உன் காதல் என் தேடல்

தேடல் 4

 

தன் காதலை சொன்னதற்கு துருவ் எந்தப் பதிலும் சொல்லாமல் போனது நிலாவை வெகுவாக வருத்தியது.

 

”மனசுல பெரிய இவன்னு நெனப்பு, ஒரு பொண்ணே வலிய வந்து முதல்ல ஐ லவ் யூ சொன்னதும் இவன் மனசுல தான் பெரிய மன்மதன்னு நெனச்சிட்டான் போல, அந்தக் கொரங்கு. ஒரு வார்த்தை ஏதாவது சொல்லிட்டு போயிருக்கலாமில்ல, பன்னி, எரும,கழுத” என்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வாய்விட்டு புலம்பிக் கொண்டிருக்க, யாழினி நங்கென அவள் தலையில் வைத்த கொட்டில் நிகழ்வுலகிற்கு வந்தவள் “ஏய் யாழி எரும, எதுக்குடி இப்ப என்ன கொட்டுன”? என்று தலையைத் தடவிக்கொண்டே கேட்டாள் நிலா.

 

“கொட்றதா? அப்படியே அறுவா எடுத்து நடுமண்டையில நச்சுன்னு போடனும் உன்னை. அம்மா வீட்டுல இல்ல, நீ பாட்டுக்கு மெயின்கேட்டை தொறந்து போட்டுட்டு இங்க உக்கார்ந்திருக்க. சரி அது கூடப் பரவாயில்ல. நா உன் ரூம்குள்ள வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சு, அதைக் கூடக் கவனிக்காம அப்டி என்னத்த நெனச்சுடி பொலம்பிட்டு இருக்க நீ?”

 

“அடி போடி, நானே துருவ்வை நெனச்சு கவலையில இருக்கேன் நீ வேற கடுப்பேத்திட்டு”

 

”ஏன் என்ன ஆச்சு?, எதுக்குக் கவலை? துருவுக்கு உடம்பு கிடம்பு எதும் சரியில்லயா?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல யாழி, அவன் நல்ல கல்லு புள்ளையாராட்டாம் தான் இருக்கான்… கூடவே சார் என்மேல கோவமாவும் இருக்காரு” என்ற நிலாவின் முகம் வாடிவிட்டது.

 

யாழினி நிலாவை சந்தேகமாகப் பார்த்தவள், “துருவ் சும்மா சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவப்படுற ஆள் இல்லயே? நீ ஏதாவது கேனத்தனமா செஞ்சிருப்ப. அதான் அவரு திட்டி இருப்பாரு… நீ என்னடி செஞ்ச?”

 

“அது ஒன்னும் இல்ல யாழி இன்னைக்கு லைப்ரரியில” என்று ஆரம்பித்தவள் நடந்ததைத் தோழியிடம் ஒப்பிக்க யாழினிக்கு தூக்கிவாரிப் போட்டது. “ஏய் நிலா என்னடி சொல்ற? உனக்கு ஒன்னும் இல்லயே”? என்று பதறியவள் நிலாவை கட்டிக் கொண்டாள்.

 

”இல்ல யாழி, எனக்கு ஒன்னும் இல்ல. துருவ் கரெக்ட் டைக்கு வந்துட்டான். அப்றம் தா என்கிட்ட கோச்சிக்கிட்டு திட்டிட்டுப் போய்ட்டான்” என்று நிலா மீண்டும் சைலண்ட் மோடுக்கு போய் விட.

 

“ம்ம்ம் ஆமா, நீ பண்ண வேலைக்குத் திட்டாம கொஞ்சுவாங்களாக்கும்? துருவ் வர லேட்டாச்சுன்னா நீ பேசாம கெளம்பி வர வேண்டியது தானாடி? ஏன் நீ வெய்ட் பண்ணனும்? இப்டி ஒரு சிக்கலை இழுத்து விடணும்? அதான் துருவ்வுக்கு கோவம் வந்திருக்கு… இதுல ஒரு தப்பும் இல்ல ” என்ற யாழினி அங்கிருந்த தண்ணி பாட்டிலை எடுத்துக் குடிக்கப் போக, “இல்ல யாழி, அவன் அதுக்கெல்லாம் ஒன்னும் கோச்சிக்கல. நா உன்னை விரும்புறேன். ஐ லவ் யூன்னு சொன்னேன். அதுக்குத் தான் கோச்சிக்கிட்டுப் போய்ட்டான்” என்று அப்பாவியாகச் சொல்ல, அதிர்ச்சியில் யாழினிக்குக் குடித்த தண்ணீர் புரையேறி தொண்டையில் சிக்கிக் கொள்ள வாயில் இருந்த தண்ணீர் மொத்தமாக வெளியே வர “லொக் லொக்” என்று இரும்மியவள் தலையைத் தட்டிக்கொண்டே நிலாவைப் பார்க்க அவள் அப்படியே அப்பாவி போலவே முகத்தை வைத்துக் கொண்டு, “என்ன ஆச்சு யாழி? தண்ணிய மெதுவா குடிக்க வேண்டியது தான, ஏன் இப்டி? பாரு எப்படிப் புரையேறுது” என்றது தான் யாழினிக்கு வந்த கோவத்தில் நிலா தலையில் இன்னும் பல கொட்டுகளை வைத்தாள். 

 

“ஏன்டி புத்தி கெட்டவளே! என்ன காரியம்டி பண்ணி வச்சிருக்க? உனக்கு இப்ப என்ன வயசாகுதுன்னு நீ லவ் பண்ண கெளம்பிட்ட? இன்னும் காலேஜ்ல சேர்த்து முழுசா மூனு மாசம் ஆகல அதுக்குள்ள காதலா? துருவ் பத்தி என்ன தெரியும்னு நீ அவனை லவ் பண்ற…? சொல்லுடி என்ன தெரியும், அவனைப் பத்தி உனக்கு”? என்று கத்தியவள் “அவன் பேரைத் தவிர அவனைப் பத்தி ஒன்னுமே தெரியாதப்போ ஏன்டி இப்டி செஞ்ச? உனக்கு அவனைப் புடிக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா. நீ இப்டி காதல் அது இதுன்னு சிக்குவன்னு நா சாமி சத்தியமா நெனைக்கல. உன்கிட்ட நா இதை எதிர்பார்க்கல நிலா” என்று யாழினி நிலாவை வறுத்தெடுக்க.

 

“நா என்னடி பண்றது, எனக்கு துருவ்வை ரொம்ப புடிச்சிருக்கு. அவன் கூட இருக்கும்போது நா ரொம்ப சேஃபா ஃபீல் பண்றேன்டி. அம்மா, பாட்டி, உனக்கடுத்து அவன் கிட்ட மட்டும் தான் எனக்கு இப்டி ஒரு ஃபீல் வருது. என்னையும் அறியாம என் மனசு அவன்கிட்ட ஓடுது. நா என்ன பண்றது”? என்று விசும்ப அவள் கண்களே அவளுக்கு துருவ் மீதிருக்கும் அன்பை யாழினிக்கு தெளிவாக எடுத்துரைத்தது. துருவ் மீதிருக்கும் தூய்மையான அன்பிற்கு நிலா காதல் என்று பெயர் வைத்திருக்கிறாள் என்று யாழினிக்குத் தெளிவாக புரிந்தது. நிலாவை பரிவாய் பார்த்த யாழினி நிலாவை நோக்கி தன் இருகரம் நீட்டி வாவெனக் கண்களாலேயே அழைக்க, நிலா உடனே ஓடிச் சென்று யாழினி கட்டி பிடித்தவள். அவள்மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

 

நிலா தலையை மெதுவாகத் தடவியபடியே, “நா காதல் தப்புன்னு சொல்லலடா நிலா குட்டி. பட், இந்த வயசுல நமக்கு படிப்பு தான் முக்கியம். காதல் அது இதுன்னு படிப்பை கோட்டை விட்டுட்டா, அப்றம் நம்ம எதிர்காலமே வீணாப் போயிடும். நமக்குத் தெரிஞ்ச வரை துருவ் நல்லவன் தான். நா இல்லன்னு சொல்லல. பட், அது மட்டும் போதாது டா. இது வாழ்க்கை. நல்லா யோச்சு தா எந்த முடிவையும் எடுக்கணும். முதல்ல நீ படிப்பைக் கவனி. துருவ்வும் இப்ப ஸ்டூடண்ட் தான். சோ, உங்க கவனத்தைப் படிப்புல காட்டுங்க. அப்றம் துருவ் பத்தி முழுசா தெரிஞ்சிக்கோ, ஒன்னும் அவசரம் இல்ல. இப்ப படிப்பு தான் முக்கியம். அம்மா உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்கன்னு உனக்கே தெரியுமில்ல? சரி…, துருவ் மேல உனக்குக் காதல் இருக்கு… ஓகே. அதுக்கு நா எதுவும் சொல்லல. பட், அது உன்னோட ஸ்டடீஸ்க்கு அப்றம் தான் இருக்கணும். இந்த லவ்வு ஜவ்வெல்லாம் உன்னோட படிப்பை எந்த வகையிலயும் அபெக்ட் பண்ணகூடாது. இன்னும் நெறைய வருஷம் இருக்கு காதலிக்க. அப்ப ஆரஅமர பொறுமையா உக்காந்து, மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ணுங்க. ஓகே வா”? என்றது தான் தாமதம் நிலா வேக வேகமாக “ஓகே” என்று தலையாட்டியவள், “நீ சொன்னதெல்லாம் எனக்கு ஓகே தான்” என்று சத்தமாகக் கத்தியவள் யாழினியை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

அடுத்து வந்த ரெண்டு நாட்களும் துருவ், நிலா அருகில் இருந்தானே தவிர எதுவும் பேசவில்லை. யாழினி இவர்கள் இடையே நடக்கும் நாடகத்தைக் கண்டும் காணாமல் இருந்து விட்டாள். 

 

நிலா துருவ்விடம் பேச முயல, அவன் கோபமாக பார்க்கும் பார்வையில் கப்பென வாயை மூடிக் கொள்வாள். அவன் பேசாவிட்டாலும் தன் அருகில் இருப்பதே போதும் என்று நிலாவும் அமைதியாகத் தன் படிப்போடு சேர்த்து துருவ்வை சைட் அடிப்பதையும் சிறப்பாகச் செய்து வந்தாள். 

 

துருவ்வுக்கு முகிலின் பார்வையின் அர்த்தம் நன்றாகப் புரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. (சில நேரங்களில் நாம் காதலிப்பதை விட ஒருவரால் நாம் உண்மையாகக் காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வு அற்புதமானது. அந்த அற்புத உணர்வை துருவ் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருந்தான். அந்த அற்புத உணர்வை அவனுக்கு வாரிக் கொடுத்த அவனவளுக்குமே தெரியாமல்.)

 

கண்மூடி திறப்பதற்குள் ஒரு வாரம் ஓடிவிட, துருவ் பேசாமல் இருந்தது நிலாவை ரொம்பவே கலங்க வைத்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்தவள். ஒரு நாள் பொங்கி விட்டாள். அவன் தங்கி இருக்கும் வீட்டிற்கே சென்று. அவன் சட்டை கலரை பிடித்து உலுக்கு உலுக்கென்று உலுக்கிவிட்டாள்.

 

“ஏன்டா டேய்! அப்படி என்ன டா நா பெருசா தப்புப் பண்ணிட்டேன்? ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற? எப்பப் பாரு வைப்ரேட் ல வச்ச ஃபோன் மாதிரி குதிச்சுட்டே இருக்க? எனக்கு உன்னைப் புடிச்சிருந்தது. அத உன்கிட்ட சொன்னேன். அதுல என்ன தப்பிருக்கு? உன்னைப் புடிச்சிருக்குனு உன்கிட்ட தான சொல்லமுடியும். போஸ்டர் அடிச்சு தெருவுலயா ஒட்ட முடியும்? அன்னைக்கு அந்த நிமிஷத்தில் என் மனசுல இருக்கிறத உன் கிட்ட சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன். அதுக்கென்னமோ நீ இப்படி முறுக்கிக்கிட்டு இருக்க. நீ ரொம்ப ஓவரா தான் பண்ற துருவ். சரி உனக்கு என்னைப் புடிக்கல, அதை என் மூஞ்சுக்கு நேர சொல்லிட்டு போக வேண்டியது தானா” என்றவள் குரல் கம்மி விட்டது, “உனக்கு என்னைப் புடிக்கலன்னு தெரிஞ்சா நானும் உன்னை மறந்துடுவேன்” என்றவள் கண்கள் கலங்க, “மறக்க முடியுமான்னு தெரியல. அட்லீஸ்ட் மறக்க முயற்சியாது பண்ணுவேன்” என்று சொல்லிக்கொண்டே துருவ்வைப் பார்க்க அவன் கண்கள் அக்னி குழம்பாய்ச் சிவந்திருந்தது.

 

நிலா கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றவன், வீட்டு வாசலில் நின்ற கார் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளி விட்டு, மறுபக்கம் இருக்கையில் அமர்ந்து கொண்டான். பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீபை எடுத்து அவள் கண்களைக் கட்ட, “யேய் துருவ்! என்ன பண்ற நீ? எதுக்கு இப்ப என் கண்ணைக் கட்டுற”? என்று கத்திக் கொண்டே கண்கட்டை அவிழ்க்க முயல, “இப்ப நீ கட்டை அவுத்த நா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. பேசாம வாய மூடிட்டு உக்காருடி” என்று கோபமாகக் அவன் கத்த அந்தக் கத்தலில் நிலா உடல் முழுவதும் நடுநடுங்கி விட கப்பென வாயை மூடிக்கொண்டாள்.

 

கார் அதிக வேகத்தில் சீறிப்பாய நிலாவிற்கு எங்கு இதயம் வாய் வழியே வெளியே வந்து விழுந்து விடுமோ என்று பயந்தவள் “ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா போ துருவ். எனக்குப் பயமா இருக்கு” என்று ஈனஸ்வரத்தில் கெஞ்ச அவன் எதையும் காதில் வாங்குவதாக இல்லை. ஒரு மணி நேரப் பயணத்தில் காரை நிறுத்தியவன், நிலாவை காரில் இருந்து வெளியே இழுத்த, அடுத்த நிமிடம் அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டு நடக்கத் தொடங்கினான். 

 

போன நிமிடம் வரை பயத்தில் துடித்த நிலாவின் இதயம் இப்போது அவன் கைகளில் மிதக்கும் தருணத்தை நினைத்து சொல்ல முடியாத ஒரு இதமான உணர்வில் உழன்றது. அடுத்த நொடியே ‘அய்யோ நம்ம இவன் சட்டையைப் பிடிச்சு உலுக்குனதுக்குப் பழிவாங்க இப்டியே தூக்கிட்டுப் போய் எங்கயாது பள்ளத்தில போட்டுருவானோ’ என்று வழக்கம் போல அவளது குரங்கு புத்தி யோசிக்க ‘ச்சே ச்சே துருவ் அப்டி எல்லாம் செய்யமாட்டான். அவன் குட் பாய்’ என்று அவளை அவளே சமாதானப்படுத்திக் கொண்டவள் அவன் சட்டையோடு அவன் நெஞ்சையும் சேர்ந்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

 

பத்து நிமிடம் அவளைக் கையில் சுமந்து சென்றவன் மெதுவாக அவளைத் தரையில் இறக்கி விட்டு அவள் முதுகுக்குப் பின்னால் வந்து நின்று அவள் கண் கட்டை அவிழ்த்து விட, ஜில் என்று முகத்தில் மோதிய தென்றல் காற்றை சுவாசித்த படி கண்களைக் கசக்கி ஒட்டி இருந்த விழி இமைகளைப் பிரித்தெடுக்க, அவள் விழிப்பாவையில் விழுந்த காட்சியில் உள்ளம் தொலைத்து சிலையாக உறைந்து நின்றுவிட்டாள்.

 

சுற்றி எங்குப் பச்சைப் பசேல் என்று மரங்கள் நிறைந்திருக்க, வெள்ளியை உருக்கி வானில் இருந்து ஊற்றியது போல் ஆரவாரத்தோடு பூமியுடன் தன் நீர் கரத்தை கோர்த்துக் கொண்டிருந்தது அந்த நீர்வீழ்ச்சி. வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த மரம், செடி, கொடிகள். அந்த மலர்களில் இருந்து வந்த அருமையான மணம், நிலாவின் மூளையைச் செயலிழக்க வைக்க, இது பூமியா இல்லை உடலோடு சொர்க்கத்திற்கு வந்து விட்டேனா? என்று மூளை கேட்ட கேள்விக்கு துருவ்வின் குரல் இன்னும் நீ பூமியில் தான் இருக்கிறாய் என்று உணர்த்தியது.

 

இமைகள் நனைய துருவ்வை திரும்பிப் பார்த்தவள் கண்களில் அவள் காதல் துளித்துளியாக வழிந்து கொண்டிருந்தது.

 

துருவ்,”நீ கேட்ட எல்லாக் கேள்விக்கும் பதில், நானும் உன்னை விரும்புறேன்டி. என்னைக்கு உன்னை முதல்ல பார்த்தேனோ அன்னையில இருந்து என்னை ரசிக்கிற இந்தக் கண்ணைக் காதலிக்கிறேன். மறஞ்சு மறஞ்சு என்னை சைட்டடிக்கிற உன்னோட திருட்டுத்தனத்தைக் காதலிக்கிறேன். என்னைப் பார்த்ததும் மலருற உன் சிரிப்பைக் காதலிக்கிறேன். சரிக்கு சரிய என்னோட சண்ட போடுற உன் குழந்தைத்தனத்தை காதலிக்கிறேன், மொத்ததில் உன்னை என் முகிலை நா மனப்பூர்வமாக விரும்புறேன்டி. எப்ப நா உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சேனோ அன்னைக்கு முடிவு செஞ்சேன். உனக்கும் என் மேல இருக்குறது காதல்னு நீ உணரும் போது இந்த அழகான இடத்துக்கு உன்னைக் கூட்டிட்டு வந்து இந்த இயற்கையை சாட்சியா வச்சு என் மனசை உன்கிட்ட சொல்லணும்னு. நா இப்டி எல்லாம் என் காதலை சொல்லனும்னு ப்ளான் பண்ணி வச்சா? நீ…”? என்றவன் குரலில் அதுவரை உருகி வழிந்த காதல் மறைந்து கோவம் எட்டிப் பார்க்க, “நீ என்னடானா ‘ஒரு டீ, ரெண்டு சமோசான்னு ஆர்டர்’ சொல்ற மாதிரி ஐ லவ் யூ துருவ்னு அசால்ட்டா சொல்லிட்டு… அதுக்குப் பதில் வேற கேக்குற நீ…? உன்னையெல்லாம் என்ன செஞ்சா தகும்”? என்று அவளை முறைக்க. 

 

“அன்னைக்கு எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமாடி உனக்கு? இன்னைக்கு என்ன சொன்ன நீ? என்னைப் புடிக்காட்டி சொல்லு நா உன்னை மறந்துடுறேன்னு சொன்ன இல்ல, நீ என்னை மறக்குறது இல்லடி? அப்டி ஒரு நெனப்பு கூட உன் மனசுல வரக்கூடாது. நீ என்னோட முகில். உன் மனசும், காதலும் இந்தத் துருவ்க்கு மட்டும் தான் சொந்தம். அந்த இடத்தை நா யாருக்கும் விட்டுத் தரமாட்டேன்” என்றவன் குரலில் தான் அனல் வீசியதே தவிர, அதற்கு நேர்மாறாக அவன் கண்கள் கலங்கி இருந்தது.

 

நிலா அழுகை கலந்த புன்னைகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் கண்கள் கலங்கிய அடுத்த நொடி ஓடி வந்து அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

 

துருவ்வும் அவன் முகிலும் காதல் என்னும் வானில் சிறகடித்துப் பறந்தாலும் அவர்கள் படிப்பை அவர்களின் காதல் எந்த வகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டனர். துருவ் நிலாவைக் காதலியாக மட்டுமில்லாது தன் மாணவியாகவும் ஏற்றுக் கொண்டு அவள் படிப்பில் உதவினான்.

 

அன்பில் ஆரம்பித்த உறவு காதலாக மலர்ந்து அழகாக நகர, எல்லாம் நல்லபடி நடந்தால் விதிக்கு வேலை ஏது என்பது போல் வந்து இறைவன் அவர்கள் பிரிவுக்காகக் குறித்தான் அந்நாள்.

 

அந்த வருடம் துருவ் தன் கடைசி தேர்வை எழுதி இருந்தான் . நிலாவும் செகண்ட் இயர் ஃபைனல் செமஸ்டர் எழுதி முடித்திருந்தாள்.

 

நிலா முகம் வாடி இருக்க, துருவ் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான். “முகில் இப்ப என்ன ஆகிடுச்சுன்னு நீ இப்டி முகத்தை சோகமா வச்சிருக்க? அம்மாக்கு வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு. இனிமே நீ அந்த ஊர் காலேஜ்ல தா உன்னோட படிப்பை கண்டினியூ பண்ணப் போற! அவ்ளோ தான? இதுக்கு ஏன்டி நீ கவலைப் படுற? எனக்கும் படிப்பு முடிஞ்சு போச்சு. இன்னைக்குத் தான் நா காலேஜ் வர்ர கடைசி நாள். இனி நானும் இங்க இருக்கப் போறதில்ல. நீ அம்மா கூடப் போய் அந்தக் காலேஜில ஜாய்ன் பண்ணி உன்னோட படிப்பை சூப்பரா முடி முகில். அதுக்குள்ள நானும் என்னோட லைஃப்ல எனக்குன்னு ஒரு இடத்தைப் புடிச்சிடுவேன். அப்றம் என் முகிலை கல்யாணம் பண்ணிக்கிட்டு, அழகா ரெண்டு குட்டிப் போட்டுட்டு ஜாலியா செட்டில் ஆகிடுவேன்” என்று நிலாவை கட்டிக் கொண்டு சமாதானம் செய்ய நிலா அவன் அணைப்பில் சற்று நிம்மதி அடைந்தவள். “நீ சொல்றது எல்லாம் எனக்கு ஓகே தான் துருவ். ஆனா, நா ஊருக்கு போறதுக்கு முன்ன நீ ஒரு முறை என்னோட அம்மாவை வந்து பாரு. நம்ம லவ் பத்தி அவங்கிட்ட சொல்லிடலாம். அவங்க கண்டிப்பா ஒத்துக்கு வாங்க. அப்ப தான் என்னால நிம்மதியா படிக்க முடியும்.”

 

”அவ்ளோ தானா?! நாளைக்கு மறுநாள் நா என்னோட வருங்கால மாமியாரை வந்து பாக்குறேன். நா பேசுற பேச்சுல நீ தான் டா என் பொண்ணுக்கு புருஷன்னு ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதிக் கையெழுத்து போட்டே குடுப்பாங்க பாரு” என்றவன் அவள் ரசிக்கும் அவன் சிரிப்பை அவளுக்குத் தந்துவிட்டுச் சென்றான்.

 

அது தான் கடைசியாக நிலா, துருவ்வைப் பார்த்தது. அதன் பிறகு இன்று தான் அவனைச் சந்திக்கிறாள். அதுவும் அவள் தொடமுடியாத தூரத்தில்.

 

“இனி நிலாவின் நிலை என்ன”?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!