உயிரின் ஒலி(ளி)யே 10

வி.யூ டெக்னாலஜிஸ்!

பிரம்மாண்டமாய் விரிந்திருந்த அந்த கட்டிடத்தை கண்டு புருவம் உயர்த்தியது ஒரு ஜோடி புருவங்கள்.

விமல்!

மாய கண்ணனைப் போல அவன் கண்களில் அத்தனை வசீகரம்.

குறும்பு கூத்தாடும் விளையாட்டு மைதானமாய் அவன் முகம்.

குறுந்தொகைப் போல குறுந்தாடி.

உதடுகளில் எந்நேரமும் மலர்ந்தபடியே இருக்கும் புன்னகை மலர்.

அந்த புன்னகையோடு லிஃப்டில் ஏறியவனின் புருவ சாலையில் எதிரிலிருந்த பெண்ணைக் கண்டதும்  மீண்டும் ஒரு வளைவு.

அமெரிக்காவின் நவநாகரீக உடையும், கலச்சாரமும் பெங்களூர் மண்ணிலும் சிந்தி கிடந்ததை காலையிலிருந்து பார்த்தவனோ, கர்நாடகா மாநிலத்தில் கர்நாடகமாய் இருக்கும் பெண்ணைப் பார்த்து முகத்தில் வியப்பை கூட்டினான்.

தன்னையே கண்களால் அளவிட்டு கொண்டிருந்த ஆடவனைக் கண்டு அந்த லிஃப்டில் நின்று கொண்டிருந்த ஆதினியிடம் நத்தையின் சுருக்கம்.

அவன் உள்ளே வருவதை தடுப்பதற்காக வேகமாக லிஃப்ட் பட்டனை தட்ட கதவுகள் இரண்டும் மூடிக் கொள்ள ஆயத்தமானது.

ஆனால் அவனோ கதவு இடுக்கில் வேகமாய் கால் வைத்து மூடுவதை தடுத்தான்.

“வொய்  ஆர் யூ க்ளோஸிங் த டோர்” எனக் கேட்டபடி அவசரமாய் உள்ளே நுழைந்து பட்டனை தட்டவும் லிப்ட் இயங்க ஆரம்பித்தது.

ஆதினி காலியாக இருந்த அந்த லிப்ஃடையே பயத்துடன் பார்த்தாள்.

மணி எட்டை நெருங்கியிருந்த சமயம் அது.

பொதுவாக ஒன்பது மணிக்கு மேல் தான் அலுவலகம் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

இப்போதோ காலியான லிஃப்டில் இந்த ஆடவனுடன் நிற்க நேர்ந்த தன் விதியை எண்ணி பின்வாங்கியவள் வேகமாய்  திரும்பி நின்று கொண்டாள்.

அவளுடைய முகபாவங்களையும் பதற்றத்தையும் குழப்பமானவனின் விழிகளில் விழுந்தது திரும்பி நின்றிருந்த ஆதினியின் சுடிதாரில் பாதி திறந்த நிலையிலிருந்த ஜிப்.

அதைக் கண்டு துரிதமானவன், “எக்ஸ் க்யூஸ் மீ. யுவர் சுடிதார் ஜிப் இஸ் ஓப்பன்ட்” என்றான் தயக்கமாக.

ஆனால் ஆதினின் காதுகளில் அவன் பேசிய வார்த்தைகள் விழவே இல்லை.

எதை எண்ணியோ அஞ்சி நடுங்கி நின்றவளின் காதுகளில் அவன் பேசிய வார்த்தைகள் விழுந்தாலும் மூளைக்கு சென்று எட்டவில்லை.

அதற்குள் லிப்ஃட் ஐந்தாவது தளத்தை எட்டி இருந்தது. இன்னும் இரண்டே தளம் தாண்டினால் கதவு திறந்துவிடும் என்று உணர்ந்தவனோ அவசரமாய் மீண்டும் கத்தினான்.

“மேம் ப்ளீஸ் க்ளோஸ் யுவர் ஜிப்” என்றான் அவசரமாக.

விழிகளிலிருந்து வழிந்த நீரோடு பயத்தில் உதடுகளுக்குள் எதையோ  முணுமுணுத்துக் கொண்டு நின்ற ஆதினியின் செவிகளில் அந்த வார்த்தை சென்று அடையவே இல்லை.

பொறுத்துப் பார்த்தவன் இனி தாமதித்தால் அபத்தம் என்று புரியவும் திரும்பி நின்றிருந்த ஆதினியை வேகமாய் நெருங்கினான்.

தன்னருகே அந்த ஆடவன் வந்து நிற்பதை அவள் உணர்ந்ததும் “நோ” என்று இவள் அலறி கொண்டிருக்கும் போதே அவன் வேகமாய் ஜிப்பை மேலேற்றவும் லிஃப்ட்டின் கதவுகள் திறந்து கொள்ளவும் சரியாக இருந்தது.

ஆதினியின் அலறலில் ஏழாவது தளத்தில் நின்று செக்யூரிட்டியிடம் முக்கிய தரவுகளை சேகரித்துக் கொண்டிருந்த ராஜ் வேகமாய் திரும்பிப் பார்த்தான்.

அங்கே ஆதினியின் சுடிதாரில் ஒரு ஆண்மகன் கை வைத்திருப்பதை கண்டதும் ராஜ்ஜின் முகமெங்கும் கோப ஜுவாலிப்பு.

ராஜ்ஜை கண்ட அடுத்த நொடியே ஆதினி, ஓடி சென்று அவன் மார்புகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டு கதறினாள்.

“அவன் என்னோட ட்ரெஸ் தொட்டான்” ஆதினி கேவலோடு சொல்ல ராஜ்ஜின் கைகளில் முறுக்கேறியது.

இருவரது சம்பாஷனைகளை கேட்ட விமலுக்கு அப்போது தான் அவர்கள் இருவரும் தமிழ் என்பது புரிந்தது.

வேகமாய் நிமிர்ந்தவன், “அவங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. ஐ வில் எக்ஸ்ப்ளைன்” என்று விளக்க முனைந்த நேரம் ராஜ்ஜின் கரங்கள் அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

விமல் அதிர்ச்சியோடு நிமிர்ந்தான்.

இங்கே என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?’

சரியாக சூழ்நிலையை கிரகிக்க முடியாமல் தடுமாறியபடி நிமிர்ந்த போது மீண்டும் ராஜ்ஜின் கை ஓங்கவும் வேகமாய் அதை மடக்கிப் பிடித்தான்.

“நான் என்ன சொல்ல வரேனு கூட கேட்காம, இப்படி தான் எடுத்த உடனே கை நீட்டுவீங்களா?” விமல் கோபமாய் கேட்க ராஜ் அந்த வார்த்தைகளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மீண்டும் அவன் கன்னத்தில் ஒன்றுவிட்டான்.

அதுவரை பொறுமையை கையாண்டு கொண்டிருந்த விமல், அந்த செயலில் கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிட ராஜ்ஜின் சட்டையை ஆத்திரமாக பற்றினான்.

“நானும் சொல்லிட்டே இருக்கேன். திரும்ப திரும்ப மேலே கையை வைச்சா என்ன அர்த்தம்?” கோபமாய் கேட்டபடி ராஜ்ஜின் முகத்தில் ஒரு குத்துவிட பதிலுக்கு விமலின் வயிற்றில் இன்னொரு குத்துவிட்டான் ராஜ்.

இருவரும் அடித்தபடி தரையில் புரண்டு லிப்ஃட் இருக்கும் இடத்தை நோக்கி உருளவும் அதிதி வெளிப்படவும் சரியாக இருந்தது.

லிஃப்டிற்குள் இருந்த அதிதி, கீழே விழுந்து  கிடந்திருந்த அவர்களிருவரின் நிலையைக் கண்டு வேகமாய் புருவம் உயர்த்தினாள்.

“வாட் ஹேப்பண்டு ராஜ்” அவள் முகத்தில் வினாவின் வளைவு.

“ஆதினி”  ராஜ் தீர்க்கமாக வாயசைக்கவும்  வேகமாய் திரும்பி ஆதினியைப் பார்த்தாள்.

கண்களில் விழுந்த கண்ணீரோடு நின்றிருந்த ஆதினியைப் பார்க்கவும்

அங்கே என்ன நடந்து இருக்கும் என்பது சொல்லாமலேயே தெளிவாக புரிந்தது.

வேகமாக தலையிலடித்துக் கொண்டு ராஜ்ஜைப் பார்த்தாள்.

“சத்தியம் மறந்து போயிடுச்சா ராஜ்?” கோபமாக கேட்டபடி அருகிலிருந்த இன்னொருவனைப் பார்த்தாள்.

அந்த முகம் அதிதி ஏற்கெனவே பார்த்த முகம்.

மிதுராவின் சிறுவயது முதற்கொண்டு கல்லூரி புகைப்படம் வரை அவள் அருகில் நிழலாய் நின்று கொண்டிருந்தவனின் அதே முகம்.

ஏற்கெனவே மிதுரா காட்டிய ஆல்பத்தில் இவனைப் பார்த்திருந்தவள், “ஆர் யூ விமல்?” என்றாள் சந்தேகமாக.

அவன் கண்களில் மலர்ந்த ஆச்சர்யத்துடன், “யெஸ்… என்னை எப்படி தெரியும்?” என்று கேட்டபடி சட்டையை சரி செய்து கொண்டு எழுந்தான்.

“ஐ யம் அதிதி, மிதுராவோட அக்கா” என்றதும் அவன் முகத்தில் ஆச்சர்யத்தின் அதிர்வுகள்.

புன்னகையோடு “நான் விமல் தான். வி.யூ டெக்னாலஜிஸ் கம்பெனிக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்து இருக்கேன்” என்று சொன்னபடி வீங்கிப் போன தன் கையை சம்பிரதாயமாக நீட்டினான்.

அதிதி விமலின் கையை ஒரு முறை பார்த்துவிட்டு ராஜ் முகத்தை மறுமுறை பார்த்தாள்.

அந்த பார்வை ‘என்ன செய்து வைத்திருக்கிறாய் பார்’ என்று அவனை குற்றம் சாட்ட அசட்டையாக தோளை குலுக்கிக் கொண்டு எதிர் திசை திரும்பினான் அவன்.

“வெல்கம் விமல். சாரி முதல் நாளே இப்படி தவறான வரவேற்பை கொடுத்ததுக்கு” சங்கடமாய் சொல்லி கை குலுக்கிவிட்டு ராஜ்ஜைப் பார்த்தாள்.

“மிஸ்டர். ராஜ் அப்படி திரும்பி நின்னா என்ன அர்த்தம். கம்பெனிக்குள்ளேயே ஒரு எம்ப்ளாயியை போட்டு அடிச்சு இருக்கீங்க. என்க்யொரி(enquiry) இருக்கு. இரண்டு பேரும் எச். ஆர் மீட்டிங் ஹால்க்குள்ளே வாங்க” என்று கட்டளையாக சொல்லிவிட்டு ஆதினியை ஒரு முறை முறைத்தாள்.

நடந்த எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம் என்று கண்களாலேயே குற்றம் சாட்டினாள் அதிதி.

இங்கோ இரு துருவங்களாக எதிர் எதிரே நின்று முறைத்து நின்றிருந்தனர் ராஜ்ஜூம் விமலும்.

“இன்னும் வராம அங்கே என்ன லுக்கு விட்டுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்”  அதிதி மிரட்டலாய் சொல்லவும், சடாய்த்துக் கொண்டு உள்ளே வந்தனர் இருவரும்.

மீட்டிங் ஹாலிற்குள் நுழைந்தவள்,

முதலில் உள்ளே விமலை அழைத்து அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டு முடித்துவிட்டு அடுத்து கார்த்திக் ராஜ்ஜை உள்ளே அழைத்தாள்.

எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தோடு உள்ளே வந்த ராஜ்ஜைக் கண்ட அதிதி வெடிக்கும் எரிமலை ஆனாள்.

“உங்க கிட்டே என்ன சொல்லி சத்தியம் வாங்குனேனு நியாபகம் இருக்கா ராஜ்?” அவள் கோபமாய் கேட்க ராஜ் வேகமாய் நிமிர்ந்தான்.

“யெஸ், பட் ஆதினியாலே சமாளிக்க முடியாம போனா நான் தலையிடுவேனு சொன்னதை நீ மறந்து இருக்க மாட்டேனு நினைக்கிற” அவன் வாயசைவைப் படித்த அதிதி வேகமாய் தலையிலடித்துக் கொண்டாள்.

“இங்கே பாருங்க ராஜ், நீங்க எல்லா விஷயத்தையும் இடையிலே புகுந்து காம்ப்ளீகேட் ஆக்குறீங்க” என்றவள் நடந்து முடிந்ததை ராஜ்ஜிடம் விலக்கிவிட்டு நிமிர்ந்தாள்.

“விமல் ஆதினியோட ஜிப் ஓபன் ஆகியிருந்ததைப் பார்த்து தான் ஹெல்ப் பண்ணியிருக்காங்க. நீங்க தான் தப்பா புரிஞ்சுட்டு ஸ்டண்ட் காமிச்சு இருக்கீங்க” என்று சொல்லவும் ராஜ் வேகமாய் நிமிர்ந்தான்.

“அவுந்து இருக்குனு சொன்னா பார்த்தாதா? எதுக்காக அவன் ஆதினியை தொட்டான்” அவன் முகத்தில் கோபத்தின் கனல் குறையாமல் கனன்று கொண்டிருந்தது.

“அது நீங்க ஆதினி கிட்டே தான் கேட்கணும். ஏன் விமல் அவ்வளவு சொல்லியும் ரியாக்ட் பண்ணாம இருந்தானு?” என்றாள் கையை விரித்து.

ராஜ்ஜிற்கு இன்னும் மனது சமன் அடையவில்லை.

என்ன தான் ஆதினிக்கு அவன் உதவியிருந்தாலும் அதை அவளை தொட்டு தான் செய்ய வேண்டுமா என்ன?

ஆற்றாமை ஆறாமல் கொதித்துக் கொண்டிருக்க, “என்ன ஆனாலும் அவன் பண்ணது தப்பு அதிதி. அவனாலே ஆதினி ரொம்ப பயந்து போய் இருக்கா” என்றான் வேகமாய்.

“நீங்க பண்ணது தான் பெரிய தப்பு ராஜ். உங்களுக்கு வார்னிங்  கொடுத்து அனுப்புறேன். இதே மாதிரி மறுபடியும் பண்ணா சீட்டை கிழிச்சு அனுப்பிடுவேன் ஜாக்கிரதை” என்றவள் மிரட்டலோடு வார்னிங் லெட்டரை கொடுக்க அதுவரை கோபத்தில் துடித்துக் கொண்டிருந்த ராஜ்ஜின் முகத்தில், புன்னகை அலையாடியது.

‘ஆக கம்பெனியுடைய சி.இ.ஓ வையே வேலையை விட்டு தூக்கிவிடுவாளா இவள்?’ புன்னகையோடு நினைத்த நேரம் அதிதி அவனை சொடுக்கிட்டு அழைத்தாள்.

“இங்கே பாருங்க ராஜ். நீங்க என்ன தான் நம்ம ப்ராஜெக்டோட டெக்னிகல் லீடா இருந்தாலும் நம்ம கம்பெனி எம்ப்ளாயிஸ்க்கு ஒன்னு நடந்தா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். எனக்கு கம்பெனியோட நலன் தான் முக்கியம். அதுக்காக என்ன வேணாலும் செய்வேன், உங்களை வேலையை விட்டு தூக்க கூட தயங்க மாட்டேன்” எச்சரிக்கையாக சொன்னவளைக் கண்டு அவன் இதழ்களில் புன்னகை மேலும் விரிந்தது.

ராஜ்ஜூம் தீரனும் தான் இந்த கம்பெனியின் சி.இ.ஓ என்று தெரியாமல் அவள் அவனை பயமுறுத்திக் கொண்டிருக்க ராஜ் கையை கட்டிக் கொண்டு பவ்யமாக அவள் முன்பு நின்றான்.

“ஓகே மேடம், நான் இனி கவனமா நடந்துக்கிறேன்” என்றான் பயந்தவன் போல் பாவனை காட்டி.

“அந்த பயம்” என்றவள் நிமிர்ந்து சொல்ல உதடுகளில் வழிந்த குறுஞ்சிரிப்போடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவனின் முகம் எதிரிலிருந்த விமலை கண்டு கருகிப் போனது.

விமலும் ராஜ்ஜைப் பார்த்து பதிலுக்கு ஒரு முறை முறைத்தான்.

அதிலே அவனது கோபத்தின் டெசிபல் அப்பட்டமாக தெரிந்தது.

இருவரும் ஒருவர் முகத்தைப் பார்த்து முறைத்தபடி நிற்க ராஜ் வேகமாய் அவனை கடந்து செல்ல முயன்றான்.

விமல் அலைப்பேசியை கையில் எடுத்து காதில் வைத்து பேசுவதைப் போல் பாவனை காட்டி, ராஜ் செல்ல முயலும் போதெல்லாம் வேண்டுமென்றே குறுக்கிட்டு நடந்தான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராஜ், அடுத்து விமல் அவன் பாதையில் குறுக்கீடும் போது வேகமாய் தன் தோளை கொண்டு அவனை பலமாக முட்டினான்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் விமல் தடுமாறி நிற்க, முன்னே சென்ற ராஜ் திரும்பி பாராமல் கைவிரலை மட்டும் தூக்கி பத்திரம் என்று செய்கை செய்ய விமலின் முகம் அனலாய் மாறியது.

“யார் யாரு கிட்டே இனி பத்திரமா இருக்கணும்ணு பார்த்துடலாம்” விமல் சவாலாய் சொல்ல ராஜ் வெகு நிதானமாக திரும்பினான்.

கூரிய விழிகளோடு தன் கட்டை விரலைத் தூக்கி காட்டி ஆல் தி பெஸ்ட் சமிக்ஜை காட்ட விமல் பதிலுக்கு  கசப்பாய் ஒரு புன்னகையை உதிர்த்தான்.

கண்ட முதல் நொடியிலேயே இருவருக்கும் இடையில் பெரியதாக விரிசல் விட துவங்க, எதிரெதிர் துருவங்களாக மாறி நின்றுவிடுவார்களோ இருவரும்?