உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 8

 

அன்று ஞாயிற்றுக்கிழமை, துருவின் தொல்லை இல்லாமல் அன்றைய பொழுதை ஜாலியாகக் கழிக்க நினைத்து யாழினியோடு, நிலா ஊர் சுற்றக் கிளம்பி ஒரு காஃபி ஷாப்புக்குப் போக, அவள் கெட்ட நேரம் அவளுக்கு முன் அங்கு துருவ்வும், கார்த்திக்கும் இருந்தனர். அவர்கள் நிலா, யாழினியைக் கவனிக்கவில்லை. தோழிகள் இருவரும் துருவ், கார்த்திக் அங்கிருப்பதைப் பார்த்துவிட்டு விதி வலியது என்று புலம்பிய விட்டு அவர்களை விட்டு ரெண்டு டேபிள் தள்ளி அமர்ந்தனர்.

 

நிலா ஐஸ்கிரீம் வேணும் என்று கேட்க, யாழினி ஐஸ்கிரீம் வாங்கச் செல்ல. 

 

நிலா தன் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, அவள் தனியாக இருப்பதைப் பார்த்த ரெண்டு பேர் அவளிடம் தப்பு தப்பாகப் பேசி வம்பிழுப்பதை, தற்செயலாகத் திரும்பிய கார்த்திக் பார்த்து விட்டு,”டேய் துருவ்! அங்க பாரு டா நிலா. நம்ம நிலாவை அந்தப் பொறுக்கி பசங்க வம்பிழுக்குறாங்க போல. வாடா போய் அவனுங்கள என்னன்னு கேப்போம்” என்று துருவ் கையைப் பிடித்து இழுக்க, “டேய் டேய்! பொறு டா. எதுக்கு இப்படி குதிக்கிற? கொஞ்சம் பொறுமையா இரு” என்றவனை கார்த்திக் எரிச்சலாகப் பார்க்க.

 

இங்கு நிலா அந்தப் பொறுக்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள். “இங்க பாருங்க மிஸ்டர்.பொறுக்கிஸ்… மரியாதையா இங்கிருந்து போய்டுங்க. இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இங்க இருந்தாலும் உங்களுக்கு நடக்கப்போற சேதாரத்துக்கு நா பொறுப்பில்ல. கெட்ட நேரத்தை காசு குடுத்து வாங்காதீங்க. அவ்ளோதான் சொல்லிபுட்டேன் ஆமா” என்று கெத்தாக சொல்ல.

 

“ஏய் என்னடி, எங்களையே மிரட்ற? பாக்க பிஞ்சு வெண்டக்கா மாதிரி இருந்துட்டு எங்களை பயமுறுத்துறியா? இப்ப நா உன் கையைப் புடிக்கிறேன். அது எப்டி எனக்குச் சேதாரம் ஆகுதுன்னு நானும் பாக்குறேன்” என்று சொல்லிக் கொண்டே ஈஈஈயென்று இளித்த படியே அவன் நிலாவின் கையைப் பிடிக்கப் போக அடுத்த நொடி தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் குப்புற விழுந்து கிடந்தான். அடுத்தவன் “யாருடா என் ப்ரண்டை அடிச்சது” என்று திரும்பிப் பார்க்க, ஒரு கையில் அந்தப் பொறுக்கியின் மண்டையில் அடித்து உடைந்த கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலும், மறு கையில் நிலாவுக்காக வாங்கி வந்த ஐஸ்கிரீமையும் வைத்துக் கொண்டு சண்டிராணி போல் நின்ற யாழினியைப் பார்த்து, “கம் ஆன் யாழி! கம் ஆன்”! என்று நிலா விசில் அடித்துக் கைதட்டிச் சிரிக்க, யாழினி அந்தப் பொறுக்கிகளை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தாள்.

 

பறந்து பறந்து அந்தப் பொறுக்கிகளை அடி வெளுக்கும் யாழினியை பார்த்து கார்த்திக் வாய்பிளந்து நிற்க, “டேய் துருவ் என்னடா இவ? ஜாக்கிச்சான் மாதிரி இப்படிப் பறந்து பறந்து அடிக்கிறா?” என்று கார்த்திக் அதிர்ச்சியில் நிற்க, “பின்ன நீ என்ன அவள சின்சான்னு நெனச்சியா? அவ சரியான ரவுடிடா. அவளைப் பத்தி தெரிஞ்சு தான் உன்ன சும்மா இருக்கச் சொன்னேன். யாழினி, நிலாவோட பர்சனல் பாடிகாட் மாதிரி. அவ மேல சின்னத் துரும்பு கூட விழ விடமாட்ட. அப்படி இருக்க இவனுங்க எல்லாம் எம்மாத்திரம்” என்ற துருவ் அமைதியாக அவனுடைய கோல்ட் காபியை குடித்துக் கொண்டே சண்டையை வேடிக்கை பார்த்தான்.

 

“யாழி என்னோட ஐஸ்கிரீம்?. பாத்து சண்டையில் கீழ போட்டுடாத” என்ற நிலாவை முறைத்த யாழினி “தின்னி மாடே! இந்தாடி” என்று ஐஸ்கிரீம் கோன்னை நிலாவிடம் தூக்கிப் போட்டவள் அந்த ரெண்டு பொறுக்கிகளையும் தூக்கிப்போட்டு மிதிக்க, தப்பித்தால் போதுமென்று அந்தப் பசங்க தெறித்து ஓடிவிட்டனர். யாழினி கைகளைத் தட்டி தூசிகளை உதறியவள், “ஏய் நிலா டைம் ஆச்சு வாடி போலாம்” என்று அழைக்க, நிலா மறக்காமல் ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு யாழினி பின்னால் செல்ல, பாவம் கார்த்திக்குத் தான் யாழினியுடனான திருமணத்திற்குப் பின்பு அவனுடைய எதிர்காலம் இப்போதே அவன் கண்களுக்கு‌ பிரகாசமாகத் தெரிந்தது.

 

கார்த்திக் கொஞ்சி, கெஞ்சி யாழினி பின்னால் அலைந்து, திரிந்து போராடிப் பார்த்தும் யாழினி கார்த்திக்கை கண்டு கொள்ளவும் இல்லை அவன் காதலை ஏற்கவும் இல்லை.

 

ஒருமுறை நிலா கார்த்திக்கிற்கு சப்போட்டாக யாழினியிடம் பேசினாள்.

 

“ஏன் யாழி கார்த்திக் உன் பின்னால இப்படி ஜொல்லு விட்டுட்டு சுத்துறாரே, நீ ஏன் அவரைத் திரும்பி கூடப் பாக்க மாட்டேங்கிற? அவரு ரொம்ப நல்லா டைப்டி. நல்லா மனுஷன். ஐ திங்க் அவரு உன்னை உண்மையா காதலிக்கிறாருன்னு எனக்குத் தோணுது. நீ ஏன் அவர கன்சிடர் பண்ணக் கூடாது? அவரு உனக்கு பர்ஃபெக்ட் மேட்ச்டி” என்ற நிலாவை யாழினி முறைக்க, “ஏய் யாழி, சும்மா முறைக்காத. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?”

 

“இதென்னடி கேள்வி? அவனை எனக்குப் புடிக்கல, அதான் திரும்பிப் பாக்கல” என்ற யாழினியின் முக்ததைத் தன் புறம் திருப்பிய நிலா “கார்த்திக்கை புடிக்காதனால அவரை வேணாம்னு சொல்றீயா? இல்ல என்னை உனக்கு ரொம்பப் புடிக்கிறனால அவர அவாய்ட் பண்றியா”? என்று தன்னை முறைக்கும் நிலாவை சின்னச் சிரிப்போடு பார்த்த யாழினி.

 

“இந்த பாரு நிலாகுட்டி எனக்குக் கார்த்திக்கைப் புடிச்சிருக்கு தான். நல்லா கொழு கொழுன்னு அமுல்பேபி மாதிரி அழகா இருக்கவனை யாருக்கு தான் புடிக்காது சொல்லு”?

 

நிலா, “அப்றம் ஏன்டி அவர் லவ்வுக்கு மட்டும் மாட்டேன்னு சொல்ற?”

 

யாழினி இழுத்து மூச்சு விட்டவள் “லிசன் நிலா, அவன் ஆணழகன் தான். நா ஒத்துக்குறேன். அதுக்காக அவனை நான் காதலிச்சே ஆகணும்னு என்ன கட்டாயம்? சரி, ஒருவேளை நா அவனைக் காதலிக்கிறேன்னு வச்சிக்கோ, நா அவனைத் தான் கல்யாணம் பண்ண வேண்டி வரும். அப்படி அவனை நான் கல்யாணம் பண்ணா என்னோட நிலாவை நா இழக்க வேண்டி வரும். எதுக்காவும், யாருக்காகவும் நா என்னோட நிலாவை இழக்க தயாரா இல்ல. நீ இங்க வந்த வேலை நல்லபடியா முடிஞ்சாலும் சரி, இல்ல தப்பா போனாலும் சரி காலம் முழுக்க உக்காந்துட்டு அழப்போறது நீ தான். அப்ப உனக்கு ஆறுதல் சொல்ல துணையா நான் உனக்கு பக்கத்துல இருக்கணும். ஒருவேளை நான் அந்த வீட்டுக்கு மறுமகளா போய்ட்டா இந்த ஜென்மத்தில் நீ என்னைப் பாக்கவே வர மாட்ட. ஏன் என்னை விட்டு தூரமா எங்கயாவது போகக் கூடத் தயங்க மாட்ட. இது தேவையா? சோ எனக்குக் கார்த்தியும் வேணாம் அவன் காதலும் வேணாம். நல்லா அண்ணன், தம்பியா இல்ல நம்ம மாதிரி நல்லா ப்ரண்ட்ஸா பார்த்து நம்ம ரெண்டு பேரும் ஒரே நாள்ல கல்யாணம் செஞ்சிட்டு, லைஃப் லாங் ஒன்னவே இருப்போம்… ஓகே வா நிலா செல்லம்”? என்ற யாழி அங்கிருந்து எழுந்து செல்ல நிலா கலங்கிப் போயிருந்தாள். யாழினி முகமே அவள் கார்த்திக்கை காதலிக்கிறாள் என்று அப்பட்டமாகச் சொல்ல, தன்னால் தன் தோழியின் காதல் இப்படி இக்கட்டில் இருப்பதை நினைத்து நிலாவின் நெஞ்சம் நெருப்பாகத் தகித்தது.

 

காலையிலேயே பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. துருவ் அவளிடம் ப்ராஜெக்ட் பற்றிய தகவல்களைக் கேட்டு தன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான். நிலா அவன் கேட்டதற்கெல்லாம் லாப்டாப்பில் பார்வையை வைத்தபடியே பதில் தந்தவள். அப்போது தான் துருவ் முகத்தைக் கவனித்தாள். எப்போதும் குறும்பும், சிரிப்பும் போட்டிப் போட்டுக் கொண்டு விளையாடும் அவன் முகம் ஏனோ இன்று ரொம்பவே வாடி இருந்தது. என்ன தான் நிலாவிற்கு அவன் மீது கோபம் இருந்தாலும் அவன் வாடிய முகத்தைப் பார்க்க அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. ‘ஏன் இன்னைக்கு இவன் முகம் இப்படி வாடிக்கெடக்கு? நா தான் யாழியை நெனச்சு கவலையில இருக்கேன். இவனுக்கு என்ன கேடு வந்ததுன்னு தெரியலயே’? என்றவள் கேள்விக்கும், அதோடு அவள் யாருக்காகக் காத்திருக்கிறாளோ அந்த நபர் எப்போது வரப்போகிறார் என்ற கேள்விக்கும் அன்று மதியமே கார்த்திக் மூலம் பதில் கிடைத்தது.

 

வீட்டிற்கு வந்த நிலாவுக்கு அவள் தேடி வந்த நபர் இன்னும் கொஞ்ச நாளில் இந்தியா வரப்போகிறார் என்ற செய்தியைக் கேட்டு சிரிப்பதா இல்லை அவள் காதலுக்கு உயிர் கொடுத்து அந்தக் காதலை வைத்தே அவளுக்கு உயிர் வலியையும் கொடுத்த துருவ்விற்கு அவன் வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்திருப்பதை நினைத்து அழுவதா என்று ஒன்றும் விளங்கவில்லை.

 

யாழினிக்கு நிலாவை என்ன சொல்லி தேற்றுவதென்று புரியாமல் “ஏய் நிலா இப்படி இருக்காதடி. துருவ்வோட கல்யாண நியூஸ் உனக்கு எவ்வளவு வலிக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா, இது நீயே தேர்ந்தெடுத்த முடிவு. சோ? இதுல மேற்கொண்டு பேச ஒன்னும் இல்ல. இல்ல துருவ்வை உன்னால மறக்க முடியலன்னு, உனக்குத் துருவ் வேணும்னு ஒரு வார்த்தை சொல்லு. அந்த ஓடிப்போனா நாய் மேல் நா கொலவெறியில தான் இருக்கேன்.. இருந்தாலும் உனக்காக அந்தப் பயல நா கடத்தி தூக்கிட்டு வந்தாவது உனக்குக் கல்யாணம் கட்டி வைக்குறேன். ம்ம்னு ஒரு வார்த்த சொல்லுடி” என்ற யாழினியை வலியோடு பார்த்த நிலா தலையை இடவலமாக ஆட்டி “அதெல்லாம் வேணாம்டி. என்னோட வாழ்க்கையில் துருவ் இல்லன்னு கடவுளே முடிவு பண்ணித் தான் அவனை ரெண்டு வருஷம் முந்தியே என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரு. அதுவும் ஒருவகையில நல்லதுக்குத் தான். நீ கேக்கலாம் அதான் எல்லாம் நல்லதுக்குன்னு நீயே சொல்றியே அப்ப ஏன்டி அழுகுறேன்னு. கொஞ்ச நாளா இருந்தாலும் துருவ் இருந்தது என்னோட மனசுலடி. அவ்வளவு சீக்கிரம் அவனை என்னால் தூக்கிப்போட முடியல. இது தப்பு, ஒருவகையில இது பாவமும் கூட, இருந்தும் என்னால் என்னோட மனச கண்ட்ரோல் பண்ண முடியல யாழி” என்று கண்களைத் துடைத்தவள்… 

 

“விடு யாழி ஃபாரின்ல இருந்து அவர் வந்ததும். நல்லதோ, கெட்டதோ ஒரு முடிவு தெரிஞ்சிடும். நடக்குறத பொறுத்து தான். நா என்னோட வாழ்க்கையைப் பத்தி ஒரு முடிவுக்கு வரணும். நீ போய் படு யாழி டைம் ஆச்சு, நாளைக்கு நான் துருவ் கூட ப்ராஜெக்ட் விஷயமா வெளியூர் போக வேண்டி இருக்கு. குட் நைட்” என்றவள் அழுது வடிந்த முகத்தைத் துடைத்தபடி தன் அறைக்குச் செல்ல யாழினி ‘நீ என்ன வேணும்னாலும் சொல்லு நிலா. நா அந்த துருவ்வை ஒரு வழி பண்ணாம இந்த ஊரைவிட்டு கெளம்ப மாட்டேன். அதுக்காக கார்த்திக்கை மிஸ் யூஸ் பண்ண வேண்டி வந்தாலும் நா அதையும் செய்யத் தயங்கமாட்டேன்’ என்றவள் துருவ்வை கரித்துக் கொட்டிக் கொண்டே தூங்கச் சென்றாள்.

 

அந்த வளைந்து நெளிந்த பாதையில் ஒரு கண்ணால், உறங்கும் நிலாவைப் பார்த்துக் கொண்டே துருவ் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ப்ராஜெக்ட் மீட்டிங் முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் இருவரும். நிலா காலையில் இருந்து அலைந்து திரிந்ததில் கார் சீட்டிலேயே தலைசாய்த்து அமைதியாக உறங்கிவிட துருவ் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

கார் மிதமான வேகத்தில் ஓட, துருவ் மனது வேக வேகமாக ஓடியது. ‘உண்மையாவே நீ என்னை வெறுத்துட்டியா முகில்? இல்ல இல்ல அது நடக்காது. உன்னால, என்னோட முகிலால! என்னை… அவளோட துருவ்வை மறக்கவோ, வெறுக்கவோ முடியவே முடியாது. ஆமா தானா முகில்’ என்று தூங்கும் நிலாவிடம் பதில் வேண்டி நின்றான். 

 

“ஏன் முகில்? இத்தனை நாளா நான் உன் பக்கத்துலயே இருக்கேன். ஏன்டா என்னை விட்டுப் போனேன்னு என் சட்டைய புடிச்சி நீ சண்ட போடுவனு பார்த்தா, அன்னைக்கு என்னை ஆஃபிஸ்ல பார்த்தவுடனே என்கிட்ட வராம அப்படியே திரும்பிப் போய்ட்ட. நா ஆஃபிஸ் வர்றதுக்கு முந்தின நாள் ஆஃபிஸ் ஸ்டாப்ஸ் ஃபோட்டோ, டீடையில்ஸ் பாக்கும் போது அதுல இருந்த உன்னோட ஃபோட்டோ பாத்தப்போ எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமாடி? ரெண்டு வருஷம் முந்தி நா தொலச்ச என்னோட உயிர் திரும்பி என் உடம்புக்குள்ளயே வந்த மாதிரி இருந்தது. அடுத்த நாள் உன்னைப் பாக்கணும். நடந்தது எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு, நா ஆசையோட உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்டி. ஆனா, நீ அன்னைக்கு என்னைப் பார்த்தும் பேசாம போனயே, அப்ப புரிஞ்சிது. நீ என் மேல எவ்வளவு கோவமா இருக்கேன்னு. நான் சொல்லாம கொள்ளாம ரெண்டு வருஷம் காணாம போய்டேன்னு கண்டிப்பாக நீ என் மேல கொலவெறில இருப்பேன்னு தெரியும். அதுக்காக நீ என் கிட்ட வந்து என் தலமுடிய புடிச்சு சண்ட போடுவனு நா எதிர்பார்த்தேன். ஆனா, நீ என்ன கண்டுக்காத மாதிரியே போய்ட்டா. அப்ப எனக்கு எப்டி இருந்தது தெரியுமா முகில்? ஆனா, எனக்கு நிச்சயமா தெரியும். நா உன்னைக் காதலிச்சு, ஏமாத்திட்டு ஓடி இருப்பேன்னு நீ கண்டிப்பா சந்தேகப்பட்டிருக்க மாட்ட. அந்த யாழினி பிசாசு வேணும்னா அப்படி நெனச்சிருக்கும். ஆனா, என்னோட முகில் என்னைக்கும் அவ துருவ்வோட காதலை சந்தேகிக்க மாட்டா” என்றவன் நிலா நெற்றியில் மெதுவாக முத்தம் வைக்க அதில் நிலா சற்று நெளிய துருவ் அவளை விட்டு நகர்ந்து விட்டான்.

 

“உன்னைக் கன்வைன்ஸ் பண்ண எனக்கு டைம் தேவைப்பட்டுச்சு முகில். அதான் உன்னோட ஈகோவை தூண்டி விட்டு உன்னை எனக்குப் பி.ஏவாக்கி என் பக்கத்துலயே இருக்க வச்சேன். அதுகூட எங்க நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு போய்டுவியோன்ற பயத்துல தான் செஞ்சேன். இத்தனை நாள்ல என்னோட காதலைப் பலமுறை உனக்கு உணர்த்திட்டேன். ஆனா, நீ அது புரிஞ்சும் புரியாத மாதிரியே நடிக்கிற. உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்னு எனக்குத் தெரியும்டி. இப்ப கூட நீ என்னை மனசாரக் காதலிக்கிற. உன் மனசு பூரா நா தான் இருக்கேன். ஆனா, ஏதோ ஒரு காரணத்துக்காக நீ உன்னோட காதலை மறைக்கிற. அது என்னனு தான்டி எனக்குப் புரியல. சரி உனக்குக் கொஞ்சம் டைம் கொடுத்துப் பாக்கலாம்னு நா பொறுமைய இருந்த, என் வீட்டுல உடனே என் கல்யாணத்தைச் செய்யணும்னு ஒத்த கால்ல நிக்குறாங்க. என்னால உன்னைத் தவிர எவளையும் கல்யாணம் பண்ண முடியாதுடி. எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தால் அது என்னோட முகில் கூட மட்டும் தான். அதுவும் உன்னோட முழு சம்மதத்தோட நடக்கணும்னு நான் நெனைக்கிறேன். அதுக்காகத் தான் தப்புன்னு தெரிஞ்சும் இப்படிச் செய்றேன். இன்னைக்கே எனக்கு உன்னோட முடிவு தெரிஞ்சாகணும் முகில். அது எனக்குப் புடிச்ச முடிவா தான் இருக்கணும்” என்றவன் ஊருக்குச் செல்லும் பாதையை விட்டு வண்டியை வேறு பாதையில் திருப்பினான்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!