உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் 3

கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் சென்றிருந்தது.

யாழினிக்குப் படிப்பு எப்பவும் பாகற்காய் தான். தேர்வுக்கு முந்தைய நாள் உக்கார்ந்து பரிட்சைக்குப் படிக்கும் ரகம். ஆனால், மார்க் மட்டும் எப்போதும் 85% தொட்டு விடும். தினமும் காலையில் நிலாவுடன் காலேஜ் வரும் யாழினி, மாலை வேளையில் மட்டும் காலேஜ் முடிந்த அடுத்த நிமிடமே வீட்டிற்குப் பறந்துவிடுவாள். நிலாவுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம் என்பதால் காலேஜ் முடிந்தவுடன் லைப்ரரி சென்று ஒரு சுற்று சுற்றி விட்டு, தேவையான நோட்ஸ் எடுத்துக் கொண்ட பிறகு தான் வீட்டிற்குச் செல்வாள். அன்றும் அப்படித்தான் நிலா பரபரப்பாக லைப்ரரியில் புத்தக வரிசையில் விரல் வைத்துப் புத்தகங்களைத் தள்ளி தள்ளி வைத்து ஏதோ புக்கைத் தேடி பார்த்துக் கொண்டு அப்படியே பின்னால் நடந்து வந்தவள் கால் தடுக்கி கீழே விழப் போக அவளைத் தாங்கி பிடித்தது இரு கைகள்.

“உனக்கு ஒழுங்கா நடக்கவே தெரியாதா? இப்ப தான் நடக்கக் கத்துக்குற குழந்தை மாதிரி எப்ப பாரு விழுந்துட்டே இருக்கீயே”? என்றவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்னைத் தாங்கி இருந்தவன் கைகளிலேயே ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு அவன் முகத்தை இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் முகில்நிலா.

 

அவனும் தன்னை விழி கொட்டாமல் ரசிக்கும் அவள் கயல்விழிகளை மென் சிரிப்போடு தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

 

 “ஏய்…! ஏய்”! என்று அவள் முகத்திற்கு முன்னால் சொடுகி “ஏய் பாப்பா! எந்த உலகத்துல இருக்க நீ”? என்றது தான் தாமதம்… நிலாவுக்கு வந்ததே கோவம். “ஹலோ, யாரா பாத்து பாப்பான்னு சொல்றீங்க? எந்த ஆங்கில்ல நா உங்களுக்குப் பாப்பா மாதிரி தெரியுறேன்”? என்று எண்ணெயில் போட்ட கடுகு போல் வெடிக்க அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. 

 

“சின்னப் பிள்ளைபோல் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, உதட்டைக் குவித்து, கண்களைச் சுறுக்கி அவனைக் கோபமாகப் பார்ப்பதாக நினைத்து முறைத்துக் கொண்டு, புசுபுசுவென மூச்சு விடுறத பார்த்தா, கையில் இருக்கிற சாக்லேடை பறிகொடுத்த குழந்தை மாதிரி தான் இருக்கு. இதுல எந்த  ஆங்கில்ல பாப்பா மாதிரி தெரியுறேன்னு கேள்வி வேற?” என்றவனுக்கு ஏனோ அவளை வம்பிழுக்கு ஆசை வர அவள் தலையில் மெல்லமாகக் கொட்டியவன் “ஆமா…‌ பின்ன பாப்பா இல்லாம வேற என்னவாம்? நா பார்க்கும் போதெல்லாம் நீ எங்கயாச்சும் விழுந்து சில்லற வாங்கிட்டு தானா இருக்க. அப்றம் உன்னைப் பாப்பான்னு சொல்லாம வேற என்ன சொல்லுவாங்கலாம்” என்று கிண்டல் செய்தவனை நிலா இன்னும் இன்னும் முறைத்தவள்.

“நா ஒழுங்க தான் நடக்குறேன். அதென்ன கெரகமோ நீங்க பாக்கும்போது மட்டும் கீழ விழுந்து தொலைக்குறேன். எல்லா என்னோட பேட் டைம்” என்று அவள் உதடுகள் சொன்னாலும், அவள் மனது மட்டும் ‘நீ வந்து என்னைத் தாங்கி பிடிப்பேன்னா? நா எத்தனை முறை வேணும்னாலும் விழுந்துட்டே இருப்பேன் டா அழகா’ என்று மைண்ட் வாய்ஸ் போட, “ஏய்! என்ன மறுபடியும் எங்கயோ போய்ட்ட?” என்று அவளை உலுக்க… வச்ச கண் வாங்காமல் அவனையே ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தவள் ‘அச்சோ என்ன இது இப்டி ஆன்னு வாயா பொலந்து பாத்துட்டு இருக்கேனே. ச்சே… என்னைப் பத்தி என்ன நெனைப்பாரு’ என்று மனதிற்குள் தன்னைத் தானே திட்டியவள். “ஆஹான்… நா எங்கயும் போல, இங்க தான் நடமாடிட்டு இருக்கேன். நா ஒழுங்கா நடக்கும் போதெல்லாம் பாக்காம, அதெப்படி நா கீழ விழும்போது மட்டும் நீங்க என்னைப் புடிக்கக் கரெக்டா வரீங்களாம்?. சம் மெடிகல் மிரக்கில்” என்று கன்னத்தைத் தடவியபடி சொல்ல.

”வாயி…. வாயிஈஈஈ! ஒரு அடி ஒழுங்கா நடக்கத் தெரியல. பேச்சப்பாரு, வாய் மட்டும் இல்ல” என்று அவன் ஆரம்பிக்கும் போதே, “என்ன? நாய் தூக்கிட்டு போய்டுமாக்கும்? நாங்க எல்லாம் வெயிட் பார்ட்டி. அவ்வளவு ஈசியா என்னைத் தூக்க முடியாதே” என்று நாக்கைத் துருத்தி ஒழுங்க காட்ட, அவள் குழந்தைத் தனத்தில் அழகன் அவன் குழைந்து தான் போனான். “அதுவும் சரிதான் நல்லா குட்டி அண்டா மாதிரி தான் இருக்க. நாயால உன்னைக் கவ்விட்டு ஓட முடியாது தான்” என்று சிரித்தவனை அவள் முறைக்க “ஆமா அன்னைக்கு ராகிங்கு பயந்து கீழ விழும்போது உன்னைப் பாத்தது. அதுக்கு அப்பறம் உன்ன பாக்கவே முடியலயே.? என்ன?? ராகிங்கு பயந்து லீவ் போட்டுட்டு வீட்டுலயே இருந்துட்டியா”? என்று அவளைச் சீண்டினான்.

‘ம்க்கும்… நீ தான் டா அழகா என்னைப் பாக்கல… ஆனா, நா தினமும் உன்னைப் பாத்துட்டு தான் இருக்கேன். அதுவும் உனக்குத் தெரியமா மறஞ்சு மறஞ்சு உன்ன சைட் அடிச்சிட்டு இருக்கேனே!!!’ என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டவள் “அதெல்லாம் ஒன்னு இல்ல. நா தினமும் காலேஜ் வந்துட்டு தான் இருக்கேன். நீங்க தான் என்னைப் பாக்கல” என்று இதழ் பிதுக்கி முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொள்ள, அவள் அழகு முகம் அவன் இதய அறையில் பசை போட்டு ஒட்டியது போல் ஒட்டிக் கொண்டது. இந்த ஒரு மாதத்தில் நிலா அவனை ஒளிந்திருந்து பார்ப்பதை அவன் முதல் நாளே கவனித்து விட்டான். அவள் கண்கள் அவனை ஆசையோடு ரசிப்பதை அவன் அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான். ஏனோ நிலாவின் பார்வை அவனை வெகுவாகச் சாய்த்தது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அவன் வழிந்து நின்றதில்லை. அவனைத் தேடி வரும் காதல் தூதுகளைக் கூட “ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்” என்ற ஒரே வார்த்தையில் மறுத்து விடுவான். ஆனால், ஒரே நாளில் வெறும் ஒரு ஒற்றைப் பார்வையில் முகில்நிலா அவனை முழுதாய் வீழ்த்தி இருந்தாள். கொஞ்சம் நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன். “உன் பேர் என்ன”? என்று கேட்க.

 

நிலா, “அப்பாடி இப்பவச்சும் கேக்கணும்னு தோணுச்சே உங்களுக்கு” என்று பெருமூச்சு விட்டவள் “என்னோட பேரு முகில்நிலா” என்று சொல்ல “ம்ம்ம் சுப்பர் பேர் தான் வச்சிருக்காங்க. உன்னோட பேர் ரொம்ப அழகா இருக்கு” என்றவன் “உன்னை மாதிரியே” என்றான் அவளுக்குக் கேட்காத குரலில். “ஆமா எல்லாரும் உன்னை எப்டி கூப்பிடுவாங்க”? என்று கேட்க.

“எல்லாரும் என்னை நிலான்னு தான் கூப்பிடுவாங்க. நீங்க வேணும்னாலும் அப்டியே கூப்பிடுங்க. எனக்கு எதுனாலும் ஒகே தான்” என்று நிலா ஆர்வமாகச் சொன்னதும், அவள் முகத்திற்கு அருகில் வந்து அவள் விழிகளில் தன் விழியை கலக்க விட்டவன், “எல்லாரும் கூப்பிடுற மாதிரியே நானும் கூப்பிட்டா அப்றம் அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? நா உன்னை முகில்னு தான் கூப்டுவேன். நா மட்டும் தான் அப்டி கூப்டுவேன்” என்று அழுத்திச் சொல்ல நிலாவிற்கு அவன் குரலில் தெரிந்த வித்தியாசம் ஏன் என்று புரியவில்லை. ஆனால்,‌ பிடித்திருந்தது…  துருவ்விற்கு அதே நிலை தான், அவனுக்குமே ஏன் அப்படிச் சொன்னான் என்று விளங்கவில்லை. ‘ஏன் நா இவளுக்கு ஸ்பெஷலா இருக்கணும்னு விரும்புறேன்’ என்று குழம்பியவன் “சரி சரி டைம் ஆச்சு நீ வீட்டுக்கு போ முகில் ” என்றவன் திரும்பி வேகமாக நடந்தான்.

”ஹலோ, உங்க பேர் சொல்லாமலே போறீங்களே”? என்று நிலா கத்திக் கேட்க, அவன் நடந்து கொண்டே திரும்பாமலே “துருவ் நந்தன்” என்று சொல்ல நிலாவின் காதில் “துருவ்” என்பது மட்டுமே நன்றாகக் கேட்டது. அவன் பெயரின் எழுத்துக்களுக்கு கூட வலிக்கக் கூடாதென்று அழுத்தாமல் மெதுவாகத் “துருவ்” என்று உச்சரிக்க அவள் தந்த நிறக் கன்னம், செந்தங்க நிறமாக மாறியது.

அன்றில் இருந்து துருவ், நிலாவின் இடையில் பெயரிடப்படாத ஒரு அழகிய உறவு வளரத் தொடங்கியது. தினமும் மாலையில் லைப்ரரியில் நிலாவைப் பார்ப்பதற்காகவே காத்திருக்கத் தொடங்கினான் துருவ்.

துருவ் அந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் பெயரைத் தவிர அங்கு யாருக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது. ஒரு லோக்கல் கார்டியன் உதவியுடன் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கி இருந்தான் அவன்.

ஒரு முறை சில சீனியர் மாணவர்கள் நிலாவிடம் கலாட்டா செய்வதைப் பார்த்த துருவ் கோவத்தில் அவர்களை அடித்து விட அந்த மாணவர்களின் மொத்த கோபமும் துருவ் மீது திரும்பியது. துருவ்வை எப்படிப் பழிவாங்குவது என்று யோசித்தவர்களுக்கு நிலா தான் அவன் வீக்னெஸ் என்று அறிந்து நிலா தனியாக அவர்களிடம் சிக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இதற்கிடையில் யாழினியை துருவ்விடம் அறிமுகம் செய்து வைத்தாள் நிலா. நிலாவிற்கு துருவ் மீது விருப்பம் உள்ளது என்று தோழியின் கண்களிலேயே அறிந்து கொண்ட யாழினி துருவ்வுடன் ஒரு எல்லையில் நின்றே பழகினாள். யாழினி, துருவ் இடையே ஒரு அழகிய நட்பு உருவானது.

நிலா துருவ்வின் நிழலாகவே மாறிப் போனாள். சீனியர் மாணவர்கள் நிலா மீது வஞ்சம் வைத்து அலைவது தெரிந்து துருவ்வும் நிலாவை எப்போதும் தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு நாள் நிலா தனியாக லைப்ரரியில் உட்கார்ந்து ஒரு புக்கை வைத்துப் படித்துக் கொண்டே துருவ்வுக்காகக் காத்திருந்தாள். கதவு அசையும் சத்தம் கேட்டுத் துருவ் தான் வந்துவிட்டனோ என்று ஆவலாக எழுந்து வாசலை பார்க்க, அங்கிருந்தவர்களை கண்டு பயத்தில் உறைந்து நின்றாள்.

 

“என்ன பேபி? உன் ஆளு அந்த துருவ் வந்துட்டான்னு ரொம்ப ஆசையா எழுந்து பார்த்த?. இப்ப எங்களைப் பாத்ததும் ஏமாந்து போய்ட்ட போல” என்று குரூரமாகச் சிரித்த அந்த நான்கு சீனியர் மாணவர்களைப் பார்த்த நிலாவின் வயிற்றில் பயத்தில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது. பயத்தில் நடுங்கிய நிலா தப்பிக்க வழி தேடி தலை சாய்த்து கதவைப் பார்க்க அது அடைத்து சாத்தி இருந்தது. பயத்தில் நிலாவிற்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வர அவள் மனமோ துருவ் வந்துவிட மாட்டானா ?என்று தவித்துக் கொண்டிருந்தது.

“ஏன்டி? அந்தத் துருவ் என்ன பெரிய ஹீரோவா? அன்னைக்குச் சும்மா உன்னைக் கிண்டல் பண்ணதுக்கே எங்கள அடிச்சு அசிங்கப்படுத்தினானே, இன்னைக்கு நாங்க உனக்குச் செய்யப் போறதை போய் அவன்கிட்ட சொல்லு டி. என்ன செய்றான்னு பாப்போம்? ஆமா உன்னைத் தொட்டா அவனுக்கு ஏன்டி அவ்ளோ கோவம் வருது? அப்டி என்ன உங்களுக்குள்ள கனெக்ஷன்? என்ன நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா”? என்று ஒருவன் வக்கிரமாகச் சிரிக்க. 

இன்னொருவன் “அப்டி இருந்தாலும் சுப்பர் தான் டா மச்சி! வெறும் நிலாவை தொட்றதை விட அவனோட லவ்வர் நிலாவைத் தொட்டா தான் அவனுக்கு இன்னும் சுறுக்குன்னு வலிக்கும்” என்றவன் நிலாவை நோக்கி முன்னோக்கிச் செல்ல, நிலா கலங்கிய கண்களுடன் பின்நோக்கி நகர்ந்தவள் சுவற்றில் இடித்துக் கொண்டு இதற்கு மேல் நகர முடியாது என்ற நிலையில், அந்த மாணவனின் கை அவளை நோக்கி உயர அதுவரை அவள் கண்களில் அணைக்கட்டி வைத்திருந்த நீர் கரையை உடைத்துக் கொண்டு விழத் தயாராக, கீழ் இமையில் இறங்கி நிற்க கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

கண்மூடி இருந்தவள் சிறிது நேரம் எதுவும் நடக்காது போக, மெல்ல இமை திறந்து பார்க்க அவள் முன் முதுகை காட்டி நின்றிருந்தான் துருவ். பின்னிருந்து பார்க்கும் போதே அது யாரென்று தெரிந்து விட நிலா அவனைப் பின்னாலிருந்து இறுக்கிக் கட்டிக்கொண்டாள். நிலா மனதில் அந்த நிமிடம் துருவ் முழுதாக நிறைந்து விட்டான். தாயைக் கண்ட பிள்ளையின் நிம்மதி அவள் இதயமெங்கும் பரவியது. அவன் முதுகில் முழுதாய் பதிந்திருந்தவள் உடல் பயத்தில் நடுங்குவது துருவ் விற்கு நன்றாகத் தெரிய, தன் மார்பின் மீதிருந்த அவள் கையைத் தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

காலேஜின் மொட்டை மாடியில் நிலா தூரமாகத் தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, துருவ் அவளைத் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான்.

துருவ் வந்ததும் அந்த மாணவர்கள் தலைதெறிக்க அங்கிருந்து ஓடி விட, துருவ் அனைவரையும் துரத்திப் பிடித்து அடி வெளுத்தவன். நிலா கையைப் பிடித்துத் தரதரவென மேல் மாடிக்கு இழுத்து வந்தான். “ஏன் டி அறிவு கெட்டவளே, காலேஜ்ல எல்லாரும் வீட்டுக்குப் போய்ட்டாங்க இல்ல? உனக்கு மட்டும் இவ்வளவு நேரம் லைப்ரரியில என்னடி வேல? ஏற்கனவே அந்தப் பசங்க நீ எப்ப தனியா சிக்குவன்னு காத்துக் கெடக்கானுங்க. இதுல நீயே அவனுங்களுக்கு ரூட் போட்டு தரியாடி லூசே” என்று திட்டியவனை அவள் தவிப்பாகப் பார்த்தாள்.

“என்ன உனக்காகத் தான் டா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்னு கண்ணாலயே சொல்றீங்கலாக்கும். சரி அப்டியே இருந்தாலும் நா வர லேட் ஆச்சில்ல கெளம்பி போக வேண்டியது தானா? ஏன்டி அங்கயே உக்காந்திருந்த? நா மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்” என்றவன் கேள்விக்குப் பதில் சொல்லாது நிலா அமைதியாக இருக்க, கடுப்பான துருவ் “ஏய் முகில் நா இங்க கத்திட்டு இருக்கேன். நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம் வாயா தொறந்து பேசுடி”

 

“துருவ்…”

“அது…”

“அது வந்து நா…. நா… எனக்கு” என்று அவள் இழுக்க,

“ஏய் சொல்ல வந்ததை முழுசா சொல்லித் தொல டி. எதுக்கு மென்னு முழுங்குற? சொல்லு” என்று அவன் முடிக்கும் முன் “நா உன்னை விரும்புறேன்னு நெனைக்குறேன் டா, சிம்டம்ஸ் எல்லாம் அப்படித் தான் சொல்லுது. நா…நா உன்னை விரும்புறேன் துருவ். ஐ அம் இன் லவ் வித் யூ” என்று ஒரே மூச்சில் தட்டுத் தடுமாறி தன் காதலைச் சொல்லி முடிக்க துருவ் அவளைத் தீயாக முறைத்துக் கொண்டிருந்தவன்… “கெளம்பு உன்னை வீட்டுல விட்டுட்டுப் போறேன்” என்று அவளைத் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு போய் அவள் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் இறக்கி விட்டவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!