழ்ந்து போயினர்.

 

ஒரு அதிகாலைப் பொழுதில் நிலாவுக்குப் பிரசவ வலி எடுக்க, அவள் அழுதாளோ இல்லையோ துருவ், நந்தன், கார்த்திக் மூவரும் நிலா வலியில் துடிப்பதை பார்த்துக் கதறி விட்டனர். அனைவர் பிபியையும் எகிற விட்டு நிலாவின் அப்பா சேதுராமனை உரித்து வைத்தது போல் வந்து பிறந்தான், முகில்நிலா, துருவ்வின் மகன்.

 

வீடே விழாக்கோலம் பூண்டிருக்க, ராஜகுமாரன் போல் தன் குட்டி தாய்மாமன் யாழ்நந்தன் அருகில் அமர்ந்திருந்த தன் பேரனுக்கு சேதுராமனின் நினைவாக “ராம்நந்தன்” என்று பெயர் வைத்தார் அபிநந்தன். அன்றைய நாளின் ஆனந்தம் அதோடு முடியவில்லை என்பது போல் யாழினி தாயாகப் போகும் செய்தி தெரிய வர சந்தோஷம் இரட்டிப்பு ஆனது.

 

தன் அன்னையின் காதலை தேடி புறப்பட்ட நிலாவின் தேடல்… தாமரை, யாழ்நந்தன், ராம்நந்தன் என்ற நட்சத்திரங்களின் வருகையோடு இனிதாக முடிந்தது… இல்லை இனிதே தொடங்கியது…

 

          “உன் காதல் என் தேடல்” மனநிறைவோடு நிறைவு பெறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!